“நவம்பர் 8” ஜனாதிபதி தேர்தல் என பல நாட்களுக்கு முன்பே அமெரிக்காவின் பக்கம் திரும்ப வைத்த உலக நாடுகள் அனைத்தையும் சில மணித்துளிகளிலேயே “இந்தியா” வின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்ததுதான் பிரதமரிடம் 500, 1000 ரூபாய் நோட்டுக்களைப் பற்றிய சங்கதி.
அண்டை நாட்டிலிருத்து கள்ளப்பண இறக்கம், கருப்புப்பண ஒழிப்பு என பலதரப்பட்ட காரணங்களை கட்டவிழ்த்தும், வருவான வரித்துறைக்கு வருவாய் போன்ற பல வியூகங்களின் அடிப்படையில் திடீரென மத்திய அரசு எடுத்த முடிவு பாமர மக்கள் முதல், அரசியல் வாதிகள், அதிகாரிகள், வணிகர்கள், சிறு வியாபாரிகள் வரை அனைவரையும் ஆட்டம் காண வைத்துவிட்டது.
நம்மில் பலரது நிலை - கையில் பணமிருந்தும் செலவழிக்க முடியாத நிலை தடுமாற்றத்தை தந்தது உண்மைதான்! இச்சூழலில் வஞ்சித்து வசைபாடுவதை விட்டுவிட்டு, இதற்கு சரியான தீர்வை எடுப்பது மட்டுமல்ல நமது சாமர்த்தியம், இன்ணொமொரு முக்கியப் பணியை நாம் செய்வதற்குத்தான் இறைவன் இதன் முலம் இப்பாடத்தை நமக்கு புகட்டியுள்ளான் என்றெண்ணத் தோன்றுகிறது.
அது என்னவெனில், இவ்வுலக வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சந்தோசமான சம்பவங்களை எண்ணி இறைவனுக்கு நன்றியுரைத்து, இதைவிட சிறந்ததை மறு உலகில் தா! என கேரிக்கை வைத்தும், ஒவ்வொரு சந்தோசமற்ற சங்கடமான நிகழ்வுகளின்போது அவனிடமே பாதுகாப்பும் பாவமன்னிப்பும் இதற்கு பகரமாக மறு உலகில் நன்மையைத் தா என தாழ்மையுடன் கேட்கும் போதும் சரி எப்போதுமே உலக வாழ்வோடு மறுஉலக வாழ்க்கையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஏராளமான படிப்பினைகளையும், நல்லதொரு மாற்றங்களை நம்மில் ஏற்படுத்த வழிவகுக்கும்.
நம்மிடையே சிலர் சில நாள் முன்பு வரை 500, 1000 ருபாய் நோட்டுக்களை யாருக்கும் கொடுக்க மனமின்றியும், வறியவர்கள் பலர் யாரும் தரமாட்டார்களா? என்றெண்ணிக் கொண்டுமிருந்த நிலை மாறி இன்று “இதோ! வைத்துக் கொள்ளுங்கள்!!” என அதே பணத்தைப் பலர் கொடுக்க முன்வந்தால் கூட வாங்க மறுக்கும் சூழலானது - “ஒரு காலம் வரும், அப்போது யாரும் வாங்க முன் வரமாட்டார்கள்” என்று மறுமையின் அடையாளங்களில் ஓர் அடையாளமாக கூறிய நம் நபியின் கூற்று நம் நினைவுக்கு முன் நிழலாடி எச்சரிக்கிறது.
அரசானது அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு அதிலிருந்து விடுபட குறிப்பிட்ட காலத் தவணையில், அரசு அடையாளச் சான்றுடன் அப்பணத்தை வங்கிகளில் சமர்ப்பித்து, மாற்றுப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் படி சலுகையை அறிவித்தும் - பெரும்பான்மையோர் இப்பிரச்சனைக்கு சட்டச்சிக்கலின்றி, வருமான வரித்துறையின் பிடியில் சிக்காது வெளிவர, செல்லாக் காசாகக் கூடிய (நம் மரணத்தின் பின்) இப்பணத்தைப் பற்றி இரவு தூக்கமின்றி இன்னலுற்றுக் கொண்டிருப்பதைப் போன்று என்றாவது ஒரு நாள், நாளை மறுமையிலே செல்லாது என இதே போன்று நம் அமல்கள் எல்லாம் எடுத்தெறியப்பட்டுவிட்டால் நமது நிலை என்ன என்பதை எண்ணி, நம் தூக்கத்தை தொலைத்ததுண்டா?
எவ்விதச் சலுகையோ, காலத் தவணையோ, பிரதி ஆவணங்களையோ, பொன்னையோ, பொருளையோ, பணத்தையோ, கொடுத்து சரிகெட்ட முடியாத சூழலை எண்ணியதுண்டா? இதை நம்மில் ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்துகொண்டால் சுலபமாக வெற்றியடைய வாய்ப்புண்டு நமக்கு.
(78:31) “நிச்சயமாக இறையச்சமுடையோருக்கு வெற்றியுண்டு குர்ஆனின் இவ்வசனத்தின் படி!
அல்லாஹ் நாடினால் எதையும் நொடிப்பொழுதில் மாற்றியமைக்கக் கூடிய ஆற்றலுள்ளவன்.
“நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்” என்ற இறைமறை வசனத்தைப் பலமுறை ஒதிவரும் நாம், இன்று ஒரே இரவில் பல கோடிகளை கையில் வைத்திருக்கும் கோடீஸ்வரர்கள் கூட சில மணித்துளிகளில் சில்லறைக்காக சிங்கியடித்துக் கொண்டிருப்பதின் மூலம் இவ்வசனத்தின் ஆழம் நம்மைத் தட்டியெழுப்புகிறது. மேலும் “இவ்வுலகம் இறைவனின் பார்வையில் செத்த ஆட்டிற்குச் சமம்” என்ற இறைத் தூதரின் பொன்மொழியும் நம்மை சிந்திக்க வைக்கிறது.
புதிய அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள “டிரம்ப்”பாக இருந்தாலும் சரி, இறைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர முயற்சிக்கும் பாரதப் பிரதமர் “மோடி” யாக இருந்தாலும் சரி! நீங்கள் மற்றவர்களை ஆட்டம் காண வைப்பதெல்லாம் சில காலம்தான். ஆனால் நீங்களே ஆட்டம் காணக் கூடிய ஒரு நாள் வருவது வெகு தூரமில்லை! அதற்கு முன் இஸ்லாமை உங்கள் வாழ்வியலாகக் கொண்டு, இறைமறை வழியின் பாலும், தூதரின் கூற்றின் பேரிலும் வாழ முயற்சித்தால் உங்களுக்கும் உண்டு வெற்றி!
இஸ்லாம் என்பது மிகவும் இனிமையானது, இறைவன் மன்னிப்பவனாகவும், கருணையாளனாகவும் இருப்பதால்தான் நம்மை இன்னும் கண்டிக்காமல் அவகாசம் தந்துள்ளான். இதை நாம் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும். பணமென்னும் பேராசையால் உடன்பிறப்புக்களிடையே உறவுகள் சிதையுண்டு இருக்கும் நிலைமாறி உரியவர்களிடம் ஒப்படைத்து உன்னதமாய் ஒற்றுமையாய் வாழ முயற்சிக்க வேண்டும் மாற்றம் செய்த ஒவ்வொருவரும் மரணம் வருமுன்னே.
“பிறக்கும் போது கூட வந்தது இந்த பணமுமல்ல”
“இறக்கும் போது கூட வருவது இந்த பணமுமல்ல”
இடைப்பட்ட காலத்தில் இருக்கும் இப்பணம்
நாளை மறுமையில் நம்மை சோதனைக்குள்ளாக்கி
விடக் கூடாதென்பதில் பணத்தை கவனமாய் கையாள
வேண்டும். நம்மையறியாது கூட பணத்திற்கு
நாம் அடிமையாகி விடக் கூடாது.
அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே நாம் அடிமை!!! |