அந்தி சாயும் சமயம்!
மலையெனக் குவிந்த பணிகளை மளமளவென பூர்த்தி செய்ததால் உண்டான களைப்பு. அசுர களைப்பையும் பொருட்படுத்தாது, ’அதிவேகமாக வீடு திரும்புதல்’ எனும் - நடுவர்களே இல்லாத அன்றாட போட்டியில், ஆர்வமாய் பங்கேற்கும் அவசர வாழ்க்கை மாந்தர்.
இயந்திரங்களாகவே மாறிப் போன இம்மானுடர்களின் இருதயங்களிலும், ஈரம் இன்னும் மிச்சம் இருப்பது ஆறுதலான ஒன்றே!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ‘ஃபாளன் ஃபுரூட் (Fallen Fruit)’ எனும் தன்னார்வ அமைப்பு, பொது இடங்களில் பழ மரங்களை நட்டு வருகிறது. தேவையோடு இருக்கும் எவரும், அம்மரங்களில் இருந்து பழங்களைப் பறித்துண்டு பசியைப் போக்கலாம். லாஸ் ஏஞ்சல்ஸ் மட்டுமல்லாது, சியாட்டில், பாஸ்டன் மற்றும் இண்டியானாபொலிஸ் போன்ற பிற அமெரிக்க நகரங்களிலும், பொது மக்களுக்காக பழ மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
ஜப்பானிய இரயில் நிலையங்களிலோ, காலியாக இருக்கும் மேற்கூரைகளில் அன்றாட தேவையான காய்கறிகளை தரும் செடி-கொடிகளை வளர்க்கின்றனர். அலுவல் முடிந்து வீடு திரும்புவோர், இரவு வேளை உணவிற்கான காய்கறிகளை இலவசமாக எடுத்துச் செல்கின்றனர்.
இவ்வாறு மக்கள் நலனுக்காக பொது இடங்களில் மரம்/செடிகளை வளர்க்கும் முறையை ”சமுதாயத் தோட்டம்” என்று அழைப்பர். லண்டன், பெர்லின் மற்றும் லியோன் போன்ற ஐரோப்பிய நகரங்களிலும் இவை பிரபலம் அடைந்துள்ளது!
பெருநகரங்களின் வானுயர கட்டிடங்களை ஒட்டியபடி, தங்களுக்கும் குடியுரிமை கிடைத்த மகிழ்வில் திளைக்கும் மரங்களும் செடிகளும், வலியோர்-எளியோர் என யாதொரு பாகுபாடும் இன்றி, அனைவருக்கும் பழங்களையும் காய்கறிகளையும் அள்ளிக் கொடுக்கின்றன. விளம்பரமே-இல்லாத இந்த கொடைப் பண்பு, மரங்களுக்கு மட்டுமே உரித்தான சிறப்பான இயல்பல்லவா?!!
நிழல், சுத்தமான காற்று, காய்-கனிகள், பல்லுயிர்களுக்கு புகலிடம், மழை பெய்தல் மற்றும் மண் அரிப்பைக் கட்டுப்படுத்துதல் போன்ற பல்வேறு பலன்களை மரங்கள் வழங்கினாலும், அவற்றை நடுவதிலும், பாதுகாப்பதிலும் நாம் காட்டும் ஆர்வமும், அக்கறையும் மிகவும் சொற்பமானதாகவே இருக்கிறது!
மரங்களின் மகத்துவத்தை மார்க்க ரீதியாக உணர்ந்தால், மாற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என்ற சிறு நம்பிக்கையை மூலாதரமாகக் கொண்டு; இஸ்லாமிய வழிகாட்டுதல்களின்படி சூழலியலை பாதுகாத்தலின் மூலம், சமூகவுடைமை கோட்பாட்டின் நேரடி வெளிப்பாடான மனிதத் தன்மையை உணரவும் மற்றும் ’மார்க்கம்-மரம்-மனிதம்’ ஆகிய மூன்றிற்கும் உள்ள தொடர்பை அறியவும் விழையும் ஓர் உள் (தன்) தேடலாகவே இந்த ”ஊருக்குள்ளே ஒரு காடு” அமைகிறது!
மார்க்கம் கூறும் மரங்களின் மகத்துவம்!
“நல்ல வார்த்தை (கலிமா தய்யிபாவு)க்கு அல்லாஹ் எவ்வாறு உவமை கூறுகின்றான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் பூமியில் ஆழப்பதிந்திருக்கின்றது; அதன் கிளைகள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன.” (سورة ابراهيم 14:24)
“شجر” (ஷஜர்; மரம்) மற்றும் “نبات” (நபாத்; செடி) என்று தலா 26 முறைகள் (அவைகளிலிருந்தும் வந்த இதர கிளைச் சொற்களையும் சேர்த்து) மரம்/செடிகளைப் பற்றி அல்-குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு சொற்களை தவிர, “نجم” (னஜ்மு) என்னும் சொல்லும் செடி/கொடிகளை குறிக்கும் வகையில் அருள்மறையில் கூறப்பட்டுள்ளது – அதன் இன்னொரு (முதன்மையான) பொருள், ‘நட்சத்திரம்’ ஆகும்.
நம் ஆதி பிதா ஆதம் (அலை) அவர்கள் பூமியில் இறங்குவதற்கு முன்பு முதல், நாம் அனைவரும் மறுமை நாளில் சுவனபுரி செல்லும் வரையிலும் (இறைவன் நல்லருள் புரிவானாக, ஆமீன்!) – சென்ற பின்பும், மனிதர்களின் ஈருலக வாழ்க்கைகளோடு பின்னிப்பிணைந்து இருப்பது ’மரங்கள்’.
மேற்கோள்கள்: (1) سورة الأعراف 7:19-25; (2) الصافات سورة 37:142-146; (3) البخاري صحيح 3365; V4, B55, H584; (4) القصص سورة 28:30; (5) مريم سورة 19:25-26
இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றில், மரங்களைப் பற்றிய குறிப்புகள் எண்ணில் அடங்காதவை! அதில் ஒரு சிலவற்றை உதாரணமாக இங்கே காணலாம்.
மஸ்ஜிதுன் நபவியின் தூணாக இருந்த ஒரு பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியின் மீது சாய்ந்தபடி, நபியவர்கள் குத்பா பிரசங்கம் நிகழ்த்துவார்கள். பின்பு, புதிதாக அமைக்கப்பட்ட மின்பருக்கு அவர்கள் மாறிய பொழுது, அம்மரம் குழந்தையைப் போல அழுததும், அதனை நபி (ஸல்) அவர்கள் வருடிக்கொடுத்ததும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது (البخاري صحيح 3584; V4, B56, H784).
மிஃராஜ் (المعراج) என்னும் புனிதமான விண்ணுலகப் பயணத்தின் போது, நபிகளார் கண்ட (வானெல்லையிலுள்ள) ‘ஸித்ரத் அல்-முன்தஹா (المنتهى سدرة)’ எனும் கடைக்கோடியிலுள்ள இலந்தை மரத்தைப் பற்றி திருமறையில் குறிப்பிடப்பட்டுள்ளது (النجم سورة 53:10-18).
”ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு, அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன்கள் அவருக்கு கிடைக்காமல் இருப்பதில்லை” என்னும் நபிமொழியானது, மரம் நடுதல் ஒரு ’ஸதகதுன் ஜாரியா’வாக (جارية صدقة; நிலையான தர்மம்) அமையும் என்பதை சுட்டிக்காட்டுகிறது (البخاري صحيح 2320; V3, B39, H513).
மரங்களின் சேவை மறுமையிலும் தேவை! சுவர்க்கத்திலுள்ள ‘தூபா (طوبى)’ எனும் ஒரு மிக பெரிய மரத்தை குறிப்பிடும் போது, பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “அதன் நிழலில் (மிக வேகமாக) பயணிப்பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்த படி) சென்றாலும், அவரால் அதை கடக்க முடியாது” (البخاري صحيح 3251; V4, B54, H474).
மரங்கள் சுவர்க்கத்தில் மட்டுமல்ல, நரகத்திலும் இருக்கிறது! நரகத்தின் அடித் தளத்திலிருந்து வெளி வரும் (ஷைத்தானின் தலையை போன்று தோற்றமுடைய பாளைகளை/கிளைகளை கொண்ட) ‘ஜக்கூம் (زقوم)’ மரத்திலிருந்தே, நரகவாசிகள் தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள் என திருக்குர்ஆன் எச்சரிக்கிறது (الصافات سورة 37:62-68). இறைவன் நம் அனைவரையும் இதிலிருந்து பாதுகாப்பானாக, ஆமீன்!
கீழ் வரும் இறைவசனங்களை நன்கறிந்த பின்பும், மரம் என்னும் இன்னொரு ”இறைவிசுவாசிக்கு” தீங்கு விளைவிக்க, நாம் ஒருபோதும் அஞ்சுவதில்லை!
”வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் அனைத்துமே அல்லாஹ்வைப் புகழ்ந்து துதி செய்கின்றன.” (الحديد سورة 57:1; الحشر سورة 59:1; الصف سورة 61:1)
”செடிகள், (கொடிகள்,) மரங்கள் (ஆகிய அனைத்தும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டுச்) சிரம் பணிகின்றன.” (الرحمن سورة 55:6)
மரங்களுக்கு ஏன் இந்த தண்டனை?
காயல்பட்டினத்தின் பல தெருக்களில் மரங்களே கிடையாது! இருக்கும் ஒரு சில தெருக்களிலோ, சிறியது பெரியது என எல்லா மரங்களிலும் விளம்பரப் பலகைகள் ஆணி அடித்து மாட்டப்பட்டுள்ளன. இதில் பள்ளிவாசல் சுற்றுச் சுவற்றிற்குள் இருக்கும் மரங்களும் விதிவிலக்கல்ல!
படங்கள்: ச.ஷா.முஹம்மது நூஹூ மற்றும் அ.ர.ஹபீப் இப்றாஹீம்
”மரத்தின் வெளி பட்டையை தாண்டி உட்புகும் வகையில் ஆணி அடித்தல் கூடாது,” என அமெரிக்காவின் ’டெக்சாஸ் வன சேவை’ அதிகாரி மிக்கி மெர்ரிட் (Mickey Merritt) அறிவுறுத்துகிறார்.
தண்டிலும், கிளைகளிலும் அடிக்கப்படும் ஆணியானது, செல்கள் பிரிவதற்கும் மரத்தின் சுற்றளவு பெருகுவதற்கும் முக்கிய பங்காற்றும் வளர்படையை (cambium) பாழ்படுத்துவதோடு, பயிருணவு ஊட்டச் சத்துக்களை எடுத்து செல்லும் பட்டையம் (phloem) மற்றும் மரவியம் (xylem) போன்ற முக்கிய செல்களையும் பாதிக்கிறது.
அது மட்டுமன்றி, மரத்தினை எளிதாக புஞ்சை (fungus) மற்றும் பூச்சிகள் தாக்குவதற்கும் வழி வகை செய்கிறது. மரங்களின் வகை, நலம் மற்றும் அளவை பொருத்து, ஆணி அடித்தல் ஒரு மரத்தின் உயிரைக் கொல்லும் தன்மைக் கொண்டதாக உள்ளது.
மரங்களுக்கு எதிரான இந்த வன்மத்தை தடுத்திட, நாம் ஆவண செய்திடல் வேண்டாவோ?
திணைக்கு உகந்த பனை!
ஆணிகளை அகற்றுவதோடு நமது பணிகள் நிறைவுற்று விடுமா என்ன?
மரங்கள் குறைவாக இருக்கும் (அல்லது முற்றிலும் இல்லாத) தெருக்களிலும் மற்றும் காலியாக உள்ள ஏனைய பொது இடங்களிலும் மரங்களை நட வேண்டும். நிழல் தந்து உதவும் வேப்ப மரங்களுடன், நெய்தல் திணையான நமதூரின் நிலப்பரப்பிற்கு ஏற்றாற்போல் பலவகை திணை-சார்ந்த நாட்டு / பாரம்பரிய மரங்களை நட்டு, ஊருக்குள் காடு செய்திடல் வேண்டும்.
திணை-சார்ந்த நாட்டு மரங்களில், பனை மரங்கள் நம் மண்ணிற்கு மிகவும் உகந்தது. ஐம்பது ஆண்டுகளுக்குள் 30 கோடியிலிருந்து 5 கோடியாக குறைந்துள்ளது நம் ‘மாநில மரம்’. நமதூரை சுற்றியுள்ள பகுதிகளில் இம்மரங்கள் வெகுவாக குறைந்து வருவதை கண்கூடாக காணலாம்.
பனைகள் அழிக்கபடுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதன் விளைவு ஒன்றாக தான் இருக்கும் – மனித உடல் நலக் கேடு. எந்த ஊரிலும் இல்லாத வகையில், பதநீரிலே பலவகை பதார்த்தங்களை தயாரிக்கும் நமக்கு, பனைப் பொருட்களின் பயன்களா தெரியாது?
ஊரைச் சுற்றிலும் சரியான இடங்களை தேர்வு செய்து, பனைகளை அதிகம் வளர செய்து பாதுகாக்க வேண்டும். அறுபது ஆண்டுகளுக்கு மேல் வாழும் பனை மரம், இருபது ஆண்டுகளுக்கு பின்தான் பூ பூக்கும் என கேள்வியுற்றேன். அடுத்த வினாடி கூட நமக்கு சொந்தமில்லா இவ்வாழ்க்கையில், அடுத்த தலைமுறைகளுக்கு தேவையானவற்றை நாம் ஏன் தடைசெய்ய வேண்டும்?
”இப்பூவுலகு நம் முன்னோர்களால் மரபுரிமையாக நமக்கு கொடுக்கப்பட்டது அல்ல; மாறாக, நமது சந்ததியரிடம் இருந்து கடனாக பெறப்பட்டது,” என்னும் அமெரிக்க பழங்குடிகளின் இந்த பழமொழியில்தான் எவ்வளவு ஆழமான கருத்துகள்?!!
இத்தகைய ’தொலைநோக்கு சிந்தனை’ நமக்கும் இருத்தல் அவசியம். இயற்கையை நோக்கி திரும்பும் அறிவியல்-சார்ந்த இச்சமூகம், (இறைவன் நாடினால்) பிற்காலத்தில் பல பனையேறிகளை உருவாக்கலாம் அல்லது பனைக்காண விஷேச இயந்திரங்களை பயன்படுத்தலாம்!
மனிதம் வளர்ப்போம்!
இஸ்லாமிய வரலாற்றில், விவசாயத்தைப் பற்றிய குறிப்புகளை நிறையவே காணலாம். புஹாரி கிரந்தத்தில் (صحيح البخاري) உழவாண்மைக்கெனெ ஒரு தனி பாகம் (كتاب المزارعة) இருப்பதே இதற்கு சிறந்த சான்றாகும்.
உமறு இப்னு அல்-கத்தாப் (ரலி) அவர்கள் பஸ்ரா நகரில் விவசாய பாசனத்திற்காக கால்வாய்களை உருவாக்கியதையும், தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற செயல் திட்டங்களை வகுத்ததையும் இன்றளவும் வரலாற்று வல்லுநர்கள் வியந்து புகழ்வர்!
முதலாளித்துவ நாடுகளில் இருக்கும் பெருநகரங்களின் சுற்றம்-பேணாத மக்களிடமே சமுதாயத் தோட்டங்கள் சாத்தியப்படும்போது, ’மஹல்லா’ என்னும் சிறு வட்டார பிரிவுகளை கொண்டு, ’ஜமாஅத்’ என்னும் ஒருங்கிணைந்த அமைப்புகளை சார்ந்து, கொடைப் பண்பில் சிறந்து விளங்கி சகோதரத்துவத்தை போற்றும் மக்களைக் கொண்ட சிறிய ஊரான காயலில், இவை அமைவது நிச்சயம் இலகுவான காரியமே!
நமதூரின் தேர்ந்தெடுக்கப்பட்ட வீதிகளின் ஓரங்களிலும் பொது இடங்களிலும் இத்தகைய தோட்டங்களை உருவாக்கும் பொழுது, நமக்கென சில பிரச்சனைகள் எழத்தான் செய்யும்; உடன் தீர்வுகளும் பின் தொடர்ந்து வந்து, நம் எண்ணங்களை செம்மைப்படுத்தி, செயல்களை சீராக்கி, மனிதத் தன்மையை உணர்ந்தறிய உதவும்.
ஜப்பானை சார்ந்த இயற்கை வழி உழவாண்மையின் முன்னோடியான மசானோபு ஃபுகோகா (Masanobu Fukuoka), யாதொரு அறம் சார்ந்த புரிதலும் இல்லாமலா இவ்வாறு கூறினார்?
”வேளாண்மையின் இறுதி இலட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல, மனித இனத்தை வளர்த்து முழுமை அடையச் செய்வதுதான்!!!”
பப்பாளி, சப்போட்டா, வாழை, மாதுளை, சீதாப்பழம், நாவல், நெல்லிக்கனி, எலுமிச்சை மற்றும் கொய்யா போன்ற பழ மரங்களும்; தக்காளி, வெண்டைக்காய், அவரை, மிளகு, கீரை வகைகள் மற்றும் ரம்பை போன்ற காய்கறி செடிகளும் நமதூர் எல்லைக்குள் இருக்கும் ஒரு சில வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுவதால், அவை அனைத்தும் நம் சூழலுக்கு உகந்ததது என்றே கருதலாம். பழ மரங்கள், காய்கறி செடிகளுடன் மருந்தாக பயன்படும் (திணைக்கு ஒத்த) மூலிகை செடிகளையும் வளர்ப்பது சாலச் சிறந்தது.
Grow Food Not Lawns முகநூல் பக்கத்தில் இருந்து…
முன்னுரை!
ஆம், இது முடிவல்ல! நிச்சயம் ஒரு வெற்றிப் பயணத்தின் தொடக்கமே!!
மரங்களை வளர்த்தல் வறண்ட நிலப்பகுதியை பசுமையாக்கி, மண் வளத்தை பெருக்கி, பாலைவனமாக்கலை தடுத்து, உணவு பாதுகாப்பை உறுதி செய்து, நீர் நெருக்கடியை பெருமளவு குறைக்கிறது.
சமுதாயத் தோட்டங்களோ எளியோரின் பசியை போக்கி, (விஷமில்லா காய்கறிகளை உட்கொள்வதின் மூலம்) நோயற்ற சிறப்பான வாழ்கையை தந்து, பொதுவுடைமைக் கொள்கையை பரவச் செய்து, நுகர்வு பண்பாட்டில் இருந்து மக்களை மீட்டு, உலகமயமாக்கலுக்கு எதிரான உள்ளூர்மயமாக்கலை முன்னிறுத்தி, தற்சார்புடன்-கூடிய நிலைத்த பொருளாதாரத்தை அடைவதற்கான பாதையை நோக்கி நம்மை பயணிக்கச் செய்யும்.
மரங்களுக்கும் இஸ்லாமிய வரலாற்றிற்கும், வாழ்க்கை முறைக்கும் மற்றும் இறைநம்பிக்கைக்கும் உள்ள தொடர்பை தொகுத்து, மரங்களை பேணுவதில் இருக்கும் நமது அலட்சியத்தை ஆதங்கமாக பதிவிட்டு, மனிதத்தை போற்றக்கூடிய ஒரு சமுதாய மாற்றம் உருவாக வேண்டும் என்ற அபிலாசையுடன் எழுதப்பட்டுள்ள இவ்வாக்கத்தில், நான் கூறிய கருத்துக்களும் காட்டிய மேற்கோள்களும் எனது பேராசை / பெரும் விருப்பத்தின் வெளிப்பாடே அன்றி, நிச்சயம் அவை ஆலோசனைகளோ, அறிவுரைகளோ அல்ல!
நற்காரியங்களின் மீது ஆசை கொள்வதும் ஆர்வம் காட்டுவதும் நம் மீது தார்மீக கடமை. ’பரக்கத்’ என்னும் அபிவிருத்தி இருந்தால், அதனை நமக்கு சாதகமாக வல்ல அல்லாஹ் நிறைவேற்றிவைப்பான், ஆமீன்!
“எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.” (سورة الرعد 13:11)
முக்கிய மேற்கோள்கள்
குறிப்பு:
மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ள அனைத்து இணையதள முகவரிகளும், இக்கட்டுரை பதிவிடப்பட்ட தேதியில் பயன்பாட்டில் இருந்தது.
|