ஏடிஸ் வகை கொசுக்களால் உருவாகும் டெங்கு காய்ச்சல் சில மாதங்களாக திருநெல்வேலி , இராமநாதபுரம் மாவட்டத்திலும் சென்னை புறநகரிலும் இருந்தது, இப்போது நமது தூத்துக்குடி மாவட்டத்திலும் பரவி இருக்கிறது. இது பற்றி நமது மாவட்ட ஆட்சியர் அவர்கள் சென்ற வாரம் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்கள் நினைவிருக்கலாம். இப்பொழுது நமது ஊரிலும் அந்த டெங்கு காய்ச்சல் வந்து , போய் கொண்டிருக்கிறது அதனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
ஏடிஸ் எகிப்டி (Aedes aegypti) என்ற வகை கொசுக்களால் இந்த காய்ச்சல் உருவாகிறது. இந்த வகை கொசுக் கடித்தால் மலேரியா , ஜான்டிஸ் (Jaundice ) என்று ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சல் போல்தான் தெரியுமாம். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் இரண்டொரு நாளில் ஆளை படுக்கையில் கிடத்திடும் அபாயம் உடையதாம்.
இதன் அறிகுறியானது கடுமையான காய்ச்சலுடன் மூட்டுவலி , தலைவலி, தசைவலி, கண்ணின் பின்புறம் கடுமையானவலி, மூக்கில் இரத்தம் வடிதல் , தோல் சிவத்தல், உடல் முழுவதும் அரிப்பு ஏற்படுதல் போன்ற ஏதாவது அறிகுறிகள் தென்படும். எனவே யாருக்கும் இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே டாக்டரைப் போய் பார்க்க வேண்டும்.
சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஏடிஸ் எகிப்டி கொசுக் கடித்தால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்களாம் , ஆகவே அவர்கள் தாமதிக்காமல் உடனே டாக்டரிடம் சென்று ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த வகையான கொசு நல்ல தண்ணீரில்தான் உருவாகுமாம். மழை காலங்களில் அதிகம் உருவாகும் , மழை நீர் தேங்கி நிற்கும் இடங்களில் உற்பத்தியை உண்டாக்கும். டயர் , உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பாத்திரங்கள், சிரட்டை (கொட்டாங்கச்சி) போன்ற பொருட்களில் சிறிதளவே தேங்கி நிற்கும் நீரில்கூட முட்டைகளை இட்டு இனவிருத்தியை பெருக்குமாம்.
இப்பொழுது மழை காலம் இல்லை என்றாலும்கூட இந்த வகை கொசு நல்ல தண்ணீரில் இனப்பெருக்கம் செய்யக்கூடியதாக இருப்பதால் வீட்டை சுற்றிலும் நீர் தேங்காமல் பாதுகாப்பது நல்லது, உடைந்த பொருட்கள் , குப்பை கூளங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்துங்கள். மேலும் தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் பெரிய பாத்திரங்கள் மற்றும் டிரம்களை எப்போதும் முடியே வைப்பதுடன் 2 - 3 தினங்களுக்கொருமுறை சுத்தம் செய்தல் வேண்டும்.
மேலும் ஏடிஸ் வகை கொசுக்கள் பகலில்தான் கடிக்குமாம், மிகுதமாக பொழுது விடிந்து 2 மணிநேரத்திற்குள்ளும் - பொழுது சாய 2 மணிநேரத்திற்கு முன்பும்தான் மிகுதமாக கடிக்கும் தன்மையை கொண்டதாம். திரும்ப , திரும்ப கடிக்கும் தன்மையையும் கொண்டதாம். இந்த நோய்க்கு ஆளானவர்களால் அடுத்தவருக்கு பரவுவதற்கு வாய்ப்புள்ளதால் இந்த காய்ச்சல் உள்ளவர்கள் அவரை மீண்டும் இந்த கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சாதாரண டெங்கு காய்ச்சல் ஆபத்தானது அல்ல, சில தினங்களிலேயே எந்தவித பாதிப்பும் இன்றி தானாகவே போய்விடும். ஆனால் குருதி பெருக்குடன் காய்ச்சல் இருந்தால் ஆபத்தாகுமாம் எனவே உடனே முறையான மருத்துவம் பார்க்க வேண்டும்.
குழந்தைகளை இந்த நோய் அதிகமாக பாதிக்கும் என்பதோடல்லாமல் நமது ஊரிலும் குழந்தைகளைத்தான் குறிவைத்திருக்கிறது என்பதால் குழந்தைகள் மேல் அதிகம் கவனம் தேவை. குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சல் வந்தாலும் இந்த காலக்கட்டத்தில் நீங்கள் டாக்டர்களாக மாறாமல் தயவு செய்து சுணங்காமல் ஹாஸ்பிடலுக்கு கொண்டுபோய் அங்குள்ள டாக்டரிடம் காட்டி ட்ரீட்மென்ட் எடுங்கள். பகலிலும் குழந்தைகளுக்கு கொசு வலைகளை பயன்படுத்துவது நல்லது.
நம் ஊரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையின் வீட்டை சுற்றியுள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கு , ஏதும் பாதிப்பு ஏற்பட்டிருகிறதா என்பதை அறிவதற்காக, காயாமொழி ஆரம்ப சுகாதார நிலையத்தை சார்ந்தவர்கள் இங்கு வந்து, பல பேர்களுக்கு இரத்தம் எடுத்து சென்றிருக்கிறார்கள் பரிசோதனை செய்வதற்காக. மேலும் யாருக்காவது இந்த நோய் ஏற்பட்டிருந்தால் உடனே சுகாதார ஆய்வாளர்களுக்கு அறிவிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
நமதூரில் இந்த வாரம் மூன்று நாட்கள் மழை பெய்திருக்கிறது, அதுவும் கடைசி அன்று அதிகமான மழை பெய்து தெருக்கள் , சந்து , பொந்துகள் எல்லாம் மழை நீர் தேங்கி நிற்கிறது. அதனால் மக்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மழை நீர் தேங்கி நிற்கும் இடங்களை அடையாளம் கண்டு அவைகளை அப்புறப்படுத்தவேண்டும். ஒவ்வொரு வீட்டு மாடியிலும், தோட்டத்திலும் எங்காவது ஓர் இடத்தில் மழை நீர் தேங்கி நிற்கக் கூடும் அவைகளை மறக்காமல் அகற்றி ஏடிஸ் வகை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
ஏடிஸ் கொசுக்கள் சுத்தமான நீரிலேயே முட்டையிட்டு இனப்பெருக்கத்தை உண்டாக்கக்கூடியதாக இருப்பதாலும், சிறிதளவு நீரிலும் இனப்பெருக்கத்தை உண்டாக்கும் என்பதாலும் மிக கவனமாக கண்காணித்து சிறிதளவு நீர் கூட எங்கும் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
நகராட்சி சுகாதார பணியாளர்கள் கொசுக்களை அழிக்க கொசு மருந்துகளை அடிப்பதுடன், குப்பைக்கூளங்களை தேங்க விடாமல் உடனுக்குடனே அப்புறப்படுத்துவது நல்லது. மேலும் பொது மக்களும் வீட்டையும், வீட்டை சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாக வைப்பதுடன் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். சில வீடுகளில் உள்ள ஓவர் டேங்க் திறந்தே இருக்கும் அவைகளை அவசியம் மூடி வைக்க வேண்டப்படுகிறார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! இந்த நோயிலிருந்து மக்கள் அனைவரையும் காப்பாற்றுவானாக ஆமீன். |