“உமரின் ஆட்சி இங்கு வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறைந்த இந்தியா உருவாகும்” என்றாராம் தேசத் தந்தை மகாத்மா காந்தி... இன்று இந்த காந்தி தேசத்தில் காந்தியையே இருட்டடிப்பு செய்ய நினைக்கும் ஒரு கூட்டம்...
கள்ள நோட்டு அழிப்பு... கறுப்புப் பண ஒழிப்பு... என தங்கள் அடுத்த நாடகத்தை ஆரம்பித்து விட்டார்கள். பெரும் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள்தான் கறுப்புப் பணங்களின் அஸ்திவாரம் என்று கூறிக்கொண்டு, அதை செல்லாததாக்கியவர்கள் அதை விட பெரும்... மதிப்பு கொண்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தி தங்கள் உண்மையான நோக்கம் அதுவல்ல என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.
இந்தியாவிலிருந்து காந்தியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதன் ஆரம்பக்கட்டம்தான்... மூ.மேத்தா அவர்கள் சொன்னது போல, ரூபாய் நோட்டின் ஒரு பக்கம் கண்ணாடி போட்ட காந்தி... மறுபக்கம் காந்தியை போட்ட கண்ணாடி...
அவர்களின் புராண இதிகாச நம்பிக்கைப்படி, யாருக்குமே புரியாத அவர்களின் தேவர்கள் மட்டுமே பேசக்கூடியதாக அவர்கள் நம்பும் தேவநாகரி எழுத்துக்களில் எண்கள்... என்று ஆட்சியில் இருக்கும் எஞ்சிய இரண்டரை வருடங்களில் நாட்டின் ஒட்டுமொத்த வர்ணத்தையும் மாற்றுவதின் அச்சாரமாகவே ரூபாய் நோட்டின் வர்ணத்தை பஞ்சு மிட்டாய் கலருக்கு மாற்றியிருக்கிறார்கள்... அதுவும் எழுத்துப் பிழைகளோடு... நாட்டின் மானத்தைக் காற்றில் பறக்க விட்டிருக்கிறார்கள்.
வட்டியின் பக்கம் போக வேண்டாம் என வங்கியை விட்டும் ஒதுங்கியிருக்கும் முஸ்லிம்கள்...
வங்கி ஊழியர்களின் ‘பலமான’ உபசரிப்புக்குப் பயந்து வங்கிப் பக்கம் போவதையே வெறுத்தொதுக்கும் ஏழை மற்றும் சிறு வியாபாரிகள்
பாமர மக்களை விழி பிதுங்கச் செய்யும் வங்கி நடைமுறைகளுக்கு அஞ்சியே வங்கிகளை நாடாது வாழும் நாட்டின் முதுகெலும்பான கிராமத்து மக்கள்
வேலைப் பளுவின் காரணமாக வங்கியின் பக்கம் தலை வைத்துக் கூட படுக்காத இல்லத்தரசிகள்
என இவர்களையெல்லாம் ஒட்டு மொத்தமாகக் குறி வைத்து வங்கிகளின் வலைக்குள் இவர்களை இழுத்துப் போடப் பொறி வைத்திருக்கிறது இந்த அரசாங்கம்!
இல்லத்தரசிகள் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த சிறுவாட்டுக் காசு முதல்... மீனவர்கள் விற்ற கருவாட்டுக் காசு வரை... வங்கிகளுக்குள் கொண்டு வந்து... அந்தப் பணங்களை எல்லாம் அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் கடன்களாக வாரி வழங்கி... மக்களின் கரங்களில் தூசு படாத திருவோட்டைத் தர தயாராகிவிட்டது.
அலைபேசிகள் வந்ததுதான் வந்தது... “லோன் வேணுமா...!” “லோன் வேணுமா...!” என்று நம் கழுத்தைப் பிடித்துக் கடனில் தள்ளும் பசப்பு வார்த்தைகளும், இனிப்புத் தூவிய கசப்பு விஷங்களும்... ஏற்கனவே நெட்டித் தள்ளுகிறது. இப்போதோ... இதெல்லாம் வேண்டாம் என்று அமைதியாக ஒதுங்கி இருப்பவர்களையும் வம்படியாக வங்கி வலைக்குள் சிக்க வைத்து... இருக்கிற கோவணத்தையும் அவிழ்த்து விட ஆளாய்ப் பறக்கிறது இந்த அரசாங்கம்..
இதுதான் டிஜிட்டல் இந்தியாவாம்...! கேஷ்லெஸ் இந்தியாவாம்...!! இங்கு எழுபது சதவீத மக்களுக்கு கஞ்சிக்கே வழியைக் காணோம்...!! அவர்களைக் கடன் அட்டையில் காய்கறி வாங்கு என்று கூறி, போகாத ஊருக்கு வழி காட்டுகிறார்கள். இதுநாள் வரை... இருக்கிறவனை எல்லாம் அரை கிலோ சர்க்கரை வாங்கவும் அரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சூப்பர் மார்கெட்டிற்கு காரில் பயணிக்க வைத்து, வேண்டாத பொருட்களை எல்லாம் ஆயிரக்கணக்கான ரூபாய்க்குத் தலையில் கட்டி கடன் அட்டையைத் தேய்த்து தேய்த்து அவன் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருப்பது போதாது என்று இப்போது இல்லாதவர்களையும் தங்கள் கைப்பொம்மைகளாக்கி ஆட்டுவிக்கும் பொம்மலாட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
கல்வி, மருத்துவம் போன்ற மக்கள் சேவைகளையெல்லாம் தனியார்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு..., தனியார்களுக்கும், பெரும் பண முதலைகளுக்கும் வால் பிடிக்கும் ஓர் அரசாங்கம்... ஏழை பாலைகள் சம்பாதித்த பணத்தையெல்லாம் கால் கடுக்க வங்கியின் காலடியில் கொண்டு வந்து கொட்ட... அதை அப்படியே அலேக்காகத் தூக்கி பெரும் பணப் பெருச்சாளிகளுக்குக் கடன் தள்ளுபடி என்ற பெயரிலே அள்ளிக் கொடுக்கும் ஓர் அரசாங்கம்... இன்னுமா நாங்கள் உங்களை நம்புகிறோம் என்று கனவு காண்கிறீர்கள்...???
சேத்துல நிற்கிற விவசாயி இதுவரையிலும் சேட்டுக் கடையில் மட்டும்தான் தன் வாழ்வை அடகு வைத்துக் கொண்டிருந்தான்... இப்போது கூடவே அரசாங்க சேட்டுகளிடமும் தன் வாழ்வை அடமானம் வைத்து, இருக்கிற மிச்ச சொச்சத்திற்கும் வேட்டு வைக்கும் வேலைதான் இது...
கடனே வேண்டாம் என கண்ணியமாய் ஒதுங்கி வாழ்பவனின் கையிலும் கடன் அட்டைகளைத் திணித்து, “நான் உலக வங்கியிடம் கடன் வாங்குகிறேன். நீ என்னிடம் கடன் வாங்கு...” என்று உங்களுடன் சேர்த்து எங்களையும் உடன்கட்டை ஏற வைக்கிறீர்கள்... மக்களை கடன் வாங்க வைத்து விட்டு பின்னாடியே குண்டர்களையும் அனுப்பி அவர்களை மிரட்டி வாழ்வின் விளிம்பிற்கே தள்ளி விடும் நீங்கள் மல்லைய்யாக்களையும், மாஃபியாக்களையும் இரகசியமாகத் தப்ப வைத்து விட்டு, சத்தமில்லாமல் அவர்களது கடன்களையும் தள்ளுபடி செய்து விட்டு... மக்களின் காவலர்கள் என வேஷம் கட்டுகிறீர்கள்.
நபிகளாரின் காலத்தில்... கடன் சுமையோடு மரணிக்கும் எந்தவொரு மனிதனுக்கும் அதனை அடைக்க வழியில்லை எனில் அரசாங்கக் கருவூலத்திலிருந்து அந்தக் கடனுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது அண்ணலாரின் ஆட்சி... ஏட்டுப் பொருளாதாரமும், வறட்டுப் பொருளாதாரமும் பேசும் உலகிற்கு இது ஒரு வரலாற்றுப் பாடம்... தனி மனிதனுக்கு எவ்வாறு பொருளாதாரப் பாதுகாப்பைக் கொடுப்பது என்பதை இஸ்லாமில் படியுங்கள்...!
ஒருவன் தன் வாழ்நாள் முழுக்க வியர்வை சிந்தி... ஓடி உழைத்து... சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்தப் பணத்தை... வரியும், வட்டியும்... அபராதமுமாய் ஒட்டுமொத்தமாய் உறிஞ்சி மக்களை ஓட்டாண்டியாக்கும் ஆட்சியாளர்களே...!
வசதி படைத்தவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு செல்வத்திற்கு மேல் சேர்த்து வைத்திருந்தால், தங்கள் செல்வத்திலிருந்து இரண்டரை சதவிதம் கட்டாயமாக ஜகாத் என்னும் ஏழைவரி செலுத்த வேண்டும் என்பதை வணக்க வழிபாடுகளில் ஒன்றாகவே இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.
இரண்டரை சதவிதம் என்பது மக்களை உறுத்தாத, அவர்களின் உழைப்பை உறிஞ்சாத, மக்களால் மகிழ்வுடன் வழங்கப்படக்கூடிய நியாயமான அளவாகும்.
பெரும் வெற்றி பெற்ற இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கைகளை உங்கள் வழிகாட்டியாய்க் கொண்டு செயல்படுத்திப் பாருங்கள்! அதனை நாட்டு நலனுக்கும், ஏழைகளின் உயர்வுக்காகவும் மட்டுமே செலவழித்துப் பாருங்கள்!! நீங்கள் அள்ளிக் கொடுத்தாலும் வேண்டாம் என மறுக்கின்ற தன்னிறைவு பெற்ற குடிமக்களைக் கண்ணாறக் காண்பீர்கள்...
‘ஜகாத்’ என்னும் சிறப்புப் பொருளாதாரத் திட்டத்தின் மூலம் தன்னிறைவு பெற்ற மக்களைக் கொண்டு வெற்றியை நிலைநாட்டியது இஸ்லாம். உமர் [ரலியல்லாஹு அன்ஹு] அவர்களின் ஆட்சிக் காலத்தில் மக்கள் எல்லாம் ‘ஜகாத்’ வழங்கும் நிலைக்கு உயர்ந்த காரணத்தால் ‘ஜகாத்தை’ப் பெறுபவர்கள் யாருமின்றி அரசாங்கக் கருவூலம் நிரம்பி வழிந்தது...
அதை விடுத்து எங்கள் வரிப் பணங்களை எல்லாம்... ஓட்டுக்கு நோட்டாகவும், உங்கள் கோட்டுக்கும்... வீட்டுக்கும்... நீங்கள் உலகம் சுற்றுவதற்கும்.. உங்கள் மினரல் வாட்டருக்கும்... டெலிபோன் பில்லுக்கும்... என்று ஊதாரித்தனமாய் செலவளிக்கும் நீங்கள், நபிகளாரின் எளிய வாழ்க்கை முறையை ஒருமுறையேனும் படித்துப் பாருங்கள்...!
அகில உலகத்தின் அருட்கொடை என்ற அந்தஸ்துடன் கூடிய ஆன்மிகத் தலைவராய்... உயிரையும் அவருக்காகத் தரத் தயாராக இருந்த லட்சோப லட்சம் மக்களின் ஆட்சித் தலைவராய்... அண்டை நாட்டு மன்னர்களும் கூட மரியாதையோடும், கண்ணியத்தோடும், மனதிலிருத்திய மாமன்னராய்... இருந்தாலும் கூட...
அவரது விட்டிலும் கூட மூன்று நாட்கள் சேர்ந்தார்ப் போல் அடுப்பெரிந்ததில்லை...
பல நேரங்களில் அடுத்த வேளை உணவுக்கும் கூட வழியின்றி தனது பணியாளரானன அனஸ் [ரலியல்லாஹு அன்ஹு] அவர்களிடம் உணவு கேட்டுப் பெற்றுப் பசியாறிய கொடுமை...
பசியின் காரணமாக வயிற்றில் கற்களைக் கட்டிக் கொண்டு களப்பணியாற்றிய கடுமை...
தன் மரணத்தின்போது கூட ஒரு யூதரிடம் தன் கவசத்தை அடமானம் வைத்திருந்த ஏழ்மை...
முள்ளு முள்ளாக முதுகில் குத்திய கோரைப் புல் படுக்கையில் படுத்துறங்கிய வறுமை...
பட்டினியோடு இருந்தாலும் மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசாவும் எடுக்காதது மட்டுமல்ல... பாவமேயறியாத பச்சிளங்குழந்தையான தம் பேரர் பைத்துல்மால் பொதுக் கருவூலத்திலிருந்து ஒரு பேரீச்சம்பழத்தை எடுத்து அதன் பிஞ்சு வாய்க்குள் போட்டுச் சுவைக்க முற்பட்டபோது, பச்சைப் பிள்ளைதானே என்று விட்டுவிடாமல், “துப்பு! துப்பு!! இது நமக்கு விலக்கப்பட்டது!!” என்று கூறி துப்பச் செய்து, உலகத்திற்கே எடுத்துக்காட்டாய் வாழ்ந்த நேர்மை...
இதுதான் நபிகளாரும், அவர் வழி வந்த கலீஃபாக்களும் வாழ்ந்து காட்டிய எளிய வாழ்வு...
பத்து இலட்சம் ரூபாய்க்கு ஆடை அணிந்துகொண்டு, ஊரான் வீட்டுக் காசில் ஊர் சுற்றும் நவீன நீரோ மன்னர்களே...! நபிகளார் வாழ்ந்தது போன்றதொரு எளிய வாழ்வை உங்களால் கற்பனையிலும் கூட வாழ முடியாது... குறைந்தபட்சம் உங்களை நம்பி ஓட்டுப் போட்ட மக்களிடம் நரித்தனமாகவாவது நடக்காதிருங்கள்!!!
பசுவை தெய்வமெனக் கூறிக்கொண்டு, பசுத்தோல் போர்த்திய புலியாய் பவனி வருபவர்களே...!
மக்களாகிய நாங்களெல்லாம் உங்களுக்கு சோதனை எலிகளாகி விட்டோமா...! நாங்கள் உழைத்துச் சம்பாதித்த எங்களது பணத்தை எடுப்பதற்கே பிச்சைக்காரர்கள் போல் எங்களை நடுத்தெருவில் நிற்க வைத்தீர்களே...? எதிர்த்துக் கேட்டால் ஒன்று உங்கள் தொண்டர்களைக் கொண்டு தேசத்துரோகப் பட்டம் கட்டுகிறீர்கள்... அல்லது காவல்துறையைக் கொண்டு குண்டாந்தடி நடத்துகிறீர்கள்...
முரட்டுத் தோற்றம் கொண்ட ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து... “ நீங்கள் பங்கு பிரித்ததில் நீதமில்லை...” என்று நபிகளாரின் ஆடையைப் பிடித்து உலுக்கிக் கேட்கிறார்... கோபமுற்ற தோழர்களோ அடிக்கப் பாய்கிறார்கள்... பொறுமையாக அவர்களைக் கையமர்த்திய நபிகளார்... “விடுங்கள்...! பங்கிலே உரிமையுடையவர்களுக்கு அதனை கேட்கவும் உரிமையுள்ளது.” என்றார்களே...?
ஆடு மாடுகளைப் போன்று என்பது கூட மிருக வதைச் சட்டத்தில் வருகிறது... ஆடு மாடுகளை விட மோசமாக மக்களை அடிக்கும் உங்கள் ஏவல் துறையினரும்... நாக்கூசும் வார்த்தைகளால் மக்களை அர்ச்சிக்கும் வங்கி ஊழியர்களும்...
“கர்மெ ஷாதி ஹை! பைசா நஹி ஹை!!”
(வீட்டில் திருமணம், ஆனால் பணம் இல்லை.) என்று மக்களைப் பார்த்து எள்ளி நகையாடிய நீங்களும் நபிகளாரிடம் நாகரீகத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்...
போர்க்காலங்களில் கூட எதிரிகளின் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கும், புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கும் எவ்வித பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற கடுமையான எச்சரிக்கையுணர்வுடன் தர்மத்தைக் கடைப்பிடித்த நபிகளாரின் ஆட்சி முறையோடு...
பட்டத்து யானை நடந்து வந்தால் எறும்புகள் சாகத்தான் செய்யும்... என்ற அகந்தையுடன் நடந்துகொள்ளும் இவர்களது கொடூர மனோபாவத்தை ஒப்பிட்டுப் பார்க்க ஒட்டுமொத்த மக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
“நூற்று முப்பத்து எட்டு கோடி மக்களில்... ஓர் ஐம்பது பேர் தேசத்திற்காகப் பலியாவது ஒன்றும் பெரிதில்லையே...?” என்று மனித உயிர்களைக் கிள்ளுக்கீரையாக நினைத்தவர்களையெல்லாம் உலக வரலாறு தூக்கி வீசியிருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்! கார்ப்பரேட்களை எல்லாம் கவனமாகக் காப்பாற்றி விட்டு... வெளிச்சத்தில் நீங்களாகவே வாரிக் கொடுத்த கறுப்புப் பணங்களை... இங்கே ஏழைகள் வீட்டு இருட்டில் தேடித் திருடுகிறீர்கள்...
உங்களது இந்தத் திட்டத்தினால் கறுப்புப் பணங்களை ஒழிப்பது சாத்தியமில்லை என்றும், பல்வேறு நாடுகளில் ஏற்கனவே தோல்வியைத் தழுவியத் திட்டம் இது என்றும் - நாட்டின் தலைசிறந்த பொருளாதார மேதைகள் எல்லாம் தலையில் குட்டிய பின்னரும்... “எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாவிட்டாலும்..., இதனால் எத்தனை மக்கள் செத்து மடிந்தாலும், எதையும் திரும்பப் பெறுவதென்பது என் இரத்தத்திலேயே ஊறிய ஒன்றல்ல” என்ற இறுமாப்புடன் நடந்துகொள்வது ஒரு மக்கள் தலைவனுக்கு அழகல்ல!
பேரீத்தம்பழங்களை ஒட்டுப் போட்டு விவசாயம் செய்துகொண்டிருந்த மக்களிடம், “அவ்வாறு செய்ய வேண்டாம்!” என்று நபிகளார் தடுத்தபோது, மக்களோ.. அதில்தான் தங்களுக்கு அதிக மகசூல் கிடைக்கிறது என்று கூறினார்கள்... “இறைமார்க்க விஷயத்தில் நான் கட்டளையிட்டால் அதற்குக் கட்டுப்படுங்கள்...! உலக விஷயங்களில் என்னை விட நீங்களே அதிகம் அறிந்தவர்கள்...” என மக்களின் மன விருப்பத்திற்கு மதிப்பளித்தார்கள் அண்ணல் நபி [ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்] அவர்கள்...
அதனால்தான் இன்றும் கோடானுகோடி மக்களின் உள்ளங்களில் மக்கள் தலைவராக வீற்றிருந்து உலகின் ஒவ்வொரு நொடியும் அவர்கள் மீது அருள்மழை பொழியும் பிரார்த்தனைக்குக் சொந்தக்காரராக இருக்கிறார்கள்...
மக்களைப் பற்றியும், மக்களின் மனோநிலையைப் பற்றியும் சிறிதும் கவலைப்படாமல்... மல்லையாக்களையும், மாடுகளையும் வைத்துக் கொண்டாடும் நீங்கள் மக்கள் தலைவர்களா...? அல்லது மாடுகளின் தலைவர்களா...? என்பதை வரும் தேர்தலில் மக்கள் நிரூபிப்பார்கள்.
உங்கள் தகிடுதத்தங்களை மறைக்க தேசபக்தி ஜரிகை சுற்றாதீர்கள்...
எங்கள் காதுகளில் இதுவரை சுற்றியது போதும். சுருட்டியது போதாது என்றவுடன் ஏழைகளின் பணத்தை சுருட்டி சூவாணம் விட வந்த திட்டம் இது என்பதை மக்கள் உணர்ந்தேதான் இருக்கிறார்கள்.
ஜனநாயகம் வெல்லும்!!! |