மரங்களெல்லாம் பேசிக்கொண்டதாம். ஒரு மரம் கூறியது. அதோ ஒருவன் வருகிறானே அவன்தான் நம்மையெல்லாம் வெட்டப்போகிறான். இன்னொரு மரம், ஆமா, நம்ம ஆளுகள்ள யாரோ ஒருவன்தான் அவன் கையிலே இருப்பான் என்றது. இரும்பால் தயாரிக்கப்படும் ஆயுதங்களுள் அரிவாள், கோடரி, சுத்தியல் உள்ளிட்டவற்றின்ன் பிடியாக அமைபவை மரத்தாலான கைப்பிடியன்றோ. அதைத்தான் மரங்கள் அவ்வாறு பேசிக்கொண்டனவாம்.
மரங்கள் தங்களுக்கெதிரான தீய சக்தியாக மரக் கைப்பிடியை நினைப்பது போலவே, இஸ்லாமுக்கும், குர்ஆன் - ஹதீஸுக்கும் எதிராக நம் நாட்டு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்திருப்பவர்களும், ஒரு சில முஸ்லிம் பெண்ணியவாதிகளே! தங்களை மதசார்பற்றவாதிகள் எனச் சொல்வதில் பெருமைப்பட்டுக் கொள்ளும் சில முஸ்லிம் பெயர் தாங்கிகள்தான் இதுபோன்ற சதி வேலைகளில் இப்போது ஈடுபட்டு வருகின்றனர். இஸ்லாம் உண்மையில் முஸ்லிம் பெண்களின் உரிமைகளை மறுக்கிறதா என்பதை ஒரு பெண்ணே சொன்னால் நன்றாக இருக்குமென்பதால் அவர்களிடமே அதனை விட்டுவிடுகிறேன்.
ஆனால் முஸ்லிம் சமூகம் ஒரே குரலாக மாறி இதில் தங்களுக்கிடையில் உள்ள ஃபிக்ஹு ரீதியிலான சிறிய வேறுபாடுகளையெல்லாம் களைந்து விட்டு ஓரணியில் நிற்கின்றது.
ஷாபானு வழக்கு
ஆண்டு 1985 –ஐ நம் நினைவலைகளில் கொண்டுவரும் வீரமிகு செயல் இது. இதேபோல அன்று ஷாபானு என்ற வயதான முஸ்லிம் பெண் தனது கணவர் தன்னை விவாகரத்து செய்துவிட்டார் எனவும், எனவே என் வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் தரும்படி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் கோரியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது.
குர்ஆனின் சட்டத்திற்கெதிரான அத்தீர்ப்பை எதிர்த்து அன்றைய இந்திய முஸ்லிம் சமூகம் நாட்டின் பட்டிதொட்டிகள் முதல் மாநகரங்கள் வரை சென்று ஆக்ரோஷமான முறையில் தமது எதிப்புகளையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தில் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி இத்தீர்ப்பை மாற்றியமைத்து நாட்டில் அமைதி ஏற்பட வகைசெய்தார்.
இதை நன்றாக அறிந்து வைத்திருக்கும் தற்போதைய பி.ஜே.பி. அரசு, அப்படி ஒரு நிலைமைக்கு வாய்ப்பே இல்லையெனக் கூறி வீராப்புடன் செயலாற்றி வருகிறது. அவரவர் மத நம்பிக்கைகளை விடவும் இந்நாட்டின் அரசியல் சாசனமே உயர்வானது என கூக்குரலிட்டு வருகிறது.
சுதந்திரம் பெற்றபின் உருவான தனியார் சட்டங்கள்
ஆனால் நம்நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நாட்டில் பல்வேறு மதங்களையும் பின்பற்றுபவர்கள் அவரவர் கலாச்சாரம், குடும்ப வாழ்வு முதலியவற்றுக்குக் கொடுக்கப்பட வேண்டிய சுதந்திரத்தை கருத்திற்கொண்டு ஏற்படுத்தப்பட்டதே அந்தந்த மதத்தைப் பின்பற்றும் உரிமையாகும். அதற்காக ஏற்படுத்தப்பட்டதே தனியார் சட்டவாரியங்கள்.
அரசியல் சாசனங்களின் கீழ் இந்து, முஸ்லிம், கிறித்தவர்கள் அவர்களின் மத நம்பிக்கை அடிப்படையில் திருமணம், வாரிசுரிமை, பாகப்பிரிவினை உள்ளிட்ட விஷயங்களில் தீர்வு காண்பதற்காக ஏற்படுத்துப்பட்ட உரிமைகள் அவை. இந்து திருமண சட்டம் 1956இல் உருவாக்கப்பட்டது.
1937இலேயே ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு அவர்களின் வேதநூல் படி திருமணம், விவாகரத்து உள்ளிட்ட விஷயங்களுக்கு தீர்வுகாண சட்டம் கொண்டுவரப்பட்டது.
முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்
1978ல், முஸ்லிம்களுக்கு அவர்களின் மத அனுஷ்டானங்கள் படி நிகாஹ், தலாக் (ஃகுலா), வாரிசுரிமை, பாகப் பிரிவினை, வக்ஃப் ஆகிய பிரிவுகளில் குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் தீர்வு காண்பதற்காக நிறுவப்பட்டதே முஸ்லிம் தனியார் சட்ட வாரியம். இந்திராகாந்தி அரசால் இது ஏற்படுத்தப்பட்டது.
அதன் நிர்வாகக் கமிட்டியில் 41 மார்க்க அறிஞர்கள் உள்ளனர். பொதுக்குழுவில் 201 பேர் உள்ளனர். அதில் பெண்கள் 25 பேர் ஆவர்.
முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் உறுப்பினர்களாக முஸ்லிம்களின் உட்பிரிவுகளான தேவ்பந்தி, பரேலவி, தப்லீக், அஹ்லே ஹதீஸ், தஃவதே இஸ்லாமி, இன்ன பிற பிரிவுகளிலிருந்து தலைசிறந்த மார்க்க அறிஞர்கள், சிந்தனைவாதிகள், சமூகத் தலைவர்கள், வழக்கறிஞர்கள் என அதன் செயற்குழு உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
சட்டமியற்றும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ள இதன் உறுப்பினர்கள், நிகாஹ் - தலாக் (ஃகுலா) உள்ளிட்ட விவகாரங்களில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தீர்வு காண வகைசெய்து பாதுகாக்கும் பணிகளையே வாரியம் மூலம் செய்து வருகின்றனர்.
தலாக்கும், இறைச்சட்டங்களும்
தலைப்பிற்கு வருவோம். “தலாக்! தலாக்!! தலாக்!!!” என்ற விவாகரத்து விவகாரம் பற்றி குர்ஆன் என்னதான் கூறுகிறது?
அண்மைக் காலமாக நம் நாட்டிலுள்ள மின்னணு ஊடகங்கள் ஓவென ஒரே குரலில் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கும் முக்கிய விஷயமாக முத்தலாக் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு அல்லாஹ்வால் அனுமதியளிக்கப்பட்டதில் அல்லாஹ் மிகவும் வெறுக்கக்கூடிய விஷயம் ஒருவர் தம் மனைவியை விவாகரத்து கூறுவதாகுமென அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
கணவன் மனைவி இருவருக்குமிடையில் மன இருக்கமானது வாழ்க்கையை விட்டும் பரஸ்பரம் பிரிந்து செல்வதற்கான சூழல்களையே உண்டாக்கி, இணக்கமுண்டாவதற்கான பல்வேறு கட்டங்களையும் தாண்டிவிடும் நிலையிலேயே முதலாவது தலாக் விடவேண்டும்.
அகிலமனைத்தையும் படைத்தவனாகிய அல்லாஹ் இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் பற்றி குர்ஆனில் சூரா அல்-பகராவில் தலாக் பற்றி கூறுவதற்காக துவங்கும் இறைவசனத்திற்கு முந்தைய வசனத்தில் (2 : 224) எச்சரிக்கிறான்.
அதாவது ஒருவர் தம் மனம்போன போக்கிலெல்லாம் அல்லாஹ்வின் பெயரில் சத்தியம் செய்வதைத் தவிர்க்க வேண்டுமென்பதே அது! சமூகக் கட்டமைப்பின் ஓர் அங்கமே குடும்பமாகும். அக்குடும்பத்திலும் இரு நபர்களான ஓர் ஆண், ஒரு பெண் இருவருக்கு மட்டுமிடையிலுள்ள பிரச்சனையாகவே விவாகரத்து எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
நன்மைகளை ஏற்படுத்துவதற்கும், இறையச்சத்தை உண்டாக்குவதற்கும் மக்களுக்கிடையில் இணக்கத்தை உண்டாக்குவதற்கும் எதிராக சத்தியம் செய்யக்கூடாதென அல்லாஹ் கூறுகிறான்.
ஒவ்வொரு முஹல்லாவின் தலைவர்களுக்கும், ஜமாஅத்துக்களையும் அமைப்புக்களையும் நிர்வகிப்பவர்களுக்குமான எச்சரிக்கையே இது! எங்கும், எப்போதும் பாரபட்சமில்லாமல் நடுநிலையுடன் நடக்க வேண்டுமென்பதற்கான அடிப்படை விதி இது! அல்லாஹ் முற்றிலும் வெறுக்கக்கூடிய ஒரு விவகாரத்தில் எவ்வித நியாயமுன்றி ஒருவர் சார்ந்து அடுத்தவரை புறக்கணிப்பதோ எதிர்த்து நிற்பதோ மிக மோசமான குற்றச் செயலாகும்.
நான் உன்னுடன் உறவு கொள்ள மாட்டேன் (‘இல்லா) என அறுதியிட்டு கூறுவதற்கு கூட இஸ்லாத்தில் மிகப்பெரிய தண்டனை உண்டு. அதன் பரிகாரமானது அவ்வாறு கூறியவர் நான்கு மாதம் கழித்த பிறகே மீண்டும் மனைவியுடன் இல்லறத்தில் இணைய முடியும். அக்காலம் முடிவடைந்த பிறகு அவர் தன் மனைவியுடன் கூடி வாழலாம். ஆனால் அவர் அதே கருத்திலேயே தொடர்வாரானால் அப்போது முதலே முதல் தலாக்கின் காலம் துவங்கும்.
தலாக் என்பதை மனைவியை மிரட்டுவதற்கான ஆயுதமாகவோ அல்லது தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு துன்புறுத்துவதற்காவோ அல்லது ஜோக்காகவோ ஆக்கிக்கொள்ளக் கூடாது. அது போல மனைவியும் கருவுற்றிருக்கிறாளா அல்லது மாதவிடாய் காலத்தில் இருக்கிறாளா என்பதை மறைக்கும் அதிகாரம் அவளுக்கில்லை. இரண்டையும் மறுமையின் அதிபதியாகிய அல்லாஹ் மிக வன்மையாக எச்சரிக்கிறான்.
கருவுற்ற நிலை அல்லது மாதவிடாய் காலங்களில் தலாக் சொல்வது ஏற்புடையதன்று. அல்லாஹ் வழங்கிய அவகாசங்களாகிய மூன்று குரூஃவை (மாதவிடாய் காலம்) பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தலாக் விடப்பட்டு இத்தா இருக்கும் காலங்களில் மனைவியை வீட்டை விட்டும் வெளியேற்றக் கூடாது. கணவனும் அதே வீட்டில்தான் குடியிருக்க வேண்டும். படுக்கையிலிருந்து விளக்கி வைப்பதற்கு மட்டுமே அனுமதியுண்டு.
இருவரும் ஒரே இடத்திற்குள் பிரிந்து வாழும்போது இணக்கமுண்டாவதற்கான சூழல்களை உண்டாக்கவே கருணையே உருவான அல்லாஹ் இவ்வாறு பலவழிமுறைகளை உருவாக்கித் தந்துள்ளான்.
மூன்றாவது மாதவிடாய் காலத்திற்கு முன் மனைவியை சேர்த்துக்கொள்ள விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம். அவ்வாறு சேர்ந்து வாழும்போது, மறுபடியும் பிரச்சனைகளே உண்டாகி தலாக் கூறினால் அப்போது இரண்டாவது தலாக்கும் நிறைவேறிவிடும். அதாவது, தனக்கு மார்க்கம் அளித்துள்ள இரண்டு வாய்ப்பையும் அவர் பயன்படுத்திவிட்டார். இருந்தாலும், மூன்று மாதவிடாய் காலம் வரை மீண்டும் தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு வழமை போல வாழ வழியுண்டு. இதுவே அவருக்கான கடைசி வாய்ப்பாகும். இந்தக் கடைசி காலக்கெடுவுக்குள் அவர் தன் மனைவியை சேர்த்துக்கொள்ளவில்லையெனில் இனி சேரவே முடியாத விவாகரத்து உண்டாகிவிடும்.
இவ்வாறு அடுத்தடுத்து மணவாழ்வில் பிரச்சனை வந்தால் கூட பிரிவதை குறைந்தது ஆறுமாத காலம் வரை தள்ளிப்போடும் அளவிற்கான சுன்னத்தான வழிமுறைகளை அல்லாஹ்வும், அவன் திருத்தூதரும் அழகாகக் கற்றுத்தந்துள்ளபோது, ‘ஃபாஸ்ட் ஃபுட்’ முறை போன்ற ‘முத்தலாக்’ எதற்கு என்பதை நாம் சிந்திக்கவேண்டும்.
இரண்டு தலாக் விடப்பட்டு, கடைசியாக மீட்ட வேண்டிய காலக்கெடுவெல்லாம் முடிந்துவிட்டால், இனி அக்கணவனும், மனைவியும் - அவர்களே விரும்பினாலும் சேர்ந்து வாழ இயலாது. தலாக் விடப்பட்ட அப்பெண் இன்னொரு ஆணுடன் மறுமணம் செய்து, அந்த வாழ்க்கையில் இயல்பாகவே பிரச்சனைகள் உண்டாகி, அவரிடமிருந்தும் முறைப்படியான விவாகரத்து நடைபெற்று, அதனால் அவ்வாழ்க்கையை விட்டும் அவள் வெளியேறியிருக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே, முந்தைய கணவர் இம்மனைவியை மீட்டிக்கொள்ள முடியும். ஆனால், இப்போது இருவருக்கிடையிலும், மார்க்க விதிமுறைகளின் படி புதிதாகத் திருமணம் நடைபெற வேண்டும்.
தலாக் விடுவதை அத்தனை சாதாரணமான விஷயமாக ஒருவர் எடுத்துக்கொள்ளாமல் இருக்க அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ் அதன்வழிமுறைகளை இவ்வளவு கடுமையாக ஆக்கியுள்ளான்.
1400 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே இவ்வளவு அழகிய வழிமுறைகள் நம் மார்க்கத்தில் தெளிவாக இருக்க முஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாத்தில் நீதி சமத்துவமென்பது இல்லை என அரசாங்கமும், நீதிமன்றங்களும் கொக்கரிப்பதேன்.
இஸ்லாமின் விவாகரத்து சட்டங்கள் ஃபாஸ்ட் ஃபுட் முறையிலானதன்று! எனவே, அதை அறியாத நிலையில் நிகாஹ் செய்வதே முதல் தவறு!! பெரும்பாலும் திருமணச் சட்டங்களை முறைப்படி அறியாதவர்களே தலாக் விஷயத்தில் பெரும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். ‘நிகாஹ் நாமா’ என்னும் தலைப்பில் திருமணச் சட்டங்கள் குறித்த நூல் ஒன்றை முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வெளியிட்டுள்ளது.
மேலும் திருமண கவுன்சலிங் குறித்த சிற்றேடு ஒன்று தமிழில் மவ்லவி முஹம்மது கான் பாக்கவீ அவர்கள் தலைமையில் மார்க்க அறிஞர்கள் கொண்ட குழுவால் எழுதப்பட்டு, ஆல் இந்தியா மில்லி கவுன்ஸில் தமிழ்நாடு என்ற அமைப்பால் வெளியிடப்பட்டுள்ளது. (தொடர்புக்கு : 9444380600).
பலதார மணம்
பலதாரமணம் என்பதுவும் பெண்களின் பாதுகாப்பு அடிப்படையில் இறைவனால் வழங்கப்பட்ட அனுமதியே ஆகும். ஒரே மனைவிவோடு மட்டும்தான் வாழவேண்டும் என்ற விதிமுறைகள் ஒழுக்க சீர்கேட்டிற்கே வழிவகுக்கும். மேலும் தனக்கு பிடிக்காவிட்டாலும் அந்த ஒரே மனைவியுடன் தான் வாழ்ந்தாக வேண்டும் என நிர்பந்திக்கப்படுபவன் அப்பெண்ணை கொடுமைப்படுத்தும் நிலைக்கே தள்ளப்படுவான்.
இது ஒருபுறமிருக்க, ஆண்களே விபத்துக்களிலும் போர்களிலும் அதிகமாக மரணமடைகிறார்கள். அப்படி மரணிப்பவர்களால் விதவையாகும் பெண்களுக்கு மறுவாழ்வு அமையவும், திருமண வரையறைக்கு அப்பால் தகாத உறவு கொள்வதை தடுப்பதற்குமே பலதாரமணம் உதவுகிறது.
திருமணமாகாமல் மனமொன்றி (Living Together) உறவுகொள்ளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டுமென கூறும் நம் நாட்டின் மேல்நீதிமன்றங்கள் பலதாரமணம் கூடாதென அறிவுறுத்துவதில் வியப்பில்லை.
இவ்வளவும் கூறியதன் பின்னர் கவனிக்க வேண்டிய உண்மை நிலவரம் யாதெனில், விகிதாச்சார அடிப்படையில் முஸ்லிம்களிடத்தில்தான் பலதாரமணம் மிகக் குறைவாக காணப்படுகிறது. அதாவது 1991இல் வெளியான ஓர் அறிக்கைப்படி பழங்குடியினர், புத்தமதத்தவர், இந்துக்களிடையே முறையே 15.25, 7.97, 5.80 எனவுள்ள இவ்விகிதாச்சாரம் முஸ்லிம்களிடத்தில் வெறும் 5.73 என்னும் வீதத்தில் பிற சமூகத்தவரை விடவும் குறைவாகவே இவ்வழக்கம் காணப்படுகிறது.
தலாக்கும், உச்ச நீதி மன்றமும்
அடுத்து, உச்சநீதிமன்றத்தில் உள்ள தலாக், பலதார மணம் குறித்த விவாகாரத்திற்கு வருவோம். இவ்விவகாரத்தின் கதாநாயகர்களாக (அரிவாள் பிடிகளாக) இருபெண்கள் உள்ளனர்.
உத்தரகாண்டைச் சார்ந்த முஸ்லிம் பெண் ஷாயிரா பானு உச்சீதிமன்றத்தில் ஒருவழக்கு தொடர்ந்தார். “முத்தலாக் கூடாது!” என அறிவிக்கக் கோரிய வழக்கு அது. அதேபோன்று ஃபர்ஹா ஃபாயிஸ் என்ற முஸ்லிம் பெண் வழக்கறிஞர் வேறு சில முஸ்லிம் பெண்களுடன் சேர்ந்து கவன ஈர்ப்பு வழக்கு ஒன்றையும் தொடுத்தார்.
அதாவது தலாக் மற்றும் பலதார மணம் குறித்த விஷயங்களில் முஸ்லிம் பெண்களுக்கு முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கீழ் பாரபட்சம் காட்டப்படுவதகாவும் ஆங்கிலேயர் காலத்திலேயே நடைமுறைபடுத்தப்பட்ட
The Muslim Personal Law (Shariat) Application Act 1937 சட்டம், மற்றுமொரு சட்டமாகிய The Dissolution of Muslim Marriages Act, 1939 சட்டம் மற்றும் The Muslim Women (Protection of Rights on Divorce) Act, 1986 ஆகிய சட்டங்களில் பெண்களுக்கு உரிய பாதுகாப்புகள் இருந்துவந்தபோதிலும் முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தில் அங்கம் வகிக்கின்ற ஆண் அறிஞர்கள் பெண்களுக்கெதிரான போக்கு கொண்டிருப்பதாகவும் மேலும் அவ்வாறு தீர்வு தேடும் பெண்களுக்கெதிராக ஊடகங்களின் மூலம் கடுமையான எதிர்ப்புகளை காட்டி வருவதாகவும் அவர் அவ்வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமைநீதிபதியான டி.எஸ்.தாக்கூர் இதுகுறித்து தீர்க்கமான முடிவு ஒன்று எட்டப்பட வேண்டும் எனவும், தேவைப்பட்டால் தலாக் மற்றும் பலதாரமணம் குறித்த இஸ்லாமிய சட்டங்களை மீளாய்வு செய்து நாட்டுக்கு ஏற்றார் போல பொதுசிவில் சட்டம் உருவாக்கப்படுவது குறித்து கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பென்ச்சில் இவ்வழக்கைப் பட்டியலிட்டு விசாரிக்கலாம் எனவும் கூறியிருந்தார். மேலும் இவ்வழக்கு குறித்து கருத்து தெரிவிக்கும் படி மத்திய அரசு மற்றும் முஸ்லிம் தனியார் சட்டவாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தார்.
மோடி அரசு
‘சந்துல சிந்து பாடுறது’ என்பார் போல நம் நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டுவரத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் வழிகாட்டலின் கீழ் மத்தியில் ஆட்சிசெய்யும் ப.ஜ.க. அரசு தனக்கு முற்றிலும் சாதகமாக இவ்வழக்கை எடுத்துக்கொண்டுள்ளது.
முஸ்லிம்களின் குடும்ப வாழ்வில் எழும் பிரச்னைகளுக்கு குர்ஆனின் அடிப்படையில் தீர்ப்பளிக்க இந்திய அரசியல் சாசனம் பிரிவு 25இல் வழங்கியுள்ள உரிமையான மனசாட்சி அடிப்படையில் ஒரு மதத்தின் படி வாழவும், போதிக்கவும், பரப்புரை செய்யவும் (Freedom of conscience and free profession, practice and propagation of religion), பிரிவு 26இல் கூறப்பட்டுள்ள பொது ஒழுங்குக்கு உட்பட்டு மதத்தை நிர்வகிக்கும் சுதந்திரம் (Freedom to manage religious affairs Subject to public order), மேலும் பிரிவு 29இல் வழகப்பட்டுள்ள சிறுபான்மை மக்கள் நலன் பாதுகாப்பு (Protection of interests of minorities) உள்ளிட்ட சுதந்திரங்களை வேரோடு பிடுங்கி எறியும் பாதகச் செயலில் ப.ஜ.க. அரசு களமிறங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தலாக் மற்றும் பலதாரமணம் குறித்து குர்ஆன் கூறும் சட்டங்களுக்கு எதிரான கருத்துக்களைச் சமர்ப்பித்துள்ளது.
அத்துடன் பொது சிவில் சட்டம் கொண்டுவருவது குறித்து நாட்டு மக்களிடம் கருத்து கேட்குமாறு சட்டக் கமிஷனுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதனடிப்படையில் சட்ட கமிஷனின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கமிஷனின் சேர்மனான பல்பீர் சிங் சவ்ஹான் 16 கேள்விகள் அடங்கிய ஒரு வரைவை வெளியிட்டுள்ளார். (சட்ட கமிஷனின் இக்கேள்விகளை முழுவதுமாக புறக்கணிப்பதாக முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் அறிவித்துள்ளது.) “இஸ்லாமில் பெண்களுக்கு சமத்துவம் கிடைக்கவில்லை” எனவும் அரசியல் சாசனம் அடிப்படையில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக கலவரங்களை மூட்டிவிட்டு, அதில் முஸ்லிம் பெண்களைக் குறி வைத்து மானபங்கப்படுத்தும் இத்தீய சக்திகள்தான் ‘ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத’ கதை போல அறிக்கைகள் சமர்ப்பித்து வருகின்றன.
கொல்லைப்புறக் கதவு வழியாக ஒரு வீட்டினுள் நுழைந்து வீட்டில் உள்ளவர்களையும், உடமைகளையும் துவம்சம் செய்வதுபோல படிப்படியாக இந்திய முஸ்லிம்களிடமிருந்து குர்ஆனை தூரமாக்கிடும் கொடுஞ்செயலுக்கு வித்திடுகின்றன.
புனித குர்ஆனும், சட்டங்களும்
குர்ஆன் முழுவதிலும் மொத்தமாக 86 சட்டங்களே உள்ளன. வானங்களுக்கு மேலுள்ள அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ்தான் சட்டமியற்றும் அதிகாரமிக்கவன். சட்டங்களின் விளக்கங்களில்தான் ஒவ்வொரு விவகாரத்தின் தன்மைகளை வைத்து இஜ்மஃ, கியாஸ் என்னும் அடிப்படைகளில் இமாம்களும் மார்க்கத் தீர்ப்பு வழங்கிடும் தலைசிறந்த மார்க்க அறிஞர்களும் தமது கடமைகளை செய்கின்றனர்.
எனவே அவ்வாறு வழங்கப்படும் கூற்றுகளை அதை விட சிறந்த கருத்தின் அடிப்படைகளில் மாற்றியமைக்க முடியுமே அல்லாது சட்டங்களையே மாற்றும் அதிகாரம் இப்பூமியிலுள்ள எவருக்கும் இல்லை. அல்லாஹ் நிர்ணயித்த எல்லைகளில் (حدود) யாதொன்றையும் மனிதர்கள் தம் விருப்பு வெறுப்புகள் அடிப்படையில் மாற்றிடவோ அல்லது செல்லாததாக்கவோ அல்லது தடை செய்யவோ முடியாது. அவ்வாறு மாற்றப்படுவதை முஸ்லிம் சமூகம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது.
ஏனெனில் குர்ஆன் முஸ்லிம்களின் இறைநம்பிக்கையில் ஆறு தூண்களில் ஒன்றாகும். குர்ஆனின் எதாவதொரு சட்டத்தை ஏற்கமறுத்து அதற்கு மாற்றமாக ஒருவர் தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயன்றால் அவர் இஸ்லாமை விட்டே வெளியேறியவர் ஆவார்.
அரசியல் சாசனமும், முஸ்லிம்களும்
கடல் போலுள்ள இந்திய அரசியல் சாசனங்கள், மேலும் அதன் மற்ற பிரிவுகளான சிவில் குற்றவியல் சட்டங்களை இந்திய முஸ்லிம்கள் மதிக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. அதில் மிகச்சிறு பகுதிகளான குடும்ப விவகாரங்களில் மட்டுமே முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் கீழ் விடை காண முயல்கிறார்கள். அதையும் இல்லாமலாக்கி பொதுசிவில் சட்டம் எனும் அடிப்படையில் நாட்டுமக்களை ஒரே பொது சிவில் சட்டத்தின் அடிப்படையில் இணைக்க முயற்சிப்பது பூமியிலுள்ள உயிரினங்கள் யாவற்றையும் அழித்துவிட்டு எதேச்சதிகாரம் செய்வது போன்றதாகும்.
ஒரே சட்டத்தின் அடிப்படையில் தீர்வு காண முடியும் என்றிருந்தால் ஒரே மதநம்பிக்கை கொண்ட இரு வல்லரசுகளுக்கு மத்தியிலல்லவா இரண்டு உலகப்போர்கள் மூண்டன.
மதநம்பிக்கை அடிப்படைகளை அப்புறப்படுத்தி பொதுசிவில் சட்டம் மூலம் தீர்வு காண முடியுமாயிருந்தால் பள்ளிப்பாட நூல்களில் பொறிக்கப்பட்டுள்ள ‘தீண்டாமை ஒரு பாவச்செயல்’ என்ற அரசியல் சாசன அடிப்படையால் இந்து மதத்தில் இருந்துவரும் வர்ணாசிரமத்தை ஏன் இன்னும் ஒழிக்க முடியவில்லை?
வேற்றுமையில் ஒற்றுமை
ஆகவே பன்மைச் சமூகமாக வாழும் நம் நாட்டில் அவரவர் மத அடிப்படைகளையொட்டி வாழ்வதற்குரிய அங்கீகாரமும், பாதுகாப்பும் கொண்டிருப்பதில்தான் நாட்டின் நலனும் வளர்ச்சியும் அமைந்திருக்கும். வேற்றுமையில் ஒற்றுமை என்ற வார்த்தைகள் உரிய அர்த்தத்தை பெரும். அதற்கு மாற்றாக எடுக்கப்படும் எந்த முயற்சிகளும் நம்நாட்டின் ஆரோக்கியமான நலனுக்கு எதிர்வினைகளையே ஏற்படுத்தும். முஸ்லிம்களின் குடும்பங்களுக்கிடையேயான சிவில் விவகாரங்களில் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அறிவுரைகளின்படியே நடப்பார்கள்.
போற்றுதற்குரிய வல்ல ரஹ்மான் அனைத்தையும் அறிந்தவன்.
உதவிய குறிப்புகள்
01) F.India, Centre opposes triple talaq, polygamy in SC; calls gender equality non-negotiable,Oct 7, 2016
http://www.firstpost.com/category/india
02) The Indian Express,Illusion of legality, September 19, 2016
http://indianexpress.com/article/opinion/columns
03) Tafsir Ibn Kathir,
www.recitequran.com
04) Tamilil Quran Chapter 2 : Verse 229,
http://www.tamililquran.com/
05) The Indian Express,Triple talaq prevents men from killing wives: Muslim Law Board to Supreme Court,
http://indianexpress.com/article/india.
06) The Hindu, Triple talaq to be tested on ‘touchstone of Constitution’, says Supreme Court, June 30, 2016,
http://www.thehindu.com/news/national
07) Law Commission of IndiaMinistry of Law & Justice
08) All India Muslim Personal Law Board website
http://aimplboard.in/
09) https://indiankanoon.org
10) https://en.wikipedia.org/wiki/All_India_Muslim_Personal_Law_Board
11) Whatsapp conversation with Moulavi Khan Baqavi.
|