மன இறுக்கத்திலும் கூட உயர் படிப்பினை
அண்ணலாரின் அருமைத் தோழர்களுக்கிடையில் சிலபொழுது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விபரீதங்களும் நிகழவே செய்தன. அதன் சூட்சுமங்களை அல்லாஹ்வே நன்கறிவான். ஒரு முறை அலி (ரலி) அவர்கள் ஆட்சி காலத்தில் நபித்தோழர்களுக்கிடையில் நடந்து முடிந்த ‘ஜமல்’ மோதலுக்குப்பின் (‘ஜமல் போர்’ அல்லது ‘ஜமல் யுத்தம்’ என்ற வார்த்தையே தவறானதும் புனையப்பட்டதுமாகும்) எதிரிப்படை தோல்வியடைந்ததுபற்றி மர்வான் இப்னு ஹகம் கூறும்போது, அலி (ரலி) அவர்கள் அப்போது எங்களது பாதுகாவலராகவே ஆகிவிட்டார். ‘இச்சண்டையில் காயமடைந்த எந்தவொரு நபரையும் கொள்ளக்கூடாது’ என ஆணைப்பிறப்பித்தார். வெற்றியின்போது உயர்பண்பு கொண்ட இவர் போன்றோரை இதற்குமுன் தாம் கண்டதில்லை எனக் கூறுகிறார்.
இதே மோதலுக்குப்பின் தம்மைக் காணவந்த இம்ரான் இப்னு தல்ஹா அவர்களை தம் அருகில் அமரச்செய்த அலி (ரலி) அவர்கள் ‘என்னையும் உமது தந்தையை(தல்ஹாவை)யும் அல்லாஹ் கூறும் வசனமான ‘மேலும் அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதங்களை நாம் நீக்கிவிடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்’ (குர்ஆன் 15:47) என்ற வசனத்திற்கேற்ப இருக்கச்செய்வானாக! என்றார்கள்.’
அண்ணலாருக்கு அருகில் இருந்து பாடம்படித்தவர்கள் போல் பாக்கியம்பெறாத, அலி (ரலி) அவர்கள் அணியில் இருந்த (அடுத்த தலைமுறையினர்களுள்) சிலரை இக்காட்சி முகம்சுளிக்க வைத்தது. அதில் இருவர் ‘நேற்று அவர்களைக் கொள்வார்களாம்; இன்று அவர்களோடு சுவர்க்கத்தில் இருப்பார்களாம்; அல்லாஹ் இதைவிட நீதியாளன்’ எனக்கூறியதைக்கேட்டு ஆத்திரமுற்ற அலி (ரலி) அவர்கள் ‘எழுந்திருங்கள்; இங்கிருந்து வெகுதூரத்திற்குச் சென்றுவிடுங்கள்; நானும் தல்ஹாவும் இவ்வாறு இல்லையெனில் வேறு யார், வேறு யார்தான் இவ்வாறு இருப்பார்கள்’ என அவ்விருவரையும் வன்மையாக கண்டித்து அவ்விடத்தை விட்டும் வெளியேற்றினார்கள்.
இம்மோதலில் தமக்கெதிராக சண்டையிட்டவர்களைக் குறித்து அலி அவர்களிடம் ‘இவர்கள் முஷ்ரிக்குகள்தானே’ என வினவப்பட்டபோது ‘இல்லை; அதைவிட்டும் அவர்கள் வெளியேறிவர்கள்’ என்றார்கள். அப்படியெனில் ‘இவர்கள் முனாஃபிக்குகள்தானே’ எனக்கேட்டதற்கு, ‘முனாஃபிக்குகள் மிக அரிதாகவே இறைவனை நினைப்பார்கள்’ என்றார்கள். அப்படியெனில் ‘இவர்கள் யார்?’ எனக்கேட்க “இவர்கள் ‘நமது சகோதரர்கள்’, ஆனால் நமக்கெதிராக அநீதி இழைத்தவர்கள்” என்றார்கள் அலி (ரலி) அவர்கள்.
இவைபோன்ற சிற்சில விவகாரங்களில் வேறுபட்டு நின்றாலும் விபரீதங்களை சந்தித்தாலும்கூட அல்லாஹ் அவர்களின் இதயங்களில் நிரப்பிய பேரொளி குரோதங்களால் ஜென்மப்பகை கொள்வதை விட்டும் அண்ணலாரின் தோழர்களை தடுத்துக் காத்தது.
முஆவியாவும் அலியும் (ரழியல்லாஹு அன்ஹுமா)
முஆவியா (ரலி) அவர்களுக்கும் அலி (ரலி) அவர்களுக்கும் இடையில் அரசியல் ரீதியான வேறுபாடுகள் கடுமையாக நிலவியிருந்த நிலையில் ஒருநாள் ளிரார் இப்னு தம்ரா கினானீ என்பாரிடம் அலி (ரலி) அவர்களது குணாதிசயத்தைப் பற்றிக்கூறுமாறு முஆவியா (ரலி) அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். ளிரார் அதற்குத் தயங்கியவாறு தட்டிக்கழிக்க எண்ணியபோது முஆவியா (ரலி) அவர்கள் அவரை வற்புறுத்தினார்கள்.
ளிரார் அலி (ரலி) அவர்களின் அறிவு ஞானம், வணக்கம், அடக்ககுணம், மன்னிக்கும் தயாள சிந்தனை, பணிவு, பிறரை உபசரிப்பதில் காட்டும் ஈடுபாடு, உலகின் மீது பற்றற்ற தன்மை, முடிவெடுப்பதில் நேர்த்தி, தீர்ப்பு கூறுவதில் தெளிவான சிந்தனை, உணவில் எளிமை, இரவுதோறும் இறைவனிடம் அழுது மன்றாடும் வாழ்க்கை முறை, பிறருக்கு உதவும் தயாள சிந்தனை, ஏழைகளை அரவணைக்கும் மாண்பு என அனைத்தையும் வர்ணித்ததைக் கேட்ட முஆவியா (ரலி) அவர்கள் தமது தாடி நனையும் அளவிற்கு கண்ணீர்விட்டழ அவரோடு இருந்தவர்களும் கண்ணீர்விட்டழுதார்கள். ஓ ளிராரே! ‘தனது மடியில் பிள்ளையை வைத்திருக்கும் தாயானவள் அவளது கண்முன்னால் அக்குழந்தை கொல்லப்பட்டதால் ஏற்பட்ட துயரத்தால் அவள் கண்களில் இருந்து பீறிட்டுவரும் கண்ணீர் எப்படி வற்றாதோ அதுபோல (அலியின் மீதான) எனது துயரம் உள்ளது’ என்றார்கள்.
தாபிஈன்களிடம் இருந்த உயர்பண்பு
நபித்தோழர்களுக்கு அடுத்து வந்த தாபியீன்கள், தப்வுத் தாபிஈன்களிடமும் கூட ஷரீஆவின் கோட்பாடுகள், சட்டத்திட்டங்களை அணுகுவதில் வேறுபாடுகள் நிலவவே செய்தன. அவர்களும் கூட ஒருவர் பிறரது நிலைப்பாடு குறித்து தீவிரமாக விமர்சித்தபோதிலும் ஒருவர் மீது மற்றவருக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் எள்ளளவுகூட குறையாமல் இருந்தது.
இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களது கூற்றைப் பின்பற்றியவர்களும் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களது கூற்றைப் பின்பற்றியவர்களும் மதீனா வரும்போதெல்லாம் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களது கூற்றின் அடிப்படையில் தொழவைக்கும் இமாம்கள் பின்னால் நின்றுதான் தொழுதார்கள். பிஸ்மில்லாஹ்வை சப்தமாகவோ அல்லது அமைதியாகவோ மொழியாமல் தொழவைப்பவர்களாகவே இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூற்றைப் பின்பற்றுபவர்கள் இருந்தார்கள்.
மூக்கிலிருந்து இரத்தம் வடிந்தாலோ அல்லது (உடலில்) இரத்தம் குத்தி எடுத்தாலோ ஒருவரது ஒளு முறிந்துவிடும் என்ற நிலையுடையவர்களாக இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களிடம் அவ்வாறு நிகழ்ந்தபின் மறுபடியும் ஒளுசெய்யாமல் ஒருவர் தொழவைத்தால் அவரது பின்னால் நின்று தொழலாமா எனக்கேட்டதற்கு எப்படி நான் இமாம் மாலிக் அவர்கள் பின்னாலோ அல்லது சயீத் இப்னு முஸய்யப் அவர்கள் பின்னாலோ நின்று தொழாமல் இருப்பேன் எனக் கேட்டார்கள்.
ஃபஜ்ரில் குனூத் ஓதவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் ஒருநாள் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் அடக்கப்பட்டிருந்த இடத்திற்கருகில் தொழுகையை நிறைவேற்றியபோது ஃபஜ்ருக்கான குனூத்தை அவர்கள் ஓதவில்லை. அதுபற்றி அவர்களிடம் விசாரித்தபோது அவர்களுக்கருகில் நான் இருக்கின்றபோது எப்படி அவர்களின் நிலைப்பாட்டிற்கு மாற்றமாக செய்வேன் எனக்கேட்டார்கள்.
முவத்தாவைப் பரவலாக்கத் தடை
நாற்பது ஆண்டுகால கடின உழைப்பிலும் 70 ஹதீஸ் மாமேதைகளின் மேற்பார்வையிலும் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களால் தொகுக்கப்பட்ட முவத்தா என்ற முதல் ஹதீஸ் கிரந்தத்தைப் பார்த்து ஆச்சரியமுற்ற கலீஃபா அல்-மன்சூர் அதை பல பிரதிகளாக எடுத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எல்லா முஸ்லிம் மாகாணங்களுக்கும் அனுப்பிவைக்க அனுமதிக்குமாறு இமாம் அவர்களிடம் வேண்டினார்.
இமாம் அவர்களோ இஸ்லாம் தமக்கு முன்பாகவே அவ்விடங்களுக்கு குர்ஆன், ஹதீஸைக் கற்ற மாமேதைகள் மூலமாக சென்றடைந்துவிட்டது; அவற்றை ஏற்கனவே பின்பற்றி வருபவர்களுக்கிடையில் புதிதாக ஒரு குழப்பத்தை உண்டாக்க வேண்டாம் எனக்கூறி மறுத்துவிட்டார்கள். இமாமவர்கள், தான், தனது படைப்பு என்ற முகஸ்துதிகளுக்கப்பால் நின்று இறைப்பணியை செய்தார்கள்.
கல்வியை நாம்தான் பிறரைவிட அதிகமாக கற்றுவைத்துள்ளோம் என்ற அகந்தையோ பெருமையோ இறுமாப்போ அண்ணலார் (ஸல்) அவர்கள் காலத்திலும் அதற்குப்பின்னிருந்த அருமை நபித்தோழர்கள் காலத்திலும் மேலும் அதற்குப்பின் தோன்றிய இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர் காலத்திலும் இல்லாமலிருந்தது. அடக்கம், பணிவு, நன்னடத்தை, பிறரைப்பற்றிய உயர்ந்த எண்ணம் எல்லாமே நிறைவாக அக்காலத்தவரிடம் இருந்தன.
பண்பாட்டு வீழ்ச்சி
அதற்குப்பின் தோன்றிய சில அறிஞர்களைப் பற்றி இமாம் அல் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்: கலீஃபாக்களுக்கு பிந்தைய காலத்தில் வாழ்ந்த மார்க்க விற்பன்னர்களுக்கு அன்றைய ஆட்சியாளர்களிடம் இருந்த மதிப்பு, மரியாதை, அந்தஸ்துகளைப்பார்த்து, அக்காலத்தில் வாழ்ந்த சிலர் தமக்கும் அதைப்போன்ற மதிப்பும் அந்தஸ்தும் பொருள்வளமும் வேண்டும் என்ற குறுகிய எண்ணத்துடன் கல்வியை கற்றார்கள். மார்க்க சட்டங்களையும் அதற்காகவே பயின்றார்கள்.
ஆட்சி செய்பவர்களிடம் தங்களை அவர்களே முன்னிலைப்படுத்தி அவர்களது முக்கியத்துவத்திற்கு உரியவர்களாக தம்மை ஆக்கிக்கொண்டார்கள். சிலர் அதில் வெற்றியும்பெற்றார்கள். அரசமதிப்பையும் செல்வாக்கையும் பெற்றார்கள்.
ஒருகாலத்தில் மார்க்கத் தீர்ப்புகளுக்காக அறிஞர்களிடம் சென்றநிலை மாறி அரசவையிலேயே எப்போதும் வீற்றிருந்து அவர்களின் விருப்பு வெறுப்புகளுக் கேற்றவாறு தீர்ப்புகளை வழங்க ஆரம்பித்தார்கள். அல்லாஹ்வால் அருள்பாளிக்கப்பட்டு அரசர்களால் பல்வேறு துன்பங்களுக்குள்ளான இமாம்கள் காலத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக மதிமயங்கி அறிவை பொருளுக்கும் அந்தஸ்துக்கும் பகரமாக்கியவர்கள் மார்க்க மேதைகள் போல் உருவானார்கள் என அக்கால நிலை குறித்து இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
‘எனக்கு ஒன்றும் தெரியாது’ எனக் கூறுவதே ஒருவர் கற்கும் கல்வியில் பாதியாகும் என அபூ தர்தா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
‘எனக்குத் தெரியாது’ என்பதைத்தான் ஒரு ஆலிம் தனது மாணவர்களுக்கு முதலில் கற்றுக்கொடுக்க வேண்டுமென இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் ஆசிரியர்களுள் ஒருவரான இமாம் அப்துர்ரஹ்மான் இப்னு ஹுர்முஸ் (ரஹ்) அவர்கள் பாடத்தின்போது சொன்னதை இமாமவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார்கள்.
ஒருமுறை இமாமவர்களிடம் ஒருவர் ‘ஹதீஸ் மற்றும் சுன்னாவின் கலைகளில் அதிகத் தேர்ச்சியுடையவராக இருகின்றபோது, அவர் அதைக்கொண்டு வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடலாமா?’ என வினவியதற்கு இமாம் அவர்கள் அம்மனிதர் தனது கருத்தை மட்டும் அதற்கான ஆதாரங்களோடு பதிவுசெய்துவிட்டு கருத்துப்பரிமாற்றங்கள் விவாதங்களிலிருந்து ஒதுங்கிக் கொள்வதே சிறந்ததாகும்’ என பதிலளித்தார்கள்.
இஸ்லாமிய மயப்படுத்துவதா அல்லது இஸ்லாத்தை பிற மயப்படுத்துவதா?
கருத்துவேறுபாடுகளை அணுகுவதற்கான நெறிமுறைகள் குறித்த இவ்வாக்கத்தில் நம்சமூகத்தில் இன்று நிலவிவரும் பல பிரிவுகளுக்கும் பிளவுகளுக்கும் காரணாமான பலவற்றை அண்ணலார் காலத்தினதும் அதற்கடுத்த காலத்தினதும் உயரிய உன்னதமான பல இஸ்லாமிய சிந்தனை செயல்பாடுகளை மேற்கோள்காட்டி விளக்கியுள்ளோம். பிளவுகளுக்கும் பிரிவினைகளுக்கும் இஸ்லாத்தில் யாதொரு இடமுமில்லை என்பதையும் வலுவான ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளோம்.
Instead of Islamizing Other Systems the Present Generation is Otherizing Islamic System – அதாவது, மற்ற அமைப்புமுறைகளை இஸ்லாமிய மயமாக்குவதற்குப் பதிலாக இஸ்லாத்தை பிற அமைப்புமுறைகளைக் கொண்டு நோக்குவதால் ஏற்பட்ட வீழ்ச்சியே இன்று முஸ்லிம்கள் ஒன்றுபட முடியாமைக்கு காரணமாக அமைந்துள்ளது.
முஸ்லிம் உலகில்கூட இஸ்லாமை ஒரு முழுமையான விரிவான சித்தாந்தமாக கொண்ட அமைப்புமுறைகள் தற்போது இல்லாமலாகி வருகிறது. திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, பாகப்பிரிவினை மற்றும் வணக்கவழிபாடுகள் சார்ந்த சில அடிப்படையான விஷயங்களைத் தவிர ஏனைய எல்லாவற்றிலும் இஸ்லாம் சாராத அமைப்புமுறையே (System) பின்பற்றப்படுவதால் அதுவே கல்வி, கலாச்சாரம், அரசியல், பொருளாதாரம், ஆட்சியதிகாரம், வெளியுறவுத்துறை முதலானவைகளில் முஸ்லிம் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திவருகிறது.
உதாரணத்திற்கு, முஸ்லிம்கள் வெகுவாக ஆட்படுத்தப்பட்டுள்ள கல்விப்பாடத்திட்டங்கள் இஸ்லாமிய ஆளுமைகளை உருவாக்கும் விதத்தில் இல்லை. அக்காரணத்தால் நம்சமூகம் வாழ்க்கைப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் மதிப்பிடுவதற்கும் இஸ்லாத்தை முகம்நோக்குவதும் இல்லை.
முஸ்லிம் உலகிலும்கூட வெவ்வேறு அமைப்புமுறைகள் கொண்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் படித்து வெளியாகும் பட்டதாரிகள் சில ஆன்மீக அம்சங்களில் மட்டும் இஸ்லாத்தை அணுகிவிட்டு ஏனைய உலகம்சார்ந்த விசயங்களில் இஸ்லாமிய சிந்தனையை முதுகுக்குப் பின்னால் எறிந்துவிட்டார்கள்.
‘அல்லாஹ் இருக்கின்றானா’ என்பதில்கூட தடுமாற்றம் உண்டாகும் நிலையைத்தான் இன்றைய பாடத்திட்டங்கள் உருவாக்கி இருக்கின்றன. முஸ்லிம் சமூகத்திடம் பல்லாண்டுகாலம் பாதுகாக்கப்பட்டுவந்த சித்தாந்த ரீதியான ஒற்றுமைக்கு உலைவைக்கும் பாதகத்தை இக்கல்விமுறை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாத்தை மறுக்கவியலாத ஒருகொள்கைத் தத்துவமாக மட்டும் காட்டிவிட்டு நவீன உலகின் செயல்பாடுகளுக்கும் மற்றும் பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் ஒரு தீர்வாக அமையாது என்பதை நம்சமூகம் இக்கல்வி மூலம் சிந்தனையாகப் பெற்றுள்ளது. இறையியல் சட்டங்களை மேற்குலகு அணுகுவதுபோன்றே முஸ்லிம்களும் இஸ்லாமிய சட்டங்களை அணுகும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
முடிவுரை
இஸ்லாமிய ஆட்சி முறையான ஃகிலாஃபத்தை ஒழித்துவிட்டு மூன்றாவது உலகை பெயருக்கு சுதந்திர நாடுகளாக கூறுபோட்ட ஏகாதிபத்தியம் முஸ்லிம் நாடுகளை சித்தாந்த ரீதியாகவும் கல்வி அடிப்படையிலும் தனது ஆக்கிரமிப்பிலேயே இன்றுவரை அடக்கிவைத்திருக்கிறது. முஸ்லிமான ஒருவருக்கு தான் சார்ந்த கொள்கையின்மீதே அவநம்பிக்கை உண்டாக்கும் வகையில் எதிரிகள் ஐக்கிய நாடுகளின் (UNO) அங்கமான யுனெஸ்கோ (UNESCO) -வின் கல்விக்கொள்கை மூலம் அதை சாத்தியப்படுத்தியுள்ளனர்.
இப்பேராபத்தை உணர்ந்து, இனியும் தாமதிக்காமல், தனது முதலாவது முன்னுரிமையாக இஸ்லாத்தை ஆக்கிக்கொண்டு, துடிப்பானதொரு சித்தாந்தமாக உலகின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பிரச்சனைகளுக்கும் வழிகாட்டவல்லதாக இஸ்லாத்தை நிலைநிறுத்தவேண்டிய பொறுப்புடன் கடமையாற்றுவதற்கு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இதுவே தக்கசமயம் ஆகும். இதை குறைத்து மதிப்பிடாமல் “வாழ்வா சாவா” என்ற பிரச்சனையாக கருதி முனைப்புடன் செயலாற்ற வேண்டும். வேறுபாடுகளில் உடன்பாடு காண்பதற்கான அடிப்படையான தீர்வு இதில்தான் அமைந்துள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்: ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் அவர்களுக்கு நீங்கள் பதிலளியுங்கள்; இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவனது இருதயத்திற்குமிடையேயும் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (குர்ஆன் 8:24)
முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தாக நாம் இருப்பது நாம்பெற்ற உன்னதாமான அந்தஸ்தாகும். இப்பெருமை நம்மை ஒரு ‘ஃகைர உம்மத்’தை உருவாக்கும் பணியில் உற்சாகப்படுத்தவும் ஊக்குவிக்கவும் உணர்வூட்டவும் வேண்டும். “ (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (குர்ஆன் 21:107) ஷரீஆவை முழுமையாக நம்பி அதை நம்வாழ்விலும் நம்குடும்ப வாழ்விலும் முன்மாதிரியாகக் கடைபிடிப்பதைக் கொண்டே நாம் அதை சாத்தியப்படுத்த முடியும். நீதியும் அமைதியும் மிக்க ஓர் உலகு உருவாவதற்கான உயரிய எடுத்துக்காட்டு இதில் மட்டும்தான் உள்ளது.
அல்லாஹு அஃலம்
ஆக்கத்திற்கு உதவியவை:
1. திருக்குர்ஆன், டாக்டர் முஹம்மது ஜான், தமிழாக்கம் http://www.tamililquran.com/
2. The Ethics of Disagreement in Islam, Taha Jabir al Alwani, zulkiflihasan.files.wordpress.com/2008/06/the-ethics-of-disagreement-by-taha-jabir-al-alwani.pdf.
3. Islamization of Knowledge, Second Edition, International Institute of Islamic Thought Herndon, Virginia, U.S.A.
4. Translate, Google, www.google.co.in/search?q=translate
5. Studies in Usul ul Fiqh, Iyad Hilal, www.islamic-truth.co.uk
6. மகாஸிதுஷ் ஷரீஆ, வாட்ஸ்அப் தொடர் வகுப்புகள், அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் நளீமி, இலங்கை.
--முற்றும்-- |