வாழ்க்கையில் தவறு செய்யாமல் வாழ வேண்டும் என்பது பொது நியதி? அனைவர்களும் ஏற்றுக் கொள்ளும் பிறருக்கு அறிவுரை கூறும் நல்ல செயலாகும். ஆனால் நடுநிலையோடு ஏற்றுக் கொண்டு நடப்பதும், நடைமுறைப்படுத்துவதும் மக்களும், மக்களாட்சியர்களும் அப்படிப்பட்டவர்கள் எப்படி நடக்கிறார்கள் என்பது தான் இந்நாட்டுக்கு முன் எழுந்து நிற்கும் பெரிய சவாலாகும்..!
ஆட்சியதிகாரத்திற்காக ஆலாய் பறக்கிறார்கள். கொள்கை, உண்மைகளைப் பற்றியெல்லாம் யாருக்கும் எந்தக் கவலையுமில்லை. எந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்று தேடி அலைகிறார்கள். அங்கே இடம் பிடித்து ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும். பணம் அடிக்கும் இயந்திரமாக ஐந்தாண்டும் இயங்க வேண்டும். இதுதான் இப்போது எல்லோர்களும் தூக்கிப்பிடிக்கும் ஒரே கொள்கையாக இருக்கிறது.
நம் நாட்டில் அரசியல் கட்சிகள், ஜாதி கட்சிகள், மத அமைப்புகள், இயக்கங்கள் இப்படி ஏதேனும் ஒன்றில் தன்னை இணைத்துக் கொண்டுதான் மக்கள் வாழ்கிறார்கள். அப்படி இணைத்த கட்டுப்பாட்டின் காரணமாக அவைகளின் தவறுகளை கண்மூடித்தனமாக ஆதரவு கொடுத்தே வளர்க்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர்களின் தலைமையின் கீழ் சிறைபடுத்திக் கொள்வது எந்த விதத்தில் சரி? அது போன்று உறுப்பினர்களை வழிநடத்திச் செல்வது எப்படி சரியாகும்? என்ற வினாக்களுக்கு இன்றும் விடையில்லாமலே ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் திருவிழா திருடும் விழாவாவே முடிகிறது... விடிகிறது...
ஒரு கட்சித்தலைவர் நினைத்தால் அக்கட்சியின் எவ்வளவு பெரிய நல்ல நேர்மையான, திறமையான நபரையும், செல்லாக்காசாக்க முடியும், கரிக்கட்டையையும் வைரமாகக் காட்டமுடியும். அதையும் அக்கட்சியினர் "குருடர் பார்க்கிறார், செவிடர் கேட்கிறார், நொண்டி ஓடுகிறார்" என்று கட்சி தலைவர் சொன்னால் ஏன்? எப்படி? என்று கேட்காமல் வாய்மூடி ஊமையாகவே ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் தவறு யார் இடம்? சொன்னவர் குற்றமா? கேட்டவர் குற்றமா?
அரசியல் என்றாலே எனக்கு பிடிக்காது. அவர்கள் மிக மோசமானவர்கள், சுயநலம் கொண்டவர்கள், எதையும் செய்ய தயங்காதவர்கள், கொள்கையில்லாதவர்கள், இரட்டை டம்ளர் கலாச்சாரம் ஒழிந்தாலும், இரட்டை நாக்கு கலாச்சாரத்திற்கு சொந்தக்காரர்கள், அவர்களால்தான் இந்நாடே முன்னேற்ற பாதைகள் தடைகற்களாக கொண்டிருக்கிறது. வெள்ளையனிடமிருந்து சுதந்திரம் பெற்றது போல இந்த அரசியல் அன்னியர்களிடமிருந்து இனியொரு சுதந்திரம் எப்போது கிடைக்கும் என்று புலம்புகிறவர்களும், அரசியலாரைக் கண்டாலே “மலத்தை” காண்பது போல ஒதுங்கிப்போகிற பொது மக்களும். தேர்தல் வந்துவிட்டால் எதேனும் ஒரு கட்சிக்கு வக்காலத்து பெற்ற வக்கீல்கள் போன்றே நடுரோட்டில், இணையதளத்தில் விவாத மேடையை நடத்தி அது சண்டையாக மாறுவதை நடைமுறையில் அருவருப்பாகவே காணமுடிகிறது.
பொதுவாக அரசு துறையில் அனைத்து மட்டத்திலும் ஊழல் மலிந்துக் கிடக்கிறது என்கிற மக்கள் தங்களின் சுயநலத்திற்கு அப்படி புகார் எழுப்புகிறார்கள். ஊழல்களுக்கு துணை நிற்பது யார்? மக்கள்தானே. அப்படியிருக்க அரசியலர், அதிகாரிகளின் மீது மட்டும் பழி சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்?
உதாரணமாக ஒருவர் புதியதாக கட்டிய வீட்டிற்கு தண்ணீர் இணைப்;பு வேண்டி மனு நகராட்சிக்கு கொடுத்தால் வரிசை பதிவு முறைப்படித்தான் அவரவர் வீட்டிற்கு இணைப்பு வரும். ஆனால்...! எனது வீட்டிற்கு உடனே இன்றே வேண்டும் என நினைக்கும்போதுதான் அங்கு ஊழல் ஊற்று ஆரம்பம் ஆகிறது. கவுன்சிலர், அதிகாரிகளிடம் எவ்வளவு பணம் வேண்டும் தருகிறேன் என்று கேட்பது யார்? மக்கள் தானே. பிறகு வாங்குபவர்களை மட்டுமே ஊழல் குற்றம் சுமத்துவது எப்படி சரியான வழிமுறையாகும். இன்று ஒருவர், நாளை ஒருவர் என வருடம் முழுவதும் ஊழலுக்கு அச்சாணியிட்டு வழியும், தன்னம்பிக்கையும் கொடுப்பது யார்? மக்கள் தானே, ஊழல் பெறுபவருக்கு தண்டனை கொடு என்பவர்கள். ஏன்? ஊழல் கொடுப்பவர்களுக்கு தண்டனை கொடு என முழக்கப்படுவதில்லை?
ஆட்சியாளர்கள் ஏழ்மையை ஒழிக்க விரும்புகிறார்களா? ஏழைகளை ஒழிக்க விரும்புகிறார்களா? ஏழைகளை மேலும் ஏழைகளாக்குவதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். பன்னாட்டு முதலாளிகளுக்கு விசுவாசமாக உழைப்பை மட்டும் நாம் கொடுக்கவில்லை. அவர்கள் மருத்துவத்துறையில் செய்ய விரும்பும் சோதனைகளுக்கும் நாம்தான் பலிகடா? இந்தியா குறைந்த கூலிக்கு அதிக உழைப்பைக் கொடுக்கும் நாடாக மட்டுமல்ல. பல நாடுகள் தங்களின் கழிவுகளைக் கொட்டுகிற குப்பைத் தொட்டியாகவும் நாம்தான் இருக்கிறோம். உள் நாட்டுக் குப்பைகளாலும் எப்படி இயற்கை ஆதார வளங்களான நிலம், நீர், காற்று மாசுபடுகிறது என்பதையும், அரசு இயந்திரங்கள் அலாதியான வேகத்துடனும் புறங்கை நக்கல்களுடனும் நிதிகளை வாங்கி "சுவிட்ஸ்" சில் சேர்த்துக் கொண்டு நீதிகளை சமகாலத்தில் ஒருதலை பட்சமாக கபடநாடகம் நடத்துகிறது. நாடு பின்னோக்கி முன்னேற காரணமே அவர்கள் கவனம் எடுத்த எடுப்பிலேயே ஆதாயம் (ஊழல்) எனும் கடைசி கிளையில் இருக்கிறது. சீக்கிரமே உண்மை என்னும் வேர் கருகிப்போகிறது.
அன்று காமராஜுக்கு மாற்றமாக அண்ணாவையும், கருணாநிதிக்கு மாற்றமாக எம்.ஜி.ஆரையும், இன்று தி.மு.க அதிமுகவுக்கு மாற்றமாக தே.மு.தி.க விஜய்காந்தையும் முன்னிறுத்தும் சக்திகள் 50 ஆண்டில் மீண்டும், மீண்டும் கோடம்பாக்கங்களே தமிழகத்தை ஆளும் சக்தியாக முன்மொழிய வேண்டுமா? திராவிட கட்சிகளின் வளர்ச்சியும்... தளர்ச்சியும் என்றே எண்ணத் தோன்றுகிறது.
தமிழகத்தின் 2016 தேர்தல் சூழலும் தற்போது விதிவிலக்கல்ல, அரை நூற்றாண்டு திராவிட அரசியல் உருவாக்கிய வெற்றிடம் தான் இது. இங்கே திராவிட அரசியல் என்று நாம் எல்லோருமே குறிப்பிடுவது பெரியாரின் கொள்கை கொண்ட அரசியலின் தொடர்ச்சியா? கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் இவர்களா அரசியலின் எச்சம். தனிமனித வழிபாட்டுக்கும், சந்தர்ப்பவாதத்துக்கும், படாடோபத்துக்கும் பெயர் கொண்ட அரசியல் எச்சம். இதைத்தான் இன்றைய தமிழக மக்கள் திராவிட அரசியல் என்று தூக்கி பிடிக்கும் அவல நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.
அரசு வருமானத்திற்காக கேடுகள் பல தரும் மதுவினை விற்பதும், இலவசங்களை வாரி வழங்குவதன் மூலம் “கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கியதற்கு ஒப்பாகும்.” 2011 –ல் திமுக அரசு விட்டுச் சென்ற கடன் சுமை ரூபாய் 1.15 லட்சம் கோடி. 2016 –ல் அதிமுக விட்டுச் செல்லும் சுமை 2.65 லட்சம் கோடி இவர்கள் இருவர்களும் எந்த நிர்வாகத்துக்கான சான்று பெற்றவர்கள்? எனவே தான்; அன்று ஊழல் குறைவு; ஆயுள் அதிகம் ஆட்சிகளுக்கு. இன்று ஊழல் அதிகம்; ஆயுள் குறைவு கட்சிகளுக்கு...
ஒரு நாடு நல்ல சட்டங்களால், ஆளப்பெறுவதை விட, நல்ல மனித நேயம் கொண்ட மனிதனால் ஆளப்பெறுதல் சிறப்பாகும் என்பவர் அரிஸ்டாட்டில். இந்தியாவிலேயே ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலில் கர்நாடகா. மூன்றாம் இடத்தில் ஆந்திரா இருப்பதாகவும், ஒரு மக்களவை தொகுதிக்கு 50 கோடியும், சட்டசபைக்கு 10 கோடியும் ஒரு வேட்பாளர் செலவு செய்வதாக ஓர் ஆய்வு கூறுகிறது. தேர்தல் ஆணையம் இவைகளை தெரிந்தே அனுமதிக்கிறதா?
வாக்களிப்பதற்கு அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அந்த வாக்காளருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிப்பதோடு நிறுத்தாமல், வாக்காளருக்கும் பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க மக்கள் பிரதிநித்துவ சட்டத்தில் இடம் உள்ளது. இதையும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கையாக வெளியிட வேண்டும். ஒரு வேட்பாளரின் வெற்றி செல்லாது என அதே தொகுதி வேட்பாளர் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தால், அதன் தீர்ப்பு அடுத்த ஐந்தாண்டுகள் கடந்த நிலையில் வெளிவருகிறது. இவைகளின் மீதும் தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு பெரும் அரசியல் இயக்கத்தின் மாற்று முழக்கம் என்பது பளிச்சென்று பட்டவர்தனமாக மக்களுக்கு தெரிய வேண்டும். அதனுடன் செயல் திட்டங்கள் மட்டுமல்ல, அதன் ஒவ்வொரு நம்பிக்கை வார்த்தையிலும் தெரிய வேண்டும். தேர்தல் களம் என்றால் அது முன்வைக்கும் உண்மை முழக்கங்கள், அது முன்னிறுத்தும் பிரதிநிதிகள், அதன் பிரச்சார பாணிகள் இப்படி அனைத்திலும் நேர்மையும், அதே நேரத்தில் புதுமையானதெளிவும் தெரிய வேண்டும். எது முடியும் எது சாத்தியக்கூர்கள் நிறைந்தவை என்பவைகள் நல்ல அறிந்து கூற வேண்டும்.
இந்திய அரசியலையும், இந்தியாவின் இன்றைய சமூகச் சூழலையும் எண்ணிப்பார்க்கும் போது யாருக்கும் இப்படியொரு கேள்வி அடிக்கடி எழக்கூடும். ஜாதி மத இனப்பாகுபாடுகள், படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன.
அரசியல் செல்வாக்கு இருந்தால் இந்நாட்டில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு இன்று உச்சகட்டமாக 17 வங்கிகளில் பல ஆயிரம் கோடிகளை கடனாக பெற்று ஏப்பம் விட்ட ஒரு 'மலை முழுங்கிய அதிபர்" சிபிஐ, போலீஸ் என்று எவருக்கும் தெரியாமல் தப்பி செல்ல, வங்கிகள் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் அவர் வெளிநாடு போவதை தடுக்க வேண்டும் என்று மனு செய்யப்படும் போது, அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டதாக அறிகிறோம் என்று மத்திய அரசு தரப்பில் வெட்கமில்லாமல் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கிறது.
மலை முழுங்கியவர் காலார நடந்து பஸ் ஏறி கடந்து சென்றாரா? சாவகசமாக BMW காரில் வந்து இந்திய விமானத்தில் பர்கர் சாப்பிட்டபடி தான் தப்பினார். இது எதுவுமே மத்திய அரசுக்கு தெரியாது என்றே “மிஸ்டர் பொதுஜனம்" நம்ப வேண்டும். இவைகளை நியாயப்படுத்தியும் அக்கட்சியினர்கள் பேசுவதுதான் வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. கேட்டால் சொல்கிறார்கள் இது என்ன எங்கள் ஆட்சியில் கொடுக்கப்பட்ட கடனா? அப்படியானால் யாக்கூப் மேனன் தூக்கில் இடப்பட்டது மற்றும் உங்கள் ஆட்சியில் நடந்த சம்பவமா? தவறு யார் செய்தாலும் அவர்கள் சட்டத்திற்கு முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து எப்போது இருந்ததில்லை எழுந்ததில்லை!
இது ஒரு புறமிருக்க தஞ்சையில் ஏழை விவசாயி பாலன் கைகளில் கட்டாயப்படுத்தி தனியார் நிறுவனம் டிராக்டர் ரூ 3.80 லட்சம் கடன் கொடுத்து, வட்டியும் முதலுமாக இதுவரை ரூ 4.11 லட்சம் கட்டி விட்டார். இன்னும் ஓரிரு தவணை பாக்கி, விவசாயம் பொய்த்து போனதால் அடுத்த தவணையில் கட்டுவதாக கூறியிருந்த நிலையில், பாலனிடம் பாக்கியை வசூலிக்க கூலிப்படையும், துணைக்கு உள்ளுர் காவல் துறையும் காட்டிய வீராவேசம் அனைவரையும் இதயம் கொதிக்க செய்தது.
தனது அரசு ஏழை எளிய விவசாயிகள் நலன் காக்கும் அரசாக இருக்கும் என்று பிரதமர் உறுதியளித்தது பாலன் போன்ற சிறு விவசாயிகள் சொற்ப கடனுக்கு இது போன்ற அவமானத்தை சந்திசிரிக்க சந்திக்கும் போது, மல்லையா மீதான கரிசனத்தை காட்டும் மத்திய மாநில அரசுகள் ஏழைகளின் அரசா? என்ற கேள்வி படித்தவர்கள் முதல் பாமராக்கள் வரை நடுநிலையில்லாத அரசாகவே பார்க்க முடிகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஊழலற்ற நிர்வாகம், வெளிப்படையான அரசு, லஞ்ச லாவண்யம் அற்ற நடுநிலையான இப்படி எண்ணற்ற கோஷங்களை நீட்டி முழங்கியது நினைவுக்கு வருகிறது. தற்போது தமிழகத்திலும் தேர்தல் அறிக்கை இவைகளையே நினைவு கூர்கிறது.
நடிகர்களையும், அரசியலாரையும் இன்று மனித நிலையில் இருந்து கடவுள் நிலைக்கு கொண்டு சென்றதில் தமிழகத்திற்கு அதிக பங்கு உண்டு. ஏனெனில் கோடம்பாக்கங்களே 1967 - முதல் தமிழகத்தை ஆளும் சக்தியாக வழுவடைந்துள்ளது என்பதற்கு இன்றும் மூன்றாவதாக முதல்வர் வேட்பாளர் என்ற அறிமுகத்துடன் வளம் வருவதே அதற்கு சாட்சியாக இருக்கிறது. இதுபோக நடிகர், நடிகைக்கு கோயில் கட்டியதில் தமிழகம் இந்தியாவில் முதலிடம் பெறுகிறது. இதுபோன்ற வரிசையில் காயல்பட்டணமும் சில நடைமுறைகளுக்கு விதிவிலக்கில்லை என்பதை இந்த தேர்தல் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
ஆம்...! நமதூர் அருகில் ஆலையின் அமிலக் கழிவு, நச்சு காற்று உயிருக்கு அச்சுறுத்தலாக காயல் மற்றும் சுற்று வட்டார ஊர்களின் வாழ்வாதாரம் நோயாக மாறி “கருவறையில் இருந்தே எதிர்ப்பு சக்தி குன்றி, குறைந்து பல நோய்களுக்கு தள்ளப்;படும் அவலம்.” பல ஆண்டாய் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இந்த ஆலைக்கு எதிராக நமது தொகுதி எம்.எல்.ஏ. எம்.பி. இதுவரை இது சம்மந்தமாக ஏதேனும் அறிக்கையோ, ஆலை இடமாற்ற முயற்ச்சியோ மேற்கொண்டார்களா? ஐந்தாண்டுக்கு ஒருமுறை வாக்கு வங்கிக்கு வாசல்படி வருபவர்களிடம் நாம் இந்த கோரிக்கைகளை எழுத்து பூர்வமாக உறுதிதர எப்போதாவது கட்டாயப்படுத்தினோமா? நீதி மன்றத்திற்கு சென்று நாம் தோல்வி கண்டதுதான் தீர்வாக இருக்கிறது.
ஆக! இந்த தேர்தலை ஒட்டுமொத்த மக்களும் புறக்கணிக்க வேண்டும். 'எதையுமே சிந்தித்து செய்தால் நமக்கு வெற்றி கிட்டும்; எதையுமே செய்து விட்டு சிந்தித்தால் நமக்கு அனுபவம் மட்டும் தான் கிடைக்கும்". சென்ற தேர்தலிலேயே இது போன்ற ஒரு நிலையை எடுத்திருந்தால் இதுவரை நல்ல தீர்வை நாம் சாதகமாக பெற்றிருக்கலாம். இது விஷயத்தில் காலம் கடந்தோவோமேயானால் வருங்கால சந்ததிகள் நம்மை மன்னிக்க முடியாத குற்றத்திற்கு நம்மை நாமே தள்ளிக் கொள்வோம். வரலாறு நம்மை அறிவாளிகள் இல்லை என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கும். இன்று ஊரில் அனேக நல்லுள்ளம் கொண்ட மக்கள் “பேதமில்லா வேதம் எங்கள் கட்சியும், தலைவரும்” என நீட்டிமுழங்குவது எந்த இனம் என்பது புரியவில்லை...
1925–ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் மற்றும் தி.க துவங்கப்;ட்டது. அவர்களின் தொலைநோக்கு பார்வையே நாட்டை ஆளும் சக்தியாக வேண்டும் என்பதுதான். அந்த இயக்கத்தில் இருந்து அரசியலில் குதித்தவர்கள் கொஞ்சம் - அரசியலில் கலக்காமல் இருந்து இயக்கங்கள் மூலம் ஆதரவு கொடுத்து நாடாளுபவர்களுக்கு பக்க பலமாகவும், முதுகெலும்பாகவும், தேவைப்படும்போது மூளையாகவும் செயல்படுகிறார்கள். நாம் எப்போது இது போன்ற நிலையை அடைவது! நான்... நான் என்று உதடு ஒற்றாத நிலை போலவே இருக்கிறோம். எப்போது நாம்... நாம் என்று ஒன்றிணைவது?
ஜப்பான் ஹிரேஸிமாவில் அமெரிக்க தன் வலுவான அணுகுண்டுகளை வீசி அந்த நகரையே சுடுகாடாய் மாற்றியது. மனிதர்கள் முதல் கட்டிடங்கள் ஒன்றும் மிஞ்சாமல் அழிந்துப் போயின. ஆனால்...! என்ன விந்தை பாருங்கள்/ அடுத்த நாளே அந்நாட்டு மக்கள் தங்களுக்குள்ளே ஓர் சபதத்தை ஏற்றுக் கொண்டார்கள். (அரசியலாரோ, அதிகாரிகளிலோ, அதிகார வர்க்கமோ, இதுபோன்ற சபதத்தை ஏற்றிருந்தால் தோல்விதான் கண்டிருப்பார்கள்) அமெரிக்காவை நாம் வெற்றிக் கொள்ள வேண்டும். எப்படி? போர் மூலமாகவா? இல்லை மாறாக பொருளாதாரத்தைக் கொண்டே என்ற எண்ணத்தின் வெளிப்பாடு உண்மையும், உறுதியும், உழைப்பும் கொண்ட தரமான எலக்ட்ரானிக்கல்ஸ் பொருள்கள் மூலம் இன்று உலக அரங்கை தங்கள் கைவசம் தக்கவைத்துக் கொண்டார்கள். மீண்டும் ஹிரோஸிமா நகரை அச்சு அசல் போல அதே இடத்தில் அமைத்துக் கொண்டார்கள் என்ற வரலாறு நமக்கு நல்ல பாடம் புகட்டவில்லையா?
அண்மையில் ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன் அமெரிக்காவின் “மார்க்கெட் வாட்ச்” என்ற பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார், அப்போது இந்தியாவில் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது தெரியுமா? “குருட்டு தேசத்தின் ஒற்றைக் கண் உடையவன் ராஜா போன்ற நிலையில் உள்ளது போலவே இருக்கிறது". இந்திய பொருளாதார சூழலுக்கு இதை ஒப்பிடலாம் என்பதும், மேலும் உலக வர்த்தக, பொருளாதார அரங்கில் இந்தியாவுக்கு பிரகாசமான எதிரகாலம் இருக்கிறது என்று அவ்வப்போது பேசப்படுகிறது ஆனால், உண்மை நிலை என்ன என்று பலரும் உணர வேண்டும். திறமையே இல்லாதவர்கள் மத்தியில் ஏதோ ஓரளவு திறமையுள்ளவன் மதிக்கப்படுவான்; ஆனால், பெரிதாக சாதிக்க அவன் க~;டப்படுவான், போராடிக் கொண்டே இருப்பான், இந்நிலைதான் இந்தியர்களின் நிலையாக உள்ளது என்றார். இவைகள் எல்லாம் நமது அரசியலரின் காதுகளில் கேட்பதாகயில்லை. பொய்யையே மூலதனமாக கொண்டு ஆட்சி அதிகாரத்தில் அமருபவர்கள் சிந்திக்க வேண்டிய தருணமாக, மக்களும் சேர்ந்தே தள்ளப்பட்டுள்ளார்கள்.
பகல் நேரம்…
எரியும் மெழுகுவர்த்தியை கையில் எடுத்துக் கொண்டு “நான் ஒரு மனிதனை தேடிக் கொண்டிருக்கிறேன்”. என்று கூறிக் கொண்டே “டயோஜினிஸ்” என்ற தத்துவ ஞானி சாலையில் நடந்துச் சென்றார்...
டயோஜினிஸ் -க்கு என்ன நேர்ந்தது, ஏன் பகலில் எரியும் மெழுகுவர்த்தியை ஏந்திச் சென்றார் என்று அவர் மீது நீங்கள் சந்தேகப்படுகின்றீர்களா? உண்மை அதுதான்... இன்றைக்கு நல்ல ஒரு மனிதரைத் தேடிக் கண்டு பிடிப்பது தான் அபூர்வமாக இருக்கிறது. மனித உருவில் மனிதர்கள் இருக்கிறார்கள். “மனிதம்” நிறைந்த மனிதர்களைப் பார்ப்பதுதான் அதிசயமாக இருக்கிறது. இதைத்தான் அவரது தேடல் நமக்கு உணர்த்துகின்றது. அப்படிப்பட்ட தேடலில் தான் இன்று இந்தியாவும், தமிழகமும் இரட்டை கிழவியாக தள்ளப்பட்டுள்ளது...!
அன்று ஆங்கிலேயரின் அடிமை தனத்தை திருத்தப்போவது யார்? என்ற வினாவுக்கு காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். திருந்தப்போவது யார்? என்ற குரலுக்கு மதம், ஜாதிகளை கடந்து இந்திய மக்கள் ஓரணியில் நின்று வெற்றி கண்டார்கள்.
இன்று இந்திய தலைநகரை ஊழல் அடிமையில் இருந்து திருத்தப்போவது யார்? என்ற வினாவுக்கு கெஜ்ரிவால் பொறுப்பேற்றுக் கொண்டார். திருந்தபோவது யார்;? என்ற தேடலில் மதம், ஜாதிகளை மறந்து டெல்லி மக்கள் ஓர் குடையின் கீழ் நின்று வெற்றிடமாக்கிவிட்டார்கள் ஊழல் பழைமைவாதிகளை...
அதுபோல இந்த 16.05.2016 தேர்தல் அல்லது 2021–ம் தேர்தல்கள் தமிழகத்தில் புதிய சுதந்திரத்தைப் பெற்றுத் தரும் காலம் மிக அருகில் இருப்பதை உணரமுடிகிறது. இளைஞர்கள் பலமான வளமான தமிழகத்தை மிகவிரைவில் உருவாக்கி அமைத்திட, அமர்ந்திட முடியும் என நம்புவோம்... |