எழுத பயந்து எழுதுகிறேன்.
இணையதள இனிய வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். தலைப்பைத் தேர்ந்தெடுப்பதில் நான் மிகவும் ஆர்வம் காட்டுகிறேன். தலைப்புக்குத் தகுந்தபடி செய்திகள் சேகரிப்பது எனது கடமை. நபிமொழிகள், உலக பொன்மொழிகள் உதாரணங்களுக்கான சரியான தகவல் தேடி கட்டுரை எழுதும் காலமும் அதிகமாகிவிடும். மேலே தந்த தலைப்பில் பத்துக்கு மேற்பட்ட மூன்று அல்லது நான்கு பக்கம் எழுத அப்படியே அனுப்பாமல் வைத்து இருக்கிறேன். தனி மனிதரைப் பற்றி என்று ஒரு இடத்தில் கூட தவறாக எழுதிவிடாமல் நான் எழுதியதை நானே நிராகரித்து நமது இணையதளத்தில் கொடுப்பதில்லை. சில கவனக் குறைவால் கொடுத்தால், நான் நினைத்த அதே பக்கம் எடுக்கப்பட்டு, கட்டுரையை வெளியிட அனுமதியளித்துள்ளேன்.
கட்டுரை எழுத பயப்படுகிறேன். எல்லோரையும் திருப்திபடுத்தி கட்டுரை எழுத முடியாவிட்டாலும், ஜீரணிக்கக் கூடிய சில அறிவு ஜீவிகளை மாத்திரமாவது பாதிக்காமல் எழுதுவதில் அதிக அக்கரை செலுத்தி, நிதானமாக பலமுறை யோசித்து எழுதுவேன்.
பிரபல எழுத்தாளர் தமிழ் பத்திரிக்கை உலகில் ஜெ.எம்.சாலிஹ் அடிக்கடி சென்னையில் இலக்கிய சொற்பொழிவு கூட்டத்தில் சந்திப்பது உண்டு. அக்காலத்தில், முத்துச்சுடர் மாத இதழில் மூன்றாம் சிறுகதை எழுதிய நேரம். அநேகமாக 1979-80க்குள் இருக்கும். ஜெ.எம்.சாலிஹ் அவர்கள் என்னிடம் கூறியது: “ஏ.எல்.எஸ். பாய், இஸ்லாமிய பத்திரிக்கைகளில் கதை கட்டுரை கவிதை வடிக்கும்போது கூரிய கத்தி மீது வெறுங்காலுடன் நடப்பது போல கவனமாக எழுதுங்கள்... உங்களுக்கு என விசிறிகள் (ரசிகர்கள்) இருப்பார்கள். உங்கள் ஆக்கங்களைப் படிப்பார்கள் என்பதற்காக ஏதாவது மார்க்க முரணாக அல்லது உலக நடைமுறைக்கு ஒத்துவராத கருத்துக்களை எடுத்து வைக்கும்போது விசிறிகள் விசிறி கம்பால் தாக்கவும் வருவார்கள்... நீங்கள் இனி தலைதூக்க முடியாது... அதனால், கவனமாக கருத்தைத் தாருங்கள்... எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரிகள், உங்களூர் கவுன்சிலர்களைக் கூட அவர்களின் சேவைகள் மட்டுமே முதலில் தேர்ந்தெடுத்து எழுதி ஏணியில் ஏறுங்கள். இந்த முறைப்படி ஏணிதான் உங்கள் எழுத்து மூலம் புகழ்பெற முடியும். யாரோ சொன்னதாக ஆதாரமின்றி குட்டையைக் குழப்பினால், முதுகைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் முதுகு உங்களுக்குத் தெரியுமா? பிறர் குறைகளை - அதிலும் பதவியில் இருப்பவர் குறித்து ஒருபோதும் குற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பித்து விடாதீர்கள். அப்படி எழுத விரும்பினால், உங்களுக்கு அடி விழுந்தால் ஹாஸ்பிட்டலுக்கு வாகனத்தில் தூக்கிப் போகும் நல்மக்களையும் தேடிக் கொண்டு எழுதுங்கள்...” என்று வேறு ஒரு சந்திப்பில் சொன்ன வைர வரிகள் முப்பத்து ஐந்து வருடங்களாக நான் கடைப்பிடித்து, இன்று இணையதளத்தில் கையாண்டு வருவதால், உலகில் எனக்கு ஆயிரக்கணக்கான ரசிகர் - ரசிகைகள் இருப்பதைக் காணுகின்றேன். நான் யாரையும் தாக்கி எழுத மாட்டேன். விஷயங்களை எடுத்து வைக்க நாசூக்கான வார்த்தை ஜாலங்களைத் தேடி எழுதும் பாணியைக் கடைப்பிடிக்க வல்ல அல்லாஹ் அருள் புரிந்துள்ளான். ஆமீன். (அல்ஹம்துலில்லாஹ்)
சுற்றுப்புற சுகாதாரம் காத்தல் அமைப்பு ஆரம்பமாகிறது!
சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்க மக்கள் பழக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதை மக்களுக்கு தினமும் எடுத்து வைக்க தமிழக தொலைக்காட்சிப் பெட்டிகள் தயாராகி வருகிறது. தினசரிகளும் தங்கள் பங்கைத் தந்தவண்ணம் இருக்கிறார்கள். காயல் நகர மக்கள் அனைவர்களுக்கும் முக்கியம் இக்காலத்தில் அவசியம் தேவை வாழும் இடத்தைச் சுற்றிலும் தூய்மையாக வைப்பது குறித்து எல்லோரும் முயற்சி எடுப்பது. அதை முழு மனதோடு செயலாற்றுவது. இதனால் நோய் பரவாயமல் முதலில் தடுக்க முடியும். பக்கத்து வீட்டாருக்கு தொந்தரவு செய்யாமல் முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்பது நபி போதனைகளில் ஒன்று.
ஆனால், நமதூரில் குப்பையை உரிய இடத்தில் உரிய நேரத்தில் போடாமல், அடுத்த வீட்டுக்காரர்கள் ஏதோ வேலையில் இருக்கும்போதோ அல்லது வெளியில் சென்றிருந்தாலோ இறால் கூந்தல் கழிவு மீன் கழிவுகளை கேரி பேக்கில் மொத்தமாகக் கட்டி, மாடியலிருந்தோ வீட்டு முன்பகுதி தலைவாசல் பகுதியில் யாரும் பார்க்கவில்லை என்று வீதி ஓரம் வீசிவிட்டு, ஒன்றும் தெரியாத பாப்பா போல இருந்து விடுகிறார்கள். ஆனால் அவர்கள் வீட்டுப் பகுதி மட்டும் சுத்தமாக இருக்க விடுகிறார்கள். இதுபோல வீசும் பேர்வழிகள் இது நியாயம்தானா உங்கள் மனசாட்சியுடன் பேசிப்பாருங்கள்!
இதையெல்லாம் விட்டுவிட நீங்கதான் ஓர் அமைப்பை ஆறு நோன்பு கழித்து நமதூரின் கடற்கரை ஓரம் மாதம்தோறும் முதல் ஞாயிறு மட்டும் சுற்றுப்புற சுகாதாரம் காப்போம் என்ற அமைப்பை வாவு முஹம்மது முகைதீன் துவங்க உள்ளதாக என்னையும் அதில் இணைத்து செயல்பட அழைத்துள்ளார்கள். எனக்கு 2013-2014இல் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாமன்றம் நடத்திய அனுபவம் இருப்பதால் அவர்களுடன் இணைந்து, செலய்பட சம்மதம் தெரிவித்து, பச்சைக்கொடி அசைத்து ஒத்துக்கொண்டேன். இந்த அமைப்பின் மூலம் நமதூர் மக்கள் அனைவரும் சுற்றுப்புற சுகாதாரம் காத்து நலமாய் சுகமாய் வாழ பிற ஊருக்கு வழிகாட்டியவர்களாக மாற இந்த அமைப்பு உளத்தூய்மையுடன் இன்ஷாஅல்லாஹ் செயல்பட துவங்கவுள்ளது. உங்கள் கருத்துக்களை இந்த இணையதளம் மூலம் தெரிவிக்க அவர்கள் சார்பில் வேண்டுகிறேன். எதையாவது ஒரு நல்ல காரியத்தைச் செய்து மக்கள் நலன் அடையப் பாடுபட விரும்பும் மக்களோடு நானு் ஒரு பகுதியில் நிற்கிறேன். அவர்குளுடன் நாமும் இணைந்து செயல்பட செல்வோம், வாரீர்.
வீதியில் மணல் ஜல்லிகள் கொட்டலாமா?
வீடு கட்டப்படுவது என்பது காயல் நகரில் புதிதல்ல. எல்லாத் தெருக்களிலும் குறைந்தது மூன்று வீடாவது கட்டுவது வழக்கம். வீடுகட்ட மணல், ஜல்லி வருகிறது. வீதியில் மக்கள் நடமாட முடியாத அளவும் வாகனங்கள் ஏறிப்போய் வீதி பூராவும் ஜல்லி மணல் விரையம் ஆகாமல் வீதியின் ஓரமாகக் கொட்டச் சொல்லவும். லாரியில் எங்கேயாவது கொட்டுவது வீதியின் பாதிக்கு மேல் வாகனம் போக முடியாமல் செய்துவிட்டுப் போகும் லாரி காரர்களை வீட்டுக்காரர்களும், மேஸ்திரிகளும் கண்டுகொள்வதில்லை என்பதால் இந்தத் துயரச் சம்பவம் நாள்தோறும் நடைபெறுகிறது. இது விஷயம் ஒரு கவுன்சிலர் என்னிடம் எழுதும்படி கூறினார். மக்களுக்கு நல்ல விஷயங்கள்தானே என்று ஏற்று எழுதினேன். வீடு கட்டுவது குறித்து இன்னும் நிறைய குறைகள் இருந்தாலும், அத்தனையையும் எழுதிக்காட்ட முடியாது. எழுத முடிந்தவைகளை எழுதிவிட்டேன். எழுத முடியாத சில சங்கடங்களை விட்டுவிடுவது என் முதுகுக்கு பாதுகாப்பாகும். “ஒரு சொல் வெல்லும், மறு சொல் கொல்லும்” என்பதால் ஆழமாக நுழைய விரும்பவில்லை. |