பொருட்களை வீண்விரயம் ஆக்கலாமா?
நமது வாப்பா அந்தக் காலத்தில் இலங்கை அல்லது மலேஷியா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளில் பல்லாண்டு நேர்மையாக தொழில் செய்து, கடின உழைப்பு மூலம் ஊரில் தன் பெண் பிள்ளைகளுக்கு முதலில் வீடு கட்டி விடுவார்கள். அதன்பின், செய்யத் ஆலிம் பட்டரை மூலம் பட்டரை சாலிஹான் காக்கா மூலம் தென்பகுதி மக்கள் தன் குமர்களுக்கு நகை செய்வார்கள். தனக்கு வரும் மருமகன் வியாபாரியாக இருக்கவே அந்தக் காலத்து வணிகர்கள் விரும்புவார்கள். எஃகு கோட்டை போல தன் பெண் பிள்ளைக்கு முதலில் வீடு கட்டிவிட்ட பின் அல்லது தன் தம்பி மக்களுக்கு வீடு கட்டித் தரும் நல்லிதயங்களும் கொழும்பு ஸபரில் தொழில் செய்பவர்களில் நிறைய இருந்தார்கள்.
அவர்கள் யாரும் கல்லூரி போய் படிக்கவில்லை. கொஞ்சம் படிப்பார்கள். ஆண் பிள்ளைக்கு இருபது வயது ஆனால் படித்தது போதும், தொழில் செய்ய இலங்கையின் பல பகுதிகளுக்கும் அதாவது தலைநகர் கொழும்பு மற்றும் கண்டி, காலி வழிநெடுக உள்ள குக்கிராமங்களில் காயல்வாசிகளின் சிறு கடைகள் இருப்பதைக் காணலாம். சிலர் யாழ்ப்பாணம் பூராவும் பிடித்து இருந்தார்கள்.
அக்காலத்தில் கீழக்கரை வாசிகளின் தொழில் இங்கு இருந்தது. அதிராம்பட்டின வாசிகள் பள்ளிவாசல்கள் தைக்கா கட்ட பணத்தை வசூல் செய்து தருவார்கள். கட்ட நிதி உதவி செய்வார்கள். பெரும்பாலும் காயல் வாசிகள் தைக்காக்களை அவர்கள் தொழில் செய்யும் ஊர்களில் கட்டி மார்க்கப் பணி செய்வார்கள்.
அன்று ஒரே இயக்கம் இயங்கி வந்தது. காதிரிய்யா, ஷாதுலிய்யா என இரண்டு தரீக்காக்கள் அன்று நம்மூரில் புகழ்பெற்று விளங்கியது. அவர்களுக்கிடையே எந்தக் குழப்பமும் இல்லை. இரு இயக்கங்கள் பெயரில் தைக்கா இலங்கை பூராவும் பரவச் செய்த பெருமை காயல் நகருக்கு உண்டு.
இதுபற்றி தெளிவாக அறிய வேண்டுமானால், எனது நண்பர் மானாமக்கீன் (இலங்கைவாசி) எழுத்தாளர் தொகுத்து வெளியிட்ட “காயல்பட்டணமும், இலங்கையும்” என்ற தலைப்பைக் கொண்ட நூலை வாங்கிப் படியுங்கள். என்னிடமும் கூட பேட்டி எடுத்து, எனது தகப்பனார் வாவு அப்பாஸ் அவர்கள் கொழும்பில் நடத்தி வந்த 70 வருட தங்கக் கடை பற்றி எழுதியுள்ளார். அதை நீர்க்கொழும்பு கொச்சிக்கடை கம்மல்துறையில் திருமணம் செய்த மாணிங்கலை சரீபு ஹாஜி என்பவருக்கு என் வாப்பா தங்க தொழில் முழுவதையும் படித்து, தன் பிள்ளை போல தொழில் கற்றுத் தந்த வரலாறு அதில் இருக்கிறது.
யாரையும் புகழ்வதற்கு இதை நான் எழுதவில்லை. நாங்கள் சகோதரர்கள் மூவர் இருந்தும், இலங்கை பிள்ளைகளுக்கு தொழில் கற்றுக் கொடுத்த என் தந்தை போல ஏராளமான காயல்வாசிகள் அன்று வாழ்ந்தார்கள். அந்த நூலில் படிக்கலாம். வெளிநாட்டில் சம்பாதிப்பது போல உள்நாடுகளில் வடபகுதி மக்கள் ஆந்திரா பூராவும் தோல் தொழிலில் கொடிகட்டிப் பறந்தார்கள். இந்த இரு தரப்பு வியாபாரிகளும் தனக்கும், தன் பெண் பிள்ளைகளுக்கும் வாழ வசதியாக எஃகு கோட்டை போல வீடு கட்டுவார்கள். ஒரு செங்கல்களும், மணல் ஜல்லிகளையும் அன்றுள்ள வியாபாரிகள் வீணாக்கியதைக் காண முடியாது.
இன்று அரபுலகம் இதர நாடுகளுக்குச் சென்று படித்த காரணத்தால் கை நிறைய பரக்கத் வருகிறது. பேங்க் மூலம் அல்லது ஏடிஎம் கார்டு மூலம் நமதூர் பெண்கள் பணத்தை எடுத்து வீடு கட்டும்போது, தான் பொருட்களை வீணாக்குவதை இன்று உணர்வதில்லை. வெளிநாட்டில் உழைக்கும் நம் பிள்ளைகள் தன் தாய் தந்தைக்கு அல்லது மனைவி வீட்டுக்கு பணம் வங்கி மூலம் அனுப்புகிறார். மேஸ்திரிமார்களிடம் வழமை போல பணி ஒப்படைக்கப்படுகிறது. பழைய மரம் (பர்மா தேக்கு மரமாக இருக்கலாம்) மேஸ்திரிமார்களுக்குத் தெரியும். அவை எவ்வளவு விற்கப்படுகிறது, கணக்கு கூட கேட்பதில்லை. நமதூர் வழக்கம் அது. யாரையும் குறை கூறுவதாக எண்ண வேண்டாம். மேஸ்திரிமார்கள் ஐம்பதுக்கு மேற்பட்டோர் நம்மூரில் நம்முடன் கலந்து எப்போதும் வாழ்கிறார்கள். இன்று நமதூர் பிள்ளைகள் வீடு கட்டித் தரும் தொழில் செய்ய ஆரம்பித்துள்ளதால், அவர்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுக்கலாம். (விளக்கு எரிந்தாலும், அணையாமல் தூண்ட ஒரு நபர் தேவைதானே?)
வீடு கட்டும் பொருட்கள் வரும்போது செங்கல் எண்ணப் படுகிறதா? மணல் ஒரு லாரி அரை லாரி அளவு சரிதானா? அஸ்திவாரங்கள் இதர ஜல்லிகள் சிமிண்ட் எல்லாம் தரம் உள்ளதா என்று பார்க்க நமதூரில் எத்தனை பேர்களுக்கு வேலை தரலாம்? இது இப்படியிருக்க, உடைத்த நமது வீட்டு பழைய நிலை உத்திரம் இதர கதவு ஜனன்ல் நல்ல விலைக்கு விற்கப்பட்டதா? யாரும் கவனிக்கிறார்களா? உடைத்த பழைய கற்கள் தரையில் போட்ட பழைய டைல்ஸ் கற்கள் ரோட்டில் குவித்து, அதை யாருக்கும் விற்கப்படாவிட்டால், வீட்டில் உடைத்த அனைத்து பொருட்களையும் நமது முஹல்லா பள்ளி மையவாடியில் சும்மா கிடக்கும் நிலத்தில் ஒரு ஓரத்தில் குவித்து வைத்தால், அதைப் பிறருக்கு விற்க முடியுமே? மார்பல் கற்கள் இன்று போடப்பட்டது போக மீது வீதி ஓரம் பெரிதும் சிறிதும் சிதறிக் கிடக்குதே? அதை நம் முஹல்லா பள்ளியில் ஒரு ஓரம் தேக்கி வைத்து, ஜெய்ப்பூர்காரரைக் கொண்டும் மீண்டும் நம் தேவைக்கு அறுத்து பள்ளி ஜமாஅத்து நபர் குறைந்த விலைக்கு நடுத்தர மக்களுக்கு விற்க முடியுமே?
இதுபற்றி நான் எழுதுவதைக் கவனித்து, எல்லாத் தெருவிலும் வீடு கட்டுவோர் அவர்கள் செலவிலே பள்ளிவாசலில் எவ்வளவு இடம் வீணாகக் கிடக்கிறதே, அதில் போட்டு வைத்து சிறு முதலில் தொழில் செய்ய வழி உள்ளதை எண்ணிப் பாருங்க. இவ்வளவு காலம் அது வீணாக்கப்பட்டதை இனி இப்படி தொழில் ஆக்கலாமே? யோசிக்கிறீர்களா?
பழைய ரபீஸ் கற்கள் நம் வீட்டைச் சார்ந்தது நமக்கே தேவையானால் விலை கொடுத்து வாங்க மேஸ்திரிமார்களிடம் சொன்ன உடன் கிடைக்கிறதா? நம்ம ப்ளளிகளில் உள்ள மையவாடி போக மீதி இடத்தில் ரப்பீஸ் போட்டு வைத்தால் என்ன கஷ்டம்? வீடு கட்ட அரபுலகில் இதர நாடுகளில் உள்நாடுகளில் உழைத்த மக்கள்கள் இனியாவது எனது யோசனையை எடுத்துக்கொள்வார்களா? அப்போதுதான் வீண் விரையம் ஆக்கியவர் பட்டியலை விட்டு நாம் நீங்கிக்கொள்ள முடியும். நாம் எங்கு போய்க் கொண்டிருக்கிறோம் என்பதும் பொருள் தேடி கஷ்டம் உணர்ந்த மக்களாக, வாரிசுகளும் நாமும், தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே எனது ஆதங்கம். தப்பு இருந்தால் மன்னிக்கவும். |