உலகளாவிய நாடுகளில் வாழும் இணையதள தமிழ் வாசகர்களுக்கு இனிய அஸ்ஸலாமு அலைக்கும். இந்த ஐந்தாம் பாகத்துடன் இந்த தலைப்பு கட்டுரை முடிவு பெறுகிறது. இன்ஷாஅல்லாஹ் புதிய தலைப்பில் புதிய கருத்தைத் தேடி சேகரித்து வருகிறேன். வரும் காலத்தில் வெளியிடப்படும்.
படிப்பதும், எழுதுவதும், பொதுச்சேவை செய்வதும் எனது பொழுதுபோக்கு!
எப்போதும் புதிய புதிய புத்தகங்கள், தின - வார - மாத இதழ்கள் பலவற்றைத் தேடிப்போய் அரசு நூலகத்தில் வாரத்தில் நான்கு நாட்கள் படிக்கிறேன். குறிப்பும் எடுத்துக்கொள்வேன். பத்திரிக்கைகளில் அரசு அறிவிப்பாக இருப்பின், அதை ஜெராக்ஸ் எடுத்து, எங்கள் தாயிம்பள்ளி மற்றும் ஊரில் உள்ள பல பள்ளிவாசல்களுக்குச் சென்று, அங்கு நிர்வாகிகளின் அனுமதி பெற்று, தகவல் குறிப்பு ஜெராக்ஸ் பிரதியை - அட்டையில் ஒட்டி, தொங்கவிட்டு, பள்ளிக்குத் தொழ வருவோர் பார்வையில் படும்படி வைத்து வருவேன். இதில் எனக்கு ஓர் அலாதியான பிரியம்.
புதிய நூல் வாசிக்க கார உடை மரக்காட்டுக்குள் போய் காலை மாலை தனிமையில் புத்தகம் படிக்கும் பழக்கம் முப்பது வருடங்களாக செய்து வருகிறேன். படிப்பது சுலபம். எழுதுவது கஷ்டம். அதுவும் வாசகர்களைப் பிடிப்பது என்பது மாபெரும் கஷ்டம். வாசகர்கள் விலாங்கு மீனை விட பெரியவர்கள். நான் பொதுச்சேவை செய்வதால் எல்லா கொள்கை மக்களுடனும் பழகுகிறேன். என்னை அவர்கள் கவரும் விதத்தில் நடந்துகொள்வேன்.
மறைந்த எம்.எல்.சாகுல் ஹமீது (பெரிய SK) அவர்களிடமும், நமதூர் சேர்மன் ஆபிதா அம்மையாரின் தந்தை பாளையம் இப்றாஹீம் காக்கா இடமும், கவிஞர் எஸ்.எம்.பி.மஹ்மூது ஹுசைன் அவர்களிடமும், பாவலர் அப்பா அவர்கள் மகன் தினத்தந்தி யூசுப் காக்கா அவர்கள் மூலமும், நற்சிந்தனை ஆசிரியர் முஹம்மது ஹஸன் காக்கா, முத்துச்சுடர் ஆசிரியர் எஸ்.கே.எம்.நூஹுத்தம்பி ஆலிம், ஐதுரூஸ் ஆலிம் (இன்னும் பேரறிஞர்கள் பட்டியல் பெரிதாகும்...) பெரிய மனிதர்களிடம் தொடர்பு மூலம் நல்ல விஷயங்களை எப்போதுமே பெற்றுக்கொண்டிருக்கலாம். எல்லாம் வாழ்க்கையில் கிடைக்காத, புத்தகங்களில் படிக்காத, அரபி ஆங்கில நூல் அறிவுப் பொக்கிஷங்களை இவர்கள் மூலம் பெற்றுள்ளேன். எழுதும் நேரம் விடியற்காலை சுபுஹு தொழுகைக்குப் பின் அமைதியான நேரம், ஜில்லென்ற குளிர்ந்த காற்று சிந்தனை ஊற்று ஊரும் வேளை மறக்க முடியாத அமைதைியான நேரம் அதுவாக இருக்கும்.
இன்றைய மாணவ-மாணவியர்களின் நிலை எப்படி உள்ளது?
நமதூரில் மாணவ-மாணவியர்கள் மார்க்க அறிவிலும், உலக அறிவிலும் ராக்கெட்டை விட வேகமாக யோசித்து, அழகாககப் பேச, எழுதக் கூடியவர்கள் என்றாலும், ஓவியத்தில் மட்டும் பின்தங்கி நிற்பது எனக்குப் பெரிய வேதனையாக உள்ளது.
நான் சென்னை அரசு ஓவியக் கல்லூரியின் மாலை நேர வகுப்பில் 1976இல் ஓவியம் முறைப்படி கற்றவன். பி.ஆர்க். (B.Arch.) கட்டிடக் கலை வரை படிப்புக்கு என்னிடம் ஓவியம் கற்ற மாணவர்கள் ஓவியப் படம் சுலபமாக இருப்பதாக நேரில் பாராட்டுகிறார்கள். மாணவியர்கள், பள்ளிக்கூட - கல்லூரி பாடங்களிலும், எம்ராய்டரி பூக்கள் வரையவும் சுலபமாக கை வருவதாக அவர்கள் நேரில் தெரிவிக்கிறார்கள். ஊர் முழுக்க எல்லாப் பகுதிகளிலும் நான் வார விடுமுறை நாட்களில், அனைத்து மாணவ-மாணவியர்களுக்கும் சுலப ஓவியம் இரண்டாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை பகல் 11 மணி முதல் ஒரு மணி நேரம் மாணவர்களுக்கும், மாலை 5 மணி முதல் ஒரு மணி நேரம் மாணவியர்களுக்கும் ஓவியம் கற்றுத் தர ஆவலாக உள்ளேன். (சிறிய கட்டணம் வாரந்தோறும் செலுத்தினால் போதும்.)
இதில், ஊரிலுள்ள அனைத்துப் பகுதி மக்கள் கவனம் செலுத்தி, என்னைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை போல சிறுபிள்ளை மனதோடு வந்து, அடிப்படை ஓவியம் வண்ணம் தீட்டும் முறையைக் கற்றுத் தர ஆவல் படுகிறேன். காலம் பொன் போன்றது. மறந்துவிடாதீர்கள்.
மூன்று திரை மறைந்து வருகிறது, ஏன்?
நமதூரில் மூன்று வகை திரை கொஞ்சங்கொஞ்சமாக மறைந்து வருவது வேதனையாக உள்ளது. அந்தக் காலத்தில் ஊர் முழுவதிலும் உள்ள முடுக்கு முன்பகுதியில் திரை தொங்கும். முழுக்கு (சந்து) பகுதியிலுள்ள வீட்டு வாசலில் பெண்கள் அமர்ந்திருப்பது வீதியில் போகும் அந்நிய ஆண்கள் கண்களில் படாமல் முடுக்கு முன்திரை மறைத்து வரும். அது இன்று முற்றிலும் மறைந்துவிட்டது. விதிவிலக்காக, எனது வீட்டிலும், ஊரில் சில வீடுகளின் முன்பும் முடுக்கு பக்க திரை அபூர்வமாகத் தொங்குவதைக் காணலாம். பல வீடுகளின் முன் முடுக்கு பக்கம் திரை மறைந்து வருவது ஏன்?
பெண்களின் முகத்திரை என்ற பர்தா எங்கே மறைந்தது?
முஸ்லிம் பெண்கள் பலர் முகத்தை மூடி இருப்பார்கள். பர்தா முகத்தையும், உடலையும் மறைத்து, வெளியே வருவார்கள். ஆனால் அது இன்று முற்றிலும் மாறிவிட்டது. முகத்தை மறைக்காமல் பல முஸ்லிம் பெண்கள் நடமாடுகிறார்கள். ஏன் இப்படி மாறிவிட்டார்கள்? எப்போதும் எங்கு வெளியே சென்றாலும் முஸ்லிம் பெண்கள் அனைவரும் முகத்தையும், உடலையும் நன்றாக மறைத்து வீதியில் ஆட்டோ - இதர வாகனங்களில் பயணம் செய்தல் வேண்டும்.
ஆட்டோ வாகனத்தில் திரை மூடாமல் போவது ஏன்?
அந்தக் காலத்தில் குதிரை வண்டியில் முன் பகுதி, பின் பகுதிகளில் திரை போட்டு பயணம் செய்த நமதூர் பெண்கள், இன்று ஆட்டோவில் திரை இருந்தும், மூன்று பக்கமும் திரை இன்றி பலர் பயணம் செய்வது வேதனையாக உள்ளது. முகத்திரை, முடுக்குத்திரை, ஆட்டோ திரை இல்லாது போவது கண்டால் பொதுமக்களும், ஆலிம்களும் பயான் செய்யும் உபன்னியாசக் கூட்டத்தின்போது நளினமாகக் கண்டித்து வந்தால் நல்லது. இதில் கவனக்குறைவாக உலமாக்களும், பொதுமக்களும் இருந்திடாமல் கவனம் செலுத்திட இக்கட்டுரை வாயிலாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
(ஐந்தாம் தொடர் முடிவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!) |