ஏப்ரல் 20, உலக சிட்டுக் குருவி தினம்.
அந்த தினம், இந்த தினம் என ஏதாவது ஒரு பிரச்னையை வைத்து ஒரு ஆண்டில் ஒரு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
பெற்றோரை சரியாக கவனிக்கவில்லை என்பதாலும் முதியோர் இல்லத்திற்கு அவர்களைக் கொண்டு தள்ளி விடுவதாலும் நினைவு படுத்தப் படுவது பெற்றோர் தினம்.
கேன்சர், எய்ட்ஸ், சர்க்கரை நோய் முதலான நோய்கள் விளிப்புணர்வுக்கு ஒவ்வொரு தினங்கள்.
ஒழுக்க சீர்கேட்டில் உலகோரைத் தள்ளி விடுவதற்கு காதலர் தினம்.
இந்த தொடரில் சிட்டுக் குருவிக்கும் ஒரு தினம்.
ஆம், நம் கண்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கும் இந்த குட்டிப் பறவைக்கும் இப்போது ஒரு தினமாம்.
கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கும் சிட்டுக் குருவி நமக்குச் சொல்லும் பாடம் என்ன.
அதப் பத்தி நாம் கடைசியில் தெரிந்து கொள்ளலாமே.
ஓ சிட்டுக் குருவியே, உன் ஞாபகத்தில் ஒரு ஞாபகம்.
அந்தி சாயும் போது அடுத்த நாள் அதிகாலையை உன்மனதில் பதிய வைத்தே நீ தூங்கி ஓய்வெடுப்பாய். உனக்கு சீரியல் பார்த்து சீரழிய நேரமும் இல்லை, வெட்டியாய் வெளியில் நின்று ஊர் பலாய் கழுவும் தேவையும் இல்லை. உன்னைப் போன்றே உன்னைச் சுற்றி வாழ்ந்த மனித இனமும் ஒரு நல்ல வாழ்க்கை முறையில் அன்று.
ஆண்டு 1980.
காயல்பட்டணத்தில் தான் உன் அன்பின் ஆதிக்கம் எத்தனை, எத்தனை.
உன்னை இப்போது காணவில்லை என்றதும் எங்களுக்கு நினைவுக்கு வந்தது எங்களின் அந்தக்காலம்.
ட்சூ, டிட்சூ, ட்ச்சூ… என காலங்காத்தாலேயே எங்களை விழிப்பாட்டுவதும் உன் குரல் தானே.
குழந்தைகளுக்கு சோறு ஊட்டி விடும் தாய்க்கு இலவசமாய் நீ காட்சி தருவாய். அவள் குழந்தை உன்னைப் பார்த்துப் பார்த்து மெய்மறந்து உண்ணும்.
உன் அதிரடி சப்தத்தால் சிறுவர்கள் உன்னைப் போன்றே துள்ளிக்குதித்து வெளியில் சென்று ஒய்யாரமாய் விளையாடுவர்.
ஆத்தூரிலிருந்து, இரட்டை மாட்டு வண்டியில் நெல், மூட்டை மூட்டையாக சாக்குப் பைகளில் வந்திரங்கும்.
பாட்டனார்கள் முன் பவ்யமாய் நின்று கணக்கு கொடுக்க கோனாரும் வந்து நிற்பார். ஓ சிட்டுக் குருவியே, இப்போ நீ மட்டுமா இல்லை. மாட்டு வண்டிகளும் இல்லை. நெல் மூட்டைகளும் இல்லை.
முன்னோர்கள் காட்டிய விவசாய அக்கறை இப்போது எங்கேயும் இல்லை, யாரிடமும் இல்லை.
ஓ சிட்டுக் குருவியே, உனக்கொன்று தெரியுமா.
எங்களிடையே சுற்றித் திரிந்த நீ மட்டுமா இன்றில்லை.
இந்திய நாட்டில் விவசாயம் செய்த 75 லட்சம் விவசாயிகளையும் கூட 10 வருஷத்துக்கு முன்னமேயே காணவில்லையாமே.
அன்று, வீடுகள் கட்ட பயன்படுத்தியது கல்குத்து கட்ட குத்து, மெட்ராஸ் டார்ஸ் என்பார்களே. ஆங்கிலத்தில் பர்லிங்ஸ் என்ற பெயர். அத்தகைய பொடி செங்கற்களும் தாங்கி நிற்க மரக்கட்டைகளும்.
வெயிலின் வெக்கை எல்லாம் அன்று அவ்வளவாய்த் தெரிந்ததில்லை. வெயிலின் வெக்கையைத் தனிக்க வீட்டுக்குள் வந்தாலே போதும்.
மிதமாக ஓடும் மின் விசிறி கொஞ்ச நஞ்சம் வெக்கையையும் வெளியேற்றும்.
மின்சாரப் பற்றாக்குரையும் இல்லை. மின்சாரம் போனால் திண்டாட்டமும் இல்லை. டார்ஸின் மகிமை அது.
இப்போது பவர் கட்டு ஒருபுறம், கான்கிரீட்டு மருபுறம். வீட்டில் உள்ளோருக்கோ திண்டாட்டமாம் திண்டாட்டம்.
காலங்காலமாய்த் தாங்கி நிற்கும் டார்ஸின் சிறு இடைவெளி போதும் உன் சின்னஞ்சிறு கூட்டிற்கு. உன்கூடவே அணில் அத்தானும். உங்கள் இருவரின் அதிகாலை அலறல் ஊரார் அனைவருக்குமே ஓர் ஆனந்த இசைவாத்தியம்.
இயற்கை எமக்களித்த இசையோசை நீ.
அன்று பெரியோரின் கட்டுப்பாட்டில் குடும்பத்தின் பொருளாதாரம்.
பெரியோரின் சம்பாத்தியத்தில் சிரியோர்கள். கூட்டுக் குடும்பங்கள் ஒவ்வொரு வீதியிலும் பொன்னலங்காரமாய்.
இன்று சிரியோர்களின் சம்பாத்தியத்தில் பெரியோர்கள். தனிக் குடும்பங்கள் சுய நலவாதமாய்.
ஓ சிட்டுக் குருவி. அன்று மொட்டை மாடிகளும் ஜன்னல்களும் உன் விளையாட்டுத் தளங்கள்.
விவசாயத்தில் நாங்கள் மட்டுமா உண்டு களித்தோம். நீயும் தானே.
இப்போது அனைத்துக் காய்கறிகளும் வேதிப் பொருள்களின் ஆதிக்கத்தில். அறிந்தே உண்கிறோம் மனிதர்கள் நாங்கள். சிறு மூளைகொண்ட நீயோ மேற்கொள்கின்றாய் உண்ணாவிரதம்.
இன்று. அடுக்கு மாடி வீடுகள் உனக்குச் சொன்னது குட் பை.
செல்போன் டவர்கள் உன்மேல் எய்கின்றன தொடர் அம்புகள்.
நெற்கதிர்களோ வேறு சில ஊர்களில் பத்திரமாய் பிலாஸ்டிக் பைகளில்.
அது ஒலுகவும் இடமில்லை. உனக்கு உண்ணவும் விதி இல்லை.
இன்று. நீ எங்கே போனாய் என உன்னைத் தேடித்திரிகிறான் மனிதன்.
ஆனால் அவனிடமோ கொஞ்சம் நஞ்சமாகக் காட்சி தரும் நீ சொல்லும் கடைசிச் செய்தி.
இன்று நான்……
நாளை நீ……
ஓ மனிதா!
|