எதையுமே உண்ண முடியாதா? இக்கட்டுரையைப் படிப்போர் மனதில் எழும் கேள்வி இப்படித்தான் இருக்கும்.
ஆண்டாண்டு காலமாக நாம் உண்டு வந்த பிஸ்கட்டிலும் கூட மிருகக் கொழுப்பு - அதிலும் பன்றியின் கொழுப்பு என்றால் ஏற்றுக்கொள்ளவா முடியும்?
பதப்படுத்துதல் (PROCESSING)
சிறிய அளவு கொண்ட பிஸ்கட்டுகளைப் பதப்படுத்தி பாக்கெட்டில் அடைத்து வைத்தாலும் கூட, ஓரளவு உடையாமலே இருக்குமாம். ஆனால் பிஸ்கட்டின் அளவு கூடக் கூட அதன் உடையும் தன்மையும் அதிகரிக்கிறதாம். அப்படி உடையாமல் இருக்க மாட்டுக் கொழுப்பையோ அல்லது அதை விட பன்றியின் கொழுப்பையோதான் சேர்க்கப்படுகிறதாம்.
ஒருபக்கம் பதப்படுத்தப் பயன்படும் பொருள்களில் ஏராளமானவை நம் உடலுக்கு ஊறு விளைவிக்கும் தன்மை கொண்டவை என்றும், பல்வேறு புதுப்புது நோய்கள் வர அவை மூல காரணாமாக அமைகின்றன என்றும் ஓர் அதிர்ச்சிக்குறிய தகவல் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கிறது. ஏனெனில் அவற்றுள் அதிகமானவை வேதிப் பொருட்களாம்.
ஆகவே பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டு கடைகளில் தொங்க விடப்படுபவை அல்லது கண்ணைக் கவரும் விதமாக சூப்பர் மார்க்கெட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளவை எல்லாமே நம் உடலுக்கு நன்மை பயப்பதை விடவும் கேடுகள் விளைவிப்பதே அதிகமாம். பாக்கெட் பால் உட்பட அதுதான் நிலை!
இப்போது கொழுப்பு பற்றிய பேச்சும் மேலெழுந்து வரத் துவங்கியுள்ளது. ஏற்கனவே இவைபற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் ஊர்ஜிதமான தகவல்கள் படிப்படியாக கிடைக்க ஆரம்பித்துள்ளன. வலைத்தள என்ஜின்களுக்கு ஓராயிரம் நன்றிகள்.
READERS DIGEST தரும் அதிர்ச்சித்தகவல்
பதப்படுத்தப்பட்டு (PROCESSED), பொட்டலங்களாக (PACKAGED) அடைக்கப்பட்டு, தீவன உபபொருட்கள் (ADDITIVES) சேர்க்கப்பட்டு, சத்துக்கள் (NUTIRIENTS) நீக்கப்பட்ட உணவையே அமெரிக்கர்கள் பெரும்பாலும் தங்களது தினசரி உணவாக உட்கொண்டு வருகின்றனர் என்றும், அதனால் ஏற்பட்டுள்ள பின்விளைவுகளாக எண்ணிலடங்கா நோய்களாக இக்காலத்தில் அவர்கள் அனுபவித்து வருவதாகவும் READERS DIGEST என்ற புகழ்பெற்ற ஆங்கில மாத இதழ் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவ்வாறு பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகமானவை செயற்கையான இனிப்பு (SWEETENER), உப்பு (SALT), நறுமணச்சுவை (FLAVOR), தொழிற்சாலைகளால் உருவாக்கப்பட்ட கொழுப்புகள் (FACTORY CREATED FATS), நிரமேற்றுதல் (COLORING), வேதிப்பொருட்களை கலத்தல் (CHEMICALS) மற்றும் பதப்படுத்துதல் (PROCESSING) உள்ளிட்ட செய்முறைகளைக் கொண்டே உணவாக தயாரிக்கப்படுகின்றன. இவற்றைச் சாப்பிடுவதை விடக் கொடுமை என்னவெனில், உணவுப் பொருட்களிலிருந்து நம் உடலுக்கு இயற்கையாகவே கிடைக்கக்கூடிய நார்ச் சத்து, நல்ல கொழுப்பு, நோய்த் தடுப்பு மற்றும் ஆரோக்கியம் முதலானவற்றை நமக்கு கிடைக்காமல் தடுக்கவும் செய்கின்றனவாம்.
செயற்கை கொழுப்பு (TRANSFAT)
TRANSFAT (செயற்கை கொழுப்பு) முறையில் உண்டாக்கப்படும் தின்பண்டங்கள், உணவு பதார்த்தங்கள் முதலானவை நம் உடலுக்கு ஒரு மாபெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் கூறுகிறார்.
பாப்கார்ன், பேக்கரி கேக்குகள், பேக்கரி ப்ரட்டுகள், மிருதுவான கொரித்தல்கள், துரித உணவு (FAST FOOD) உள்ளிட்டவைகளில் செயற்கை கொழுப்புகளே மிகுதமாகச் சேர்க்கப்படுகின்றன.
நிறைவுற்ற கொழுப்பைக் (SATURATED FAT) காட்டிலும் இருமடங்கு கேடான இக்கொழுப்புகள் காரணத்தால் அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் 30000 முதல் 100000 பேர்களுக்கு முதிராத இதயக் கோளாறுகளால் (PREMATURED HEART DISEASES) மரணங்கள் சம்பவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெரிய கடைகளிலும், சூப்பர் மார்கெட்டுகளிலும் நீங்கள் வாங்கும் - உண்பதற்குத் தயாரான நிலையில் உள்ள - பதப்படுத்தப்பட்ட பொட்டலங்களை உற்றுநோக்கினால், அதில் PARTIALLY HYDROGENATED OIL (பகுதியாக ஹைட்ரஜனேற்றல் முறையில் சேர்க்கப்பட்ட எண்ணெய்) என அச்சிடப்பட்டிருப்பதை காண்பீர்கள். இதில் PARTIALLY என்ற வார்த்தையே மிகவும் தவறாக வழங்கப்பட்டிருப்பதாகவும், அதிகமான TRANSFAT இருப்பதையே அவ்வாறு கூறப்படுவதாகவும் மேலும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
TRANSFAT களை வெகுவாக குறைப்பதன் மூலம் 53 சதவீதம் இதயக் கோளாறு பாதிப்புகளை தடுக்க இயலும் என்கிறது அந்த ஆய்வு.
SODIUM-FREE, REDUCED SODIUM, LIGHT IN SODIUM என உணவுப் பொட்டலங்களில் வழங்கப்படும் சொற்கள் வெறும் பொய்யானவை என்றும், ஊட்டச்சத்துக்கான உண்மைக் குழு (NTURTION FACTS PANEL) வழங்கும் தகவல்கள் மட்டுமே உண்மையானவை என்றும் - காலம் கடந்து, பல உயிர்கள் பலிபோன பிறகு, அவற்றுக்கான காரணங்கள் அலசப்பட்டதன் விளைவாக அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கொலஸ்ட்ரால் (CHOLESTROL) ஒரு நோய் இல்லை என இப்போது நம் நாட்டிலும் பரவலாக பரிமாறப்பட்டு வரும் தகவலின் பின்னணியே இதுதான்.
இனிப்பு கலப்பு (SWEETENING)
இன்னொரு அதிர்ச்சியளிக்கும் தகவல் இனிப்பு கலப்பு பற்றியதாகும். உணவுப் பொட்டலங்களில் அச்சிடப்பட்டுள்ள CORN SYRUP, CORN SYRUP SOLIDS, HIGH-FRUCTOSE CORN SYRUP என்பன மிகக்கேடான விளைவுகளை நம் உடலுக்குள் ஏற்படுத்துகின்றனவாம். செயற்கையான முறையில் சுவையைக் கூட்டும் சதிவேலைகளை இவை ஏற்படுத்துவதன் மூலம், அளவுக்கதிகமாக அதை உண்பதன்பால் அவை தூண்டுகின்றன. மனித ஆற்றலைக் குறைத்து, இருதயக் கோளாறுகளையும், விதவிதமான சர்க்கரை வியாதிகளையும் அதிகப்படுத்தும் கருமத்தை இவ்வகையான இனிப்புகள் கச்சிதமாக செய்கின்றனவாம்.
இப்படியே சொல்லிக்கொண்டு போனால் எதைத்தான் உண்பதாம்...? இப்படியும் கேள்விகள்!
“ஆ...மா... இவங்க இப்படியே பேசிக்கிட்டிருப்பாங்க... இவங்களுக்கெல்லாம் வேறு வேலைவெட்டிகளே இல்லை” என அலுத்துக்கொள்வோர் வேறு பலர்.
பெண்ணொருத்தி ஓர் இயற்கை மருத்துவரிடம், “நீங்கள் பழங்களை அதிகமாகச் சாப்பிடச் சொல்கிறீர்கள்… ஆனால் அதிலும் மருந்து கலந்திருப்பதாகக் கூறுகிறார்களே...?” என்று கேட்க, அதற்கவர் - “நீங்கள் உண்ணும் சாக்லேட்டுகளை விடவா அது நச்சுத்தன்மை கொண்டது…? எனவே பழங்களை நன்றாகக் கழுவிச் சாப்பிடுங்கள்!” என பதிலளித்தார்.
இதிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால், இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலைகளில் - அதிக நன்மை; ஆனால் சிறிய தீமை என இருப்பவற்றை அதிக தீமை; ஆனால் சிறிய நன்மை என்பனவற்றுக்குப் பகரமாக நாம் உட்கொள்ளலாம் என்பதே!
மதுவைத் தடைசெய்த ரஹ்மான் - அதில் சில நன்மையும், பல தீமைகளும் இருப்பதாகவும்... அதன் கேடுகள் அவற்றின் பயன்களைக் காட்டிலும் மிகையானதாக உள்ளது எனவும் கூறுகிறான்.
யூதர்களும், நாமும்
ஆனாலும் நாம் ஒரு விஷயத்தில் யூதர்களைப் பாராட்டியே ஆகவேண்டும். “எதற்கெடுத்தாலும் யூதர்களைத்தான் குறை சொல்லனுமா?” என நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது. நீங்கள் அவர்களின் கொள்கையைப் பின்பற்றும் வரை அவர்கள் திருப்திப்படவே மாட்டார்கள் என்ற யூத கிறிஸ்தவர்கள் பற்றிய இறைவசனமும் நினைவிற்கு வரவே செய்கிறது. வேதம் வழங்கப்பட்டிருந்த அவர்கள் - தங்களது வேதத்தை விடவும் நாம் பின்பற்றும் வேதத்தை அவ்வளவு நம்பிக்கையுடன் புரட்டிப் பார்க்கிறார்கள். தூதர் மொழிகளையும் கூட அப்படித்தான் உற்று நோக்குகிறார்கள்.
அவர்களின் தேடல்கள் அவற்றையெல்லாம் அடிபிசகாமல் அப்படியே பின்பற்றுவதற்காகவல்ல.
உண்மை விசுவாசிகளிடம் “தொழவேண்டாம்! குர்ஆனை ஓதவேண்டாம்!!” என்றால் கேட்கவா செய்வார்கள்? அவ்வாறு செய்வது சாத்தியமுமல்ல. அப்படியே அவர்களின் பக்திகள் முற்றிப் போனால் அவர்கள் கையேந்தினால் போதுமே...? அல்லாஹ் தன் ரஹ்மத்தைக் கொட்டிக்கொடுப்பதிலிருந்து பிறகு யாரால்தான் தடுக்க முடியும்?
எனவே ஒரு கல்லில் பல மாங்காய் என்ற அடிப்படையில் உடலில் ஆரோக்கியக் கேட்டை விளைவித்து, மருந்து மாத்திரைகளில் நம்மை நிரந்தரமாக குடியிருக்கச் செய்தல், ஹராமை உட்புகுத்தி படைத்த இரட்சகனின் தொடர்பைத் துண்டித்தல் என பல வகைகளில் சிந்திக்கிறார்கள்.
உடலிலுள்ள சுமார் 1400 கிராம் எடை கொண்ட மூளையை உலகின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கும் பயன்படுத்துவது அவர்களின் தனிச்சிறப்பு. அதே எடைகொண்ட மூளையை உடலுக்கு ஒரு பாரமாக வைத்துக்கொண்டு வயிற்றை மட்டுமே நிரப்பி வாழ்பவர்கள் நாம் இருக்கிறோம்.
“அவர்கள் ஓர் உடும்புப் பொந்திற்குள் நுழைய முற்பட்டால் நீங்களும் அவர்களைப் பின்பற்றி அவ்வாறே செய்வீர்கள்” என நம் காருண்ய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போன்றே நம் படையெடுப்புகள் யாவும் அவர்களின் அடியொட்டியே அமைந்திருக்கின்றன.
வாயை அகலமாக வைத்துக்கொண்டு, எப்போதும் தொலைக்காட்சியையே பார்த்துக்கொண்டிருக்கும் நம் இல்லத்து ராணிகளும், இளவரசிகளும் அதில் உள்ள விளம்பர அம்சங்களை அப்படியே பின்பற்றுவதில்லையா?
நம்மில் பலர் உண்ணும் உணவு, குடிக்கும் பானம், உடுத்தும் ஆடை, பயன்படுத்தும் நறுமணங்கள், உடலை அலங்கரிக்கும் அழகு சாதனங்கள் என அனைத்திலும் வச்ச குறி தப்பாமல் பின்பற்றுவது யூத நசாராக்களை அல்லவா?
உடலுக்கு கேடு விளைவிப்பவை, ஹராம் - ஹலால் என எதையும் பொருட்படுத்தாமலேயே حلال என்ற ஒற்றை வார்த்தைக்குள் நம்மைக் கட்டிப்போட்டுக்கொண்டு, உண்ட உணவுகள் எத்தனை எத்தனை...? வாங்கிய பொருட்கள் எவ்வளவுக்கெவ்வளவு...? KFC-யும் KENTUCKY-யும் McRENNET-ம் ஹராம் என்ற ஃபத்வாக்களை இரயில் டைம்டேபிள் போல மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பா?
உத்தம சஹாபாக்களும், நாமும்
மது கூடாதென வந்த இறைச்சட்டத்தை இதயத்திலேந்தி, அன்றைய அரபு தேசத்தில் மதுவை ரோட்டில் ஆறாக ஓடச்செய்தது அந்தக் காலம். அதன் பாத்திரங்கள் வீட்டில் இருப்பதும் கூட தம்மிடையே மீண்டும் அப்பழக்கத்தை தூண்டும் என்ற அச்சத்தால் அவற்றைப் போட்டுடைத்தார்கள் அண்ணலாரின் அருமைத்தோழர்கள்.
ஆனால் அதே நாட்டில் பீர்பாட்டில்களில் ஹலால் என்னும் பெயர் சூட்டி அழகுபார்ப்பவர்கள் இன்றைய காலத்தவர். இறையச்சத்தின் இடைவெளி எவ்வளவு தூரம் விரிந்துள்ளதென்பதற்கு இது ஒன்றே போதுமானதல்லவா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் பின்வரும் ஹதீஸைப் பாரீர்:-
முடி களைந்து தூசு படிந்தவனாக நீண்ட தூரம் பயணித்த ஒரு மனிதன் தனது இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தியவாறு, “(யா ரப் யா ரப்) என் இரட்சகா! என் இரட்சகா!!” என இறைஞ்சுகிறான். அவன் உண்பது ஹராம்; அவன் குடிப்பது ஹராம்; அவன் உடுத்துவது ஹராம்; அவனது ஊட்டச்சத்து ஹராமானது; எனில் எவ்வாறு அவனது துஆ ஏற்றுக்கொள்ளப்படும்? (முஸ்லிம், திர்மிதீ)
கெய்ஃபல் ஹால்
“கெய்ஃபல் ஹால்” என அரபுகள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் விசாரிக்கையில் அதற்கு பதிலளிப்பவர்கள் “ஹாலீ பித் தய்யிப்” எனக்கூறுவர்.
அல்லாஹ் இறைமறையில் நல்லதையே உண்ணச் சொல்கிறான். தய்யிபாத் என்ற வார்த்தையையே அதற்காகப் பயன்படுத்துகிறான். தய்யிப் என்னும் அரபுப் பதத்திற்கு நல்லவை, தூய்மையானவை, ஆரோக்கியமானவை, தீங்கில்லாதவை என தமிழில் பல பொருள்கள் உண்டு. தய்யிப் என்ற வார்த்தைக்கு எதிர்பதமாக ஃபாசித், ஃகபீஃத் என்ற வார்த்தைகளும் உள்ளன.
எனவே, உணவென்றால் ஹராம் - ஹலால் மட்டுமல்லாமல் உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் அனைத்தையும் கண்டிப்பாக ஒவ்வொருவரும் தவிர்ந்திருக்க வேண்டும் என்பதையே மேற்சொன்ன இறைவசனமும் நபிமொழியும் அறிவுறுத்துகின்றன.
கேரளாவில் கோழிக்கோட்டை அடுத்த முக்கம் என்ற ஊருக்கு அருகில் இருக்கும் சேனமகலூரில் Hygeine Health School of Naturopathy என்னும் பெயரில் ஓர் ஆரோக்கியமனையை (மருந்து மாத்திரைகளே இல்லாமல் வைத்தியம் செய்வதால் இப்பெயர்) நடத்திவரும் பிரபல மருத்துவர் அப்துர் ரஹ்மான் ஆரோக்கியமான உணவு பற்றி கூறும் சிலவற்றைப் பார்ப்போம்:-
• சமைப்பதற்கு மண் பாண்டங்களையே பயன்படுத்துங்கள்! அது கிடைக்காதபோது மட்டும் எவர்சில்வர் பயன்படுத்தலாம். அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கக் கூடவே கூடாது.
• சமைக்கப்பட்ட உணவை அதிகபட்சமாக 3 மணி நேரத்துக்குள் உண்டுவிடுங்கள். தாமதமானால் அவை நஞ்சு மட்டுமே. உணவாகாது.
• பாக்கெட் பால் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட எந்தவகையான உணவுப் பொருட்களையும் உண்ணாதீர்.
• குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுக்கும் சகலவிதமான சமைக்கப்பட்ட உணவுகளும் கேடானதே.
• புளிக்க வைக்கப்பட்ட உணவைத் தவிர்த்திடுங்கள். (இட்லி, தோசையானாலும் கூட).
• இறால், கருவாடு உள்ளிட்ட கடல் உணவுகளை தவிர்த்திடுங்கள்.
• வெள்ளைச் சீனியை அறவே தவிர்த்திடுங்கள். ப்ரவுன் சர்க்கரை நன்றே.
• அரிசிக்குப் பதிலாக கோதுமையையே அதிகம் உண்ணுங்கள்.
• பழங்களை அதிகமாக உண்ணுங்கள்.
• சாக்லேட் வகையிலான எந்த உணவையும் உண்ணவே வேண்டாம்.
• பேரீத்தம்பழம் மற்றும் தேன் அதிகமாக சாப்பிடுங்கள்.
• வாரம் ஒரு நாளாவது கண்டிப்பாக நோன்பிருங்கள்.
இவரது ஆலோசனையைப் பெற்ற ஒரு குடும்பத்தினர் சொல்வதைப் பாருங்கள்:-
அவரிடம் ஆலோசனை பெற்ற பலர், “மருத்துவர் சொன்ன விதத்தில் எங்களது உணவுப்பழக்கத்தை மாற்றியமைத்தோம்... இதனால் நிறைவான மன அமைதி கிடைக்கிறது...” என்கிறார்கள். மேலும் இயற்கை உபாதைகள் சீராக உள்ளது எனவும், இப்பழக்கவழக்கத்தால் உடலில் முன்னர் இருந்த பல்வேறு பிரச்சனைகள் இறையருளால் இப்போது வெகுவாக மாறிவிட்டது எனவும் கூறுகின்றனர்.
மனமிருந்தால் மார்க்கமுண்டு! தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டு, வாழ்க்கையையும் கஷ்டப்படுத்திக் கொள்வதாலேயே - அதனால் ஏற்படும் பல்வேறு வினைகளையும், விளைவுகளையும் அனுபவித்தவர்களாக நாம் வாழ்ந்து வருகிறோம். பொறுமையும், இருப்பதைக் கொண்டு திருப்திப்படுதலும், இயற்கையுடன் கூடி வாழ்ந்து - செயற்கையை விட்டும் விலகி இருப்பதும்தான் ஆரோக்கியமான வாழ்விற்கான ஒரே வழி! ஹராமான செயல்களை விட்டும் தவிர்ந்திருப்பதற்கும், நாம் கேட்கும் துஆக்கள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்குமான ஒற்றை வழியும் கூட இதுமட்டும்தான்!!
படைத்துப் பரிபாலித்து இரட்சித்துக் காக்கும் வல்ல ரஹ்மான் நாமெல்லோரும் நோயற்ற ஆரோக்கியமான வாழ்வு வாழவும் நம் துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படவும் நல்லுதவி புரிவானாக.
|