பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3
பயணத்தில் ஏற்பட்ட களைப்பால் இரவு அடித்து போட்ட மாதிரி தூங்கினோம். காலை விழித்து ரெடியாகி ஹோட்டலில் உள்ள ரெஸ்ட்டாரெண்டுக்கு பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட சென்றோம். உணவகத்தின் வாசலில் வரவேற்க நின்றிருந்த இளம்பெண் எங்கள் ரூம் நம்பரைக் கேட்டறிந்தும் புனைகையுடன் எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். ஸ்யிட் ரூம் என்பதால் எங்களுக்காக தனி டேபிள் ஒன்றை முற்கூட்டியே ரிசர்வ் செய்து வைத்திருந்தனர். நானும் ஹோட்டலில்தான் பணிபுரிகிறேன். இருப்பினும் ஹட்டன் ஹோட்டல் பஃபே என்னை மிகவும் கவர்ந்தது. ஏகப்பட்ட வெரைட்டிகள். நீண்ட நெடிய பஃபே, லைவ் குக்கிங் ஸ்டேஷன்ஸ், ஆம்லெட் ஸ்டேஷன் என படு ஜோராக இருந்தது.
ஒரு கார்னரில் ஹிஜாப் அணிந்த மலாய் பெண் ஷெஃப் ஒருவர் சுடச் சுட பேன் கேக் தயாரித்து கொண்டிருந்தார். ஓவனிலிருந்து ஆவி பறக்க எடுத்துப் போடும் க்ரோஸன்ட்டை நிமிட நேரத்திற்குள் பலரும் அள்ளிச் சென்றனர். க்ரிஸ்பியான ஹேஷ் ப்ரவுன் பொட்டாட்டோஸ், போரிட்ஜ், மீ கொரிங், நசி கொரிங், சிக்கன் வெரைட்டீஸ், ஸ்பிரிங் ரோல்ஸ், சாசேஜ் என அங்கு உணவுத் திருவிழா நடப்பது போல் இருந்தது.
மறுபுறம் இந்திய உணவான புரோட்டாவை அங்கேயே தயாரித்து கொடுக்கின்றனர். அதற்கு சைட்டிஷ்ஷாக பருப்பு வகைகள் அணிவகுத்திருந்தன. ஆம்லெட் ஸ்டேஷனில் நாம் விரும்பும் விதத்தில் முட்டையைப் பொரித்து கொடுக்கின்றனர். மிக்ஸ் ஆம்லேட், ஃப்ரைட் எக், சன்னி சைட் அப் என ஏகப்பட்ட ரகங்களில் நம் முன் செய்து தந்து அசத்துகின்றனர்.
இன்னொரு புறத்தில் மீ பக்ஸோ என்னும் நூடுல்ஸ் சூப்பை சூடாக செய்து தருகின்றனர். வகை வகையான கனிவர்க்கங்கள், ஸலாட் வகைகள், ஜூஸ், காஃபி, டீ, கயா டோஸ்ட் என அந்த இடமே களை கட்டியிருந்தது. எல்லா உணவுகளும் தரமாகவும், சுவையாகவும் இருந்தன. நான் ஒரு ஹோட்டலியர் என்பதால் மிக கவனமாக ஹோட்டல்களை புக் செய்வேன். எங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் கேட்டு பெறுவேன். ப்ரேக் ஃபாஸ்ட் திருப்திகரமாக இருந்தனால், அங்குள்ள மேனேஜரை அழைத்து பாராட்டினேன்.
பிரேக் ஃபாஸ்ட்டை முடித்துவிட்டு பன்னிரெண்டாவது மாடியிலுள்ள ஸ்விம்மிங் பூல் (நீச்சல் குளம்) ஏரியாவிற்கு வந்தோம்.
அருகிலேயே ஜிம் மற்றும் சோனா (நீராவி குளியல்) அறைகள் இருந்தன. பன்னிரெண்டாவது மாடியிலிருந்து மலாக்காவின் மொத்த அழகையும் ரசிக்க முடிந்தது.
நீச்சல் குளத்தில் மலாய் மற்றும் சீன குழந்தைகள் குதூகலத்தோடு குளித்துக் கொண்டிருந்தனர். நம் ஊர் தோப்புகளில் குளிக்கும் போது நம் வீட்டு குட்டீஸ்கள் செய்யும் அத்தனை சேட்டைகளையும் அவர்கள் செய்து கொண்டிருப்பது ரசிக்கும்படியாக இருந்தது.
எந்திர மயமான கடிகார வாழ்க்கைக்கு பழகிப்போன இந்நாட்டு மழலைகள் இத்தகைய சூழலில் அவர்களின் ஒட்டுமொத்த குசும்புத்தனத்தையும் வெளிப்படுத்துவதை வெகுவாக ரசித்தோம்.
அதன் பின் ரூமுக்கு வந்து ஒரு குளியல் போட்டுவிட்டு ஃப்ரஷ்ஷாகி லன்ச் சாப்பிடச் சென்றாம். வழக்கமான உணவகத்தில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. ஆட்கள் பழகி விட்டதால் ஆடர் செய்ய இலகுவாக இருந்து. அவசரமில்லை என்பதால் நிதானமாக சாப்பிட்டோம். ஞாயிற்றுக்கிழமை ஆதலால் மலாக்காவின் தெருக்கள் யாவும் வெறிச்சோடிப்போய் கிடந்தன. பிரதான சாலைகள் தூய்மையாகவும், விசாலமாகவும் இருந்தது. வெயில் அவ்வளவாக தெரியவில்லை. நிறைய வெள்ளக்காரர்களைப் பார்க்க முடிந்தது. ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நகரம் மலாக்கா என்பதை புரந்து கொண்டோம்.
இனி ஊரை சுற்றிப் பார்க்க வேண்டும். மலாக்காவில் என்னென்ன பார்க்க வேண்டும் எங்கு செல்ல வேண்டும் என்பதை சிங்கப்பூரில் வைத்து முற்கூட்டியே தீர்மானித்திருந்தோம். ரிவர் க்ரூஸ்ஸுக்கு செல்ல வேண்டும். பிரசித்தி பெற்ற மலாக்கா ஆற்றில் படகுப் பயணம். இரு கரைகளிலும் பாரம்பரிய மிக்க பழமை வாய்ந்த பாலங்கள், வண்ண மயமான வீடுகள், என அக்காலத்தில் ஆங்கிலேயர்களின் குடியிருப்பு பகுதியாக திகழ்ந்த இடம். கட்டாயம் போக வேண்டுமென ஏற்கனெவே நாங்கள் முடிவு செய்த இடம். இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் உங்களை அங்கு அழைத்துச் செல்கிறேன்.
தொடரும்..
பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 |