இவ்வுலகில் ஒரு மனிதன் வாழ்வதற்கு அடிப்படைத் தேவை உண்ண உணவு,உடுக்க உடை,இருக்க இடம். முதலிரண்டுக்கும் இறைவன் அருளால் நமதூரில் பெரும்பாலானோருக்கு பிரச்சனை இல்லை.ஆனால் மூன்றாவது உள்ள இருக்க இடம் அதாவது வீடு. இன்றைய சூழ்நிலையில் ஒரு நிலத்தை வாங்கி வீட்டை கட்டி முடிப்பதென்றால் நமதூரில் நடைமுறை சாத்தியமா? வேறு எங்குமே இல்லாத அளவுக்கு கண்ணைக் கட்டும் செயற்கை (?) நில விலையேற்றங்கள். 'வெறும்' வியாபார நோக்கத்தின் கோரப் பிடியில் வீட்டுமனைகள் சிக்கித் தவிக்கிறதோ என்ற அச்சம் நம் அனைவருக்கும் இல்லாமல் இல்லை.
உலகப் பொருளாதாரமே 'ரியல் எஸ்டேட்'டினால் வீழ்ச்சியடைந்தாலும் நமதூரில் கோலோச்சியிருக்கும் ஒரே தொழில் 'ரியல் எஸ்டேட்' என்றால் மிகையாகாது. ‘மைய்ய வாடியை’ தவிர எல்லா நிலங்களும் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. எங்கு பார்த்தாலும் 'பிளாட்'. ஒரு காலத்தில் ஓடியாடி விளையாடிய ‘ஒத்தபனை...இரட்டபனை’ இன்று கம்பீரமான வீடுகளாக, குப்பை மேடுகளும் முட்க்காடுகளும் நேற்று அடித்த மழையில் முளைத்த காளான்களை போல் 'பிளாட்' களாய் காட்சி தருகின்றன. 'பேய் ...காத்து' என்று நடமாட பயந்த 'ஆளருத்தான் காடு' அதன் சுற்றுவட்டாரங்கள் கூட இதிலிருந்து தப்பவில்லை. எல்லாத் திசைகளிலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பறந்து விரியும் நமதூரும் அச்சுறுத்தும் நில விலையேற்றங்களும்!!
பெருகி வரும் மக்கள் தொகை, ஒவ்வொரு பொண்ணுக்கும் தனி வீடு கொடுத்தே ஆக வேண்டும் என்று எழுதப்படாத ஊர் விதி(?), ஊருக்குள்ளேயே பெரும்பாலான திருமண சம்பந்தங்கள் நடப்பதினால் 'இருக்கும்' நில பரப்புக்குள்ளேயே பல்கிப் பெருகும் கட்டாயம் மற்றும் தொழில்/வேலைக்காக குடியேறும் சிலர். இவைகள் யாவும் நிலத்தேவை அதிகரிப்பிற்கு முக்கிய காரணங்கள்.
தொட்டி வீடு போல 20*40 நிலத்தில் ‘லாத்தா…தங்கச்சி’ என்று ஒன்றாக குலாவிய காலங்கள் போய், லாத்தாக்கு மட்டும் 'சூப்பர் தெரு வீடு' எனக்கு மட்டும் இத்தனோன்டு ‘குருவி’ வீடா என்று வேறு இடத்தில் புது நிலம் வாங்கி அழகான வீட்டை கட்டித் தாருங்கள் என்று கேட்க்கும் மாடர்ன் காலத்து மகள்கள். கடைசியில் உம்மாக்காரி இரண்டு மகள்கள் வீட்டுக்கும் நடந்தே கால் தேய்ந்து போவது வேற விஷயம்.இவைகள் யாவும் ஊர் பறந்து விரிவதட்க்கும் நில விலையேற்றத்திற்க்கும் ஒருவகைக் காரணங்கள்.
10 -15 வருடங்களுக்கு முன்னர் இருந்த நில மதிப்பையும் தற்போதைய மதிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால் விலையேற்ற விகிதம், வீட்டுமனை விலை...நகரத்தை மிஞ்சி விட்டது. நிலம் மட்டுமே பத்து/இருபது லட்சம் என்றால், வீட்டை கட்டி முடிப்பதற்க்கு ஒரு மனிதனின் கதி? வீடு கட்டும் செலவை விட நிலத்தின் மதிப்பு அதிகம். 'நாமெல்லாம் எப்ப நிலம் வாங்கி மகளுக்கு திருமணம் நடத்த' என்று பெருமூச்சு விட்டு வேறு வழியின்றி வீடு கொடுத்து ஆகவேண்டிய கட்டாயத்தினாலும் பயங்கர நில விலையேற்றத்தாலும் நோட்டு போட்டு பிறரிடம் 'வசூல்' பண்ணி வீடு கட்ட வேண்டிய நிலை நம்மில் சிலருக்கு ஏற்படாமல் இல்லை.
தங்கத்திலும் ஷேர் மார்க்கட்டிலும் முதலீடு செய்து வந்த வெளிநாட்டு வாழ் காயலர்கள், ஒட்டுமொத்த பணத்தையும் முதலீடுகளாக நிலத்தில். இவர்களையே குறிவைக்கும் தரகர்கள். தனக்கு கிடைக்க வேண்டிய லாபம் கிடைத்து விட்டால் அந்நிலத்தை தரகர்கள் ‘என்ன விலைக்கு விற்றாலும் நமக்கென்ன' என்று தரகர்களை கெடுத்து விட்ட சிலர். சில ‘முதலீட்டாளர்களே’ அந்நிலத்தை மாறி...மாறி வாங்கி விற்பதும், 'பவர்' வாங்கிக் கொண்டு அதை மறு நிமிடமே சில லாபங்களுக்கு மற்றவரிடமோ அல்லது தரகர்களுக்குள்ளேயே 'கை மாற்றி’...கடைசியாக விற்கபட்ட விலை (அல்லது அதை விட அதிக விலை) அந்நிலத்திட்க்கும் அதை சுற்றியுள்ள நிலத்திட்க்கும் உருவாக ஒவ்வொருவரும் காரணமாகிப் போனோம்.
உள்நாட்டிலே ஏதொ வேலை பார்த்து செட்டில் ஆகலாம் என்றால் "நம் நசீபு இந்த அரபுநாட்டு வாழ்க்கை தான்" என்று பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் வாப்பாமார்கள் புலம்பும் அளவுக்கு அவர்கள் கண் முன் நிற்க்கும் நமதூர் வீட்டுமனை விலைகள்.
'முன்னே' கிடக்கும் எல்லா காலி மனைகளையும் வியாபார நோக்கில் பல வருடங்களாக சிலர் கையகப் படுத்தி வளைத்து போட்டதின் (நிலப் பதுக்கல்?) விளைவு…எங்கேயோ தொலைவில் கிடக்கும் நிலத்தின் மதிப்புக் கூட உயர்ந்து விட்டது. பதுக்கலினால் மக்களுக்கு எத்தகைய அசௌகரியங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் பதுக்கல் வியாபாரம் என்று குறிப்பிட்டது அரிசி,பருப்புக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல. மாறாக அது நிலத்துக்கும் பொருந்தும் என்று நினைக்கின்றேன். ஏனென்றால் விலையேற்றத்தை எதிர்பார்த்து பதுக்குவதையே நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கிறார்கள். இவைகளை மறந்ததன் விளைவே இந்நில உயர்வுக்கு முக்கிய காரணம்.
வெளிநாட்டை முடித்து விட்டு இரண்டு மாதம் ஊரில் சும்மா இருப்பவரிடம், தம்பி என்ன பண்ணுறீங்க? சும்மாதான் காக்கா இருக்கேன். அட போங்க தம்பி...'அக்குள்' உள்ளே ஒரு பேக்கை சொருவுங்க. யார் கேட்டாலும் நிலபுரோக்கர்னு சொல்லுங்க என்றார். ஒரு மனை என்பது எவ்வளவு ஸ்கொயர் ஃபீட் என்றெல்லாம் தெரியாத சிலர் கூட இத்தொழிலில். '3% கறார் கமிசன்...ஏன்னா நாங்க மூன்று நான்கு தரகர்கள் பங்கு போடணும்' என்கின்றனர். விற்கப்படும் நிலங்களை விட தரகர்கள் எண்ணிக்கை அதிகமில்லாமல் சரி.
வாங்குபவருக்கு சிறு அவகாசம் கூட தராமல் அவர்களை துரிதப்படுத்தி,இந்த நிலத்தை உடனே/இன்னைக்குள்ளேயே முடிக்க வில்லையென்றால் மற்ற தரகர்கள் கையில் மாட்டி அந்நிலம் சீரழிந்துவிடும் என்ற அச்சுறுத்தல் ஒரு பக்கம். “உங்க வீட்டுல கொமரு இருக்கிறதுனாலதான் நான் இந்தளவுக்கு விலை சொல்கிறேன்...இதுவே வேற யாராவது கேட்டால் எங்க விலையே வேற” என்று டிப்ளமெடிக்காக பேசும் நவீனகாலத்துத் தரகர்கள்.
ஊரிலே இருந்து 'சமூக சேவை' மூலம் நிறைய மக்களுக்கு பரிட்ச்சயமான ஒரு நண்பரிடம், நீங்க ஏன் நிலத் தரகர் தொழிலை பண்ணக்கூடாது...ஒரு வருமானமாக இருக்குமே என்றேன் அக்கரையில். இன்றைய சூழ்நிலையில் நகரத் தரகர்களையே மிஞ்சும் அளவுக்கு 'பொய்' சொல்லமால் வாங்கு/விற்ப் பவரை ஏமாற்றாமல் நியாயமான முறையில் நாலுகாசு பார்ப்பது நடைமுறை சாத்தியமன்று...மறுமையை கேள்விக்குறியாக்கும் அப்பேர்பட்ட தொழில் எனக்குத் தேவையில்லை என்றார்.
சார்பு பதிவு அலுவலகத்தில் நிலப்பதிவின் போது, வாங்கியவரிடன் தரகர் விற்ற விலையை அறிய நேரிடும்போது பல லட்சங்கள் முதலீடு பண்ணி நிலத்தை வாங்கி விற்ற எனக்கு ‘ஒரு லட்சம்’ என்றால் அதை விற்றுக் கொடுத்த உனக்கு கமிசனுடன்/உள்குத்துடன் ‘இரண்டு லட்சமா' என்று ஒரே சண்டை. இதெல்லாம் இத்தொழில் சகஜம் தானே என்று மறுமையின் மீது நம்பிக்கைக் கொண்ட தரகர்கள் இருக்க முடியாதல்லவா? இஸ்லாமின் வழிகாட்டுதலை பின்பற்றாமையே இன்று நாம் சந்திக்கும் அனைத்து இன்னல்களுக்கும் காரனம். இது போன்ற நம்பிக்கையற்ற தரகர்களினால், வாங்குபவரும் விற்பவரும் நமதூர் இணைய தளங்களில் விளம்பரம் தந்து (Classifieds) நேரடியாகவே வாங்கி விற்க்கும் நிலை ஏற்படுவதன் மூலம் ‘உள்குத்து’ தவிர்க்கப்பட்டு நில விலை உயர்வை கட்டுப்படுத்தலாம்.
“அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்தமான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)”
நகரில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வழிகாட்டு மதிப்பு விபரம் அடங்கிய நமது இணையத் தளத்தில் வந்த செய்தி எண் 8137 பார்த்தால் புரியும். அரசு பரிந்துரைக்கும் விலையும் இன்றைய மார்க்கெட் நிலையும். இதை கண்டும் காணாமல் நடைமுறை படுத்தாமல் இருக்கும் அரசும், அரசாங்க அதிகாரிகளும்.
ஒருவேளை, மற்ற ஊர்களை போன்று கணவன் வீட்டுக்கு மணப்பெண் செல்லும் நடைமுறை இருந்திருந்தால் ‘ஒரு வீட்டிலேயே’ இரண்டு மூன்று குடும்பங்கள் வாழ்ந்து கொன்டிருக்கும். வீட்டு மனைகளின் தேவையும் பறந்து விரிய வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. இருப்பினும் நிலத்தில் மட்டுமே முதலீடு செய்யாமல்...தனது குடும்பத்திலேயே திறமை அனுபவமிருந்தும் பணவசதி இல்லாமல் இருப்பவர்களை ஊக்குவித்து 'capital partner' ஆக முதலீடு செய்து அதன் மூலமும் லாபம் ஈட்டலாம், வழமைபோல் பல துறைகளில் முதலீடு செய்தல், வாங்குபவர்களும் விற்ப்பவர்களை ஒரு முறையாவது சந்திக்க/பேச வைத்து 'நியாயமான' விலையை அவர்களே நிர்ணயிக்க வைத்து அதற்க்கான 'கமிசனை மட்டும்' ஹலாலான முறையில் ஈட்டவேண்டும் என்று எல்லாத் தரகர்களும் முற்படும்போது, விழி பிதுங்க வைக்கும் நில உயர்வை கட்டுப்படுத்தலாம்.
நமதூர் இன்னும் எந்தளவுக்கு பறந்து விரிய முடியும் அல்லது இதுமாதிரி எத்தனை நாளைக்கு அதிக விலை கொடுத்து 'நடுத்தர/ஏழை வர்க்கத்தினால்' நிலங்களை வாங்கி வீடு கட்ட இயலும்? மக்களின் வாங்கும் திறன் (Purchasing power), நிலத்தேவை குறையும் போது அல்லது நகரத்தை போல் பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள் நமதூரிலும் உதயமாக வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது...நில மதிப்பு குறைந்து, ஊர் எல்லையைத் தாண்டி பறந்து விரிய வேண்டிய அவசியம் தவிர்க்கப் பட்டு நமதூர் எல்லைக்குள் நாம் அனைவரும் ஒன்றாக வாழ வழி வகுக்கும்!! |