இது முன்பே எதிர்பார்த்த தருணம்தான். இப்படியொரு நிலை எனக்கு ஏற்பட்டுவிடக் கூடாது எனும் பெருவிருப்பம் என் மனதில் ஆழமாகவே பதிந்திருந்த போதிலும், இதனைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் எதையும் இதுகாலம் வரை நான் முழுமையாகச் செய்யவில்லை.
ஒரு பிரபலமான அறைக்கு வெளியே, இன்று நான் வரிசையில் அமர்ந்துள்ளேன். அறையினுள் இருப்பவர் என்னிடம் சொல்லவிருப்பதை எண்ணி, என் மனம் பதைபதைத்துக் கொண்டிருக்கிறது. அருகேயுள்ள எவருக்கும் இத்தகைய பதற்றம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ஒருவேளை, அவர்களும் என்னைப் போன்று அதனை இரகசியமாக வைத்திருக்கக் கூடும்.
ஓராண்டுக்கு முன்னர்தான், அந்த வலியை நான் முதன்முதலில் உணர்ந்தேன். முன்னனுமதியின்றி எனது உடலுக்குள் ஊடுருவிய அதை, ஆரம்பத்தில் அலட்சியமாகவே கையாண்டேன். ஆயினும், அது என்னை விட்டு அகன்று செல்வதற்கான எந்த ஓர் அடையாளமும் தென்படவில்லை.
நாட்களும் - மாதங்களும்தான் நகர்ந்ததே தவிர, வலி சற்றும் குறைந்தபாடில்லை. தூங்கும் நேரத்தைத் தவிர்த்து பிற நேரங்களில் எல்லாம், அதனைப் பற்றிய சிந்தனைகளே என் மனதை அதிகமதிகம் ஆக்கிரமித்தது. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எனது இரு கைகளையும் இறுக்கமாக வைத்து – அங்கு குடியிருக்கும் வலியை முதலில் ஆசுவாசப்படுத்திய பிறகே, எந்த ஒரு உடல் சார்ந்த வேலைகளையும் நான் செய்திட முனைந்தேன்.
நாளுக்கு நாள், வலியின் வீரியம் அதிகமானது. இணையத்தைத் துழாவி, அந்த வலிக்கு ஓர் ஆங்கிலப் பெயரைச் சூட்டினேன். அது மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு பெயர்தான். இந்த நோவினைக்கு நான் இட்ட பெயர், குறைந்தது தொண்ணூறு விழுக்காடாவது பொருத்தமாகத்தான் இருக்கும் என உறுதியாக நம்பினேன். புதிதாக வைக்கப்பட்ட பெயருடன், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் - அந்த வலி வளரத் துவங்கியது.
ஒரு வகையான கவலை என் மனதைக் கவ்விக்கொண்டது. வேறு எதையும் அதிகளவு எண்ண முடியாவண்ணம், பல சிந்தனைச் சிக்கல்கள் என்னுள் உருவாயின. இருப்பினும், அன்றாட அலுவல், குடும்ப நடவடிக்கைகள், குழந்தை வளர்ப்பு, இறை வழிபாடு & பொழுதுபோக்காக மாறிய எழுத்து -வாசிப்பு ஆகிய அனைத்தையும் என்னால் இயன்றளவுக்கு செவ்வனே செய்துகொண்டிருந்தேன். எனக்குப் பெரியதொரு இயலாமை ஏற்பட்டுவிட்டால், இனி இவை அனைத்தையும் எப்படித் தொடர்வது? அச்சமடைகிறேன்!
அந்த வலி எனது பிரார்த்தனைகளில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துக்கொண்டது. குடும்பத்தாரின் தொடர் வற்புறுத்தலினால், இன்று நான் மருத்துவனையில் பரிசோதனைக்காகக் காத்திருக்கிறேன். உடலினுள் நுணுகி நோக்கும் கருவியின் (scan) மூலம், வலிக்கான காரணத்தைக் கண்டறியவே இந்த காத்திருப்பு. இதோ இன்னும் சில மணித்துளிகளில் நான் அறைக்குள்ளே அழைக்கப்படலாம்.
அந்த வலியோ, அதன் வலிமையோ அல்லது நான் அதற்கு வைத்த பெயரோ – எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை. அந்தப் பெயரை மாற்றி, மனதுக்கு இதமான வேறொரு பெயரை - அறைக்குள் இருக்கும் மருத்துவர் சூட்டிட மாட்டாரா என்ற அவா என் மனதில் நிறைவாகவே இருக்கிறது.
ஒருவேளை நான் அழைத்த பெயரையே மருத்துவரும் கூறினால் என்னவாகும்? குழப்பமடைகிறேன்!! இன்னும் நடந்திராத ஒன்றை எண்ணி அஞ்சுகிறேன்!! அப்படி நடந்துவிட்டால், எனக்கு ஏற்பட்ட அறிகுறிகளைக் கொண்டு - அந்த நோவினையைச் சரியாக கனித்த பெருமையைத் தவிர, வேறென்ன இதில் நன்மை இருக்கிறது?
-------------------------------------------------------------------------------------------------
அவர் அறுதியிட்டு கூறுகிறார், நான் நினைத்த அதே சுகவீனம்தான் இந்த வலியின் மூலம் என்று!
மருத்துவரின் பரிசோதனை முடிவும் எனது கனிப்பும் நூறு விழுக்காட்டுக்கும் மேலாகவே பொருந்திற்று போலும். எனினும், அதை எண்ணி மகிழும் நிலையில் நானோ என் மனமோ அன்று இருக்கவில்லை. இந்த நோயுற்ற நிலைக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என்கிறார். அந்த சிகிச்சையை சற்றும் தாமதிக்காமல் உடனே செய்திடவும் வலியுறுத்துகிறார். எனது பிணியைப் போக்குவதில், என்னை விட அவருக்கே அதிக ஆர்வம் இருப்பது போலத் தோன்றுகிறது.
பெயர் சூட்டுவதில் மாத்திரமல்ல; அறுப்பதிலும் அவர் வல்லுநராம்! அறுப்பதற்கு தேதி குறிக்கப்படுகிறது. உள்நோயாளி பிரிவில் நான் சேர்க்கப்படுகிறேன். எனக்கென்று ஒரு தனி படுக்கையறையைத் தருகிறார்கள். நட்சத்திர விடுதிகளில் இருப்பதைப் போன்று, அந்த அறை சொகுசாகத்தான் இருக்கிறது.
இறைவனின் பாதுகாப்பிலும், செவிலியர்களின் கண்காணிப்பிலும் - என்னை ஒப்படைத்துவிட்டு, என் உறவுகள் வீடு திரும்புகின்றன. பார்வையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தவிர்த்து, நான் அந்த அறையில் தனியாகத்தான் இருக்க வேண்டுமாம். தனிமையில் இருக்க எனக்கென்ன பயம்?
தனிமை எனக்குப் புதிதல்ல. ஆசியா, அய்ரோப்பா & ஆப்பிரிக்கா கண்டங்களின் பல்வேறு தேசங்களுக்குத் தனியாக சென்று வந்தவன் நான். அந்தந்த நாடுகளின் பேச்சு மொழி தெரியாதபோதிலும், எனக்கு ஏற்பட்ட இன்னல்கள் பலவற்றையும் சாதுர்யமாக சமாளித்திருக்கிறேன். அனைத்துமே தனி ஒருவனாக! ஆம், நான் தைரியமிக்கவன். என்றுமே, நான் தனிமையை ஒரு பொருட்டாகக் கருதியதில்லை.
இது தொழில்நுட்ப யுகம். இதோ கைபேசி இருக்கிறது. எனது மூன்றாவது கையாகவும் இரண்டாவது மூளையாகவும் இது விளங்குகிறது. தனிமையை விரட்டிட, இது ஒன்று மட்டுமே எனக்கு போதுமானது! இந்த கருவிக்கு தேவையான மின்சார உணவை - வேளை தவறாமல் நான் வழங்கினால், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் என்னால் தனியாக இருந்துவிட முடியும். நம்பிக்கை பிறக்கிறது. தனிமையைக் கண்டு நான் அஞ்சவில்லை.
பகல் ஓய்வெடுக்கச் செல்கிறது. மருத்துவர், செவிலியர் & தூய்மைப் பணியாள் என எல்லோரும் என் அறைக்குள் வருவதை நிறுத்திக்கொண்டார்கள். விளக்கை அனைத்துவிட்டு, கண்களை இருட்டாக்க முயற்சிக்கின்றேன். தைரியமாக இருந்த என் மனம், தனிமையிடம் தோற்கத் துவங்குகிறது.
கடல் அலைகளுக்கு முன்பு அமைதியாக அமர்ந்தும் & மனதைக் கவர்ந்த புனைக்கதை நூலுக்குள் முழுவதுமாக மூழ்கியும், நான் தனிமையை சுவைத்த பொழுதுகள் ஏராளம் உண்டு; ஆனால் இன்றைய தனிமையோ, வலுவிழந்த என்னை மேலும் வலுவிழக்கச் செய்கிறது.
இந்த நடுநிசியில், என்னோடு அலைபேசியில் அரட்டை அடித்திட ஒருவரும் இருப்பதாகத் தெரியவில்லை. சமூக ஊடகங்களில் எனது அய்நூறுக்கும் மேற்பட்ட நட்பு வட்டங்கள் - சென்ற கணம் வரை அனுப்பிக் குவித்த பதிவுகளை, மூன்று முறைகளுக்கும் மேலாகப் பார்த்தாகிவிட்டது.
ஒளி உமிழும் தொடுதிரையை வெகு நேரம் படுத்திருந்தபடியே உற்று நோக்குவதால், கண்களும் கைகளும் வலிக்கத் துவங்கின. இதுவரை ஏற்பட்ட வலிகள் போதாதென்று, தலையும் அதன் பங்குக்கு வலிக்கிறது.
இருந்தாலும், நான் விடுவதாக இல்லை. உடன் மனிதர்கள் இருந்தாலே, எல்லோரையும் போல் நானும் கைபேசியைத் தான் முறைத்துக் கொண்டிருப்பேன்! தனியாக இருக்கும் இவ்வேளையில், இதைத் தவிர்த்து வேறென்ன நான் செய்வது...? ஆனால், அந்தக் கருவி ஓலமிட்டு அறிவிக்கிறது - அதற்கான உணவு தீர்ந்துபோவதாக! உணவைத் தேடி, ஒரு வழியாக என் கைகளிலிருந்து அது கீழே இறங்குகிறது.
தூக்கம்தான் இந்தத் தனிமைக்கு சிறந்த மருந்தாக அமையும் எனத் தோன்றுகிறது. ஆனால், இரு புறமும் மாறி மாறிப் புரண்டு படுத்த பின்பும், என்னால் உறங்க இயலவில்லை. என் நிலை எனக்கே பிடிக்கவில்லை. சத்தமாக அழுதிட வேண்டும்போல் இருக்கிறது; எனினும், சத்தமின்றி அழுதுகொள்கிறேன்.
யாரிடம் பேசுவது? யாருமே இல்லாததால், வலியிடம் அழுதபடியே பேசுகிறேன், “ஏய் வந்தேறியே? எனது இன்றைய நிலைக்கு நீதான் காரணம்! ஏன் என்னை வதைக்கிறாய்? என்னிடம் நீ எதை எதிர்ப்பார்க்கிறாய்? உனக்கென்று கொடுப்பதற்கு என்னிடம் என்ன இருக்கிறது? இந்த உடலும், உயிரும் கூட எனக்குச் சொந்தமானதல்லவே...!” விரக்தி கலந்த சினத்தோடு ஆவேசமாகக் கேட்கிறேன்.
உடன் பதில் கிடைக்கிறது. “உன் இறைவன் உன்னை சோதிக்கின்றான்”, எனும் ஒற்றை வரி பதில்!
இப்போதுதான் அனைத்தும் புரிகிறது. எனக்கு ஏற்பட்டுள்ள நிலையை வெறுமனே ’தனிமை’ என்று சுருக்கிச் சொல்ல இயலாது போலும்; மாறாக, இது ‘வெறுமை’ – சலிப்பூட்டுகிற ஒரு இயலாமை நிலை!
இறைவனிடத்தில் முழுவதுமாகச் சரணடைதலும், சமர்பித்தலும்தான் இதற்கான ஒற்றைத் தீர்வு என இப்போதுதான் எனக்கு விளங்குகிறது. மொத்த உலகமும், இந்த அற்ப வாழ்வும் ஒரு சோதனைக் கூடம்தான் என்பதை நினைவுகொள்கிறேன்.
மின்விசை ஏற்றப்பட்ட நிலையில், மீண்டும் அலைபேசி என் கைகளில் தவழ்கிறது. மின்னணு வடிவில் இருக்கும் வேதநூலை ஓதிடத் துவங்குகிறேன். என் மனதும் நானும் சாந்தமடைகிறோம். மரணத்தைப் பற்றி அதிகமாக சிந்திக்கிறேன். மண்ணறைத் தனிமையை விட, எனது இன்றைய நிலை இலகுவானதுதான் என்பதை உணர்கிறேன்.
இதே கட்டிடத்தில், அருகே இருக்கும் அறைகளில் உறங்கும் நோயாளிகளை எண்ணிப் பார்க்கிறேன். எல்லா அறைகளிலும் நானே இருப்பது போன்று உணர்கிறேன். அவர்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்.
ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், எனது சிகிச்சைக்கான செலவுகளை - நான் பணிபுரியும் நிறுவனமே ஏற்றுக்கொண்டது. அத்தகைய உதவி எதுவும் கிடைக்காமல், பொருளாதாரத்திற்காகத் தவிக்கும் வசதியற்ற நோயாளிகளை நினைவுகூர்கிறேன். அவர்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன்.
இதுவரை என்னைத் துன்புறுத்திய வலிகள் அனைத்தும் - அன்றைய நாளுக்கான தத்தம் பணிகளைச் செவ்வனே நிறைவு செய்து, சோர்வோடு உறங்கச் செல்கின்றன. கூடவே, நானும் உறங்குகிறேன்.
பகல் துயில் எழுவதினால், இரவு ஓய்வெடுக்கச் செல்கிறது. அறைக்கு வெளியிலிருந்து வரும் சிறு ஓசை என்னை விழிப்பூட்டுகிறது. இதோ இப்போதுதான் நான் தூக்கம் களைவேன் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்தாற்போன்று, ஒரு செவிலி அனுமதி கேட்டபடியே உள்ளே வருகிறார்.
அறுப்பதற்காக நான் அகப்பட்டுக்கொண்டதைக் குறிக்கும் பொருட்டு, ஒரு சீருடையை என் வசம் தருகிறார். சிறைப்பட்டிருக்கும் என் மனதிற்கு தைரியம் சொல்கிறார். இதுபோன்று எத்தனையோ நோயாளிகளுக்கு தைரியம் சொன்னவன் நான்; இருப்பினும், அந்த வயது மிகுந்த செவிலி நிச்சயம் என்னை விடவும் இதில் பட்டறிவுமிக்கவர் என்பதில் சந்தேகமே இல்லை.
எனது தற்போதைய மனநிலையை அவர் நன்கு அறிந்திருக்க வாய்ப்புள்ளது. என்னைப் போன்று எத்தனை எத்தனை வலுவிழந்த மனிதர்களைத் தன் வாழ்க்கைப் போக்கில் சந்தித்திருப்பார் அவர்?!!
அவரிடம் பேச வேண்டும் போல் இருக்கிறது. இதுவரை அவர் சேவையாற்றிய மனிதர்கள் & அருகிலுள்ள அறைகளில் இருக்கும் நோயாளிகள் என அவரிடம் சில மருத்துவமனைக் கதைகளைக் கேட்க வேண்டும்போல் தோன்றுகிறது. அவரோ வேலையில் பரபரப்பாக இருக்கிறார்.
அறுவை சிகிச்சை அறைக்கு என்னைக் கொண்டு செல்கின்றனர்.
குடும்பத்தாரையும், நெருங்கிய நண்பர்களையும் இதோ பார்த்தாகிவிட்டது. இப்போது ‘நான்’ அவர்களுக்கு தைரியம் சொல்கிறேன்! குடும்பங்களை விட்டும் பிரிந்து, தூர தேசங்களிலுள்ள மருத்துமனைகளில் தனியாக இருக்கும் நோயாளிகளின் பரிதாப நிலையை எண்ணிப் பார்க்கிறேன். இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அவனே அனைவருக்கும் போதுமானவன்.
சிகிச்சை துவங்குகிறது. துணியினால் ஆன முகமூடியை அணிந்த செவிலி ஒருவர், நெகிழியினால் ஆன முகமூடி ஒன்றினை எனக்கு அணிவிக்கிறார். அதில் வரும் வெண்புகை என்னை மயக்கமடையச் செய்கிறது. அருமை மகளின் அழகிய முகத்தை மனத் திரையில் காண்கிறேன்.
சிறிய வெட்டுத் தளும்புகள் கூட இல்லாத என் மேனியை - கிழித்து அறுக்கும் வல்லுநரின் முகபாவனைகளை, அவரின் முகமூடி மறைத்து கொள்ளட்டும். சென்ற இரவுக்கு நான் கடனாக செலுத்த வேண்டிய தூக்கம் இன்னும் மிச்சமிருக்கிறது. “என் இறையே...”, எனக் கூறியபடி நான் மயக்கமடைகிறேன்.
மாலை நேரம் நெருங்கியிருக்கும் என நினைக்கிறேன். அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் நான், கண்களை மெல்லத் திறக்கிறேன். என்ன நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதனைச் சுதாரித்துக் கொள்கிறேன். முதல் வேலையாக, சிகிச்சை அளிக்கப்பட்ட எனது உடலின் அந்தக் குறிப்பிட்ட பகுதியை தொட்டுப் பார்க்கிறேன். எல்லாம் முடிந்து விட்டதை அறிந்துகொள்கிறேன். சரியான பகுதியில்தான் சிகிச்சை அளித்துள்ளனர் என்பதையும் சேர்த்தே உறுதி செய்கிறேன்.
மீண்டும் என்னை அறையில் கண்ட குடும்பத்தார் – மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். மருத்துவமனை நாட்கள் தொடர்கிறது. நண்பர்கள் பலரும் நலம் விசாரிக்க வருகின்றனர். அலுவலகத்தில் என்னிடம் அதிகம் பேசிராத கடைநிலை ஊழியரும் இதில் அடக்கம். அனைவரது அன்பு கலந்த பிரார்த்தனைகளினால், எதிர்பார்த்ததை விட வேகமாகவே எனது புண் ஆறுகிறது.
என்னைச் சுற்றி நடப்பவை அனைத்தையும் படுக்கையில் இருந்தவாறே அவதானிக்கிறேன். ’நாலு பேரு நாலு விதமாக பேசுவார்கள்’ என்பது, நாடகம் போல் எனது கண்களின் முன்னால் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
ஒரு நண்பர், “நீ இன்னொரு மருத்துவரிடமும் ஆலோசனைக் கேட்டிருக்கலாம்,” என்கிறார். அருகில் நின்ற இயற்கை ஆர்வலரோ, “இறைவழி மருத்துவத்தை பின்பற்றி இருந்தால், அறுவை சிகிச்சையை தவிர்த்திருக்கலாம்,” எனக் கூறுகிறார். உடற்பயிற்சி, சித்த மருத்துவம், வர்மம் & உணவே மருந்து என பார்வையாளர்களின் அறிவுரைப் பட்டியல் நீண்டுகொண்ட போகிறது.
ஆங்கில மருத்துவப் பிரியரின் குரலும் - அச்சமயம் ஓங்கி ஒலித்திட, அந்த அறை ஒரு விவாத மேடையாகவே மாறுகிறது. எனினும், இறுதி வரை சுமூகமான தீர்மானம் எதுவும் எட்டப்படாமல் விவாதம் ஒத்திவைக்கப்படுகிறது.
இந்த மருத்துவமனையும், நான் தங்கியிருந்த அறையும் எனக்கு மிகவும் பழக்கமானதாக ஆகிவிட்டது. இனி எல்லோரிடமும் சொல்வதற்கென்று, எனக்கும் ஒரு மருத்துவமனைக் கதை கிடைத்துவிட்டது.
அதிக பளுவைச் சுமக்கக் கூடாது... அதிக உடல் உழைப்பு கூடாது... போன்ற பல “கூடாது”களை அடுக்குகிறார் மருத்துவர். அவை அனைத்தையும் கேட்ட பின், இந்த சிகிச்சை மீண்டும் எனது அன்றாட வாழ்க்கையை - வழமையான முறையில் நான் தொடர்வதற்காக இல்லையோ என எண்ணத் தோன்றுகிறது.
நான் வீடு திரும்புகிறேன். சில நாட்கள் கழித்து, அந்த மருத்துவரின் பிரபலமான அறையின் முன்பு, மீண்டும் வரிசையில் அமர்கிறேன். இம்முறை, சிகிச்சைக்குப் பின்னர் நடத்தப்படும் பரிசோதனைக்காக!
-------------------------------------------------------------------------------------------------
இதோ நான் பரிசோதனைக்காகக் காத்திருக்கிறேன். இன்னும் சில மணித்துளிகளில் நான் அறைக்குள்ளே அழைக்கப்படலாம்.
இதோ ஓர் இளவயது செவிலி என்னைப் பெயர் சொல்லி அழைக்கிறார்.
கற்பனை வெளியில் இருந்து நான் மீள்கிறேன். ஆம், கற்பனைதான்! நீல நிறத்தில் மேலே இருப்பவை அனைத்துமே கற்பனைதான்!!!
சைகை மொழியில் அந்தச் செவிலிக்கு பதிலுரைத்தபடியே, மருத்துவரின் அறைக்குள் - அனுமதி கேட்டு நுழைகிறேன். சில பரிசோதனைகளுக்குப் பிறகு, தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு அவர் எனக்கு உத்தரவிடுகிறார்.
ஆம், எனது கனிப்பு தவறாகிப்போனது. அந்த வலிக்கு நான் வைத்த பெயர் அறவே பொருந்தாது என அறுதியிட்டுக் கூறுகிறார். முதன்முதலாக வெற்றியின்மை ஆனந்தமளிக்கிறது.
நான் மீண்டது கற்பனையில் இருந்து மட்டுமல்ல, தேவையற்ற அச்சத்தில் இருந்தும்தான்! இல்லாத ஒரு மரத்துக்காக இத்தனை காலம் நீர் ஊற்றியதை எண்ணி நான் மனம் வருந்துகிறேன். எல்லாம் நன்மைக்கே என ஆறுதலடைகிறேன்.
மகிழ்ச்சியான இந்தச் செய்தியை கேள்வியுற்ற மறுகணமே, அந்த நாள்பட்ட வலியின் ஆற்றல் குன்றிப்போனது போல் உணர்கின்றேன். ஓரு வேளை, அந்த வலி தனது பணியை முடித்துக் கொண்டு நிரந்தரமாக உறங்கச் சென்றிருக்கலாம். அது நிம்மதியாகத் தூங்கட்டும்! இனி நான் அதனைத் தொந்தரவு செய்யவதாக இல்லை.
சாமானியர்களின் பயம்தான் அனைத்து வகை மருத்துவத் துறைகளுக்கும் தீனிப் போடுகிறது என்னும் தெளிவைப் பெறுகிறேன்.
தெளிந்த என் மனது மெல்லத் திறக்கிறது... பயமும், வலியும் என்னை விட்டும் ஓசையின்றி வெளியேறுகின்றன...
இனி அந்த வலியைப் பற்றி, நான் ஒரு வார்த்தைக் கூட எழுதுவதாக இல்லை!!!
---------------------------------------------------------------------------------------------------
|