ஏ.எல்.எஸ். மாமா பற்றி எழுத்தாளர் சாளை பஷீரின் கட்டுரையை இன்று (26-09-2016)தான் படித்தேன். அதில் வரலாற்றை பாதுகாக்க முனையாத மனதிலிருந்துதான் வரலாற்றை அழிக்கும் உந்துதலும் அனிச்சையாகவே உதிக்கும் போலும்.
தாயிம்பள்ளி ஜமாஅத்தார்கள், கருத்தம்பி மரைக்காயர் தெருவாசிகள், ஊர்வாசிகள் ஏ.எல்.எஸ். மாமாவின் களஞ்சியங்களை சற்றும் தாமதிக்காமல் உரிய இழப்பீட்டு தொகை கொடுத்து பொதுச் சொத்தாக கையகப்படுத்த வேண்டும். அப்படி கையகப்படுத்தப்பட்டவற்றை மின்னணு முறையில் பாதுகாக்க வேண்டும் என்ற வாசகங்கள் என்னெஞ்சைத் துளைப்பது போல் உணர்ந்ததால் பிறந்த கட்டுரை இது.
என் தந்தையை இழந்தபோது எனக்கேற்பட்ட கைசேதம் போல மாமா அவர்களின் பிரிவாலும் துக்கம் என் தொண்டையை அடைத்தது. கண்களிலிருந்து கண்ணீர் கரை புரண்டோடியது.
அதனிடையே தட்டச்சில் என் கைகள் எத்தனை வரிகளை தட்டுகிறதோ அதையே இப்போது ஆக்கிக் கொண்டிருக்கிறேன்.
ஒரு தியாகம் செய்தால்தான் ஒரு நன்மை செய்ய முடியும். தனது சொந்த வாழ்வில் பற்பல ஆசைகளை சுருக்கிக்கொண்டே மாமா போன்றவர்கள் பொதுவாழ்விற்காக தங்களை குர்பானி கொடுத்தார்கள்.
நாடறிந்த நல்லோர்களுக்கான நினைவுகளாக காயிதே மில்லத் அவர்களுக்கு ஒரு மணிமண்டபம் எனும் விதத்திலும்> அறிஞர் அண்ணா பெயரில் ஒரு லைப்ரரியாகவும் அரசாங்க செலவிலேயே கட்டிப் பாதுகாக்கப்படுகின்றன. அதிலிருந்து நாம் பெரும் பாடமென்ன?
காயல்கவி பிறைக்கொடியான் எஸ்.எம்.பி. மஹ்மூது ஹுசைன் மாமா, என் பாசத்திற்குரிய தந்தை எஸ்.கே.மாமா, இப்போது நம்மைப் பிரிந்துசென்ற ஏ.எல்.எஸ். மாமா போன்றோரின் ஆக்கங்களையும் புத்தகம் மற்றும் அரிய பல சேமிப்புகளையும் (MANUSCRIPTS) பாதுகhப்பதைத்தானே நமக்கு அவை கற்றுத்தருகின்றன?
செல்வச் சேமிப்பில் தம் காலங்களை கழித்து பல நல்ல காரியங்களுக்கு செலவிடுவோரின் முன்னுரிமைகளாக இவை மிளிராமல் போவதேனோ...? செல்வச் சேமிப்புகளைச் சுருக்கிக்கொண்டு, இருப்பதில் வாழ்ந்து தன்னிடம் இருந்த அறிவாற்றலை கொடுப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர்களல்லவா இவர்கள் யாவரும்...?
என் தந்தையல்லாத இருவரையும் காணுமிடத்து என் தந்தையுடன் கழித்த காலங்களையும் அதிலேற்பட்ட நல்ல பல சந்தோஷ நிகழ்வுகளையும் அவர்கள் என்னிடம் கூற மறந்ததே இல்லை. இதில் ஏ.எல்.எஸ். மாமா அவர்கள், “ஒங்க வாப்பாவோட மவுத்து எனக்கெல்லாம் பேரிழப்பு!” எனச் சொல்லாமல் என்னிடம் விடைபெற்றதே இல்லை...
வரலாற்றை சற்று மீட்டிப்பார்க்கிறேன். என் மூத்த சகோதரியின் திருமண காலம் அது. வீட்டில் வெள்ளை அடித்துக் கொண்டிருந்தார்கள். வீட்டு மொட்டை மாடிக்குச் செல்லும் அறையிலும் வழிநெடுக ஏணிப்படிகளிலும் எங்கள் வீட்டின் அலமாரியிலும் அலங்கரித்தவைகள் யாவும் என் பாசமிகு தந்தையின் அரிய பல நூல்களும் பேப்பர் கட்டிங்குகளும்தான்!
வெள்ளையடிக்க வீட்டை சுத்தம் செய்தபோது அவைகளில் சி(ப)ல எங்கள் வீட்டு கோட்டையையும் தாண்டி தெருவரை பரவிக்கிடந்தன. வெளியில் சென்றிருந்த தந்தை வந்து பார்த்ததும் அவர்கள் உள்ளம் என்னவானது என்பதை முகமும், பேச்சுக்களும் சொல்லிக்கொண்டிருந்தன. “என்னிடம் சொல்லியிருந்தால் நான் ஒதுக்கித் தந்திருப்பேனே...?” என மெல்லிய கோபத்தில் என்னருமைத் தாயாரிடம் கூறி, “தம்பி அதையெல்லாம் பொறுக்கு!” என என்னையும் கூறி தாமும் அவ்வேலையை செய்தார்கள்.
இன்னொரு சமையம் என் தங்கையின் திருமணத்தின்போது வீட்டையே காலி செய்யவேண்டியிருந்ததால், முடிந்த வரை சில புத்தகங்களை வேறொரு இடத்தில் பாதுகாத்து, மற்றவற்றை வீட்டின் தோட்டத்தில் உள்ள குடிலில் போட்டுவிட்டார்கள். அதை அப்படியே விடமனமின்றி பொறுக்கியபோது, அதிலிருந்தும் பல கிடைத்தற்கரிய நூல்கள் என் கரங்களில் சிக்கின. அருமை தந்தையின் அன்புக்கட்டளையை ஏற்று அவைகளை நான் புகுந்த இல்லத்தில் வைத்துப் பாதுகாத்து வருகிறேன். ஏனையவற்றை என் மச்சான் சூஃபி இப்ராஹீம் - மாமாவின் வஸிய்யத்தாக சுமந்து பாதுகாத்து வருகிறார். என் சகோதரிகளும் சிலவற்றை தங்களது குட்டி லைப்ரரியில் அமர வைத்துள்ளனர்.
தந்தை வழியில் நானும் அவ்வப்போது புதுப்புது படைப்புகளை வீட்டிற்கு வாங்கிக் கொண்டு வந்து வைப்பதில் கடந்த சில வருடங்கள் முன்பு வரை வீரியத்துடன் ஈடுபட்டிருந்தேன். இப்போது அவ்வாசை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. காரணம் “மனிதர்களுக்கு பயன்தரவேண்டிய நூல்கள் கரையான்களுக்கல்லவா உணவாகிக் கொண்டிருக்கின்றன...?” என்ற கவலையால்தான்!
நம்மால் பாதுகாக்க முடியாதவற்றை பராமரிக்க நூலகங்கள் இருந்துவந்தாலும் புத்தக வாசிப்பைத் தூண்டும் ஆர்வமும் வாசிப்புகளின் மீதான ஆர்வமும் மக்களிடம் குறைந்து போனதை அடுத்து அவற்றைப் பாதுகாக்கும் எண்ணமும் அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிட்டன.
என் அலுவலகப் பணிக்காக நான் செல்லுமிடமெல்லாம் என் குடும்பத்துடன் ஒரு லைப்ரரியும் தனது எதிர்காலத்தை நினைத்து வருந்தியவாறே என்னோடு சேர்ந்து பயணித்து வருகிறது.
ஏ.எல்.எஸ். மாமாவைப் பற்றி ஏதோ கூற ஆரம்பித்து என்னைப் பற்றி தன் புராணம் பாடுவதாக தயவுசெய்து யாரும் எண்ணிக் கொள்ளாதீர்கள். நூல்களையும், பல அரிய பிரதிகளையும் அடுத்த தலைமுறையினரிடம் முறையாகவும், பொறுப்பாகவும் கையொப்படைப்பது யார் என்ற என் போன்றோரின் புலம்பல்களுக்கு விடைதேடும் வேண்டுதல்களாக எடுத்துக்கொள்ளுங்கள்.
ஜோக்குகள் பலவகையுண்டு. கத்தி ஜோக், கடி ஜோக், மொக்கை ஜோக் இப்படி. ஆனால் வேறு சில ஜோக்குகளும் இருக்கவே செய்கின்றன. சரியான நேரத்தில் அனைவரையும் கொள்ளென சிரிக்கவும் வைத்து அதன் கருத்துக்களை காலங்காலமாக கேட்பவர் மனதில் தங்கவிடுவது. இது மாதிரியான நகைச்சுவைகள் எல்லோராலும் செய்யமுடியாதவை.
என் தந்தை எஸ்.கே. அவர்கள் இந்த ரகம்தான். அவர்களின் நகைச்சுவைகள் எஸ்.கே.மாமா ஜோக்ஸ் என நூலாக ஆக்கிடுமளவு நிறைய ஜோக்குகளை அவர்களோடு ஆரம்ப காலம் முதலே நெருங்கிப்பழகி வந்த தீவுத்தெரு டீ.எஸ்.ஏ.இஸ்மாஈல் காக்கா எழுத்தாக்கிப் பாதுகாத்து வைத்துள்ளார்கள். யார் இதைச்செய்வார்கள்...?
இப்படி சிந்திக்க வைக்கும் சிரிப்புகளை பட்டென உரைக்கும் பின்னணியில் அவர்களின் இடைவிடாத புத்தகவாசிப்பும் ஜோக்ஸ்கள் குறித்த சிறு நூல்களையும் கூட வாங்கிப் படித்ததும் சிரிக்க வைத்து, சிந்திக்க வைக்கும் திறமைகளை சாத்தியப்படுத்திற்று எனலாம். Khuswantsingh Jokes என்ற ஒரு நூல் நீண்ட நாட்களாக என் தந்தையின் புத்தக அலமாரியை அலங்கரித்து வந்ததையும் நானறிவேன்.
வரலாற்றைப் படித்தால்தான் வரலாற்றைப் படைக்க முடியும் என்பார்கள். குர்ஆன் பற்பல வரலாறுகளை நமக்குச் சொல்வதன் மூலம் நம் வாழ்வின் வெற்றி தோல்விகளுக்கான அடிப்படைகளையும், காரணங்களையும் சொல்லித்தரும். காலத்தின் சங்கிலித்தொடரே வரலாறுகள் எனலாம்.
ஒன்பது வருடங்களுக்கு முன்னாள் அறிமுகம் செய்யப்பட ஐபோன் இன்றும் அதேபோல சந்தைகளில் மங்காப்புகழுடன் இருந்து வருவதற்கான காரணமே - அதனுள் உள்ள மென்பொருள் காலத்துக்கேற்றார் போல மேம்படுத்தப்படுவதனாலேயே ஆகும். அவ்வாறு செய்யாத கைபேசிகள் பல இன்று நம் நினைவைவிட்டும் மறைந்து போனதல்லவா...?
மீண்டும் நண்பர் சாளை பஷீரின் கருத்தாக இக்கட்டுரை மேலிட்ட அதே கருத்துக்களையே என் முடிவுரையாக்கி விடைபெறுகிறேன்.
வரலாற்றை பாதுகாக்க முனையாத மனதிலிருந்துதான் வரலாற்றை அழிக்கும் உந்துதலும் அனிச்சையாகவே உதிக்கும் போலும்.
தாயிம்பள்ளி ஜமாஅத்தார்கள், கருத்தம்பி மரைக்காயர் தெருவாசிகள், ஊர்வாசிகள் ஏ.எல்.எஸ்.. மாமாவின் களஞ்சியங்களை சற்றும் தாமதிக்காமல் உரிய இழப்பீட்டுத் தொகை கொடுத்து பொதுச் சொத்தாகக் கையகப்படுத்த வேண்டும். அப்படிக் கையகப்படுத்தப்பட்டவற்றை மின்னணு முறையில் பாதுகாக்க வேண்டும். |