தென்பொதிகை பிறந்த மொழி...
தென்பாண்டி வளர்த்த மொழி...
வடமொழியடைத்த மாபெரும் கதவினை
திடமுடன் உடைத்த எம்மொழி செந்தமிழ்...
மும்மையை உணர்த்தி முப்பொருள் காட்டும்...
செம்மை வாய்ந்த செம்மொழி என் தமிழ்...
தத்துவம் யாவும் தமிழ் மொழி உணர்த்தலால். ..
சத்தியம் செய்வேன் என் தாய்மொழி காப்பேன்.
பள்ளிப்பருவ காலங்களில் நடந்த பேச்சுப் போட்டிகளுக்காக ஏற்ற இறக்கங்களோடும், உணர்ச்சிப் பெருக்கோடும், இப்பாடலைக் கொண்டு என்னுரையை ஆரம்பித்தபோது, உடல் சிலிர்க்க, உள்ளம் உருக என்னையறியாமல் ஒரு தமிழுணர்வு என்னுள் ஊடுருவியது, உற்சாகத்தைத் தந்தது.... அதே உணர்வை என் பிள்ளைகளின் உரையில் இன்றும் நான் உணர முடிவதற்குக் காரணம் ஊட்டி வளர்த்த தமிழ்ப்பால் என்பதுதான் உண்மை.
தமிழார்வலர்கள் எல்லோரையும் போல பாரதியை நேசித்தேன்... பாரதிதாசனை நேசித்தேன் என்று கூறப் போவதில்லை. ஆனால் பாரதியும், பாரதிதாசனும் சொன்ன சில வரிகளை வெகுவாக நேசித்தேன். கலைஞர் முதல் வைரமுத்து வரை தமிழை இரசித்துப் படித்தேன்.
பெண்ணடிமைத் தனத்தைப் போட்டுத் தாக்கிய பாரதியை இஸ்லாமின் பெண்ணுரிமை பேசும்போதெல்லாம் வழித்துணைக்கு அழைத்துக் கொண்டேன்....
அண்டை வீட்டான் பசித்திருக்க தான் மட்டும் புசிப்பவன் உண்மையான இறை நம்பிக்கையாளன் அல்ல...” என்று மாநபியின் மனிதநேயத்தைப் பேசும்போதெல்லாம் “தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம்” என்ற பாரதியின் வரிகளையும் கடன் வாங்கிக் கொண்டேன்.
“மனிதர்களே...! நீங்கள் அனைவரும் ஆதமிடமிருந்து தோன்றியவர்களே...! என்று இஸ்லாம் கூறும் சமத்துவத்திற்கு சாட்சியாக...
“தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்...
தொல்லுலக மாந்தரெல்லாம் ஒன்றேஎன்னும்...
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் ஆங்கே...
சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே...
என்ற பாரதிதாசனை என் எழுத்துக்களில் எடுத்துக் கொண்டேன்.
கண்ணனையும், மீராவையும் காதலர்களாக வரித்துக் கொண்ட பாரதியைக் கண்டுக் கொள்ளவில்லை என்றாலும்...
“பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே... வெள்ளப்
பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே...”
என்ற பாரதி நம் தேசப்பற்றுக்கு வித்திட்டான்.
வேதியராயினுமொன்றே- அன்றி
வேறு குலத்தவராயினும்- ஒன்றே
ஈனப் பறையர்களேனும்-
அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவரன்றோ....
என்ற பாரதியின் தமிழ் பள்ளிப்பருவங்களிலேயே எங்களை பரவசப்படுத்தியது.
இப்படி முன்னைப் பழமைக்கும், பின்னைப் புதுமைக்கும் பாலமாக விளங்கும் தொண்மைத் தமிழ்... எங்கள் ஊரோடும், உணர்வோடும், ஒன்றாய்க் கலந்ததற்குக் காரணம்... காலங்காலமாய் எம்முள் ஊடுருவி நிற்கும் தமிழ் வழி மரபா... அல்லது எங்களயுமறியாமலே எம்முடன் ஒன்றிவிட்ட திராவிட உணர்வா என்பது எந்த இஸ்லாமியனும் அறியாத ஒன்று...
‘ஜலம்’ என்று சொல்லி தமிழைக் கொல்லும் ஆரியர்களின் முன்னே ‘தண்ணீர்’ என்று அழகு தமிழ் பேசியவன் தமிழ் முஸ்லிம். தமிழ்நாடே சாதம் என்று தமிழ் பேசும்போது, ‘சோழநாடு சோறுடைத்து’ என்று தெள்ளுத் தமிழில் சோறு என்றவன் முஸ்லிம் தமிழன்.
வலந்து, வட்டி, கிண்ணம், ஆணம், பசியாறுதல், என்று தனித்தமிழ்ச் சொற்கள் இன்றும் காயல்பட்டினத்தில் பிறந்த முஸ்லிம்களான எங்கள் வாழ்வின் புழக்கத்திலும், வழக்கத்திலும் உள்ளது பிரிக்க முடியாதது... தமிழும், தமிழக முஸ்லிம்களும் என்பதற்கான அடையாளம்.
தமிழ் வளர்த்த எங்கள் புலவர்களையும், அவர்கள் இயற்றிய காவியங்களையும், வரலாறு இன்றும் தம் கரங்களில் ஏந்தியுள்ளது. அந்நியர்களை எதிர்க்கிறோம் என்ற பெயரிலே ஆங்கிலத்தை எதிர்த்த எங்கள் அப்பாவித்தனத்தால்தான் அரசாங்க உயர் பதவிகளையெல்லாம் ஆசையாசையாக ஆரியர்களுக்கே தாரை வார்த்தோம்.
ஆங்கிலம் பேசத் தெரியாது அவமானப்பட்ட தருணங்களிலெல்லாம் அழகு தமிழ் பேசியே அனைவரையும் அசர வைத்தோம்.
அரபும், தமிழும் கலந்த ‘உம்மா’ என்ற வார்த்தையால் தாயை அழைத்தோமேயன்றி, ‘மம்மி’ என்றழைத்து எங்கள் மொழியை நாங்கள் ‘டம்மி’யாக்கிடவில்லை...
தோழி என்றழைக்கும் சங்ககாலத் தமிழ் இன்றும் எம் பிள்ளைகளிடம் பேச்சு வழக்கில் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்.... தாயின் தோழியை ‘தோழிமா’ என்றும், தந்தையின் தோழனை ‘தோழாப்பா’ என்றும் அழைக்கும் அழகு தமிழ் முஸ்லிம்களிடம் அல்லாது வேறு எங்கேனுமுள்ளதென்று யாராலும் சுட்டிக்காட்டிட முடியுமா...?
தமிழ் உணர்வால் நாங்கள் செய்த மிகப் பெரிய தவறு - அரபு மொழியை நன்றாக வாசிக்கவும், எழுதவும் தெரிந்த நாங்கள் அதன் பொருளை அறியாமலேயே வளர்ந்துவிட்டோம். அ’, ஆ,வைப் படிக்கும் போதே அரபு எழுத்தான ‘அலிப்; பா’ வையும் அறிந்தாலும், இடையில் வந்த ஆங்கிலம் எங்களை ஆட்கொண்ட அளவுக்குக் கூட அரபு எங்களை ஆட்கொள்ளவில்லை என்பதே உண்மை... ஆமாம்... அரபியிலே சேர்ந்தாற்போல இரண்டு வாக்கியங்கள் பேசவும் எங்களால் முடியாது என்பதுதான் எங்கள் தாய்மொழிக்காக நாங்கள் கொடுத்த மிகப்பெரிய விலை...
எல்லை தாண்டி எந்த மாநிலம் சென்றாலும், தலையில் முக்காடும், குல்லாவும் போட்டுக் கொண்டு எத்தனை இஸ்லாமியர்கள் எங்களைக் கடந்துச் சென்றாலும்... அந்நியக் கூட்டத்தில் மாட்டிக் கொண்ட ஆடுகள் போலத்தான் மலங்க மலங்க விழிப்போமே தவிர... ஓடிவந்து ஒட்டி உறவாட முடியவில்லை என்பதுதான் எதார்த்தம். அதேநேரம் இன்பத் தமிழ் எங்கிருந்தேனும் எங்கள் காதுகளில் பாய்ந்தால் தாயைக் கண்ட சேயாய் முகம் மலரத் திரும்புகிறோமே...? அங்கே நாங்கள் தமிழால்தானே ஒன்றிணைகிறோம்.
எல்லை தாண்டிய நாடுகள் என்றால் கேட்கவே வேண்டாம்.... தமிழ்க் குரல் கேட்கும் திசைகள் நோக்கி அகம் மலர, உறவு வளர... அங்கே எங்கள் தமிழுணர்வின் அழுத்தத்தை அயல்நாடுகளிலே அன்பால் ஒன்றிணைந்த தமிழ் நெஞ்சங்களிடம் கேளுங்கள்... அவர்களின் அனுபவங்கள் ஆயிரம் கதைகள் சொல்லும்.
இங்கு மட்டும் என்ன... சென்னையில் எத்தனை பெரிய பெரிய கடைகள் இருந்தாலும், ஆறுமுகநேரி நாடாரும், உடன்குடி அண்ணாச்சியும் வைத்திருக்கும் கடைகளை நோக்கி நம் கால்களை நகர்த்தும் உணர்வுக்கு என்ன பெயர்...?
அந்த உணர்வுதான் இஸ்லாமியர்களான எங்களை மெரினாவை நோக்கிக் கடத்திச் சென்றது. ‘ஜல்லிக்கட்டை’ நாங்கள் இதுவரை நேரில் கண்டது கூட கிடையாது என்றாலும், ‘தமிழண்டா...’ என்ற ஒற்றைச் சொல் எங்களை ஒன்றிணைத்தது...
ஜல்லிக்கட்டை ஒரு குறியீடாகக் கொண்டு, ஒடுக்கப்பட்ட தமிழர்களின் ஒட்டுமொத்த உள்ளக் குமுறல்களையும், ‘அல்லாஹு அக்பர்’ என்ற ஒருமித்த குரலால் வலுப்படுத்தினோம்.
கடல் புரட்சியின்போது அலைகளை மீறியும் ஒலித்த எங்கள் தமிழ்க் காளைகளின் உறுதிமிக்கக் குரல் எங்கள் உள்ளத்தை உருக்கியதில் வியப்பேதுமில்லை... எங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்கு தோள்கொடுக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிட நாங்கள் தயாராக இல்லை.
“இமயம் வாழும் ஒருவன் இருமினால்...
குமரி வாழ்வோன் மருந்து கொண்டோடுவான்...”
என்ற உணர்வோடு எம் தமிழினத்திற்கு உணவு கொண்டோடினோம். ஏன் உணவளித்தாய்...? என்று இன்று எம் தாய்ப்பாலை சந்தேகிக்கிறார்கள் உணவிலும் அரசியல் செய்யும் அறமற்றவர்கள்...,
“கால் வயிற்றுக் கஞ்சிக்கு இவன்
காலமெல்லாம் போராட்டம்...
இவனிங்கு இல்லையென்றால்
காணி நிலமெல்லாம் நின்று போகும் ஏரோட்டம்...”
என்று எங்களின் சோற்றுக்காக சேற்றில் நிற்கும் உழைப்பாளிகளின் உயர்வுக்காக உணர்வோடு ஒன்றிணைந்தோம்....
உசாமா பின் லேடன் என்று முடிந்து போன கதையை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள். கூலிக்கு மாரடிக்கும் கூட்டமல்ல இவர்கள்...
பயிரை மேயும் வேலிகளுக்கு தாங்கள் யார் என்று காட்ட வந்தவர்கள்.... இவர்களது வேள்வித் தீயில் எழுப்பப்பட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் எங்களுக்காகவும் சேர்த்துத்தான் என்பதால் தோளோடு தோள் நின்று போராடினோம்...
தொழுகை நேரம் வந்ததும், எம் தொப்புள்கொடி உறவுகள் சூழ நிற்க நிம்மதியாய் நின்று தொழுதோம்... இன்று... தோல்வி பயத்தில்.... தொழுகை ஏன் நடத்தினீர்கள்...? என்று தங்களையே துகிலுரித்துக் கொண்டு பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளுகிறார்கள்.
கோக்குக்கும், பெப்சிக்கும் எதிராக குரல் எழுப்பினால்... அவன் பாகிஸ்தான் ஆதரவாளனாம்!
ஆளுங்கட்சியின் கையாலாகத்தனத்தைச் சுட்டிக்காட்டினால்... அவர்கள் கைக்கூலிகளாம்....
குனியக் குனியக் குட்டும் மத்திய அரசின் கொட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கினால்.... அவர்கள் தேசத்துரோகிகளாம்...
சமுக விரோதிகளாம். எட்டப்பர்கள் கூட்டத்திற்கு தன்னைப் போல்தான் பிறரையும் நினைக்கத் தோன்றுகிறது.
இருண்டு கிடக்கும் நீண்ட இரவு விடியாதா... என்று ஏங்கிக் கிடந்த இலட்சோப இலட்சம் உள்ளங்களுக்குள் அக்கினிக் குஞ்சாய் அமிழ்ந்துக் கிடந்த ஓர் ஆத்திரம்...சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு மக்களின் போராட்ட உணர்வுகள் மழுங்கி விட்டதா என்ற ஆதங்கம்... இவற்றுக்கெல்லாம் முடிவுரையாக பாரதியின் ரெளத்திரம் பழகி வெளிப்பட்ட இளைஞர்களின் தன்னெழுச்சியால் அடங்கிக் கிடந்த அக்கினிக்குஞ்சுகள் ஆங்கோர் பொந்திடை வைக்கப்பட்டது.
“ஒளி படைத்த கண்ணினாய் வா..! வா...!
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா..! வா...!”
என்று கடல் ஆர்ப்பரித்து வரவேற்றது.
“இதோ என் தமிழன் விழித்தெழுந்தான்...”
எனத் தமிழ்க்கடல் உச்சி முகர்ந்து வாழ்த்தியது....
“நான் பெற்ற பிள்ளைகள்...
என் உடன் பிறவா சகோதரர்கள்...”
என்ற தாய்க்கடல்....
“வாடப்பலப் புரிந்து வாழ்வை விழலாக்கும்
மூடப்பழக்கத்தைத் தீதென்றால் முட்டவரும்....
மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த
ஈடற்ற தோளா... இளந்தோளா...”
என்று தோள்தட்டி வரவேற்றது.
அகிம்சை வழியில் அறப்போராட்டமா...?
அகிலமே உற்றுக் கவனிக்கிறதே...??
அதுவும் அடங்க மறுக்கும் இந்த வயதிலா...???
ஆகாது... நம் ஆட்சிக்கு ஆகாது... என்று நினைத்த ஆட்சியாளர்கள்... கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்க அந்நியர்களிடம் துடியாய்த் துடித்தவர்கள்... மண்ணிலன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை இழந்தவர்கள்...
அஞ்சாது... கண் துஞ்சாது... அறவழியில் போராடிய அக்கினிக் குஞ்சுகளை... அடக்குகிறோம் என்ற பெயரிலே... ஏவல்துறையை ஏவியதன் விளைவு... வெந்து தழன்றது காடு... தமிழ் நாடு... இதில் குஞ்சென்றும், மூப்பென்றும் இல்லை... மாணவர்களுக்கும், மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும், சமூகவிரோதப் பட்டம் கட்டப்பட்டு ஒடுக்கப்பட்டார்கள். அடித்து நொறுக்கப்பட்டார்கள். வழக்கம்போல் இஸ்லாமியர்கள் கொச்சைப் படுத்தப்பட்டார்கள்.
ஆட்சியாளர்கள் வைத்த தீ வேண்டுமானால் அணைந்திருக்கலாம்.... ஆனால் ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் மூண்ட தமிழ்த்தீ நீறு பூத்த நெருப்பாக இன்னமும் அதிகமாக கனன்றுக் கொண்டிருக்கிறது...
வீணர்களைக் கண்டு பயந்து வீழ்வோமென்று நினைத்தாயோ....?
அடக்குமுறைகளைக் கண்டு அடுத்த எழுச்சி அணிதிரளாது என்று எண்ணினாயோ....??
இனி அநியாயங்களைக் கண்டால் அடங்க மறுப்போம்...
ரெளத்திரம் பழகுவோம்...
இந்துவாக இருந்தாலும்
கிறிஸ்துவனாக இருந்தாலும்
முஸ்லிமாக இருந்தாலும்
மனிதனாக இருப்போம்...
தமிழனாய் நம் இருப்பை உணர்த்துவோம்.
|