| |
ஆக்கம் எண் (ID #) 25 | | | ஞாயிறு, ஏப்ரல் 1, 2012 | | ஒலிபெருக்கியின் - ஒலி மாசு! (பாகம்-1) சமூக பார்வையாளர்
|
| இந்த பக்கம் 5605 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய | |
அன்பான வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
என்னுடைய கட்டுரைகளை கொள்கை ரீதியாக சிந்திக்காமல் , பொதுவான சிந்தனையோடு பார்த்து - எந்த கொள்கையையும் , பகுதியையும் குறிப்பிடாமல் மேலான தங்களுடைய சொந்தக் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள். - கட்டுரை ஆசிரியர்.
|
சுற்றுச்சூழல் மாசுபடுவதால் உலகம் முழுவதும் பல நோய்கள் ஏற்பட்டு மக்கள் பாதிப்பதை பார்த்தும், கேட்டும் வருகிறோம். அதற்கு பல காரணங்களையும் கூறுகிறோம்.
குப்பைக்கூளங்கள், வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளின் கழிவுகள் அதன் நச்சுக்காற்று, மக்காத பிளாஸ்டிக் பொருட்கள், இரசாயனக் கழிவுகள், மற்றும் திறந்த வெளி சாக்கடைகள் என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அதே நேரத்தில் சுற்றுச்சூழல் கெடுவதற்கு " ஒலி மாசு " ம் ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
வாகனங்களின் இரைச்சல், வாகன ஒலிப்பான்களின் மிதம் மிஞ்சிய சத்தம் , ஜெனரேட்டரின் இரைச்சல், பட்டாசுகளின் வெடி சத்தம், ஒலி பெருக்கிகளின் அளவுக்கு அதிகமான சத்தம், மற்றும் தொழிற்சாலைகளினால் ஏற்படும் இரைச்சல் ஆகியவைகள் மூலம் 'ஒலி மாசு' ஏற்படுகிறது என்பதையும் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவைகளினால் ஏற்படும் ஒலி மாசு மக்களை பல நோய்களுக்கும் உட்படுத்துகிறது மட்டுமல்லாமல் பறவை இனங்களையும் , மிருகங்களையும் மற்றும் கடல்வாழ் உயிரினங்களையும் பாதிக்கிறது.
ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவுகோல் உண்டு , அந்த அளவுக்குள் வைத்துக்கொண்டால் எந்த பாதிப்பும் இருக்காது. தொழிற்சாலைகள், ஜெனரேட்டர்கள் மற்றும் வாகனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட டெசிபல் அளவு ஒலியை அரசாங்கம் அனுமதித்திருக்கிறது. அந்த அளவுக்குள் அவைகளின் ஒலி இருந்தால் அது யாரையும் பாதிக்காது. அந்த அளவை மீறும்போதுதான் ஒலி மாசு அடைகிறது.
பட்டாசுகளுக்கும் , ஒலி பெருக்கிகளுக்கும் கூட ஒலிகளின் அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அந்த அளவுக்கு மேல் சத்தம் வந்தால்தான் ஒலி 'மாசு' அடையும். அதிக ஒலியின் காரணமாக நரம்புத்தளர்ச்சி, இதய நோய், மூளை பாதிப்பு மற்றும் காது கேளாமை ஏற்படுகிறது.
பறவை இனங்கள் அமைதியின்மை காரணமாக இனப்பெருக்கக் காலங்களில் ஒலியை எழுப்பி, தன்னுடைய இருப்பை தெரியப்படுத்த முடியவில்லை. அவைகளும் அழியத் தொடங்கிவிட்டன.
எடுத்துக்காட்டாக 15 , 20 வருடங்களுக்கு முன்பு, மாலை இருள் தொடங்கிவிட்டால் பறவைகள் எல்லாம் தம் தமது கூடுகளுக்கு சென்றுவிடும் அதிலும் முக்கியமாக காகங்கள் கூட்டம், கூட்டமாக செல்லும். ஒரு காகம் கூட இரவில் கரையாது - மறுநாள் பொழுது விடியும்வரை. ஆனால் இப்பொழுது அப்படியல்ல இரவு பொழுதிலும் காகங்களின் சத்தத்தை கேட்கலாம். சில நாட்களில் இரவு முழுக்க காகங்கள் கரைவதை கேட்கலாம். இதற்கு காரணம் ஒலி, மாசு அடைந்திருப்பதுதான். இது போல் எத்தனையோ பறவைகளின் நிலையும் அப்படியே.
அன்று சாதாரண பட்டாசுகளை வெடித்தார்கள் அதனால் காற்று மட்டும் மாசு அடைந்தது. ஆனால் இன்றோ அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகளை வெடிக்கிறார்கள் இதனால் ஒலியும் மாசு அடைந்து பல இழப்புகள் ஏற்படுகின்றன. வீட்டில் உள்ள வயோதிகர்கள் , கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகின்றனர். பலருக்கு தூக்கமின்மையும், மன உளைச்சலும் ஏற்படுகிறது.அதே நேரம் சத்தம் அளவுடன் இருந்தால் காற்று மட்டும் 'மாசு' அடைவதுடன் நின்றுவிடும்.
முன்பெல்லாம் விபத்து அல்லது பிறவியின் காரணமாக காது கேளாதவர்களாக இருந்தார்கள் ஆனால் இன்று ஒலி 'மாசு' அடைவதன் காரணமாக காது கேளாதவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது.
இன்று நகரம் என்றல்ல கிராமங்களிலும் வாகனங்கள் என்று மட்டும் அல்லாமல் தொலைகாட்சிப் பெட்டி , கிரைண்டர் , மோட்டார், வாஷிங் மெஷின் என்று மோட்டார் பொருத்தப்பட்ட பல சாதனங்கள் வீடுகளில் உபயோகப்படுத்துவதால் எல்லாத் தரப்பு மக்களையும் அதிகமான 'ஒலி' பாதிக்க தொடங்கி இருக்கிறது. இதனால் மன உளைச்சல் , இரத்த அழுத்தம், காது கேளாமை மற்றும் தூக்கமின்மை ஏற்படுகிறது.
வாகனங்கள் , தொழிற்சாலைப் பகுதிகளில் 75 டெசிபலுக்கும் வர்த்தக பகுதிகளில் 65 டெசிபலுக்கும் குடியிருப்பு பகுதிகளில் 55 டெசிபலுக்கும் மேல் ஒலி எழுப்பக்கூடாது என்றும், மருத்துவ மனைகள் மற்றும் பள்ளிக்கூடங்களிலிருந்து 100 மீட்டர்கள் வரை அமைதியிடங்களாக அறிவிக்கப்படுகிறது. ஆகவே இவைகளை மக்கள் கடைப் பிடித்தால் ஒலி 'மாசு' ஏற்படாது.
ஒலி 'மாசு' அடைவதை தடுப்பதற்கான செயலில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது - நம் ஊரிலும்கூட அரசாங்க அதிகாரிகள் வந்து, விசாரணைகள் நடத்தி புள்ளி விவரங்கள் சேகரித்து சென்று இருக்கிறார்கள் .
ஒலியை அதாவது சத்தத்தின் அளவை பல மடங்காக கூட்டி வெளிப்படுத்த உதவும் சாதனம்தான் " ஒலிபெருக்கி " என்பது. இந்த ஒலிபெருக்கியைப் பொறுத்தவரை அதை நாம் நல்ல விசயங்களுக்கு பயன்படுத்துவதாக எண்ணுகிறோமே தவிர அதனால் ஏற்படும் பாதிப்பை மக்கள் உணர்வதில்லை. ஒலி பெருக்கி மிதமான அளவுடன் செயல்பட்டால் நன்றாக கேட்கலாம். அதேநேரம் ஒலி பெருக்கியின் சத்தம் அளவுக்கு மிஞ்சும்போது இரைச்சலாக மாறிவிடுகிறது நம்மால் எதுவும் கேட்க இயலாது.
அளவுக்கு அதிகமான சத்தத்தால் காதுகளின் சவ்வு பாதிக்கப்படுகிறது. நமது காதுகளின் கேட்கும் அளவு 50 டெசிபலிலிருந்து 75 டெசிபல் என்றே வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே அதற்கும் மேலாக ஒலியின் அளவு கூடாமலிருந்தால் நமது கேட்கும்தன்மை பாதுகாப்பாக இருக்கும்.
இன்று ஒலிபெருக்கிகள் மூலம் மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகிறார்கள் காரணம் அதிகமான சத்தத்துடன் ஒலி பெருக்கியை உபயோகிப்பதுதான். இந்த ஒலிபெருக்கி மட்டுமல்ல , ஒலியை ஏற்படுத்தும் ஜெனரேட்டர் , வாகனங்களில் பயன்படுத்தும் 'ஹாரன்' , வாகனங்களின் இரைச்சல் , புகை வண்டி , விமானம் , மோட்டார் இது போன்ற எந்த ஒன்றும் அளவுக்கு அதிகமான ஒலியைத் தந்தால் நிச்சயமாக அதன் மூலம் " ஒலி மாசு " ஏற்படும். இவைகள் எல்லாம் பொதுவாக எல்லோரையும் பாதிக்கக் கூடியவைகள். ஆனால் செல் போன் , ஹெட் போன் என்பதெல்லாம் உபயோகிப்பவரை மட்டுமே தாக்கக்கூடிய ஓன்று.
மொத்தத்தில் கூட்டிக்கழித்து பார்த்தால் ஒலி பெருக்கி மட்டும்தான் எல்லா தரப்பு மக்களையும் அதிகம் பாதிக்கக்கூடியதாக அமைகிறது. அதே நேரத்தில் அந்த ஒலி பெருக்கிதான் மிகவும் தேவையானவையாகவும் இருக்கிறது.
உலகம் தோன்றியது முதல் ( ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்திலிருந்து ) சில நூற்றாண்டுகள் முன்பு வரை காற்று 'மாசு' படாமல் இருந்தது , சுத்தமான , சுகாதாரமான காற்றையே மக்கள் சுவாசித்து வந்தார்கள். உலகில், என்று விஞ்ஞானம் முன்னேற்றங்கள் அடையத் தொடங்கியதோ அன்று இயற்கையும் ' மாசு ' படத் தொடங்கிற்று. இயற்கை பொய்த்து செயற்கை செயல்படத் தொடங்கியது. ஆம் அது உண்மையே! - காற்று மற்றும் ஒலி ' மாசு ' படாமல் இருந்த காலம் வரை ஒலிபெருக்கியின் அவசியம் ஏற்படவில்லை.
அன்று நபிமார்களும் அவர்களுக்கு பின் வந்த இறைநேசச் செல்வர்களும் மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்கு ஒலிபெருக்கியையா உபயோகித்தார்கள் ? நின்ற இடத்திலிருந்தும் மலை குன்றுகளின் மீது ஏறி நின்றும் நூற்றுக்கணக்கான மக்கள் என்ன ஆயிரக் கணக்கான மக்களிடையே பிரச்சாரம் செய்தனர், அதை அனைவரும் செவியுற்றனர். காரணம் அன்று காற்றும், ஒலியும ' மாசு ' படாமல் இருந்தது அதனால் எல்லோருக்கும் தெளிவாக கேட்டது.
ஒலிபெருக்கி உபயோகத்திற்கு வருவதற்கு முன்பு, வீட்டின் உள்ளே இருக்கின்றவர்களுக்கும் , தூரமான இடத்தில் உள்ளவர்களுக்கும் மற்றும் ஜென நெரிசலான இடங்களில் உள்ளவர்களுக்கும் பாங்கு ஒலி கேட்க வேண்டும் என்பதற்காக எல்லா பள்ளிவாசல்களிலும் பாங்கு சொல்வதற்கு முன்பாக " டங்கா " அடித்து (முரசொலித்து ) அதன் பின்பே பாங்கு சொல்லி வந்தார்கள். காரணம் டங்காவின் சத்தத்தில் மக்கள் அனைவரும் நிசப்தம் ஆவார்கள் பாங்கு தெளிவாக எல்லோருக்கும் கேட்கும் என்பதால்.
சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் வரை விண்ணும் , மண்ணும் சுகாதாரமாக இருந்தது என்று வாகனங்கள் பெருகியதோ அன்று முதல் காற்று மாசுபடத் தொடங்கியது. ஆகாய விமானமும் , ஊர்திகளும், தொழிற்சாலைகளும், கட்டிடங்களில் உள்ள மோட்டார்கள், ஏசி , டிவி , கிரைண்டர் என்று பல தரப்பட்ட மோட்டார் சாதனங்களும் அதிகரித்தக் காரணத்தால் இரைச்சல்களும் , புகையும் ஏற்பட்டு காற்று மாசு படத் தொடங்கியது இதன் காரணமாகவே ஒலிபெருக்கியின் உதவியை நாடவேண்டியதாயிற்று.
40 , 45 ஆண்டுகளுக்கு முன்பு நமது ஊரில் மார்க்க சொற்பொழிவுகளுக்காக வெறும் 4 ஸ்பீக்கர்களை மட்டும் 4 திசையையும் நோக்கி கட்டுவார்கள் , அந்த ஒலிபெருக்கியின் சத்தம் மிதமாக இருக்கும், அது நாளா திசைகளிலும் வெகுதூரம் வரை அந்த சொற்பொழிவை மிக தெளிவாக கேட்க செய்யும். இன்று அதே சத்தத்துடன் 4 ஸ்பீக்கரை கட்டினால் திசைக்கு 10 வீடுகளுக்குக்கூட சொற்பொழிவு தெளிவாக கேட்காது. காற்றின் தூய்மைக் கெட்டு ஒலி ' மாசு ' அடைந்த காரணத்தால் ஒலிபெருக்கியின் எண்ணிக்கையும் அதன் " ஒலி " யும் ( சத்தமும் ) கூடுதலாக தொடங்கியது.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் 1960 களிலே குறுக்குத்தெரு முனையில் அதாவது சதுக்கைத்தெரு ஆரம்பத்தில் நின்று கொண்டு பெரிய சதுக்கைக்கு அப்பால் போகிறவரை அழைப்பதற்கு கைத்தட்டிக் ( ஒரு கையின் மேல் மறு கை கொண்டு தட்டி ) கூப்பிடுவார்கள் , அவர் திரும்பிப் பார்ப்பார் அந்த அளவுக்கு இரு கையின் ஓசை கேட்கும் . காரணம் தூய்மையான காற்று ஒலியை சுலபமாக எடுத்து சென்றது, 300 , 350 மீட்டர் தூரத்திற்கு தெளிவாக கேட்டது கைகளினால் எழுப்பப்படும் ஓசை.
இன்று இயற்கையான காற்றும், ஒலியும ' மாசு ' அடைந்து விட்டது எனவேதான் ஒலியை எடுத்து செல்ல செயற்கையான ஒலிபெருக்கியின் அவசியத்தை நாடுகிறோம்.
இன்ஷா அல்லாஹ்! தொடரும்....................... |
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|