சென்ற வருடம் நோன்பிற்கு முன்னர் அரசு நூலகத்தில் காயல் முதலாம் புத்தக கண்காட்சியில் நூல் விவாத அரங்கிற்கு எந்தெந்த நூல்களையெல்லாம் எடுத்துக் கொள்ளலாம் என்ற ஆலோசனை நடைபெற்றபோது நண்பர். ராதாகிருஷ்ணன், கூனன்தோப்பு நாவலை பரிந்துரைத்தார்.
நாவலின் வழியாக தோப்பிலின் கரங்களை பற்றினோம். புத்தக கண்காட்சியின் சிறப்பு விருந்தினர் சிக்கலும் தீர்ந்து விட்டது. எழுத்தாளர் நாறும்பூநாதன் வழியாக தோப்பிலின் செல்பேசி எண்களை பெற்றுக் கொண்டு அவரை அழைத்தேன். நடப்பை சொன்னேன், நேரில் வந்து அழைக்க வேண்டும் என்றேன். “வாருங்கோ...” என குமரி மாவட்டத்திற்கே உரிய இழைகுரலில் அழைத்தார்.
கொல்லன் உலையின் செவ்விரும்புபோல பேட்டை நகரமானது உச்சி வெயிலில் பழுத்து கிடந்தது. தேடிக் கேட்டு ஒரு வழியாக நானும் நண்பர் ஹபீப் இப்றாஹீமும் அவர் வீட்டின் வாசலையடைந்தோம்.
வீட்டின் உள்படிகளில் எங்களுக்காக நின்றிருந்தார். பாதங்கள் வீங்கியிருந்தன. வீட்டின் வளாகத்தினுள் தமிழகமும் கேரளமும் சம அளவில் விரவிய வாழைச்சூழல். அவர் ஓட்டிய இரு சக்கர ஊர்தி தலை மடக்கி நின்றிருந்தது. காலம் அதன் மேல் புழுதியாய் படிந்திருந்தது. “வாங்கோ” என்றவர் அமரச் செய்தார். வாப்பாவின் படம் முதுகுக்கு பின்னால் கறுப்பும் வெள்ளையுமாய் சட்டகத்திற்குள் தொங்கிக் கொண்டிருந்தது. குர்ஆன் வசன சிறு தொங்கட்டான்களும் காற்றில் மெலிதாக அலைந்து கொண்டிருந்தன.
புத்தக கண்காட்சிக்கான அழைப்பிதழை கொடுத்து சிறப்பு விருந்தினராக வரச் சொல்லி அழைத்தோம். “மகிழுந்து அனுப்புகின்றோம்!” என்றதும் “அதெல்லாம் வேண்டாம்! நான் இங்க பேட்டயில ரயில் ஏறி ஒங்க ஊருக்கு வந்திடுவேன்...” என வலுவாக மறுத்தார். அதற்கு மேல் நாங்கள் வலுவாக மறுத்து அவருக்கு வண்டியனுப்பினோம். முதலில் அவர் நாணத்தில்தான் சொல்லுகிறார் என நினைத்தேன். மெது நடையும் வீங்கிய பாதங்களும் கொண்ட மனிதரால் எப்படி ரயிலேற முடியும் ? என குழம்பினேன்.ஆனால் அவர் சொன்ன சொல்லுக்கு அவர் உண்மையாக இருந்தார் புத்தக கண்காட்சிக்கு பிறகு வேறொரு தருணத்தில் மலையாள இதழ் ஆய்விற்காக காயல்பட்டினம் வந்தார். அவர் சொன்னபடியே தன்னந்தனியே ரயிலேறி குடையும் கையுமாக வந்திறங்கினார் மனிதர்.
தோப்பிலை நான் முதன் முதலில் ‘ தெய்வத்தின் கண் ‘என்ற (என்பி. முகமது, சாஹித்ய அகாதமி வெளியீடு ) , மலையாள நாவலின் மொழியாக்கத்தின் வழியாகத்தான் வாசித்தேன். தனது எழுத்தின் பேசுபொருளை கேரள மண்ணுக்கேற்ப அது கொண்டிருந்ததாக உணர்ந்திருக்கிறார். அந்த பிடிப்பு அவரின் மொழியாக்கத்தினுள் ஆழ இறங்கியிருந்தது.
புத்தக கண்காட்சிக்கு தோப்பில் கறுப்பும் வெள்ளையுமாக வந்திறங்கினார். உரையில் அவருக்கே உரிய நகைச்சுவையையும் கூருணர்வு கலந்த விமர்சனத்தையும் முன்வைத்தார். புத்தக கண்காட்சியையொட்டி அகில இந்திய வானொலியின் தூத்துக்குடி நிலையத்திலிருந்து வந்திருந்த நண்பர் ஜான்ஸன் தலைமையிலான குழுவினர் தோப்பிலை சிறப்பாக நேர்காணல் செய்திருந்தனர். அவரின் இளம்பருவம், எழுத்து எழுந்த கணம் என நேர்காணல் ததும்பியது.
அதன் பிறகு அவர் தொடர்ச்சியாகவே தொலைபேசியில் மிகுந்த உற்சாகத்துடன் உரையாடுவார். அவர்தான் முதலில் போட்டு பேசுவார். “நான் ராஜஸ்தான் சென்றிருக்கிறேன்” என்று பலமுறை அவரிடம் சொல்ல நேர்ந்திருக்கிறது. முதன் முதலில் அப்படி சொல்லும்போது, “பிஸினஸுக்கா? தொழில மொதல்ல பாருங்கோ!” என்றவர் “ராஜஸ்தானுக்கு ஒங்களோட வந்துதான் சுத்தி பார்க்கணும்!” என்றார்.
ராஜஸ்தானில் இருந்தபோதெல்லாம், “எப்போ ஊருக்கு வர்றியோ?” என்பார். வரும் நாளைச் சொன்னவுடன், “வீட்டுக்கு வந்து ஒரு நாள் தங்கிட்டு போங்கோ!” என்றார். நானும், நண்பரும் - பாடகருமான கே.ஜே. ஷாஹுல் ஹமீதும் அவர் வீட்டிற்கு சென்றோம். கே.ஜே.எஸ்.ஸின் பாடல்களுக்கு அவர் அடிமை. கோழி வறுவலும், வட்டிலாப்பமும் புலவுச்சோறுமாக படைத்திருந்தார். தன் குடும்பம் தன்னை வாசிக்கவில்லை என்ற மனக்குறை அவருக்கிருந்தது. எனினும் அன்பான அக்குடும்பத்தின் ஒத்திசைவாலேயே அவரால் இவ்வளவு தொலைவிற்கு தேரோட்ட முடிந்திருக்கின்றது. உணவருந்தி விட்டு எழுத்து வாழ்க்கை பற்றி உரையாடிக் கொண்டிருக்கையில் கணவன் மனைவி என்ற இரு முது குழந்தைகளுக்குமிடையேயான பழுத்த ஊடல். அதை இருவருமே பிஞ்சு உள்ளத்தோடுதான் கடந்தனர்.
பகலில் கடையில் வற்றல் வணிகம். இரவு முழுக்க எழுத்து. சில நேரம் பகலில் கூட எழுத்தை தவிர தன் இருப்பைக் கூட மறந்த எழுத்துப்பணி. சாமியாட்டம் போல அவர் எழுதித்தள்ளும் அந்த தருணங்கள் அவருக்கு மட்டுமே உரித்தானவை. வேறு யாராவது அவ்வமயம் குறுக்கிட்டால் அவருக்குள் கொப்பளித்துக் கொண்டிருக்கும் எழுத்து புற ஆவேசமாக பீறிடும் என அவர் மனைவி சொல்ல ஒரு இளம் நகையுடன் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தார். விடைபெறும்போது அவரின் நாவலில் கையெழுத்திட்டு வாங்கிக் கொண்டேன். என் தலையை அவர் பக்கம் நீட்டி, கைவைத்து “துஆ செய்யுங்கள்!” என்றேன். மௌனமாக மெல்ல விரல்களை அரைக்கணம்தான் வைத்தார்.
தோப்பிலின் நாவல்களில் நாட்டார் இஸ்லாம், தமிழகத்தின் தென்கிழக்கு கடலோர கிராமங்களின் வாழ்வியல், வட்டார சொல்வழக்கு, முஸ்லிம் கிராமங்களில் முஸ்லிம் ஆண்டைகளின் ஆதிக்கம் ஜமாஅத் வடிவில் தொடர்ந்தது, 1980களில் ஏற்பட்ட சமூக அசைவில் அதன் முற்றாதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தகர நேரிட்டது என்பன ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இஸ்லாமிய தொன்மங்களும் சராசரி முஸ்லிமின் அன்றாட நடைமுறை வாழ்க்கையும் எந்த பேரோசையுமின்றி பிணையும் ஜாலம்தான் அவரின் எழுத்து. அவர் இறுதியாக எழுதிய ‘குடியேற்றம்’ புதினமானது முந்தைய புதினங்களின் மீள் பதிவு முறையில் இருந்தது. அது சலிப்பை ஏற்படுத்தினாலும் அன்னிய போர்த்துக்கீசியரின் ஆக்கிரமிப்பு, அதை எதிர்த்து நின்ற முஸ்லிம்களின் வாழ்வில் நடந்த சேதாரம் என்ற வகையில் முதன் முதலான பதிவு.முக்கிய பதிவு.
என் மகள் கதீஜா ஷமீமாவின் இணையேற்பு விழா அழைப்பை ஏற்று ஊருக்கு வந்து கலந்து கொண்டார். திருமணத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் முழுமையாகவும் கொண்டாட்டமாகவும் பங்கெடுத்தார். என் மகளிடம் அவரின் சிறுகதை தொகுப்பை நூலகத்திலிருந்து எடுத்து கொடுத்து வாசிக்க வைத்தேன். வாசித்த பின்னர் தோப்பிலுடன் உரையாடவும் செய்தாள். அப்போதும் அவர் நிறைந்தார். எப்போது என்னிடம் உரையாடினாலும், “என்ன வாசிக்கின்றீர்கள்?” என்பதை மறக்காமல் கேட்பார்.
இவ்வருடத்தின் சாஹித்ய அகாதமி விருதுக்கான நாவலை பரிந்துரைக்கும் குழுவில் இடம் பெற்றிருந்தார். இதற்காகவே சென்னை வந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த தோப்பில். தான் பங்கு பெற்றது தொடர்பாக யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும் சொன்னார். எஸ்.ராமகிருஷ்ணனின் ‘ சஞ்சாரம் ‘ புதினத்துக்கு சாஹித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டவுடன் என்னை தொலைபேசியில் அழைத்து, இதற்கான வலுவான பரிந்துரையை தானே செய்ததாக குழந்தைமை மிளிர சொன்னார். இதை எஸ்.ரா. அறிவாரா எனத் தெரியவில்லை.
தமிழ் முஸ்லிம் சமூகத்தின் உள்ளிழைகளை பண்பாட்டு ஓட்டங்களை அசைவுகளை அதன் அழகியல் பருண்மைகளாகவோ மாய வகை எழுத்துக்களாகவோ பதிவு பண்ணும் விதத்தில் உள்ள எண்ணற்ற கதைக்களன்களை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு ஸல்மா, கீரனூர் ஜாகீர் ராஜா போன்றோர் சாமங்களின் இருள் முனகல்களை பிறழ்வுகளையும் தேடித்தேடி பதிவு பண்ணி யார் யாரோவுடைய அரசியல் வகுப்புவாத ஆதிக்க முதுகுகளை தடவிக் கொண்டிருக்கின்றனர். இவைகளை ஆட்காட்டி இலக்கியம் என தனித்தலைப்பிட்டே அழைக்கலாம்.
தோப்பில் தன் தனிப்பட்ட வாழ்வில் நாட்டார் மரபுகள் கலந்த இஸ்லாமிய நெறியைப் பின்பற்றினார். அவரது படைப்புக்களின் நடுக்கால கட்டம் நிகழ்ந்தது தமிழகத்தில் தூய்மைவாதமும் x நாட்டார் இஸ்;லாமும் இரு எதிர்மைகளாக மோதிய நேரம். அந்த முரண்களை உரசல்களை முஸ்லிம்களின் ஆண்டை x நவீன வாழ்வின் மோதல்களை கைவினையின் நுண்ணிய நெளிவு வளைவுடன் தனது புனைவுகளுக்குள்ளாக பொருத்தியவர். அதில் எந்த சார்பையும் தீர்ப்பு கூறலையும் கைக் கொள்ளவில்லை.
தன் எழுத்துக்களின் வழியாக யார் யாரோக்களின் எதிர்பார்ப்புக்களை பணிந்து குனிந்து நிறைவேற்றி கொடுக்கவில்லை அவர். நேரம் பார்த்து கணக்கு தீர்க்கும் கணக்கு கூட்டல்களுக்குள் அவர் மாட்டிக் கொள்ளவுமில்லை. இலக்கியங்களை தங்களின் ஆதிக்க அரசியலுக்கான ஆயுதமாக்கிய சூத்திரங்களுக்குள் பிணைத்துக் கொள்ளாமல் அவர் அவற்றை தரையில் கிடக்க விட்டு விட்டு எளிய லாகவத்தோடு கடந்து சென்றார்.
சமூகத்தின் முரணியக்கத்தை அவரது எழுத்தே தன்னிச்சையாக விடுதலையாக தன்னந்தனியாக கையாண்ட விதத்தை காண முடியும். எழுத்தை தன்னிலையிலிருந்து விடுவித்திருந்தார் தோப்பில். அவரின் இந்த சாதனையை புரிந்து கொள்ள முடியாமல் ஒரே நேரத்தில் அவரை நேசராகவும் எதிரியாகவும் தூய்மைவாதமும் நாட்டார் மரபும் பார்த்ததுதான் வேடிக்கை. அந்த வேடிக்கை சுழலுக்குள் அவர் பலமுறை சுழற்றி எறியப்பட்டார். நிராகரிப்பின் உச்சகட்ட வேளை. சாஹித்ய அகாடமி விருது அவரை மீட்டியது. பொது சமூகம் அவரைக் கொண்டாடிய அளவிற்கு அவரை சொந்த சமூகம் கொண்டாடவில்லை என்ற வலி அவருக்குள்ளும் இருந்தது நமக்குள்ளும் இருக்கின்றது. அதனால்தான் அவர் எழுத்தையோ சமூகத்தையோ நம்பி வாழாமல் தன் பிழைப்பிற்காக மளிகை கடை நடத்தினார். நான் ராஜஸ்தானில் இருக்கும் சமயம் மொதல்ல தொழிலப்பாருங்கோ என அவர் அறிவுறுத்தியது இந்த காயங்களின் உறுத்தல்களினால்தான் போலும்.
எழுத்தாளனை கலைஞனை எந்தவொரு சாதி சமய பிராந்திய சிமிழுக்குள்ளும் பிடித்து போட இயலாதுதான். ஆனால் அவரின் எழுத்துக்களின் பல இலக்குகளில் ஒன்றாக சமூகம் அதன் ஓரஞ்சாரமான மனிதர்களும் எப்போதும் இருந்து வந்திருக்கின்றார்கள். குறைந்த பட்சம் இதற்காகவாவது சொந்த சமூகம் அவரிடம் நன்ரி பாராட்டியிருக்கலாம்.
கேரளீயர்கள் அவரை உரிய விதத்தில் கொண்டாடினர். ஆய்வுக்காக அவரை அணுகியவர்கள் ஏராளம். ஆய்வாளர்களில் பலர் தமிழக முஸ்லிம்களின் பண்பாட்டுத் தலை நகரம் தேங்காப்பட்டினம்தானா ? என உறுதிப்படுத்திக் கொள்ள அவர் பிறந்த ஊரைப்பற்றி விசாரிக்கையில் மிக நேர்மையாக அதை மறுத்து “அந்தப் பெருமை காயல்பட்டினத்தைத்தான் சாரும்!” என நிரூபித்தவர்.
காயல்பட்டினத்தின் ஞானவான்கள், அவர்களின் படைப்புக்கள், காயல்பதிக்கும் கேரளத்திற்கும் இலங்கைக்கும் அரபகத்திற்கும் உள்ள ஆன்மீக வரலாற்று கண்ணிகளை தேர்ச்சி பெற அறிந்திருந்தவர்.
நான் இலங்கை சுற்றுலாவிற்கு செல்லும்போது அவரிடம் சொல்லி விட்டுத்தான் சென்றேன். பயணத்திலிருந்து மீண்டவுடன் பேசினேன். மிகவும் சலிப்பாக, “யப்பா! நூறு தடவையாவது போட்டிருப்பேன்...” என்றார். கனிந்த வயது பலதையும் மறக்க வைத்து விடும்தானே. தனக்கு சிறிய உடல் நலக்குறைவு இருப்பதாகவும் அது குணமாகக் கூடியதுதான் எனவும் ஆயாசமாகக் கூறினார்.
சில நாட்கள் கழித்து மீண்டும் தொடர்பு கொண்டபோது அவருக்கு கதிரியக்க பரிகாரம் பண்ணியிருந்தார்கள். அவரும் பேசும் நிலையில் இல்லை. நிலைமையின் முழு வடிவமும் பிடிபடத் தொடங்கியது. குருதிப் புற்று நோய் அவரை மொத்தமாக வளைத்து பிடித்திருந்தது. முற்றிய நிலை. அதன் பின்னர் மூன்று முறை பேசினார். ஓர்மைக்குறைவு இருப்பதாக வீட்டார் சொன்னதினால், “ நான் யார் தெரிகிறதா?” எனக் கேட்டதற்கு என் பெயரைச் சொன்னவர், “உங்களை மறக்க முடியுமா?” என்றார்.
வேறு ஒரு உடல் உபாதைக்காக முழு உடல் பரிசோதனை பண்ணிய இடத்தில்தான் அவருக்கு குருதிப் புற்று நோய் வந்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால் அவரோ பெரிய தொந்திரவுகள் எதுவுமின்றிதான் இருந்திருக்கின்றார். வீட்டார்தான் பதறிப்போய் கதிரியக்க மருத்துவம் பார்த்துள்ளனர். வீட்டாரின் பதட்டத்தை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் கதிரியக்க மருத்துவர்களுக்கு , முற்றிய நிலையில் உள்ள புற்று நோயாளிகளை அமைதியாக அவர்களின் முடிவை தழுவச் செய்வதுதான் ஒரே வழி என தெரியும். ஆனாலும் அவர்கள் எப்படி இவரை மீள மீள கதிரியக்க வதைக்கு உட்படுத்தினார்கள்?. மாமர மூட்டைப்போன்று இருந்த மனிதரை ஒன்றரை மாதங்களுக்குள் பரிகாரத்தின் பேரால் சிதைத்து விட்டனர்.
தேர்தலுக்காகவும் அவரைப்பார்ப்பதற்காகவும் கடந்த மாதம் பதினாறாம் தேதி ரயிலில் இருந்து இறங்கி ஆட்டோவில் வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது, அறியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. எடுத்தேன்... “ யார் தெரிகிறதா?” எனக் கேட்டது மறுமுனைக் குரல். நான் மறுமொழி சொல்லி முடிப்பதற்குள் “தோப்பில்” என்றார். “என்னைப் பார்க்க வருவேன் என்று சொன்னீங்களே...? எப்ப வர்றீங்க?? இப்போ என்ன வாசிக்கிறீங்க?” என்பதுதான் என்னிடம் அவர் கடைசியாக கேட்டது. அன்று முழுக்க அவருக்கு அறிந்த தெரிந்த அனைவரையும் தொலைபேசியில் அழைத்து பேசியிருக்கின்றார்.
போன வருட நோன்பிலிருந்து இந்த வருட நோன்பு என்ற காலக்கணக்குபடி அன்னாரோடு பழகத் தொடங்கியதிலிருந்து அவர் 10.05.2019. அன்று பிரிந்தது வரை சரியாக ஓராண்டு நிறைவு.
“என்னைத் தெரிகின்றதா?” என்ற என் கேள்வியையே என்னிடம் திருப்பி தந்து விட்டு கடன் தீர்க்கும் நேர்மையாளனின் காலத்துல்லியத்தோடு ஏன் சென்றீர்கள் காக்கா?
|