சென்னை மண்ணடியில் உள்ள மியாசி உயர்நிலைப்பள்ளியில் மருத்துவத்திற்கான உயிரியல் பிரிவில் பயின்ற மாணவி மக்தூம் முவப்பிகா 2015-16 கல்வியாண்டுக்காக மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் மெடிக்கல் கவுன்சலிங் கமிட்டியால் நடத்தப்பட்ட அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதினார். இதில் 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர்.
ஏற்கனவே 2014-15இல் நடைபெற்ற நுழைவுத்தேர்வில் எழுதிய மாணவி முவப்பிகா - இதில் தகுதிபெற்றும் அவரது லட்சியமாக AIIMS இருந்த காரணத்தால் மறுபடியும் இரண்டாவது முறை தேர்வெழுதி NEET கவுன்சலிங்கிற்கான தகுதியும் AIIMS 97.5% பெர்சென்டைலும் JIPMER 96% பெர்சென்டைலும் பெற்று தகுதி பெற்றார்.
நுழைவுத்தேர்வுகள்
அகில இந்திய அளவில் மேற்படி நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்கள் 50% மதிப்பெண்கள் பொது பிரிவிலும் 40% மதிப்பெண்கள் இதர பிற்படுதப்பட்டோர் பிரிவிலும் எடுப்பதால் மத்திய அரசின் Medical Council of India (MCI) வால் நடத்தப்படும் கவுன்செலிங்கில் பங்குபெறும் தகுதியை பெறுகின்றனர். இதன்படி 69000 பேர் தகுதிபெற்றனர்.
இத்தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு நாடு முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான 15 சதவீத இடஒதுக்கீட்டின்படியுள்ள 3722 இடங்களுக்கு, விதிமுறைப்படி அதிலிருந்து 4 மடங்கு கூடுதலாக கணக்கிட்டு சுமார் 18000 மாணவர்களுக்கு மட்டும் நேர்காணல் நடத்தப்படுகிறது. அதில் தேர்வானவர்களே மருத்துவத்துறையில் சேர்ந்து படிக்க முடியும்.
மருத்துவப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வை நடத்தும் பொறுப்பை மேற்படி கவுன்செலிங் கமிட்டியானது CBSE இடம் ஒப்படைத்து அதில் தகுதிபெற்றோருக்கான கவுன்செலிங்கை தானே நடத்துகிறது. முதலாவது சுற்றில் தேர்வானவர்கள் விட்டவிட்டுச் சென்ற இடங்களை இரண்டாவது சுற்றிலும் அதில் விட்டுவிட்டுப் போன இடங்களை மூன்றாவது சுற்றிலும் நிரப்புகின்றனர். இதன்படி மொத்தம் 6000 மாணவ மாணவியர் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. இவ்வாண்டில் மூன்று சுற்றுக்கள் நடத்திய பின்னரும் 1572 இடங்கள் காலியாக இருந்த நிலையிலேயே அவ்விடங்களுக்கான சேர்க்கையை சுயமாக முடிவு செய்ய மாநிலங்கள்/ தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் MCI ஒப்படைத்து விட்டது.
நீண்டகாலமாக பல்வேறு சிரமங்களையும் தாங்கி எப்படியாவது மருத்துவப்படிப்பை கற்றாக வேண்டும் என்ற வேட்கையில் இருந்த தனது மகளுக்கு கவுன்செலிங்கில் பங்கெடுப்பதற்கான தகுதியிருந்தும் மூன்று சுற்றுகளுக்கு மேல் கவுன்செலிங் நடத்தாத காரணத்தால் வாய்ப்பு கை நழுவிப்போவதை பொறுக்க முடியாத தந்தை கிஃப்டோ முஹம்மது இஸ்மாயீல் (காயல்பட்டினம்) கடிதங்கள் மூலமாக சி.பி.எஸ்.இ. இயக்குனர், மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கிவரும் மெடிக்கல் கவுன்செலிங் கமிட்டி இயக்குனர், கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவப்படிபுக்கான செலெக்ஷன் கமிட்டி, மாநில சுகாதாரத் துறை, தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு விளக்கம்கூறி நிவர்த்தி செய்து தரும்படி கடிதம் எழுதினார்.
முறைகேடுகளும் நீதிமன்ற வழக்குகளும்
இதற்காக பெறப்பட்ட பதிலால் திருப்தி கிடைக்காத இஸ்மாயீல் தனது பிள்ளைக்காகவும் அதேபோன்று பாதிக்கப்பட்ட பல தகுதியுள்ள மாணவர்களுக்காகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு ஒன்றை கடைசியாக தாக்கல் செய்தார். மேலும் அவர் போலவே பாதிக்கப்பட்ட பலர் இந்த முறைகேட்டை எதிர்த்து நாட்டிலுள்ள உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். தகுதியுள்ள மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போவதையும் மருத்துவம் ஒரு தொழில்துறையாக மாறிகிடப்படதையும் குறைந்தது 1.50 கோடி ரூபாயாவது செலவு செய்தால்தான் படிக்க முடியும் என்ற அவலத்தையும் தெளிவாக உணர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதியான தவே ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கினார்.
அதன்படி நாட்டிலுள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கான மருத்துவ நுழைவுத்தேர்வை ஒரே தேர்வாக (NEET) மட்டுமே நடத்தும்படியும் அதில் தேர்வானர்களை மட்டுமே மருத்துவக்கல்வி படிக்க அனுமதிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
ஆனால் இத்தீர்ப்பில் அதிருப்தியுற்ற சில மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மத்திய அரசு பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஒப்புதலுடன் ஒரு அவசர சட்டம் (Ordinance) கொண்டு வந்தது. அதன்படி அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு நடப்பாண்டில் மட்டும் நீதிமன்ற உத்தரவை விலக்கி வைக்கவும் ஏனைய தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஒரே பொதுத்தேர்வாகிய NEET தேர்வை மட்டுமே எழுதச்செய்து மாணவர்களை தேர்ந்தெடுக்கவும் வேண்டும் என்ற சட்டம் நிறைவேறியது.
இந்நிலையில் இஸ்மாயீல் தாக்கல் செய்த ரிட்மனு மீது சென்ற வருடம் அக்டோபர் 05 ந்தேதி (29452/2015 WP) தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் பிரதிவாதிகளான புதுடில்லி மெடிக்கல் கவுன்செலிங் கமிட்டி, தமிழக மருத்துவக்கல்வி இயக்குனர் (கீழ்ப்பாக்கம்), செலெக்ஷன் கமிட்டி (மருத்துவம்) கீழ்ப்பாக்கம் ஆகியோருக்கு வழங்கிய உத்தரவில் அகில இந்திய கோட்டாவில் 15 சதவீதத்திலிருந்து மீதமாகும் இடங்களுக்கு ஏற்கனவே MCI மூலம் தேர்வெழுதி தகுதிபெற்ற மாணவர்களுக்கே இடம் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.
இடைவிடாத தொடர் முயற்சியால் கிடைக்கப்பெற்ற இத்தீர்ப்பின் விளைவால் மாணவி முவப்பிகா தற்போது நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் பெங்களூரில் உள்ள முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் முன்னாள் முதலமைச்சரின் சொந்தக் கல்லூரியான தேவராஜ் அர்ஸ் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பயின்று வருகிறார்.
மருத்துவப்படிப்புக்கான இவரது ஆவலுக்கு காரணாமானவரான இவரது மூத்த சகோதரி டாக்டர் பாத்திமா ஹபிலா இவர் பயின்ற அதே பள்ளியில் படித்து தற்போது சென்னையில் உள்ள SRM மருத்துவ கல்லூரியில் MDS Maxillofacial oral surgery பிரிவில் பட்டமேற்படிப்பு படித்து வருகிறார்.
முவப்பிகாவின் தந்தை முஹம்மத் இஸ்மாயீல் சட்டரீதியாக நீதிபெறும் முயற்சிக்கான ஆலோசனைகளை காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையத்தின் (கே.சி.ஜி.சி) ஆலோசனைக்குழு உறுப்பினர்களான எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம், வழக்கறிஞர் ஹசன் ஃபைசல் ஆகியோரிடமிருந்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நமதூரில் மருத்துவப்படிப்புக்காக முயற்சிக்கும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிடவும் நுழைவுத்தேர்வுக்கு தயாராவதற்குண்டான பாடநூல்கள் பற்றி வழிகாட்டவும் இஸ்மாயீல் தமது இசைவை தெரிவித்தார்.
மருத்துவ நுழைவுத்தேர்வு ஒரு பார்வை
+2 படித்த மாணவர்கள் தங்களது எதிர்கால வாழ்வை வளமாக்கிட மேலும் நன்றாகப் படித்து தேர்வு முடிவுகள் வந்ததும், அடுத்ததாக செய்யும் முதல் வேலை மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகள் எழுதுவதாகும்.
மருத்துவம், பொறியியல் முதலான படிப்புகளே மாணவர்களால் அதிகமாக விரும்பப்படுகின்றன.
தனது பெற்றோர், உறவினர்கள் அல்லது நண்பர்கள் படித்து நல்ல நிலையில் உள்ளதை கண்ணால் பார்ப்பதாலோ அல்லது அத்தகைய மக்களின் தூண்டுதலாலோ அல்லது சுயமாகவே வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேட்கையினாலோ அப்படிப்புகளை தேர்ந்தெடுக்கின்றனர்.
அவ்வாறு இலக்குகளை நிர்ணயிக்கும் மாணவர்கள் அதற்காக எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்தவுடனேயே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு தேவைப்படும் மதிப்பெண் பெறுவதற்காக இரவுபகலாக உழைத்து வருகின்றனர்.
இந்தியாவில் 400 -க்கும் அதிகமான அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. 52000 –க்கும் அதிகமான சேர்க்கை இடங்களை கொண்ட இக்கல்லூரிகளில் சேர்வதற்கு பல லட்சம் மாணவர்கள் ஆண்டுதோறும் நுழைவுத்தேர்வுகள் எழுதி வருகின்றனர்.
அரசு கொண்டுவந்த புதிய முடிவுகளால் +2 -வில் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டிய கட்டயாத்தில் உள்ளனர்.
தமிழகம் போன்ற சில மாநிலங்களில் +2 வகுப்புக்காக நடத்தப்படும் அரசுத்தேர்வு மதிப்பெண்களிலேயே தேவையான மதிப்பீடுகளை (Aggregate) நிர்ணயித்து மேற்படி நுழைவுத்தேர்வுகள் நடத்தாமலேயே அவ்வாறான தொழில் படிப்புகளுக்கு (Professional Courses) அரசு ஒதுக்கீட்டிலுள்ள இடங்களை நிரப்பிவருகின்றனர்.
மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் அரசு கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் மருத்துவ கல்லூரிகள், சிறுபான்மை மற்றும் மொழியியல் சிறுபான்மை கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கைக்காக தனித்தனியே நுழைவுத்தேர்வுகள் நடத்தி வருகின்றன. மேலும் மத்திய அரசின் இந்தியன் மெடிக்கல் கவுன்சில் ஆண்டுதோறும் நடத்தும் அகில இந்திய நுழைவுத்தேர்வுகளில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு அவர்களின் அறிவுரீதியான தகுதிகளைக் காட்டிலும் சாதி, மதம், மொழி, வகுப்பு அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுவதாலும் தனியார் கல்லூரிகள் இதை ஒரு இலாபம் தரும் வியாபாரமாக மாற்றிவிட்டதாலும் பெறுவாரியான திறமையுள்ள மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர் என மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கிவரும் இந்தியன் மெடிக்கல் கவுன்சில் கூறிவருகிறது.
மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான நீதிமன்ற உத்தரவுகள்
இதற்கு முன்பாக, கடந்த 2013 -ல் இப்பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தது. அதில் மருத்துவ நுழைவுத்தேர்வுகளை ஒவ்வொரு மாநிலமும் மேலும் தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் தனித்தனியாக நடத்தி வருவதால் மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதை சுட்டிக்காட்டியிருந்தது.
மேலும் வெவ்வேறு பகுதிகளிலுள்ள கல்லூரிகள் ஒரே தேதியில் தனித்தனியாக நுழைவுத்தேர்வுகள் நடத்துவதால், மாணவர்கள் அதற்காக உள்ள தனித்தனி பாடநூல்களை வாங்கி வருடக்கணக்கில் படித்து தயாரான பின்னரும் கூட, தேர்வெழுத முடியாத நிலை மாணவர்களுக்கு உருவாவதாகவும் இதனால் அவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும் எனவே அகில இந்திய அளவில் National Eligibility-cum-Entrance Test (NEET) என்ற பெயரில் ஒரேயொரு நுழைவுத்தேர்வை மட்டுமே நடத்துவதற்கு ஆவன செய்யவேண்டும் எனவும் கோரியிருந்தது.
இவ்விவகாரத்திற்கு அன்றைய தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட மூன்றுபேர் கொண்ட பெஞ்ச் கூறிய தீர்ப்பில் நடைமுறையில் உள்ளது போன்றே நுழைவுத்தேர்வுகள் நடத்தலாமென்றும் மேலும் நுழைவுத்தேர்வுகள் இல்லாமலேயே மாணவர் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் சில மாநிங்கள் ஒதுக்கீடு செய்து வரும் முறையும் சரியானதுதான் என்றும் (அவர் ஒய்வு பெருவதற்கு முன் பணியாற்றிய கடைசிநாளில்) ஓர் அதிரடி தீர்ப்பை வழங்கினார். இதீர்ப்புக்கு மாற்றமாக அந்த அமர்வில் அங்கம் வகித்த வேறொரு நீதிபதியான டாவே கூறியிருந்தாலும் மெஜாரிட்டி அடிப்படையில் இத்தீர்ப்பு நடைமுறைக்கு வந்தது.
இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சீதிமன்றத்தில் மத்திய அரசு கேட்டுக்கொண்ட அடிப்படையில் நீதிபதி தவே தலைமையில் இதற்காக புதிதாக அமைக்கப்பட்ட மூன்றுபேர்கொண்ட பெஞ்ச் கடந்த 2016 மே மாதம் அதற்கு நேர்மாறாக வேறொரு தீர்ப்பை வழங்கியது.
அதாவது 2016-க்கான +2 தேர்வுகள் முடிவுற்று நடைமுறையிலுள்ள பிரகாரம் நுழைவுத்தேர்வுக்காக மாணவர்கள் தயாராகியிருந்த நிலையில் தேசிய அளவில் NEET அடிப்படையிலான நுழைவுத்தேர்வை மட்டுமே நடத்தவேண்டும் எனவும் அதை இரண்டு கட்டமாக நடப்பாண்டிலேயே நடத்தவேண்டும் எனவும் அத்தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
புலிக்கு பயந்து சிங்கத்தின் வாயில் விழுந்த கதைபோல பதைத்துப் போன மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் நடப்பாண்டில் இவ்வளவு குறுகிய காலத்தில் எவ்வாறு இதைச் செய்ய முடியும் என முறையிட்டதற்கு நீதிபதிகள் நுழைவுத் தேர்வை இரண்டு கட்டமாக நடத்தலாமென்றும் முதல் கட்டமாக மே மாதத்திலும் இரண்டாவது கட்டமாக ஆகஸ்ட் மாதத்திலும் நடத்தவேண்டும் என்றும் முதலாவது தேர்வில் எழதிய மாணவர்கள் யாரும் இரண்டாவது கட்டமாக நடக்கும் தேர்வெழுத அனுமதிக்கப்படக்கூடாதெனவும் விளக்கமளித்தனர்.
மருத்துவ நுழைவுத்தேர்வுகளுக்காக (NEET) தயாராவது எப்படி
மருத்துவ பல்மருத்துவ நுழைவுத்தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட முறையில் தயாரிக்கப்படுவதால் அதற்கான சிறப்பு தகுதிகள் பெற்ற ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் அடிப்படையில் பயின்றால் மட்டுமே தேர்ச்சிபெற முடியும். எனவே எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்து +2 பாடங்களை படிக்கத் துவங்கும்போதே நுழைவுத்தேர்வுக்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும். காயல்பட்டணத்தில் கல்விக்காக சிறப்பான முறையில் செயலாற்றி வரும் இக்ரா கல்வி நிறுவனத்துடன் உலக காயல்நலமன்றங்கள் இணைந்து இத்தேர்வுக்க தயார்படுத்தும் சிறப்புத்தகுதிகள் பெற்ற ஆசிரியர்களை நியமித்து குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கலாம்.
அதிகமான மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் +2 முடித்த அதே ஆண்டிலேயே மேல்படிப்பு படிக்கத் துவங்கிவிட வேண்டும் எனத் தீர்மானித்து அவ்வாண்டிலேயே தாங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பில் இணைவதற்கும் அதற்கு முடியாது போனால் இருக்கும் தகுதி அடிப்படையில் வேறெந்த படிப்பையாவது அதே ஆண்டிலேயே படிப்பதற்கும் திட்டமிடுகின்றனர். இது முற்றிலும் தவறான வழிமுறையாகும்.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் கே.சி.ஜி.சி.யின் ஏற்பாட்டில் மேற்கொண்ட கிண்டி ஐ.ஐ.டி. வளாக விஜயத்தின்போது அங்கு படித்துக்கொண்திருந்த பல மாணவர்களிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் நடத்திய கலந்துரையாடல்களின்போது மிகுதமானவர்கள் +2 படித்து முடித்தபின் ஏறக்குறைய ஓரிரண்டு ஆண்டுகள் ஐ.ஐ.டி-யில் தாம் விரும்பும் பாடத்தை எடுத்துப்படிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடனேயே படித்ததாகவும் அதனால்தான் இக்கலாசாலையில் நுழைய முடிந்தது என்றும் கூறினார்.
அஸ்ர் தொழுகை நேரத்தில் இக்கலாசாலை வளாகத்தில் அமைந்திருந்த பள்ளிவாசலில் தொழவந்த முஸ்லிம் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடம் மேற்கொண்ட கலந்துரையாடம் இன்றளவும் நம்மனதில் நீக்கமற அமைந்துள்ளன.
மருத்துவ நுழைவுத்தேர்வு பற்றி மேலும் அறிய தொடர்பு கொள்க :
Mr. Mohamed Ismail (Gifto),
Mannady, Chennai.
Mob.: +91 93822 00223
Email: gitoad@gmail.com
குறிப்பு: இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள கருத்துக்கள் நாட்டு நடப்பை பிரதிபலிப்பதாகவே எடுத்துக் கொள்ளப்படவேண்டும். கட்டுரையின் அனைத்து விஷயங்களிலும் கட்டுரையாளருக்கு உடன்பாடுண்டு என எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. நன்றி. |