அது ஒரு மாரி காலம்! மேகத் திரைக்குள் ஒளிந்து கண்ணாமூச்சி விளையாடும் ஆதவன். விழுவதா வேண்டாமா என ஆழமாக சிந்தித்தபடியே கீழிறங்கும் தூவானம்.
பசுமை கொஞ்சும் தோட்ட நகரத்தை ஒரு குப்பை நகரமாக (garden city to garbage city) மாற்றும் முயற்சியில் மும்முரமாக இயங்கும் நவீன பெங்களூர்க்காரர்கள். எறும்புகளையே ஏக்கம் கொள்ள வைக்கும் அவர்களது சுறுசுறுப்பு!
அளவிற்கு அதிகமாக பஞ்சடைக்கப்பட்ட சிறு தலையணையைப் போல், பிதுங்கி நிற்கும் இப்பெருநகரின் போக்குவரத்து நெரிசல்.
மண் வாசனையோடு வீசும் குளிர்ந்த காற்றுக்கும், வாகனங்கள் பெருமூச்சு விட்டு கக்கும் நச்சுப் புகைக்கும் இடைவிடாத இழுபறிப் போட்டி.
கடும் நெரிசலைத் தவிர்ப்பதற்காக குறுக்குச் சந்துகளையும் சிறு பாதைகளையும் தேடி அலையும் தனியார் வாடகை வாகன ஓட்டிகளின் சாகசங்களோ, ‘ஆண்ட்ராய்ட்’ கைப்பேசியின் ‘கூகுள்’ வரைபட செயலியையே அவ்வப்போது தலைச்சுற்ற வைக்கும்.
ஊர்தியில் இருந்தபடியே இயற்கையையும் - செயற்கையையும் ஒரு சேர ரசித்தவர்களாய், முஹ்தார் அஹ்மதின் வீட்டை வந்தடைந்தோம் - நானும், எனது பெங்களூர் நண்பரான ரஞ்சித்தும்!
வெண்ணிற சட்டை, மருதாணி தோய்க்கப்பட்ட செம்பட்டைத் தலை, கருத்த தாடியில் ஒரு சில வெள்ளையர்கள், ஆடைக்கு ஒத்த மென்மையான குரல் என அமைதியின் உருவமாய் காட்சியளித்த இந்த 45 வயது மதிக்கத்தக்க கலைஞனின் உதடுகளில் கசிந்த மெல்லியப் புன்னகை எங்களை உற்சாகமாக வரவேற்றது.
முஹ்தார் அஹ்மத் உளூ செய்கிறார்!
சுவனத்தின் திறவுகோலான தொழுகையை நிறைவேற்றுவதற்காகவோ அல்லது கல் நெஞ்சையும் கரைய வைக்கும் அருள்மறையை ஓதுவதற்காகவோ அல்ல; ஓரு தியான நிலையை அடைவதற்காக!
‘மனம் - கண் - கை’ ஆகியன ஒன்றாக சங்கமிப்பதும் ஒரு தியான நிலைதானே...?
இத்தகைய தியான நிலையே, இந்நானிலம் இந்த கால் நூற்றாண்டில் கண்ட 50 சிறந்த ‘அரபு வனப்பெழுத்து வரைகலைஞர்களுள் (Arabic Calligrapher; العربي خطاط)’ ஒருவராக இவரை உருவாக்கியுள்ளது.
துருக்கியைச் சார்ந்த ’இஸ்லாமிய வரலாறு, கலை & பண்பாட்டு ஆய்வு மையத்தில்’ பட்டயம் (إجازة) பெற்ற முதல் & ஒரே இந்தியர் எனும் மகத்தான பெருமையையும் வழங்கிற்று!
ஆம், 125 கோடி இந்தியர்களுள் இவர் தனி ஒருவர்!
பாரம்பரியக் கலை
பழங்காலந்தொட்டே, இஸ்லாமிய காண்கலைகளின் (Islamic Visual Arts) உச்சமாகவே ‘அரபு வனப்பெழுத்து வரைகலை (Arabic Calligraphy; العربي الخط)’ கருதப்படுகிறது. இந்த உண்ணதக் கலையின் வல்லுநர்கள் துவக்கமாக அல்-குர்ஆனின் வாசகங்களையே அழகுற எழுதியதால், இதற்கு ‘இஸ்லாமிய வனப்பெழுத்து வரைகலை (Islamic Calligraphy; الإسلامي الخط)’ என்றொரு பெயரும் உண்டு.
வழமையான கையெழுத்துகளிலேயே கலை வடிவம் காணும் தன்மை கொண்ட இவ்வேத மொழியின் எழுத்துக்களை, வனப்பெழுத்து வரைகலை நுட்பத்தோடும் - விதிகளோடும் எழுதும்போது, அது உண்டாக்கும் கலைப் படைப்பின் அழகைச் சொற்களால் விவரிக்க இயலாது.
அத்-தன்ஸீலின் வசனங்களைத் தொடர்ந்து, ஹதீதுகள், கவிதைகள், பொன்மொழிகள், அரசாணைகள், நீதிமன்ற ஆவணங்கள், கதைகள் ஆகியன அழகிய கையெழுத்துக்களில் பதிக்கப்பட்டன.
காகிதம், தோல், துணி, உலோகம், பீங்காண், மரக்கட்டை, கல், கண்ணாடி, தந்தம், கட்டிடம் என பலவற்றின் மீதும் எழுதப்பட்ட இக்கவின்மிகு எழுத்துக்கள், பாரம்பரியமிக்க நாணல் எழுதுகோல்களைக் கொண்டு (reed pen; القلم القصب) பெரும்பாலும் கருப்பு மையினால் எழுதப்பட்டது.
அரபு உலகம் (அரேபிய்யா முதல் மொரோக்கோ வரை), உதுமானிய பேரரசு (தற்கால துருக்கி) மற்றும் பாரசீகம் (தற்கால ஈரான்) என வெவ்வேறு பிராந்தியங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்ததால், இக்கலை பல்வேறு அழகிய எழுத்து வடிவங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு வடிவம் மற்றொன்றை விட எழுத்தாக்க அமைப்பிலும், தன்மையிலும், பேண வேண்டிய விதிகளிலும் முற்றிலுமாக வேறுபடுகிறது. அவற்றின் நோக்கங்களும், தேவைகளும் கூட வெகுவாகவே வேறுபடுகிறது.
அல்-ஃபுர்கானின் வசனங்களை ’முஹக்கக் (محقَّق)’ போன்ற வடிவத்தினால் தெளிவாகவும், திருத்தமாகவும் எழுதினர். கவிதைகளுக்கு நளினம் மிகவும் அவசியம் என்பதால், ’நஸ்தஃலீக் (نستعلیق)’ அதற்கு உகந்ததாக அமைந்தது.
வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் இலகுவாக இருக்கும் ’ரிக்ஃஆ (رقعة)’ போன்ற வடிவங்கள், தனிநபர் தொடர்புகளில் பயன்பட்டன. அதிகாரத் தோரணை மிக்கதாகவும், மோசடிகளை தடுக்கும் வண்ணம் சிக்கலானதாகவும் உள்ள ’தீவானீ (ديواني)’ போன்ற வடிவங்களை அரசாணைகளில் பயன்படுத்தினர்.
பண்பாட்டுச் சின்னமாய் அமைந்திட்ட, இப்பாரம்பரிய கலையின் மீதுள்ள ஆத்மார்த்தமான ஈர்ப்பே, பல நூற்றாண்டுகள் தொன்றுதொட்டு இறையச்சத்தோடும் (தக்வா), உளத்தூய்மையோடும் (இஃக்லாஸ்) ஈடுபடும் கலைஞர்கள் பலரையும் இன்றளவும் உருவாக்கி வருகிறது.
வாழ்க்கைச் சக்கரம்
விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் முஹ்தார் அஹ்மத். தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூரின் சிறிய மிதிவண்டிக் கடை ஒன்றில் பதிவாளராக வேலை செய்தார். மிதிவண்டிகளின் சக்கரங்களோடு சுழன்ற தனது வாழ்க்கைப் பயணம், ஒரு சகாப்தமாக மாறுமென அன்று இவர் அறிந்திருக்கவில்லை.
உருது எழுத்துக்களை இவர் அழகுற எழுதுவதைக் கண்டு வியந்த அக்கடையின் வாடிக்கையாளர்களுள் ஒருவர், உள்ளூர் உஸ்தாதுகளிடம் அறிமுகம் செய்து வைக்க, இவருக்குள் ஒளிந்திருக்கும் திறமை அன்று இனங்காணப்படுகிறது.
அமெரிக்காவின் ஈத் - நாள் சிறப்பு தபால் தலையை (US Eid Postage) வடிவமைத்த, புகழ்பெற்ற வனப்பெழுத்து வரைகலைஞரான முஹம்மது ஜக்கரியாவிடம், அரபு மொழியில் கைவண்ணம் தீட்டும் இக்கலையைக் கற்கலானார். சுமார் நான்காண்டு காலம் அஞ்சல் மூலம் நிகழ்ந்த இத்தொடர்பினால், இவர் பெற்றது கல்வி மாத்திரம் அல்ல, பரந்த நட்பு வட்டத்தையும்தான்.
இத்தரணியின் தலைசிறந்த அரபு வனப்பெழுத்து வரைகலை வித்தகரான துருக்கியின் ஹசன் ஜெலபீயிடம் (جلبي حسن) முறையாக பயின்று, ’துலுத் (ثلث)’ மற்றும் ’நஸ்ஹ் (نسخ)’ எழுத்து வடிவங்களில் கைத்தேர்ந்தவராய், 2013-ஆம் ஆண்டு துருக்கியில் பட்டயம் பெற்றார் முஹ்தார் அஹ்மத்.
சிகப்பு கம்பள வரவேற்பு
பற்பல நாடுகளில் நடைபெறும் கருத்தரங்குகளிலும், கண்காட்சிகளிலும் முஹ்தார் அஹ்மதுக்கு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
சென்ற ஜூலை மாதம் எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் நடந்த உலகளாவிய அரபு வனப்பெழுத்து வரைகலைப் போட்டியில் கலந்து கொண்ட 700 கலைப்படைப்புகளில், இவரது அழகிய ஆக்கத்திற்கு நடுவர் குழு இரண்டாம் இடம் வழங்கி கண்ணியப்படுத்தியது.
இவரால் அச்சமயம் கெய்ரோ பயணிக்க இயலாததால், அப்பரிசை - எகிப்திற்கான இந்திய அரசு தூதர் சஞ்சய் பட்டாச்சார்யா பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பல இலட்சங்கள் வரை விலைபோகும் இவரது ஆக்கங்கள், பல்வேறு தேசங்களில் எண்ணற்ற இல்லங்களை அலங்கரிக்கின்றன; அதில், கனடாவிலுள்ள ஓர் இறை இல்லமும் அடக்கம்.
இவரது நாணல் எழுதுகோலைப் பின்தொடர்ந்து சென்று, அது உருவாக்கும் ஆக்கங்களை உற்று நோக்குகையில், அந்த எழிலான எழுத்துக்களின் நுட்பமான வளைவுகளும், நெளிவுகளும் புதியதோர் உலகிற்கே என்னை அழைத்துச் சென்றது எனலாம்!
அவ்வாக்கங்களின் அழகில் சிறிது நேரம் லயித்து, பின் அவற்றோடு சொற்களேயில்லாத ஒரு விசித்திர மொழியில் உரையாடியத் தருணம், இக்கலை பயணித்து வந்த நீண்ட பாதைகளும், அதனை வளர்த்திட்ட மாமனிதர்களது செழிப்பான வாழ்க்கைகளும், செம்மையான பண்பாடும் என் மனத்திரையில் வந்து போயின.
கற்பது கற்பிப்பதற்கே!
அதிக இஸ்லாமியர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தும், அரபு வனப்பெழுத்து வரைகலை குறித்த ஆர்வமும் விழிப்புணர்வும் இங்கு கடுகளவே இருப்பது கசப்பான உண்மை.
இந்த அரிய கலையை நம் தேசத்தில் பரப்பும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளார் முஹ்தார் அஹ்மத். பெங்களூரில் இயங்கி வரும் “இந்திய-இஸ்லாமிய கலை & பண்பாட்டு நிறுவனம் (Institute of Indo-Islamic Art and Culture)” எனும் தனது கல்வி மையத்தின் மூலம், அரபு வனப்பெழுத்து வரைகலையை மாணவர்களுக்கு முறையாகக் கற்பிக்கிறார். ஞாயிறு தோறும் நடைபெறும் இவ்வகுப்புகளுக்கு, இவர் கட்டணம் ஏதும் வாங்குவதில்லை.
ஆமை போல் நகரும் ஊர்திகளுக்கு நடுவே, அதிவேகமாக இயங்கும் அன்றாட வாழ்க்கைகளுக்குச் சொந்தக்காரர்கள் இந்த பெங்களூர்வாசிகள். முஹ்தார் அஹ்மத்தின் இலவச வகுப்புகள் இவர்ளுக்கு ஓரு வரமாகவே காட்சியளிக்கிறது.
தியான நிலையில் விந்தை புரிய வைக்கும் இந்த வனப்பெழுத்து வரைகலையானது, வாழ்வாதாரத்திற்காக வாரத்தின் ஐந்து (அல்லது ஆறு) நாட்களும் கால்களை தொங்கவிட்டபடி கணினியே கதி என கிடக்கும் மாதக்கூலி மாந்தர்களின் மன அழுத்தத்திற்கு மருந்தாக அமைகிறது.
எட்டு வயது சிறார் முதல் எழுபது வயது பெரியவர் வரை, இவரது வாராந்திர வகுப்புகளை ஆவலோடு பலரும் எதிர்ப்பார்க்கின்றனர். இம்மாணாக்கருள் முஸ்லிம்கள் அல்லாத பிற மதத்தினரும் அங்கம் வகிப்பது, நம் நாட்டின் பலதரப்பட்ட மக்களிடமும் இக்கலை வெகுவாக பரவுவதற்கும், மத நல்லிணக்கத்திற்கும் அத்தாட்சியாக விளங்குகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, சஊதி அரபிய்யா போன்ற நாடுகளின் மாணவர்கள் பலரும், இணையதளத்தின் மூலம் இக்கலையை முஹ்தார் அஹ்மத்திடம் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
வாழ்வின் பல்வேறு சமயங்களில் பல விதமான மனிதர்களை நாம் சந்திக்க நேரிடும்; அதில், ஒரு சில ஆளுமைகளின் தாக்கம் பல காலங்களுக்கும் நம் மனதில் பதிந்திருக்கும். முஹ்தார் அஹ்மத்துடனான எனது இந்த இரண்டு மணி நேர சந்திப்பும் அத்தகையதுதான்.
தெலங்கானாவில் துவங்கி, இஸ்தான்புல் வழியாக - கெய்ரோ வரை நானும் இவருடன் கைகோர்த்து பயணித்தது போன்ற உணர்வு எழுந்ததே அதற்குச் சான்று!
தனக்கு உதவி கரம் நீட்டியவரையும், உஸ்தாதுகளையும் முறையே நினைவுகூர்ந்ததோடு நில்லாமல், இவ்வெற்றியை தனக்கு சாத்தியப்படுத்திய ஈருலக இரட்சகனுக்குப் பல முறை நன்றிகளை உரித்தாக்கினார் முஹ்தார் அஹ்மத்.
இவரை சந்திக்கும் வாய்ப்பை அளித்ததற்காக, நானும் படைத்தவனை மனதாரப் போற்றினேன்.
-----------------------------------------------------------------------------------
அது ஒரு கோடை காலம்!
காயல்பதியில், காலை எட்டு மணிக்கே உச்சி வெயிலின் வெப்பத்தை உணர முடிந்தது. மின்விசிறிகளோ, அனல் காற்றை அதிவேகமாகக் கக்கும் கருவிகளாகவே மாறியிருந்தன.
வலியோரது வீடுகளிலிருக்கும் குளிரூட்டிகளின் பின்புறமிருந்து வரும் சூடான காற்று, அண்டை வீட்டார்களின் நிலைமையை இன்னும் மோசமானதாக மாற்றிக்கொண்டிருந்தது.
புகைவண்டியின் பெட்டிகளைப் போல் வரிசையாக அடுக்கப்பட்ட வீடுகளை கொண்ட இந்நகரின் பல தெருக்களில், மரங்களுக்கு இடமே இல்லை.
திருமண நிகழ்வுகளில் பல்லாங்குழி அதிகமாக விளையாடிப் பழகியதாலோ என்னவோ, தெருக்களும் கூட பள்ளமும், குழியுமாகவே காட்சியளிக்கிறது.
இரு சக்கர ஊர்திகளில் பள்ளிக்குச் செல்லும் நவ நாகரிக மாணவர்களின் வேகமோ, விமான ஓட்டிகளையே வாயைப் பிளக்க வைக்கும்!
வரலாற்றுப் புகழ் பெற்ற ‘சின்ன மக்கா’வின் தற்போதைய தெருக்களது நிலையை விவாதித்தவர்களாய், அரபி ஹாஜியாரின் வீட்டை வந்தடைந்தோம், நானும் நண்பர் கவுஸ் முஹம்மதும்!
உள்ளூர் நாயகன்: அரபி ஹாஜியார்!
கடின உழைப்பிற்கும், வயோதிகத்திற்கும் சாட்சியளிக்கும் ஒரு மெலிந்த தேகம். பேனா சொருகிய வெண்ணிற உட்சட்டை. கைலியின் மேல் இறுக்கமாகக் கட்டிய (இடுப்புப் பையுடன் கூடிய) அரைக்கச்சு. வீட்டிற்குள்ளும் தொப்பியுடனேயே காட்சியளித்த அரபி ஹாஜியாரின் கருத்த உதடுகள் எங்களை அன்போடு வரவேற்றது.
முஹம்மத் முஹ்யித்தீன் எனும் இவரது இயற்பெயரை ஒரு சிலரே அறிந்திருப்பர். நமதூரின் எண்ணற்ற வீடுகளது முகப்புகளிலும், பள்ளிவாசல்களிலும் பலகைகளிலும் அரபு எழுத்துக்களை அழகுற பதிக்கும், நவீன காயலின் ஒரே “கல் செதுக்குக்கலை வல்லுநர்தான் (Stone Carving Expert)” இந்த அரபி ஹாஜியார்.
ஆம், ஐம்பதாயிரம் காயலர்களுள் இவர் தனி ஒருவர்!
நமதூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பிற இடங்கள் & இலங்கையிலும், தமிழ், அரபு, ஆங்கிலம் & மலையாளம் என பல மொழிகளின் எழுத்துக்களையும் தனது கைவண்ணத்தால் பதித்துள்ளார்.
கல் செதுக்குப் பணியை ஒரு இபாதத்தாக எண்ணியே செய்கின்றார், இந்த 87 வயது இளைஞர்!
இரு உளிகள், ஒரு நோட்டுப் புத்தகம், ஒரு பேனா, ஒரு பென்சில், இரு வரைகோல், ஒரு துணிப் பை - இவையே இவரது நெருங்கிய நண்பர்களாவர்.
கட்டிடங்களில் எழுத்துக்களைச் செதுக்கும்பொழுது கண்களுக்குள் சிக்கிக்கொள்ளும் சிறு துகள்கள், கீழே விழுந்து ஏற்படும் காயங்கள் என பல உபாதைகளை உதாசீனப்படுத்திக் கழிந்த தனது முப்பத்தைந்து வருட கால கலை வாழ்வில், செதுக்கு வேலைக்காக இவர் அதிகமாக பெற்ற சம்பளம் வெறும் இரண்டாயிரம் ரூபாய்தான்!!!
யாரிடமும் கற்காத இப்பிறவிக் கலைஞரின் ஊதியம் மிகக்குறைவாக இருந்ததை அறிந்து கூட ஏற்படாத வருத்தம், இவரின் கீழ்வரும் வார்த்தைகளால் என் இருதயத்தில் முட்களாய் பாய்ந்தது: “இதுவரை யாரும் என்னிடம் இக்கலையை பயின்றதில்லை.”
“கடல் போல் இருக்கும் இவரது கலையறிவில் வெறும் கையளவு கூட கற்பதற்கு இக்காயலில் ஆளில்லாமல் போனதே!” - எனது மனதில் உதித்த அதே கேள்வியை நண்பர் கவுஸ் முஹம்மதின் உதடுகளும் உச்சரித்தன.
நமதூரின் இன்ன பிற அவலநிலைகளை அலுப்போடு அசைபோட்டவர்களாய், நாங்கள் இருவரும் வீடு திரும்பினோம்!
மறுநாள், ஒரு இல்லத்தின் சுவற்றில் கலிமாவை செதுக்குவதற்காக சென்றார் அரபி ஹாஜியார். அக்களப்பணியைப் பார்வையிட, அவரின் மிதிவண்டியை நான் பின் தொடர்கையில், முஹ்தார் அஹ்மத் கூறிய தனது ஆரம்பகால மிதிவண்டி கடை வாழ்கை எதேச்சையாக என் நினைவிற்கு வந்தது. இவ்விருவருக்கும் உள்ள ஒற்றுமையை எண்ணி மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்!
------------------------------------------------------------------------------------
வேண்டும் காயல் கலைஞர்கள்
முற்காலத்தில் ’அரபுத் தமிழ்’ எனும் ஓர் அழகிய கலப்பு எழுத்து வடிவத்தை உருவாக்கிய பெருமை நமதூருக்கு உண்டு. ஆனால்... அதனைக் குழிதோண்டிப் புதைத்த தலைமுறையைச் சார்ந்தவர்கள் என்ற பெருமைதான் நமக்கு எச்சம்!
அரபு எழுத்துக்களை வசீகரமாக எழுதுவதில் கைதேர்ந்தவர்கள் நமது இல்லங்களில் பலர் இருந்தும், அதனை வனப்பெழுத்து வரைகலையாக மாற்றியவர்களைக் காண்பது மிகவும் அரிது. நமக்கு அருகாமையிலேயே வல்லுநர் இருந்தும், கல் செதுக்குக்கலையில் நாம் ஆர்வமில்லாமலிருப்பது வேதனையான ஒன்றே!
ஹாஃபிழ்களையும், ஆலிம்களையும் உருவாக்கும் நமதூரின் மத்ரஸாக்கள், இக்கலைகளை பயிற்றுவிக்கவும் முன்வர வேண்டும்.
வனப்பெழுத்து வரைகலைத் துறையில் தேர்ந்த வல்லுநராக உருவாகிட கால வரையறை ஏதும் இல்லாததால், மதரஸாக்களின் ஆரம்ப வகுப்புகளிலிருந்தே இதனை ஒரு பாடமாக அறிமுகம் செய்யலாம். ஓவியக் கலையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது போல், முஸ்லிம்களால் நிர்வாகிக்கப்படும் பள்ளிக்கூடங்களிலும் இக்கலையைப் பிரபலப்படுத்தலாம்.
காயல்பட்டினத்தின் வரலாற்றுச் சிறப்பைச் சுருக்கமாக நான் கூறியதை ஆர்வத்தோடு கேட்டறிந்து, “முகாமிற்கு ஏற்பாடு செய்யுங்கள். நிச்சயம் வருகிறேன்,” என முழு மனதோடு விருப்பம் தெரிவித்தார் முஹ்தார் அஹ்மத்.
இவரின் ஒரு நாள் அறிமுக முகாமையும், ஒரு வார கால பயிற்சி முகாமையும் நமதூரில் நடத்திட வேண்டியவனாய் (அதன் பின், இணையம் மூலம் கற்கலாம்), இவரது தொடர்பு விபரங்களை கீழே தருகிறேன்.
முஹ்தார் அஹ்மத்
இந்திய-இஸ்லாமிய கலை & பண்பாட்டு நிறுவனம்
(Institute of Indo-Islamic Art and Culture)
பியரீஸ் ஹொரைஜான் (Bearys Horizon),
21, உட் தெரு (Wood Street)
பெங்களூரு – 560025
தொலைபேசி எண்: +91 80 2227 3124 / 2531 7777
கைப்பேசி எண்: +91 9845 788 484
வலைதள முகவரி: http://iiiac.org/
மின்னஞ்சல்: info@iiiac.org
முகநூல் பக்கம்: https://web.facebook.com/iiiac/
முஹ்தார் அஹ்மதின் கைகளால், அரபி ஹாஜியாருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ ஒன்றைக் கொடுத்து கவுரவிப்பது, இம்முகாமினை மேலும் அழகூட்டும்.
நல்ல மலருக்கும், அதன் நறுமணத்திற்கும் உள்ள உறவைப் போன்றது, இக்கலைகளுக்கும், அதனை வடிக்கும் கலைஞர்களுக்கும் உள்ள இனம்புரியாக் காதல்!
இவர்களைப் போன்ற எழுத்துக்களின் காதலர்களது உளிகளின் ஓசைகளும், எழுதுகோல்களின் கூர்மையான நுனியிலுள்ள மையும், இப்புவியின் வரலாற்றில் காலங்களைக் கடந்த சுவடுகளாய் இக்காதல்களுக்கு சாட்சியம் கூறும்.
------------------------------------------------------------------------------------
முக்கிய மேற்கோள்கள்
|