புத்தகமே நமது சிறந்த நண்பன் என்று ஓர் அறிஞர் சொன்னதை ஞாபகப்படுத்தி எழுதி இருந்தேன். படிக்கிறமாதிரி ஒரு சுகமும், ஒரு இன்பமும் வேறு ஒன்றம் இல்லை என்பேன். அறிவை தேடத்தேட அது அறிவு ஊற்றாகிறது, கருத்து கருவூலமாய் பொங்கிவரும் ஆற்றலை தான் எழுத்தாக படிக்கிறேன். நான் படித்த அறிஞர்களின் அறிவமுதங்களை இணையதள வாசகர்களுக்கு தரும் போது நானும் சுகம் அடைகிறேன். அதே மாதிரி பயமும் நடுக்கமும் இருக்கிறது, காரணம் உங்களை விட நான் அறிவில் குறைந்தவன், ஆற்றலிலும், படிப்பிலும் குறைவு தான். எனது எழுத்தோவியத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும், குறைகளை தாரளமாக அதுவும் ஏராளமாக குறிப்பிடுங்கள் இந்த ALS மாமா கோபப்படாத் தெரியாத சின்னப் பிள்ளை, சொல்லித்தாருங்கள் கற்றுக்கொண்டே இருப்பேன்.
கடல் கடந்த நாடுகளில் கடுமையான உழைப்பில், வேர்வையில் உங்கள் வேதனை துளிகள் மின்னுவது புரிகிறது. குடும்பம் நல்லபடி வாழ, வளமிக்கவும், பிள்ளைகள் நன்றாக படிக்க, ஆரோக்கியமாக வாழ, பெண்மக்கள் ஒழுக்கத்தோடு, இஸ்லாமிய ஞானத்தோடு வளர உங்களின் நேரடி கவனிப்பும் இருக்க வேண்டும். அதேசமையம் கல்வி, தொழில், மருத்துவ உதவிக்கும் உலகளாவிய காயல் நல சங்கங்களை நடத்தும் நீங்கள் பணங்களையும், நல்ல ஆலோசனைகளையும், இரவு பகலாக நமதூர் மக்கள் நலன் கருதி தருகிறீர்களே அதில் தான் உங்களின் சாதனை மறைந்திருக்கிறது. உங்களின் இந்த நல்ல எண்ணங்களுக்கு அல்லாஹ் இரு உலகிலும் மேலான நற்க்கூலியை வழங்குவானாக ஆமீன். நீங்கள் எல்லாம் எப்போதும் நலமாகவும் நல்ல உற்ச்சாகமாகவும், நீங்கள் எடுத்துக்கொண்ட கடமைகளில் நாடிய எண்ணத்தில் வெற்றியை குவிக்கும் சாதனையாளராக மாறவேண்டும் என்பதே எழுத்தாளராகிய நாங்களும், சமூக நலனை விரும்பும் அனைவர்களின் ஆசையாக இருக்கும் என்பதில் ஐயம்மில்லை.உங்களுக்காக காயல் நகரில் வாழும் ஏழை மக்கள், விதவைகள், வயோதிக ஆண் பெண்கள் அனைவர்களும், தொழில் நலிந்த பணத்துக்காக ஏங்கி நிற்கும் மக்கள்களும், உங்களக்காக ஐவேளை தொழுகைகளிலும், முன் பின் சுன்னத்து தொழுகைகளிலும் துஆ கேட்டு வருகிறார்கள்.
சாதனையாளர்கள் யாவருமே கடுமையான சோதனைக்கு தள்ளப்பட்டு அதன் பின்னரே வெற்றியாளர்களாக ஆகின்றனர். இது பற்றி வரலாறுகள் ஏராளம் உள்ளது எழுத அதிக பக்கம் பிடிக்கும் ஆதலால், என் வயதிற்கும் தகுந்த அளவு தானே எழுத முடியும். இதற்காக ஆயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. உதாரணமாக ஜி.டி நாயிடு அவர்கள், சர்.சி.வி. ராமர் அவர்கள், அலி இப்னு சீன போன்ற மேதைகளின் நூல்களை எடுத்து எழுதினால், சுவையாக இருக்கும் நாட்கள் அதிகம் பிடிக்கும் அதனால் இவைகளை இத்துடன் முடிக்கின்றேன். நமதூரில் பிறந்து மறைந்த சாதனையாளர்கள் சிலரையாவது இக்கால வாரிசுகள் தெரிந்துகொள்ளவே எனக்கு தெரிந்த செய்திகளை தருகின்றேன்.
அக்காலத்தில் ( சுமார் 50 வருடங்களுக்கு முன்) சென்னையில் வேலைதேடி சென்றால், நம்மை தேடி வந்து வேலை பெற்று தருபவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? நமதூர் வட பகுதியை சேர்ந்த B.A காக்க, முஹைதீன் இப்ராஹீம் சாஹிப் அவர்கள்தான். சென்னையில் வக்கீல் தொழிலை செய்துகொண்டு காயல் வாசிகளுக்கு அரசு மற்றும் தனியார் காரியாலையங்களில் வேலை தேடி தருவதாக அப்பெரியாரை பற்றி பிறை மாத இதழில் சிறப்பு செய்திகள் மூலம் அறிந்தேன்.
இவர்களை போலவே அலியார் தெரு S.M ஜக்கிரியா சாகிப் அவர்கள் நமதூர் பிள்ளைகளை அன்று சென்னையில் உள்ள பள்ளி கல்லூரிகளில் சீட்டு வாங்கி கொடுக்க உதவிவந்தார்கள். இது போல அவர்கள் மத்திய மாநில அரசு சார்பில் வேலை வாய்ப்பு பெற்றுதந்திருக்கிரார்கள். ஈ. வே. ரா. பெரியார் அவர்களின் திராவிட கழகத்தின் பொருளாளராக அன்று இருந்ததினால் இப்படி சாதனை புரிய முடிந்தது. இவர்களை இக்கால காயல் வாசிகள் அறிந்துகொள்ள செய்யவே இதை இணையதளத்தில் எழுதுகின்றேன். S.M ஜக்கிரியா சாகிப் அவர்கள் A.K ஹலீம் ஹாஜி அவர்களின் மச்சானும், Dr. இக்பால் அவர்களின் மாமனார் ஆவர்கள். இவர்கள் 1942 ல் K.T.M தெரு மஜ்லீசுள் கௌது சங்கம் உருவாக்கவும் தாயிம் பேட்மிட்டன் கிளப் ஏற்ப்படுத்தவும் இவைகள் மூலம் ஆண்டுதோறும் மீலாது கௌது விழா நடத்தி அக்கால அரசியல் வாதிகளையும், பேரறிஞர் அண்ணா போன்ற தமிழ் அறிஞர்களை அழைத்து வந்த பெருமை இவர்களை சாரும். இவர்களை பற்றி திராவிட இயக்க தூண்கள் என்ற நூலில் க. திருநாவுக்கரசு எழுதி நக்கீரன் பதிப்பகம் 1999 மே ஒன்று (முதல் பதிப்பு) பெரியாரின் நவாப் சாஹிப் என்ற S.M ஜக்கிரியா அவர்கள் பற்றி பக்கம் 60 முதல் 90 வரை சிறப்பாக இடம் பெற்றுள்ளார். இந்நூல் ஈ.வே.ரா. பெரியார் அவர்களின் கழக அலுவலகத்தில் உள்ள நூலகத்திலும், சென்னை கன்னிமாரா நூலகத்திலும் நீங்கள் சென்று பார்க்கலாம் அல்லது நமதூரில் அன்னை கதீஜா அறிவு நூலகம் (எ) எனது சொந்த நூலகத்தில் வந்து பார்வையிடலாம்.
குடிநீர் தண்ணீருக்கு வித்திட்ட ஆனா.கானா அவர்களை போல அப்பாபள்ளி தெரு முழுவதும் இரு பகுதிகளிலும் வேப்ப மரங்களை நட்டி மக்கள் சுகாதார மான முறையில் காற்று பெற்று நிழலில் நடந்து செல்ல உதவியவர் நமது மற்றொரு சாதனையாளர் பீனா.மீனா மீராசாஹிப் மரைக்காயர் அப்பா அவர்களே ஆவார்கள். அநேகமாக இந்நிகழ்ச்சி 1933 ல் நடந்ததாக இரு பெரியவர்கள் கூறுகிறார்கள். பீனா மீனா அப்பா அவர்கள் பெரிய செல்வந்தராகவும் இலங்கை கொழும்பில் கொடிகட்டி பரந்த நல் வணிகர் ஆவார்கள். இவர்கள் ஊர் வந்தால் அப்பாபள்ளி சதுக்கையில் இருந்த வாறு காலையில் வரும் மீன் வியாபாரிகளிடம் கூடையில் உள்ள அனைத்து மீன்களையும் வாங்கி தெரு முழுவதும் உள்ள வீட்டு பெண்களுக்கு இலவசமாக சப்ளை செய்வார்கள். காரணம் அன்று ஒரு சிறு பெண்பிள்ளைகள் கூட தெருவில் நடமாட மாட்டார்கள். அவ்வளவு கடுமையான கோசா முறை அனுசரித்து வீட்டுக்குளே இருப்பார்கள். இதை உணர்ந்த அப்பா அவர்கள் இப்படி செய்திருக்கலாம். சுலைமான் நகர் அருகில் இவர்கள் பெயரில் பீனா. மீனா அப்பா பிளட் போடப்பட்டு இருக்கிறது. இந்த உன்னத மனிதரை, சாதனையாளரை நான் இந்த நேரத்தில் உங்களுக்கு எடுத்து வைக்க விரும்பினேன். இவர்கள் வக்கீல் மீரா சாஹிப் அவர்களின் அப்பா (தாத்தா ) ஆவார்கள். இன்று அப்பாபள்ளி முழுவதும் பெரிய சிறிய வேப்ப மரங்கள் 15 கணக்கேடுத்தேன் அவற்றின் ஏழு வயதில் அதிக ஆண்டுகள் கணக்கு வருகிறது. அடிமரத்து அளவை கணக்கிட்டாலும், அதன்சுற்றளவும், உயரமும், வைரம் பாய்ந்த கடினத்தன்மையும் கணக்கிட்டால் சுமார் 70 ஆண்டு என தெரிய வருகிறது. இது எனது கணிப்பாகும். பீனா மீனா அப்பா அவர்கள் பற்றிய தகவல்களை K.T.M தெரு S.M மூஸா ஹாஜி ( S.M ஜுவல்லர்ஸ் அதிபர்) அவர்களும் , வக்கீல் மீரா சாகிப் அவர்களும் தகவல் தந்தார்கள், இருவர்களுக்கும் நன்றி.
- இன்ஷா அல்லாஹ் வளரும்.
குறிப்பு- அடுத்த சாதனையாளர்கள்
1. குமர்களின் தந்தை,
2. தினமும் விருந்து தரும் நல்லவர்,
3. முன்னாள் சேர்மன் அவர்களின் சேவை ஒரு பார்வை
ஆகியவை மூன்றாம் தொடரில் இன்ஷா அல்லாஹ் இடம்பெறும்.
|