வாய் கொழுப்பு சீலையில் வடிந்த கதை உங்களுக்கு தெரியுமா?
ஒரு யாசகர் தினமும் தான் வசிக்கும் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மதிய வேளையில் செல்வது வழக்கம்.
அப்போது ஒவ்வொரு வீடாக சென்று, “அம்மா... தாயே... சோறு போடுங்கம்மா...”ன்னு கேட்பாராம்.
ஒரு நாள் அவ்வாறு ஒரு வீட்டில் கேட்டபோது, “இன்னும் சோறு வடிக்கல! கொஞ்சம் பொறுங்க!!”ன்னு வீட்டிலுள்ள அம்மா சொன்னாங்களாம்.
அதற்கு அந்த யாசகர், “எவ்ளோ நேரம் நிப்பேன்...? அடுத்த வீடு போக வேண்டாமா...?” அப்படி இப்படின்னு கொஞ்சம் கூடுதலா பேசிட்டாராம்.
இதைக் கேட்ட வீட்டிலிருந்த அம்மா வெந்து கொண்டிருந்த சோற்றிலிருந்து வடிக்காமலேயே எடுத்து வந்து யாசகர் நீட்டிய சீலையில் போட்டாராம்.
சீலையில் வடிந்த கஞ்சியின் சூடு பொறுக்காமல் “ஃபூ”, “அஃபூ”னு ஊதிக்கொண்டே நடந்து செல்ல, அவரை வீதியில் பார்த்த ஒருவர் என்னவென்று கேட்டதற்கு, “வாய் கொழுப்பு சீலையில் வடியிது!”ன்னு அந்த யாசகர் சொன்னாராம்.
என்ன, கதை புரிந்ததா?
இப்போ விசயத்திற்கு வருவோம்...
முப்பது வருசத்துக்கு முன்னாடிலாம் கதையில் சொன்னது போல நிறைய யாசகர்கள் இவ்வாறு நம் வீடுகளுக்கு வந்து போவது சகஜம்.
பள்ளிக்கூடத்திலிருந்து மதிய உணவுக்கான பெல்லடித்ததும் வீதிகள் தோறும் இதை நமதூரில் அன்று காண முடிந்தது.
ஒவ்வொரு வீட்டுலயும் ஆளாளுக்கு தாம் சமைத்ததிலிருந்து ஒரு பிடி சோத்தைக் கொண்டுபோய் மிஸ்கீன்களுக்குக் கொடுப்பார்கள். யாசிப்பவரோ சோற்றின் அளவு கூடிவிட்டால், “கொஞ்சம் கறிப்புளி ஏதேனும் கொடுங்கம்மா”ன்னு தேவைக்கேற்றார் போல மெனுவை மாத்துவார்.
குளிர் சாதனப் பெட்டி வீடு வீடாக வரத் துவங்கியது முதல், இன்று அக்காட்சிகள் வெகுவாக குறைந்து போய்விட்டன. அது முதல் உண்மையிலேயே மிஸ்கீன்களாக அப்பெட்டிகள்தான் இன்றுவரை இருந்து வருகின்றன. “பிச்சைக்கார பெட்டி” என்ற இன்னொரு சிறப்பும் இப்பெட்டிக்கு உண்டு.
உணவில் மிஞ்சியதையெல்லாம் பத்திரமாக அப்பெட்டிக்குள் பூட்டி வைப்பது நிகழ்கால வழமையாகவே மாறிவிட்டது.
விளைவு வீடுகளுக்கு வரும் மிஸ்கீன்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது.
“நீ நல்லா இருப்பேமா...” என அடிமனதிலிருந்து இறைஞ்சுதலாக வேண்டிச் செல்லும் யாசகர்கள் குறைந்ததாலோ என்னவோ - “என்கிட்டேர்ந்து எடுத்து எடுத்து சாப்பிட்டால் நீ நல்லாவே இருக்க மாட்டா...!” என்ற குளிர்சாதனப் பெட்டிகளின் கூக்குரல் பல்வேறு நோய்கள் உருவில் நம்முடலைத் தாக்கிக் கொண்டிருக்கின்றன.
அறிந்தோருக்கும், அறியாதோருக்கும் விருந்தோம்பல் செய்வது மனித நாகரிகத்தில் பன்னெடுங்காலமாகவே இருந்து வருகின்ற ஒன்றாகும்.
நம் மார்க்கத்தின் தந்தை செய்யிதினா இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் காண்பதற்காக இறைச் செய்தியுடன் வந்த வானவர்கள் பற்றி இறைமறைவசனங்கள் பின்வருமாறு கூறுகின்றன.
11:69 மேலும் (பாருங்கள்!) நம்முடைய வானவர்கள் இப்ராஹீமிடம் ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தார்கள்; “உங்கள் மீது சாந்தி நிலவட்டும்!” என்றார்கள். அதற்கு, “உங்கள் மீதும் சாந்தி நிலவுக!” என்று இப்ராஹீம் பதிலளித்தார். பிறகு சிறிது நேரத்திற்குள் (அவர்களுக்கு விருந்தளிப்பதற்காக) வறுத்த கன்றின் மாமிசத்தைக் கொண்டு வந்தார்.
மற்றுமொரு அத்தியாயத்தில்:
51:24 (நபியே!) இப்ராஹீமிடம் வந்த கண்ணியத்துக்குரிய விருந்தாளிகளின் செய்தி உமக்குக் கிடைத்ததா?
51:25 அவர்கள் அவரிடம் வந்தபோது, “உம்மீது சாந்தி நிலவட்டும்!” என்று அவர்கள் கூறினார்கள். அவர் கூறினார்: “உங்கள் மீதும் சாந்தி நிலவுக! அறிமுகமில்லாத ஆட்களாக இருக்கிறார்களே!”
51:26 பின்னர், அவர் சந்தடியில்லாமல் தம் வீட்டாரிடம் சென்றார்; (பொரிக்கப்பட்ட) கொழுத்த காளைக்கன்றைக் கொண்டு வந்து
51:27 அதனை விருந்தினர் முன்வைத்தார். பிறகு கூறினார்: “சாப்பிடாமல் இருக்கின்றீர்களே!...”
என அருள்மறை உரைக்கின்றது.
யாரென்றே தெரியாதவர்களுக்கு விருந்து படைத்த நம் தந்தை அவர்களிடம் எத்தனை முன்மாதிரிகள் உள்ளன.
அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விருந்தோம்பலிலும் பற்பல முன்மாதிரிகள் நமக்குண்டு.
யாராவது ஒரு புதியவர் நபியவர்களைக் காண வந்து விட்டால் உடனடியாக தம் மனைவியரிடம், “அவர்களுக்கு உணவளிக்க ஏதேனும் உண்டா?” எனக்கேட்டு அதற்கான ஏற்பாட்டையும் செய்வார்கள்.
உணவருந்திய பின்னரும் வெகுநேரம் நபி கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் இல்லத்திலிருந்து பேசிக்கொண்டிருந்த நபித்தோழர்கள் குறித்து கூறும் இறைவசனம் பின்வருமாறு:
33:53 நம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் அனுமதியின்றி நுழையாதீர்கள்;உணவு தயாராகும் நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டும் இருக்காதீர்கள். ஆனால், நீங்கள் உணவு உண்பதற்கு அழைக்கப்பட்டால் அவசியம் செல்லுங்கள்; சாப்பிட்டு முடிந்ததும் பிரிந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஈடுபட்டு விடாதீர்கள்; உங்களுடைய இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், வெட்கத்தின் காரணத்தால் உங்களிடம் அவர் எதுவும் சொல்வதில்லை. ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.
நபியவர்கள் போன்றே நபித்தோழர்களில் பலரும் தம்மிடம் இருந்தபோதும் இல்லாதபோதும் தாம் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் அதிகமதிகம் விருந்தோம்பல் செய்தது பற்றி ஹதீஸ்களில் ஏராளமாக காணக்கிடைக்கின்றன.
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபித்தோழர் ஒருவரின் விருந்தோம்பல் பற்றி அறிவிக்கும் சுவாரஸ்யமான செய்தி இதோ:
ஒருமுறை ஒருமனிதர் நபிகளாரின் அவைக்கு வந்து தாம் கடுமையாக பசித்திருப்பதாகவும் தமக்கு உணவளிக்குமாறும் வேண்டினார். அதற்கு காருண்ய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்கள் தம் மனைவியரிடம், “ஏதேனும் இருக்கிறதா?” என வினவியதற்கு நம்பிராட்டிமார் ஒவ்வொருவரும், “சத்தியத்துடன் உங்களை அனுப்பி வைத்த அல்லாஹ்வின் மீதாணையாக வீட்டில் கொடுப்பதற்கு தண்ணீரைத் தவிர வேறொன்றுமில்லை!” எனக் கூறியதையடுத்து,
“யார் இவருக்கு உணவளிக்கிறாரோ அல்லாஹ் அவர் மீது கருணை புரிவான்!” என நபிகளார் கூற, அன்சாரித் தோழர் ஒருவர் அவையிலிருந்து எழுந்து தாம் அவரை தம்வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார்.
பின்னர் அந்த நபரை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று தம் மனைவியிடம், “விருந்தாளிக்கு உணவளிக்க ஏதேனும் உள்ளதா?” எனக் கேட்டார்.
அதற்கவர், “குழந்தைகளுக்கென வைத்துள்ள ஒரு சிறு அளவைத்தவிர வேறொன்றும் வீட்டில் இல்லை!” எனப் பகர்ந்தார்.
அன்ஸாரித் தோழரோ தம் மனைவியிடம், “பிள்ளைகளின் கவனத்தை வேறு விசயங்களில் திருப்பிவிட்டுவிட்டு வீட்டினுள் விருந்தாளி வரும்போது விளக்கையும் அனைத்துவிட்டு விருந்தாளிக்கு நாம் உணவுன்பதைப் போல நடித்து வீட்டிலுள்ளதை அவரை உண்ணச்செய்வோம்!” என்றார்.
அவ்வாறே இருவரும் செய்ய வந்திருந்தவரும் (தம் வயிறு நிறையும் அளவு) உணவருந்தினார்.
பிறகு காலையானதும் அண்ணலாரைச் சந்திக்கச் சென்ற அத்தோழரிடம், “இன்றிரவு விருந்தாளிக்கு நீங்களிருவரும் செய்த உபகாரத்தைக் கண்டு அல்லாஹ் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்!” எனக் கூறினார்கள்.
59:9 மேலும், தாங்களே தேவையுள்ளவர்களாய் இருந்தாலும்கூட, தங்களைவிடப் பிறருக்கே முன்னுரிமை வழங்குகின்றார்கள். உண்மை யாதெனில், யார் தங்கள் மனத்தின் உலோபித்தனத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்களோ அவர்களே வெற்றி பெறக்கூடியவர்களாவர்.
உலகிலுள்ள ஏனைய எல்லா மக்களையும் விட அரபுகளின் விருந்தோம்பல் பழக்கம் சிலாகிக்கக் கூடியதாகவும் அனைவராலும் போற்றப்படக் கூடியதாகவும் இருந்தது. தங்களிடம் ஒன்றுமில்லாத நிலையிலும் தம் வீடு நோக்கி முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் வந்தால் கூட அவரை வீட்டில் தங்க வைத்து உணவளித்து உபசரித்து வந்தவரின் மனதை குளிர்வித்து அனுப்புவது அவர்களின் பரம்பரை வழக்கமாக இருந்தது.
தம்மிடம் ஒன்றுமில்லாதபோதும் கடன் பெற்றாவது வந்தவருக்கு உபகாரம் செய்யும் ஒப்பில்லா மனம்படைத்தவர்களாக அரபுகள் விளங்கினர்.
இன்றும் அது தொடரும் நற்செயலாகவே அவர்களிடம் இருந்து வருகிறது.
கல்லூரியில் படித்த நாட்களில் அவ்வாறு அனுபவித்த தருணங்கள் இக்கட்டுரையாளருக்கும் உண்டு. மட்டுமல்லாது அவர்கள் அழைப்பை ஏற்க மறுத்தால் சினங்கொள்ளக் கூடியவர்களாகவும் நம்மிடம் பேசாதவர்களாகவும் மாறிவிடுவர்.
உலக வரலாற்றில் விருந்தோம்பல் மூலம் ஆட்சியாளர்களிடம் பற்பல காரியங்களை சாதித்த பல தொழிலதிபர்களும் உண்டு. வீட்டில் ருசியான உணவை சமைத்து அதை அண்டை வீட்டாருக்கு அனுப்பி வைப்பதின் மூலம் உருவான உறவுகளும் நட்புகளும் எண்ணிலடங்காதவை.
முறிந்த உறவுகளை சரிசெய்த விருந்தோம்பல்கள் ஏராளம்.
இஸ்லாத்தில் எது சிறந்தது என ஒரு நபித்தோழர் வினவியதற்கு ‘நீ (பிறருக்கு) உணவளிப்பதும் நீ அறிந்தோருக்கும் அறியாதோருக்கும் ஸலாம்கூறுவதுமாகும்’ என நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்.
பிறருக்கு உணவளிக்காமலும் செல்வ செல்ழிப்பான நிலையிலும் அல்லாஹ் கொடுத்த அருள் வளங்களிலிருந்து பிறருக்கு உதவாமலும் இருந்தோர் பற்றி அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:
விண்ணுலக பயணத்தின் (மிஃராஜ்) போது தலைகள் கீழாகவும் கால்கள் மேலாகவும் தொங்கிக் கொண்டிருக்க பறவைகள் அதனின்று சாப்பிட்டுக் கொண்டிருந்ததை கண்ணுற்ற நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் செய்யிதினா ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ‘யார் இந்த மனிதர்கள் என் சகோதரரே’ எனக் கேட்டதற்கு இவர்கள் கடும் கஞ்சத்தனம் கொண்டவர்களாகவும் சங்கைபொருந்தியவர்களுக்கு மாற்றமானவர்களாகவும் இருந்தனர் என பதிலளித்தார்கள். (புகாரி, முஸ்லிம்).
மேலோன் அல்லாஹ் நம்மிடம் இருக்கும்போதும் இல்லாதபோதும் தாராளமாக மற்றவருக்கு உணவளித்து நல்லமல்கள் செய்யும் சிறந்தவர்களின் கூட்டத்தில் நம்மனைவர்களையும் ஆக்கி அருள்புரிவானாக, ஆமீன்.
|