[இவ்வாக்கம் காயல் புத்தகக் கண்காட்சி 2018 நிகழ்வை முன்னிட்டு வெளியிடப்படும் சிறப்பு பதிவு]
“மாவட்ட நூலக ஆணைக் குழு, அரசு கிளை நூலகம், காயல்பட்டினம்” என்ற நீல மை பின்னணியில் வெள்ளையெழுத்துக்களால் எழுதப்பட்ட பலகை ஒரு பக்கம் சாலையை நோக்கி சாய்ந்தவாறு கம்பிகளால் கட்டப்பட்டிருக்கும்.
அந்த நீல மைக்குள் ஒளிந்திருக்கும் வசீகரம் இப்பொழுதும் மனதின் ஒரு மூலையில் ஒளிர்ந்து கொண்டுள்ளது.
1970களின் கடைசி வருடங்கள். நமதூர் மெயின்சாலையில் எட்டுக்கடை வீட்டு குடும்பத்தினருக்கு உரிமையான கட்டிடம்.. மிகவும் பழையது. வளைந்து ஏறும் ஏணிப்படிகளுக்குள்ளிருந்து முதல் தளத்திற்குள் நுழைந்தவுடன் நாற்காலியில் நீட்டேடு ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அதன் முதுகு பக்கம். பழுப்பேறிய வெள்ளை நூலில் பென்சில் அல்லது பேனா கட்டப்பட்டிருக்கும். வருகை பதிவேடு. இதுதான் அந்த நீல வசீகரனான கிளை நூலகம்.
துருவேறிய இரும்பு நாற்காலிகள், சதுர மரப்பேழைக்குள்ளிருக்கும் நாளிதழ்கள், சிறார் பெரியோர்களுக்கான பருவ சஞ்சிகைகள். தூசி படிந்த மர இழை சாளரத்தின் வழியே அளவாக கசிந்து பரவும் வெளிச்சம் உள்ளே மர அடுக்குகளில் அவறிற்கே உரிய பழம் வாசனையேறிய நூல்கள். கட்டு குலைந்த நூல்களை மெனக்கெட்டு நூல் போட்டு தைப்பார் நூலகர்.
தொடக்கத்தில் நாளிதழ்கள் வார இதழ்கள் போக நான் விரும்பி வாசித்தது அம்புலிமாமா, ரத்னபாலா, கோகுலம் போன்ற சிறார் மாத இதழ்களும், வெளிநாட்டு இறக்குமதி கதைகளுடன் வெளியாகும் முத்து காமிக்ஸின் படக்கதைகள்.
படக்கதைகள் தங்களுக்கே உரிய மர்மம், சாகசங்களுடன் ஒரு மாய உலகின் கிறுகிறுப்பான சுழல் கதவுகளை மனதிற்குள் திறந்து விட்டன. குண்டு பல்பில் நிரப்பப்பட்ட மயக்க மருந்து, சுவர்களை கடந்து செல்லும் அரூபன், இரும்புக்கை மாயாவி, தினமணி இதழில் தொடராக வந்த மந்திரவாதி மாண்ட்ரேக் படக்கதை இவை மனதிற்குள் இன்னொரு மனதை உலகிற்குள் இன்னொரு உலகை சமைத்தன.
நெருக்கடியான புறச் சூழல்களின் போது நமக்கு நாமே இளைப்பாற உதவும் மனதின் இந்த நிழல்தாங்கல்களில் நான் தொடர்ந்து தங்கி அயர்வை சோர்வை நீக்கி வருகின்றேன்.
அன்றைய சோவியத் ஒன்றியத்தின் முன்னேற்ற பதிப்பகத்தார், தரமான தாளில் வலுவான அச்சுக்கட்டில் மலிவான விலையில் வெளியிட்ட பெரியோர் சிறார்களுக்கான ரஷ்ய இலக்கியங்கள், அறிவியல் நூல்கள் மிகவும் சிறப்பானவை. அந்த வயதில் ரஷ்ய பெருங்கதைகள் எனக்கு ஒன்றும் புரிந்ததில்லை. ஆனால் சிறார் படக்கதைகளையும் அறிவியல் கதைகளையும் நான் மிகவும் சுவைத்து வாசித்திருக்கின்றேன். பிற பதிப்பகத்தார் வெளியிட்ட வெளியீடுகளையும் நமதூர் நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து இரவலாக பெற்று வாசித்திருக்கின்றேன்.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் நடமாடும் புத்தக பேருந்து பள்ளி வளாகங்களுக்கு வருகை தரும். எல்லாவிதமான தலைப்புகளில் நல்ல பல நூல்களுடன் சோவியத் ஒன்றியத்தின் முன்னேற்ற பதிப்பகத்தின் பள பள நூல்களும் தின்பண்டம் போல வீற்றிருக்கும்.
வருடத்திற்கு ஒரு தடவை திருநெல்வேலியின் மாவட்ட மைய நூலகத்திலிருந்து கோணிப்பைகளில் நிரம்பியிருக்கும் புது நூல்கள் அவற்றிற்கே உரிய கருக்குடன் வந்து சேரும். அவை பிரிக்கப்பட்டு உள்தாள் ஒட்டப்பட்டு வரிசையெண் இடப்பட்டு ரப்பர் முத்திரையுடன் வாசிப்புக்கு வரும் நாளை மிக ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன்.
நான் உட்பட நூலகத்திற்கு வரும் சிறுவர்கள் எவ்வளவு சேட்டைகள் புரிந்தாலும் அதை ஒரு எளிய கண்டிப்புடன் அன்பாக கடந்து செல்லும் நூலகர் பரமசிவன் அவர்கள், உதவியாளர் சங்கரன் அவர்கள். சங்கரன் அவர்கள் செவிப்புலன் மாற்றுத் திறனாளி. பாவம். அவரை படாதபாடு படுத்தியிருக்கின்றோம். அவர் ஓய்வெடுக்கும் மதிய வேளைகளில் நூலகத்தின் கதவை பலமாக தட்டுதல் கூச்சலிடுதல் உட்பட.
இந்த எளிய கடமையுணர்வுள்ள மனிதர்களின் உதவியால்தான் சல்லிக்காசு கூட சம்பாதிக்காத அந்த இளம் வயதில் மனதிற்கு பிடித்தமான ஒரு மெய் நிகர் வாழ்க்கையை வாழ முடிந்திருக்கின்றது. இன்று நான் எழுதும் எழுத்துகளுக்கான முதல் விதைச் சொல் நமதூர் அரசு நூலகத்தில் எனக்கு வாய்த்த தருணங்களின் வழியாகத்தான் எனது மனக் களஞ்சியத்திற்குள் விழுந்திருக்கின்றது என்று சொல்வேன். அந்த வயதில் ஏற்பட்ட வாசிப்பானது எனக்குள் உருவாக்கிய மாய உலகின் வழியாகத்தான் எனது வாலிப வயதில் எனக்கான மெய் உலகை என்னால் உருவாக்கிக் கொள்ள முடிந்தது.
ஒரு முறை நான் வாசித்த எந்த நூலையும் திரும்ப வாசிப்பதில்லை. ஒரே ஒரு நூலைத்தவிர. லக்னோவிலுள்ள தாருல் உலூம் நத்வத்துல் உலமா வெளியீடான SAVIORS OF ISLAMIC SPIRIT என்ற தொடர்வரிசையில் வெளியான ஸெய்யித் அஹ்மத் ஷஹீத் (நூலாசிரியர்: மொஹியுத்தீன் அஹ்மத்) என்ற ஆங்கில நூல். எனது வாழ்வின் குறிப்பிட்ட சில வருடங்களை அந்த நூலின் திசைவழியில் அமைத்து பயணித்திருக்கின்றேன். அந்த பருவத்தில் வயதில் நான் மிகவும் விரும்பிய வாழ்க்கையை அந்த நூலின் நிழலில் வாழ்ந்து கடந்தேன்.
அரை நூற்றாண்டின் நடுவில் நிற்கும் எனக்கு இளம் வயதின் வாசிப்பு சுவைகள் தேர்வுகள் மாறித்தான் இருக்கின்றது. ஆனால் நூல் வாசிப்பு மாறவில்லை. இந்த வயதில் எனக்கு தத்துவ நூல்களும் இயற்கை வாழ்க்கை முறை நூல்களும் பெரு சிறு புனைவுகளும் எனக்குள்ளும் புறமும் வண்ண ஒளியை வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றன.
நமது கைவிளக்கிலிருந்து பாயும் ஒளிக்கற்றையானது நமக்கு முன்னுள்ள பாதையின் இருளை கலைத்து வழியமைப்பது போல இந்த வயதில் எனக்கான உலகை சுவையை தேர்வை கனவுகளை வாசிப்பு என்ற தளத்தின் வழியாகத்தான் பழையதை தகர்த்தும் புதியனவற்றை உருவாக்கியும் வருகின்றேன்.
இன்று எனக்கான நூல்களை நான் சொந்தமாக வாங்கும் அளவிற்கு இருப்பதால் எந்த நூலகத்திலும் நான் உறுப்பினராக இல்லை. மிக அரிதாகவே நண்பர்களிடம் நூல்களை இரவல் வாங்குகின்றேன். காரணம், என்னிடம் இருக்க வேண்டிய மிகச் சிறந்த சேகரமாக சொத்தாக நான் நினைப்பது நூல்கள்தான். நமக்கென சொந்தமாக ஒரு குடும்பம் இருப்பதைப்போல நம் மனதிற்கு பிடித்த நூல்கள் நம்முடனேயே இருப்பதுதான் சரியானது என்ற உணர்வுதான் காரணம்.
சந்தையில் காணும் பொருட்கள், தள்ளுபடி என விளம்பரங்கள் வழியாக அறிய வரும் பொருட்களையெல்லாம் வாங்கிக் குவிக்கும்
நுகர்வு வெறி என்னிடம் எப்போதும் இருந்ததில்லை. ஆனால் நான் என்ன பொருளாதார நிலையில் இருந்தாலும் சரி சிறந்த பிடித்தமான புத்தகங்களை கண்டால் உடனே அல்லது சற்று தாமதித்தாவது வாங்கி விடுவேன்.
என் வாழ்வின் அருந்துணையாய் தோழனாய் ஆசானாய் உள்ளத்து மொழியாய் நான் உவக்கும் சில நூல்களின் பட்டியல்:
1. சத்திய சோதனை, காந்தியடிகள்
2. வேர்கள், அலெக்ஸ் ஹேலி
3. ஒற்றை வைக்கோல் புரட்சி, மசானபு ஃபுக்கோக்கா
4. சஞ்சாரம், எஸ்.ராமகிருஷ்ணன்
5. பொருளாதார அடியாளின் வாக்குமூலம், ஜான் பெர்க்கின்ஸ்
6. பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம், ஹெம்பர்
7. சிறியதே அழகு, இ.எஃப். ஷூமாஸர்
8. மஸ்னவி ஷரீஃப், மௌலானா ஜலாலூத்தீன் ரூமி
9. நிலைத்த பொருளாதாரம், ஜேசி.குமரப்பா
10. உழைப்பை ஒழிப்போம், பால் லஃபாக்
11. பஷீர்: தனிமையில் பயணிக்கும் துறவி, பேரா. எம்.கே. ஸாநு
12. அனுபவங்கள் அறிதல்கள், நித்ய சைதன்ய யதி
13. ஜன்னலில் சிறுமி, டோட்டோசான்
14. இயற்கையை அறிதல், எமர்சன்
15. நீலகண்டபறவையைத் தேடி, அதீன் பந்த்யோபாத்யாய
16. ஆரோக்கிய நிகேதனம், தாராசங்கர் பானர்ஜி
வாழ்வின் இத்தனை இழுபறிகளுக்குமிடையிலும் நான் நானாக நீடிப்பதற்கு உதவி செய்யும் நூல்களுக்காகவும், நூல்களின் மீதான தாகத்திற்காகவும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றேன். |