மார்ச் 08ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப் படுகிறதாம்... பொன்வண்டு சோப்பு விளம்பரம் முதல் லலிதா ஜுவல்லரி விளம்பரம் வரை போட்டி போட்டுக்கொண்டு பெண்களை வாழ்த்தி தங்கள் பொருட்களை கூவிக் கூவி சந்தைப் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
“பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்... பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்... பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்...” என்று தனது இறுதி மூச்சின்போதும் உறுதிபட அறிவுரைத்துச் சென்ற அண்ணல் நபிகளார், ஆண்டின் 365 நாட்களும் பெண்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்தான் என உரக்கச் சொன்னது இந்த உலகின் மூடிய காதுகளுக்குள் இன்னும் முட்டித் தெறிக்கவில்லை... அதனால்தான் மார்ச் எட்டை மட்டும் பெண்களுக்கான நாள் என ஒதுக்கி நல்ல நாடகத்தை அரங்கேற்றுகிறது இந்த அற்ப உலகம்.
பெண்கள் இன்று கல்வியில் முன்னேறிவிட்டார்கள்... அரசியலில் கால் பதித்தது மட்டுமல்ல... காலடியில் வீழவும் வைத்து விட்டார்கள்... இரும்புப் பெண்மணி... எதிரிகளை எறும்பு போல் நசுக்கி விடும் பெண்மணி என்று பெண்களின் முன்னேற்றம் வாய்ப்பந்தல்களில் ஒருபுறம் கிழிகிறது... மறுபுறமோ...
மலரும் முன்பே கருக்கப்படும் அரும்புகளின் எண்ணிக்கை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. ஆம்... ஹாசினிகளைப் பெற்ற எங்களின் வயிறுகள் மீண்டும் நெருப்புக்ளைச் சுமக்க ஆரம்பித்துவிட்டன.
ஒவ்வொரு நாளும் காலையில் பள்ளிக்கூடத்திற்குப் பிள்ளைகளை அனுப்பிவிட்டு மாலையில் அவர்கள் வீடு திரும்ப எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் அந்த ஏழு மணி நேரங்களும் ஏழு ஜென்மங்களாக நீண்டு நெளிகிறது... இடையில் அறியாத, தெரியாத எண்களிலிருந்து தொலைபேசி ஒலித்தால் வயிற்றில் புளியைக் கரைக்கிறது...
“பள்ளிக்கூட வேன்களிலும், ஆட்டோக்களிலும்... இனி யாரை நம்பி குழந்தைகளை அனுப்புவது...? பள்ளியில் வாட்ச்மேன் இருப்பாரே...? இதர பணியாளர்கள் இருப்பார்களே...? கோ-எஜுகேஷன் பள்ளி என்றால் ஆண் ஆசிரியர்கள் இருப்பார்களே...? விடலைப் பருவ மாணவர்களும் நிறைய இருப்பார்களே...?” என்று - வேண்டாத கற்பனைகளை விபரீதமாய் மனம் விரிக்கிறது... குழந்தைகளைக் கூட குழந்தைகளாய் பார்க்கத் தெரியாத கொடூரர்களின் கூடாரமாய் இன்று உலகம் மாறிக் கொண்டிருக்க... மார்ச் எட்டு உலக மகளிர் தினமாம்... என்ன ஒரு நகைமுரண்...?
ஹாசினி..., நந்தினி..., ரித்திகா..., சூர்யகலா... என்று கடந்த ஒன்றரை மாதங்களில் வெளியில் வந்த பெயர்கள் இவை... வெளியில் வராமல் எத்தனையோ... நமக்கு அருகிலேயே நாம் அறியாமலேயே... நித்தமும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை...
ஹாசினியை சிதைத்த அந்தப் பாவி ஒரு டிப்ளமோ பொறியியலாளன்... ஐ.டி. கம்பெனி ஒன்றில் பணியாற்றுபவன்... படிப்புக்கும், பண்பாட்டுக்கும் தொடர்பே கிடையாது என்ற உண்மை நம் பொதுப்புத்திக்கு எப்போதுதான் உறைக்கப் போகிறதோ...?
இந்தக் கயவர்களை அவ்வளவு எளிதில் அடையாளம் கண்டுவிட முடியாது... நல்லவர்கள் முகமூடியுடனேயே நமக்குள்ளே உலா வருபவர்கள்... நம் வீட்டுக்கு அருகிலேயோ..., பள்ளியிலோ..., நம் நெருங்கிய வட்டாரங்களிலோ... எங்குமிருக்கலாம்!
குழந்தைகள் மீது நடத்தப்படும் இதுபோன்ற வன்கொடுமைகளில் என்பது முதல் தொன்னுறு சதவீத குற்றங்கள் குழந்தைகளுக்குத் தெரிந்தவர்கள் மூலமாகவும், நன்கு நெருக்கமானவர்கள் மூலமாகவும்தான் நடக்கின்றன. இவர்களுள் படித்தவர்கள், படிக்காதவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என எந்த வேறுபாடும் இல்லை என்பதை குழந்தைகள் மீதான குற்றங்கள் பற்றிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் 53 சதவீத குழந்தைகள் இதுபோன்ற பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், யூனிசெப், மற்றும் save the children ஆகிய அமைப்புகள் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாகவே பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களை மனிதர்களாகக் கூட நம்மால் மதிக்க முடியாது எனும்போது, குழந்தைகளிடம் போய் கேவலமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்த இழி பிறவிகளை மிருகங்களுக்கும் கீழாகத்தான் கருத வேண்டியுள்ளது. இந்த இழிபிறவிகளின் இலக்குகள் பன்னிரண்டு வயதுக்குக்குட்பட்ட சிறுமிகள்தானாம்!
குழந்தைகள் குரலற்றவர்கள்... அவர்களால் எதிர்ப்புக் காட்ட முடியாது என்னும் யதார்த்தமே இவர்களது கேடயமாகிறது.
தனக்கு என்ன நடந்தது என்பதை புரிந்தும், புரியாத தன்மை...
“வெளியே சொல்லலாமா, கூடாதா?” என்ற குழப்பம்... “சொன்னால் நம்புவார்களா, மாட்டார்களா?” என்ற பயம்...
“நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?” என்ற வெட்கம்...
“உறவுகளை இழந்து விடுவோமோ?” என்ற அச்சம்...
“விஷயம் பெரிதாகி நம் நண்பர்கள் மற்றும் உறவுகள் முன்னிலையில் அசிங்கப்பட்டு விடுவோமோ...?” என்ற பதட்டம்...
இவ்வாறான பலவித குழப்பங்கள் அந்தப் பிஞ்சு மனதிற்குள்ளே சுற்றிச் சுழல... பல குழந்தைகள் தனக்கு நேர்ந்த அந்த பயங்கரத்தைத் தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டு, வாழ்நாள் முழுவதும் மனரீதியாக அனுபவிக்கும் துயரங்கள் விவரிக்க முடியாதவை. ஹாசினிகளைப் பெற்றவர்களாகிய நமக்குத்தான் ஐம்புலன்களையும் விழிப்பாக வைத்துக்கொள்வது அவசியமாகிறது....
குழந்தைகள் ஆணோ, பெண்ணோ... வளரும்போதே அவர்களுக்கு ‘குட் டச்... பேட் டச்..’ பற்றிய தெளிவினை ஊட்டிவிட வேண்டும். வெட்க உணர்வை எப்படி பெண் குழந்தைகளுக்குள் ஆழ ஊன்றி விதைக்கிறோமோ அதுபோல, ஆண் குழந்தைகளிடத்தும் விதைக்க வேண்டும். குழந்தைகளைப் யாரைப் பற்றியாவது நம்மிடம் வித்தியாசமாகப் புகார் கூறினால் அதை அலட்சியப்படுத்தாமல், காது கொடுத்துக் கேட்டு, அது சம்பந்தமாக மேல் நடவடிக்கை எடுப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.
மஹ்ரமல்லாத உறவினர்கள், நண்பர்களுடன் குழந்தைகள் தனியாக இருக்க ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம்! பிள்ளைகள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது, பெரியவர்கள் இல்லாத வீடெனில் பெற்றோர்களில் யாராவது ஒருவர் கண்டிப்பாக வீட்டில் இருக்க வேண்டும்.
பக்கத்து வீடுகளில் சாவி கொடுத்து வைத்து - நாம் வீட்டுக்குத் திரும்பி வரும்வரை அங்கே அவர்களை காத்திருக்கச் சொல்வதையும், பக்கத்து வீடுகளுக்கு நம் பிள்ளைகளை விளையாட அனுப்புவதையும் பெரும்பாலும் தவிர்க்கவே முயற்சிக்க வேண்டும்.
குறிப்பாக... “வீட்டு டிரைவர்தானே?” என்று குழந்தைகளை அவர்களுடன் பள்ளிகளுக்கோ...,வெளியிலோ... தனியாக அனுப்பவோ... அவர்களுடன் நெருங்கிப் பழகவோ அனுமதிக்க வேண்டாம்... ஆணானப்பட்ட நடிகைகளையே டிரைவர்கள் படுத்திய பாடு கேரளாவில் சமீபத்தில் பூதாகரமானதை நாம் அறிவோம்... சிறு குழந்தைகள் எம்மாத்திரம்...?
இஸ்லாம் என்றுமே உண்மையை போட்டு உடைக்கத் தவறியதே இல்லை... மஹ்ரமில்லாத உறவினர்களுடன் நடந்துகொள்ளும் முறையைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டபோது, “ஒரு பெண் அவளது கணவனின் சகோதரர்களுடன் நடந்துகொள்ளும் முறை மரணத்திற்குச் சமம் எனுமளவிற்குப் பேணி நடக்க வேண்டும்!” என்று கூறினார்கள்.
“உறவினர்கள்தானே?” என்று நீக்குப் போக்காக நடந்துகொள்ள இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.
குழந்தைகள் எதையும் வெளியில் சொல்ல மாட்டார்கள்... நாமாகத்தான் அவர்களின் முகத்தை தினமும் கண்காணித்து வரவேண்டும்.
அவர்களிடம் வழக்கத்திற்கு மாறான பயமோ...
பள்ளிக்குச் செல்வதில் தயக்கமோ...
குறிப்பிட்ட ஒரு ஆளைப் பார்த்தவுடன் வெறுப்போ...
அவர்களது இயல்பான துறுதுறுப்பு தொலைந்து எதையோ இழந்தது போன்ற அமைதியோ...
என்று, எந்த மாற்றத்தைக் கண்டாலும் சரி! அன்பாக... மெதுவாக அவர்களிடம் பேச்சுக்கொடுத்து, இன்னதென்று விசாரித்தறிந்து தக்க நடவடிக்கை எடுக்க நாம்தான் முயற்சிக்க வேண்டும்.
ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ - இரண்டுமே இறைவன் நமக்களித்த அமானிதங்கள்! அதிலும் பெண் குழந்தைகள் பெற்றோருக்கு சுவர்க்கத்தின் வாசலைத் திறந்துவிடும் திறவுகோல்கள்!! பெண் குழந்தைகளை ஒழுக்கத்தோடும், பண்பாட்டோடும் வளர்க்க வேண்டும் என்பதில் நாம் காட்டும் அதே அக்கறையை ஆண் குழந்தைகளின் வளர்ப்பிலும் நாம் செலுத்தியாக வேண்டியுள்ளது.
பெண்களை உயர்வாக மதித்து நடத்த வேண்டியதன் அவசியத்தை வெறும் வார்த்தைகளால் மட்டுமல்ல... நமது வாழ்க்கையாலும் ஆண் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். “பெண்களை மதித்து நடப்பவனே உயர்ந்த மனிதன்” என்னும் எண்ணத்தை அவர்களின் உள்ளத்திலே ஊன்ற விதைக்க வேண்டும். “ஆம்பளப் பிள்ளைதானே... சேத்த கண்டா மிதிப்பான்... தண்ணிய கண்டா கழுவுவான்...” என்ற மனோபாவத்தை மறந்தும் நம் மகன்களிடம் புகுத்திவிட வேண்டாம்!
தாயாக, சகோதரியாகவே இருந்தாலும் கூட சிறுவயது பிள்ளைகள் முன்னிலையில் வெட்கம் பேணி நடத்தல் அவசியமாகும். அப்போதுதான் தானாகவே வெட்க உணர்வு அவர்களுக்குள்ளும் ஊடுருவும்.
குழந்தைகள் மீதான இந்த வன்கொடுமைகளைத் தடுக்கும் வகையில் 2012ஆம் ஆண்டு போக்ஸோ (POCSO- PROTECTION OF CHILDREN FROM SEXUAL OFFENCE ACT ) என்னும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டப்படி குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கொடுக்கப்படலாம்... ஆனால் நம் நாட்டு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் இலட்சணங்கள்தான் நமக்குத் தெரியுமே...?
என்ன சட்டம் வந்து என்ன பயன்...? திட்டம் போட்டு குற்றம் செய்பவர்களை என்ன செய்ய முடியும்...? சட்டத்தின் சந்துபொந்துகளெல்லாம் இவர்களுக்கு சாதமாகிக் கொள்ளும்போது, ஏட்டளவில் இருக்கும் சட்டங்களால் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
குற்றம் நடந்த பின் கிடைக்கும் தண்டனைகளை விட, வருமுன் பாதுகாப்பதுதான் முக்கியம்! அதனால்தான் சொல்கிறேன்... பெற்றோர்களே...! ஒவ்வொரு நொடியும் கண்ணை இமை காப்பது போல ஆண், பெண் ஆகிய இரு குழந்தைகளையும் யாருடைய பொறுப்பிலும் விடாமல் நீங்களே பாதுகாத்து வாருங்கள். ஏனெனில் பிள்ளைகளை விட நமக்கு வேறெதுவும் முக்கியமில்லை...
பள்ளிகளிலே பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை இரத்து செய்வோம் என்றார்கள்... இதுநாள் வரை ஒரு ஆசிரியரின் சான்றிதழ் கூட இரத்து செய்யப்பட்டதில்லையாம்...
வெளிநாடுகளிலே பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை “இவன் ஒரு பாலியல் குற்றவாளி இவனிடம் எச்சரிக்கையாக இருங்கள்” என பொது இடங்களில் விளம்பரம் செய்வார்களாம்... ஆனால் இங்கு பெரும்பாலான பாலியல் குற்றவாளிகள் தண்டனையே பெறாமல் தப்பித்து விடுகிறார்கள். போக்ஸோ சட்டப்படி பதிவு செய்யப்படும் வழக்குகளில் ஐந்து சதவீதம் வழக்குகளில் கூட குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதில்லை என்கிறார் குழந்தைகள் நல உரிமை ஆர்வலர் தேவநேயன் அவர்கள்.
“நள்ளிரவில் நகைகளை அணிந்து கொண்டு தனியாக ஒரு பெண் எப்போது பாதுகாப்பாக செல்ல முடிகிறதோ அப்போதுதான் இந்தியா உண்மையான சுதந்திரம் அடையும்!” என்றார் தேசத் தந்தை... ஆனால் இன்று தேசத்தின் சொத்துக்களான குழந்தைகளுக்கு பட்டப் பகலிலே கூட பாதுகாப்பில்லை...
பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள ஆட்சியாளர்களது அதிகாரச் சண்டைகளின் அமளிதுமளிகளில் ஹாசினிகளின் கதறல்கள் ஈனஸ்வரமாய் அடங்கிப்போய்விட்டது. கூவாத்தூரின் கொண்டாட்ட சப்தங்களிலும்... சமாதிகளின் மீதான சபதங்களின் நாடகங்களிலும்... நான்தான்... எனக்குத்தான் என்ற இழுபறிகளின் கூக்குரல்களிலும்... ஹாசினியின் பெற்றோரின் கதறல் கண்டுக்கொள்ளப்படவே இல்லை...
ஐயா...! ஆட்சியாளர்களே...!!
முப்பது மூன்று சதவீதம் தந்து முதுகிலே குத்தும் போலி கவுரவங்கள் எங்களுக்கு வேண்டாம்! தனி மனித ஒழுக்கத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்!!
உங்கள் சண்டைகளைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு, சட்டம் ஒழுங்கைக் கொஞ்சம் கவனியுங்கள்!!!
சட்டைகளை கிழிப்பதை விட்டுவிட்டு சாட்டைகளைக் கொஞ்சம் சுழற்றுங்கள்!!!
உங்கள் நோக்கம் ஜனநாயகமோ... அல்லது பணநாயகமோ... உங்கள் வீடுகளிலும் ஹாசினிகள் வளருகிறார்கள் என்பதை தயவுசெய்து மறந்துவிடாதீர்கள்!!!
|