அந்த மருத்துவமனை முன் அம்புலன்ஸ் வந்து நின்றது.
ரத்தம் வழிய...வழிய ஒருவரை யாரோ கொலை வெறியுடன் தாக்கியிருக்கின்றார்கள் என்பது பார்த்த மாத்திரத்தில் தெரிகிறது.
பணியில் இருந்த மருத்துவர் இந்த நபரை எங்களுக்கு ஏற்கனவே நன்றாக தெரியும். இவருக்கு தீராத நீரழிவுநோய், ஒற்றைத் தலைவலி, வயிற்றுவலி, கால்வலியும் உண்டு அந்த வலிகளையெல்லாம் குணப்படுத்திய பிறகே உயிர்காக்கும் சிகிச்சை இவருக்கு அளிப்போம் என்று அடம்பிடித்தார்களாம்; அதுபோல இஸ்ஸாமிய சமுதாயத்தின் தற்போதைய நிலை இப்படித் தான் இருக்கிறது.
சமுதாய தலைவர்கள் ஒற்றிணைவதில் ஏதேதோ! சப்பைகட்டு சொல்லிக்கொண்டு தனி...தனிமரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தால் நாம் எப்போது தோப்பாக ஒன்றிணைவது என்ற ஆழ்ந்த சிந்தனைக்கும், ஆய்வுக்கும் நம்மை நாமே தள்ளப்பட்டுள்ளோம் என்பது தான் நிதர்சனம்...
இஸ்லாமியர்களை அழிப்பதில் எதிரிகள் அணுகுண்டுகளுடன் நம்மை நோக்கி விரைந்து நிற்கின்றார்கள். நாமோ நம் எதிரி யார்? என்று கண்டுபிடிப்பதிலேயே தோல்வியை தழுவிக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் ஒரு சமுதாயத்திற்குள்ளேயே உன்னை நான் அழிப்பேன். என்னை நீ அழிப்பாயா? சேற்றை வாரி தெளிப்பாயா? என்று எதிரும், புதிருமாக பதவி, பணம், அதிகாரம் யாரிடம் என்ற குழாயடி சண்டை நடத்திக்கொண்டிருந்தால். சமுதாய எதிரிகளை எதிர்த்துப் போரடுவதைப் பற்றி எப்போது நாம் சிந்தையில் நிறுத்தி சிகரத்தை தொடுவது...
DCW - என்பது இப்போது சுற்றுவட்டார மக்களின் உள்ளத்திலும், உதட்டிலும், 'கெட்ட வார்த்தையாக" உச்சரிக்க தொடங்கி விட்டார்கள். அப்படி உச்சரிக்கும் நிலைக்கு அவர்களை தள்ளப்பட்டது வேறு யாருமல்லர், DCW - வாதிகளே...வியாதிகளே...
ஆலையை நடத்துபவர்கள் வல்லவர்களாக இருக்க வேண்டியதில்லை. மாறாக அவர்கள் நல்லவர்களாக இருந்தாலே போதும். அவர்களின் உள்நோக்கம் தூய்மையாக இருப்பின் - அவர்கள் செய்யும் புறச்செயல்களால் ஆபத்து ஒன்றுமில்லை. புறச்செயல்கள் நன்மை செய்வதற்காகச் செய்யப்பட்டாலும் தீமையே விளையும்.
சமீப காலமாக ஆலை நிர்வாகிகள் காயல் மக்களுக்கு உதவிகரம் என்ற பெயரில் 'நுனிப்புல் மேயவரும் இவர்கள்" ஏதோ இன்னொரு வி~யத்தை, வி~மத்தை, மக்கள் மனதில், மத்தியில் விதைக்கிறார்கள் என்று அச்சம் கொள்ளவே ஆர்ப்பறிக்கிறது... ஏனெனில் இதற்கு முன் இதுபோன்ற எந்த நடைமுறையும் செய்திராத இவர்கள் இப்போது வாரிவழங்கும் வள்ளல் போன்ற நாடக மேடையின் உள்நோக்கம் புரிகிறதா...?
ஊர் மக்கள் ஒன்று கூடி ஓரணியாக இருக்கையில் ஏன்? ஒவ்வொருவரும் தனி...தனி அணியாக (நமதூர் நகர்மன்ற கவுன்(சிலரை) போல்) நம்மை நாமே தனிமரமாக தனிமைப்படுத்திக் கொள்கிறோமே. வெறும் அற்ப பணத்திற்க்காகவா...?
ஓரிரு உதாரணம் சொன்னால் புரியும் என்று எண்ணுகிறேன். 'பைத்துல் முக்த்தீஸ்" - சை சுற்றி இஸ்லாமியர்கள் தான் வாழ்ந்து வாந்தார்கள். யூதர்களின் சிந்தனையில் இந்த பள்ளியையும் அதை சுற்றிய இடங்களை தங்கள் வசம் கொண்டு வர வேண்டும் என்ற தொலை நோக்குப் பார்வையில் - அந்த பகுதி இஸ்ஸலாமிய மக்கள் வறுமையில் தங்களது வீடுகளை விற்பனை செய்வதற்;கு இஸ்லாமியர்கள் கொடுக்கும் தொகையை விட மிக அதிகமாக கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தார்கள். வருடங்கள் உருண்டோடின! இறுதியில் அந்த பகுதிகள் அனைத்தும் யூதர்கள் கைவசம் வந்ததும் 'பைத்துல் முக்த்தீஸ்" மற்றும் அந்த பகுதிகள் எங்களுக்கு சொந்தம். இஸ்லாமியர்களுக்கு இங்கே என்ன வேலை என்றார்கள். அதுபோல தான் இந்த ஆலையின் சிந்தனையும் இருக்கிறது. அதற்கு நாம் துணை போகலாமா...?
காட்டில் மாட்டை தனிமைபடுத்தியே சிங்கம் வேட்டையாடுகிறது. அதே! நேரம் மாடுகள் பெரும் கூட்டமாக ஒன்றிணைந்து சிங்கத்தை விரட்டியடிப்பதை நாம் தொலை காட்சியில் பார்பதில்லையா?
ஐந்தறிவுகள் தங்களுக்கு ஒர்ஆபத்து எனும்போது ஒன்றிணைந்து போராடி வெற்றிக்கொள்ளும் போது - பகுதறிவு படைத்த நாம் ஏன்? நமது இனத்துக்கு ஒரு ஆலையின் வடிவில் வரும் ஆபத்தை எதிர்த்து ஒன்றிணைந்து போரடாமல் தனி மரமாகிறோமா...? அல்லது தனிமரம் ஆக்கப்படுகிறோமா..?
ஒரிரு ஆண்டுகளுக்கு முன் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கூடங்குளத்து மக்கள் அனல்மின் நிலைய முற்றுக்கை போராட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் படிப்பறிவும், பண பலமும் அதிகமில்லை என்றாலும் - மனதில் அசைக்க முடியாத உறுதியும். ஒற்றுமையும் இருந்தது. ஆனால் இந்த ஆலை தனியாருக்கு சொந்தமானது. நம்மிடம் எல்லாம் இருக்கிறது. இந்த ஆலை முன் வீதியில் உட்க்கார்ந்து போரட தான் மனதிலும், ஒற்றுமையிலும் உறுதியில்லையோ? என சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.
சிறு கிராமமக்கள் தங்கள் ஊரின் தேவைக்காக தேர்தலை புறக்கணித்து அரசுகளிடமிருந்து அத்தேவைகளை முறையாக பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் நாம் பெரிய ஊர் என்று தற்பெருமையுடன் உலாவருவதோட சரி! காயலில் அரசியல் ரீதியாக ஒவ்வொரு கட்சிக்கு பெருங்கூட்டமும், இஸ்லாமிய இயக்கங்களுக்கு என தனித்தனி கூட்டமும் கூடாரமாகவும் இருக்கிறோமே தவிர - மாறாக இந்த ஆலையை இங்கிருந்து இடமாற்றம் செய்வதற்கு ஒட்டு மொத்த மக்களும் ஒரு குடையின் கீழ்நின்று போராடினால் கூடியவிரைவில் வெற்றி சாத்தியமே...!
சென்ற தேர்தலை நாம் புறக்கணித்திருந்தால் இதுவரை நல்ல முடிவும், விடிவும் நமக்கு கிடைத்திருக்கும். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை காயல் மற்றும் சுற்றுவட்டார ஊர் மக்களும் ஒன்று சேர்ந்து புறக்கணித்தால், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், ஊடகத்துறை என அனைவரின் கவனத்ததையும் நாம் ஈர்த்து மத்திய, மாநில அரசுகளிடம் எங்களுக்கு வாழ்வாதாரமில்லை - மற்றும் நோய்கள் தானகவே தொற்றிக் கொள்கிறது. எனவே இந்த ஆலையின் இடமாற்றத்தை தவிர வேறு வழியில்லை. "அப்படி அகற்றுவதாக வாக்குறுதி அளித்தால் உங்களுக்கு வாக்கு இல்லையேல் தேர்தலை புறக்கணிப்போம்" என்று ஒன்றுபட்ட ஒற்றுமை குரல் கொடுத்தால் 'நாளை நமதே! இந்த நாளும் நமதே!! எந்த நாளும் இனிதே!!!"
காயலில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்றால் இன்னும் சில ஆண்டுகளில் காயல் ஒரு தோப்பாகவே மாறிவிடும். அதுபோல இந்த ஆலை இடமற்றத்திற்கு நாம் ஒவ்வொருவரும் ஒன்றினைவோமேயானால் 'தனி மனிதனும் தோப்பாகவே மாறி வெற்றிக்கொள்வோம்...அந்த இடத்தை வெற்றிடமாக்குவோம்..."
'மதம் படித்தவர்கள் மிகக் குறைவு - மாறாக
மதம் பிடித்தவர்களே அதிகம்..."
கடந்த காலங்களில் மார்க்க அறிவுக்கு தீனிபோட செவிக்கு உணவு படைத்தவர்கள். இன்றோ? மார்க்க அறிவை போதிப்பதை விட இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் பணிக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த கோளாறு இஸ்லாமிய பொது மக்களிடமோ, அல்லது நேக்குப் போக்குகான முஸ்லீம்களிடமோ இருப்பதில்லை - மாறாக 'நாங்கள் அக்மார்க் இஸ்லாமியர்கள்" என மார்தட்டும் சில மக்கள் தான் இத்தகைய கோளாறுடையவர்களாகவும், குழப்பவாதியாகவும் இருக்கிறார்கள். சரியான மார்க்க அறிவும் முறையான சட்ட விளக்கமும் இல்லாத காரணத்தால் இந்த கோளாறு தற்போது பரவலாக நடைமுறையில் காண முடிகிறது...
இறை வணக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டும் சில இளைஞர்கள் ஒரு சார்புடைய நிலையில் பிறரிடம் எங்கள் எண்ணிக்கை என்ன தெரியுமா? என கேள்வி எழுப்புவதிலேயே தங்களின் நேரத்தையும் சக்தியையும் விரையம் செய்கிறார்கள். நன்னடத்தையோ நற்பண்புகளோ இல்லாதாவர்கள் எவ்வளவு பெருங்கூட்டமாக இருந்தாலும் - அவர்களால் எந்தவித பயனுமில்லை. சமுதாயத்திற்கு 'தரமே முக்கியம் எண்ணிக்கையல்ல".
அன்று ஒரே கொள்கையின் அடிப்படையில் ஒன்று சேர்ந்தவர்கள். நாள்பட மனப்புழுக்கத்தின் வெளிப்பாடாக பிரிவினையை மேற்கொண்டு - இரண்டென கலந்திருந்தவர்கள் - இரண்டு, மூன்று இயக்கங்கள் கண்டார்கள், காண்கிறார்கள்... (தங்க தாம்பூலத்தில் விழுந்த விரிசல் மாதிரி) இன்று தலைவர்கள் தங்கள் சுயநலத்திற்காக கொள்கைகளை போதைப் பொருளாக்கி மக்களை தன் பக்கம் சுரண்டி இழுக்கிறார்கள்...சுண்டி அழைக்கிறார்கள்.
அன்று ஓரணியாக இருந்தவர்கள் - இன்று ஒவ்வொரு அணியாக இருக்கிறார்கள்... உங்களை ஒன்றுபடுத்தவே - நாங்கள் ஒன்றுபட்டோம் என்றவர்கள் தற்போது (அரசியலாரை போல) இயக்க வெறியில் மயக்கம் கொள்கிறார்கள்... உதட்டில் ஒற்றுமை உள்ளத்தில் வேற்றுமை கொண்டு; "கொள்கைக்கு ஒரு இயக்கமும், வீதிக்கு ஒரு கட்சியும்" - என சில இஸ்லாமியர்கள் சின்னபிள்ளை தனமாக வீராப்பு கொண்டிருந்தால். இந்த சமுதாயம் இன்னும் 100 ஆண்டுகளுக்கு பின்னோக்கித்தான் முன்னேறும்... சிந்திக்க சொல்கிறவர்கள் - சிந்திப்பார்களா...?
இயக்கங்களோடு - இயக்கம் இணைத்து பாலங்கள் கட்டப் பயன்பட வேண்டிய கற்களால் தலைவர்கள் மனச்சுவர்கள் எழுப்பாதீர்கள்...
மார்க்க வெளிச்சம் தருவதற்காக ஏற்றப்பட்ட விளக்குகளால் வீதியெங்கும் சண்டையும், சர்ச்சையும் செய்யாதீர்கள்...
உயிர் நேயம் என்ற உயர்ந்த போதம் கற்பிக்க வந்த இறை கொள்கையால் பேதம் கற்பிக்காதீர்கள்...
ஒன்றிணைவோம்...
ஒன்றிணைப்போம்...
ஒற்றுமையுடன் வாழ படைத்தவனிடம் பரிகாரம் தேடுவோமாக...
|