நாம் பெற்ற இல்ம் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே! இது ஒரு நிகழ்ச்சியின் அறிமுகத்திற்காக எழுதப்பட்ட ஒருவரது வாசகம். ‘வாழ்வியல் வசந்தம்’ என நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி. பல்வேறு பட்டப் படிப்புகளை முடித்த முனைவராகவும், மனோதத்துவ நிபுணராகவும் உள்ள ஒரு பிரபலமானவர் அதை நடத்த உள்ளார்.
நாம் பெற்ற இல்ம் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே! இது என் சிந்தனையைத் தூண்டியதால் பிறந்ததே இக்கட்டுரை. இதில் ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு தலைப்பாக அணுக வேண்டிய அடிப்படையில் அமைந்திருக்கிறது.
‘நாம்’ என்பது
இதில் ‘நாம்’ என்பது யாரைக் குறிக்கிறது. எதனால் ‘நாம்’ என்ற வார்த்தைக்குள் நாம் அடைபடுகிறோம். ‘பெற்ற’ என்பதற்கு எதைப்பெற்ற எனவும் பெற்றிருக்கிறோமா இல்லையா எனவும் யோசிக்க வேண்டியுள்ளது. ‘பயன்படுத்த’ என்பதில் பயன் என்றால் என்ன; பயனுள்ளவை பயனற்றவை யாது என்பனவற்றை, எதை வைத்து முடிவு செய்வது என்பதைப் பகுத்துப்பார்க்க வேண்டியுள்ளது.
‘நம் குடும்பம்’ என்பதில் குடும்பம் என்பது எதைக் குறிக்கிறது. நம் குடும்பம் என்பதில் நாம் யார். யார் யாரிடம் எப்படி நடக்கவேண்டும் என்பவைகளை சீர்தூக்கிப்பார்க்க வேண்டியுள்ளது.
மொத்தத்தில் தலைப்பைப் பார்க்கும் போதும், அத்தலைப்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை நோக்கும்போதும் நடத்துபவர்கள் சமூகத்தின் மீது கொண்ட கவலையை ஏதாவது ஒருவகையில் சரிசெய்யவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதையும் காணமுடிகிறது.
பேரருளாளனாகிய அல்லாஹ் அவர்களின் எண்ணத்தையும் செயலையும் அங்கீகரிக்கப்பானாக. ஆனால் தடவ நினைக்கும் களிம்பால் கவலையுற்ற உள்ளங்களை ஆறுதல்படுத்தத்தான் முடியுமே தவிர சமூகத்தில் புரையோடிப்போயுள்ள நோய்க்கு அது தீர்வாக அமையும் எனப்படவில்லை.
வழமைபோல, அனுபவத்தால் கூறப்படும் பேச்சாளரின் கருத்துக்களுக்கு உச்சுக்கொட்டிவிட்டு களைந்து செல்வதோடு கேட்டவை எல்லாம் காற்றில் மறைந்து போய்விடுகின்றன. இயற்கையை (ஃபித்ர்) தொலைத்து செயற்கைகளை எதார்த்தங்களாகப் பார்க்கும் சமூகத்தில் இது இன்னொரு நிகழ்வு மட்டும்தான்.
வருடத்தில் ஏதாவது ஓரிருமுறை இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதாலோ விழிப்புணர்வு ஏற்படுத்துவதாலோ சமூகமாற்றம் வந்துவிடுமா என்பது ஓர் இமாலயக் கேள்வி.
மேலும் தலைப்பை மீண்டும் வாசிக்கையில் நாம் ஒவ்வொருவரும் அதில் ஒருமித்தவர்கள்தானா என்ற ஐயமும் ஏற்படவே செய்கின்றது.
நம் சமுதாயத்தில் இறைவிசுவாசம் (ஈமான்) என்பது அறைவிசுவாசமாகவும் அதைவிடவும் குறைவிசுவாசமாகும் போய்க்கொண்டிருக்கிறது.
இஸ்லாமும் குடும்பமும்
இஸ்லாம் தனிமனிதன், குடும்பம், முஸ்லிம் சமுதாயம், முழுமனித சமூகம் என அதன் குறிக்கோள்களை மிக முக்கியமானது மிகவும் அவசியமானது என்றும் முக்கியமானது அத்தனை முன்னுரிமை இல்லாதது என்றும், முக்கியமில்லாதது ஆனால் நல்லது என்றும் வகைப்படுத்தித் தந்துள்ளது. இதில் ஓர் அம்சமான குடும்பம் என்பதற்கு அல்லாஹ் கூறும் விளக்கத்தைப்பாரீர்:
இன்னும், அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்; உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும்; பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி, உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான்; அப்படியிருந்தும், (தாமே கற்பனை செய்து கொண்ட) பொய்யானதின் மீது ஈமான் கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடையை இவர்கள் நிராகரிக்கிறார்களா? (குர்ஆன் 16:72)
நம் வீடுகளிலேயே முதலில் நாம் ஒன்றாய் இல்லை என்பதை நமது அன்றாட செயல்களும் சிந்திக்கும் கோணங்களும் தெளிவுபடுத்துகின்றன.
எனவே அவ்வப்போது சில நிகழ்ச்சிகளை நடத்துவைக்காட்டிலும் காலத்தின் அவசியமாக முதலில் செய்யவேண்டிது நம் தீனைப்பாதுகாப்பதே (حفظ الدين) ஆகும். மார்க்கத்தில் சொல்லப்படாத விடயங்களே இல்லை. அதிலும் தனிமனிதன், குடும்பம், முஸ்லிம் சமூகம், உலக சமுதாயம் என அனைத்திலும்நட ஷரீஆவின் குறிக்கோள்களை விளங்கி அதன் விசாலங்களை பள்ளிக்குச்சென்று பாடங்களைப்படிப்பது போல விளங்கும் அளவிற்கும் மேலும் விளக்கிடும் அளவிற்கும் மார்க்கத்தில் ஏராளமான வழிகாட்டல்கள் இருக்கவே செய்கின்றன. தகவல்களுக்காக படிக்காமல் செய்வதற்காகவும் செயல்படுத்துவதற்காகவும் ஒருமுஸ்லிம் சித்த சுத்தியுடன் அவற்றை அணுகினால் வேறு எந்த சிறப்புப் பாடங்களும் (Special Courses) பயிற்சிகளும் (Training) விழிப்புணர்வு பிரச்சாரங்களும் அவசியமற்றதாகி விடும். அப்போதும் இடறும் இறைவிசுவாசிகளுக்கு ஷரீஆவின் குறிக்கோள்களை நினைவுபடுத்தினாலே போதுமானது.
தீனை நாம் சில அடிப்படையான காரியங்களில் மட்டும் பயன்படுத்திக்கொண்டு ஏனைய விஷயங்களில் அறிந்தோ அல்லது அறியாமலோ புறக்கணித்துக் கொண்டிருக்கிறோம். முஸக்கிகளையும் (مزكي) முறப்பிகளையும் (مربي)வாழ்க்கை விசயங்களுக்கு அணுகாமல் நவீனத்துவத்தினூடாக (Modernism) சமூகமாற்றத்தை ஏற்படுத்தலாம் என நினைத்தால் அது அறிவீனத்தின் உச்சமேயாகும்.
‘இல்ம்’ என்றால் என்ன?
அடுத்து ‘இல்ம்’ (علم) என்பதில் நாம் எதைவைத்துப் பார்க்கின்றோம் என்பதுவும் பல பாகங்களாக எழுதப்பட வேண்டிய விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
குர்ஆன் இல்ம் என்பதை பல இடங்களில் பிரயோகப்படுத்துகிறது. ஆனால் இல்ம் என்ற அரபி வார்த்தைக்கே நம் மனதில் தோன்றியவற்றை எல்லாம் விளக்கமாக கொடுத்து விட்டு அல்லாஹ்வும் அவன் தூதரும் சொன்ன ‘பிரயோசனமுள்ள கல்வி’, பிரயோசனமில்லாத கல்வி என பிரித்துப்பார்க்கத் தெரியாதவர்களாக உள்ளோம் என்பது மிகவும் துரதிருஷ்டமாகும்.
பொருள்சார் நவீனத்துவம், உலகாயதம், மதசார்பற்றவாதம் ஆகியவைகளை அடிப்படையாகக்கொண்ட கல்விக்காக நம்வாழ்வின் கணிசமான பகுதிகளை நாம் ஒவ்வொருவரும் செலவழித்துள்ளோம். இறைவிசுவாசம், இறையச்சம், இறைதிருப்தி, உலகவாழ்வு, மரணம், மறுமை வாழ்வு, மறுமை வெற்றி முதாலனவைகளை பிடுங்கி எரிந்துவிட்டு அதன்மேல் விதைக்கப்பட்டதே மதசாற்பற்றவாதம் (Secularism) ஆகும்.
கடவுள் ஒரு கெட்ட பையன் ; மதம் ஒரு போதை (God is a bad guy;Religion is opium) என்ற அச்சாணிகளில்மீது நகரும் வாகனம் அது. இப்படித்தான் வாழவேண்டும் என்ற இஸ்லாமிய கோட்பாட்டிற்கெதிராக எப்படியும் வாழலாம் என்ற மனிதப்பகுத்தறிவில் உருவானவற்றிற்கு காலத்தையெல்லாம் அர்ப்பணித்ததன் விளைவாக கலிமா, சலாத், ஸவ்ம், ஸகாத், ஹஜ், நிகாஹ், தலாக், ஜனாஸா என்ற சில விஷயங்களில் மாத்திரம் இஸ்லாமிய ஷரீஆவை நாம் ஓரளவுக்கு பின்பற்றி வருகிறோம்.
‘ஸிப்கதல்லாஹ்’ (صبغة الله) என்பது அல்லாஹ்வின் வர்ணம் என தமிழில் வழங்கப்படுகிறது. குர்ஆன் பின்வருமாறு இதைக்கூறுகிறது:
“(இதுவே) அல்லாஹ்வின் வர்ணம்(ஞான ஸ்னானம்) ஆகும்; வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்? அவனையே நாங்கள் வணங்குகிறோம்” (எனக் கூறுவீர்களாக). (குர்ஆன் 2:138)
அரபு மொழியும் நாமும்
நாம் ஆண்டாண்டு காலமாக உள்வாங்கிய தத்துவங்களின் அடிப்படையில் அரபிமொழியையும் அது கூற நினைக்கும் விளக்கத்தையும் சரிவர அறியாத குறைபாட்டால் அல்லாஹ் கூறவிரும்புவதை அவன் கூறும் அடிப்படையில் விளங்க முற்படாமல் நமது பகுத்தறிவையும் பிற வர்ணங்களையும் உட்புகுத்தி புதிய தத்துவத்தை நாமே உருவாக்கி வருகிறோம்.
உதாரணத்திற்கு, உங்களது மனைவியருக்கு சிறந்தவரே உங்களில் சிறந்தவர் என்ற நபிமொழியில் சிறந்தது என்பதற்கு ஃகைர் (خير) என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஃகைர் என்ற வார்த்தை குர்ஆனில் பல இடங்களில் வருகின்றது ஆயினும் . நாம் புரிந்து வைத்துள்ளது போல எங்கும் அது வழங்கப்படவில்லை. சிறந்தது என்ற வார்த்தையை மட்டும்வைத்துக்கொண்டு எது சிறந்தது என்பதை குர்ஆன் கூறுவதை விட்டுவிட்டு உலகநடைமுறையை வைத்து முடிவுசெய்கிறோம். மேலும் இந்நபி மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள இன்னொரு அரபி வார்த்தை அஹ்ல் (أهل) என்பதாகும். குர்ஆனின் ஓர்வசனமாகிய ‘உங்களையும் உங்களது குடும்பத்தவரையும் நரக நெருப்பிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்’ என்பதிலும் أهل (குடும்பம்) என்றே ஆளப்பட்டுள்ளது. எனவே உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரில் சிறந்தவர் என்பதற்கு மனைவிமார்களின் உலகத் தேவைகள், வசதிகள், விருப்பு வெறுப்புகள், எதிர்பார்ப்புகள் என நாம் விளங்குவோமேயானால் அதற்கும் ஷரீஆவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு அவர்களது மனைவியரிடமிருந்து உலகியல் ரீதியான சில எதிர்பார்ப்புகளால் ஏற்பட்ட அசவுகரியங்களைப் பெருங்கருணையாளனாகிய அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:
நபியே! உம்முடைய மனைவிகளிடம்: “நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்” என்றும் கூறுவீராக! (குர்ஆன் 33:28-29)
அதைப்போன்றே ‘ரப்பானா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதன் வ ஃபில் ஆஃகிரதி ஹஸனதன் வஃகினா அதாபன்னார்’ என்ற துஆவில் இவ்வுலகில் ‘நல்லதையும்’ (حسنة) என்பதற்கு பயனுள்ள கல்வி, இறைவணக்கம், அல்லாஹ்வின் அறிவின் வேதத்தை விளங்குதல், நல்ல ஆரோக்கியமான உணவு முதலானவற்றை கேட்பது ஆகும் என்றும் மறுமையில் ‘நல்லதையும்’ (حسنة) என்பதற்கு சுவர்க்கத்தை கேட்பது என்பதாகவும் இமாம் ஹசனுள் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். ஆனால் நாமோ உலகில் நல்லது என்பதை செல்வம், சுகமான வாழ்வு, அந்தஸ்து என்றவாறெல்லாம் மனதில் இருத்திப் பிரார்த்திக்கின்றோம்.
இன்னும் கல்வியைப்பற்றி அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும்போது ‘பயனுள்ள கல்வியைத்’ (علما نافعا) தருமாறு கேட்கவேண்டுமென அண்ணலார் (ஸல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள். இதில் பயனுள்ள கல்வி என்பதை தமிழிலேயே விளங்கிக்கொண்டு உலகத்தேவைகளையும் பணத்தை மட்டுமே சம்பாதிக்கும் குறிக்கோளையும் மட்டுமே கொண்ட கல்வியை கேட்பதற்கு ‘பயனுள்ள கல்வி’ என விளங்கி வைத்துள்ளோம். ஆனால் இறையச்சம், மறுமை வாழ்வு பற்றிய அறிவு, உலக வாழ்வின்மீது நேசம் கொள்ளாமை என ஹதீஸ் விரிவுரையாளர்கள் விளக்கமளிக்கிறார்கள்.
உலகக் கல்வி புறக்கணிக்கப்பட வேண்டியதா?
இங்கு உலகக்கல்வியை ஒரேயடியாகப் புறக்கணிக்க வேண்டுமெனவும் சொல்லவில்லை. மார்க்கக் கல்வியை மட்டும்தான் கற்கவேண்டும் எனச் சொல்லவுமில்லை. இரண்டையும் இணைத்து ஒரேஇடத்தில் சொல்லித்தரவேண்டும் என்ற கருத்தும் சரியில்லை. கல்வி இஸ்லாமிய மயமாக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே நம் விளைவு. ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒரு விஞ்ஞானி இறைநினைவோடு மனிதகுலத்திற்கு பயனுள்ளவற்றை கண்டுபிடித்து தருவாரானால் அதுவே பயனுள்ள கல்வி எனலாம். அதே போன்று மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பதை கற்கும்போது அஸ்தஃக்பிருல்லாஹ் எனக்கூறி அல்லாஹ்வால் நேரடியாக சிருஷ்டிக்கப்பட்டவனே மனிதன் என ஒரு மாணவன் கருதுவானேயானால் அது பயனுள்ள கல்வி எனலாம்.
கட்டடக்கலையை கற்கும் ஒரு மாணவன் வாஸ்து இல்லாமல் கட்டடம் எழுப்புதல் அறிவுப்பூர்வமானதல்ல என்பதை நம்பி தனது பணிகளை அவ்வாறே அமைத்துக்கொள்வார் எனில் அது பயனற்ற கல்வியாகும்.
உலகை தேசியமயமாக்கி வளங்களை ஒவ்வொரு தேசமும் கட்டுப்படுத்திக்கொண்டு மக்கள் தொகை அதிகரித்து வருவதால் பிற்காலத்தில் உணவுப்பஞ்சம் ஏற்படலாம் எனக்கூறி அதனால் குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்தும் விதமாக ஒரு மருத்துவர் சிகிச்சை அளிப்பாரெனில் அது நிச்சயம் பயனற்ற கல்வியேயாகும்.
ஷரீஆ (شريعة) வைப் பாடமாக கற்கும் ஒரு மாணவர் இன்றைய சூழலில் ஷரீஆவின் சில சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியங்கள் குறைவாக உள்ளன என்பதுவரை கூறினால் அது பாவமாகாது. அதேவேளை குர்ஆனில் கூறப்பட்ட சில சட்டவசனங்கள் இக்காலத்திற்குப் பொருந்தாது எனக்கூறினால் அவருமே இறைமறுப்பு குற்றத்திற்கு ஆளாக நேரிடும்.
ஆக மொத்தத்தில் மதசார்பற்ற கொள்கை அடிப்படையில் அமைக்கப்பட்ட கல்விக்கு மாற்றாக ஓரிறைவனை மனதில் இருத்தி முழுமனித சமூகத்தின் பாதுகாப்பான வாழ்விற்காக உருவாக்கப்படும் பாடத்திட்டமே உண்மையான பயனுள்ள கல்வியாக அமையும். அதில்தான் இறைவுனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பைப்பற்றியும் மனிதனுக்கும் பிற மனிதர்களுக்கும் உள்ள தொடர்பைப்பற்றியும் முழுமனித சமூகத்திற்கும் இப்பிரபஞ்சத்திற்கும் இடையிலுள்ள தொடர்பைப்பற்றியும் தெளிவுற அறிவதோடு இறைவனை வணங்குவதற்காகவே மனிதர்கள் படைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் மனிதர்களுக்கிடையில் மொழியால், நிறத்தால், தேசத்தால், குடும்பத்தால் எவ்வித வேறுபாடுகளும் இல்லவே இல்லை என்பதையும் தெளிவாக உணரமுடியும்.
எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்லாமிய மயமாக்கப்பட்ட ஒரு முழுபாடத்திட்டத்தை கல்விக்கூடங்களில் அறிமுகம் செய்து நம் அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டுவதே காலத்தால் மிகவும் அவசியமானதும் இறைநிராகரிப்பை விட்டும் நம்பிள்ளைகளைப் பாதுகாக்கக் கூடியதாகவும் அமையும்.
அடுத்து குர்ஆன், ஹதீஸ் முதலானவற்றிற்கு அதன் மூல மொழியான அரபிமொழியைக்கற்று அதைக்கொண்டு சிந்திக்காமல் நமக்குத் தெரிந்த மொழியில் அதைப்புரிந்து கொள்வதால் அசலாக சொல்லப்படுவதிலிருந்து வெகுதூரத்தில் நின்று அதன் பொருளை யோசிக்கவும் செயல்படுத்தவும் செய்கிறோம்.
எனவே எதையும் சீர்தூக்கிப்பார்க்கும் போது அல்லாஹ்வின் வர்ணத்தினூடாகவே அதைக்காண முயலவேண்டுமே தவிர ஒவ்வொருவரும் அவரவர் சுயவர்ணத்தின் அடிப்படையிலோ அல்லது அவர்கள் படித்த கல்வியால் பெற்றுக்கொண்ட தத்துவங்களின் அடிப்படைகளிலோ அல்லது அவரைச்சுற்றியுள்ள சூழல்கள் அடிப்படையிலோ அல்லது பகுத்தறிவாலோ சிந்திக்க முற்பட்டால் அது பெரும் வழிகேட்டில்தான் போய்சேருமே தவிர எதிர்பார்க்கும் ஆக்கப்பூர்வமான எந்த மாற்றமும் நிகழவே செய்யாது.
விடைகாண முயலும் சில கேள்விகள்
நாம் பெற்ற இல்ம் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே என்ற தலைப்பை படிக்கும் ஒவ்வொருமுறையும் சமூகத்தில் இன்றியமையாத ஆனால் இல்லாதொழிந்த பற்பல விடயங்கள் மனக்கண்முன் எழுகின்றன. அப்படி விடைகாண முயலும் சில கேள்விகள் இங்கு கவனிக்கத்தக்கது.
>>> குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மார்க்க அறிவைப்பெற்றுவிட்டோம் எனச்சொல்லும் நம்குடும்ப விஷயங்களையும் நாம் உலகில் வாழ்வதற்குத் தேவையானவற்றையும் சீர்தூக்கிப்பார்ப்பதில் நம் அறிவு எவ்வளவு தூரம் செல்கிறது.
>>> நம் குடும்பங்களில் எடுக்கப்படும் முடிவுகள் எதை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகின்றன. குடும்ப உறுப்பினர்கள் யாரவது ஒருவரின் செல்வாக்கை வைத்தா அல்லது ஒருவரது பொருளாதார வசதிகளை வைத்தா அல்லது பகுத்தறிவைக் கொண்டா அல்லது அல்லாஹ்வுக்கு எது மிகவும் விருப்பமானதாக அமையும் (வஹி அறிவு) என்பதை வைத்தா என்பதை சிந்திக்க வேண்டும்.
>>> அதைப்போன்றே ஒரு முஹல்லா ஜமாஅத் என வரும்போது அதில் முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு. ஷூராவின் முறைகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும். ஏற்கனவே 2-3 நபர்களுக்குள்ளாக யோசித்து ஒரு முடிவை எடுத்துக்கொண்டு ஷூரா என்பதை செயற்கையாக கூட்டி எடுத்த முடிவை தமக்கிருக்கும் பேச்சு, செல்வாக்கு, பொருளாதார நிலை உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு முடிவாக்கப்படுகிறதா அல்லது ஷூராவில் இறையச்சத்தையும் மறுமை விசாரணைகளையும் மனதிற்கொண்டு திறந்த மனதுடன் ஜமாஅத்தின் ஆக்கப்பூர்வமான, அனைவருக்கும் நன்மைபயக்கும் முடிவுகள் எடுக்கப்படுகிறதா.
>>> முஹல்லா ஜமாஅத் என வரும்போது இமாம்கள், உலமாக்கள், ஜுமுஆ பள்ளியாக இருந்தால் ஃகத்தீபுகள் ஆகியோரது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகின்றனவா. ஒருவேளை அப்படியான தகுதிகள் இல்லாதவர்கள்தான் அப்பொறுப்புகளில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர் என்றால் யார்மீது குற்றம். மார்க்கத்தை ஓரளவிற்கே விளங்கியவர்களை அதில் வைத்துக்கொண்டு அவ்வளவிற்கு கூட அறியாத பொறுப்பாளர்களால் முடிவுகள் எடுக்கப்படுகிறதெனில் அதில் இறைத்திருப்திக்கு இடமிருக்குமா? இஸ்லாம் அங்கு நிலைநாட்டப்படுமா?
மேற்கூறப்பட்டவை அனைத்திலும் இறையச்சம் மறுமைவிசாரணை என்பவற்றை முதுகுக்குப்பின் தூக்கி எறிந்துவிட்டு அஃதல்லாத மற்ற அம்சங்களை வைத்தே ஒவ்வொரு விஷயமும் செயல்படுத்தப்படுகின்றன எனில் உலகம் மட்டுமே சார்ந்த மதசார்பற்ற கல்விமுறையின் பாதிப்பை அதில் நாம் உணரலாம். மேலும், அதற்கு காலத்தையும் சூழல்களையும் வைத்து நியாயம் கற்பித்தோமேயானால் மார்க்கத்தை விட்டும் எவ்வளவு தூரமாக இருந்துவருகிறோம் என்பதற்கு அதுவொன்றே போதுமானது. ஏனெனில் எல்லாக்காலங்களிலும் சூழ்நிலைகளிலும் செயல்படுத்துவதற்கு இலகுவான முழுமைப்பெற்ற பரிபூரணமான விடயங்களையே அல்லாஹ்வாலும் அவனது தூதராலும் தீனுல் இஸ்லாம் என்னும் பெயரில் நமக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
உலக அறிவை இஸ்லாமிய சிந்தனைகளையும் ஒழுக்க விழுமியங்களையும் அடிப்படையாகக்கொண்டு கற்பதில் தவறில்லை. ஆனால் அதைப்படிக்கின்றபோது கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தின் மீது அவநம்பிக்கையும் கற்கும் கல்வியின் மீது முழு ஈடுபாடும் வளாகங்களில் புரையோடிப்போயுள்ள ஒழுக்க சீர்கேட்டையும் கலாச்சார வீழ்ச்சியையும் சகித்துக்கொள்ளும் மனோபாவமும் தோன்றுமென்றால் இறைமறுப்பின் (ரித்தத்) முதல்படியாக அதுவே அமைந்துவிடும். அதையே இன்று பரவலாக காணப்படுகிறது.
அபூபக்ரும், இறைமறுப்பும்
40 ஆண்டுகளுக்கு முன்பே மவ்லானா அபுல்ஹஸன் அலி நத்வீ (ரஹ்) அவர்கள் அபூபக்ர் இல்லாத ரித்தத் (ردت لاأبابكر لها) என்ற நூலை எழுதி அதில் நமது கல்வி, கலாச்சாரம் பொருளாதாரம், அரசியல், சமூக அறிவியல் உள்ளிட்டவைகளில் இறைமறுப்பு எவ்வெவ்வாறெல்லாம் பரப்பப்படுகிறதென்றும் ஆனால் ஜகாத் கொடுக்க மாட்டோம் எனச் சொன்ன ஒரே காரணத்திற்காக புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்கள் என்பதைக்கூட பொருட்படுத்தாமல் அவ்வாறு கொடுக்க மறுப்பவர்களுக்கு எதிராக எனது இறுதி மூச்சு வரை போர் செய்வேன் எனக்கூறி அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழி) அவர்கள் வெகுண்டெழுந்தார்கள் என்பதையும் விளக்கிக் கூறியுள்ளார்கள்.
இன்று இஸ்லாத்தின் பல்வேறு அம்சங்கள் மிகச்சாதாரணமாக மறுக்கப்பட்டும் மீறப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வரும்வேளையில் அபூபக்ர் இல்லாத முஸ்லிம் சமூகமாகவே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றும் ஆகையால் தான் நமது இல்லங்களிலேயே இறைமறுப்புக்கான வித்துகள் தூவப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் எழுதியுள்ளார்கள்.
தலைப்பிற்காக சில குர்ஆன் வசனங்களைத் தேடியபோது ‘அல் முஃமினூன்’ என்னும் அத்தியாயத்தில் அல்லாஹ்வால் படம்பிடித்துக் கட்டப்படும் பின்வரும் வசனங்கள் மீண்டும் மீண்டும் வாசிக்கப்படவேண்டியவை:
(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) “தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன் (என்றும்)
“இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்” (என்றும் கூறினோம்).
ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து,ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்.
எனவே, அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டுவிடும்.
அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்?
அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா?அவ்வாறல்ல; அவர்கள் (இதை) உணர்வதில்லை.
நிச்சயமாக, எவர்கள் தம் இறைவனிடம் அஞ்சுபவர்களாக இருக்கிறார்களோ அவர்களும்-
இன்னும் எவர்கள் தம் இறைவனுடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களும்-
இன்னும் எவர்கள் தம் இறைவனுக்கு (எதையும்) இணையாக்காதிருக்கிறார்களோ அவர்களும்-
இன்னும் எவர்கள் தம் இறைவனிடம் தாங்கள் திரும்பிச் செல்லவேண்டியவர்கள் என்று அஞ்சும் நெஞ்சத்தினராய்(நாம் கொடுத்ததிலிருந்து) தங்களால் இயன்ற மட்டும் (அல்லாஹ்வின் பாதையில்) கொடுக்கிறார்களோ அவர்களும்-
இ(த்தகைய)வர்கள் தாம் நன்மைகளின் பக்கம் விரைகின்றனர்; இன்னும் அவற்றை (நிறைவேற்றி வைப்பதில்)முந்துபவர்களாகவும் இருப்பார்கள்.
நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்;மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்) புத்தகம் நம்மிடம் இருக்கிறது; இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்)அநியாயம் செய்யப்பட மாட்டாது.
ஆனால் அவர்களுடைய இதயங்கள் இதைக் குறித்து அறியாமையிலேயே (ஆழ்ந்து) கிடக்கின்றன; இன்னும்,அவர்களுக்கு இதுவன்றி (வேறு தீய) காரியங்களும் உண்டு. அதனை அவர்கள் செய்து வருகிறார்கள்.
(இவ்வுலக) சுகானுபவங்களில் மூழ்கிக் கிடப்போரை நாம் வேதனையைக் கொண்டு பிடிக்கும்போது, உதவிக்காக அவர்கள் அபயக் குரல் எழுப்புவார்கள்.
“இன்று நீங்கள் உதவிக்காக அபயக் குரலை எழுப்பாதீர்கள்; நிச்சயமாக, நீங்கள் நம்மிடமிருந்து உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
என்னுடைய வசனங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டன; ஆனால் நீங்கள் புறங்காட்டிச் சென்று கொண்டிருந்தீர்கள்.
ஆணவங் கொண்டவர்களாக இராக்காலத்தில் கூடி குர்ஆனை பற்றி கட்டுக்கதைகள் போல் வீண் வார்த்தையாடியவர்களாக (அதைப் புறக்கணித்தீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும்).
(குர்ஆனின்) சொல்லைப் பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அல்லது தம் முன்னவர்களான மூதாதையருக்கு வராத ஒன்று அவர்களுக்கு வந்துவிட்டதா?
அல்லது அவர்கள் தங்களுடைய (இறுதித்) தூதரைச் சரிவர அறிந்து கொள்ளாது அவரை நிராகரிக்கிறவர்களாய் இருக்கின்றார்களா?
அல்லது, “அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது” என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை; அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள்.
இன்னும் அந்த உண்மை அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றி இருக்குமாயின் நிச்சயமாக வானங்களும், பூமியும் அவற்றிலுள்ளவைகளும் சீர்கெட்டுப் போயிருக்கும்; அதனால், அவர்களுக்கு நாம் நினைவூட்டும் நல்லுபதேசமான திக்ரை - குர்ஆனை அளித்தோம். எனினும் அவர்கள் தங்களிடம் வந்த திக்ரை - குர்ஆனை புறக்கணிக்கின்றனர்.
குர்ஆன் அல் முஃமினூன் 23:51-71) |