மெயின் ரோட்டிற்கு வந்து டேக்ஸியைக் கை காட்டி நிறுத்தி ரிவர் குரூஸ் போக வேண்டும் என கூறி அமர்ந்தோம். ஜந்து நிமிடத்தில் இடம் வந்து. ஆழகான ஆறு அதன் கரைகளில் கலர் ஃபுல்லான வீடுகள், மரம், செடி, கொடி, மலர்கள் என்று அருமையாக இருந்தது.
போர்த்துகீசியர்கள் பயன்படுத்திய பிரம்மாண்டமான நிஜ பாய்மரக் கப்பல் ஒன்று சுற்றுலா பயணிகள் பார்வைக்காக நிலத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
ஆற்றுப் படுகையில் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய நிறைய சேமிப்பு கிடங்குகளும் இருந்தன. அது அந்த காலத்தில் நீர்வழி வாணிபம் நடந்ததை பறைசாற்றியது.
பல்லக்குகள் அல்லது ரதங்களைப் போன்று வண்ண விளக்குகள் கொண்டும் மலர்கள், பொம்மைகள் கொண்டும் அலங்கரிக்கப்பட்ட நிறைய சைக்கிள் ரிக்ஷாக்களும் அணிவகுத்திருந்தன. இருக்கைகள் தனியாகவும் அதன் வலப்புறத்தில் ஓட்டுனர் சீட் தனியாகவும் இருப்பது வித்தியாசமாக இருந்தது.
"தமிங் சாரி" எனும் ஊசி கோபுரம் தொலைவில் ஒல்லியாக தெரிந்தது.ரிவர் க்ரூஸிற்கு செல்ல டிக்கட் எடுத்து விட்டு படகுக்காக காத்திருந்தோம். வெள்ளைக்காரர்கள் உள்ளிட்ட சுமார் இருபது பேர்கள் எங்களுடன் இருந்தனர். சற்று நேரத்திற்குள் இரண்டு அலங்கார படகுகள் வந்தன. அதில் ஒன்றில் நாங்கள் ஏறி அமர்ந்தோம். கூகுளில் தேடிப் பார்த்த அதே இடங்கள் இதோ நம் கண் முன்னே தெரியும் போது எங்களுக்குள் உற்சாகமாக இருந்தது.
பழமை வாய்ந்த கட்டடங்களை இன்றும் அதன் புதுமை மாறாமல் பராமரித்து வைத்திருந்தனர். நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டிய பாலங்கள் ஏதோ நேற்று கட்டிய பாலம் போல் ஜொலித்தது. பஸ் ஸ்டாப்புகள் போல ஆங்காங்கே படகுகளை நிறுத்தும் கூடங்கள் கலைநயத்துடன் காணப்பட்டன. பழமைக்கிடையில் புதுமையான கட்டிடங்கள் சிலதும் இருந்தன.
இரு கரைகளிலும் ஏராளமான பல வண்ண வீடுகள், பாதசாரிகள், இளஞ்சோடிகள் என நிறைவான காட்சியை அனுபவித்துக் கொண்டே படகில் பயணித்தோம். இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை சென்றுவிட்டு படகு திரும்பியது.
எனது கேமிராவுக்கு சரியான தீனி கிடைத்து விட்ட சந்தோஷம். வேகமாக செல்லும் படகில் இருந்து கொண்டு அருமையான காட்சிகளை மையப்படுத்தி க்ளிக் செய்ய முற்படும் போது கோணம் மாறி விடும் அதற்குள் எடுத்தாக வேண்டும். அப்படி நான் எடுக்க முற்படும் போதெலாம் எங்கள் சீட்டுக்கு முன்று சீட்டுக்கள் முன்னால் இருந்த ஒரு சீனாக்காரர் கையில் ஒரு நீளமான செல்ஃபி ஸ்டிக்கை நீட்டி விடுவார். இனி அவரது கையும் அந்த ஸ்டிக்கும்தான் என் கேமிராவுக்குள் வரும். படகில் வேறு இருக்கைகள் காலி இல்லை இருந்தால் இடம்மாறி அமர்ந்திருப்பேன். கடுப்பாகி விட்டது. காட்சிகள் பல என்னை பார்த்து பல்லிளித்து விட்டு மறைந்து போகின்றன. குட்டி போடும் ஆடு போல அப்போது நான் பட்ட அவஸ்த்தையை சொல்லி மாளாது. அவரை மனதுக்குள் திட்டி தீர்த்தேன். அதையும் மீறி கிட்டிய வாய்ப்பை பயன்படுத்தி சில காட்சிகளைப் படம் பிடித்தேன். என் நிலை கண்டு எனது மனைவிக்கும் சங்கடமாக இருந்ததை உணர்ந்தேன்.
ஓடும் படகில் ஒவ்வொரு ஸ்பாட்டிலும் அந்தந்த இடங்கள் குறித்த விளக்கத்தை ஸ்பீக்கர் மூலம் ஒரு பெண் குரல் விளக்கமளித்துக் கொண்டிருந்தது. மலாக்கா ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரம். வெவ்வறேு காலங்களில் டச்சுக்கள், பேர்ச்சுகீஸியர்கள், பிரித்தானியர்கள் மற்றும் ஜப்பானியர்களின் ஆட்சியில் இருந்தது. 1948 ல் மலாயா ஆட்சியில் இணைந்தது. மலாக்கா எனும் சொல் 'மலாகாட்' எனும் அரபு மொழியிலிருந்து வந்தது. மலாகாட் என்பது சந்தை எனும் பொருளை குறிக்கும். அரேபிய வணிகம் அதிகம் நிறைந்திருந்த காரணத்தினால் 'மலாகா' எனும் பெயர் வந்திருக்கலாம். இன்னும் பல வரலாற்று தகவல்களை ரெக்கார்டரின் மூலமாக கேட்க முடிந்தது.
ஒரு குறிப்பிட்ட இடத்தை கடக்கும் பொழுது இது 'வில்லா சென்டோஸா' என்று அறிவித்தார்கள். அங்கு அழகிய மலாய் குடில்களை காண முடிந்தது. கட்டாயம் இங்கு வர வேண்டும் இந்த குடில்களையும், குட்டி வீடுகளையும் அருகில் சென்று பார்க்க வேண்டும் என்று எங்களுக்குள் தீர்மானித்துக் கொண்டோம். படகு கரை ஒதுங்கியதும் அதிலிருந்து இறங்கி அந்த ஆற்றங்கரையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் கூகுளில் பார்த்த அனைத்து இடங்களையும் இன்று நேரில் பார்த்த போது, ரிவர் க்ரூஸின் அந்த நாற்பது நிமிடங்கள் எங்கள் வாழ்வில் மறக்க முடியாத தருணாக மாறிப் போனது.
'டக் டூர்' போக வேண்டும் என்று ரிக்ஷாகார்களிடம் விசாரித்தோம். டைம் முடிந்து விட்டது க்ளோஸ் பண்ணியிருப்பார்கள் என்றார்கள். டக் டூர் என்பது நிலத்திலும் நீரிலும் செல்லும் வாகனம்.ரோட்டிலிருந்து நம்மை ஏற்றிக் கொண்டு அப்படியே கடலில் கொண்டு இறக்கி விடுவார்கள். தரையில் வேனாகவும் கடலில் படகாகவும் செல்லும் ஒரே வாகனம். கடைசி வரை அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை.
அதன் பின் டச்சுக்காரர்கின் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட தேவாலயத்தை வெளியிலிருந்து பார்த்தோம். அதன் முகப்பு ஆற்றங்கரையை நோக்கி இருந்தது. என்ன ஒரு பராமரிப்பு...சிதிலமடையாமல் இன்று வரை இதை எப்படி பாதுகாத்து வருகின்றனர் என்று ஆச்சர்யமாக இருந்தது. அதன் அருகிலேயே ரெட் பில்டிங், மியூசியங்கள் மற்றும் ஹெரிடேஜ் சென்டர்கள் நிறைய இருந்தன. அதையெல்லாம் உள்ளே சென்று பார்க்க எங்களுக்கு நேரம் போதவில்லை.
மலாகாவின் ரெட் பில்டிங் ரோட்டில் சாயங்கால நேரத்தில் டூரிஸ்ட்டுகள் குமிய தொடங்கினர்.
ஒரு மனிதர் தன் உடல் முழுக்கு மஞ்சள் க்லிட்டரை பூசிக் கொண்டு தங்க சிலை போல் நின்று போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். நிறைய குழந்தைகள் அவருடன் புகைப்படமெடுத்தனர். அவர்அருகிலிருந்த பெட்டியில் அன்பளிப்பாக பணத்தை செலுத்தினர். பிறரிடம் கையேந்தாமல் தனக்கு தெரிந்த கலையின் மூலம் மக்களை மகிழ்வித்து அன்பளிப்பை பெறுவது அவர்களின் நற்குணத்தை வெளிப்படுத்தியது.
வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தோம். நதிக்கரையோரத்து சாலையில் நிறைய குளிர்பாணக்கடைகள் அங்கு சின்ன சின்ன மேஜைகளும் இருக்கைகளும் போடப்பட்டிருந்தன. அங்கு துரியான் சென்டால் மற்றும் ஐஸ் க்ரீம் சென்டால் வாங்கி சாப்பிட்டோம். அங்கு புதுமணத் தம்பதியர்களும் உணவருந்திக் கொண்டிருந்தனர்.
இனி இங்கிருந்து கிளம்பி 'தமிங் சாரி' எனும் சுழலும் டவரை பார்க்க செல்ல வேண்டும். டேக்ஸி பிடிக்கலாமா என்று மனைவியிடம் கேட்டேன். வேண்டாம். ரிக்ஷாவில் போவோம் என்றார். காரணம் நாங்கள் மலாக்காவு வந்து இறங்கிய போதே இதில் பயணிக்க வேண்டும் எனும் ஆவல் எங்களுக்குள் எழுந்தது.
டாக்சியை விட ரிக்ஷாவில் வாடகை அதிகம். சுற்றுலா பயணிகள் சிட்டி முழுவதும் இதில்தான் நகர்வலம் வருவார்கள். ஒரு ரிக்ஷாவை அழைத்து அதில் ஏறி அமர்ந்ததும் ரிக்ஷாகாரர் ஹிந்தி பாடலலை ஸ்பீக்கரில் போட்டார்.
பாடல் ஒலிக்க மலாக்கா தெருக்களை வேடிக்கை பா்த்துக் கொண்டே சென்றோம். பாதசாரிகள் எங்களுக்கு கைகளை அசைத்து வாழ்த்தினர். இதுவும் ஒரு மறக்க இயலாத அனுபவம்தான். பள்ளிக்கூட நாட்களில் ரிக்ஷாவில் போகும் நினைவு வருவதாக எனது மனைவி கூறினார். இவ்வாறு பல சாலைகளையும், நினைவுச் சின்னங்களையும் கடந்து தமிங் சாரியை வந்தடைந்தோம். தொன்னூறு மீட்டர் உயரம் கொண்ட அந்த சுழலும் டவர் மலாக்காவின் அடையாளச் சின்னங்களில் ஒன்று.
தமிங் சாரி என்றால் படைத்தலைவனின் உடைவாள் என்று அர்த்தமாம். சுமார் நுறுபேர் அமரக்கூடிய பிரம்மாண்டமான கண்ணாடிக்கூண்டை பத்தாவது நிமிடத்தில் மெதுவாக சுற்றிக் கொண்டே உயர்ந்தது.
நாங்கள் தங்கியிருக்கும் ஹட்டன் ஹோட்டல், மஸ்ஜித் ஸலாத் ஆகியவை மேலிருந்து பார்க்க பரவசமாக இருந்தது. கீழே 'பாலவன் வாக்' எனும் மலாய் மார்க்கட் தெரிந்தது. ஜன்கர் வாக்கில் ஷாப்பிங் பண்ண முடியாத ஏமாற்றத்தை பாலவன் வாக் சென்று தீர்த்து கொள்ளலாமென மேலிருந்தே முடிவெடுத்துவிட்டோம்.
தமிங் சாரி டவரிலிருந்து இறங்கி நாங்கள் தங்கியிருக்கும் ஹட்டன் ஹோட்டலுக்குச் சென்றோம். அங்குள்ள கஃபேயில் சூடாக லாத்தே காஃபி வாங்கி அருந்தினோம். புது உற்சாகம் பிறந்தது. பின் ஹோட்டலை விட்டு வெளியேறி பத்து நிமிட நடையில் பாலவன் வாக்கை அடைந்தோம்.
மலாய்களின் இரவு மார்க்கட் அது. இரவு பத்து மணிக்கும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெரிய ஷாப்பிங் மாலில் கிடைக்கும் அதே பொருட்கள் அங்கு மலிவான விலையில் கிடைக்கும். மால்களுக்கு செல்வதை விட நைட் மார்கட்டுக்கு செல்வதுதில்தான் எங்களுக்கு விருப்பம். ஃபர்தா ஷால், பர்ஸ், க்ளட்ச் இது போன்ற ஐட்டங்களை வாங்குவதற்காகவே நைட் மார்க்கட்டை தேடி செல்வதுண்டு. அங்கு சில பொருட்களை வாங்கிக் கொண்டு மார்க்கட்டை விட்டு கிளம்பியே போது மணி இரவு11:30.
இரண்டு நாள் மலாய் உணவுகளை சாப்பிட்டதால் எனக்கு நம் நாட்டு உணவை தேட ஆரம்பித்து. பாலவன் மார்க்கட் அருகிலேயே அழகான இந்திய ஃபுட் கோர்ட் இருந்தது அங்கு ரொட்டி & தந்தூரி சிக்கன், எனது மனைவிக்கு விருப்பமான சீ ஃபுட் தொம் யாம்சூப் ஆகியவற்றை ஆடர்டர் செய்து சாப்பிட்டோம்.
அழகிய தருணங்களை கொண்ட இந்த இரவிற்குப் பின் வரும் காலை நிகழ்வை அடுத்த தொடரில் பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்..
தொடரும்..
|