நாம் தாய்நாடாம் இந்தியாவிற்கு வரப்போகும் நள்ளிரவில்தான் (15.08.1947) - ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை கிடைத்தது என்பதை நாமறிவோம்... இந்நேரத்தில்,
“இந்தியாவில் கிலாஃபத் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்கள் யார்?” என்ற கேள்விக்கான விடை தெரியாதவர்களா நீங்கள்...? அப்படியானால், இக்கட்டுரையைத் தொடர்ந்து வாசியுங்கள்!
“கிலாஃபத் இயக்கம் என்பது பற்றி பள்ளிக்கூடத்தில் ஏதோ ஒரு வகுப்பில் எப்போதோ படித்த ஞாபகம்...” என்று நெற்றியைத் தேய்க்கிறீர்களா? உண்மைதான்! நமது ஒன்பதாம் - பத்தாம் வகுப்பு வரலாற்றுப் பாடங்களில் நமக்கு ஒன் மார்க் வினா-விடைகளுக்கு மதிப்பெண்கள் பெற்றுத் தந்த கேள்விதான் இது. தேவையில்லாததை இனி மண்டையிலிருந்து உதறிவிடலாம் என்ற பொது விதியின் கீழ், மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கப் பெற்றதுமே நாம்தான் இதன் பதிலை மறந்துவிட்டோம்... ஆனால், “தண்டி யாத்திரை சென்றது யார்?”, “உப்புச் சத்தியாகிரகம் செய்தது யார்?” “செக்கிழுத்த செம்மல்......” போன்ற கேள்விகளுக்கான விடைகளெல்லாம் இன்னும் பசுமையாக மனதில் நிற்கிறதே... ஏன்? என்றால் அதற்கான விடைதான் இந்தக் கட்டுரை!
உறக்கம் வராத ஓர் இரவுப் பொழுதில்... உறக்கத்தை வரவழைப்பதற்காக - சென்ற புத்தகக் கண்காட்சியின்போது... “வாங்குறது சரி... படிப்பியான்னு யோசிச்சுக்க...” என்று, என் சோம்பேறித்தனத்தின் மீதெழுந்த அழுத்தமான எதிர்க்குரலையும் மீறி வாங்கிய சில புத்தகங்களிலிருந்து ஒன்றைத் தூசி தட்டி உருவியெடுத்தேன்... பெரும்பாலும் - தலைப்புகளையும், உள்ளடக்கங்களையும்... என் சிற்றறிவுக்குப் புரியுமா... என்பதையும் பார்த்துப் பார்த்துதான் புத்தகங்களை வாங்குவது வழக்கம்... சிலவற்றை ஆர்வத்துடன் அப்போதே படித்து முடித்துவிடுவதும், சிலவற்றை “பின்னால் பார்ப்போம்...” என்று அப்படியே மறந்துவிடுவதும் வாடிக்கை. அப்படி மறந்துவிட்ட ஒரு பொக்கிஷம்தான் அன்று என் கையில் கிடைத்தது... புத்தகத்தைப் படிக்கப் படிக்க... தூக்கமே வரவில்லை... இயலாமையும், கோபமும், விரக்தியும் இன்னதென்று விவரிக்க முடியாத ஒரு மனநிலை மனதை ஆட்கொண்டு, சுத்தமாக தூக்கம் தொலைந்தே போனது.
சகோதரர் அதிரை இப்றாஹீம் அன்சாரி எம்.காம்., அவர்கள் எழுதிய ‘மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு’ என்ற புத்தகம்தான் அது...
நம்ம ஊர்ல நிறைய பேருக்கு முகம்மதலி என்ற பெயர் உண்டு... முகம்மது + அலி யின் சேர்த்தெழுதுக தான் மம்மதலி என்பதும் நம்மில் பலருக்குத் தெரியும். சிறு வயதுகளில் மம்மதலி என்ற பெயரை எப்போது கேட்க நேர்ந்தாலும், “மம்மதலி... சவுக்கத்தலி... சோத்த உண்டா வயித்த வலி...” என்ற பாடலைத் தவறாமல் பாடியது இன்றும் நினைவுகளில் மலர்கிறது. ஏன், இப்போது அந்தப் பெயர் காதில் விழுந்தாலும் கூட, இப்பாடல் நெஞ்சின் ஓரக் கதவுகளைத் தட்டிவிட்டுத்தான் செல்கிறது...
நமதூரிலிருந்து புலம்பெயர்ந்து, நகரங்களின் தொலைக்காட்சிகளோடு ஒன்றிப் போய்விட்ட இன்றைய தலைமுறைகளுக்கு இப்பாடலை அறியும் வாய்ப்பு நூறு சதவீதம் சுத்தமாக இல்லை. ஆனால், நமதூரிலேயே பிறந்து... வளர்ந்து... படித்து... வீதிகளில் விளையாடி... மச்சான் மாமன் உறவுகளோடு குதூகலிக்கும் அதிர்ஷ்டசாலிகளுக்கு இப்பாடல் தெரியுமா என்பது எனக்குத் தெரியவில்லை.
மம்மதலிக்கும் இக்கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்...? மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறேனோ என்று எண்ணிவிடாதீர்கள்... காரணமாய்த்தான் எழுதுகிறேன்...
கிலாஃபத் இயக்கத்தை 1919ஆம் ஆண்டு உருவாக்கியவர்கள் மவ்லானா முகம்மதலி, சவுக்கதலி என்ற சகோதரர்கள்தான் என்று எனது ஒன்பதாம் வகுப்பில், எங்க எச்.எம். மேடம் நடத்திய ஞாபகம் இப்போதுதான் என் மூளையை மெல்லத் திறக்கிறது.
‘அலீ சகோதரர்கள்’ (Ali Brothers) என்று அன்புடன் அழைக்கப்பட்ட மவ்லானா முகம்மத் அலீ, சவுக்கத் அலீ - இவர்களைப் பற்றி, “எனது தோளின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன...” என்று பூரிப்புடன் கூறியது யார் என்று நினைக்கிறீர்கள்...? ‘தேசப்பிதா’ என்று நமக்கு அடையாளங்காட்டப்பட்ட மகாத்மா காந்தியேதான்! என்றால் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இச்சகோதரர்களின் பங்கு எத்தனை உயர்வானது என்ற - மறைக்கப்பட்ட வரலாற்றை எனக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது இந்தப் புத்தகம். நமது வரலாற்றுப் புத்தகங்களில்... கிலாஃபத் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்கள் ‘அலீ சகோதரர்கள்’ என்ற ஒற்றை வரியைத் தாண்டி... வேறெதையும் நம் மனதில் அழுத்தமாகப் பதிக்கவில்லையே... என்ற கோபமெழுந்த அதே வேளையில்...
மம்மதலி... சவுக்கத்தலி... பாடல் வெறும் நையாண்டிப் பாடலல்ல... நமதூரின் மூத்த தலைமுறையினரின் மீது முஸ்லிம் விடுதலைப் போராட்ட வீரர்களின் தாக்கம் எந்தளவுக்கு இருந்தது என்பதை உணர்த்தும் குறியீடாகத்தான் அதை நான் பார்க்கிறேன். இல்லையெனில், எல்லா மம்மதலிகளின் பின்னாலும் சவுக்கத்தலிகளும் சேர்ந்தே வர என்ன அவசியம் வந்துவிட்டது...? ஆனால், நாம்தான் சிறு வயதில் வரலாறு தெரியாமல் நையாண்டியாகவே பாடிக் கொண்டிருந்திருக்கிறோம்...
காங்கிரஸின் அடையாளமாக கதரை நாம் அறிவோம். அந்தக் கதராடைக்கே காரணமானவர் அலீ சகோதரர்களின் தாயார் ஆலாஜி பானு என்ற பீவிமா அவர்கள்தான் என்ற வரலாற்றுக் குறிப்பும் ஆச்சரியத்திற்குரியது. சிங்கங்களை ஈன்றெடுத்த அப்பெண்மணி, தனது கைகளால் ராட்டையில் நெய்த ஓர் ஆடையை காந்திஜிக்குப் பரிசாக வழங்கி, “காந்திஜீ! இதைக் கதராக ஏற்றுக்கொள்ளுங்கள்...!” என்றாராம். ‘கதர்’ என்றால் உருது மொழியில் ‘கவுரவம்’ என்று பொருளாம். அன்று முதல், நமது கரத்தால் நாமே தயாரித்த ஆடை - நமது கவுரவத்தை எடுத்துரைப்பதால், சுயமரியாதையின் அடையாளமாகத் திகழ்ந்தது என்ற பெயர்க் காரணமும், இவ்வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான நாமே அறியாத ஒன்று.
முகம்மதலியின் மனைவி பேகம் சாஹிபாவும், அவரது தாயார் ஆலாஜி பானுவும் கூட தீவிர விடுதலைப் பரப்புரையில் ஈடுபட்டு, அந்தக் காலத்திலேயே முப்பது லட்சம் ரூபாயை விடுதலைப் போராட்ட நிதியாகத் தந்தவர்களாம்... மட்டுமல்லாமல், சிறையிலிருந்த தனது தனயன்களை நோக்கி, “நீங்கள் மட்டும் ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலையானால், உங்கள் குரல்வளைகளை நானே நெறித்துக் கொன்றுவிடுவேன்...!” என்று கர்ஜித்தாராம் தாயார் பீவிமா என்பதைப் படித்தபோது... “இந்த நாட்டின் விடுதலைக்காக இரத்தம் சிந்திய முன்னோர்களின் வரலாறு எமக்குள்ளபோது... ஆங்கிலேயர்களின் இராஜாங்கத்தில் மண்டியிட்டு வேலை பார்த்து, மடிப்பிச்சை வாங்கியவர்களுக்கு எங்களை வெளியேறச் சொல்ல என்ன உரிமையுள்ளது...?” எனதுள்ளம் உரிமைக் குரல் எழுப்பியது.
தாயைப் போலவே இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக களமாடிய தனயன்களும் கைது செய்யப்பட்ட சமயத்தில் தன்னைப் பார்த்துக் கண்கலங்கிய இளையவரான சவுக்கத்தலியிடம் மூத்தவர் உறுமலுடன் கூறியது: “ஏன் கண்ணீர் சிந்துகிறாய்...? இந்த நமது நாட்டின் விடுதலைக்காக ஒருமுறையல்ல! பலமுறை சிறை செல்லவும் நான் ஆயத்தமாக உள்ளேன்... நீயும் ஆயத்தமாக இரு!” என்பதைப் படித்தபோது, “சுதந்திரம் எனது பிறப்புரிமை! அதனை அடைந்தே தீருவேன்!!” என்பதெல்லாம் வெறும் உயிரற்ற வெற்று வாசகங்களாகவே என் கண்களுக்குத் தெரிந்தது.
மவ்லானா முகம்மதலி அவர்கள் ஈரோட்டில் நடந்த உலமாக்கள் மாநாட்டுக்கு வருகை தந்தபோது... “இந்த தேசம் காந்தியிடம் இருக்கிறது... ஆனால் காந்தியோ இந்த மவ்லானா முகம்மதலியின் சட்டைப் பைக்குள் இருக்கிறார்...” என - அவரை வரவேற்று ஈ.வெ.ரா. பெரியார் பேசினார் என்பதை அறிந்ததும், மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட நம் வரலாறுகள் மனதை ஏதோ செய்தது.
இலண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில், ஆங்கிலேயர்களே மூக்கில் விரல் வைக்கும் வகையில் மவ்லானா அவர்கள் இரண்டு மணி நேரம் பேசிய உணர்ச்சி பொங்கும் பேச்சின் இதயப் பகுதி இதோ...
“என் தேசத்திற்கு நான் திரும்ப விரும்புகிறேன்... அவ்வாறு நான் திரும்ப வேண்டுமானால், என் தேசத்திற்கான விடுதலை உத்தரவை என் கரங்களில் நீங்கள் வழங்க வேண்டும்...! ஏனெனில், அடிமைத்தளையில் சிக்கியிருக்கும் ஒரு நாட்டிற்கு நானும் ஓர் அடிமையாகத் திரும்பிச் செல்வதை விரும்பவில்லை... அதை விட, அந்நிய மண்ணானாலும் இங்கேயே மரணிக்கவே நான் விரும்புகிறேன்... ஏனெனில், இது ஒரு சுதந்திர மண்!!!
நான் மரணிக்க ஒரு சுதந்திர மண்தான் வேண்டும்... ஒன்று எனது நாட்டிற்கு விடுதலை வழங்குங்கள்! இல்லையேல்... உங்கள் மண்ணில் அடக்கமாக எனது மண்ணறைக்கு ஓர் இடம் கொடுங்கள்!” என்ற உணர்வுப்பூர்வமான அவரது பேச்சு, அனைவரது நாடி நரம்புகளையும் உலுக்கியெடுத்தது... இந்த வரலாறு நமக்கு சரியாக ஊட்டப்பட்டிருந்தால், நம்மையும் அது உலுக்கியிருக்கும்.
மவ்லானாவின் நாட்டத்தை நிறைவேற்றிய அல்லாஹ், 04.01.1931இல், இலண்டன் மாநகரிலேயே அவரைத் தன்னோடு அழைத்துக்கொண்டான். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
மவ்லானாவின் உடலை ஆங்கில ஏகாதிபத்திய மண்ணில் அடக்கம் செய்ய முஸ்லிம் நாடுகள் சம்மதிக்கவில்லை... அவரது உடலைத் தங்கள் மண்ணில்தான் அடக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி, ‘கிலாஃபத் இயக்கத்தில்’ ஈடுபட்டிருந்த 22 நாடுகள் வரிசையில் நின்றனவாம்! இறுதியில், நமது முதல் கிப்லாவாகவும், புண்ணியத் தலமாகவும் விளங்கும் பைத்துல் முகத்தஸ் என்ற மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயிலின் அருகே - உலகோர் திரள மவ்லானா அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்களாம்!
தாய்நாட்டிற்காக இரத்தம் சிந்திய வரலாறுகளை நாம் கொண்டிருந்தாலும் கூட, இந்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய முஸ்லிம் வீரர்களை வரலாறுகளிலிருந்து துண்டித்திடும் சதி வெற்றிகரமாக அரங்கேறியிருப்பதன் அடையாளம்தான் ‘அலீ சகோதரர்களை’ப் பற்றியும், இன்னும் எண்ணற்ற முஸ்லிம் விடுதலை வீரர்களைப் பற்றியும் நாம் அறியாமலேயே போனது.
சகோதரர் அதிரை இப்றாஹீம் அவர்கள், “அவுரங்கசீப் முதல் அலீ சகோதரர்கள் வரை என எண்ணற்ற முஸ்லிம் வீரர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தாலும், இந்த அலீ சகோதரர்களைப் பற்றிப் படித்ததும், சிறுவயதில் பாடிய “மம்மதலி சவுக்கத்தலி” பாடல் மின்னலென நினைவுக்கு வந்ததே - அவர்களைப் பற்றிய இந்த எளிய ஆக்கம் உருவாகக் காரணமாயிற்று.
நமதூருடன் கலந்துவிட்ட அவர்களின் உறவு - நமக்குள்ள வரலாறு மகத்தானது என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தியது.
“உனக்குள்ள வரலாறு மகத்தானது...அது
உஹதுக்கும் பத்ருக்கும் தொடர்பானது...”
என வாய்ச் சொற்களில் மட்டும் உசுப்பேற்றாது, முகத்தில் அறையும் இதுபோன்ற நிஜங்களை வரலாறாய், இளைய தலைமுறையின் வாழ்க்கையில் கொண்டு சேர்க்க வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்குள்ளது என்ற உணர்வு மனதெங்கும் கனமாகப் பரவியுள்ளது.
|