16ஆம் திகதி அதிகாலை 04.50 மணி...
எங்கள் இல்லத்தில் உறக்கத்திலிருந்தோம். அலாரத்தின் அலறல் கேட்டு விழித்த என் கணவர், கட்டிலிலிருந்து காலைக் கீழே வைத்ததுதான் தாமதம்! தேள் கொட்டினாற்போல காலை இழுத்துக்கொண்டு சப்தமிட்டார்....... அல்லாஹு அக்பர்! வீடு முழுக்க தண்ணீர்!!
எப்போதும் சற்று சோம்பலோடு சில நிமிடங்கள் சென்ற பின்பே எழும் நான் சடாரென்று எழுந்து காலைக் கீழே வைத்தால், கடல் அலையில் கால் நனைத்தது போல கரண்டைக் கால் வரையிலும் தண்ணீர்! என்ன நடந்திருக்கும் என்று யூகிக்கும் முன்னரே மூளை அவசரச் செய்தியொன்றை மனதிற்கு அனுப்பியது. “பொறுமை! பொறுமை!! நிதானம்!!! பதட்டப்படாதே!!!!”
அத்தனையையும் உள்வாங்கிக்கொண்டேன். படுக்கையறையை விட்டும் வெளியே வந்து, நடு ஹாலில் நின்றுகொண்டு, நிதானமாக - அதே நேரம் உரத்த குரலில், “எல்லோரும் பதட்டப்படாமல் எழுந்திருங்கள்...! வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது!!” என்றேன்.
நாங்கள் படப்போகும் பாட்டைப் பார்க்க மனமின்றி, மின்சாரமும் ஏற்கனவே காணாமல் போயிருந்தது... எமர்ஜென்ஸி விளக்கு அப்போதுதான் நினைவுக்கே வந்தது. தேடி எடுத்து வந்து வெளிச்சமேற்றினால்...... கால்களால் மட்டுமே அதுவரை உணர்ந்து வைத்திருந்த தண்ணீரை அப்போதுதான் கண்களால் பார்க்கிறோம்... ஏதோ விபரீதம் என புரிய ஆரம்பிக்கிறது...
“யா அல்லாஹ்! பிள்ளைகள் இரண்டும் தரையில் கை மெத்தை மீது தூங்கினார்களே...?” என்றெண்ணியவாறே ஓடிப்போய்ப் பார்த்தால், அங்கே இரண்டும் அலறிக்கொண்டே எழுந்து நிற்கிறது... கை மெத்தையோ - படகு போல அங்குமிங்கும் மிதந்தோடிக்கொண்டிருக்கிறது...
பிள்ளைகள் தண்ணீரை உணருமுன்பே நமக்கு உணர்வூட்டிய அல்லாஹ்தான் எவ்வளவு கருணையாளன்...?
இன்றைக்கெல்லாம் எழுப்பினாலும், “இன்னும் அஞ்சி நிமிஷம்மா...” என்று என்னிடம் கடன் கேட்கும் என் இரண்டாவது மகள் கூட ஒரே வீச்சில் செங்குத்தாக எழுந்து நின்றுவிட்டாள்... யாரும் யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை...
“எல்லோரும் முதலில் உளூ செய்து தொழுதுவிட்டு துஆ கேளுங்கள்...! மற்றதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்...!!” மவுனத்தைக் கலைத்து, நான்தான் முதலில் பேசினேன். உளூ செய்வதற்காக பாத்ரூம் கதவைத் திறந்தால்........ ஸுப்ஹானல்லாஹ்! பாத்ரூம் தண்ணீரால் நிரம்பி வழிகிறது! அறுவறுப்புக்கொள்ளவோ, அசூயையடையவோ முடியாத நேரம்... காலைக் கடன்களை முடித்துவிட்டு, உளூ செய்து தொழுகையை முடித்ததும், “யாஅல்லாஹ்! எந்த நிலமையாக இருந்தாலும் இதை இலேசாக்கி வை! எதிர்கொள்ளும் சக்தியையும், பொறுமையையும் தந்தருள்!! என இறைவனிடம் இறைஞ்சிவிட்டு, எல்லோரும் வீட்டின் தரையில் கிடக்கும் சாமான்கள்... பைகள் என ஒவ்வொன்றாகப் பத்திரப்படுத்தி, கட்டிலின் மீது... நாற்காலிகளின் மீது... என கிடைத்த உயரங்களிலெல்லாம் வைக்கிறோம்... சின்ன மகளின் ஸ்கூல் பேக்...??? அதோ! அது முழுவதுமாக நனைந்துவிட்டது... ஒவ்வொரு சாமானாகத் தேடித்தேடி எடுக்கிறோம்... எல்லாமே தண்ணீரில் நன்றாகக் குளித்திருந்தன.
மணியும் 05.15 ஆகிவிட்டது... ஜன்னலைத் திறந்து பார்க்கிறோம்... கும்மிருட்டு! அமானுஷ்ய அமைதி... மழை! அதனிடம் பெரிதாக அழுகையோ, ஒப்பாரியோ இல்லை. சிணுங்கிக்கொண்டுதான் இருந்தது. ஆனால் இருட்டிற்குக் கண்கள் பழகியதும்தான் தெரிகிறது... மதம் பிடித்த யானையைப் போல தெருவில் சீறிக்கொண்டு வரும் தண்ணீரின் வேகம்...
எங்கிருந்து இவ்வளவு தண்ணீர்...? “எங்களது இடங்களை நீங்கள் ஆக்கிரமித்தால், உங்களது வீடுகளை நாங்கள் ஆக்கிரமித்துக்கொள்வோம் - என்ற கோபத்தில் விளைந்த பழிவாங்குதலா?” என அந்த நேரத்திலும் மனம் அசைபோடுகிறது! பெருங்கருணையாளனே...! ஏதோவொரு படிப்பினையை நாடுகிறாய் என மனம் நிதர்சனத்திற்கு வருகிறது. நிகழ்வின் விபரீதம் முழுவதுமாக விளங்குகிறது... கால்களிலோ நீர்மட்டத்தின் அளவு ஏறிக்கொண்டே செல்கிறது.
இதனிடையே... எமர்ஜென்ஸி லைட்டும் “என் பணி முடிந்துவிட்டது... இனி உங்கள் பாடு... எனக்குத் தினமும் உணவு தராவிட்டால் உங்களுக்கு இதுதான் தண்டனை” என சொல்லாமல் சொல்லிவிட்டு மவுனமானது. பரவாயில்லை! இன்னும் சில மணித்துளிகளில் சூரியன் தலைகாட்டிவிடுவான் என்ற தைரியமும் தகர்ந்தது. மழை சூரியனிடம் மறைமுக ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தது போலும்! விடிந்தும் விடியாத அந்தக் காலைப்பொழுது நீண்டுகொண்டேயிருந்தது.
“இரண்டு நாட்களுக்கு முன்பு இதைவிடப் பெரிய மழை பெய்தபோது வீட்டு வாசல்படி வரை தயங்கித் தயங்கித்தானே தண்ணீர் நின்றது...? இப்போதோ, இந்தச் சிறு சிணுங்கலிலும் அழையா விருந்தாளியாக அப்படியென்ன அவசரம்?” என்ற குழப்பமும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்க, இரண்டு அட்டைப்பெட்டிகளைத் தூக்கிகொண்டு வந்த உம்மா, “இந்த புத்தகங்களெல்லாம் தேவையாமா...? நனைஞ்சிடிச்சி பாருங்க!” என்றார்கள். எனக்குப் புரிந்துவிட்டது - பெரிய அட்டைப்பெட்டி முழுவதும் என் மூன்றாம் மகளின் புத்தக நண்பர்கள்... அவளுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான் என்று கருதிய நான், அவற்றை அவளறியாமலேயே உயரத்தில் வைத்தேன். சிறிய அட்டைப் பெட்டியில் சுமார் 25 புத்தகங்கள் இருக்கும்... அத்தனையும், கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்சியின்போது ஆசை ஆசையாய் வாங்கியவை... புக் ஷெல்ஃபில் இடம் போதாமல் அட்டைப்பெட்டியில் அடுக்கி வைத்திருந்தேன்... பெரிய புக் ஷெல்ஃப் வேண்டும் என நான் போட்டுக்கொண்டிருக்கும் மனுக்கள் வழமை போல தள்ளுபடியாகிக்கொண்டே இருக்கின்றன.
இதோ! அடுத்த ஜனவரியும் வருகிறது. இலக்கியமும், இஸ்லாமுமாய் எனது தேடலுக்கான வடிகால்... நானும், எனது மகளுமாய் நான்கு கைகளில் புத்தக மூட்டைகளைச் சுமந்துகொண்டு, எங்கள் வீட்டுப் பொருளாளரின் பர்ஸைக் காலியாக்கிவிடுவோம்... நகைக்கடைக்குச் செல்வது கூட (அது குறிஞ்சிப்பூ போல எப்போதாவது நடக்கும் நிகழ்வுதான் என்றாலும்) இவ்வளவு மகிழ்ச்சியை எங்களுக்கு அள்ளித் தருமா என்று தெரியாது... நாங்கள் புதிய புத்தகங்களில் வாசனை விரும்பிகள்... இப்போது என்னையும், மூழ்கி முத்தெடுத்த எனது அந்த சிறிய அட்டைப்பெட்டியையும் நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்!
இப்படியாக, அந்தத் தண்ணீர்ப் புதையலில் ஏகப்பட்ட அதிர்ச்சிகள் எங்களுக்கு! “தண்ணீர் நம் வீட்டில் மட்டும்தான் தங்க இடம் கேட்டு வந்துள்ளதா? அல்லது தெருவின் அனைத்து வீடுகளுக்குமே அழையா விருந்தாளியாக அடைக்கலமாகியுள்ளதா?” என்ற விபரம் தெரியாமல் நாங்கள் குழம்பி நிற்க, ஆள் அரவமற்ற அந்த நிலவரமே எங்கள் வயிற்றில் கலவரத்தை ஏற்படுத்தியது...
எனக்கோ, யூனுஸ் நபி, நூஹ் நபி காலத்து வெள்ளப் பிரலயங்கள் மாறி மாறி மனக்கண் முன் ஸ்லைடுகளாய் ஓடிக்கொண்டிருந்தன... “லாஇலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக்க இன்னீ குன்து மினல் ழாலிமீன்...” என என்னையுமறியாமல் என் உதடுகள் உரக்கக் கூறிக்கொண்டிருந்தன... கூடவே சேர்ந்து என் கணவரும், குழந்தைகளும் கோரஸ் பாடினர்.
கட்டில், நாற்காலி, சோஃபாக்கள் என எல்லாவற்றிலும் பொருட்கள் வியாபித்திருக்க... நாங்களோ, கிடைத்த மூலைகளில் எங்களைக் குறுக்கிக்கொண்டோம்... கால்களைத் தரையில் - ஸாரி! தண்ணீரில் படாமல் கவனமாய் உயர்த்தி வைத்துக்கொண்டோம்... காரணம்! தண்ணீருடன் கூடவே இன்னும் சில அழையா விருந்தாளிகள்... அவர்களைப் பார்த்தால் நல்லவர்களாகத் தெரியவில்லை. கறுப்பாக... கரடுமுரடாக... அழுக்காக... என தோற்றமே சரியில்லை. “ஆகா... இது மழைநீர் அல்ல!” என அதன் மணம் சொன்னது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளைப் படம்பிடித்து வைக்க வேண்டுமென டிஜிட்டல் இந்தியாவின் தூதர்கள் (வேற யாருங்க? வாப்பாவும், பிள்ளைங்களும்தான்!) தலைகீழாய் மெனக்கெட்டனர்.
ஒவ்வொருவரிடமிருந்தும் அலைபேசியின் ஆயுள் விடைபெற்றுக்கொண்டிருந்தது. வெளியுலகத்தோடு எமக்கிருந்த கடைசித் தொடர்பும் அறுந்துவிடாதிருக்க, பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டோம் நாங்கள்! இதற்கிடையே...
“நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; (தூதரே! பொறுமையுடையோருக்கு நீர் நன்மாராயம் கூறுவீராக!” எனும் திருக்குர்ஆனின் 002ஆவது அத்தியாயத்திலுள்ள 155ஆவது வசனம் எங்கள் மன உறுதியை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது...
சுங்க இலாகாவின் சோதனை அதிகாரிகள் போல அதிகாலையிலேயே வீடு புகுந்த தண்ணீர் அதிகாரிகள், வீட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் புகுந்து புரட்டிப்போட்டுக் கொண்டிருந்தனர். சமையலறை கப்போர்டுகளின் கீழ் அடுக்குகள், துணிமணிகள் வைக்கும் அலமாரியின் கடைசித் தட்டு என அவர்களின் சோதனை - எட்டும் உயரம் வரை நீண்டுகொண்டேயிருந்தது... புக் ஷெல்ஃபின் கடைசித் தட்டையும் கபளீகரம் செய்துவிட்டிருந்தனர்.
இத்தனை களேபரங்களுக்கிடையே, காலை 7 மணிக்கு, எதுவும் தெரியாதவன் போல சூரியன் அப்போதுதான் மெல்ல எட்டிப்பார்க்கத் துவங்கினான். தெருவில் ஒரு மனிதர் நடந்து சென்றார்... இல்லையில்லை! நீந்திச் சென்றார்...
அப்போதுதான் நிகழ்வின் ஆழம் புரிந்தது. அவரது இடுப்பளவுக்குத் தண்ணீர்... சிங்காரச் சென்னையைச் சுற்றி ஓடும் கால்வாயின் அருகில் வசிக்கும் “பாக்கியசாலி”கள் நாங்கள். “கால்வாயின் உடைப்பினால்தான் தெருவுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது” என்ற முதல் FIRஐ அவர்தான் பதிவு செய்தார். பாத்திரத்தின் கொள்ளளவு அறிந்து பிச்சையிடாதது மனிதனின் குற்றம்தானே தவிர தண்ணீரின் குற்றமா என்ன?
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளார்களாம்... அது கால்வாய் வழியாகக் கடலில் கலக்கச் செல்லும் வழியில், எங்கள் வீதிகளைக் கண்டதும் விளையாட வந்துவிட்டது போலும்! செம்பரம்பாக்கம் ஏரி என பள்ளியில் படித்தபோது, வாயில் நுழைய மறுத்த அந்தப் பெயர் இன்று எங்கள் நுனிநாக்கில் புரண்டு - வாழ்வில் மறக்க முடியாத பெயராகிப்போனது.
அடுத்து என்ன செய்வது என்றுதான் யோசிக்க வேண்டுமே தவிர, இனி கவலைப்பட்டு ஆகப்போவது எதுவுமில்லை என மனஉறுதி கொண்டோம்...
“துன்பம் வருங்கால் பொறுமை காத்தால் அல்லாஹ் இரண்டு கூலிகளைத் தருவான் என ஊருக்கு உபதேசம் செய்கிறாயே...? இப்போது உன் வாழ்வில் அதற்கான வாய்ப்பு வந்துள்ளது!” என என் உள்மனம் எச்சரித்துக்கொண்டேயிருந்தது.
வயிறு அலாரமடிக்கத் துவங்கியது... எதையாவது வயிற்றில் போட்டால்தான் ஏதாவது யோசிக்க முடியும் என்ற நிலையில் நாங்களிருக்க, அந்தத் தண்ணீருக்குள் நின்ற நிலையிலேயே என் உம்மா தேனீர் தயாரித்து, ஆவி பறக்க இட்லியையும் அவித்துவிட்டார்கள். தேனீர் அருந்தியதும் பிள்ளைகளை மட்டும் மாடியிலுள்ள மாமி வீட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தோம். மாடிக்குப் போவதென்றால், தெருவைச் சுற்றித்தான் போக முடியும். நீச்சல் தெரியாத பிள்ளைகளைச் சோதிக்க விரும்பாத நாங்கள், வீட்டின் சிட்அவுட் வழியாக எகிறிக் குதிக்க வைத்து, எப்படியோ ஏணிப்படியில் ஏற்றிவிட்டோம்...
இதற்கிடையே, அடுத்த தெருவிலிருக்கும் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டிலிருந்து - அவர்களின் வீட்டிற்கு வந்து விடுமாறு அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார்கள்... போய்த்தான் ஆக வேண்டும்! வேறு வழியேயில்லை... ஆனால், வீட்டை அப்படியே விட்டுவிட்டு எப்படிப் போவது...? வீடும் உணர்வில் கலந்த ஒன்று என்பதை அன்றைக்குத்தான் முழுமையாக உணர்ந்தோம்... ஆனால், எதையெல்லாம்தான் கொண்டு செல்வது...? எதையாவது எடுக்க வேண்டுமென கப்போர்டுகளைத் திறந்தால், “அவ்வளவுதான்! தண்ணீருக்குள் குதித்து விடுவோம்” என துணிமணிகள் ஒருபுறம் மிரட்டிக்கொண்டிருந்தன.
இதற்கிடையே, முதுகில் மூட்டைகளையும், தோளில் பிள்ளைகளையும் ஏற்றிக்கொண்டு, ஒவ்வொரு குடும்பமாக தண்ணீரில் நீந்திச் செல்லத் துவங்கினர். பாதிப்பேர் பங்களாவாசிகள்! அல்லாஹ் வழங்கும் படிப்பினையைத்தான் என் மனம் அசைபோட்டது.
முந்தைய இரவில் எனது இளைய மகள் மழை பற்றி ஒரு சிறு கட்டுரை எழுதியிருந்தாள். அவ்வப்போது தன்னைப் பாதித்த எதைப்பற்றியாவது இப்படி எழுதுவது அவளது வழக்கம்... மழை காரணமாக தனது குதூகலத்தைப் பதிவு செய்திருந்த அவள், ஏழைகள் மற்றும் தெருவோரம் வசிக்கும் மக்கள் பற்றிய தன் கவலைகளையும் பதிவு செய்திருந்தாள்... எழுத்தில் இலக்கணப் பிழைகள் சில இருந்தன என்றாலும், இந்த இளம் வயதில் அவளது சமூகப்பார்வையை எண்ணி நான் அவளை உச்சிமுகர்ந்தேன்.
ஏழைகளுக்கும், தெருக்களில் வசிப்போருக்கும் மட்டும்தான் பாதிப்பு என்று அவர்களுக்காக ஒரு ச்...சூ... கொட்டிவிட்டு நாமெல்லாம் கோட்டைக்குள் வசிக்கிறோம் என்ற நமது இறுமாப்பிற்குக் கிடைத்த பலத்த அடியாகத்தான் அன்றைய நிலையை உணர முடிந்தது... அடி வலிக்கவில்லை! மாறாக, உச்சந்தலையின் உள்மூளை வரையிலும் இறைவனின் திருவசனத்தை ஓங்கி உணரச் செய்தது...
“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளுக்குள் இருந்தபோதினும் சரியே!” (திருக்குர்ஆன் 4:78)
மரணம் மட்டுமல்ல! மழை வெள்ளமும் அப்படித்தான் என மனம் உணர்ந்துகொண்டது. மாடி வீட்டு மாமியும், அண்டை வீட்டு அனிதாவும் அருகில் இருந்தாலும் கூட, அவ்வப்போது ஒரு புன்னகை மட்டுமே எங்களுக்குள் உறவாக இருந்தது... (நாங்கள் நகரவாசிகளாயிற்றே...?) அண்டை வீட்டாரின் அருமையை உணர்த்தும் அரிய நாளாக அன்று அமைந்தது.
உறவுகளை விடவும் அதிகமாக அண்டை வீட்டாரிடம் அனுசரணையாக நடந்துகொள்ள நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுறுத்தியதன் காரணத்தை அன்று அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம்.
“தண்ணீர் தானாக வடிந்துவிடுமா...?” என்ற நப்பாசையிலும், “கார்ப்பரேஷன்காரர்கள் வந்து கைகொடுப்பார்களா?” என்ற பேராசையிலும் மதியம் வரை பொறுத்திருந்தோம். காரில் இருந்தபடியே மேட்டுப்பகுதியிலிருந்து மேற்பார்வையிட்ட அமைச்சரின் விசிட்டும் கைகொடுக்கவில்லை. “இனிமேல்தான் ஏரியைத் திறந்துவிடப் போறாங்களாம்...” என்று எங்கள் தெருவின் ஆஸ்தான பால்காரர் போகிற போக்கில் ஒரு திரியைக் கொளுத்திப்போட்டு, அவர் பங்குக்கு எங்கள் வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டார்.
[மேலுள்ள படங்கள், வாட்ஸ்அப்பில் பெறப்பட்ட - சென்னை தாம்பரத்தின் வெள்ளக் காட்சிகள்]
பக்கத்துக் குப்பத்திலிருந்து சிறுவர்கள் தண்ணீரில் நீச்சலடித்துக்கொண்டும், தெர்மகோல் படகுகளில் மிதந்து விளையாடிக்கொண்டுமிருந்தனர். அது அவர்களின் உலகம். பிரிக்க முடியாதது? தண்ணீரும் - தமிழ்நாடும் என்ற எண்ணம் மனதில் ஓடியது. மழைக்காலம் என்றால் இந்தத் தண்ணீர்; எல்லாக் காலங்களிலும் அந்தத் தண்ணீர் என எப்போதுமே ஏதோ ஒரு தண்ணீரில் தமிழ்நாடு தள்ளாடிக்கொண்டுதான் இருக்கிறது.
இனிமேல் எதுவும் செய்வதற்கில்லை... இருட்டிவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில், அடுத்த தெருவிலிருக்கும் குடும்ப நண்பர் வீட்டிற்குச் செல்வதென ஒருவழியாக முடிவெடுத்தோம். மதியம் அவர்கள் வீட்டிலிருந்துதான் பிரியாணி சாப்பாடு வந்தது. “இந்தக் கூவத் தண்ணீருக்குள்ளிருந்து கொண்டா பிரியாணி சாப்பிடுவது?” என எதிர்மறையாய் நான் சிந்தித்துக்கொண்டிருக்க, என் மகளோ, “ம்...மா... இந்தத் தண்ணீரிலும் கூட நம்மை அல்லாஹ் பிரியாணி சாப்பிட வைத்துள்ளானே...?” என அதே அம்சத்தை நேர்மறையாகப் பேசினாள். ஆம்! மாற்றி யோசித்தால் மனது எவ்வளவு இலேசாகிறது என்பதையும் உணர வைத்த தருணம் அது!
ஒருவழியாக, தேவையான பொருட்களை அவரவர் முதுகுகளில் மூட்டைகளாகச் சுமந்துகொண்டு, மகனை என் கணவர் தன் தோள் மீது சுமந்துகொள்ள, அல்லாஹ்வின் பெயர் கூறி, இடுப்பளவு தண்ணீரில் தெருவில் இறங்கி நடக்கத் துவங்கினோம்... சிரியா, பர்மாவின் அகதிகளெல்லாம் அந்த கனப்பொழுதில் கண் முன் வந்து சென்றனர். அவர்களின் அவதிகளைக் கற்பனையால் கூட உணர முடியாமல் வெறும் காட்சிகளாக மட்டுமே கடந்து சென்ற நமக்கு அதில் ஒரு துளியளவேனும் அனுபவிக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பு! சொந்த ஊரை விட்டு, சொந்தங்களை விட்டு, அண்ணல் நபிகளார் ஹிஜ்ரத் செய்த நிகழ்வும் நெஞ்சில் நிழலாடியது.
அந்நிய வீட்டிற்கு வந்துள்ளோம்... என்ற உணர்வு ஏதும் எங்களுக்கு ஏற்படாவண்ணம் எங்களை அவர்கள் அரவணைத்துக்கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்! கலங்கிய உள்ளத்துடனும், நாளை என்னவாகுமோ என்ற கலக்கத்துடனும், துஆக்களுடனுமாக - அன்றைய இரவு எங்களுக்குத் தூங்காவனமானது. விடிய விடிய விழித்திருந்து, பாங்கு ஒலித்ததும் தொழுதுவிட்டு, மீண்டும் அதே ஐந்து மணிக்கு ஓடிவந்து, தெருவையும் - வீட்டையும் பார்த்த பின்புதான் நிம்மதியே வந்தது. தெருவில் தண்ணீர் காலைச் சுற்றும் செல்லப் பிராணியாய் எங்களைத் தழுவிச் சென்றது. நேற்று வில்லனாய்த் தெரிந்த தண்ணீர் இன்று சில்லென்றிருந்தது.
நேற்றைய நிகழ்வு, எம் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சரித்திரம். அதன்பின்னான இழப்புகளும், பொறுப்புகளும் எங்கள் தோள்களில் இன்னும் சில காலங்களுக்குத் தொடரும்... என்றாலும்.........
“எந்த ஓர் ஆன்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை“ என்ற இறைவாக்கு தந்த மனவலிமையுடனும், “ஒவ்வொரு அவதிக்குப் பின்னாலும் ஒரு இலேசு காத்திருக்கிறது...” என்ற இறைவசனம் தந்த அசுர பலத்துடனும் மீண்டு வருவோம்.
இதோ! அடுத்த புயல் என்கிறார்கள்... மழை என்கிறார்கள்... மூஸா நபியவர்கள் கூறியது போல, “நிச்சயமாக எனதிறைவன் என்னோடு இருக்கிறான்; அவனே எங்களை வழிநடத்துவான்” என்ற இறைநம்பிக்கையுடனும், அதிகமாய்ப் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி பின்னர் அறியவந்தபோது, “நாமெல்லாம் ஒன்றுமேயில்லை” என்ற ஆறுதலுடனும் ஒவ்வொரு நாளையும் நகர்த்துகிறோம்...
மழையென்பது இறைவன் நமக்களித்த வரம்! அந்த வரமே சாபமானது மனிதனின் குற்றம்தானே தவிர மழையின் குற்றமல்ல!
அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்கப் போதுமானவன்! |