Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:45:56 AM
வெள்ளி | 1 ஜுலை 2022 | துல்ஹஜ் 1065, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4312:2603:5306:4508:01
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்07:42
மறைவு18:40மறைவு20:37
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4605:1305:40
உச்சி
12:21
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2919:56
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 200
#KOTWEM200
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 23, 2016
கொக்கு பற… பற… (பாகம் 2) - பறவை ஆர்வலருடன் நேர்காணல்!

இந்த பக்கம் 5338 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“சிட்டுக்கள் இங்கே சிறகடிக்கும்” எனும் தலைப்பில், மதுரையில் நடந்த குழந்தைகளுக்கான இயற்கை முகாம் தொடர்பான தகவல்களை இக்கட்டுரையின் முதலாம் பாகத்தில் பார்த்தோம்!

அதன் தொடர்ச்சியாக, மதுரை இயற்கை பேரவையின் (Madurai Nature Forum) ஒருங்கிணைப்பாளரும், பறவைகள் காணும் கலையின் (bird watching or birding) ஆர்வலருமான, திரு இரவீந்திரன் நடராஜன் அவர்களின் நேர்காணலை இப்பாகத்தில் பதிவிடுகிறேன்.

பறவை ஆர்வலரிடம் 15 கேள்விகள்!

இந்த நேர்கானலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்களை கூறியதோடு நில்லாமல், பல அரிய தகவல்களையும் தந்து, தான் எடுத்த அழகிய பறவைகளின் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டார்!


பறவை ஆர்வலர் திரு. ரவீந்திரன் நடராஜன்

(01) பறவைகளின் மீதான ஈர்ப்பு உங்களுக்கு எவ்வாறு / எப்போது ஏற்பட்டது?

சிறுவயதில் இருந்தே, காட்டுயிர்களின் மீது எனக்கு அதீத ஆர்வம் உண்டு; ஆனால், பறவைகளைக் குறிப்பாக ரசிக்கத் தொடங்கியது என்னவோ சுமார் 20 வருடங்களுக்கு முன்பிலிருந்துதான்! வேலைக்குப் போகும் வழியில், வேதிவால் குருவியை (படம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது) வேடிக்கை பார்த்துக்கொண்டே போனது இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. பறவைகளின் மீதான ஈர்ப்பால், பறவையியலை (ornithology) ஒரு பாடமாக ”பம்பாய் இயற்கை வரலாறு சங்கத்தில்” (Bombay Natural History Society; சுருக்கமாக BNHS) 2011-ஆம் வருடம் முறையாகக் கற்றேன்.

(02) உங்களது மதுரை இயற்கை பேரவை (Madurai Nature Forum) துவங்கப்பட்டதிற்கான அடிப்படை நோக்கம் என்ன?

இயற்கை வளங்கள் எங்கோ காடு மலைகளுக்குள் ஒளிந்திருப்பவை அல்ல; அவற்றைக்காண, ஏழு கடல் ஏழு மலை தாண்ட வேண்டிய அவசியம் இல்லை. பொருள் மட்டும் தேடும் இன்றைய உலகில், பல இயற்கையான விஷயங்கள் நமது கண்களுக்கு தென்படுவதில்லை. முதலில், என் தனிப்பட்ட ஆர்வத்தில் மதுரையின் இயற்கை மிச்சங்களை படமாக எடுத்து முகநூலில் பதிவிட ஆரம்பித்தேன். முக்கியமாக, பல பறவைகள் மற்றும் விலங்குகளின் தமிழ்ப் பெயரைக் குறிப்பிட்டு பதிவிட்டபோது, தமிழ் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பலரும் உற்று நோக்க ஆரம்பித்தனர்.

ஏதோ வெளிநாடுகளில் இருப்பவை என்று தமிழ் நாளேடுகள் சொல்லிக்கொண்டு இருந்த பறவைகளை, நான் மதுரையின் புறநகர் பகுதிகளில் இருந்து படமெடுத்து பதிவிட்டுக் கொண்டிருந்தேன். இது பலருக்கும் வியப்பைத் தர, அவர்களும் அவற்றைக் காணவேண்டும் என பின்னூட்டம் இட்டனர். அவ்வாறு நிகழ்ந்ததுதான் எங்களின் முதல் சந்திப்பு. அதன் பின், மதுரை மாவட்டத்தின் மொத்த பல்லுயிர்கள் பற்றிய குறிப்புகளை தேட துவங்கினோம். அரசு துறைகளில் இருந்து முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை.

மதுரை மாவட்டத்தை இருப்பிடமாகவோ அல்லது வலசை (migration) இடமாகவோ கொண்ட அனைத்து பல்லுயிர்களின் விவரங்களை சேகரிக்கவும், சேகரித்த விவரங்களையும், அவ்வுயிரினங்களை பாதுகாக்கும் முறைகளையும் மக்களிடம் கொண்டு செல்வதற்கும்; மேலும், வனத்துறையின் முழு ஒத்துழைப்புடன் எங்களது செயல்திட்டங்களை நிறைவேற்றவும், மதுரை இயற்கைப் பேரவை உருவாக்கப்பட்டது.

(03) மதுரை இயற்கை பேரவையின் செயல்பாடுகளையும், அதன் மூலம் தாங்கள் இதுவரை சாதித்த நற்காரியங்களையும் சுருக்கமாக கூறுங்களேன்…

ஆரம்பித்த முதலாம் ஆண்டில், ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாளிலும், மதுரையின் ஒரு முக்கியமான இயற்கை சூழல் பகுதியில், எங்கள் குழுவிலுள்ள இயற்கை ஆர்வலர்களின் சந்திப்பு நடந்து கொண்டே இருந்தது. அதன் விளைவாக, மதுரை மாவட்டத்தின் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை மற்றும் கரடி போன்ற பெருவிலங்குகள் இருப்பதையும், 252 வகை பறவை இனங்கள் மற்றும் 92 வகை வண்ணத்துப் பூச்சிகள் வலசை வருவதையும் கண்டறிந்தோம். அது போக, மதுரையின் வளமான கடம்ப மரங்கள், மருத மரங்கள், பெரிய ஆலமரங்கள் என பல நாட்டு மரங்களும் கணக்கிடப்பட்டன.

பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் எந்த எல்லைகளும் இல்லாத காரணத்தால், இன்னும் விரிவான தகவல்களை சேகரிக்க மதுரை மாவட்டத்தை அடுத்துள்ள ஏனைய மாவட்டங்களின் வளத்தையும், மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர் வளத்தையும் பதிவு செய்து வருகிறோம். தென்னிந்தியாவின் எந்தக் காடுகளில் காட்டுயிர் கணக்கெடுப்பு நடந்தாலும், எங்களின் ஆர்வலர்கள் அதில் பங்கெடுப்பர்.

(04) இவ்வாறான இயற்கை மன்றம்/பேரவை ஒவ்வொரு ஊரிலும் தேவை என எண்ணுகிறீர்களா?

ஒவ்வொருவருக்கும் தங்களின் தாய்மண் மேல் இருக்கும் பாசத்தைப் போல, தங்களின் தாய் எத்தனை வளமாய் இருக்கிறாள் என்ற அறிவும் இருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஐந்தினையில் எல்லாமே இயற்கைதான். ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். ஒரு பாலை நிலம் சோலையாக மாறுகிறது என்றால், அதன் பல்லுயிர் வளம் கூடும்; ஆனால், ஒரு சோலைக் காடு பாலை நிலமாக மாறுகிறது என்றால், அங்கே நாம் அதன் காரணங்களை எச்சரிக்கையுடன் உற்று நோக்க வேண்டியிருக்கிறது.

பாலையோ சோலையோ, அதைப் பற்றிய முழு விவரங்களும், ஆவணங்களும் இருந்தால் மட்டுமே, நம்மால் சூழல் மாறுபாடுகளைப் புரிந்து கொள்ள முடியும். ஆவணங்களை சேகரிப்பது ஒரே நாளில் முடியும் வேலையும் இல்லை. அது தொடர்ந்து சேகரிக்கப்பட வேண்டிய ஒன்று; எனவே, இதை ஒரு அமைப்பாக பலர் சேர்ந்தே சாதிக்க முடியும்.

(05) மனிதனுக்கும், பறவைகளுக்குமான பண்டைய காலத் தொடர்பை விவரியுங்களேன்…

மனிதன் தன் சுய தேவைகளுக்காக மட்டுமே, எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வம் காட்டுகிறான். வேட்டைப் பிரியனாக இருந்த மனிதனின் வாழ்க்கை முறை விவசாயம் சார்ந்து மாறிய பின், தனக்கு நன்மை செய்யும் பறவைகள், தீமை செய்யும் பறவைகள் என பிரித்துப் பார்க்க ஆரம்பித்தான். கோழி போன்ற பறவைகள் மனிதனின் உணவுத் தேவைகளுக்கான வளர்ப்பு பறவைகளாகின. தன்னுடைய விளைநிலங்களை - தானியங்களைப் பாதுகாக்க, தானியங்களை உண்ணும் பறவையினங்களை பெரும் வேட்டையாடினான்.

தன் வசதி வாய்ப்புக்கள் அதிகரித்த பின், உடல் உழைப்பு குறைந்த மனிதனுக்கு கலை ரசனையுடன் கூடிய பார்வை வந்தது. அப்போது வர்ணனைக்கு பறவைகளின் இயல்பைப் பயன்படுத்த ஆரம்பித்தான். இந்த இலக்கிய ரசனை பலரையும் கவர்ந்ததால், பறவைகளை அருகில் வைத்து பார்க்க விரும்பினர். சுதந்திரமாய் திரிந்த பறவைகள் கூண்டுப் பறவைகளாகின. வலிமையான பறவைகள் வேட்டைக்கு பயிற்றுவிக்கப்பட்டு அரசர்களின் வலிமையின் சின்னமாகின.

அழகிய பறவைகளின் இறகுகளின் மேல் ஐரோப்பிய இராஜ வம்சத்தினர் கொண்ட வெறித்தனமான விருப்பத்திற்கும், ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்க பழங்குடிகளின் தலை அலங்காரத்திற்கும் கோடிக்கணக்கான பறவைகள் கொல்லப்பட்டன.

இலக்கியத்தில் பறவைகள் தூது செல்வதை வைத்து, நுணுக்கமான அறிவு கொண்டவர்கள் உண்மையில் புறாக்களை செய்திகள் அனுப்பப் பழக்கினர். இந்தப் புறா விடு தூது முறையால் பல யுத்தங்களில் அரசுகள் கவிழ்ந்துள்ளன. புறா விடு தூது இந்தியாவில் மௌரியர் பேரரசர்கள் முதல் முகலாய மன்னர்கள் வரை மிக முக்கிய தகவல் பரிமாற்ற முறையாக இருந்தது. ஒடிசா மாநிலத்தின் காவல் துறையில் புறா தபால் சேவை இப்போதும் நடைமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது.

(06) பறவைகள் காணுதல் (bird watching or birding) குறித்து சில வரிகள்….

சென்ற நூற்றாண்டில், ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் இருந்து உலகம் முழுவதும் ஒரு பொழுதுபோக்காக பரவியதுதான் - இந்தப் பறவைகள் காணுதல். பறவைகளின் வாழ்வியல் முறைகளை அதன் வாழுமிடத்தில் கவனிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இதுவே பின்னர், பறவைகள் குறித்த விவரங்களைச் சேகரித்து, அதனோடு அவற்றின் இறகுகள், முட்டைகள், கூடுகளையும் சேகரித்து ஆவணப்படுத்தும் தீவிர பறவை நோக்கர்களையும் உருவாக்கியது. பறவைகளை நோக்குதல் மூலம் பறவைகளுக்கு பல நன்மைகளும் சில பாதிப்புகளும் உருவானது உண்மையே!


திரு இரவீந்திரன் சேகரித்துள்ள முட்டைகூடுகள் (உலகின் பெரும் பறவைகளான நெருப்புக்கோழி மற்றும் ஈமு பறவைகளின் முட்டைகூடுகளும் இதில் அடங்கும்)

(07) இன்றைய சூழலில் பறவைகள் காணுதலை ஓர் முக்கிய செயல்பாடாக ஏன் கருதப்படவேண்டும்?

இன்றளவும் மற்ற விலங்குகளை விடவும், பறவைகள் தான் இயற்கை சூழலை மட்டுமே சார்ந்து உள்ளன. எந்த சூழலிலும் அவைகள் தங்களின் வாழும் நெறிமுறைகளை பெரிதும் மாற்றிக் கொள்வது இல்லை. பறவைகள் ஒரு இடம் விட்டு பறந்து செல்லும் போது புவியின் காந்தப் புலத்துடன் தன் நுண்ணறிவை இணைத்து வழி கண்டறிகிறது.

மேலும், புயல், பெருமழை, வறட்சி மற்றும் பூகம்பம் என இயற்கையின் சீற்றங்களை பறவைகளால் முன் கூட்டியே உணர்ந்து கொள்ள முடிகிறது. எனவே, பறவைகளை உற்று நோக்குவதன் மூலம், சூழலில் ஏற்படும் மாறுதல்களை எந்த ஒரு பெரிய கருவியின் உதவியும் இன்றி எளிதாக நாம் உணர முடியும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் பறவைகள் அழியுமானால், அது இயற்கை நமக்கு விடுக்கும் எச்சரிக்கை என்பது தெளிவு!

நீண்ட தூர வலசை (long-distance migration) மற்றும் குறுகிய தூர வலசை (short-distance migration) மேற்கொள்ளும் பறவைகள், இயற்கையின் உந்துதலில் குளிர்கால துவக்கத்தில், வருடம் தோறும் பூமியின் வட பகுதியில் இருந்து தென் பகுதிக்கு இடம் மாறுகின்றன. மீண்டும் கோடைக்காலம் துவங்கும் பொழுது, தங்களின் தாய் மண்ணுக்கு மறு வலசை (return migration) செய்கின்றன. இவ்வாறு ஏற்படும் ஒரு வலசை சுழற்சி (migration cycle) வெற்றிகரமாக அமைந்தால், அவ்வருடம் சூழலில் எந்த குறைபாடும் இல்லை என இயற்கை சூழல் விஞ்ஞானிகளும், பறவை ஆய்வாளர்களும் அறிவார்கள்.

(08) நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளும் (encroachments of water bodies), பெருகி வரும் நெகிழி குப்பைகளும் (plastic waste) எவ்வாறு பறவைகளை பாதிக்கின்றன?

மனித சமூகத்தால் பெருமளவு வேட்டையாடப்பட்ட காலங்களை விடவும், சூழல் கேடுகள் கட்டவிழ்க்கப்பட்டுள்ள இன்றைய காலக்கட்டத்தில்தான், அதிக அழிவை பல்லுயிர்கள் சந்திக்கின்றன. காடுகளை அழித்து கழனியாக்கும் முயற்சியில், இயற்கையின் நீர் வழித்தடங்கள் சீர்குலைக்கப்படுகின்றன.

நீர் ஓட்டம் தடை ஏற்படுத்தப்படுவதால், நீர்ப் பிடிப்பு பகுதிகள் வற்றிப் போயின. மேலும், குப்பைகளாக குவிக்கப்படும் மக்காத நெகிழிப் பொருட்களாலும், அமிலக்கசிவு ஏற்படுத்தும் மின்னணு (electronic) பொருட்களாலும், இப்பூவுலகின் சூழல் பலவகையில் பாதிக்கப்பட்டுள்ளது.

இச்சீர்கேட்டினால் முறையான வாழ்வுமுறை, உணவுப் பொருள் எல்லாமே பறவைகளுக்கு கேள்விக்குறியாகிப் போகின்றன. எனவே, அவற்றின் வலசை மற்றும் இனப்பெருக்கம் தடைபடுகிறது. நெகிழிப் பொருட்களால் நிலப்பரப்பில் மட்டும் அல்லாமல், கடல் பரப்பில் வாழும் பறவையினங்களும், பிற உயிரினங்களும் துயருகின்றன.

(09) பறவைகளின் எண்ணிக்கை குறைவதற்கு வேறேதும் காரணங்கள் உள்ளனவா?

பசுமைப் புரட்சி (Green Revolution) என நாம் கொண்டாடும் விஷயமே, இந்த மண்ணின் வளத்தை கெடுத்து, பூச்சிகளின் வாழ்வு முறையை எதிர் மறையாக்கி, இன்று பறவைகளின் வாழ்வுக்கும் கேடு விளைவிக்கிறது. அதிக உற்பத்திக்காக நாம் இடும் உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் மண் வளத்தையும், நன்மை செய்யும் நுண்ணுயிர் வளத்தையும் கெடுத்து, உணவுச் சங்கிலியில் ஒரு வெற்றிடத்தை உண்டாக்குகிறது.

பல லட்சம் வருடங்களாக படிப்படியாக மாற்றப்பட்ட ஒரு நிலை, திடீரென ஒரே நாளில் குலைக்கப்படுமேயானால், அதனை சார்ந்துள்ள அனைத்து உயிர்களின் வாழ்வும் இறப்பை சந்திக்கும். அதே போல், மனிதனின் பேராசையினால், அனைத்து வகை நிலங்களையும் தன் வாழ்வு முறைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முயலும் போது, பேரழிவை சந்திக்க நேரிடும்.

(10) பறவைகள் எதனால் இடம்பெயர்கின்றன / வலசை வருகின்றன (migration)? பறவைகள் மட்டும்தான் இடம்பெயர்கின்றனவா?

புவியின் சீதோசன நிலைக்கு ஏற்ப, வடபகுதியில் இருந்து தென்பகுதிக்கு, குளிர்காலங்களில் (ஆகஸ்ட் துவங்கி நவம்பர் வரை) தங்களின் உணவுத் தேவைகளுக்காகவும், உறைவிட சூழலுக்காகவும் பறவைகள் வலசை செல்கிறது. இவ்வாறு வலசை செல்லும் பறவைகளினால், பூச்சிகளின் ஆதிக்கம் கட்டுக்குள் நிறுத்தப்படுவதோடு மட்டுமன்றி, தாவரங்களின் விதைப் பரவலும் மிக அமோகமாக நடைபெறுகிறது.

பறவைகள் தங்களின் தாய் மண்ணுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் திரும்பவும் தெற்கில் இருந்து வடக்கே மறு வலசை மேற்கொள்கின்றன. பறவைகளும் பூச்சிகளும் இவ்வுலகின் நடுநிலைத்தன்மையை நிலை நிறுத்துகின்றன. இவைகள் இரண்டும் அழிவை சந்தித்தால், மனித இனத்தின் ஆதிக்கம் கால் நூற்றாண்டுக்குள் அழிவை சந்தித்து விடும்.

பறவைகளைத் தவிர்த்து, விலங்கினங்கள் பலவும் வலசை வருகின்றன. ஆப்பிரிக்க கண்டத்தில், கானுயிர்களின் பெரும்-வலசை இன்றளவும் நடைபெற்று வருகிறது. நம் தேசத்தில், யானைகளின் வலசை மிக முக்கியமானது.

யானைகளின் வலசையால், அடர் காடுகளில் பெரு மரங்கள் வீழ்த்தப்பட்டு, புதிய தாவரங்கள் மீண்டும் முளைக்கின்றது. அதே போல், தங்களின் சாணத்தால் காடுகளின் வளத்தையும், விதைகளை காடு முழுதும் கொண்டு செல்லும் பணியையும் யானைகள் செய்கின்றன. ஒரே காட்டில் யானைகள் தங்கி விடுமானால், அந்த காடு இரண்டு வருடங்களுக்குள் அழிந்துவிடும்.... யானைகளின் பசி அப்படி!

பெரிய உயிரினங்கள் மட்டுமன்றி, பட்டாம் பூச்சிகளும், வெட்டுக்கிளிகளும், தேனீக்களும் குளிர் மற்றும் வசந்த காலங்களில் வலசை மேற்கொள்கின்றன.

(11) கூண்டுகளில் பறவைகள் வளர்ப்பது பற்றி தங்களது நிலைபாடு என்ன?

நம் குழந்தைகளை ஒரு தங்க கூண்டில் அடைத்து, அவர்களுக்கு பட்டு ஆடையும், பாலும், பழமுமாக நான் தருகிறேன் என்று எவெறேனும் நம்மிடம் சொன்னால், அவர்களிடம் நம் குழந்தைகளை தத்துக்கொடுக்க எத்தனை பேருக்கு மனம் வரும்? அதே போலத்தான் பறவைகளுக்கும்!

பறவை என்றாலே சுதந்திரம்! இந்த ’சுதந்திரம் எனும் பறவை’ என்றும் சுதந்திரமாக இருப்பதே அழகு!

(12) நமது குழந்தைகளுக்கு இயற்கை மற்றும் சூழல் குறித்த தெளிவான அறிவை தற்போதைய கல்விமுறை சரியாக வழங்குகிறதா?

ஏட்டுக்கல்வி கறிக்கு உதவாது! நமது பிள்ளைகள் வீட்டிலும், பள்ளிகளிலும் சிறைவைக்கப்படுகிறார்கள் என்பதே எனது கருத்து. அவர்களுக்கு உணர்வுப்பூர்வமான கல்வியை வழங்குவதற்கு பதிலாக, தகவல்களை திணிக்க மட்டுமே முயற்சிகள் நடைபெறுகின்றன. இது மிகவும் வருந்தத்தக்க விஷயம்!

(13) இயற்கை மற்றும் சூழல் குறித்த அறிவை எளிய வழிமுறைகளில் எவ்வாறு வழங்கப்பட வேண்டும்?

மிக எளிது! அவர்கள் கற்கப்போவதை முதலில் காண வேண்டும். கற்கும் ஒவ்வொரு மாணவனுக்கும், கள ஆய்வு என்பது துவக்க பள்ளியில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். யானையை பார்த்த பின், அது மிகவும் பெரிய விலங்கு என்று அவர்களுக்கு கற்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அதே போலத்தான், ஒவ்வொரு விஷயமும்!

பெங்களூரில் உள்ள விச்வேசுவரையா காட்சியகத்தை (Visveswaraya Industrial & Technological Museum) பார்த்து வந்தால், மாணவனின் பௌதீகத்திற்கு (physics) உண்டான பாடத்தின் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். மகாபலிபுரத்தை கண்ட மாணவனுக்கு, சரித்திரத்தில் பல்லவனின் திறன் பற்றி நாம் வகுப்பெடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. எனவே, காண்பதுவும் கற்பதுமாக நமது கல்வி முறை மாறவேண்டும்.

(14) பறவைகளை கண்டறிந்து வகைப்படுத்தும் இக்கலைக்கு ஏதேனும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் உள்ளனவா?

அமெரிக்க, ஐரோப்பிய தேசங்களில், பல பகுதி-நேர பயிற்சி வகுப்புக்கள் (part-time training classes) நடைபெறுகின்றன. இந்தியாவில், மும்பையில் உள்ள BNHS மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரிஷிவேலி கல்வி மையமும் (Rishi Valley Education Centre) பறவையியல் தொடர்பான பயிற்சிகளை நடத்தி வருகின்றன.

பயிற்சிக்குப்பின், உங்களின் பங்களிப்பை பகுதி நேரத்தில் செய்வதே சாலச் சிறந்தது. இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அவர்களின் வழியில், சேவை உள்ளத்துடன் இதில் பயணிக்க வேண்டும். உங்களுக்கு பொருளாய் கிட்டா விட்டாலும், அருளாய், ஆரோக்கியமாய் பல கிட்டும். அன்றாட அலுவல்களினால் ஏற்படும் சிக்கல்களுக்கும் மன அழுத்தத்திற்கும், பறவைகள் காணுதல் நிச்சயம் ஒரு மாமருந்தே!

(15) சமீபத்தில் (மே 23-24) தாங்கள் நடாத்திய ”சிட்டுக்கள் இங்கே சிறகடிக்கும்" எனும் குழந்தைகளுக்கான இயற்கை சூழலியல் முகாமின் வெற்றி குறித்து…

இது வெற்றியா, தோல்வியா என்பது எனக்கு பொருள் அல்ல! இளையவர்களிடம் விதைகளை கொடுத்து தூவ துவங்கி உள்ளோம். அவைகள் துளிர் விட்டு, அரும்பி, பூத்து, காய்த்து, கனிந்து நமக்கு விதைகளை தரும் காலம் வரும் வரை, நாம் அவர்களுடன் பயணிக்க வேண்டும். இது என்னால் முடிந்த சிறிய துவக்கம் மட்டுமே!

அறிவுக்கு தீனியாக அமைந்த பதில்களை படித்து வியந்த வாசகர்களுக்கு, திரு இரவீந்திரன் நடராஜன் அவர்கள் தனது நிழற்படக் கருவியில் பிடித்த சில பறவைகளின் புகைப்படங்கள் கண்களுக்கு விருந்தாய் இதோ….


வேதிவால் குருவி (அல்லது அரசவால் ஈப்பிடிப்பான்; ஆங்கிலத்தில் Asian paradise flycatcher; உயிரியல் பெயர்: Terpsiphone paradisi)


அக்கா குயில் (ஆங்கிலத்தில் Common hawk-cuckoo; உயிரியல் பெயர்: Hierococcyx varius)


பூநாரை (ஆங்கிலத்தில் Greater flamingo; உயிரியல் பெயர்: Phoenicopterus roseus)


சிவப்பு மூக்கு ஆள்க்காட்டி (ஆங்கிலத்தில் Red-wattled lapwing; உயிரியல் பெயர்: Vanellus indicus)


மாங்குயில் (ஆங்கிலத்தில் Indian golden oriole; உயிரியல் பெயர்: Oriolus kundoo)


நீலத் தாழைக்கோழி (ஆங்கிலத்தில் Grey-headed swamphen; உயிரியல் பெயர்: Porphyrio poliocephalus)


செந்தொண்டை சின்னான் (ஆங்கிலத்தில் Flame-throated bulbul; உயிரியல் பெயர்: Pycnonotus gularis)


பெரும் புள்ளிக்கழுகு (ஆங்கிலத்தில் Greater spotted eagle; உயிரியல் பெயர்: Clanga clanga)


தோட்டக்கள்ளன் (அல்லது ஆறுமணிக் குருவி அல்லது பொன்சிறகி; ஆங்கிலத்தில் Indian Pitta; உயிரியல் பெயர்: Pitta brachyura)


இந்திய பாறு கழுகு (ஆங்கிலத்தில் Indian vulture; உயிரியல் பெயர்: Gyps indicus)

சூழலியல் சார்ந்த கல்வியை ஒரு சுமையாக இல்லாமல், விளையாட்டுக்கள் நிறைந்த கள ஆய்வுகள் மூலம் கற்பிக்கும் இந்த எளிமையான மனிதரின் சிறப்பறிவால் நம் பிள்ளைகளும் பயனடைய வேண்டும் என பேராசை கொண்டவனாய், அவரது தொடர்பு விவரங்களை கீழே பதிவிடுகிறேன்…

திரு இரவீந்திரன் நடராஜன்
ஒருங்கிணைப்பாளர், மதுரை இயற்கை பேரவை
முகநூல் முகவரி: https://www.facebook.com/nraveemdu (Raveendran Natarajan)
அலைபேசி எண்: 9843136786


முக்கிய மேற்கோள்கள்

(1) Bombay Natural History Society (BNHS)
http://bnhs.org/bnhs/

(2) Rishi Valley Education Centre
http://rishivalley.org/

(3) மாயச் சுழலில் மாட்டிக்கொண்ட விவசாயம்: பசுமைப் புரட்சியின் (Green Revolution) கதை – காலச்சுவடு.காம் இணையதளத்தில் வெளியான சங்கீதா ஸ்ரீராம் அவர்களின் கட்டுரை
http://www.kalachuvadu.com/issue-129/page68.asp

(4) Visvesvaraya Industrial & Technological Museum
http://www.vismuseum.gov.in/

(5) Basic Course in Ornithology (BCO) at BNHS
http://bnhs.org/bnhs/index.php?option=com_content&view=article&id=250&Itemid=501

(6) Home Study Course In Ornithology at Rishi Valley Education Centre
http://rishivalley.org/conservation/home_studies.htm

குறிப்பு: மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ள அனைத்து இணையதள முகவரிகளும், இக்கட்டுரை பதிவிடப்பட்ட தேதியில் பயன்பாட்டில் இருந்தது.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Buhary (Abu dhabi ) on 24 July 2016
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44295

நல்லதொரு கட்டுரை எனக்கறிந்து பல பேர் இது போல் ஆர்வமுடையவர்கள் நம் ஊரிலும் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் எப்படி அந்த பொழுதுபோக்கை முறை படுத்தினார்கள் என்று தெரியவில்லை தொழில் நிமித்தம் மற்ற பல மாயைகளில் மட்டுபட்டுள்ளான்கள். அவர்களுக்கு இந்த பதிவு மிக பயனளிக்கும் என்பதோடு நம்க்கும் ஆர்வத்தை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.

என் அனுபவம் ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்பு நமதூர் தொடருந்து நிலையத்தில் ஒரு குருவியை கண்டேன் அதன் வால் மட்டும் இன்றும் நியாபகத்தில் உள்ளது அதற்கு பின்னர் வேறெங்கும் அதை நான் கண்டதில்லை. அதன் வால் இரண்டு மிக நீண்டு வெள்ளையாக ஒரு சேவலினது போல் நீண்டது. எனக்கும் bird watching என்பதில் ஆர்வமுண்டு காலத்தில் இது போன்று எனக்கும் வாய்க்கும் என்ற நம்பிக்கையில்...

நன்றி ஹபீப்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2022. The Kayal First Trust. All Rights Reserved