சுவாதி... தமிழ்நாட்டுப் பெற்றோர் ஒவ்வொருவரின் மனதிலும் சுவாதீனமாய் ஒட்டிக்கொண்டவர்...
குறிப்பாக பெண்களைப் பெற்ற தாய்மார்களின் தலைமகளாகத் தத்தெடுக்கப்பட்டவர்....
நுங்கம்பாக்கம், சூளைமேடு வாசிகளின் உள்ளத்திலிருந்து ஒரு நிமிடமும் அகல மறுத்தவர்.... "இறைவா...! இனியொரு கொடுமை இது போன்று வேறெந்தப் பெண்ணுக்கும் நிகழக்கூடாது..." என்று மதங்கள் கடந்த மனிதநேயப் பிரார்த்தனைக்குக் காரணமானவர்...
எதிர்வீட்டிலிருந்தும், பக்கத்து வீட்டிலிருந்தும் அலுவலகம் செல்லும் ஆயிரக்கணக்கான சென்னை முகங்களின் ஒரு அங்கம்... கல..கல பேச்சும், நுனி நாக்கு ஆங்கிலமும், பளிச் முகமும், நேர்த்தியான உடையமைப்புமாய் அப்பெண்களின் உலகமே வேறு.... அவர்களில் ஒருத்தியான சுவாதியின் கொடூர மரணம் மனதில் இனம்புரியாததொரு பயத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, பெண் குழந்தைகளை பெற்றவர்களின் மீது பல்வேறு கேள்விகளையும் வீசிச் சென்றிருக்கிறது...
குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மகள்களை அனுப்பி விட்டு, அவர்கள் திரும்பிவரும் வரையிலும் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருக்கும் தாய்மார்கள் தூக்கம் தொலைத்து பல நாட்களாகி விட்டன.
"ஆணுக்கிணையாய் பெண்களுமிங்கே அறிவிலோங்கியில் இவ்வையகம் தழைக்குமாம்" என்று பாரதி கொளுத்திப் போட்டத் திரி... பல்வேறு திசைகளில் வெடித்ததன் விளைவுதான்... பெண்களின் உயர் கல்வியும், வேலை வாய்ப்புகளும்...
கால மாற்றத்தின் அழுத்தம் நம் பெண் பிள்ளைகளின் மேற்படிப்பிற்கு நம்மை நிர்பந்திக்கிறது... இரு பாலார் பயிலும் கோ-எஜுகேஷன் கல்லூரிகளிலும், பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்காக பெண் பிள்ளைகளை அனுப்பும் நிலை இன்று நம்மிடம் பரவலாகி விட்டது. நமது பிள்ளைகள் கடிவாளமிடப்பட்ட குதிரைகளாக ஒரே நேர்க் கோட்டில் பயணித்தாலும், குறுக்கே விழுந்து குதறக் காத்திருக்கும் வல்லூறுகளாய் ஒரு கூட்டம் நமக்கு அருகிலேயே -இவந்தான் என நமக்கு அடையாளம் தெரியாமலேயே- வலை விரித்துக் காத்திருக்கும் என்பதற்கு இச்சம்பவம் வெளிச்சமாக்கப் பட்ட ஒரு சாட்சி... எந்த புற்றில் எந்தப் பாம்பு என்று யாருக்கும் தெரியாத நிலையில், ஏதோ எல்.கே.ஜி, யூ.கே.ஜி, வகுப்புகளுக்கு பிள்ளைகளை அனுப்பி விட்டு இருப்பதைப் போல, பருவ வயதுப் பெண் பிள்ளைகளை கல்லூரிக்கும், வேலைக்கும் அனுப்பி விட்டு சர்வ சாதாரணமாக இனிமேலும் இருந்து விட முடியாது என்பதைத்தான் இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
காலையில் மகளை ஸ்டேஷனில் விட்டுச் சென்ற அப்பா நினைத்திருப்பாரா...? அவர் அறியாத ஓர் இருண்ட உலகத்தில் மகள் இதுவரை பரிதவித்து வந்திருக்கிறாள் என்பதை...? வேலைக்குச் சென்று விட்டு மகள் மாலை பத்திரமாக வீடு திரும்புவாள் என்ற நம்பிக்கையோடுதானே நம் எல்லோரையும் போல அவரும் அன்று நம்பிக்கையோடு வீடு சென்றிருப்பார்??
ஆனால் தந்தையின் கரத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சுதந்திரமாக பறக்க அனுமதிக்கப் பட்ட அந்தக் கிளி.... தனது எல்லையைத் தாண்டும் முன்னரே குரல்வளை நெரித்துக் குதறப்பட்டதே...! அந்தச் சுதந்திரம் நம் பெண்களுக்கு பாதுகாப்பானதுதானா...? என்பதுதான் இன்று நம் முன்னுள்ள மிகப் பெரிய கேள்வி...
படிக்க ஆசைப்படுகிறார்கள் என்பதற்காக படிக்க வைக்கிறோம். பெண்கள் மட்டுமே பயிலும் கல்லூரியானாலும் சரி... இருபாலார் இணைந்துப் பயிலும் கல்லூரியானாலும் சரி... வீட்டை விட்டு வெளியில் சென்றதுமே அவர்களுக்குள் ஒரு சிறு இறக்கை முளைத்துதான் விடுகிறது...
கூட்டிற்குள் அவர்கள் திரும்பி வரும் வரை முழுக்க, முழுக்க இறைவனின் பாதுகாப்பில்தான் அவர்கள் என்பதால்... உரிமையோடு அவர்களை இறைவனிடம் ஒப்படைக்க தினம், தினம் நாம் மறந்து விட வேண்டாம்.
பதின் பருவம் என்பது ஒரு தனி உலகம்.... அவர்களும் அவர்களது நண்பர்களுமான அவ்வுலகில் பெற்றோர்களான நமக்கோ கொஞ்சமே கொஞ்சம்தான் அனுமதி... குறிப்பாக தந்தைகளுக்கு no entry...! அம்மாக்களின் தயவு அவர்களுக்கு அவ்வப்போது அவசியம் என்பதால்தான் அந்த அனுமதியும் கூட... அவர்களின் நட்...பூக்கள் மணம் வீசும் மலர்கள்தானா? இல்லை காகிதப் பூக்களா....? என்பதை ஓரக்கண்ணால் உற்று நோக்க வேண்டியது நம் கடமை... அதனை நாம் இதுவரை சரியாக செய்து வந்திருக்கிறோமா... என்பது இன்னொரு கேள்வி.
ஆண் நண்பர்கள் இருப்பது தவறில்லை... சகஜமான ஒன்றுதான் என்பது போன்றதொரு பொய்ப் பிம்பம் இன்று திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் நிலையில்... அந்த நட்புறவிலே மூன்றாவது நபராக ஷைத்தானும் இருக்கிறான் என்ற பேருண்மையை அழுத்தமாக பிள்ளைகளிடம் பதிவு செய்திருக்கிறோமா....!
ப்ளஸ்டூ வரை அவர்களை நமது கண்ட்ரோலில் வைத்து விட்டு ப்ள்ஸ்டூ ரிசல்ட் வந்தவுடனேயே அடித்துப் பிடித்து ஆண்ட்ராய்டு போன்களை வாங்கிப் பிள்ளைகளின் கையில் கொடுப்பதே இன்று அப்பாக்களின் முதல் கடமை என்றாகி விட்டது.... அதோடு சரி... இது நாள் வரை நம்மையேச் சுற்றிச் சுற்றி வந்த அவர்களை இனி நாம்தான் சுற்றி வர வேண்டும். வாட்ஸ் அப், ஃபேஸ் புக் ... என்று அலிபாபா குகை போல நீண்டு செல்லும் இந்த ஆண்ட்ராய்டு வெட்டி வைத்த குழிக்குள் அவர்கள் விழுந்து கிடக்கிறார்கள் என்று நாம் பின்னர் கிடந்து அங்கலாய்க்கிறோமே, நாமாகத்தானே அதிலே அவர்களைத் தள்ளி விட்டோம் என்பதை என்றாவது நாம் உணர்ந்ததுண்டா...?
முகநூல் மற்றும் பகிரி (வாட்ஸ்-அப்) வலைத் தளங்களில் தங்களது புகைப் படங்களை விதம் விதமாக பதிவேற்றம் செய்வதையும், பகிர்வதையும் தங்கள் முழு முதற் கடமையாகவே இளைய தலைமுறை கருதுகிறது... ஆனால் இதன் பின்னால் அணி வகுத்து நிற்கும் ஆபத்துகளைப் பற்றி அலட்சியம் காட்டுகின்றனர்.... எடுத்துச் சொன்னாலும் கேட்பதில்லை...
இதோ! சேலம் வினுப்பிரியாவின் பரிதாப முடிவு நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை மணி! பிள்ளைகளிடம்... குறிப்பாக பெண் பிள்ளைகளிடம் இதன் எதிர்வினைகளைப் பற்றித் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே இருப்பது நமது கடமை... அவர்கள் எரிச்சலடைந்தாலும் பரவாயில்லை... என்று நாம் நமது கடமையில் உறுதியாக இருக்கிறோமா..., அல்லது அவர்கள் வளர்ந்து விட்டார்கள் என்று ஒதுங்கி விடுகிறோமா...!
நன்றாகப் படிக்கிறோம் ... கேம்பஸில் வேலை கிடைத்தால் அனுப்புவீர்களா? என்பதே இன்று பெரும்பாலான மகள்களின் கேள்வியாக இருக்கிறது... படித்தால் வேலைக்குச் சென்று சம்பாதித்தால்தான் அழகு என்ற எழுதப்படாத விதியும், கல்வியை பொருளீட்டும் கருவியாக மட்டுமே கணக்குப் போடும் பொதுப் புத்தியும் தவறு என்பதை நமது பிள்ளைகளுக்கு உணர்த்தத் தவறி விட்டோமா...!
இஸ்லாம் பொருளீட்டும் பெரும்பொறுப்பை ஆண்களுக்கு மட்டுமே கடமையாக்கியுள்ளது... பெண்களின் மீது பொருளாதாரச் சுமைகளை ஒரு போதும் சுமத்தவில்லை என்பதை குர்ஆன், ஹதீஸ் ஒளியில் அவர்களிடம் தெளிவுபடுத்தியிருக்கிறோமா...?
பிள்ளைகள் ஆசைப்படுகிறார்களே என்பதற்காக வேலைக்கு அனுப்பும் கலாச்சாரமும் இன்று நம்மை மெல்ல... மெல்ல... ஆக்கிரமித்து வருகிறது... ஆனால் இதன் நீட்சியாக ஆபத்துக்கள் ஒவ்வொரு சம்பவங்களாக அவ்வப்போது அலாறமடித்தாலும்... அதன் தாக்கம் நம் மனதில் படிந்திருப்பது ஒரு சில காலங்கள் மட்டுமே...! அதன் பின்னால் நம்மை நமது வழக்கமான அலட்சியம் ஆட்கொண்டு விடுகிறது.
அதிலும் ஐ.டி. துறையின் கால நேரங்கள் நிச்சயமாய் பெண்களுக்கு பாதுகாப்பானதல்ல...! ஆணும் பெண்ணும் கலந்துப் பழக அதிக வாய்ப்புள்ள இத்துறைகளில் கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ யாருமே இல்லாத நிலையில், சின்னச் சிரிப்பும், பார்வையும் கூட விபரீதங்களை உருவாக்கி விடக்கூடும். சாதாரண பேச்சுக்களையும் கூட எல்லை மீறிக் கையாளத் துடிக்கும் சராசரி புத்திகளின் வலையில் எலிகளாகப் பெண்கள் மாட்டுவதை அவ்வப்பொழுது அறிந்தும் கூட இந்த ஆபத்தான பணியிடங்கள் பெண்களுக்கு அவசியம்தானா....? என்ற கேள்விக்கு நாம் விடை காணவில்லை.
பிள்ளைகள் ஆசைப்படுகிறார்கள் என்பதற்காக இதுபோன்ற பாதுகாப்பற்ற பணியிடங்களுக்கு தம் பெண் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களே...! தயவு செய்து உங்கள் நிலைப்பாடுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்துங்கள்!!
இளம் வகுப்புக்களில் பயிலும் போது, பள்ளியில் அன்றாடம் நடந்ததை அப்படியே நம்மிடம் ஒப்படைக்கும் நமது குழந்தைகள், வயதும், வகுப்புகளும் ஏற, ஏற
"இன்னைக்கு ஸ்கூல்ல என்ன நடந்திச்சு...?”
என்ற நமது கேள்விகளுக்கு,
" போம்மா...! எல்லாம் வழக்கம் போலத்தான்...”
என்ற சலிப்பையே பதிலாகத் தருகிறார்கள். ஆனால் மேல் வகுப்புகளிலும், கல்லூரிகளிலும், பணியிடங்களிலும் தங்கள் அனுபவங்களை, அசெளகரியங்களை, வெளியிடங்களில் தாங்கள் எதிர்கொள்ளும் அசாதாரண நிகழ்வுகளை நம்மிடம் பகிர்ந்துக் கொள்ளக்கூடிய பக்குவத்தை பிள்ளைகளுக்கு நாம் பழக்கியிருக்கிறோமா...? நமக்குத் தெரியாமல் ஒரு இருண்ட உலகம் நம் பிள்ளைகளின் வாழ்வில் இருந்து விடக் கூடாது என்பதில் நாம் முழு கவனமாக இருக்கிறோமா... என்பதெல்லாம் நம் மனதைக் குடைய வேண்டிய கேள்விகள்.
எதுவாக இருந்தாலும் பெற்றோர் மற்றும் உறவினர்களின் துணைக் கொண்டே தீர்க்க வேண்டும், நாமாக சமாளித்து விடலாம் என்ற அசட்டு தைரியத்தில், அதிரடிகளில் இறங்கி ஆபத்துகளை விலைக்கு வாங்கிடக் கூடாது என்பதுதான் இச்சம்பவம் நமக்கு உணர்த்தும் பாடம்.
அனைத்திற்கும் மேலாக எங்கு சென்றாலும், எந்தச் சூழ்நிலையிலும்... இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களும், பண்பாடுகளும் நம்மை விட்டும் அகலாமல் கவனமாய் இருக்க வேண்டியதன் அவசியத்தை பிள்ளைகளின் மனதில் ஆழப் பதிக்க வேண்டும். "நான் ஒரு இஸ்லாமியப் பெண் என்பது எனக்குப் பெருமையே..." என்னும் உணர்வை அவர்களின் உள்ளத்தில் வேறூன்றி விதைக்க வேண்டும்.
"எனது ஹிஜாப்... எனது உரிமை...! என்ற எண்ணம் அவர்களை வழி நடத்த வேண்டும். " என் குடும்பத்திற்கு நான் மிகவும் முக்கியமானவள்... என் பெற்றோரும், என் குடும்பமும், அவர்களது கெளரவமும், என் சமுதாயமும்தான் எனக்கு எதனை விடவும் முக்கியமானது...
எனவே, அவர்களுக்கு ஒரு சிறு கரும்புள்ளி ஏற்படும் விதத்திலே எனது நடவடிக்கைகள் எப்போதும் அமைந்து விடக்கூடாது" என்ற உள்ள உறுதியை சிறு வயது முதலே அவர்களது உள்ளத்தில் ஆழ விதைத்திருக்கிறோமா....? அவர்களது பிரச்சனைகளை நம்மிடம் மனம் விட்டு பேசுவதற்கான தளங்களை உருவாக்கி கொடுத்திருக்கிறோமா...? அவர்களின் வார்த்தைகளுக்கு காது கொடுத்து அரவணைத்திருக்கிறோமா...? என்பதையெல்லாம் நாம் சுய சோதனை செய்துக் கொள்ள வேண்டிய தருணமிது.
பாதிக்கப்பட்டது பெண் என்பதால்... இக்கட்டுரையை அந்தக் கோணத்தில் மட்டுமே நான் கையாண்டுள்ளேன். தவறு செய்யும் பெண்களும் கூட தப்பித் தவறி இருக்கத்தான் செய்கிறார்கள்... இல்லையென்று சொல்ல வரவில்லை... இருந்தாலும், முள்ளுக்கும் சேலைக்குமான போராட்டத்தில் கிழிபடுவதென்னவோ சேலைகள்தான் என்பதை மனதில் கொள்ளல் வேண்டும்.
இக்கட்டுரையை எழுதி முடிக்கப் பெறும் தருணத்தில்தான் கொலையாளி பிடிபட்டான் என்றும், அவனல்ல; வேறு ஒருவன்! என்பன போன்ற செய்திகள் கிடைத்தது...
மொத்தத்தில் இதுபோன்ற கொலைகளைச் செய்யும் கொலையாளிகள் "இவனெல்லாம் ஒரு ஆளா... ஃபூ... என்று நினைக்கத் தோன்றும் அப்பாவி கிராமத்து இளைஞனின் தோற்றத்தில்தான் இருக்கிறார்கள்... ஒரு வேளை சுவாதியும் அப்படித்தான் தப்புக் கணக்குப் போட்டாளோ.. என்னவோ...! யாரிடமும், எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே இந்த முகம் நமக்குக் கற்றுத் தரும் செய்தி...
அதே வேளையில்... முஸ்லிம்களின் மீது துவேஷத்தைக் கக்கியுள்ள காவிகளையும் இச்சம்பவம் நமக்கு அடையாளம் காட்டியுள்ளது. மரணத்திலும் மனிதநேயம் மறந்து மதச்சாயம் பூச நினைத்த 'ஒசந்த சாதிகள்' (என்று தங்களையே மார்த் தட்டிக் கொண்டவர்கள்) இப்போது முகத்தை எங்கே வைத்துக் கொள்ளப் போகிறார்களோ ... தெரியவில்லை.
சுப.வீ. அழகாகச் சொன்னார்...
“சுவாதியை அரிவாள் ஒருமுறைதான் கொன்றது... ஆனால் இந்தச் சாதிகள் அவளைப் பலமுறை கூறு போடுகிறது." என்றார். இதோ...! கொலையாளி பிடிப்பட்டப் பிறகும் இந்தச் சாதிச் சண்டைகள் தீர்வதாயில்லை...
சாதிகள் மட்டுமே அப்பெண்ணைக் கூறு போடவில்லை... மனித நாவுகளும்தான்... அரிவாளை விட கொடுவாள் நாவுகள்தான்...
அந்த நாவுகளின் கொடூரங்களிலிருந்து நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக. இனி இதுபோன்ற தலைப்புச் செய்திகளில் தன் பிள்ளைகளைப் பார்க்கும் கொடுமை எந்தப் பெற்றோருக்கும் வர வேண்டாம் என இறைவனிடம் இருகரமேந்தி இறைஞ்சுவோம். இன்ஷா அல்லாஹ். |