மலாக்காவிற்கு செல்லும் பஸ் கிளம்பிவிட்டதால், பீச் ரோட்டிலிருக்கும் மெயின் ஆபீஸிலிருந்து 10:30 மணிக்கு புறப்படும் பஸ்ஸில் எங்களை அனுப்பி வைப்பதாக அவர் உறுதியளித்தார். அரக்க பரக்க டாக்சியில் பீச் ரோட்டிற்கு சென்றோம். ப்ரான்ச் ஆஃபிஸின் இடத்தை மாற்றியதால் ஏற்பட்ட சிரமத்திற்காக மன்னிப்பு கேட்டு. பத்தரை மணிக்கு கிளம்பும் பஸ்ஸில் முதல் இரண்டு இருக்கைகளை எங்களுக்காக ஏற்பாடு செய்தனர்.
பஸ் விசாலமானதாகவும், சுத்தமாகவும் இருந்தது. வாகன ஓட்டுனர் பஸ்ஸில் எந்த குப்பையும் கொட்ட கூடாதென அறிவுறுத்தினார். சிங்கப்பூர் இமிகிரேஷன் மலேஷியா இமிகிரேஷன் குறித்து தெளிவுபடுத்தியதுடன் பேருந்து நிற்கும் இடங்களையும் அறிவித்தார். வசதியான இருக்கைகள், அதில் மசாஜர் பொருத்தப்பட்டிருந்தது. நீண்ட நேர பயணத்தில் அலுப்பை தவிர்க்க அது பெரும் உதவியாகத்தான் இருந்தது.
சிங்கப்பூர் எல்லையில் உள்ள துஆஸ் வழியாக இமிக்ரேஷைை அடைந்தோம். எனக்கு வொர்க் பெர்மிட் இருப்பதால் பாஸ்போர்டை டேப் செய்துவிட்டு ஆளில்லா இமிகிரேஷனில் தானியங்கி கேட் வழியாக வெளியேறினேன். விசிட்டிங் விசாவில் சிங்கப்பூருக்குள் வருவோர்க்கு தரப்படும் அனுமதி அட்டையை (ஒயிட் கார்டு) இமிகிரேஷனில் கொடுத்தால் மட்டுமே அவர்கள் வெளியேற இயலும். எனவே, விசா காப்பி, பாஸ்போர்ட் ஒயிட் கார்டு ஆகியவற்றை முன்னதாகவே எடுத்து தயாராக என் மனைவியிடம் கொடுத்திருந்தேன். கஸ்டம்ஸ் ஆபீஸர் பாஸ்போர்ட்டை வாங்கி சரி பார்த்து விட்டு அதில் எக்ஸிட் ஸ்டாம்பை பலமாக அடித்த சத்தம் தொலைவிலிருந்த என் காதுகளுக்கு கேட்டது. நாங்கள் வெளியில் வந்ததும். எங்களுக்காக காத்திருந்த பஸ்ஸில் அனைவரும் ஏறினோம். வந்த அனைவரும் ஏறிவிட்டார்களா என ஓட்டுனர் உறுதி செய்து வாகனத்தை கிளப்பினார். அவர் ஒரு தழிழர் என்பதால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார்.
மலேஷியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் கடலில் ஒரு பாலம் மட்டுமே இருந்தது. எங்கள் பேருந்து பாலத்தை கடந்து மலேஷியா எல்லைக்குள் வெறும் இரண்டே நிமிடத்திடத்திற்குள் நுழைந்து மலேஷியா இமிக்ரேஷனை வந்தடைந்தது. அங்கு மீண்டும் கடவுச்சீட்டை பரிசோதித்த பின்னர் எனக்கு ஒரு வருடத்திற்கும், என் மனைவிக்கு பதினைந்து நாட்களுக்கும் மலேஷியாவில் தங்குவதற்கான விசாவை வழங்கினர்.
இமிக்ரேஷனிலிருக்கும் அதிகாரி அவளது ஈ-விசாவை பார்க்காமலேயே 90 நாட்களுக்கு அவரது பாஸ்போர்ட்டில் சீல் அடித்தார். ஈ-விசா காப்பியை அவரிடம் நீட்டியதும் தனது தவறை உணர்ந்தவராய், விசாவை வெரிஃபிக்கேஷன் செய்துவிட்டு தவறாக அடித்த சீலை கேன்ஸல் செய்து அடுத்த பேஜில் வெறும் பதினைந்து நாட்களுக்கு மட்டுமே விசாவை ஸ்டாம்பு செய்தார்.
சிங்கப்பூர் இமிக்ரேஷனில் காட்டும் கெடுபிடியும், மலேஷியா இமிக்ரேஷனில் காட்டிய அலட்சிய போக்கும் அந்தந்த நாட்டின் பாதுகாப்பு தன்மையை உணர்த்தியது. அங்கிருந்து வெளியேறி அருகிலிருந்த கடையில் சில தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு எங்களுக்காக காத்திருந்த பஸ்ஸில் ஏறி மீண்டும் எங்கள்பயணத்தை துவங்கினோம்.
செல்லும் வழியெங்கும் செழிப்பும், வனப்பும் மலேஷிய மண்ணின் வளத்தை பறைசாற்றியது. சாலையின் இருபுறத்திலும் அடர்த்தியான தென்னை மரங்கள் பச்சை பசேலென பட்டுக்கம்பளம் விரித்ததைப் போலிருந்தது.
அண்டை நாடான சிங்கப்பூர் நவீனத்தில் உச்சியில் இயற்கையை வெல்லும் செயற்கைதான் இருக்கும். அங்கு ஆடம்பரத்தின் பிரதிபலிப்பை காணலாம். வெகு அருகிலிருக்கும் மலேஷியாவுக்குப் போகும் வழியில் சின்ன சின்ன பெட்டிக்கடைகள், உடைந்த வீடுகள், எளிமையான உணவுக்கூடங்கங்கள், இரு சக்கர வாகனங்கள் இவை யாவும் நம் ஊர் சாயலில் இருந்தது.
முன்னர் ஒரு முறை நாங்கள் கோலாலம்பூருக்கு விமானத்தில் சென்றதால் இந்த காட்சிகளை காணக்கிடைக்கவில்லை. பேருந்துக்குள் உணவு உண்ண அனுமதியில்லை. சற்று பசியெடுக்கவே, சிப்ஸ் பாக்கெட்டை பிரித்து வாயில் வைத்து சத்தம் வராத படி நொறுக்கினோம். ஓட்டனர் நம்ம ஆள் என்பதால் ஒரு குருட்டு தைரியம். பேருந்துக்குள் இருந்த சின்ன திரையில் பாகுபலி படம் ஓடிக் கொண்டிருந்தது.
மகிழ்மதி நாட்டின் அரசி ராஜமாதா வீர வசனம் பேசிக் கொண்டிருப்பதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை!
இயற்கை எழிலுக்குள் ஊடுருவி எங்கள் பேருந்து அமைதியாக மலாக்காவை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. மதியம் ஒரு மணிக்கு ஒரு உணவுகூடத்தில் பஸ் நிறுத்தபட்டு இருபது நிமிடத்தில் சாப்பிட்டு விட்டு வருமாறு ஓட்டுனர் அறிவித்தார்.
மலாய் உணவான நாசி லாமாவை வாங்கி சாப்பிட்டோம். சிங்கப்பூரில் கிடைப்பதை விட கூடுதல் ருசியாகவும், விலை குறைவாகவும் இருந்தது. சூடான தேநீர் வாங்கி அருந்திவிட்டு பஸ்ஸில் ஏறி பயணத்தை தொடங்கிய கணமே தூக்கத்தில் ஆழ்ந்தோம். கண் விழித்து பார்த்த போது ஹைவேஸ் முடிந்து குறுகிய சாலைக்குள் பேருந்து சென்று கொண்டிருந்தது. மலாக்காவை நெருங்கி விட்டதை உணர்ந்தோம்.
வண்ண மயமான குட்டி குட்டி வீடுகள், குறுகிய சாலைகள், ஆள் நடமாட்டம் இவைகளைக் கடந்து நகரத்திற்குள் பஸ் நுழைந்தது. நாங்கள் கூகுளில் தேடிப் பார்த்த ரிவர் க்ரூஸ், ரெட் பில்டிங், தமிங் சாரி இவற்றை கடந்து நாங்கள் தங்குவதற்காகா முன் பதிவு செய்திருந்த 'ஹட்டன் ஹோட்டல்' பிரதான வாசலில் பஸ் நின்றது.
மலாக்காவின் மைய்யப் பகுதியில் இருந்த ஹோட்டலை வெளியேயிருந்து பார்க்கும் போதே பிரம்மாண்டமாக இருந்தது. ஹோட்டலுக்கு அருகிேலேயே பல முக்கியமான சுற்றுலா தளங்களையும் காண முடிந்தது. வார இறுதி என்பதால் ஹோட்டல் படு பிஸியாக இருந்தது. வரவேற்பறையில் எங்கள் ஆவணங்களை கொடுத்து ரூம் சாவியை பெற்றுக் கொண்டோம்.
டீலக்ஸ் ஸ்யிட் ரூம் என்பதால் லிவ்விங் ரூம், டைனிங் ரூம், சிட்டி வியூ என்று ஏக போக வசதிகளுடன் இருந்தது. பதினெட்டாவது மாடியிலிருந்து மலாக்காவின் மொத்த அழகினையும் ரூம் கண்ணாடி வழியாக காண முடிந்தது. ஒரு புறம் நகரத்தில் விண்னை முட்டும் கட்டடங்கள், மறு புறம் பரந்து விரிந்த நீலக்கடல், கடலை ஒட்டியொரு பள்ளிவாசல் அதை வெகு தொலைவிலிருந்து பார்க்கும் போது கடலுக்குள் கட்டியெழுப்பிய தாஜ்மஹாலைப் போன்று இருந்தது.
இந்த பள்ளிக்குதான் மஃக்ரிப் தொழுகைக்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்தோம். அரை மணி நேர ஓய்விற்க்கு பின், ஹோட்டலை விட்டு வெளியே வர, பசியெடுக்கத் துவங்கியது. ஆடம்பரமான நட்சத்திர ரெஸ்டாரன்டில் சாப்பிடுவதை விட தெருவோரத்து கடைகளில் ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிடுவதில்தான் எங்களிருவருக்கும் விருப்பம். ஹோட்டலுக்கு அருகிலேயே மலாய் உணவுக்கடைகள் வரிசையாக இருந்தது. எனது மொபைலுக்கு ஒரு சிம் கார்டு ஒன்றை வாங்கி போட்டுவிட்டு அந்த தெருவோர கடைகளுக்குள் நுழைந்தோம். நிழற்குடைகள், கூடாரங்கள் என அமர்களப்படுத்தியிருந்தனர். கடைகளில் பெரும்பாலும் மலாய் முஸ்லிம் பெண்கள்தான் பணிபுரிகின்றனர்.
ப்ரைட் ரைஸ்ஸில் மட்டுமே இருபதுக்கும் மேற்பட்ட வெரைட்டிகள் இருந்தன, இனி நசி பதாங், நசி லாமா, பொரித்தது, அவித்தது, வறட்டியது, வாட்டியது என ஏராளமான உணவுகள். உணவு பட்டியல் மலாய் மொழியில் இருந்ததால் ஒன்றும் புரியவில்லை.
நம் ஊரில் உளுந்து வடையை தந்தி பேப்பருக்குள் பொதிந்து தருவதைப் போல் ஒரு ஆம்லெட்டுக்குள் ப்ரைட் ரைஸை வைத்து மூடி அதற்குமேல் சில்லி சாஸ் ஊற்றி அலங்கரித்ததை அருகிலுள்ளவர் ஆடர் செய்திருந்து சாப்பிடுவதைக் கண்டேன். அதையே நாங்களும் ஆடர் செய்தோம். அது தாய்லாந்து நசி பத்தாயா என்று பின்னர்தான் அறிந்தோம். செம டேஸ்ட்டு அதற்கு பிறகு நசி பத்தாயா எங்கள் விருப்ப உணவாகவே மாறிவிட்டது.
தொடரும்...
|