ஒட்டகங்களிலும், குதிரைகளிலும் பண்டைய அரபியர்கள் பயணித்த அதே தொன்மையான வழித் தடத்தில், மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் விரைந்து கொண்டிருந்தது - வெண்ணிற ஊர்தி ஒன்று!
வண்டியின் நெற்றிப் பகுதியிலுள்ள அதன் குளிரூட்டி, தீவிர சுவாசப் பயிற்சியில் மூழ்கியிருந்தது. சுட்டெரிக்கும் பாலைவன வெயிலின் தாக்கத்தை - ஊர்தியினுள் ஊடுருவாமல் தடுத்திடவே இந்தத் தொடர் போராட்டம்!
பாலைவனப் பார்வையாளன்
ஊர்தியின் சன்னலோர இருக்கையில் சாய்ந்தவாறு, கருநிறக் கண்ணாடி சாளரத்துக்கு வெளியே - எனது பார்வையை மேயவிட்டேன்.
அதே பரிச்சயமான நீல ஆகாயம்... மிகவும் பழக்கப்பட்ட வெள்ளை மேகங்கள்... ஆயினும், நிலப்பரப்பு மட்டும் புதுமையாக இருந்தது!
வழமையான பயணங்களைப் போலன்றி, மரங்கள் பின்னோக்கி ஓடுவதை கண்டு அகமகிழும் வாய்ப்பு - அன்று எனக்கு கிட்டவில்லை. மரங்களற்ற அந்த வழித்தடத்தின் இருபுறமும் கற்களும், பாறைகளும் இறைந்து கிடந்தன. ஒரு சில இடங்களில் மட்டும் மணற்புயலுக்கான எச்சரிக்கைப் பலகைகள் மஞ்சள் நிறத்தில் தென்பட்டன.
அங்கொன்றும், இங்கொன்றுமாகக் காணப்பட்ட பாலைவனக் கப்பல்களை தவிர, வேறெதுவும் என்னை வசீகரிக்கும்படியாக இல்லை. மஞ்சள், பழுப்பு, மஞ்சள்-வெள்ளை & கருப்பு என பல வண்ணங்களில் அவை காட்சியளித்தன.
அவற்றுள், சாலையோர வேலிக்கு அருகிலிருந்த ஒரு ஒட்டகக் கூட்டம் - விரைந்து செல்லும் எங்களின் வண்டியை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. மொட்டை மலைகளுக்கிடையே காணப்பட்ட ஒரு மணற்கடலில், ஒய்யாரமாக அமர்ந்திருந்த அந்தக் கூனல் முதுகு பிராணிகளை, சில நொடிப் பொழுதுகளில் கடந்து சென்றது ஊர்தி.
அவற்றின் பார்வையோ, அடைக்கப்பட்ட வண்டியில் இருந்த எங்களை, “நேரத்தின் பின்னால் ஓடும் இனம் இவை” என ஏளனம் செய்வது போன்று இருந்தது.
பசுமை மட்டுமா இயற்கை?
உம்முல் குறா (கிராமங்களின் அன்னை) எனும் செல்லப் பெயர் கொண்ட மக்காவில் - உம்றாஹ் வழிபாட்டின் கடமைகளை நிறைவேற்றிவிட்டு, மதீனாவை நோக்கி குடும்பத்துடன் மேற்கொண்ட பயணம் அது!
பயணத்தினூடே, என் மனம் ஏனோ பெளலோ கொய்லோ-வை (Paulo Coelho) தேடியது. முஸ்லிம்களின் புனித யாத்திரையில், இந்த கிறிஸ்துவருக்கு (இன்றளவில்) என்ன வேலையிருக்க முடியும்?
ரஸவாதி (The Alchemist) எனும் பிரசித்திப்பெற்ற புனைவை எழுதியவர் அவர். அந்தக் கதையில் தோன்றும் ஆடு மேய்க்கும் சிறுவன் சாண்டியாகோ (Santiago), பக்கத்து இருக்கையில் அமர்ந்து – எனது கரங்களைப் பற்றியபடி, இந்த அழகிய வரியை மொழிவது போன்று உணர்ந்தேன்: “பாலைவனத்தைப் புரிந்துகொள்ள - அதன் ஒற்றை மணல் துகளைப்பற்றி சிந்தித்தால் போதும், படைப்பாற்றலின் அனைத்து அற்புதங்களையும் நீ உணர்வாய்.”
இவ்வாக்கியத்தை நினைவுகூர்ந்ததும், விரிந்து கிடக்கும் கல்-மலைகளையும் பட்டு மணலையும் ஒரு புதுவித ரசனையோடு பார்க்கலானேன்.
“பசுமை மட்டுமல்ல இயற்கை, பாலை நிலமும்தான்!” என்பதை எனக்கு உணர்த்திய சொற்கள் அவை. இறைவனின் படைப்பாற்றல் வல்லமையை எளிமையாக எடுத்துக் கூறும் இந்த வரியை, இப்புனிதப் பயணத்தில் நினைத்துப் பார்ப்பது - ஒரு யதார்த்த நிகழ்வாக இருக்க முடியாதல்லவா?!
பூங்காவனப் பள்ளிவாயில்
சுமார் நான்கரை மணி நேர பயணத்திற்குப் பின், அன்ஸாரிகளின் புகழிடமான யத்ரிப் நகரை வந்தடைந்தோம். ஒரு பச்சைக் குவிமாட மஸ்ஜிதை நோக்கி ஆண்களும், பெண்களும் சாரை சாரையாக செல்கின்றனர். பாதையறியாத எனது கால்களும் அவர்களைப் பின் தொடர்ந்தன.
பள்ளிவாயில் சுற்றுச்சுவருக்கு வெளியே, ஒரு முதியவர் புறாக்களுக்கு இரை அளித்துக்கொண்டிருந்தார். அக்காட்சியை சட்டைசெய்யாமல் - அங்கிருந்த பெரும்பாலானோரைப் போல - நானும் கடந்து செல்ல எத்தனிக்கையில், எனது கால்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
அவரையே சில கணங்கள் உற்று நோக்கலானேன். சுருக்கங்கள் நிறைந்த அவரின் முகம், ஆழ்மனதின் உவகையைப் பெரிதாக காண்பிக்கவில்லை.
சற்று நேரத்திற்குப் பின்னர், அந்த பறவைகளுடன் விளையாடிட - அவசர அவசரமாய் - களமிறங்கினாள் சிறுமி ஒருத்தி. பறவைகளின் பின்னால் ஓடிய அம்மழலையின் சீழ்க்கைச் சிரிப்பும், அவளை விட்டுத் தூரம் செல்லும் பறவைகளின் இறக்கை அசைவும் – ஒரு ரம்யமான இன்னிசை விருந்தாகவே அமைந்தது.
அந்த வயோதிகரைப் போல், இப்பிள்ளைக்கு தனது உளமகிழ்வை மறைக்கத் தெரியாதது – ஒரே பறவைக் கூட்டத்தோடு உரையாடிய இருவேறு முதிர்ச்சியுடைய மனங்களும், வெறுமனே உணர்வுகளின் வெளிப்பாட்டில் மட்டுமே வேறுபட்டிருப்பதை நன்குணர்த்தியது.
ஆதவனின் வருகையைக் கண்டு சூரியகாந்தி மலர்வது போன்று, வெயிலுக்கு இதமாக அந்த மஸ்ஜித் வளாகத்தில் குடைத் தூண்கள் இயந்திரப் பூக்களாய் விரிந்திருந்தன. ஈச்ச மரங்கள் இருக்க வேண்டிய இடங்களை எல்லாம், இயந்திர தூண்கள் ஆக்கிரமித்திருந்தன!
மக்கள்திரள் பெருமளவு இருந்தது. எனது காதுகள் காட்டிய திசைகளில், நான் கண்களைத் திருப்பினேன். ஆங்காங்கே இசை நிகழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்தன.
மனிதர்களின் சத்தங்களுக்கிடையே, பள்ளிவாயில் கூரைகளிலும், விளக்குகளிலும், தூண்களிலும் & சுவர்களிலுமிருந்த சிட்டுக் குருவிகளின் ரீங்கார ஓசை - தனித்துக் கேட்டவாறு இருந்தது. ஈச்ச மரங்கள் இல்லாத குறையை, இப்பறவைகள் போக்கின; ரவ்ழா எனும் பெயருக்கேற்றார்போல் பூங்காவனமாகவே காட்சியளித்தது இப்புனிதத் தலம்.
மனிதருள் புனிதர்!
இனம்புரியாத ஏக்கம் என் மனதை சூழத் தொடங்கியது. ஒரு மதிப்பு கலந்த பதட்டத்தினால், இதயத் துடிப்பு எகிறுவதை என் பாதங்களில் உணர்ந்தேன்.
பள்ளிவாயிலின் பிரதான பகுதிக்கு வந்தடைந்ததும், படபடப்பு இன்னும் அதிகமானது. வரிசையில் நின்று கொண்டிருக்கையில், அருகில் இருந்த ஒரு முன்னறிமுகமில்லாத கருப்பர் இன சகோதரர் – எனது கைகளை குலுக்கி வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
விழிகள் தொடும் தூரத்திலே நம் உயிரினுமினிய இறைத் தூதரின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உறைவிடம். சந்திக்கப் போகும் மாமனிதரின் சிறப்பியல்புகளை எண்ணி மனமுருகியதால், கட்டுப்பாட்டை இழந்த எனது கண்களில் நீர் மல்கியது.
சிறிதளவான தள்ளுமுள்ளுக்கு பின்னர், சங்கைமிகு ரஸூலுல்லாஹ்வின் புனித ரவ்ழா ஷரீஃபை நெருங்கினேன். நாவும், மனதும் தன்னிலை மறந்து பன்முறை ஸலாம் உரைத்தது.
“ஏந்தல் நபி (ஸல்) அவர்களுக்கு சாந்தியும் சமாதானமும் உரித்தாகுக!”
சிறப்பு வாய்ந்த அந்தத் திண்ணையில் தொழுதுவிட்டு, ஒரு மூலையில் அமர்ந்தேன். எப்பேர்பட்ட மாமனிதர் அவர்கள்…!! எப்பேர்பட்ட திண்ணை அது...!!
திண்ணைப் பல்கலைக்கழகம்
உம்றாஹ் செய்த களைப்பு இன்னும் உடலோடு ஒட்டிக்கொண்டுதான் இருந்தது. எனினும், இறுதித் தூதர் அவர்களின் ஹிஜ்ரா பயணத்தோடு இந்த சொகுசுப் பயணத்தைக் கற்பனையிலும் கூட ஒப்பிட இயலுமா என்ன?
பாலைவனப் பாடசாலையாக விளங்கிய இந்தத் திண்ணையில்தான், பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் - முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எண்ணற்ற நற்போதனைகளை நவின்றார்கள்.
நபிகளார் நமக்களித்த வாழ்வியல் கல்வியை, பல மார்க்க அறிஞர்களின் வாயிலாக இன்றளவும் நாம் பெற்றுக்கொண்டிருக்கிறோம். அரபிய்யாவில் தோன்றிய அக்கல்வி, உலகளவில் பல தலைமுறைகளிடம் சென்றடைந்ததற்கு – அஹ்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கற்பித்தல் முறையிலிருந்த இலகுவான தன்மையும் ஒரு முதன்மைக் கருவியாக விளங்கிற்று எனலாம்.
இருப்பினும், அவர்களின் கற்பித்தல் முறைகளையும், யுக்திகளையும் நம் சமகால அறிஞர்கள் அதிகம் பேசுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
நபிகளாரின் கற்பித்தல் முறை
தற்போதைய பள்ளிக் கல்வியிலுள்ள கோளாறுகளை, கல்வியாளர்கள் பலரும் விமர்சித்த வண்ணம் உள்ளனர். மாற்றுக் கல்விக்கான முயற்சிகளில் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், ஆர்வலர்களும் ஈடுபட்டுள்ள இன்றைய சூழலில், ஆயிரத்து நானூறு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று – நபிகளாரின் கற்பித்தல் யுக்திகளை ஆராயும் அவசியம் நமக்கு வெகுவாகவே ஏற்பட்டுள்ளது.
ரத்தினச் சுருக்கமாக மொழிதல், எவரும் புண்படாவண்ணம் நகைச்சுவையோடு பேசுதல், கேட்பவர்களின் திறனுக்கு ஏற்றவாறு பதிலுரைத்தல், கண்ணெதிரே உள்ள உதாரணங்களை பயன்படுத்தி விளக்குதல் என நபிகளாரின் கற்பித்தல் திறன் ஈடிணையற்ற தனித்துவம் வாய்ந்தது.
இது ஒரு நூலாய்வும்தான்!
நபிகளார் அவர்களின் முப்பது வெவ்வேறு கற்பித்தல் முறைகளை (மேலே குறிப்பிட்டவைகளையும் சேர்த்து) விளக்கும் ஒரு நூல், 2015ஆம் ஆண்டு தமிழில் வெளியானது. அந்த புத்தகத்தைப் பற்றிய எனது மதிப்புரையை வழங்குவதும் இக்கட்டுரையின் பிரதான நோக்கங்களுள் ஒன்றாகும்.
எனது அண்மை மதீனா பயணத்தை முதலில் விவரித்து, அண்ணலாரின் திண்ணைப் பல்கலைக் கழகத்திற்கு உங்களை விரல்கோர்த்து அழைத்துவந்து, அங்குள்ள கம்பள விரிப்பில் அமரச்செய்த பின்னரே, அந்த நூலின் உட்கூறுகளை அலச முற்படுவதற்கு மூன்று காரணங்கள் உண்டு.
ஒரு நூலுக்கு மதிப்புரை எழுதும் அளவிற்கு பெரிதாக பட்டறிவு பெற்றிடாததால், எனக்கேற்பட்ட தயக்கமே முதலாவது காரணம். கட்டுரையின் துவக்கத்திலேயே இது ஒரு நூலாய்வுதான் என்பதை அறிந்தால், நம்மில் சிலர் (என் நெருங்கிய நண்பர்களும் கூட) அடுத்த வரியை வாசிப்பார்களா என்ற சந்தேகம்தான் இரண்டாவது காரணம்.
இத்தகைய புத்தக ஒவ்வாமையும் தற்போதைய கல்விமுறையின் குறைபாடே! பாடப்புத்தகங்களை சுமையாகவே கண்ட நமக்கு, இதர புத்தகங்கள் சுவைக்குமா என்ன? வாட்ஸ்-அப் & முகநூலிலும் வந்து குவியும் மூன்று-வரி செய்திகள்தான் வாசிப்பு என நம்பும் நாகரீக பண்பாட்டில், புத்தக வாசிப்பிற்கு எங்கு நேரமிருக்கும்?
மூன்றாவதாக, பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிய ஒரு நூலின் ஆய்வை, அவர்கள் வாழ்ந்த இடத்திருந்து துவங்க வேண்டுமென்ற ஒரு பேராசை.
ஏனைய புத்தகங்களை விடுத்து, “பேராசிரியர் பெருமானார் (ஸல்)” எனும் இந்த நூலை நான் கையாள்வதற்கும் - மூன்று காரணங்கள் இருக்கின்றன.
முதன்மையாக, இந்நூலும், இதன் நோக்கமும் மாற்றுக் கல்வி குறித்த எனது ஆர்வத்திற்கு திகட்டாத தீனியைத் தருகிறது. நமதூர் காயல்பட்டினத்தைச் சார்ந்த சகோதரிதான் இதன் ஆசிரியர் என்பது இரண்டாவது காரணம். இறுதியாக, கருணைமிக்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் வாய்ப்பை இந்நூல் வெகுவாகவே அளிக்கிறது.
பேராசிரியர் பெருமானார் (ஸல்) அவர்கள்!
குடும்பத் தலைவராக, சமய அறிவுரை கூறுபவராக, ஆட்சியாளராக, நீதிபதியாக, படைத் தளபதியாக - நாம் அறிந்த கோமான் நபியவர்களை - ஓர் ஆசிரியராக சித்தரிக்கிறது சகோதரி உம்மு நுமைராவின் இந்நூல்.
“நான் ஓர் ஆசானாகவே அனுப்பப்பட்டுள்ளேன்” எனும் ஒற்றை நபிமொழியே (இப்னுமாஜா - 225), இந்நூல் உருவாகிட உந்துசக்தியாக அமைந்திருக்கிறது.
நபிகளார் அவர்களின் கற்பித்தல் யுக்திகளுள் சிலவற்றை இந்நூலிலும் கையாண்டுள்ளார் ஆசிரியர். இச்சிறு நூலின் ஓர் உட்பகுதியானது சராசரியாக 5 பக்கங்களே கொண்டிருப்பதும்; ஹதீஸ்களுக்கு எளிய நடையில், புரிகின்ற தமிழில் விளக்கம் அளித்திருப்பதும் அதற்குச் சான்றாக அமைகிறது.
எல்லா யுக்திகளையும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி, அவற்றை ஆசிரியர் பயிற்சி வகுப்புகளோடு ஒப்பிட்டுள்ளார் சகோதரி; ஆனால், இந்நூலின் தத்துவார்த்தப் பின்னனியோ, பாடப் புத்தகங்களுக்கு வெளியே படிப்பைத் தேடும் - மாற்றுக் கல்வியியலுக்கும் அருமையாகப் பொருந்துகிறது. அவர் பட்டியலிட்டுள்ள எந்த ஒரு கற்பித்தல் முறையும் குருட்டு மனப்பாடத்தை ஆதரிக்கவில்லை என்பதே அதற்கு சாட்சியாகும்.
“செயல்முறைப் பயிற்சிகள் மூலமாகக் கற்பித்தல்” எனும் தலைப்பில், நூலாசிரியர் ஹதீஸ்களை கூறிவிட்டு, சமையல் கலையை எழுதி வைத்துப் படிப்பதற்குப் பகரமாக - செயல்முறையாக பழகுவதன் பலனை உதாரணமாக கூறுகிறார்.
“அவசியமான இடங்களில் கோபமும் கண்டிப்பும்” எனும் தலைப்பின் கீழே, ஹதீஸ்களை விளக்கிய பின்னர் – நபிகளார் அவர்கள் ஒருபோதும் தனது சொந்த விருப்பு - வெறுப்புக்காக கோபமோ, கண்டிப்போ கொள்பவர்களாக இருந்ததில்லை என்பதையும் மறவாமல் பதிவு செய்துள்ளார்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒரு தேர்ந்த கதைசொல்லியாக (வரலாற்று வர்ணனையாளராக) நம் முன்னே நிறுத்தும் நூலாசிரியர், முற்கால நிகழ்வுகளை அண்ணலார் அவர்கள் அழகுற விளக்கியதை - அதற்கு எடுத்துக்காட்டாக மொழிகிறார்.
அனைத்து வகையான மாற்றுக் கல்வித் திட்டங்களிலும், கதைசொல்லல் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. இந்த யுக்தியை நபிகளார் அவர்கள் என்றோ நமக்கு கற்றுத் தந்துவிட்டார்கள். நாம்தான் அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டோம். வரைபடங்கள் & விவாதங்கள் மூலமாக விளக்குதல் போன்ற சிறப்பான கற்றல் முறைகளையும் விரிவாகக் கூறியுள்ளார் ஆசிரியர்.
அறிவிப்பாளர், இடம், நேரம் & தன்மை என பலவற்றையும் பொறுமையோடு ஆராய்ந்து, அவற்றை பொருத்தமான கல்வி யுக்திகளாக வகைப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல.
அம்முயற்சி ஒன்றுக்காகவே பாராட்டப்பட வேண்டியவர் சகோதரி உம்மு நுமைரா. இவரைப் போன்று இன்னும் பல பெண் எழுத்தாளர்கள் நம் மண்ணில் உருவாகிட வேண்டும்.
புத்தகம் என்றளவில் மாத்திரம் நின்றுவிடாமல், இந்நூல் விளக்கும் கல்வி முறைகளை - பாடசாலைகள் & மதரஸாக்களின் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் - சிறப்பு வகுப்புகள் & முகாம்களின் மூலம் கொண்டு சேர்ப்பது, அதன் உயரிய நோக்கத்தை முழுமைப்படுத்தும்.
பிரியமான நகருக்குப் பிரியாவிடை!
எண்ணற்ற வரலாற்று நிகழ்வுகளின் சுவடுகளைத் தன்னகத்தே வைத்திருந்தும், ஒரு துறவியைப் போன்று அமைதியே உருவாய் காட்சியளித்தது புனித மதீனா பதி.
அன்றைய நாளில், அந்த கண்ணியமிக்க திண்ணையில் - சில நிமிடங்களே வீற்றிருந்தேன். “யா ஹாஜி, யல்லா... யல்லா...,” என அங்கு அமர்ந்திருந்த அனைவரையும் விரட்டலானார் ஒரு பாதுகாவலர்.
இப்புண்ணியத் தலத்திலேயே வசித்துவரும் புறாக்கள்-குருவிகளைப் போன்று இல்லாவிட்டாலும், நானும் பாக்கியம் பெற்றவன் என்பதை நினைத்து - இறைவனைத் துதித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றேன்.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிய ஒரு நூலின் மதிப்புரை, அது கூறும் மாற்றுக் கல்விக்கான கருத்துக்கள் & தற்போது நம்முள் பரவலாகக் காணப்படும் புத்தக ஒவ்வாமை ஆகியவற்றையே இவ்வாக்கத்தில் முதன்மைக் கருத்தாக எழுத எண்ணினேன்.
ஆனால், இடையன் சாண்டியாகோவை வழித்துணையாகக் கூட்டிச்சென்ற ஊர்திப் பயணம், பாலைவனப் பிரதேசத்தில் பறவைகளை காணுதல் & ஈச்ச மரங்களுக்காக ஏங்கிய மனம் - என எனது விழிகளினூடே நான் ரசித்த மதீனாவின் அன்றாட அசைவுகளில் சிலவற்றை, இக்கட்டுரையினுள் வெளிப்படுத்திட என்னைத் தூண்டியது - அந்நகரின் மீதான எனது பேரார்வம்தான் என்றால் அது மிகையாகாது.
யத்ரிப் நகரின் நினைவலைகள் என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. பயணத்தை முடித்து வீடு திரும்புகையில், எங்கள் மூன்று வயது புதல்வியின் (புறாக்களை விரட்டிய அதே சிறுமிதான்) கையிலிருந்த சீன பொம்மை, “யா தய்பா... யா தய்பா... யா தாவ-அல் அயானா...”, எனப் பாடத் துவங்கியது!
முக்கிய மேற்கோள்கள்
(1) நிழற்படம் 1 (எச்சரிக்கை பலகையை தவிர்த்து):
http://www.duncan-macdonald.com/
(2) ரஸவாதி (The Alchemist)
http://www.kayalpatnam.com/shownews.asp?id=18114
(3) நிழற்படம் 4 (ஈச்ச மரங்கள் மட்டும்):
http://nick.walla.co.il/?w=/5735/2787667/1781584/5/@@/media
நூலைப்பற்றிய மேலதிகத் தகவல்
Moderator: கட்டுரையாளர் வேண்டுகோளுக்கிணங்க,
கீழ்க்காணும் வாசகம் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது [13.04.2017.]
அன்பர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் முஹம்மது நூஹூ அவர்களின் கருத்துப் பதிவுக்கும் & அவர் எனக்களித்த புது படிப்பினைக்கும் ஜஸாக்கல்லாஹு ஹைரன்.
சகோதரரின் பதிவினைக் கண்ட பின், கீழுள்ள வலைப்பக்கங்களில் இது குறித்து நிறைய விளக்கங்களை கண்டறிந்தேன்.
https://seekerofthesacredknowledge.wordpress.com/2012/07/07/ruling-on-referring-to-madinah-al-munawwarah-as-yathrib/
http://www.alahazrat.net/islam/ruling-on-referring-to-madinah-as-yathrib-.php
https://theahlesunnah.wordpress.com/2012/07/31/is-it-permissible-in-the-shariah-to-call-madina-sharif-yathrib/
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்களின் இந்த ஒற்றை நபிமொழியே, நான் தவறிலைத்து விட்டதை நன்குணர்த்துகிறது:-
یقولون یثرب وھی المدینة
They call it Yathrib but it is Madina. [Bukhari, 1:252] |