(கட்டுரை எழுதப்பட்ட நாள்: 23.09.2016.)
இரவு முழுதும் புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவேயில்லை. நேற்று லீவு என்பதால் பகல் முழுதும் தூங்கியதுதான் காரணம். இன்று நள்ளிரவு மூன்று மணிக்கு டூட்டி. அதை நினைக்கும் போதுதான் எரிச்சலாக வந்தது. மூன்று மணிக்கு இன்னும் அரை மணிநேரம் இருந்தது. இனி எங்கே தூங்க எனும் சலிப்புடன் முகநூலை நோட்டமிட்டேன். துபாயில் இருக்கும் எனது நண்பன் ரிஃபாய் உடைய பதிவு கண்ணில் பட்டது. செய்தி அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போனேன். அது ALS மாமாவுடைய மரணச் செய்தி! அவசர அவசரமாக காயல்பட்டினம் டாட் காமை ப்ரவுஸ் செய்து தகவலை உறுதி படுத்திக் கொண்டு கனத்த மனதுடம் ஒரு கமெண்ட்டையும் பதிவு செய்துவிட்டு பணிக்கு கிளம்பினேன்.
சிங்கப்பூருக்கு நான் வந்தபின் எனது எழுத்துப்பணி செத்துவிட்டது எனலாம். ஒரு கட்டுரை எழுதி இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. வேலைப்பளு, நேரமின்மை ஆதலால் இருந்து எழுத இயலாத நிலை. இப்படி ஒரு கட்டுரையை எழுதுவதற்காத்தான் இத்தனை காலம் இந்த தொய்வு ஏற்பட்டதோ என மனம் கனக்கிறது.
1984 காலகட்டங்களில் நமதூரிலிருந்து வெளி வந்துகொண்டிருந்த இஸ்லாமிய மாத இதழ்களான நற்சிந்தனை, முத்துச்சுடர், அல்-ஹிதாயா போன்றவற்றில் சிறுகதைகள், குறுந்தகவல்கள், புதிர் போட்டிகள் என எனது எழுத்துப்பணி மெல்ல துளிர்விட்டுக்கொண்டிருந்த காலம். முத்துச்சுடர் ஆசிரியர் மர்ஹூம் நூஹ் தம்பி ஆலிம் அவர்களின் ஊக்கமும், அறிவுரைகளும் என் வளர்ச்சிக்கு உரமாக அமைந்ததால் எனது எழுத்தும் செழிப்பாக வளர்ந்து கொண்டிருந்தது. மாத இதழ்களில் காயல் இப்னு அப்பாஸ் எனும் புனைப்பெயரில் நிறைய தகவல்கள், துணுக்குள், வரலாற்றுச் சம்பவங்கள், ஹதீதுகள் என பல்வேறு பதிவுகள் வரும். அதை தேடிப்பிடித்து முதலில் படிப்பது எனது வழக்கம். அந்த அளவிற்கு அந்த எழுத்தாளரின் பதிவுகள் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது எனலாம்.
பொதுவாக டீன் ஏஜ் பருவத்தினருக்கு வரும் கிறுக்கு எனக்கும் வந்தது. பள்ளிப்படிப்பை பத்தாம் வகுப்புடன் உதறிவிட்டு கேரளாவுக்குப் பயணித்தேன். கூடவே எனது அன்றைய பொக்கிஷமான கவிதை நோட்டு புத்தகத்தையும், எனது ஆக்கங்கள் வெளிவந்திருந்த சில மாத இதழ்களையும் உடன் எடுத்துச் செல்ல மறக்கவில்லை. கேரளாவின் பசுமையான சூழல், பழகும் பண்புடைய மக்கள், இயற்கை வளம் இவைகள் என் எழுத்துக்கு இன்னும் வலு சேர்த்தன.
ஆக என் எழுத்து இன்னும் தீவிரமடைந்தது. மாத இதழ்களை தபாலில் வருத்தினேன். கோணியூர் ரஃபீக் எனும் பெயரில் நிறைய எழுதினேன். எனது ஆக்கங்களுக்கு வாசகர் கருத்துப்பகுதியில் காயல் இப்னு அப்பாஸ் அவர்களின் பின்னூட்டம் நிச்சயமாக இருக்கும். அதுவே எனது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம் என கருதி நான் மகிழ்ந்த நாட்கள் இன்னும் பசுமை மாறமல் என் மனதில் நிற்கிறது. முத்துச்சுடர் அலுவலகத்தில் எனது முகவரியைப் பெற்று கடித தொடர்பையும் ஏற்படுத்திக்கொண்டார். அதில் நிறைய பாராட்டுக்களும், அறிவுரைகளும் இருக்கும்.
ஒருமுறை நான் ஊர் வந்திருந்தபோது நமதூர் கடற்கரையில் ஒரு வயதானவருடன் நண்பர் காயல் ஏ.தர்வேஷ் முஹம்மது அமர்ந்திருந்தார். நானும் சலாம் செல்லி அவர்களுடன் இணைந்தேன். பல்வேறு விஷயங்கள் தீர்வுகள் என பேச்சு மிக சுவரஸ்யமாக தொடர்ந்து கொண்டிருக்கையில், இடையில் சொல்லுங்க ரபீக் என்று தர்வேஷ் என்னிடம் கூறியதும், யார் ரபீக்கா? அப்ப கோணியூர் ரபீக் நீங்கதானா?” என துள்ளித்துடித்து எழுந்து என் கரத்தைப் பற்றிக்கொண்டு இருக்கமாக என்னைக் கட்டித் தழுவிய அந்த மாமனிதர்தான் காயல் இப்னு அப்பாஸ், ALS மாமா எனும் லெப்பை சாஹிப் என்பதை அறிந்து ஆச்சர்யப்பட்டு போனேன்.
அன்று மலர்ந்த நட்பு வளர்ந்து மரமாகி, மலர்ந்து காயாகி, கனிந்து சுவையாகி, காலத்தால் அழியா நட்புறவுடன் அனுபவக் கல்விதனை என்னுள் புகுத்தி புதிய பாதையில் புதிய கோணத்தில் எழுத்துப் பயணத்தில் என்னை இழுத்துச் சென்றது என்பதை நான் இத்தருணத்தில் நினைவுகூர்கின்றேன்.
சதா மனித மேம்பாடு, கலாச்சர கட்டுப்பாடு, இளைய சமூகத்தினர் மீது அக்கறை, இப்படி வாழ்நாள் இலட்சியமாக இவைகளை சுமந்துகொண்டு வாழ்ந்து வந்த அந்த மாமனிதரின் தோற்றமோ மிகவும் எளிமை வாய்ந்தது.
கையில் ஒரு மஞ்சள்நிற பை, அதனுள் சில வெள்ளைக் காகிதங்கள், இன்னும் சில குறிப்புகள் எழுதி மடித்து வைத்த காகிதங்கள், பேனா, பென்சில், பென்டார்ச் லைட், தலையில் அசையா தொப்பி, முழுக்கை சட்டை, கணுக்காலுக்கு மேல் உயர்த்தி உடுத்திய வேஷ்டி, சட்டைப்பைக்குள் விம்மி புடைத்திருக்கும் உலகளாவிய குறிப்புகள். இப்படி நடமாடும் ஒரு பல்கலைக்கழகமாக நம்மோடு வாழ்ந்த அவரை கண்டு உணர்ந்தவர்கள் மிக சொற்பமே!
எங்கு போனாலும் நடைதான். நாம் பைக்கில் ஏற்றி செல்கிறோம் என்றாலும் “அட போப்பா இன்னைக்கு நீ வருவா நாளைக்கு அவன் வருவான் அப்புறம் யாராச்சும் வர மாட்டாங்களான்னு மனசு எதிபார்க்க ஆரம்பிச்சிடும். இனி அவ்ளோதான் சோம்பேறியாத்தான் அலையணும். கூடவே, கொழுப்பு, சுகர், ப்ரஷர்ன்னு எல்லா வியாதியும் தொத்திக்கொள்ளும்” என்று மறுத்துவிடுவார்.
அவரிடத்தில் வயோதிகம் என்பதை நான் கண்டதேயில்லை. எப்போதும் சுறுசுறுப்பு, திட்டமிட்ட வேலையை உரிய நேரத்தில் செய்து முடித்தல், சுற்றுச்சூழல், மற்றும் சம்பவங்ககளை குறிப்பெடுத்து பதிவு செய்தல், கையெழுத்து பத்திரிக்கை, நூலக பராமறிப்பு, உருவமில்லா ஓவியம் வரைதல், புகைப்படக்கலை, எழுத்தாற்றல் இப்படி எண்ணற்ற திறமைகளை தன்னகத்தே தக்க வைத்து தன்னடக்கத்துடன் வாழ்ந்தவர்.
தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததை ஒரு குறையாக கருதியதே இல்லை. சிறார்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர். மழலையர் பள்ளிகளுக்குச் சென்று ஓவிய பயிற்சி அளிப்பார். சுதந்திர தினம், குடியரசு தினம் அன்று கொடியேற்றி தமது நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவார். பள்ளி விடுமுறை நாட்களில் மழலையர்களுக்கு தனியிடத்தில் ஓவிய பயிற்சி வகுப்புகள் நடத்தி கற்றுக்கொடுப்பார்.
பயிலும் பிள்ளைகளுக்கு தமது சொந்த செலவில் சாக்கிலேட், மிட்டாய் என இனிப்புகளை வழங்கி மகிழ்விப்பார்.
ஆண் குழந்தைகள் அரைக்கால் சட்டை அணிவதை அறவே அனுமதிக்க மாட்டார். பெண்பிள்ளைகள் கட்டாயம் ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும். அதற்கு வயது வரம்பும் இல்லை. ஒருமுறை ஓவிய பயிற்சி வகுப்பின் போது கையில்லாத ஸ்லீவ் லெஸ் ஆடை அணிந்து வந்த ஐந்து வயது மாணவியைக் கண்டு கொதித்தவராக அந்த மழலையை அழைத்துக் கொண்டு நேராக அந்த பிள்ளை வீட்டிற்கே சென்று இனி இப்படி உடை அணிவித்து வகுப்பிற்கு அனுப்ப வேண்டாம். வளரும் பருவத்திலேயே பிள்ளைகளுக்கு வெட்கத்தையும் பேண வேண்டும். இந்த கை கால் இல்லாத சினிமா நடிகை போன்ற அரை குறை ஆடைகளை அணிவித்து சிறார்களின் ஒழுக்கத்தையும் வெட்கத்தையும் பிஞ்சு பருவத்திலேயே கிள்ளி எறிந்து விடாதீர்கள் என கடிந்து கொண்ட சம்பவங்களும் உண்டு.
மாலை நேரம் கடற்கரைக்கு வரும்போதெல்லாம் பொறுப்பில்லாமல் சுற்றித்திரியும் இளைஞர்களைக் கண்டு வெகுவாக கவலை கொள்வார். வயது கோளாராலும், தாய் தந்தை வளர்ப்பு சரியில்லாமலும் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு எதிர்காலத்தை பாழாக்கி சீரழிந்து கொண்டிருக்கும் இளைஞர்களை அழைத்து அவர்களுக்கு படிப்பின் அவசியத்தை உணர்த்தி மீண்டும் படிப்பை தொடர அறிவுரை சொல்வதுடன் பள்ளிக்கே சென்று தலைமை ஆசிரியரிடத்தில் பரிந்துரையும் செய்வார்.
நான் அறிய நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு சென்னையில் நகைக்கடை, மற்றும் பிற ஸ்தாபன்ங்களில் வேலை வாங்கி கொடுத்துள்ளார். அத்துடன் நின்றுவிடாமல் அந்த இளைஞனின் பெயர், தாய் தந்தையரின் பெயர், முகவரி அனைத்தையும் பதிவு செய்து வைத்துக் கொள்வார். அவரது சிபாரிசில் வேலை கிடைத்து இன்று நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அநேக இளைஞர்கள் அவரது உதவியை மறந்திருக்க மாட்டார்கள்.
நான் ஊரில் இருந்தால் கட்டாயம் எனது வீட்டிற்கு வருவார். வரும்போதே ஹிஜாஸ் மைந்தன்...என பெரிய சத்தத்தோடுதான் வருவார்கள். “ஏன் மாமா நாலு வீட்டுக்கு கேட்கிற மாதிரி சவுண்ட் கொடுக்குறீங்க?” என்பேன். “கொடுக்கணும்ப்பா அப்பதான் யார் உன் வீட்டிற்கு வந்து போய் இருகின்றார்கள் என்று அயல் வீட்டாருக்கு விளங்கும். உங்க வீட்லெ இருக்கும் பெண்களும் சரி ஆள் வருகிறார்கள் என்று ஆடையை சரி செய்து அலர்ட்டா இருப்பாங்க!” என்று சொல்லுவார்கள். இந்த முன் எச்சரிக்கையும், ஒழுக்க பண்பும் இன்று நம்மில் எத்தனை பேரிடம் இருகிறது. நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருப்போம். எதைக் கொடுத்தாலும் மறுப்பார் நிர்பந்திக்கும் போது கொஞ்சமாக எடுத்துக் கொள்வார்கள்.
ALS மாமாவின் நட்பு கண்ணியமானதும், உறுதிமிக்கதாவும் இருந்தது. எனது தாய் தந்தையர், தங்கைமார்கள், மனைவி, மாமா, மாமியார் என அத்தனை பேரும் ALS மாமா அவர்களுக்கு நெருக்கமானவர்களாகவே இருந்தனர். நல்ல நகைச்சுவை பண்பும் கொண்டவர்.
பெரும்பாலும் ALS மாமா அவர்கள் எழுதுவதற்கு அமைதியான தனிமையான சூழலையே விரும்புவார்கள். அதற்காக அவர்கள் தேர்வு செய்யும் இடங்கள் விசித்திரமானவை. நமதூர் மேலப்பள்ளி மையவாடிக்குள் குறுக்காக நடந்து சென்றால் மேற்திசையில் உடைமரங்கள் அடர்ந்த பகுதியில் ஒரு ஒற்றயடி பாதை செல்லும். அதற்குள் ஒரு பத்து பேர் உட்காருவது போல் சூப்பர் இடம் ஒன்று இருக்கும். துப்புரவாக மண்தரையுடன் கூடிய அந்த இரகசிய தாவலம்தான் அவர்களின் எழுத்துமேடை.
“மாமா இதுக்குள்ளேயா? எப்படி மாமா? மய்யத்தானாக்கூட தெரியாதே? பாம்பு, கீரின்னு ஏதாச்சும் வந்தா என்ன பண்ணுவீங்க மாமா?” என உடல் நடுங்க கேட்டேன். “அட போப்பா அது வந்தா அது பாட்டுக்கு போகும். அப்படித்தான் ஒருமுறை கட்டுரை எழுதிக்கிட்டு இருக்கும் போது ஒரு நல்ல பாம்பு படம் எடுத்து ரெம்ப நேரமா நின்னுட்டிருந்திருக்கு நான் கவனிக்கவே இல்லை. திடீர்ன்னு நான் பார்த்தேன் அதுவும் பார்த்திச்சு என்ன நெனச்சுதோ தெரியல்லெ அதுவே தன்னாலெ போயிடுச்சு. அதுலேர்ந்து ஒரு குச்சிய இப்ப கைலெ வச்சிருக்கேன். நான் இங்கே வரும் போது மேலப்பள்ளி மோதினார்ட்டெ சொல்லிட்டுதான் வருவேன். கரெக்ட்டா ஜமாத்துக்கு வந்துடுவேன். ஒருவேளை நான் வரல்லென்னா, சரி என் ஹால் முடிஞ்சு போச்சுன்னு அவர் என்னைத் தேடி வந்துடுவாரு!” என சர்வ சாதாரனமாக சிரித்துக்கொண்டு அவர்கள் சொன்ன வார்த்தைகள் இப்போதும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டிருகிறது.
இன்னும் அவரது எழுத்து மேடை காட்டு மொகுதூம் பள்ளிக்கு பின்புறம் உள்ள பொட்டல்வெளி, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரிக்கு எதிர்புறம் உள்ள பனங்காடு இப்படி நீளும். இந்த இடங்களைப் பார்ப்பதற்காக ஒருமுறை நானும் நண்பர் சாளை பஷீரும் அந்த பனங்காட்டிற்குள் சென்றோம். என் வாழ்நாளில் கண்டிராத பறவைகள், குளம் குட்டைகள், அடர்ந்து படர்ந்த காட்டுச்செடிகள், பழுத்து விழுந்து கிடக்கும் பனம்பழங்கள், பிரண்டை, கற்றாலைச்செடி, கள்ளிச் செடி, இலந்தை, முருங்கை, என யாரும் வைக்காமல் தானாக உருவாகிய மரங்கள், வேகமாக வீசும் காற்றின் ஒலி, மங்கி மயங்கும் மாலை வெயிலின் ஒளிபட்டு தங்க காடாக காட்சியளிக்கும் ஒரு தனி உலகமே அங்கு இருந்தது. ஆக ALS மாமா அவர்கள் தேர்ந்தெடுத்த இடங்கள் எழுத்துவதற்கு பொருத்தமானவை. ஆபத்து என்பதெல்லாம் அந்த மாபெரும் கலைஞனின் சிந்தைக்கு எட்டவே இல்லை.
ALS மாமா அவர்களின் வீட்டிற்கு நான் பல முறை சென்றுள்ளேன். அந்த ஓடைக்கு வெளியே மரப்பும் அதில் தண்ணீரை விரயம் செய்யாதீர்கள் எனும் தகவல், ஹதீது வாசகங்கள் இருக்கும். ஓடைக்குள் செல்லும் போதே அத்தனை வீட்டாரின் பெயர் மற்றும் உறவு முறையைச் சொல்லி அழைத்து நலம் விசாரித்துக் கொண்டே செல்வார்கள்.
வீட்டிற்குள் நுழைந்ததும் உள்ளறையின் வாசலில் தொங்கிக்கொண்டிருக்கும் நீண்ட திரைச்சீலையில் அழகிய வண்ணங்கள் தீட்டிய அழகு பூக்கள் நிறைந்த வேலைப்படுகள், நல்வரவு எனும் வாசகம் ALS எனும் பெயருடன் காட்சி தரும். பலங்கால பொருட்களான சிம்மினி விளக்கு, ஹரிக்கன் விளக்கு, படிக்கன் ஆகியவற்றை இன்றளவும் உபயோகத்தில் வைத்துள்ளதைக் காணலாம்.
அந்த காலத்து சுவிட்ச் போர்டு, மின்விசிறி, பல்பு இப்படி ஏதோ ஒரு மியூசியத்திற்குள் நுழைந்த உணர்வு ஏற்படும். வலப்புறத்தில் உள்ள மாடிப்படியில் கவனம் தலையைக் குனிந்து வரவும் எனும் வாசகங்கள், சுவர்களில் சின்னச் சின்ன ஓவியங்களைக் காணலாம்.
மாடியில்தான் அவர்களின் அரசவைக்கூடம். எண்ணிலடங்கா புத்தகங்கள், துணி மற்றும் அட்டைகளில் வரைந்த ஓவியங்கள், தூரிகை, வண்ணக்கலவைகள், கையெழுத்து பத்திரிக்கைகளின் தொகுப்புகள், வண்ன டிசைன்களில் அவர்கள் வடிவமைத்த அட்டை படத்துடன்கூடிய வார இதழ்கள், அதில் அடங்கிய அந்த காலத்து செய்திகள், அந்த காலத்தில் அவர் கலைக்கல்லூரியில் பயின்ற போது எடுத்த அற்புதமான புகைப்படங்கள் என அவரது விலை மதிப்பில்லா சொத்துக்கள் அனைத்தையும் அங்கு காணலாம்.
அந்த அரிய புகைப்படங்களில் காயல்பட்டினத்து மக்களின் அன்றைய நடை உடை கலாச்சாரம் ஆகியவற்றைக் காண முடிந்தது. கேடிஎம் தெருவின் அப்போதைய விசாலத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு போனேன். தாயிம் பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் அன்றைய புகைப்படங்கள் இன்று அரிய பொக்கிஷம்தான். அரவது சேமிப்பில் உள்ள புகைப்படங்களை காப்பி எடுத்து தருவதாகச் சொல்லி வாங்கிச் சென்றவர்கள் திருப்பிக் கொடுக்காமல் ஆல்பத்தின் சில பக்கங்கள் வெற்றிடமாக இருப்பதைக் கண்டு வருந்தினேன். அருமை நண்பர்களான சாளை பஷீர், மெகா நூஹ் காக்கா ஆகியோரை ALS மாமாவின் வீடிற்கு அழைத்துச் சென்றுள்ளேன்.
மாமா அவர்களை சந்தித்தே ஆக வேண்டும் என்று பேராவல் கொண்டு என்னிடம் பல முறை வலியுறுத்திய எனதருமை நண்பர் அபுதாபி SAC.ஹமீது அவர்களுக்கு மட்டும் கடைசி வரை மாமாவை சந்திக்கும் வாய்ப்பே கிட்டவில்லை. அது ஓர் பெரும் குறையாகவே என் மனதை உறுத்திக் கொண்டிருக்கிறது.
இணையதளங்களில் எழுதும் வாய்ப்பு கிடைத்த போது பக்கம் பக்கமாக தாம் எழுதிய பதிவுகளை கணினியில் டைப் செய்து காப்பி எடுத்து பல தளங்களுக்கும் அனுப்பி வந்தார். அவரது எழுத்து ஒரு வகை தனித்தன்மை கொண்டது. வார்த்தை ஜாலங்களோ, வர்ணனைகளோ இருக்காது. யதார்த்தத்தை தோலுறித்துக்காட்டும் அற்புதமான வரிகளையும். வாழ்வியலின் நிதர்சணத்தை வெளிப்படுத்தும் ஆழமான சொற்களையுமே கையாண்டிருப்பார்கள். எனவே கருத்துப் பகுதியில் பின்னூட்டங்கள் அதிகம் வருவதில்லை. அதற்காக அவர்கள் கவலைப்பட்டதும் இல்லை. “சொல்வது எனது கடமை அதை பத்து பேர் வாசித்தாலே போதும்!” என்பார்கள்.
அவரது வரலாற்றுப் பதிவுகளுக்கு ஏற்ற புகைப்படங்களை எடுப்பதற்காக நமதூரில் பல இடங்களுக்கும் நாங்கள் சேர்ந்தே சென்றுள்ளோம். எழுத்து என்பது அவர்களின் சுவாசமாக இருப்பதை நான் அவ்வேளைகளில் உணர்ந்துள்ளேன். சோர்வு என்பது அவரது அகராதில் இல்லாத ஒன்று. வயது பேதமின்றி எல்லோரிடத்திலும் சக வயதுடையவர் போல சரிசமமாகப் பழகுவார்கள்.
சமீபத்தில் எனது இளைய சகோதரியிடம் என்னைப் பற்றி நலம் விசாரித்து எங்க சொந்த்ததில் ஒரு பையன் இருக்கிறான். அவன் உங்க ராத்தா மகளுக்குத்தான். இன்ஷா அல்லாஹ் நான் பேசி தருகின்றேன் என்றார்களாம். மாமாவின் மரண செய்தி அறிந்து எனது தாயார் அவர்கள் தன் உடல் சுகவீனத்தையும் பொருட்படுத்தாமல் போய் பார்த்துவிட்டு வந்த நடப்பை என்னிடம் கூறினார்கள்.
எனது மருமகள் டாக்டர் ஷாஹீன் சிறு பிள்ளையாக இருக்கும் போது அவளைப் பார்த்து கொஞ்சுவதற்காகவே என் வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். எங்கு கண்டாலும் “மருமகள் எப்படி இருக்கிறாள்?” என்று மறக்காமல் விசாரிப்பார்கள். அவள் மருத்துவம் பயின்று கொண்டிருந்தபோது உடலுறுப்புக்களின் உட்புற பாகங்களை பக்கம் பக்கமாக ALS மாமா அவர்கள் மிகுந்த சிரமத்தையும் பொருட்படுத்தாமல் வரைந்து தந்ததை என்னால் மறக்க இயலாது. ALS மாமா அவர்களோடு பழகிய அந்த நாட்கள் எனது வாழவில் அனுபவத்தை கற்றுக்கொண்ட அருமையான நாட்கள். அந்த மாபெரும் மனிதரோடு மிகப்பெரிய நன்றிக்கடன் எனக்கும் இந்த சமுதாயத்திற்கும் உண்டு.
இறைப்பற்று, சமுதாய மேம்பாடு, ஒழுக்கம், பிறர்க்கு உதவுதல், இளைய சமுதாயத்தினர் மீது அக்கரை எனும் நற்பண்புகளைக் கொண்ட ALS மாமாவின் ஆக்கங்களை அந்த காலத்தில் அச்சிலேற்றி வெளியிட்ட பத்திரிக்கைகள் இன்று ஒன்றுகூட இல்லை. அவைகளைத் தேடிப் பிடித்து கண்டெடுப்பது இயலாத காரியம். ஆனால் நமது காயல்பட்டினம் டாட் காம் எழுத்து மேடை ஆசிரியர் பொறுப்பை அவர்களுக்கு வழங்கி சமீபகாலத்தில் அவர் எழுதிய அனைத்து பதிவுகளையும் பாதுகாத்து வருகின்றது. இது கூட இல்லையெனில் அந்த மாமனிதரை வரும் தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.
இனி அந்த மஞ்சள் பைக்கு சொந்தக்காரரின் முழுக்கை சட்டையும், மூக்குக்கண்ணாடியும், “ஹிஜாஸ் மைந்தா...!” எனும் கம்பீரமான குரலையும் கேட்கவும், பார்க்கவும் இயலாது. இறைவன் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக ஆமீன்.
|