மனித வாழ்வு இரண்டு பெரும் அம்சங்களுக்கு இடையே எப்போதும் ஊடாடிக் கொண்டிருக்கிறது. ஓன்று வாழ்வு. இன்னொன்று மரணம். தனக்கு நிரந்தரமாக அருளப்பட்டுவிட்ட நித்திய வாழ்வு என்று மனிதனால் கருதப்படும் இவ்வாழ்வு ,அதன் வசீகரத் தன்மையையும் மீறி இடையிடையே சோக முகமூடிகளையும் அணிந்துகொள்கிறது. வாழ்வின் தீராத ஓட்டங்களின் ஊடே மனிதன் கால் இடறி விழும் இடங்கள் ஏராளம். அதில் ஏற்படும் காயங்களின் வடு அல்லது வலி அதன் தன்மையைப் பொறுத்து நம் மனதில் ஓன்று ஆழப்பதிகிறது. இல்லது மேலோட்ட நினைவாக மங்கி மறைந்து விடுகிறது. எங்கேனும், எப்போதேனும் நாம் பட்ட காயங்கள், அவமானங்கள் அல்லது அடிகள் நமது மனதில் மேலோங்கும்போது கண்களில் மட்டுமல்ல... இதயத்திலும் கூட இரத்தம் கசிகிறது.
இழந்து பெறுவதை ஒரு சுகம் என்று சொல்வார்கள் காதலில் ஆழ்ந்தோர். அதுபோல அறிஞ்சர்களும் சொல்வதுண்டு. ஒன்றை இழந்து அதற்கீடாக இன்னொன்றைப் பெறுவது அவர்களைப் பொருத்தமட்டில் மேலான இன்பம். “உனது அன்பில் என்னையே இழந்தேன்” என்பார்கள். திருமணமும் கூட அதன் அடிப்படையில் அமைந்த ஒன்றுதான். கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும், குழந்தைகளுக்காக இருவருமே... நிறைய இழக்கிறார்கள். பதிலீடாக நிறையப் பெறவும் செய்கிறார்கள். இதைத் தியாகம் என்று சொல்வோரும் உண்டு. தியாகம் என்றாலே அது இன்னொரு இழப்புத்தான். இழப்பை ஜரிகைத் தாளில் சுற்றித் தரும் இன்னொரு அலங்கார வார்த்தையே தியாகம் எனபது. அல்லது அந்த இழப்பின் வலியை பொறுத்துக்கொண்டு அதை பெருந்தன்மையுடன் அங்கீகரிப்பது.
சரி... இதெல்லாம் வாழ்வின் தத்துவக் கண்ணோட்டம் கொண்டு பார்க்கப்படும் செய்திகள். ஆனால்.... போனால் வராத... திரும்பக் கிடைக்கவே கிடைக்காத.. பொருட்கள், மனிதர்கள், உறவுகள்.... இவையெல்லாம் மனிதர்களை எவ்வாறு பாதிக்கின்றன...? இவைகளால் மனிதன் எவ்வாறு தனது வாழ்க்கையை தகவமைத்துக் கொள்கிறான்... என்பது தத்துவங்களை மீறிய நிஜங்கள் ,தகிக்கும் உண்மைகள்...!
நீண்ட நாட்களுக்கு முன்பு கரிசல் எழுத்தாளர் கி ராஜநாராயணன் அவர்களின் “கதவு“ என்ற சிறுகதையைப் படித்தேன். அந்த ஓட்டு வீட்டுக்கு ஒரே ஒரு கதவு மட்டும். அந்தக் கதவில் குழந்தைகள் ஏறி விளையாடுகிறார்கள். அதை அங்கும் இங்கும் தள்ளி ஆனந்திக்கிறார்கள். அவர்களின் ஒரே விளையாட்டுப் பொருளாக அந்தக் கதவு ஆகிவிட்டது. தங்களது வீட்டுப்பாடங்களை அந்தக் கதவில் எழுதி பார்க்கிறார்கள். ஆசை ஆசையாக சேகரித்த தீப்பெட்டிப் படங்களை அந்தக் கதவில் ஒட்டி வைக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்களை வறுமை சூழ்கிறது. சாப்பிடவே இயலாத கொடும் வறுமை. அவர்களுக்கு இனி ஒட்டு வீடு அதிக பட்சம். எனவே அதை விற்க முடிவு செய்கிறார்கள். தந்தை ஒரு வியாபாரியை வீட்டுக்குக் கூட்டி வருகிறார். விலை முடிவாகிறது. அடுத்த நாளே வீட்டைக் காலி செய்கிறார்கள். வியாபாரி லாரியுடன் வந்து அந்த வீட்டின் கதவை கழற்றி லாரியில் ஏற்றுகிறான். குழந்தைகள் அந்தக் கதவை சோகத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதாக கதை முடிகிறது.
கிட்டத்தட்ட இதேபோன்று ஒரு நிகழ்வு எனது சொந்த வாழ்விலும் நிகழ்ந்தது. எனது மனைவியின் குடும்பப் பாரம்பரிய வீடு அம்பல மரைக்கார் தெருவில் இருந்தது. எனக்குத் திருமணமாகி கிட்டத்தட்ட 25 வருடங்கள் அந்த வீட்டில்தான் வசித்தேன். எனது மகள் பிறந்தது, வளர்ந்தது, பள்ளி சென்றது... எல்லாமும் அந்த வீட்டில்தான்.... நானோ... எனது மனைவியோ பிறந்தது அங்கல்ல. ஆனால் எனது மகளின் ஒவ்வொரு மூச்சுக் காற்றும் அந்த வீட்டின் செங்கல்களோடு கலந்திருந்தது... அந்த வீட்டை வேறு சில நிர்ப்பந்தங்களால் அருகில் உள்ள ஒரு பெரிய செல்வந்தருக்கு விற்று விட்டோம்.
சதுக்கைத் தெருவில் புதிய வீடும் உருவாகிக் கொண்டிருந்தது. புதிய வீட்டின் பணிகளும் நிறைவுற்று... நாங்கள் இங்கிருந்து காலி செய்ய வேண்டிய அந்த நாளும் வந்தது. எனக்கும், எனது மனைவிக்கும் சோகம் தாங்க முடியவில்லை. என்ன இருந்தாலும் இவ்வளவு நாட்களாக வாழ்ந்த வீடல்லவா...? நெஞ்சு கனத்து கண்களில் கண்ணீர் கசிந்தது... பேச வார்த்தையின்றி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். எனது மகள் அப்போது உயர்நிலைப் பள்ளி மாணவி. அவள் தனது பென்சிலை எடுத்தாள். அந்தப் பழைய சுவரில் இப்படிக் கிறுக்கினாள்.... ”நாங்கள் மீண்டும் இங்கு வருவோம்...”
அந்த வார்த்தையை படித்ததும் எனது வீட்டுக்காரி வாய்விட்டு கதறி விட்டாள். எல்லோரையும் சமாதானப்படுத்தி கூட்டிச் செல்லும் பொறுப்பு எனக்கு. ஏகப்பட்ட சமாதங்களுக்குப் பிறகு அதைக் காலி செய்துவிட்டு வந்தோம். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கடந்து விட்டன. இன்னமும் அந்தப் பலியா வீடு அங்கே இருக்கிறது. எப்போதாவது அந்த இடத்தைக் கடக்கும்போது என்னையறியாமல் அந்த வீட்டைத் திரும்பிப் பார்ப்பேன். ஒன்று அது உயிரற்ற ஒன்றாகவே இருந்தாலும், அது நமது வாழ்வோடு இணைந்த பிறகு.. அதை வேறு நிர்பந்தங்களால் இழக்கும்போது மனம் எத்தனை காயப்படுகிறது...! அதைப் போலவே நமக்கு வெகுநாட்களாக உடமையாக இருந்துவிட்டு.... திடீரென கையை விட்டு இழந்து போகும் சொத்துக்கள், நிலங்கள், இவைகள் யாவுமே... இந்தக் காயங்களில் இருந்து மாறுபட்டதில்லை. முன்னோர்களின் மரணத்திற்குப் பிறகு வேறுவழியின்றி அந்த உடைமைகள் கைமாறும் பொழுதில்... அவர்கள் உயிரோடு இருந்திருந்தால்... எவ்வளவு வேதனைப் பட்டிருப்பார்கள்...? என்று நினைத்து பெரும் மனச் சோர்வடைந்திருக்கிறேன்.
உயிரற்ற பொருட்களின் நிலையே இதுவானால்... நமது இரத்தத்தோடும், உணர்வோடும் கலந்த நமது சொந்தங்கள், வேண்டியவர்களின் மரணங்கள் நம்மை வெகுவாகப் பாதித்துவிடுகின்றன. வாழும்போது நம்மால் புரிந்துகொள்ளாமல், அலட்சியப்படுத்தப்பட்ட அந்த நல்லுயிர்கள் தங்களது மரணத்தை எப்போதும் நினைத்து நினைத்து அனுபவிக்கும் ஒரு வலியாகவே நம்மிடம் நிரந்தரமாக விட்டுச்சென்று விடுகிறார்கள்.
அந்த வகையில் எனது வாப்பாவின் மரணம் என்னில் நிரந்தரமாகவே வலியையும், வேதனையையும் விட்டுச் சென்ற ஒன்று. எல்லோருடைய தந்தையரின் இழப்பும் அவரவர்களுக்கு தாங்க முடியாத சோகம்தான். இதில் சொல்ல என்ன பெரிதாக இருக்கிறது...? என்று கேட்டுவிட வேண்டாம். ஏனெனில் அவர்கள் மரணிக்கும்போது அவர்களோடு நான் நல்லுறவில் இல்லை. ஏன்... பேச்சு வார்த்தையே கிடையாது என்று வைத்துக் கொள்ளுங்களேன். அப்படி ஒரு தருணத்தில் ஒரு தந்தையின் மரணம் எனக்குள் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்...? என்று நினைத்துப்பாருங்கள். இன்றைக்கும் திடீரென என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பும் சக்தி கொண்டதாக இருக்கிறது அந்த மரணம். அப்படியே இடிந்துபோய் உட்கார்ந்துவிடுவேன்.
தந்தையின் கண்டிப்பு எல்லோரையுமே அவர்களிடமிருந்து ஒரு அடி தள்ளியே நம்மை வைத்திருக்கும். எனக்கும் எனது வாப்பாவுக்கும் கூட அதுவே பிணக்காக இருந்தது. அவர்களின் பேச்சை நான் எப்போதும் கேட்டதில்லை. கல்யாணம் முடிந்தபிறகும் இப்படி இருக்கிறானே....! என்ற வருத்தம் அவர்களுக்கும் இருந்திருக்கக் கூடும். இன்றைக்கும் எனது மகள் சமயங்களில் எனது பேச்சை அலட்சியப் படுத்தினால்... எனது மனம் மானசீகமாய் எனது தந்தயிடம் மன்னிப்புக் கேட்கும். மறைந்தும் எனக்கு நீங்கள் தரும் தண்டனையா... இது...? என்றும் கூட எனக்கு நானே கேட்டுக்கொள்வேன்.
சிறு குழந்தையாக இருந்த எனது மகளைப் பார்க்கவேண்டும்... என்ற அவர்களின் அற்ப ஆசையைக் கூட நிறைவேற்றாத பாவி நான். ஒருநாள் மாலையில் அவர்களது உயிரற்ற சடலம் வீட்டுக்குள் வந்தபோது.. என்னை விடக் கேவலமான மனிதன் இந்த உலகில் வேறு யார் இருக்கமுடியும்...? என்று எனக்கு நானாகவும் அழுதேன். அவர்களின் அந்த மரணத்துக்காகவும் அழுதேன். இருபத்தைந்து வருடங்கள் உருண்டோடி விட்டன. இதோ.. இந்த கட்டுரையை டைப் செய்து கொண்டிருக்கும்போதும் கூட வலிக்கிறது. எதை ஒரு இழப்பு... இயல்பாக நேர்வது.. என்று விட்டுவிட முடிகிறது...? வலி... வலி... பெரும் வலி...!!
“இப்போதே இப்படி இருக்கிறாயே... நான் போனபிறகு என்ன செய்வாய்...?” என்று கேட்காத தாயும் உண்டோ...?
“என்ன செய்றதும்மா... ஆண்டவன் இருக்கான்...”
சொன்ன அடுத்த நாளே எனது தாய் இல்லை. நீ விடை பெறுவதற்காக என்னை எச்சரித்தாயோம்மா...? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
ஒரு உறவு மரணித்துவிட்டது என்று சாதாரணமாக எண்ணிக் கொள்வதில் பொருள் இல்லை. மரணம் உண்மைதான். அது என்றைகேனும் நம்மைக் கொண்டு போகும் என்பதும் உண்மைதான்...! ஆனால்... அந்த அத்தியாவசிய உறவின் இழப்பு குடும்பத்தையே நிலைகுலையச் செய்துவிடுகிறது. அதன் பிறகு அது எப்படியோ.. தட்டுத் தடுமாறித்தான் நிலைகொள்கிறது. அந்தப் பழைய வசீகரமும், தன்மையும் இனி எப்போதும் மீளாமல் சென்று போன உறவுகளோடு அதுவும் மீளா உறக்கத்தில் ஆழ்ந்து விடுகிறது.
மரணம் மட்டுமல்ல.. நினைவுகளின் இழப்பும் பெரும் வலியைத் தருவது...! கடந்த காலங்கள்... பள்ளி, கல்லூரி வாழ்க்கை... நண்பர்களோடு மகிழ்ச்சியாக கழித்த அந்த இனிப்பான நாட்கள்..! கொஞ்சமோ நினைவின் அலைகள்...?
நான் பயின்ற சென்ட்ரல் பள்ளி இப்போதும் என் வீட்டெதிரேதான் இருக்கிறது... அப்போதுள்ள ஆசிரியர்கள் எவரும் இப்போதில்லை. அந்த பழைய அதே இரும்பு கேட்டும்... அதே பழைய ஜன்னல் கம்பிக்களும்தான் இருக்கிறது... எத்தனை தலைமுறை மாணவர்களின் கை பட்டு.. அவர்களோடு அது பேசியிருக்கும்...? எனது கை மணத்தையும் அது நினைவில் வைத்திருக்குமோ...? பேசினால்.. அது பேசுமோ...? தினம்தோறும் உன்னைப் பார்க்கிறேனே... பேசாமல் போகிறாயே... என்று சொல்லுமோ...? நடுங்கியவனாக மேலே செல்லுகிறேன். கூலக்கடை பஜாரில் அமைந்துவிட்ட அந்த எல் கே பள்ளியின் வகுப்பறைகள்... அந்த மாடிப்படிகள்... உள்ளே போய் ஒருநாளைக்கேனும் பார்க்கத்தான் நினைக்கிறேன்.
‘நீ யார்...?” என்று யாராவது கேட்டுவிட்டால் என்ன செய்வது.....? இவன்தான் என்மீது உட்க்கார்ந்து பொழுதைப் போக்கினான் என்று அந்த மாடிப்படிகள் பதில் சொல்லுமா...? இவன்தான் என்மீது சினிமா பெயரை எழுதினான் என்று பிளாக் போர்டு துணைக்கு வருமா...?
காலை ஒன்பது மணிக்கும், மதியம் ஒரு மணிக்கும், இரவு ஒன்பது மணிக்கும் பெருங்குரலெடுத்து ஊதும் சங்கு எங்கே...? எங்காவது மறைந்திருந்து அது என்னை பார்த்து சிரிக்குமோ...?
கண்களை கண்ணீர் மறைக்கிறது....! மன்னியுங்கள்...!
நிறுத்திக் கொள்கிறேன் நண்பர்களே...! மீண்டும் சிந்திப்போம்...!!!! |