அது 2003ஆம் ஆண்டு!
காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில் வாடகை வீட்டில் பல ஆண்டுகளாகக் குடியிருந்த – பொருளாதாரத்தில் நலிவு நிலையிலிருந்த ஒரு குடும்பத்தில் மரணம்... எனது மஹல்லா குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்ய வேண்டும். அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து எதுவுமே அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதற்கான செலவுக்கும் வழியில்லாத அன்றாடங்காய்ச்சிகள். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போன்ற நிலை அவர்களுக்கு!
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் இயங்கிக் கொண்டிருக்கும் திருக்குர்ஆன் மனனப் பிரிவில் (ஹிஃப்ழு மத்ரஸாவில்) நான் அப்போது ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். இன்றிருப்பது போல அன்று பொதுவாழ்விலும் பெரியளவில் நான் ஈடுபட்டதில்லை. இக்கட்டான நிலையிலிருந்த அக்குடும்பத்தினர் குறித்த தகவல் என் தாய் வழியே எனக்குக் கிடைத்தது. மாலை நேரம் அது. மஃரிப் வரை காத்திருந்து, அங்கு மஃரிப் ஜமாஅத் நிறைவுற்றதும் அனைவரும் கேட்கும் வகையில் உதவி கோரி உரத்த குரலில் வேண்டுகோள் வைத்தேன்.
அப்போது தேவைப்பட்டது என்னவோ வெறும் மூவாயிரம் ரூபாய் அல்லது அதைவிடச் சற்று கூடுதல் மட்டுமே. ஆனால், தொழுகை முடிந்து வெளிச்சென்ற ஒவ்வொருவரும் தம் பங்களிப்பைத் தர, தேவைக்கதிகமாக நிதி சேரவும் “போதும், போதும்!” என நான் பலமுறை கூறியும், “நாங்கள் நிய்யத் செய்துவிட்டோம்... மீதி இருந்தால் அவர்கள் வீட்டில் அடுத்தடுத்த செலவினங்களுக்கு வைத்துக் கொள்ளச் சொல்!” என்று கூறித் தந்து சென்றனர். கடைசியில் எண்ணிப் பார்த்தால் சுமார் 11 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் நிதி சேர்ந்திருந்தது. நல்லடக்கப் பணிகளை நிறைவாகச் செய்துவிட்டு, மீந்த தொகையை அக்குடும்பத்தினரிடமே கொடுத்துவிட்டேன்.
இந்நிகழ்வை இங்கு நினைவுகூரக் காரணம், வசதியற்றோரின் கையறுநிலையை உணர்த்துவதற்குத்தான்.
நமதூர் மண்ணுக்கென்றே ஒரு மனப்பதிவு இருக்கிறது. “எந்த வேலையையும் நான் உடலை வளைத்துச் செய்யக்கூடாது! யாராவது செய்து தருகிறானா...? அவனுக்கு எதையாவது கொடுத்து வேலையை முடிக்க வேண்டும்... அது நேரிய வழியா, தவறிய வழியா என்பதெல்லாம் எனக்கு அவசியமில்லாதது!” என்பதுதான் அது. கையில் காசை வைத்திருப்பவர்கள், அடுத்தவருக்கு வரப்போகும் பின்விளைவுகள் பற்றிச் சிறிதும் கருத்திற்கொள்ளாமல் – தன்னிச்சையாக முடிவெடுத்து, சில பல தொகையைக் கையூட்டாகக் கொடுத்து, வேலையை முடித்துக் கொள்ள, அதன் வினை இதுபோன்ற வசதியற்றவர்களை அவதியில் ஆழ்த்துவது வாடிக்கையாகிவிட்டது.
நான் சார்ந்துள்ள குருவித்துறைப் பள்ளி மஹல்லாவில் மரணித்தவரை நல்லடக்கம் செய்த பின், குழிவெட்டிய பணியாளர்களுக்கான கணக்கை முடிக்கையில், அக்குடும்பத்தார் உறவினரோ, இல்லையோ – எதையும் பாராமல் அங்கு வந்து அமர்ந்துவிடுவது எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் என்ற டீ.எம். மாமாவின் வழமை.
“என்னப்பா... குழி வெட்டுனவன எங்கே...?”
“இதோ இருக்கிறேன் காக்கா...!”
“எவ்வளவுப்பா வேணும்!”
“உங்களுக்குத் தெரியாதா? பார்த்து தாங்க!”
“எனக்குத் தெரியிறதெல்லாம் இருக்கட்டும்! நீ உன் வாயத் தெறந்து சொல்லு!”
“xxx ரூவா தாங்க காக்கா...”
“ஏம்ப்பா அவ்வளவு ரூவா? கணக்கு சொல்லு!”
அவர் கணக்குச் சொல்ல, அவை சரிபார்க்கப்பட்டு தொகை கையளிக்கப்படும். இந்த உரையாடல் நடந்துகொண்டிருக்கும்போதே, மரணித்தவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் வசதியானவர்களாக இருந்துவிட்டால்,
“காக்கா... எதுக்கு இதையெல்லாம் விசாரிச்சிட்டு...? அவன் எவ்வளவு கேட்டாலும் குடுக்கலாம்தானே...?” என்பார்.
அப்போதுதான் டீ.எம். மாமா, “ஆமாப்பா… உங்க கிட்ட இருக்குது... குடுத்துடச் சொல்றீங்க! இல்லாதவன் வீட்டிலும் இவங்க வந்து இதே கணக்கைத்தான் நீட்டுறாங்கங்கறது ஒங்களுக்குத் தெரியுமா? அங்க கொறச்சி பேசுனா, எல்லா எடத்துலயும் வாங்குறதத்தானே கேக்குறேன்னு இவன் சொல்வது ஒங்களுக்குத் தெரியுமா...?” என்பார். உடனே அவர்கள் ‘கப்சிப்’. இந்தக் காட்சி பெரும்பாலும் – நான் ஈடுபடும் நல்லடக்கப் பணிகள் சார்ந்த அனைத்து இடங்களிலும் தவறாமல் காணக் கிடைக்கும்.
மாமாவுக்குத் தற்போது வயது 88. ஆனாலும், இளமைத் துடிப்புடன் அவர்கள் தொடர்ந்து ஆற்றி வரும் இந்தப் பணிகளைப் பாராட்டி, எங்கள் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் வழமையிலேயே இதுவரை இல்லாத ஒரு பாராட்டு கடந்த ஆண்டு (ஹிஜ்ரீ 1439) ரஜப் மாதத்தில் – 14.04.2018. சனிக்கிழமையன்று ஒரு பாராட்டு நிகழ்ச்சியே நடத்தப்பட்டது.
படம்: கோப்பு
எனது பொதுவாழ்வில், நான் விபரம் அறிந்த நாள் தொட்டு – ஒருவர் மரணித்துவிட்டால், அவரது நல்லடக்கத்திற்குத் தேவையான அனைத்தையும் முறையாக முன்னின்று செய்து தரும் வழமையை எந்தப் பிரதிபலனையும் மக்களிடம் நாடாமல், படைத்தவனின் அருளை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செய்து வருபவர் என் மரியாதைக்கும், பாசத்திற்குமுரிய கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை காக்கா அவர்கள். காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் நிர்வாகியாக இந்தப் பணிகளைத் தன்னார்வத்துடன் அவர் செய்வதைக் கண்டுதான் இதுபொன்ற நல்லடக்கப் பணிகளில் எனக்கும் ஓரளவுக்கு ஈர்ப்பு வந்தது. “நல்லடக்க ஏற்பாடுகளை – மரணித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களே செய்வதுதான் ஏற்றம்... அதற்கான முயற்சியையும், பயிற்சியையும் பெற்றுக்கொள்ளுங்கள்!” என பொதுமக்களையும், ஜமாஅத்துகளையும் அவர் வலியுறுத்தாமல் இருந்ததேயில்லை. அவரையடுத்து, என் பாசத்திற்குரிய ‘மாஷாஅல்லாஹ்’ தாவூத் காக்கா அவர்கள். இவ்விருவரும் தமது வாழ்க்கைத் தேவைக்காகப் பகல் நேரங்களில் பம்பரமாய்ச் சுற்றித் திரிந்து, தீராத அலுப்புடன் இரவில் தலை சாய்ப்பவர்கள். ஆனாலும், எத்தனை மணிக்குத் தொடர்புகொண்டு மரணத் தகவலைச் சொன்னாலும், அடுத்த நிமிடமே அவ்விடம் வந்து நின்று, ஆவன செய்து தந்துவிட்டுச் செல்வர்.
அவர்களது வயது ஏற, ஏற – அவர்களுக்குப் பக்கபலமாக அந்தப் பணிகளைத் தன் கையில் எடுத்துத் தன்னார்வத்துடன் செய்து வருபவர் என் அன்பு நண்பர் ‘ஸ்கட்’ அபூ அவர்கள். நாங்கள் தனியாகப் பேசிக்கொண்டால் எங்கள் உரையாடல் எல்லாமே ‘ஐந்தாம் கலிமா’வுக்கு மேலேதான் இருக்கும். அவ்வளவு நெருக்கம்.
அவருடன் இணைந்து, என் உறவினரும் – பாசத்திற்குரியவருமான தம்பி எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன். பொது வாழ்வில் சில பல கருத்து வேறுபாடுகள் எங்களுக்குள் இருக்கலாம். ஆனால் வாய் திறந்து வர்ணித்துச் சொல்லவே இயலாத நிலையில், சுற்றுப்பகுதி முழுக்க வீசும் துர்நாற்றத்துடன் இருந்த பல அநாதைப் பிணங்களை, சுற்றுப்பகுதி முழுக்க சாம்பிராணி, ஊதுபத்தியையெல்லாம் பற்றி வைத்துக்கொண்டு, முகத்தில் சிறிதும் சலனத்தைக் காட்டாமல் – மய்யித்தைத் தொட்டுத் தூக்கிக் குளிப்பாட்டி, புத்தாடை (கஃபன்) அணிவித்து சங்கைப்படுத்தி, ஜமாஅத்தார் அனைவரையும் வரவழைத்து, ஏதோ ஒரு செல்வந்தர் வீட்டிலிருந்து மரணித்தவர் போன்ற தோரணையில் அவரை நல்லடக்கம் செய்த காட்சிகள் என் கண்களுக்குள்ளேயே நிற்கிறது. சிலவற்றில் இணைந்து செயல்பட எனக்கும் வாய்ப்புக் கிடைத்தது என்றாலும், அவர்கள் அளவுக்குச் செய்ய நான் இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன. அதுபோல, என் அன்புச் சகோதரர் நஹ்வி முத்துவாப்பா, எங்கள் குருவித்துறை பள்ளியின் முன்னாள் இமாம் மர்ஹூம் ஷெய்கு அப்துல்லாஹ் பேஷ் இமாம் அவர்களது மருமகனார் தாஹா காக்கா (உடல் நலக் குறைவால் வீட்டில் ஓய்வில் இருக்கும் அவருக்கு அல்லாஹ் நல்ல உடல் நலனை வழங்குவானாக!), தைக்கா தெரு ‘ஹிட்லர்’ சதக்கத்துல்லாஹ் காக்கா (அல்லாஹ் அவருக்கு நல்ல உடல் நலத்தைக் கொடுத்தருள்வானாக!), புகாரீ (48) காக்கா, ஐ.எல்.எஸ்.முஹ்யித்தீன் காக்கா, நான் சார்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நகர நிர்வாகியான கே.எம்.என்.உமர் அப்துல் காதிர் காக்கா, ஹாஜி எஸ்.ஏ.உமர், நண்பர் அரபி அய்யூப், ‘பேரவை’ மரைக்கா காக்கா, கோமான் தெரு ‘கவுன்சிலர்’ அஷ்ரஃப், தைக்கா தெரு எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் காக்கா, எஸ்.டி.பீ.ஐ. கட்சியைச் சேர்ந்த கே.டீ.எம். தெரு எஸ்.எம்.கே.மெய்தீன் காக்கா, தமுமுகவைச் சேர்ந்த நண்பர்களான ‘முர்ஷித் ஜெராக்ஸ்’ முஹ்ஸின், எம்.கே.ஜாஹிர் ஹுஸைன், ஹஸன் என இப்படிப் பல தன்னார்வலர்கள் இந்த ஊரில் உள்ளனர்.
எல்லோரும் இருக்கட்டும். நம் வீட்டில் ஒருவர் மரணித்துவிட்டால் அவர்களை நல்லடக்கம் செய்யும் முதல் கடமையும், பொறுப்பும் நமக்குத்தான் என்றிருக்க, யாருக்கோ வந்த விதி போல மரணித்தவர்களது குடும்பத்தினர் பலர் நடந்துகொள்வது நமது இஸ்லாமிய வாழ்வியல் நெறிப்படி வரவேற்கத்தக்கதல்ல.
காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் கடைசியாகக் கட்டுரை எழுதி சரியாக இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவ்வப்போது பல அம்சங்கள் குறித்து கட்டுரை வரைய நினைத்தும் அந்நாட்டங்கள் நிறைவேறாத நிலையில், இன்று இத்தனை அவசர அவசரமாக இந்தக் கட்டுரையை எழுதக் காரணம், இன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு தகவல்தான்!
நேற்றும், இன்றும் இரண்டு மரணங்கள். இரண்டுக்கும் வெவ்வேறு சகோதரர்கள் குழிவெட்டும் பொறுப்பைச் செய்தனர். நல்லடக்கத்திற்குத் தேவையான கஃபன் துணி, மரம், ஆணி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் வாங்க அவர்களே பணிக்கப்படும் வழமைப் படி, இவ்விருவரிடமும் பணிக்கப்பட்டிருக்கிறது. ஓரிடத்தில் மொத்தச் செலவு ரூ. 7,560/- மற்றோர் இடத்தில் ரூ. 5,800/-
அடுத்தடுத்த நாட்களில் இப்படி நடந்ததை, இரண்டு இடங்களிலும் நல்லடக்கப் பணியில் ஈடுபட்ட கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை காக்கா, ‘மாஷா அல்லாஹ்’ தாவூத் காக்கா ஆகியோர் கண்ணுற்றுக் கொதித்தனர்.
“பலமுறை நானும் பல ஜமாஅத்துகளிலும் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டேன்... ஒரு பயனும் இல்லை... யாருமே கேட்பதில்லை... நீங்களாவது எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்துங்க தம்பீ...!” என என்னிடம் அங்கலாய்த்தார் சகோதரர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை அவர்கள். இன்று காயல்பட்டினம் ஜாவியாவின் 150ஆம் ஆண்டு நிறைவு முப்பெரும் விழா நடைபெற்றுக் கொண்டிருக்க, அதன் இணையதள நேரலைப் பணியில் நானும் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த வேளையில் நான் பெற்ற இவரது அங்கலாய்ப்பே இந்தக் கட்டுரைக்குக் காரணம்.
சரி, இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன?
|| இயன்ற வரை மரணித்தவரது குடும்பத்தினரே – நல்லடக்கத்திற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் நேரடியாகக் கடைகளிலிருந்து வாங்க வேண்டும்...
|| எங்கு அடக்கப்படுகிறதோ அந்த மையவாடியைக் கொண்ட ஜமாஅத்துகள் – நல்லடக்கத்திற்குத் தேவையான பொருட்களை விற்கும் கடைகளுடன் நிரந்தரத் தொடர்பை வைத்துக் கொண்டு, தொலைபேசியில் ஓர் அழைப்பு விடுத்துச் சொன்னாலே பொருட்கள் பள்ளியையும், மரணித்தவர் வீட்டையும் தேடி வரும் வகையில் ஏற்பாடு செய்யலாம்...
|| குழி வெட்டுபவர்களை ஓரிடத்தில் அழைத்துப் பேசி, குழி வெட்டுவதற்கான கூலியை - ஆண்டுக்கு ஒருமுறை பத்து சதவிகிதம் அதிகரிக்கும் வகையில் நிர்ணயித்துப் பேசி முடித்து, அதைப் பொதுமக்களுக்கு அறிவிக்கும் பணியை, இந்த நல்லடக்கப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், மையவாடிகளைக் கொண்ட ஜமாஅத்துகள், ஜமாஅத்துகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பிலிருக்கும் அமைப்புகள் செய்யலாம்.
இவற்றைச் செய்தால்.........
|| ஏற்கனவே கவலையிலிருக்கும் – மரணித்தவரது குடும்பத்தாருக்கு வேலைப்பளு குறையும்...
|| தமது குடும்ப நிகழ்வுக்கு முன்னின்று கடமையாற்றிய மஹல்லா ஜமாஅத்திற்கு அக்குடும்பத்தார் என்றும் நன்றிக்கடன் பட்டவர்களாகவும், முழுக்கக் கட்டுப்பட்டவர்களாகவும் இருப்பர்.
|| எல்லாவற்றுக்கும் மேலாக, நம்மைப் படைத்த இறைவனின் பேரருள் நமக்கு ஈருலகிலும் நிறைவாகக் கிடைக்கும். |