சில தினங்களுக்கு முன் ரமழானில் எனது நண்பர் ஒருவரது முகநூலில் ஓர் பதிவு கண்டேன். கடந்த 14/04/2015 அன்று அல்-ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்மாப் பள்ளிவாசலுக்கு மாற்று மத சகோதரர் ஒருவர் தனது குழந்தையோடு உதவி கேட்டு வந்ததாகவும் அவரது குழந்தைக்கு இடுப்புக்கு கீழ் செயலற்ற நிலையில் நெல்லையில் உள்ள ஓர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதற்குரிய செலவுகளை ஏற்க இயலாமல் பண உதவி கேட்டு வந்ததாகவும். உடனே நமதூர் சகோதரர்கள் சுமார் பன்னீரெண்டாயிரம் ரூபாய் வரை வசூல் செய்து மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. உதவி செய்ய மதம் இனம் மொழி தேவையில்லை! நல்ல மனம் இருந்தால் மட்டும் போதும்.இதை படித்ததும் எனக்கு ஓர் சம்பவம் நினைவுக்கு வந்தது. இதுவே சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு எழுத்து மேடையில் எழுத என்னை உந்தியது.
பல வருடங்களுக்கு முன்பு ஓர் ரமலான் மாத இரவில் காயல்பட்டினத்தில் நடந்த ஓரு சம்பவத்தை நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். மதங்களைக் கடந்த மனித நேயத்தை சத்திய மார்க்கமாம் இஸ்லாம் எவ்வாறு வலியுறுத்துகிறது என்பதற்கு இச்சம்பவமும் ஓர் சான்றாக அமையும் என நம்புகிறேன்.
எமது ஊருக்கு அருகாமையிலிருக்கும் பிரசித்தி பெற்ற ஒரு கோவிலுக்கு தன் குடும்பத்துடன் வழிபாட்டிற்காக வந்த ஒரு குடும்பத்தார் தமது உடமைகளை கரையில் வைத்து வி்ட்டு கடலில் நீராடச் சென்றனர்னர். கடல் இல்லாத ஊரிலிருந்து அவர்கள் வந்திருந்தபடியால் குதூகலத்தோடு குளித்துக் கொண்டிருந்தனர். இதை சாதகமாக வைத்து எவனோ ஒரு திருடன் கரையில் இருந்த அவரது பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடி விட்டான். குளித்துவிட்டு வந்த அந்த நபர் மாற்று உடை கூட இன்றி பறிதவித்து பதறிக் கொண்டு தேடியுள்ளார். பின்னர் நடந்தவற்றை கோவில் நிர்வாகத்திடம் சொல்லி முறையிட்டுள்ளார். "இது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து போகிற இடம். உங்கள் உடைமைகளை நீங்கதான் பாதுகாக்க வேண்டும் நாங்கள் பொறுப்பேற்க முடியாது. வேண்டுமென்றால் காவல்துறையிடம் போய் கம்ளைண்ட் எழுதிக் கொடுங்கள்", என கோவில் நிர்வாகம் கை விரித்தது. காவல் துறையோ, "நாங்கதான் டெய்லி மைக் வச்சு திருடர்கள் குறித்த எச்சரிக்கை செய்கிறோமே? அப்புறம் நீங்க ஏன் இவ்வளவு கவனக்குறைவாக இருந்தீங்க? ரெண்டு மூனு நாள் கழிச்ச வாங்க கிடைச்சா தருகிறோம்" என சொல்லி இவரை அனுப்பி வைத்து விட்டனர்.
பாவம்! அந்த குடும்பம் வேறு வழி தெரியாமல் ஒரு வேளை மட்டுமே வழங்கப்படும் கோவிலின் இலவச உணவை உண்டு தமது பொருட்கள் இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் எனும் நம்பிக்கையில் மூன்று நாட்கள் வரை அந்த கோவில் வளாகத்துக்குளேயே அலைந்து திரிந்துள்ளனர். இனி பொருள் கிடைக்கும் எனும் நம்பிக்கை அவர்களுக்கு முற்றிலுமாய் அகலவே, கையில் காலணாக் காசுகூட இன்றி பேருந்து நிலையத்தில் பகல் முழுவதும் கழித்துள்ளனர். பேருந்து நிலைய வளாகத்தில் தெருவோரக் கடை விரித்து செருப்பு வியாபாரம் செய்து வந்த நமதூர் நபர் (இவர் பின்னர் நமதூரில் பாஸ் காம்ளெக்ஸில் டேக் அண்ட் வாக் கடை வைத்து நடத்தியவர்) இவர்கள் நிலமையைக் கண்டு பரிதாபப்பட்டு 50 ரூபாயைக் கொடுத்து, "காயல்பட்டினத்திற்கு போங்க அங்கே அல்- அமீன் இளைஞர் அமைப்பு உள்ளது அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்", என்று யோசனை சொல்லி அனுப்பி வைத்துள்ளார்.
மூன்று நாட்களாக அரை வயிறு உணவு, அலைந்து திரிந்த அலுப்பு, ஆதரவில்லாத நிலை என மன உளைச்சலுக்கு ஆளாகிய அக்குடும்பம் காயல்பட்டினம் வந்து இறங்கியது. செல்ல வழியும் தெரியாமல் தேடி வந்த அமைப்பின் பெயரும் புரியாமல் தவித்த நிலையில் இவர் நிலமையைப் புரிந்து கொண்ட யாரோ ஒருவர், "இப்படியே நேரா போங்க அந்த வளைவில் ஒரு பள்ளிவாசல் இருக்கும் அங்க போய் கேளுங்க அவங்க உங்களுக்கு உதவி செய்வாங்க", என வழிகாட்ட அவர்கள் அல்- ஜாமிவுல் அஸ்ஹருக்கு முன்னால் இருந்த பூக்கடை திண்ணையில் வந்து அமர்ந்தனர்.
இரவுத் தொழுகைக்காக வந்த நான் இவர்கள் ஏதோ வெளியூர்க்காரர்கள், வழிப்போக்கர்கள் என நினைத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தேன். தொழுகையை முடித்து விட்டு திரும்புகையில் மீண்டும் அவர்கள் அங்கேயே அமர்ந்திருப்பதைக் கண்டேன். பசியின் களைப்பால் வாடிய முகத்துடன் ஏதோ எதிர்பார்த்த வண்ணம் ஏக்கத்துடன் இருந்த அவர்கள் நிலை வித்தியாசமாகத் தெரியவே, என்ன நடப்பு என்பதை அறிய அவரது அருகில் சென்று விசாரித்தேன்.
நான் கேட்ட மாத்திரத்தில் மனிதர் தேம்பித் தேம்பி அழு ஆரம்பித்து விட்டார். "நான் நாலு நாளா புள்ளெ குட்டியோடு தெருவில் நிற்கிறேன் எங்களைப் பார்த்து ஒருத்தன் கூட என்ன ஏதுன்னு கேட்கல்லெ! ஆனா ரெண்டு பேர் மட்டும் கேட்டாங்க... ஒன்னு அந்த பஸ்டான்டுலெ செருப்பு விற்கிற பாய், இப்ப நீங்க இந்த ரெண்டு பேருமே முஸ்லிம்ங்கதான்” என விம்மியவரைத் தேற்றியவனாக விபரத்தைக் கேட்டறிந்தேன். என்னுடன் இருந்த இளகிய மனதுடைய (பெயர் சொல்ல விரும்பாத) என் நண்பர் பதைத்தவராக, "முதல்லெ நீங்க வாங்க... வந்து எல்லோரும் சாப்பிடுங்க அப்புறம் பேசிக்கொள்ளலாம்",என அவசர அவசரமாக அவர்களை அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உபசரித்தார்.
உணவின்றி வாடிய அந்த ஜீவன்கள் கண்ணீர் மல்க உணவருந்திய காட்சியை இன்று நினைத்தால்கூட என் விழிகள் குளமாகின்றன. நடந்தவற்றை யாவும் அஸ்ஹர் நிர்வாகிகளிடம் எடுத்துக் கூறினேன். செவிமடுத்த அந்த நல்ல மனிதர்கள், "பொறுங்க தம்பி! குர்ஆன் வகுப்பு நடக்கிற நேரம் கூட்டம் அதிகமா இருக்கும் பயான் முடிஞ்சதும் நாம என்னவென்று விசாரிப்போம் முதல்லெ அவங்களுக்கு சாப்பாடுக்கு ஏற்பாடு பண்ணுங்க", என்றனர். அந்த பொறுப்பை என் நண்பர் ஏற்றுக் கொண்டார் எனக் கூறி நானும் குர்ஆன் வகுப்புக்குச் சென்று விட்டேன்.
அன்றிரவு சொல்லி வைத்தார் போல் ஜகாத் மற்றும் சதக்கா குறித்த விளக்க உரையை T.S. இஸ்மாயீல் அவர்கள் தெள்ளத் தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தார். இடையில் என் இயற்கை தேவையை நிறைவேற்ற வெளியில் வந்த நான் அந்த மாற்று மத சகோதரனைக் கண்ணுற்றேன். குழந்தைகள் பசி நீங்கி ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். அவரும் அவரது மனைவி மற்றும் வயதான தாயாரும் வானத்தை வெறித்துப் பார்த்த படி மார்க்க சொற்பொழிவைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். நான் அவர் அருகில் சென்றதும் எழ முயன்றவரை இருக்கச் சொல்லிவிட்டு, மேனேஜ்மென்டில் சொல்லி இருக்கின்றேன். சொற்பொழிவு முடிந்ததும் அவர்கள் உங்களை சந்திப்பார்கள் என்றேன். "ம்...சரிங்க தம்பி", என்ற அவரது கண்களில் நன்றி உணர்ச்சி பொங்கியதை உணர்ந்தேன்.
பயான் முடிந்து கூட்டமும் கலைந்தது. "தம்பி நீங்க யாரும் வராதீங்க ஒரு ரெண்டு பேர் மட்டும் போய் IIM லெ வச்சு என்னன்னு விசாரிங்க, பாவம்! அவர் கூச்சப்படுவார்", என நிர்வாகிகள் கூற, ஹாமீத் பக்ரி ஆலிம் மற்றும் இரண்டு நிர்வாகிகள் என்னுடன் வந்தனர். அவரது கையில் திருமறையின் தமிழாக்கமும், பெருமானாரின் பொன்மொழிகள் அடங்கிய இரண்டு புத்தகங்களும் இருந்தன. மாற்று மத சகோதரரை அழைத்து ஆலிம் அவர்கள் விபரங்களை சுருக்கமாகக் கேட்டறிந்த பின்னர் வழிப்போக்கர்களுக்கும், பொருளை பறி கொடுத்தவர்க்கும் உதவும் நிலை குறித்து சத்திய மார்க்கத்தின் சான்றுகளை தெளிவாக அவர் புரியும் மொழியில் பத்து நிமிடங்கள் எடுத்துரைத்தார்.
"இது பிச்சை அல்ல உதவி! ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் உள்ள கடமை! ஆக நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை" என்று கூறி நேரம் கிடைக்கும் போது இந்த குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பை படியுங்கள் என அவரது கரங்களில் கொடுத்தார்.
மிகுந்த மரியாதையோடு அதை வாங்கிக் கொண்ட அவர் உணர்ச்சி ததும்ப நனைந்த விழிகளோடு, "ஐயா முஸ்லிம்ங்கள்ன்னா குண்டு வைக்கிற தீவிரவாதிகள். இந்த நாட்டுக்கு எதிரிகள், பிற மதத்தவரோடு ஒத்துப்போக மாட்டாங்க, மிகக் கடுமையா இருப்பாங்கன்னு தப்புக்கணக்கு போட்டிருந்த எனக்கு நீங்க எவ்வளவு மென்மையானவர்கள், பிறருக்கு உதவும் மனப்பாண்மை கொண்டவர்கள் என்பதை நான் இன்றுதான் புரிந்து கொண்டேன். யார் உதவுவார்கள் என்று உரிமையுடன் எதிர்பார்த்தேனோ அவர்கள் எல்லாம் எங்களை அநாதையாகத் தவிக்க விட்டுவிட்டனர். உதவி செய்யவில்லை! நான் வேறெ மதக்காரன் என்று தெரிந்தும் என்னையும் உங்க உடன்பிறப்பா நெனச்சு எங்களெ மதிச்சு வயிறார சாப்பாடு போட்டு உதவிக்கு நிற்கிறீங்களே? அப்ப உங்க மதமும் மென்மையான உண்மையான மதமாகத்தான் இருக்கும்." என மனம் உருகி கை கூப்பினார்.
மனிதர்கள் மனிதர்களை வணங்கக் கூடாது எனும் மார்க்க தத்துவத்தை ஆலிம் எடுத்துக் கூறி, "நீங்கள் பாதுகாப்பாக ஊருக்குச் செல்ல இந்த நிர்வாகம் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும்" என்று அவரது கரங்களைப் பற்றிப்பிடித்து ஆறுதல் சொல்லி ஆலிம் விடை பெற்றுச் சென்றார்.
சற்று நேரத்திற்குள் அங்கிருந்த ஒரு சில நபர்களிடமிருந்து ஆயிரத்தி எண்ணூறு ரூபாய் உதவித் தொகையாக சேர்ந்தது. "இவ்வளவு பணம் எனக்குத் தேவையில்லை பஸ் சார்ஜ்ஜுக்கு மட்டும் கொடுங்க போதும். நான் ஊர் போய் சேர்ந்த உடனே உங்களுக்கு மணியார்டர்லெ அனுப்பி வச்சுடுறேன்", என்றவரிடம் இது உங்கள் பணம் இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என வற்புறுத்தி வழங்கி விட்டு அதிகாலை மதுரைக்குச் செல்லும் பேருந்தில் அவர்களை ஏற்றிவிடும் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு அனைவரும் வீடு திரும்பினர். ஒரு நல்ல காரியத்திற்கு நாமும் துணை நின்றோம் எனும் மன நிறைவோடு நானும் எனது இல்லம் நோக்கி நடந்தேன்.
இச்சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதம் கழித்து ஒரு நாள் வெள்ளிக் கிழமை ஜும்மா முடிந்ததும் ஒரு அறிவிப்பு வந்தது. அருகில் முக பரிச்சயமுள்ள ஒருவர் நின்று கொண்டிருந்தார். யார் இவர் என உற்று நோக்கிய எனக்கு பெருத்த ஆச்சரியம்! அவர்தான்...! அவரேதான்...! அன்று உதவியை நாடி வந்த அந்த நபர்தான்...! அவரிடம் ஒலி பெருக்கி கொடுக்கப்பட்டது. அவர் "ஸலாம் அலைக்கும்" எனும் கொச்சை உச்சரிப்பில் பேசத் துவங்கினார்....
”நான் மதுரையில் சிறிய அளவில் துணி வியாபாரம் செய்து வருகின்றேன். ஒரு மாதத்திற்கு முன் எனது குடும்பத்துடன் வழிபாட்டிற்காக பக்கத்து ஊரில் உள்ள ஒரு கோவிலுக்கு வந்திருந்தேன்", என அன்று நடந்த அத்தனையும் விவரித்தரார். "வழிப்பறியில் உடமைகளைப் பறிகொடுத்த நாங்கள், எதற்காக வந்தோமோ அதைச் சார்ந்தவர்கள் உதவுவார்கள் என்று பெரிதும் நம்பினோம். ஆனால் அவர்கள் யாரும் என்னைக் கண்டுகொள்ளவேயில்லை.
மாறாக என் அருமை இஸ்லாமிய சகோதரர்கள் வாஞ்சையுடன் என்னை உபசரித்து உதவிய மனித நேயம்தான் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவங்க தந்த தமிழ் குர்ஆனைப் படித்தேன் எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்வதை உணர்ந்தேன். அல்லாஹ்வின் கருணையால் இன்று நான் இந்த மண்ணில் இஸ்லாமை முழுமையாக ஏற்றுக் கொள்ள வந்திருக்கிறேன். இன்னும் ஒரு சில நாட்களில் என் குடும்பத்தார் அனைவரையும் அழைத்து வருவேன் அவர்களும் இஸ்லாத்தை ஏற்பார்கள்" என்று கூறி முடித்ததும் அவருக்கு கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்டது. அது வரை நிசப்தமாக இருந்த இறையில்லத்தி்ல் "அல்லாஹு அக்பர்" எனும் ஒட்டுமொத்த ஒலி இடியோசை என முழங்கியது.
மனித நேயத்திற்கு மதம் ஒருபோதும் தடையில்லை! கல்வி, வேலை வாய்ப்பு, கை நிறைய பணம் என அலங்கார சலுகைகளை அள்ளித் தெளித்தும், கோடி கோடியாக செலவு செய்தும் பிற மதங்கள் சாதிக்க இயலாத ஒன்றை ஆதரவற்று நிற்கும் ஒரு மனிதனுக்கு பிரதி பலனை எதிர்பாராமல் மனமுவந்து உதவி புரிவதால்கூட சாதிக்க இயலும் என்பது தெளிவாகிறது. நாம் செய்யும் நற்கருமங்களையும், நமது நன்னடத்தையையும் நன்கு அறிந்து உணர்ந்து புரிந்து கொண்டு தெளிவு பெற்றுதான் நம் தூய மார்க்கத்தின் பால் அவர்கள் வருகின்றனர். அவ்வாறு வந்தவர்கள்தான் இன்று ஈமானில் உறுதியுடனும், இறையச்சத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சொல்லப் போனால் நம்மை விட பன்மடங்கு மேலாக...! இன்னும் மேன்மையாக...! |