அன்றாட வாழ்வின் குடும்ப சூழலில் ஓய்வின்றி உழன்று வரும் நாம் ஏராளமான பிரச்சனைகளையும், சவால்களும் எதிர் கொண்டுதான் வருகிறோம். குறிப்பாக நம் வீட்டு பெண்களின் நிலையை சொல்லவே வேண்டாம். ஆக்கி வடித்துக் கொட்டுவதிலிருந்து பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது வரை ஆயிரம் வேலைகளை அவர்கள் இழுத்துப் போட்டு செய்தாலும் இன்னும் நூறு வேலைகள் மிச்சமிருக்கும். மாற்றமே இல்லாமல் நாள்தோறும் தொடரும் வாடிக்கையான ஒன்றுதான் இது. சரி, பெண்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் என்றால் ஆண்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனைகள்! தொழில்துறை, ஆபீஸ், கடை, கண்ணிகள் என்று ஏராளம். அதையெல்லாம் சகித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் அங்கேயும் தலைதூக்கும் சொந்த பிரச்சனைகள்! இதற்கெல்லாம் தீர்வு சுற்றுலாக்கள்தான்.
சுற்றுலாக்கள், புத்துணர்வையும், மன நிறைவையும் தந்து, மன அழுத்தத்திலிருந்து நமக்கு விடுதலை அளிக்கின்றன. இதற்காக நாம் அமெரிக்காவுக்கோ, ஆஸ்திரேலியாவுக்கோ செல்ல வேண்டியதில்லை. நாம் வசிக்கும் இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு தற்காலிகமாக சிற்றுலாவாகக் கூட செல்லலாம்.
நம் ஊருக்கு அருகிலிருக்கும் கிராமங்கள், காடு, கழனிகள், தோட்டம் துரவுகள், ஆறு குளம், கடற்கரை என ஏதாவது ஓரிடத்திற்கு செல்வதுகூட நல்ல மாற்றத்தையும் மன மகிழ்வையும் ஏற்படுத்தும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கொரு முறைனேும் உங்கள் மனைவி மக்களை அழைத்துக்கொண்டு பாதுகாப்புடன் சென்று வாருங்கள். மாதா மாதம் ஒரு சிறு தொகையை ஒதுக்கி அதை சேமித்து வைத்து உங்கள் சிற்றுலாவை சுற்றுலாவாகக்கூட சென்று வரலாம். இதன் மூலம் தம்பதியரிடம் நல்ல நெருக்கமும், நம்பிக்கையும் அதிகரிக்கும்.
அதற்கோர் தூண்டுகோலாக அமையட்டும் எனும் நோக்கில் இத்தொடரை நான் மிகுந்த வேலைப்பளுவிற்கிடையில் எழுதுகின்றேன்.
எனது பள்ளிப் பருவத்தில் "கல்கண்டு" எனும் இதழில் பிரபல எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் அவர்களின் பயணக் கட்டுரைகளை விரும்பிப் படிப்பதுண்டு. அருகிலிருக்கும் ஊட்டிக்குக் கூட போக இயலாத நான், அவரோடு சேர்ந்து உலகம் முழுவதையும் சுற்றிப் பார்த்துள்ளேன். தான் கண்ட காட்சியையும் சூழலையும் தனது எழுத்துக்குள் புகுத்தி நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துவதில் அவருக்கு நிகர் வேறு எவருமிலர். அந்த எழுத்தாளர் சிகரத்தை எட்டிப் பிடிக்க இயலாவிட்டாலும் அதன் அடிவாரத்தில் நின்றுகொண்டு நினைவலைகளை அசை போடுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
எனக்கும், எனது துணைவிக்கும் சுற்றுலாக்கள் செல்வதில் ஆர்வமுண்டு. ஊரில் இருக்கும்போது கூட அவ்வப்போது எனது இருசக்கர வாகனத்தில் அருகிலுள்ள கிராமங்களுக்கு நாங்கள் சென்று வருவோம். அதுவும் மழைக்காலங்களில் மழை பெய்து ஓய்ந்த நிலையில் பகலில் வானம் வெளுத்ததும் கிளம்பிவிடுவோம். ஆறுமுகநேரி வழியாக கந்தன்குடியிருப்பு, சோனகன்விளை சென்று, அங்கிருந்து திருச்செந்தூர் வழியாக சுற்றி ஊருக்குத் திரும்புவோம். சில வேளை ஆத்தூர் வழியாக சேதுக்குவாய்த்தான், ஏரல், குரும்பூர் வந்து - மீண்டும் ஊர் வருவோம்.
நனைந்த மரங்கள், பசுமையான வயல்வெளி, பறவைகள் ஒலி, கடந்துபோகும் கிராமவாசிகள், உடல் சிலிர்க்கும் கால்நடைகள், சில்லென்ற காற்றில் மிதமான வேகத்தில் திறந்தவெளியில் பயணிப்பது அற்புதமான உணர்வைத் தரும். கிராமங்களில் உள்ள புகை மண்டிய ஓலை டீ கடைகளில் தேநீர் அருந்துவதும், டிஃபன் சாப்பிடுவதும் மிகவும் பிடிக்கும்.
நம்மை ஏதோ மேல்தட்டு மக்கள் என கருதி உபசரிக்கும் அந்த கிராமவாசிகளின் பரிவும், பரிமாற்றமும் இன்னும் அழகாக இருக்கும்.
நம்மிலிருந்து ஒரு மாறுபட்ட வாழ்க்கை முறையை அறிந்து கொள்வதில் எங்களிருவருக்கும் ஒரே மாதிரியான விருப்பம். வாழ்க்கையை வாழ்வதில்தான் அழகு. எனக்கும், என் மனைவிக்கும் அழகான சூழ்நிலைகளை உருவாக்குவது பிடிக்கும். துணைவியுடன் எனது வாழ்வில் மறக்க இயலாத பல நல்ல தருணங்களை நான் பெற்றிருக்கின்றேன். அந்த விலை மதிக்க இயலாத அழகிய தருணங்களை இந்த தொடர் மூலம் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
எனது மனைவி சிங்கப்பூர் வரும்போதெல்லாம் நாங்கள் அருகிலுள்ள நாடுகளைச் சுற்றிப் பார்க்கச் செல்வது வழக்கம். தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேஷியா போன்ற நாடுகளுக்குச் சென்று வந்துள்ளோம். ஒவ்வொரு முறையும் எங்கு செல்ல வேண்டும் என்பதை நானே முடிவு செய்வேன். ஆனால் இம்முறை அவரது விருப்பத்திற்கு மதிப்பளித்தேன். பின்னாளில் அதுவே அவரது விசிட்டிங் விசாவுக்கு வினையாக மாறுமென்று கடைசி நொடி வரை அவள் அறிந்திருக்கவில்லை!
எங்கு செல்லாம் என்று பல்வேறு யோசனைக்குப் பிறகும் முடிவில்லாத நிலையில் அவரது முகநூல் தோழியரிடம் அறிவுரையையும், ஆலோசனையையும் பெற்றார். கடல் மற்றும் மலைப்பகுதிகளுக்கு செல்ல அவருக்குத் துளியளவும் விருப்பமில்லை. மலேஷியாவிலுள்ள லங்காவிக்கும், பினாங்கிற்கும் போகலாமா எனும் குழப்பத்திற்கிடையில் இறுதியாக அவர் தேர்வு செய்தது மலேஷியாவிலுள்ள மலாக்கா மற்றும் ஜோஹேர் பஹாரு (ஜேபி) எனுமிடங்களைத்தான்.
சிங்கப்பூர் மலேஷியா எல்லையில் அமைந்துள்ள அழகிய நகரம்தான் ஜோஹர் பஹ்ரு எனும் ஜேபி. இந்த இடத்திற்கு செல்லாத சிங்கப்பூர்காரர்களே இல்லை எனலாம். ஆனால், சிங்கப்பூரில் எனது நான்கு வருட அனுபவத்தில் நானும் என் மனைவியும் இந்த இடங்களுக்குச் சென்றதே இல்லை.
இங்கு வசிக்கும் எனது உறவினர்களும், நண்பர்களும் மதியம் ஜேபிக்கு சென்றுவிட்டு இரவில் சிங்கப்பூர் திரும்பி விடுவார்கள். பிற செலவுகளை ஒப்பிடும்போது சிங்கப்பூரை விட மலேஷியாவில் வெகு குறைவுதான். சுவையான உணவுகள், வசதியான தங்குமிடம், கை நிறைய ஷாப்பிங் என அனைத்தும் இலகுவாகக் கிடைக்கும். இதற்காகவே சிங்கப்பூரில் வசிப்போர் அடிக்கடி அங்கு செல்வது வழக்கம். கூப்பிடும் தொலைவிலிருக்கும் இந்த இடத்திற்கு இதுவரை நாம் செல்லவில்லையே எனும் ஆதங்கம்தான் எனது மனைவியை - ஜேபியை தேர்த்தெடுக்க வைத்தது.
சிங்கப்பூரிலிருந்து பேருந்தில் செல்ல நான்கு மணி நேரமெடுக்கும் மலாக்கா ஒரு பாரம்பரியமிக்க நகரம். சிறிது காலம் ஜப்பானியர்களும், பின்னர் போர்த்துகீசியர்களும், பிரிட்டிஷ்காரர்களும் ஆட்சி செய்த பழமை வாய்ந்த நகரம்.
இறுதியாக அவ்விரு நகரங்களுக்கும் செல்லலாம் என முடிவு செய்து விசாவுக்காக அப்ளை செய்தோம். மூன்று நாட்களில் விசாவும் கிடைத்தது. மறுநாளே மலாக்காவிற்கான டிக்கெட் மற்றும் தங்குவதற்கான ஹோட்டல்களையும் புக் செய்தோம். முதலில் மலாக்காவிற்குச் சென்று இரண்டு நாட்கள் இருந்துவிட்டு பின்னர் ஜேபிக்கு வரலாமென தீர்மானித்தோம். ஜேபி சிங்கப்பூருக்கு வெகு அருகில் இருப்பதால் அடுத்த நாள் டூட்டிக்கு செல்ல எனக்கு வசதியாக இருக்கும் என்பதும் ஒரு காரணம். இதற்காக நான் ஐந்து தினங்கள் விடுப்பும் எடுத்துவிட்டேன்.
ஜனவரி ஆறாம் நாள் காலை ஒன்பது மணிக்கு சிங்கப்பூர் கிட்ச்சனர் ரோட்டிலிருந்து மலாக்காவிற்கு பஸ்ஸில் புறப்பட வேண்டும். அன்று காலை லிட்டில் இன்டியாவிலிருக்கும் சகுந்தலா ரெஸ்ட்டாரெண்டில் பசியாறிவிட்டு சரியாக 8:50க்கு பஸ் புறப்படுமிடத்திற்கு வந்தடைந்தோம். 10 மணியாகியும் பஸ் வரவில்லை. டிக்கெட் ஆன்லைனில் புக் செய்திருந்தோம். அங்கிருந்த கிளை அலுவலகம் மூடிக் கிடந்தது. அதில் ஒட்டியுள்ள நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள நம்பருக்கு போன் செய்து தலைமை அலுவலகத்தை தொடர்புகொண்டேன். மறு முனையில் சீனப்பெண் ஒருத்தி பேசினார். நான் இந்தியன் என்பதை அறிந்து கொண்டு அங்கு பணிபுரியும் தமிழர் ஒருவரிடம் அழைப்பைக் கொடுத்தாள். அவரிடம் விசாரித்ததில் கிளை அலுவலகம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மலாக்காவிற்குச் செல்லும் பஸ் சரியாக ஒன்பது மணிக்கே கிளம்பிப் போய்விட்டதாகவும் கூறினார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது...
தொடரும்.... |