[இவ்வாக்கம் காயல் புத்தகக் கண்காட்சி 2018 நிகழ்வை முன்னிட்டு வெளியிடப்படும் சிறப்பு பதிவு]
அன்று, அந்த நிமிடம் மழையில்லை..
இரவெல்லாம் பெய்த மழை இன்னும் கொஞ்ச நேரம் நீண்டிருக்கக் கூடாதா என்றிருந்தது...
எப்போதும் தூரமாகத்தெரியும் வீட்டிற்கும் பள்ளிக்கூடத்திற்குமான நீளம் இன்று ஏனோ வெகுவாக குறைந்திருந்தது.
எப்போதும் செல்லும் பாதை தான்..
எப்போதும் கடக்கும் தூரம்தான்..
அலியார் தெருவில் இருந்தது அவன் வீடு.
எம் தெரு வழியே நடந்து நசீர் வீட்டு முன் நிற்கும் அந்த நீண்ட வயதுடைய வேப்பமரத்தின் வேதியல் காற்றை சுவாசித்து, அவன் வீட்டு முடுக்கு வழியாக நெசவுத்தெருவை அடைந்து விடலாம். அங்கிருந்து பள்ளிக்கூடம் சேர,
இன்னும் கொஞ்சம் தான்..தூரமும், நேரமும்..
அல்லாபிச்சை எவ்வளவோ உம்மாவிடம் மன்றாடி பார்த்துவிட்டான்.
அவள் தன் கோபத்தை குறைக்கவோ, அவனை மன்னிக்கவோ தயாராக இல்லை.
இதோ பள்ளிக்கூடம் நெருங்கிவிட்டது..
உம்மாவுடன் நுழைந்த போது அவனை வெட்கம் தின்றது.
அவன் படிக்கும் வகுப்பறை ஒட்டிதான் தலைமை ஆசிரியர் அறை இருந்தது..
எல்லோரும் வகுப்பில் இருந்தனர். வகுப்புகள் ஆரம்பித்து விட்டிருக்க வேண்டும்.
உடற்பயிற்சி ஆசிரியர் கோயில்முத்து சார் கையில் பிரம்புடன் நின்று கொண்டிருந்தார்.
உம்மாவுடன் இவனைப் பார்த்ததும் ஒன்றும் சொல்லவில்லை...
தலைமையாசிரியர் அறை. அவரைப்போலவே அமைதியாக இருந்தது. பின்புறத்தில் பள்ளியின் பெருமைகளை பறைசாற்றும் சான்றிதழ்கள், கேடயங்கள் தொங்கியபடியும், சாய்ந்தவாறும் இருந்தன...
தலைமை ஆசிரியர் அறையில் மீரான் சாரும்,ஜமால் மாமாவும் இருந்தனர்.
அவர்களின் இருப்பு அவனுக்கு கூடுதல் வெட்கத்தை அளித்தது..
இறுதி தீர்ப்பு எழுதப்போகும் நீதிபதியிடம் கருணை கேட்கும் கைதியின் கடைசி பார்வை போல் இருந்தது அவன் உம்மாவை பார்த்தது. ஆனால் உம்மா அவன் பார்வையை தவிர்ப்பதின் மூலம் அவன் கருணை மனுவை நிராகரித்தாள்..
தலைமை ஆசிரியர் தான் தொடங்கினார்..
-'சொல்லுங்கம்மா'
தலைமையாசிரியர் அறைச் சுவற்றின் மறைவிலிருந்து ஆதங்கத்துடன் அந்த குரல்
-இல்ல சார், இவனுக்கு கொஞ்சம் கூட பத்தாப்பு படிக்கிறோமேனு அக்கறையில்ல,
பெரிய பரிச்ச வேற வரப்போகுது, உங்களுக்கே தெரியும், இவன் கூடவே நான் உக்காந்திருக்க முடியுமா..?? நாளு வீட்டுக்கு வேலைக்கு போனாத்தான் சமாளிக்க முடியும்.
சரி படின்னு நம்பி வுட்டுட்டு போனா, புத்தகத்துக்குள்ள மறச்சி வச்சி கத புஸ்தகம் படிக்கிறான் சார்..'
சிறிது இடைவெளி விட்டு,
'நல்லா அடிச்சிதான் கூட்டுட்டு வந்திருக்கேன்.
நீங்க கொஞ்சம் புத்திமதி சொல்லுங்க சார்..'
அல்லாபிச்சையின் அடிவயிற்றில் ஏதோ ஒன்று உருண்டு உருண்டு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
உம்மாவின் அதிரடி குற்றச்சாட்டால் தான் நல்லவன் என்ற பிம்பம் சரிந்துவிடுமோ என்று பயந்தான்.
எவ்வளவு சொல்லியும் மன்னிக்காத உம்மாவின் மேல் கோபமும், இனி என்னவெல்லாம் சொல்லப்போறாரோ என்ற பயமும் ஒரு சேர தலைமையாசியரைப் பார்த்தான்..
ஆச்சரியம். அவர் முகத்தில் கோபத்திற்கு பதிலாக மென்புன்னகை தவழ்ந்திருந்தது.
இவனைப்பார்த்து,
'இனி பரிச்சை முடியுற வரை கத புத்தகத்தை தொடக்கூடாது சரியா..ஒழுங்கா படிக்கனும். க்ளாசுக்கு போ..'
தண்டனைகளில் மிக குறைந்த தண்டனைப் பெற்ற சந்தோசத்துடன் வகுப்புக்குச் சென்றான்.
அதன் பின்னாலான நாட்களில் உம்மாவின் நடவடிக்கைகளில் பெரும் மாறுதல் இருந்தது.
பள்ளி விடுமுறையின் போது ஊரில் உள்ள பொது நூலகத்திற்கு அவளே அழைத்துச்சென்றாள்.
அந்த வயதில் அவனை மிகவும் வசீகரித்தது ராணி காமிக்ஸ் கதைகளே.. அதிலும் அந்த மாயாவியன் இரும்புக் கை அவனுக்கு பிரமாண்டம்.
அதன் பின்னர் விக்கிரமாதித்தன் கதைகளுக்காக அம்புலிமாமா பிடித்திருந்தது.
பருவம் மாற ஆனந்தவிகடனில் வந்த ஸ்டெல்லாபுரூஸின் கதைகள் அவனை ஈர்த்தது அவர் கதைகளில் வாழ்ந்த கதைமாந்தர்களின் உரையாடல்கள், கோபங்கள், காதல்கள், செல்ல சீண்டல்கள் என ஒவ்வொன்றிலும் தன்னைப் பார்த்தான்.
பின்னர் அவனை முழு வாசிப்பிற்குள் இழுத்தது பாலகுமாரன் அவர்களே.. அவரும் ஆனந்தவிகடன் மூலமே அறிமுகம். பின்னர் அவரின் கதைகளைத் தேடி தேடி வாசிக்கத் தொடங்கினான். அவரின் ஒரு நாவலை வாசித்து முடித்த உடன் அந்த நாவலோடு பல நாட்கள் வாழ்வான்..பிரபஞ்சன்,சாரு,சுஜாதா என்று மனம் கவர்ந்தவர்களின் பட்டியல் அதிகரித்துக்கொண்டே போனது.
80 களில் காயலின் மார்க்கக்கல்வி கேந்திரமான ஹாமிதிய்யாவில் தான் இஸ்லாமிய நூல்களின் அறிமுகம். சிறிய தலையணை அளவில் இருக்கும் சாந்திமார்க்கம் என்ற நூலே முதன்முதலில் நபிமார்களின் சரித்திரம் சொல்லித் தந்தது. இஸ்லாமிய சரிதங்கள் குறித்த ஆவலை ஏற்படுத்தியது.
இப்போது அஹ்மது ஆலிம், அப்போது அவர்களுக்கு அஹ்மத் காக்கா, இஸ்லாமிய சட்டங்களை கற்றுத்தந்த ஆசான். அதைவிட அவரிடம் ஈர்த்தது அவர் நடத்திய சரித்திரங்கள்..
தன்னுடைய கதைசொல்லும் திறன் வாயிலாக அந்த கதை நடக்கும் களத்திற்கே அழைத்துச் செல்வார். சிரிப்பார்கள்..அழுவார்கள். போர் புரிவார்கள்: அந்த சரித்திரம் முடியும் தினத்தை விழா போல் கொண்டாடுவார்கள். அவ்வாறு அறிமுகப்படுத்திய, மஹ்ஜபீன், உட்பட இஸ்லாமிய புதினங்களைத் தேடித் தேடி வாசித்திருக்கின்றான்.
ஹாமிதிய்யாவின் நூலகத்தில்தான் கருணாமணாளன் கதைகள் வாசிக்க வாய்த்தது.
நூல்களை வாசித்தவன் நாளடைவில் மனிதர்களை வாசிக்க கற்றுக்கொண்டான்.
தன்னைச் சுற்றியுள்ளவர்களை,
தன்னைச் சுற்றியுள்ளவைகளை நேசிக்கக் கற்றுக்கொண்டான்.
காமம் கழித்து அவனால் பெண்களை காண முடிந்தது.
காதல் கூட்டி சமூகத்துடன் உறவாட முடிந்தது.
சக மனிதர்களை அவர்களின் நிறை குறைகளோடு கொண்டாட முடிந்தது.
மழலையின் புன்னகையில் தன்னை இழந்தான்.
மலர்களின் புன்னகையில் தன்னை
மறந்தான்.
வாசிப்பின் சுகம் அறிந்த அவன் மனசு அவனுக்கு எல்லா நூட்களையும் அறிமுகப்படுத்தியது. நாளடைவில் எழுதும் ஆர்வத்தையும் தூண்டியது.. அதன்விளைவாகவே அவன் கருத்தொத்த நண்பன் தாவூதுடன் இணைந்து இளந்தென்றல் என்ற கையெழுத்துப் பிரதி நடத்தும் ஆர்வத்தை தந்தது.
முதல் கவிதை முத்துச்சுடரிலும்,
முதல் கதை கல்லூரிப் பத்திரிகையிலும்,
முதல் கதை ஒலிபரப்பு சென்னை வானொலியிலும் வெளியானது போது அவனாகவே மகிழ்ந்து, போற்றுவார் யாருமின்றி, அவனாகவே உள்ளத்தால் மடிந்தும் போனான்..
பெரும்பாண்மை இந்திய இளைஞன் போல், முறையான வழி காட்டுதல் இல்லாத காரணத்தினாலும், பொருளாதாரம் தேடியும் தன் சுயம் அழித்தது அவன் வாழ்வியல் பிழை. இன்னும் ஏக்கமாகவே தொடரும் எழுத்தின் மீதான காதல் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது...
என்றென்றைக்குமாய் அவனிடம் இந்த சமூகத்திடம் சொல்வதற்கான ஒரு வேண்டுகோள் இருந்தது.
'உங்களுடனே ஒரு எழுத்தாளன் இருக்கலாம். அவனை கண்டுகொள்ளுங்கள். அவனை உற்சாகப்படுத்துங்கள். ஊக்கம் கொடுங்கள்.
நாளை அவன் பேனா உங்களை, உங்கள் ஊரை, உங்கள் சமூகத்தை காக்கலாம். காப்பான்.'
இப்போதும் அவன் அவனுக்காக மட்டுமே எழுதுகின்றான். இன்றும் முதல் ரசிகர்களாய் மிக குறுகிய அளவிலான அவன் நண்பர்களும், கூடவே அவன் மனைவியும் இருக்கின்றார்கள்.
உம்மாவிற்கு வயதாகிவிட்டது.. அவளுக்கு நல்ல நாவல்களை அவ்வப்போது வாசித்துக்காட்டுகின்றான்..
இப்பொழுது மிக ஆர்வமாக தோப்பில் முஹம்மது மீரான் அவர்களின் சாய்வு நாற்காலியை கேட்டு வருகின்றாள். அதில் வரும் ஆசியாவின்
குளியல் நினைத்து பலமாக சிரிப்பாள்...
இப்பொழுதாவது அன்றைய தலைமையாசிரியர் தன்னை குறித்து என்ன சொன்னார்..??
ஏன் அதன்பின்னர் உம்மா தன்னை திட்டவில்லை..???? என்பன போன்ற நீண்ட நாள் சந்தேகங்களை கேட்டுவிடலாம் என்று தோன்றியது. ஆனால் அல்லாபிச்சை கேட்கவில்லை..
சில ரகசியங்கள் சுகமானது..அது அறியபரபடாதவரை....
|