எங்கு திரும்பினாலும் பச்சை பசேலென அழகிய வயல் வெளிகள்… மரங்களால் நிரம்பிய வளாகம்… மனதிற்கு இதமாக வீசிய ‘மதுரை’ தென்றல்! பள்ளிக்கூடத்தில் தான் இருக்கிறோமா என்ற ஐயம் என்னுள் தொடர்ந்து எழுந்துக்கொண்டே இருந்தது!
இவ்வாண்டின் சர்வதேச பல்லுயிர் தினத்தையொட்டி (International Day for Biological Diversity 2016), ”சிட்டுக்கள் இங்கே சிறகடிக்கும்” எனும் தலைப்பில் மே 23-24 தேதிகளில் குழந்தைகளுக்கான இயற்கை முகாமொன்றை, ”மதுரை இயற்கை பேரவை” (Madurai Nature Forum) நடத்தவிருப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் திரு இரவீந்திரன் நடராஜன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிகழ்வில் பங்குபெறும் எனது விருப்பத்தை அலைபேசி தொடர்பில் அவரிடம் தெரிவித்ததும், ”இது குழந்தைகளுக்கான முகாம்... இயற்கை மற்றும் சூழல் பற்றிய அடிப்படை விஷயங்களை மட்டுமே கற்றுத் தரப் போகிறோம். எனவே, ஒரு தன்னார்வ ஒருங்கிணைப்பாளராக கலந்துகொண்டு உதவமுடியுமானால், தாராளமாக வாருங்கள்,” என பச்சைக்கொடி காட்டினார். அடிப்படை விஷயங்களைத்தான் இன்றைய கல்விமுறை அரைகுறையாக சொல்லித்தருகிறது என்பதை நன்கு உணர்ந்ததாலோ என்னவோ, கற்றவை நம் பிள்ளைகளுக்கும் பிற்காலத்தில் பயன்படுமே என்றெண்ணி, யாதொரு தயக்கமுமின்றி மதுரை விரைந்தேன்.
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் தன்னார்வலர்கள் என சுமார் 60 நபர்கள் என்னுடன் அப்பள்ளி வளாகத்தை (PNU ASNN மெட்ரிக் பள்ளி, அவனியாபுரம்) ரசிக்க வந்திருந்தனர் (மன்னிக்க வேண்டும், முகாமில் கலந்துக்கொண்டனர்)! இதில், ஐந்து வயதே நிரம்பிய ஓர் அழகிய பெண் குழந்தையும் அடக்கம்.
மாணவர்களிலோ, அரசுப் பள்ளிகள், பெற்றோர்களின் சட்டைப் பைகளில் ஓட்டைப் போடும் தனியார் பள்ளிகள்; கிராமப்புறம், நரகம் (திருத்தம், நகரம்; திருத்த வேண்டிய தேவையில்லாத போதும்!) தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயில்வோர் என பல தரப்பிலிருந்தும் வந்திருந்தனர்.
சர்வதேச பல்லுயிர் தினம் 2016
அலைபேசியில் மட்டுமே பேசியிருந்தாலும் (அதுவும் ஒரே ஒரு முறை மட்டும்), திரு இரவீந்திரன் அவர்களை நேரில் சந்தித்ததும், ஒரு புதியவரை கண்ட உணர்வு துளியும் இல்லை. பறவைகள் காணுதல் கலையின் (birding or bird watching) ஆர்வலரான இவர், ’நிறைகுடம் தளும்போது குறைகுடம் கூத்தாடும்’ என்னும் பழமொழிக்கேற்ப ஒரு சிறந்த - தளும்பும் நிறைகுடம். அவ்வளவு எளிமை!
எந்த ஒரு கல்விக்கான தேடலிலும் நிச்சயம் சில படிப்பினைகளும் அனுபவங்களும் கிட்டுவதுண்டு. பெரியவர்களும் குழந்தைகளாக மாறிய இந்நிகழ்வில், நான் கற்றுக்கொண்ட பாடங்களோ ஏராளாம்… ஏராளம்…
மரங்களுடன் பேசினோம்!
தரையில் கிடக்கும் பல விதமான இலைகளையும், பூக்களையும், சிறு காய்கள், பழங்களையும் குழந்தைகளை எடுத்து வரச்சொல்லி, அவைகளின் வடிவம் மற்றும் நிறம் போன்ற அடையாளங்களைக் கொண்டு, மரம் செடிகளை இனம் காண பயிற்றுவிக்கப்பட்டனர். வழக்கமான பள்ளிக் கல்வியில், இதனை herbarium என்னும் பெயரில் பன்னிரெண்டாம் வகுப்பில் தானே நமக்கு சொல்லித் தந்தார்கள் (அதுவும், ஒரு குறிப்பிட்ட பாடத்தை தேர்வு செய்தவர்களுக்கு மட்டும்) என ஆச்சர்யப்பட்ட எனக்கு, அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன!
திரு கார்த்திகேயன் மற்றும் திரு ஆனந்த பெருமாள், மரக் கன்றுகளை நடும் செயல்முறையை எளிமையாகவும் இனிமையாகவும் விளக்கினர். மூடாக்கு (mulch) என்பது இலை தழைகளைக் கொண்டு (நடப்படும் மரம் செடிகளை சுற்றி) மண்ணின் மேற்பரப்பில் அமைக்கப்படும் அடுக்காகும். இது ஈரப்பதத்தைத் தக்க வைக்கவும், மண்ணின் நலம் மற்றும் வளத்தைப் பாதுகாக்கவும் மற்றும் களைகளைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.
இயற்கை வழி விவசாயத்தின் முக்கிய பங்கான இந்த மூடாக்கை, இளையவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தனர். குழந்தைகளின் உதவியுடன், அப்பள்ளிக்கு ஒரு சிறு தோட்டம் அமைத்துக் கொடுத்தது இம்முகாமின் சிறப்பு! குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு மரம்/செடி நடுவது, இதுவே முதல் முறையாக இருந்தது (இந்த சாதனையை நிகழ்த்தாத பெரியவர்கள் நம்மில் பலர் இருப்பர்!). இந்நிகழ்வு அவர்களை இன்னும் பல மரம்/செடிகள் நடுவதற்கு, ஒரு உந்துசக்தியாக அமையும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை!
காஞ்சனாரம் என்று அழைக்கபடும் மந்தாரை மரம் நடுகையில்…
நாட்டு மரங்களின் மீது அதிக ஆர்வம் கொண்டவரான மதுரையின் பிரபல கண் மருத்துவர் திரு Dr. பத்ரி நாராயணன், சூழலுக்கு ஏற்றவாறு மரங்களை தேர்வு செய்யும் அவசியம் குறித்தும், நாட்டு மரங்களின் முக்கியத்துவத்தையும் விளக்கினார். மேலும், ஒரு குறிப்பிட்ட வகை தாவரங்களை மட்டும் நடுவதற்கும், பலவகை தாவரங்களை நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எளிய முறையில் குழந்தைகளுக்கு விளக்கினார். மதுரை என்னும் ஊர்ப்பெயர் வர காரணமாக இருந்த மருத மரங்கள் (முற்காலத்தில், வைகை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதியாக இருந்தது), இன்று மிக மிக குறைவாக உள்ளதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார்.
மரத்தடியில் மரத்தை பற்றி…
கற்றல் என்பது கருத்து திணிப்பாய் இல்லாமல், புரிதலாகவே காட்சியளித்தது. சிறு விஷயங்கள் கூட, கேள்வி-பதில் மூலமாகவும், நகைச்சுவையுடன் கூடிய உரையாடல்களின் மூலமாகவுமே பயிற்றுவிக்கப்பட்டன.
உதாரணமாக, ஆலமர விழுதை ஏன் ‘விழுது’ என்று அழைக்கிறோமெனெ மாணாக்கர்களை கேட்க, அவர்கள் சிறிதும் தயங்காமல், ”அது மேலிருந்து கீழே விழுது, சார்” என ஒருமித்த குரலில் பதிலுரைத்தனர். ”சரி, கீழிருந்து மேல் நோக்கி சென்றால், அதனை எவ்வாறு அழைப்பீர்கள்?” என கேட்டதும், நீண்ட நேர நிசப்தத்திற்கு பிறகு, ஒரு மாணவி, “மேலிருந்து கீழே விழுந்தால், ‘விழுது’ சார்; கீழிருந்து மேலே போனால், ‘போகுது’ சார்” என சிரிக்காமலேயே விடையளித்தார். மற்றவர்களின் வயிறு தான் சிரித்தே புண்ணானது! அனைவரும் அமைதியாக இருக்கையில், துணிவுடன் பதிலுரைத்த அம்மாணவிக்கும், பிற மாணவர்களுக்கும், ‘விழுது’ மற்றும் ‘கொடி’யின் தன்மைகளை அழகாக விளக்கினர் பயிற்சியாளர்கள்.
விலங்குகளுடன் விளையாடினோம்!
காட்டுயிர்களின் மகத்துவத்தையும், அவைகளின் வாழ்வியல் முறையையும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம், கதைக் களம் ஒன்றை நடாத்தினர் திரு பூபதி ராஜ் மற்றும் திரு விக்னேஷ் செல்வம். குழந்தைகளையும் இணைத்து நடைப்பெற்ற இந்த நையாண்டி நாடகம், சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தது குறிப்பிடத்தக்கது.
காண்டா மிருகம் வருது…
கம்பியின் மீது விளையாடிய படியே கற்கவும் முடியும்!
பறவைகளுடன் பாடினோம்!
Angry Birds-யை ஒரு உண்மையான பறவை இனமாகவே நினைக்கும் நவீன யுக, ’tech savvy’ குழந்தைகளுக்கு, பறவைகளைப் பற்றிய முறையான அறிவை வழங்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
அன்றாடம் காணும் பறவைகளின் பெயர்களை மழலையர்களை கூற வைத்து, புகைப்படங்கள் மூலம் அவைகளில் சிலவற்றின் அங்க அடையாளங்களையும், இனப் பெருக்க காலங்கள் மற்றும் சுபாவங்களையும் எளிமையாக அறிமுகம் செய்து வைத்தார், திரு இரவீந்திரன். அதன் பின், பள்ளிக்கு அருகிலுள்ள ஒரு சதுப்பு நிலத்திற்கு அழைத்து சென்று, மாணவர்களை 18 வகை பறவைகளை இனம் கண்டறிய செய்த, அந்த 2 மணி நேர கள ஆய்வை விளக்க வார்த்தைகளே இல்லை.
கண்டு வந்த பறவைகளில், அன்றில் பறவையும் அடக்கம்! என்றோ இலக்கியங்களில் படித்தது, அன்று கண் முன்னால் வந்து ‘Hi…’ சொன்னது!
மனிதர் பறவைகளை மட்டுமல்ல, சிறார்களையும் நன்கே புரிந்து வைத்துள்ளார்! கண் முன்னால் இருக்கும் பகுதியை கடிகாரமாக எண்ணி, பறவைகள் இருக்கும் திசையை சுட்டிக்காட்டும் எளிய முறையை (clockwise positioning) புரியும் வண்ணம் விளக்கினார்.
தொலை நோக்கி (binocular) வழியாக பறவைகளை காண்பதற்கு, குழந்தைகள் காட்டிய ஆர்வத்தை பார்த்த போது, இனிமையான இந்த கள-ஆய்வு வழி கல்வி, தற்போதைய கல்வி முறையில் நான்கு சுவற்றிற்குள் முடக்கப்பட்டுள்ளதே என ஆதங்கப்பட்டேன்!
இனப் பெருக்க காலங்களில் ஆண் பறவைகள் வண்ணம் மாறுவது தொடர்பான தகவலை எளிதாக விளக்குவதற்கு, உண்ணிக் கொக்கும், மடையானும் (சிறிய நாரையினம்) மாறுபட்ட வண்ணத்தில் இருந்தது திரு இரவீந்திரன் அவர்களுக்கு வசதியாக இருந்தது. ஒரு பறவையின் பெயர் கூறி (வெண் புருவ வாலாட்டி), அது இருந்த திசையை மட்டும் சொல்லி, மாணவர்களை தேட வைத்தது, இக்கள ஆய்வின் சிறப்பம்சமாக அமைந்தது.
பறவைகளின் அறிமுகம்…
பறவைகளைக் காணும் கள ஆய்வில்…
மறுசுழற்சி செய்து மகிழ்ந்தோம்!
காகிதம் மற்றும் சிரட்டை போன்ற வீணாகும் பொருட்களில் இருந்து விளையாட்டு சாதனங்களை தயார் செய்யும் பயிற்சியை திரு ஆனந்த பெருமாள் வழங்கினார். சமீபத்தில் நிகழ்ந்த சென்னை புத்தக கண்காட்சியில் (01-13 ஜூன்), இயல்வாகை பதிப்பகத்தின் திடலை இவரது கைவினைப் பொருட்கள் அலங்கரித்தது குறிப்பிடத்தக்கது.
திரு. பூபதி மற்றும் திரு. விக்னேஷ் ஜோடி, எடைக்குப் போகும் செய்தித்தாள்களை பல வகை தொப்பிகளாக மாற்றும் பயிற்சியை அளித்து மாணவர்களை அசத்தினார்கள். நிகழ்ச்சியின் இறுதி வரை, தங்களின் மனங்களை கவர்ந்த இந்த தொப்பிகளை, சில குழந்தைகள் கழற்றாமல் இருந்தது வியப்பாகவே இல்லை.
இவ்வாறு காகிதத்தை மடித்து விளையாட்டுப் பொருட்களை செய்யும் இந்த கலைக்கு ஒரிகமி (Origami) என்று பெயர். இது ஜப்பானில் மிகவும் பிரபலம்!
சிரட்டை சிற்பியுடன் மறுசுழற்சி பற்றி…
காகித தொப்பி…
உணவோடு உறையாடினோம்!
மனித இனத்துக்கு சுமார் 95 சதவிகிதம் உணவு மண்ணில் இருந்தே வருவதால், (மண் வளத்தோடு) நல்லுணவு தொடர்பான தகவலும் இம்முகாமில் முக்கிய இடம் பிடித்தது.
WorldHealth.Net இணையத்தளத்திலிருந்து!
”நாம் உண்பதும் குடிப்பதும், (உடலின்) நோய்களுக்குத் தீனியாகவோ அல்லது அதனை எதிர்க்கும் சக்தியாகவோ இருக்கிறது”, என அமெரிக்காவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர், ஹீத்தர் மார்கன் கூறுகிறார். தாவரங்கள், பயிர்களில் இருந்து கிடைக்கும் உண்மையான உணவுக்கும், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனையாக்கப்படும், இக்கால பதப்படுத்தப்பட்ட உணவு-போன்ற-பொருட்களுக்கும் (food vs food-like-substances), நம்மில் பலருக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.
செல்வி அனுரித்தா விநாயகமூர்த்தி சிறுதானியங்களை (millets) குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்து, அவற்றின் பயன்களை விளக்கி, அவைகளை வைத்து (நெருப்பில்லாமல்) சுவை மிகுந்த உணவுப் பண்டங்களை உருவாக்கும் பயிற்சியை வழங்கினார். சிறுதானியங்கள் நிறைந்த சத்து மாவினால், சத்து உருண்டைகளை குழந்தைகளே ஆர்வமாய் தயார் செய்தனர்.
பசித்து சாப்பிடுவதே சாலச் சிறந்தது; உடல் உழைப்புடன் கூடிய விளையாட்டுக்கள், குழந்தைகளுக்கு பசியை உண்டாக்கும். குழுவாக பிரிக்கப்பட்டு, காய்கறிகளையும் பழங்களையும் நறுக்கி, குழந்தைகள் அதனை தட்டில் அடுக்கி வைத்து அழகு பார்த்தனர் (salad dressing). இந்த அழகுணர்ச்சியே, சாப்பிடும் ஆசையையும் தூண்டியது அவர்களுக்கு! விளையாட்டின் மூலம் உணவின் மேல் குழந்தைகளுக்கு ஒரு ஈர்ப்பை / பற்றை உருவாக்குவது எவ்வளவு முக்கியம் என்பதை, குழந்தைகளை சாப்பிட வைக்க கஷ்டப்படும் பெற்றோர்கள் நன்கு அறிய வேண்டும்.
மேலும் இந்நிகழ்வில், ஒட்டுப் பழங்கள் மற்றும் விதையில்லா பழங்கள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
மெய்யான கல்வியை கற்றோம்!
”பள்ளியில் மட்டுமே பயிலும் குழந்தை, ஒரு படிக்காத / கல்வியில்லாத குழந்தை,” என்பது தத்துவஞானி ஜார்ஜ் சந்தன்யாவின் கூற்று!
Collective Evolution இணையத்தளத்திலிருந்து!
ஒரு குடும்பமாய் ஆடிப் பாடி திரிந்த இந்த முகாம், நிச்சயம் குழந்தைகளுக்கு ஒரு இன்ப சுற்றுலாவாகவே இருந்தது. நிகழ்ச்சி முடிந்து வாகனத்தில் ஏறிச் செல்லும் குழந்தைகள், ”எங்க பள்ளிக்கும் வாங்க சார்…,” என பயிற்சியாளர்களை நோக்கி கூவியதே அதற்கு சான்றாகும். தாம் கற்கிறோம் என்பதை அறியாமலேயே, பல நல்ல விஷயங்களை தமக்குள் உள்வாங்கிக் கொண்டனர். கல்வி திணிக்கப்படும் போது தான், அது சுமையாக மாறுகிறது!
“பேராசிரியர் பெருமானார் (ஸல்)” எனும் தனது நூலில், நமதூரின் சகோதரி உம்மு நுமைரா சுட்டிக்காட்டியுள்ள நபிகளாரின் பல கற்பித்தல் முறைகளை, இம்முகாமில் நான் நேரடியாக உணர்ந்தேன்!
கல்வி முறையை மாற்றாவிட்டாலும், குறைந்தது கற்பித்தல் முறையையாவது மாற்ற பள்ளிகள் முன் வர வேண்டும்!
நண்பர்களை சம்பாதித்தோம்!
குழந்தைகள் அவரவர் புது நண்பர்களை கண்டறிந்தது போல், எனக்கும் பல நல்ல நட்புகள் இந்நிகழ்ச்சியினால் கிடைக்கலாயின. பயிற்சி பெறுபவராக இல்லாமல், ஒரு ஒருங்கிணைப்பாளராக பங்கேற்றதால், பயிற்சியாளர்களுடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு கிட்டியது.
அரிய வகை பறவை முட்டைகூடுகளை சேகரித்து வைத்துள்ள திரு இரவீந்திரன், 300 வகை நாட்டு மரக் கன்றுகளை தன்னகத்தில் இருப்பு வைத்துள்ள திரு Dr. பத்ரி நாராயணன், இயற்கை வழி விவசாயத்தின் மூலம் சிறுதானிய உற்பத்தியில் மதுரையை கலக்கும் திரு விக்னேஷ் மற்றும் திரு கார்த்திகேயன், நெல்லைக்காரரான ’சிரட்டை சிற்பி’ திரு ஆனந்த பெருமாள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் இலக்கியத்தில் சிறப்பறிவு பெற்ற ‘கதை சொல்லி’ திரு பூபதி ஆகியோரின் நட்பு வட்டத்திற்குள் நானும் இணைந்தது ஒரு பாக்கியமே!
நன்றியுரைப்பதிலும் முந்திக்கொண்டு, ’மேன்மக்கள் என்றும் மேன்மக்களே!’ என்பதை உணர்த்திய திரு இரவீந்திரன் அவர்களின் முகநூல் பதிவுகள்!
எனது கல்லூரி கால நண்பர்களான திரு இராஜசேகர் மற்றும் திரு ஜெகனாதன் ஆகியோரின் உதவிகளை மறக்க இயலாது! இம்முகாம் செவ்வனே நடைபெற பெரிதும் ஆதாரவாக இருந்த பள்ளியின் தாளாளர் திரு மதிவாணன் அவர்களின் ஆர்வத்தையும் பாராட்டியே ஆக வேண்டும்!
மாற்றத்தை நோக்கி!
”அந்த புதர் கிட்ட போகாதே! பத்து skin problems வரும்…,” என ஒரு சோப்பு விளம்பரத்தில் வருவது போல், குழந்தைகளை மரம் செடிகளின் அருகில் கூட செல்லக்கூடாதெனெ எச்சரிப்பவர்கள் நமதூரில் ஏராளம்! காயல்பட்டினத்தில் இன்றைய நிலையில், நிச்சயம் இவ்வாறான இயற்கை சூழல் முகாம்கள் பல நடத்தப்பட வேண்டும்.
”காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு” (Kayalpatnam Environmental Protection Association; சுருக்கமாக KEPA), நமக்கருகாமையில் இருக்கும் நச்சு ஆலைக்கு எதிராக சட்டரீதியாக போராடி வருகிறது. ஊர் மற்றும் அதன் மக்களின் நலனில் பெரிதும் அக்கறைக் கொண்ட அவ்வமைப்பின் ஒப்பற்ற செயல்பாடுகளை நாம் நன்கு அறிவோம்.
KEPA தனது நோக்கங்களையும், அமைப்பு விதிகளையும் மற்றும் செயல்பாடுகளையும் விரிவுபடுத்த வேண்டும். ஒரு முன்னனி அமைப்பாக இருந்து, ஊரின் பிற நல மன்றங்களின் உதவியுடன், இம்மாதிரியான விழிப்புணர்வு முகாம்களையும், சுற்றுச்சூழல் வகுப்புகளையும் மற்றும் இதர சூழல்-சார்ந்த செயல்திட்டங்களையும் KEPA அமல்படுத்த வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
பறவை ஆர்வலரிடம் 15 கேள்விகள்!
திரு இரவீந்திரன் அவர்களுடன் நடத்திய நீண்ட உரையாடல்களின் தாக்கத்தால், இவ்வாக்கத்தை இத்தோடு நிறுத்த மனமில்லாமல், அவ்வுரையாடல்களை ஒரு நேர்காணலாக இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் வழங்கவுள்ளேன்.
அதில், எனது எளிமையான கேள்விகளுக்கு, அவர் அளித்த அறிவுபூர்வமான பதில்களை படிக்கவும், அவர் படம் பிடித்த அழகிய பறவைகளை ரசிக்கவும் வாய்ப்பு கிடைக்கும் - இறைவன் நாடினால்...
முக்கிய மேற்கோள்கள்!
(1) மூடாக்கு (mulch)
https://ta.wikipedia.org/wiki/மூடாக்கு
(2) ஒரிகமி (Origami)
https://en.wikipedia.org/wiki/Origami
(3) சுமார் 95 சதவிகிதம் உணவு மண்ணில் இருந்தே!
http://www.fao.org/soils-2015/news/news-detail/en/c/277682/
மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ள அனைத்து இணையதள முகவரிகளும், இக்கட்டுரை பதிவிடப்பட்ட தேதியில் பயன்பாட்டில் இருந்தது. |