சென்னை பிரஸ்டன் கல்லூரியின் இஸ்லாமியக் கல்வி தமிழ் பிரிவு சார்பாக சென்ற 23-11-2017 அன்று “மார்க்க கருத்து வேறுபாடுகள் சமுதாயப் பிளவுக்கும் பகைமைக்கும் காரணமாகலாமா?” என்ற தலைப்பில் நடைபெற்ற, பல்வேறு கொள்கைகளைச் சார்ந்த உலமாப் பெருமக்கள் மட்டுமே கலந்து கொண்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளில் இக்கட்டுரையும் பங்குபெற்றது. கட்டுரைகள் யாவும் அச்சுப்பிரதியாகவும் புத்தக வடிவில் மேற்படி கல்லூரியால் வெளியிடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
கருத்துவேறுபாடு?
கருத்துவேறுபாடுகள் என்பதே முதலில் தவறான கருத்து. குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மூலாதாரங்களின் கருத்து என்பதில் நாம் எல்லோரும் ஒரே சிந்தனையுடையவர்கள் என்பதால் இதில் வேறுபாடு என்பதற்கு எந்த அவசியமும் இல்லை. ஆனால் அதை அவரவர் விளங்கும் கோணத்தில்தான் வேறுபாடுகள் உள்ளன.
குர்ஆனின் ஒரு வசனத்தை எல்லோரும் ஒரே விதத்தில் புரிந்திருப்பார்களானால் குர்ஆனுக்கு தஃப்ஸீர் என்ற அடிப்படையில் விளக்கங்கள் ஏதும் அவசியமில்லாது போயிருக்கும்.
காருண்ய நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே குர்ஆன் ஹதீஸ் ஆகியவற்றின் கருத்தை புரிந்துகொள்வதில் நபித்தோழர்கள் இடையே வித்தியாசங்கள் இருந்தன. ஆனால் அண்ணலார் (ஸல்) அவர்கள் அதை அவ்வப்போது விளக்கப்படுத்தியதில் அவ்வேறுபாடுகள் அவை எழுமிடத்திலேயே சரிசெய்யப்பட்டன.
இஸ்லாமிய கல்வி மழுங்கிப்போனதோடு மார்க்க அறிவை மட்டும் நாம் பறிகொடுக்கவில்லை. இஸ்லாமிய அடிப்படையில் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் சீர்தூக்கிப்பார்க்கும் திறனையும் இழந்துவிட்டோம். அரபு மொழிக்கென என்ன முக்கியத்துவம் இருக்கிறது; பிற மொழிகளைப்போல் அதுவும் ஒன்று என அதன் முக்கியத்துவத்தை அலட்சியப்படுத்தியதன் காரணத்தாலும் மேலும் ஆங்கிலமொழியின் மீதான மோகத்தின் விளைவாலும் தத்துவார்த்த ரீதியான கருத்துக்களைப் புரிவதில் ஆங்கிலேயர்களின் காலனித்துவ சிந்தனையே முஸ்லிம்களது வாழ்விலும் கோலோச்சி நிற்கிறது.
உதாரணத்திற்கு அரபி மொழியில் உள்ள இரண்டு வார்த்தைகளைப் பார்ப்போம். அரபியில் ஃகிலாஃப் (خلاف) இஃதிலாஃப் (إختلاف) என இரண்டு வார்த்தைகள் உண்டு. இதில் இரண்டாவது வார்த்தையான இஃதிலாஃப் என்பதற்கு வேறுபாடு என அர்த்தமாகும். ஆனால் ஃகிலாஃப் என்பதற்கு முரண்பாடு என அர்த்தமாகும். இஸ்லாத்தின் மூலாதாரங்கள் விஷயத்திலும் ஈமானின் அடிப்படைகளிலும் ஒரு முஸ்லிமுக்கு கருத்து ஒன்றுதான். புரியும் விதத்தில்தான் வேறுபாடுகள் இருக்கும். கருத்தே வேறுபடுமானால் அது முரண்பாடாகி இஸ்லாமிய கொள்கையிலிருந்தே ஒருவரை வெளியேற்றி விடும்.
இஸ்லாத்தில் கருத்து வேறுபாடு என்று ஒன்று இல்லாவிட்டாலும் காலப்போக்கில் முஸ்லிம்கள் அவ்வாறு சிந்தித்ததன் விளைவாக ஒருவரை ஒருவர் காஃபிர், முர்தத், முஷ்ரிக் எனக்கூறும் போக்கை கடைபிடிக்கலானார்கள். இதை வரலாற்று ரீதியில் அணுகிப்பார்த்தால் கலீஃபாக்கள் காலத்திற்குப்பிறகே அது உருவானது என்பதைக் காணமுடிகிறது.
அண்ணலார் (ஸல்) அவர்களது மறைவுக்குப்பின் ஃகலீஃபாக்கள் காலத்தில் இஸ்லாம் அரபு தீபகற்பத்தின் பலபாகங்களுக்கும் பரவியதோடு கடல்கள் கண்டங்கள் தாண்டியும் பரவத்தொடங்கியிருந்தது. காருண்ய நபிகளிடம் பாடம் பயின்ற நபித்தோழர்கள் அன்னாரின் கட்டளைக்கிணங்கி தாம்பெற்றவைகளை பலநூறு மயில்களுக்கப்பால் சென்று பரப்பினார்கள். அப்போது அப்பகுதிகளில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களிடையில் ஏற்பட்ட ஐயங்களுக்கு அண்ணலாரிடம் பயின்ற நபித்தோழர்கள் அவரவர் புரிந்துகொண்ட அடிப்படையிலேயே விளக்கமளிக்க ஆரம்பித்தனர். குர்ஆனின் வசனங்களுக்கும் ஹதீஸின் வாக்கியங்களுக்கும் தாம் புரிந்த அடிப்படையில் அண்ணலார் (ஸல்) அவர்கள் இப்படித்தான் கூறினார்கள்; இப்படித்தான் செய்துகாட்டினார்கள் என விளக்கமளித்தனர்.
இவ்வாறு மக்காவில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் மதீனாவில் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களும் ஈராக்கில் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) அவர்களும் அண்ணலாருக்குப்பின் குர்ஆனுக்கு மிக நெருக்கமான விளக்கங்களை வழங்குபவர்களாக விளங்கினார்கள். இதில் ஒருவரது விளக்கத்தை கேட்டு செயல்பட்டு வரும்நிலையில் இன்னொருவரது விளக்கம் அதற்கும் கூடுதலாக அமையுமானால் அவ்வேறுபாடுகளின் அடிப்படையில் மக்கள் அமல்செய்ய ஆரம்பித்தார்கள்.
மேலும் வேறுபாடுகளின்போது ஒருவர் மற்றவரின் அறிவை மதிப்பதிலோ அவரது கண்ணியத்தை போற்றுவதிலோ எவ்வித குறைவையும் வைக்கவில்லை.
இஸ்லாமியக் கல்வி குறைந்துபோனதால்
டமாஸ்கஸில் வாழ்ந்த யூஹன்னா என்ற ஒரு கிறித்தவர் முஸ்லிம்களிடம் வாதம் புரிந்து வீழ்த்துவதற்கு ஒரு அருமையான வழியுள்ளது என தம் மதத்தவர்களிடம் கூறினார். அதாவது, அல்லாஹ்வின் வார்த்தை (கலிமா – அதாவது குர்ஆன்) ‘நித்தியமானதா’ அல்லது ‘படைக்கப்பட்டதா’ என்பதே அது. ஒருவேளை முஸ்லிம்கள் அதற்குப் பதிலாக குர்ஆன் நித்தியமானது எனக் கூறுவார்களானால் இயேசு கிறிஸ்துவும் நித்தியமானவரே. ஏனென்றால் ‘கலிமதுல்லாஹ்’ என்ற வார்த்தை குர்ஆனில் மூன்று விஷயங்களுக்கு வழங்கப்படுகிறதெனவும் அதில் ஒன்று குர்ஆனைக் குறிக்கவும் மற்றொன்று இயேசுவை குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது எனவும் கூறினார். இதில் முஸ்லிம்கள் குர்ஆன் படைக்கப்பட்டதன்று; அது நித்தியமானது என்பார்களானால் இயேசுவும் நித்தியமானவரே என்றாகிவிடும் எனவும் தனது மதத்தவரிடம் கூறினார்.
முஸ்லிம்களில் ஒரு கூட்டத்தார் இதனால் குழம்பிப் போனவர்களாக குர்ஆன் ‘படைக்கப்பட்டதே’ என வாதிட ஆரம்பித்தனர். இவர்கள் ‘முஃதஸிலாக்கள்’ என அழைக்கப்பட்டார்கள். அன்றைய ஆட்சியாளரான கலீஃபா அல்-மஃமூன் இக்கருத்தாக்கத்தால் கவரப்பட்டார். ஹிஜ்ரி 218 -ம் ஆண்டில் குர்ஆன் படைக்கப்பட்டதே என்றும் யாராவது குர்ஆன் நித்தியமானது (இறக்கியருளப்பட்டது) என்றால் அவருக்கு கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் சட்டமியற்றினார். இதனால் அக்காலத்தில் வாழ்ந்த இமாம்கள் கூட கடும் பாதிப்புகளுக்கு ஆளானார்கள். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் இக்குழப்பத்தால் மிக மோசமாக வதைக்கப்பட்டார்கள்.
மக்களுக்கு உண்மை சென்று சேரவேண்டும் என்பதற்காக பல்வேறு கொடுமைகளைத் தாங்கிய இமாமவர்கள் இதுபோன்ற வாதப்பிரதிவாதங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கிறித்தவர்களிடம் எதிர்வினை புரிவதைத் தவிர இதில் வேறெந்தப் பிரயோசனமுமில்லை என்றும் காருண்ய நபி (ஸல்) அவர்களோ அவர்களது உற்றத்தோழர்களான அபூபக்கர், உமர், உதுமான், அலி (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோரோ இவ்வகையில் வழிகாட்டவில்லை எனவும் எனவே இவ்வாறான அடிப்படைகளில் முஸ்லிம்கள் வீண் விவாதம் புரிவதைவிட அமைதி காப்பதே சாலச்சிறந்தது எனவும் அறிவுறுத்தினார்கள்.
ஆனால் இன்று இதைபோல பல்வேறு விஷயங்களில் வீண் விவாதங்கள் புரிவதாலேயே முஸ்லிம்கள் பல பிரிவுகளாக பிரிந்து எதிரிகளின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஈமானும் பகுத்தறிவும்
முஸ்லிம்கள் தங்களது மனம்போன போக்கிலும் பகுத்தறிவாலும் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை சிந்திக்க முயன்றால் அல்லாஹ், ஆஃகிரா, வானவர்கள், வேதங்கள், முந்தைய நபிமார்கள் குறித்த விஷயங்களில் வெறும் தடுமாற்றங்களும் குழப்பங்களுமே முடிவாக அமையும். முஸ்லிம் பெயர்தாங்கிகளாக, பல உள்நோக்கங்களோடு, அத்தகைய செயல்களில் ஈடுபட்டுவருவோரை இன்றைய காலத்தில் நிதர்சனமாக நாம் கண்டுவருகிறோம்.
இஸ்லாமிய அடிப்படைகளை அவரவர் மனதில் தோன்றுவதையெல்லாம் வைத்துக்கொண்டு பகுத்தறிவால் அணுகுவோரைப்பற்றி இமாம் அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கிறார்கள். ‘மார்க்க மேதைகளின் சில விசித்திரமான கூற்றுக்களை தேடிப்பிடித்து அதைப்போன்றவைகளை வேறுபல மேதைகளிடமிருந்தும் எடுத்து தமது கருத்துகளுக்கு வலுசேர்ப்பவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் ஆவார்கள்’ எனக்கூறுகிறார்கள். ஒரு அறிஞரிடம் நிறைவான கல்வியறிவு உள்ளது போன்றே அவரது கூற்றில் சில பிழைகள் ஏற்படுவதென்பதுவும் தவிர்க்கயியலாததே. ஆகவே அதுபோன்ற பிழையான கூற்றுக்களை ஒன்றுசேர்த்து ஒரு வழிமுறையை உருவாக்குவது எத்தகைய கல்வியாக அமையும் என வினவுகிறார்கள்.
முரண்கள் எழாமல் தடுப்பது
இப்னு ஜரீர் அல்தபரீ (ரஹ்) அவர்கள் தங்களது தஃப்ஸீரில் பின்வருமாறு கூறுகிறார்கள்: இரண்டாம் ஃகலீபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது ஒருமுறை எகிப்தில் இருந்த அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் மக்களில் ஒருசிலர் வந்து குர்ஆனின் போதனைகளை சரியாக பின்பற்றுபவர்கள் இருப்பது போலவே அவற்றை அப்படியே பின்பற்றாமலும் இருக்கிறவர்களைக் குறித்து நாங்கள் அமீருல் முஃமினீன் அவர்களிடம் கேட்கவேண்டும் என முறையிட்டார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு மதீனா சென்ற அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தமது தந்தையிடம் கூறினார்கள்.
அவர்களை தம்மிடம் வந்தமரச்செய்த அமீருல் முஃமினீன் அவர்கள் தமக்கு நெருக்கமாக அமர்ந்திருந்தவரிடம், “குர்ஆனை முழுவதுமாக நீர் படித்துவிட்டீரா? என்பதை அல்லாஹ்வின் மீது ஆணையாகவும் உம்மீது இஸ்லாத்திற்கு உள்ள உரிமைகள் அடிப்படையிலும் கூறும்” எனக் கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் ‘ஆம்’ எனக்கூறினார். மேலும் “எந்தெந்த வசனங்களை ஓதும்போது உம்மைப் பாதித்ததோ, அதனடிப்படையில் நீர் செயல்பட்டீரா” எனக் கேட்டார்கள். அதற்கவர், “அல்லாஹ்வின் மீதாணையாக, இல்லை” என்றார். நீங்கள் படித்த வசனங்கள் அனைத்தின்படியும் தீவிரமாக நீர் நடப்பவரா எனவும், நீர் இங்கு கூறவந்துள்ள விடயத்திலாவது சரியாக நீர் நடந்துள்ளீரா என்றும், உமது ஒவ்வொரு நடையிலும் அப்படிக்கப்படி குர்ஆன்படி நடக்கின்றீரா என்றும் அமீருல் முஃமினீன் அவர்கள் கேள்விக்குமேல் கேள்வியாக கேட்டதற்கு அவர் அனைத்திற்கும் ‘இல்லை’ ‘இல்லை’ என்றே கூறினார். இதே கேள்வியை ஃகலீபா உமர் (ரலி) அவர்கள் அங்கு வந்திருந்த ஒவ்வொருவரிடமும் கேட்டார்கள்.
அவ்வாறு கடைசி மனிதரை அடைந்தபோது ஃகலீபா அவர்கள் கூறினார்கள்: உமரின் தாய் அவரது மகனை இழக்கட்டுமாக! நம்மிடம் எவ்வளவோ குறைகள் இருக்கின்றன என்பதை நமது இரட்சகனும் பரிபாளிக்கின்றவனுமான அல்லாஹ் அறிந்திருந்தும் மக்களிடம் ‘நீங்கள் குர்ஆனை அப்படிக்கப்படி பின்பற்ற வேண்டும்’ என நான் கட்டளையிட வேண்டுமென கூறவந்துள்ளீர்களா என எச்சரித்து, பின்வரும் வசனத்தை ஓதினார்கள். “நீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும்பாவங்களை தவிர்த்துக் கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம்.” (குர்ஆன் 4:31) என்ற வசனமாகும்.
உமர் (ரலி) அவர்கள் தம்மிடம் புகார்கூற வந்ததை எகிப்தில் உள்ள மக்கள் அறிவார்களா எனக்கேட்க அவர்கள் அதற்கு ‘இல்லை’ என பதிலளித்தனர். அவர்கள் மட்டும் உங்களின் வருகைபற்றி அறிந்திருப்பார்களானால் உங்களை அவர்களுக்கு ஒரு பாடமாக்கி இருப்பேன் என கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தார்கள்.
குர்ஆனில் உள்ளவைகள் யாவும் முஸ்லிம் ஒருவர் பின்பற்றுவதற்கான முன்மாதிரிகளும் சட்டதிட்டங்களுமாகும் என்றாலும் அதை அப்படிக்கப்படி கடைபிடிக்காவிட்டாலும் கூட பெரும்பாவங்களை விட்டும் தவிர்ந்திருப்பதால் ஏனையவற்றை அல்லாஹ் தனது பெருங்கருணையால் மன்னிப்பான் என்பதை தமக்குப் பின்னால் வரவிருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் உமர் இப்னுல் ஃகத்தாப் (ரலி) அவர்கள் தமது ஆக்கப்பூர்வமான முன்னுதாரணம் மூலம் வழிகாட்டினார்கள்.
ஆனால் இன்று, எந்த குழப்பத்தை அவர்கள் மனதிற்கொண்டு முளையிலேயே அதைத் தடுத்தார்களோ அதே குழப்பத்தில் நம் சமூகம் உருண்டு புரள்வதை வேறுவழியின்றி நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இஸ்லாத்தின்படி வாழ்வது சாத்தியமற்றதா
இஸ்லாம் குறித்து எழுதுபவர்களில் சிலர் நபித்தோழர்களின் வாழ்வைப்போல் இனி ஒருகாலத்திலும் அமையப்போவதில்லை என்றும் வரலாற்றில் இனி அவ்வாறு நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்பது போலவும் பேசியும் எழுதியும் வருகின்றனர். இது குர்ஆனையும் சுன்னாவையும் குறைத்து மதிப்பிடுவதற்கு ஒப்பானதாகும்.
நபித்தோழர்களை நெறிப்படுத்திய அதே குர்ஆனும் அண்ணலாரின் வழிமுறைகளும் இன்றும் நம்மிடம் இருக்கவே செய்கின்றன. நபித்தோழர்களைப் போல ஒரு சமூகம் உருவாக இன்றும் குன்றின் மேலிட்ட விளக்கைப் போல அவை வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. மேலும் உலகம் அழியும் நாள்வரை அதற்கான வாய்ப்புகளும் வழிகாட்டல்களும் நிலைத்திருக்கவே செய்யும். இனி வாய்ப்பே இல்லை என வரலாறு தெரியாமல் உளறுவது குர்ஆனையும் சுன்னாவையும் அலட்சியப்படுத்துவதற்கொப்பான கொடுஞ்செயல் ஆகும். காலங்களும் சூழல்களும் மாறிவிட்ட நிலையில் இனிமேல் முந்தைய சமூகத்தைப் போல் ஒரு சமூகத்தை கட்டியெழுப்புதல் கடினம் என்பது போன்ற வீண்விவாதம் பின்னால் வரும் சமூகத்தை இறை நிராகரிப்புக்கு கொண்டுசெல்லும் விபரீத செயலாகும்.
நாம் செய்யவேண்டியதெல்லாம் வேறுபாடுகளின்போது நபித்தோழர்களிடம் காணப்பட்ட உன்னதமான பண்புகளைக்கொண்டு ஷரீஆவையும் அதன் சட்டதிட்டங்களையும் அணுகுவதாகும். உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்பது பொருத்தமாக அமையும்.
இஸ்லாமிய ஷரீஆவை நடைமுறைப்படுத்துவதில் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஏராளமான வேறுபாடுகள் இருந்தன. அண்ணலார் (ஸல்) அவர்களது மரணத்தின்போது, ஜகாத் வசூலிப்பதில், பைத்துல்மாலுக்குரிய நிலங்களை மக்களுக்கிடையே பங்கிடுவதில், காப்பாளரின்றி சுற்றித்திரியும் மிருகங்கள் விஷயத்தில் என பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இவ்வாறான நேரத்தில் ஒருவர் மீது மற்றவர் காட்டும் அன்பும் கண்ணியமும் குறையவே இல்லை.
அதுபோன்றே உமர் (ரலி) அவர்களுக்கும் அலி (ரலி) அவர்களுக்கும் மேலும் உமர் (ரலி) அவர்களுக்கும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஷரீஆவின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பல வேறுபாடுகள் இருந்தன. உமர் (ரலி) மற்றும் இப்னு மஸ்வூத் (ரலி) ஆகியோருக்கிடையில் நூற்றுக்கும் மேற்பட்ட விஷயங்களில் வேறுபாடுகள் நிலவின என்பதாக இஃலாமுல் முவக்கியீன் என்ற நூலில் இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஒருமுறை குர்ஆனின் ஒரு வசனத்தை வேறுவிதமாக ஓதிய இருவர் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் அழைத்துவரப்பட்டனர். அதில் ஒருவரிடம் ஏன் அவர் அப்படி ஓதுகிறார் என்பதை அவர்கள் விசாரித்தபோது இவ்வாறுதான் உமர் ஃகத்தாப் (ரலி) அவர்கள் தமக்கு ஓதக்கற்றுத்தந்தார்கள் எனக்கூறியதை இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கேட்டவுடன் அழுதுவிட்டு நீர் உமர் அவர்கள் கற்றுத்தந்தாவாறே ஓதுவீராக; ஏனெனில் உமர் இஸ்லாத்தின் அரணாகத் திகழ்ந்தவர் ஆவார் எனக் கூறினார்கள்.
அதுபோலவே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் ஜைத் இப்னு தாபித் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஷரீஆவின் சட்டதிட்டங்களை அணுகுவதில் காரசாரமாக பல கருத்துப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன. இவற்றிற்கு மத்தியிலும் ஒரு நாள் ஜைத் (ரலி) அவர்கள் ஓர் ஒட்டகையில் வந்தபோது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அதன் மூக்கணாங்கயிறைப் பிடித்துக்கொண்டு மிகுந்த மரியாதையுடன் நடத்திச்சென்றார்கள். அதற்கவர் அண்ணலாரின் சகோதரராகிய அல்லாஹ்வால் அருள்பாலிக்கப்பட்ட தாங்கள் அவ்வாறு செய்யவேண்டாம் எனக்கூறி தடுத்ததற்கு இவ்வாறுதான் எங்களில் உள்ள அறிவுசான்றோர்களுக்கும் பெரியோர்களுக்கும் மரியாதை செலுத்த போதிக்கப்பட்டுள்ளோம் என்றார்கள்.
அதற்கு உடனே ஜைத் (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கரங்களைப்பற்றி வாஞ்சையோடு அதை முத்தமிட்டு இவ்வாறுதான் நாங்கள் அண்ணலாரின் குடும்பத்தவரிடம் அன்பொழுகி நடக்கப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம் என உரைத்தார்கள். பைஹகீயில் வரும் கருத்துப்படி ஜைத் (ரலி) அவர்கள் மரணித்தபோது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மிக்க துயரத்துடன், ‘இவ்வாறுதான் அறிவு விடைபெறும்’; ‘இன்று, அபரிமிதமான அறிவு அடக்கம் செய்யப்பட்டுவிட்டது’ என மொழிந்தார்கள்.
இன்ஷாஅல்லாஹ் தொடரும்... |