சரியாக மூன்று ஆண்டுகள் இருக்கும் என நினைக்கிறேன். பெங்களூரின் பெரிய புத்தகக் கடல் அது. சிறார் இலக்கிய பிரிவிலிருந்த தட்டடுக்குகளை வட்டமிட்டுக் கொண்டிருந்தேன். சிறு பிராயத்திலிருந்தே சித்திரக்கதைகளின் (comic stories) மீது மிகுதியான ஆர்வம் எனக்கு. அன்றைய தினமும் அவைகளையே அதிகம் தேடலானேன்.
சற்றும் எதிர்பாரா வண்ணம், அந்த நூல் எனது விழிகளில் விழுந்தது. நின்றபடியே நிகழ்ந்த அந்த கணநேர வாசிப்பு, பல கேள்விகளை என்னுள் எழுப்பியது. அக்கேள்விகளுக்கான விடைகளை தேடும் முயற்சியினை அன்று துவங்கினேன்; அது இன்று மட்டிலும் ஓய்ந்தபாடில்லை.
முடிவில்லா தேடல்
பைபிள் கதைகள் (Bible Stories) எனும் ஒரு ஆங்கில சிறார் புத்தகம்தான், அன்று நான் வாசித்த சிறு நூல். எளிமையான மொழிநடை, கவர்ச்சியான முன்னட்டை & கண்கவர் வடிவத்துடன் நேர்த்தியாய் தோற்றமளித்த அந்த புத்தகத்தில், கிறிஸ்துவர்களின் வேதநூல் கூறும் வரலாறுகளை சின்ன சின்ன கதைகளாய் வழங்கியிருந்த விதம், என் மழலை-மனதை வெகுவாக கவர்ந்தது.
அந்த நூலுக்கு மிக அருகாமையிலேயே, மகாபாரத & இராமாயண இதிகாசங்கள் - சில இந்திய மொழிகளில் கதை நூல்களாய் காட்சியளித்தன. பிற மத கோட்பாடுகளை குழந்தைகளிடம் கதைகளாய் சமர்ப்பிக்கும் இத்தகைய நூல்களைப் போன்று, அல்-குர்ஆன் மொழியும் அழகிய வரலாறுகளை உள்ளடக்கிய சிறார் நூல் ஏதேனும் அக்கடையில் உள்ளதா எனத் தேடலானேன்.
அத்தகைய நூல்கள் எதுவும் அந்த பொதுத் தளத்தில் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், இஸ்லாமிய சிறார் இலக்கியம் குறித்த எனது பரந்த தேடலை துவங்கலானேன்.
இலக்கிய வறட்சி
கதைகள் மீதான ஈர்ப்பென்பது அனைத்து வயதினருக்குமே உரித்தான ஒன்று; எனினும், சிறார்களிடம் அதனை மிகுதியாகவே காணலாம். புதுப்புது மனிதர்களையும், இடங்களையும் & பண்பாடுகளையும் கதைகள் அவர்களுக்கு அறிமுகம் செய்கின்றன. கதைமாந்தர்களின் உணர்வலைகளை குழந்தைகள் உள்வாங்கும் பொழுது, உறுதியான நம்பிக்கையையும் படைப்பூக்கத்தையும் அவர்கள் பெறுகின்றனர்.
முஸ்லிம் கதாபாத்திரங்கள், அல்-குர்ஆன் & ஹதீதுகள் கூறும் வாழ்வியல் நெறிகளை விளக்கும் கதைக்கரு & இஸ்லாமிய கதைகளம் ஆகியவற்றை உள்ளடக்கிய புனைக்கதைகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது; குறிப்பாக தமிழில், அதற்கான முயற்சிகள் போதுமானதாக இல்லை என்றே சொல்லலாம்.
நமக்கு அண்மையிலுள்ள இஸ்லாமிய புத்தகக் கடைகளில் ஒரு சில உரைநடை தமிழ் சிறார் நூல்கள் கிடைத்தாலும்; அவற்றுள் பெரும்பாலானவை, மழலைகளை வசீகரிக்கும்படியாக இருப்பதில்லை.
நூல்களே சிறந்த ஊடகம்
“இத்தகைய இஸ்லாமிய சிறார் நூல்கள் நம் இளவல்களுக்கு பெரிதாக என்ன பலனளிக்கப் போகின்றன? இஸ்லாமிய கல்வியின் உச்சமே இறைவனின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்ப்பதுதான். அதை நூல்கள் மூலம்தான் வழங்கிட வேண்டுமா என்ன? இத்தகைய நூல்களா சிறுவயதில் நம்மை இம்மார்க்கத்தின்பால் ஈர்த்தது?” எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்!
அவ்வளவு எளிதாக மனதைத் தேற்றி, அக்கேள்விகளை சரியென ஏற்றுக்கொள்ள இயலவில்லை; காரணம், நமக்கு அன்றிருந்த சூழல் வேறு – குழந்தைகள் இன்று எதிர்கொள்ளும் உலகம் வேறு!
டோரா, நிஞ்சா & சோட்டா பீம் என ஏராளமான கேலிச்சித்திர கதாபாத்திரங்களை (cartoon characters) தங்களது இணைப்பிரியாத நண்பர்களாக ஆக்கிக்கொண்ட இன்றைய குழந்தைகளுக்கு, முஸ்லிம் கற்பனைக் கதாபாத்திரங்களின் தேவை நிறையவே இருப்பதாக உணர்கிறேன். கூடவே, நபிமார்கள் & சாஹாபாக்களின் வாழ்க்கை வரலாறுகளும் (மனித உருவங்கள் சித்தரிக்கப்படாத) கதை நூல்களாய் நம் இளவல்களின் கைகளில் தவழ்ந்திட வேண்டும்.
நீழும் திரை நேரங்கள்
“சரி, இந்த நவீன யுகத்தில், மழலைகளுக்கு இஸ்லாமிய கதைகள் இன்றியமையாதவை என்றே ஒத்துக்கொள்கிறேன். அல்-குர்ஆன் கூறும் வரலாறுகளும் & முஸ்லிம் கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனைக் கதைகளும் - எண்ணற்ற வலைதளங்களில் மின்னூல்களாகவும் (E-Books), வலையொளி காணொளிகளாகவும் (YouTube videos) & கைபேசி செயலிகளாகவும் (mobile applications) - இலவசமாகவே கிடைக்கும்போது, நாம் ஏன் நூல்களை விலைக்கு வாங்க வேண்டும்?” நெருங்கிய நண்பர் ஒருவரின் கேள்வி இது!
“மிடுக்காக தோற்றமளிக்கும் இன்றைய அதிநவீன கைபேசிகள் - இவ்வுலகையே நம் கரங்களுக்குள் கொண்டுவந்தாலும், அச்சுப் புத்தகங்களை முகர்வதிலுள்ள ரசனையை மின்னூல்களிலோ செயலிகளிலோ பெற்றிட இயலுமா என்ன?” – அன்பரை திருப்பிக் கேட்டேன்!
கையடக்க கருவிதான் இன்றைய குழந்தைகளின் முதல் பகைவன் என்பதனை பெற்றோர்கள் சரி-நுட்பமாக விளங்கவில்லையெனில், நண்பரின் கேள்வியும் ஏற்புடையது போன்றே தோன்றலாம். “மழலைப் பாடல்களை (nursery rhymes) கணினியில் காண்பித்தால்தான் சாப்பிடுவேன்.... கைபேசியில் விளையாடிட அனுமதித்தால்தான் தூங்குவேன்....” என எத்தனை சிறுவர்கள் பிடிவாதமாக இருப்பதை நாம் இன்று காண்கிறோம்?
தங்களின் இதர பணிகளை நிறைவேற்றுவதற்காக, இந்த தீய நெறியை குழந்தைகளிடமிருந்து தப்பிக்க உதவும் யுக்தியாகவே பெற்றோர்களில் பலரும் பயன்படுத்துகின்றனர். இன்னும் ஒரு சிலரோ, கைபேசியை இயக்குவதில் தம் பிள்ளைகள் வல்லமைப் பெற்றிருப்பதை பெருமையாக கருதுவது மிகுந்த ஆயாசமாகவே இருக்கிறது.
புத்தக வாசிப்பினால் உண்டாகும் நன்மைகள் ஏராளமாக இருப்பினும், இந்த தொழில்நுட்ப போதையில் சிக்கியுள்ள இளவல்களை மீட்டெடுத்து – விடுதலையளிப்பதே அவை செய்யும் பேருபகாரமாக இருக்கிறது. கைபேசி திரையின் முன்பு, சிறார்கள் முகத்தினை பதித்திடும் நேரத்தை - புத்தகங்கள் கனிசமாக குறைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இஸ்லாமிய சிறார் இலக்கியம்
கைபேசிக்கு பகரமாக நூல்களை நம் பிள்ளைகள் விரும்பிட வேண்டுமெனில், அவை அவர்களை கவர்ந்திழுக்கூடியதாக இருத்தல் அவசியம்.
அத்தகைய நூல்களுக்கான இணையவழி தேடலில், ஆளில்லாத அண்டார்டிகா தவிர - ஏனைய கண்டங்களிலிருந்து பதிப்பிக்கப்படும் ஆங்கில இஸ்லாமிய சிறார் நூல்களை ஆராயத் துவங்கினேன்; அவற்றுள், பலவற்றை அயல்நாடுகளிலிருந்து தருவித்தும் படிக்கலானேன்.
பொதுவாக, இந்நூல்களை கற்பனைக் கதைகள் & உண்மைக் கதைகள் (உண்மை சம்பவங்களை கதைகளாக வழங்குவது) என இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
கற்பனைக் கதைகள்
சித்திரக்கதை, குட்டிக் கதை, சிறுகதை, நாட்டுப்புற கதைகள் (folktales) & பனைக்கதை (novel) என பல வடிவங்களில் இஸ்லாமிய சிறார் கதை நூல்கள் வயதுவாரியாக கிடைக்கின்றன. ஒவ்வொரு வகை நூல்களையும் அதற்கொத்த வயதேயான சிறு குழந்தையைப் போன்று ரசிக்கலானேன்; விளைவு, மழலைகளின் வண்ணமிகு உலகில் என் மனமும் சிறகடிக்கத் துவங்கியது.
அமைதியற்ற கடலில் தத்தளிக்கும் பாய்மரக் கப்பலில் - இறைவனைத் தொழும் மீகாமன், தூரப் பிராந்தியத்தில் நடைபெறும் பூகம்ப மீட்புப் பணியில் ஆர்வத்தோடு ஈடுபடும் இளவரசி, தான் அதிகம் விரும்பும் பொம்மையை தவறுதலாக உடைத்து விடும் வகுப்பறை நண்பனை - மன்னித்து நட்பு பாராட்டும் சிறுவன், அகதிகளுடன் பகிர்ந்துண்டு ஈத் பண்டிகையை வரவேற்கும் மூதாட்டி & ஒரு அரிய சீன மூலிகைத் தாவரத்தை தேடி சாகசப் பயணம் மேற்கொள்ளும் நான்கு சிறுமிகள் என பலதரப்பட்ட முஸ்லிம் கதைமாந்தர்களின் நெருக்கம் கிடைத்தது.
உண்மைக் கதைகள்
கதைகள் கற்பனையானவைகளாக மட்டுமே இருக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது. வரலாறுகளை கதைகளாக கூறுவதும் மனித மரபுகளில் ஒரு முக்கிய அங்கம்தான். பல்வேறு வரலாற்றுச் சான்றுகளை உள்ளடக்கிய அரும்பொருட் குவையாக திகளும் திருக்குர்ஆன் & ஹதீதுகளை - எளிய நடையில் கதைகளைப் போன்று வழங்குவது, குழந்தைகளுக்கு சிறப்பியல்புகளை வளர்ப்பதோடு, இஸ்லாமிய அறிவின் அடித்தளத்தை அவர்களின் பிஞ்சு மனதில் பதிந்திடச் செய்யும்.
பாசமிகு மகனை பிரிந்த நபி யாகூப் (அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்) அவர்களின் பரிதவிப்பு, கடலில் மூழ்கடிக்கப்பட்ட கொடுங்கோளன் ஃபிர்அவுனின் அகங்காரம், ஹிஜ்ரா பயணம் மேற்கொண்டு மதீனா பதிக்கு வருகை தரும் அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை – அன்போடு வரவேற்ற அன்சாரி தோழர்களின் உளமகிழ்வு & உமர் (ரலியல்லாஹு தஆலா அன்ஹு) அவர்களின் நீதமான ஆளும்திறன் என அறநெறியை போதிக்கும் உண்மை சம்பவங்கள் பல (மனித உருவங்கள் சித்தரிக்கபடாமல்) சிறார் வாசிப்புகளாக கிடைக்கின்றன.
குழந்தைகள் தங்களின் சிறுவயதிலேயே திருமறையை முழுவதுமாக ஓதிடவோ அல்லது மனனம் செய்திடவோ ஊக்குவிக்கும் நாம், அதனுள் கூறப்பட்டுள்ள நற்போதனைகள் & பிரார்த்தனைகளின் அர்த்தங்களை - இயற்கையான எளிய முறையில் கற்பிக்கும் இத்தகைய நூல்களையும் பூர்வாங்கமாக வழங்கிடல் வேண்டும்.
வாசனையில்லா புத்தகங்கள்
மனித இனத்தின் தொன்மையான பண்பாட்டு அடையாளமாக விளங்குவது வாய்மொழி இலக்கியம். இந்த புராதன கதைசொல்லல் கலைக்கு புத்துயிரளிக்கும் முயற்சியாகவே ஒலிப் புத்தகங்கள் (audiobooks) கருதப்படுகின்றன. இரு வகையான (கற்பனை & உண்மைக்) கதைகளையும் ஒலி வடிவில் வழங்கும் இவை, மழலைகளின் திரை நேரத்தை குறைக்கும் சிறந்த கருவிகளாக விளங்குகின்றன.
MP3 (audio only) கோப்புகளாக கிடைக்கும் இவை, அச்சுப் புத்தகங்களைப் போன்று - மீண்டும் மீண்டும் ரசித்திடும் வாய்ப்பையும் தருகின்றன. இனிமையான குரல், நளினமான மொழிநடை & நாடக தொனியில் தேர்ந்த கதைசொல்லிகளால் வாசிக்கப்படும் மனநிறைவான இக்கதைகள், கண்களை மூடியபடி - செவிகளினூடே இவ்வுலகை காணச் செய்கின்றன.
குழந்தைகளின் கேள் திறனை அதிகரிக்கச் செய்வதோடு, தெளிவான உச்சரிப்பு, மொழிப் புலமை, கற்பனைத் திறன் & கூர்ந்து கவனித்தல் ஆகியவற்றையும் இவை செழுமையாக்குகின்றன.
நிலாச்சோறும்... கதைகளும்...
வாசிப்பு என்னும் நிலையோடு ஒரு சிறார் கதை நூல் முற்று பெற்றுவிடுமா என்ன? அதனை முழுவதுமாக அனுமானித்து, அதன் கதைக்கருவினை நம் வசதிக்கேற்ப உய்த்தறிந்த பின், குறைந்தது ஒற்றைக் குழந்தையிடமாவது அவ்வுணர்வுகளை கடத்தி மனமகிழ்வதில் அல்லவா அதன் செயல்நோக்கம் பூர்த்தி பெறும்?
அன்றாட அலுவல்களினால் உண்டாகும் அலுப்பையும் தாண்டி; குறைந்தது, உணவு உண்ணும் சமயம் & படுக்கை வேளையிலாவது - என் சிறுபிள்ளைக்கு தனித்துவமான சில நன்நெறி கதைகளை கூறுவதை விட, நான் வேறென்ன நற்பேறை அம்மழலைக்கு வழங்கிட இயலும்?
முந்தைய தினத்தன்று கேட்ட கதையினைக் கொண்டு, மறு இரவு (தனது மழலை-மொழியினால்) அவள் எனக்கு கதைசொல்லியாக மாறிட முயலும் அந்த தீராப் பொழுதுகள் - மறுப்புக்கிடமின்றி விலை மதிப்பற்றதாகவே இருக்கிறது!
பிறை கண்டு நோன்பிருக்கும் மாந்தர்களின் செல்வங்களுக்கு, (திரைகளை நோக்கி இல்லாது) நிலாச்சோறுண்டு கதைசொல்வதை வழமையாக்கிடல் வேண்டும். நம்மில் பலருக்கு [குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு] நிலா முற்றம் வாய்க்காமல் போகலாம்; எனினும், கதைகளுமா கிடைக்காது போகும்?
கதை நூல்களுக்குத்தான் பஞ்சமேயன்றி, நிச்சயம் கதைகளுக்கு அல்ல! ஆர்வலர்களும் எழுத்தாளர்களும் திறமிக்க இஸ்லாமிய சிறார் நூல்களை தமிழில் அதிகமதிகம் இயற்றிட முயற்சித்து, தற்போது நிலவும் இலக்கிய வறட்சியை போக்கிட வேண்டும்.
தரமான நூல்களின் பலனை அனைத்து பொருளாதார படிநிலைகளிலுள்ள குழந்தைகளும் பெற்றிடும் வகையில், அரசு நூலகம் உட்பட - நகரின் அனைத்து நூலகங்களிலும் அவை வாசிப்புக்கு கிடைத்திடல் வேண்டும்.
இந்த மூன்று ஆண்டுகால பரந்த தேடலில் நான் பெற்ற பட்டறிவு யாதெனில், முன் உணரப்படாத கருத்துகள் & முன்கேட்டறியாத கதைகளை, இன்றைய இஸ்லாமிய சிறார் இலக்கிய உலகம் - முன்னில்லாத முயற்சிகளின் மூலம் முன்னெடுத்து செல்கின்றது என்பதே!
பல தேசங்களிலிருந்தும், முன் கண்டறியாத இளம் எழுத்தாளர்கள் பலரும் - புதுப்புது தலைப்புகளில் நல்ல நூல்களை வழங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர்…. எனது தேடலும் இன்னும் அதே முனைப்போடு அவர்களை நோக்கியே வியாபித்து நகர்கிறது….
பாகம் 2 - பன்னாட்டு இலக்கியவாதிகளிடம் நேர்காணல்
இஸ்லாமிய சிறார் இலக்கியத் துறையில் சிறந்து விளங்கும் மூன்று பன்னாட்டு ஆளுமைகளுடன் - மின்னஞ்சல் மூலம் (ஆங்கிலத்தில்) நான் மேற்கொண்ட நேர்காணல்களை, இவ்வாக்கத்தின் இரண்டாம் பாகத்தில் (தமிழாக்கம் செய்து) தருகிறேன், இன்ஷா அல்லாஹ்!
கல்வித்திறம், கூர்மதி & ஆழ்ந்த சிந்தனைகளைக்கொண்ட இவர்களுக்கு, பயனுள்ள அறிவை சிறார்களுக்கு வழங்கி - இறைவனின் நெருக்கத்தை பெறுவதே குறிக்கோளாக இருப்பது சிறப்புக்குரியது!
நூல்களின் சிறு தொகுப்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறார் நூல்களின் பட்டியலையும் அவை விற்பனையாகும் இணையதளங்களின் விபரங்களையும் காண,
https://drive.google.com/open?id=0B89HjMl7qrO-NUZFSXRkOVZtTWs
என்ற இணையதள முகவரியை சொடுக்குக! |