முன்னுரை ||
பாகம் 1 ||
பாகம் 2 ||
பாகம் 3 ||
பாகம் 4 ||
பாகம் 5 ||
பாகம் 6 ||
பாகம் 7 ||
பாகம் 8
கிராமங்களுக்கிடையே நடக்கும் மோதல், இன மோதல் என அவர்களுக்கிடையே நடக்கும் வன்முறையில் எதிரி இனத்தின் தலையை வெட்டியெடுத்து ஊரின் நடுவே வைத்து ஆடிப்பாடி உண்டு குடித்து களித்திருக்கின்றனர். மண்டையோடு வெற்றிச்சின்னமாகவும் பார்க்கப்பட்டிருக்கிறது. ஆண்மையின், சமூக அந்தஸ்தின் குறியீடாகவும் பார்க்கப்பட்டிருக்கின்றது.
அப்படி வேட்டையாடப்பட்ட மண்டை ஓடுகள் ஊரின் நடுவே ‘மோருங்’ எனப்படும் நாகா இளைஞர் பாசறையில் சேமிக்கப்பட்டிருக்கின்றது. தற்சமயம் கிறிஸ்தவத்தின் வருகையினாlலும் அரசுகள் நிலைபெறத் தொடங்கியதினாலும், மெல்ல மெல்ல தலைவேட்டை மங்கி மறைந்து விட்டது. இருளையும் பகலையும் போல, பழங்குடி வாழ்க்கையின் இரண்டு பக்கங்கள்.
இயற்கையுடன் இணைந்து வாழுதல், தாவரங்கள், விலங்குகளுடனுனான ஒத்திசைவும் நல்லிணக்கமும் என பழங்குடி வாழ்வில் சமவெளி மனிதர்கள் கற்றுக் கொள்ளவும் பின்பற்றவும் நிறையவே இருக்கின்றன. ஆனால், பிற இன பழங்குடிகளிடம் குருதியைப் பெருக்கும் அவர்களின் பூசலிடும் தன்மையை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமெனில், நீதியும் சனநாயகத்தன்மையும் நிறைந்த வலுவான நிலையான அரசானது பழங்குடியினரை ஆள வேண்டும். ஆனால் இன்றைய இந்திய அரசு இதில் எவ்வளவு தொலைவிற்கு தகுதி பெற்றுள்ளது?
பெயர் தெரியாத கிராமமொன்றில், குடும்பத்தலைவரொருவர் சேவலின் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தார். உயிரின் கடைசி துளிகளுக்குள் அப்பறவை மூழ்கிக் கொண்டிருந்தது.
கோனோமா கிராமத்திலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் ஏராளமான கல்வெட்டு தூண்கள் நிற்கின்றன. இரண்டாம் உலகப் போரின்போது நாகாக்கள் ஜப்பானுக்கு எதிராக போரிட்ட பிரிட்டானியரின் பக்கம் நின்றிருக்கின்றனர். அதன் நினைவாகவும் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
“நாகாக்கள் இந்தியர்கள் கிடையாது. அவர்களின் நிலப்பரப்பானது இந்திய ஒன்றியத்தின் அங்கமில்லை. தனித்துவமான இந்த உண்மையை என்ன விலை கொடுத்தும் எப்போதும் உயர்த்தி பிடிப்போம்” என்ற சொற்றொடர் அடங்கிய கல்வெட்டையும் கண்டோம். இந்திய ஆதிக்கத்திற்கெதிராக போராடி உயிரைத் தந்த ஈகையர்களின் பெயர்கள் கல்வெட்டுக்களிலும் நினைவுத் தூண்களிலும் பொறிக்கப்பட்டுளன.
இவ்வளவு வீரஞ்செறிந்த நாகாலாந்தில் எப்படி 2018 ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க., கூட்டணியாட்சி அமைக்க முடிந்தது?
சனநாயகத்தின் வலுவற்ற பொத்தல் பகுதிகளுக்குள் நுழைந்து, ஒரு நரிக்குரிய தந்திரங்கள் அனைத்தையும் கையாண்டுதான் பா.ஜ.க இங்கு ஆட்சியை அபகரித்திருக்கிறது.
நேரடியாக ஆயுதங்கொண்டும் படைகொண்டும் நடத்தப்படும் ஆக்கிரமிப்பை மட்டும்தான் நாகாக்களால் உணர்ந்தறிந்து எதிர்த்து போராட முடியும் போலும். ஆட்சியதிகாரத்தின் நவீன வடிவங்களையும் விசையோட்டங்களையும் நுணுக்க தளங்களையும் அவற்றின் வலு வலுவின்மைகளையும் புரிந்து கொண்டு, அதற்கேற்ப அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளும் பயிற்சியின்மைதான், பா.ஜ.க வின் நுழைவிற்கு வழி விட்டிருக்கின்றது.
கோனோமா கிராமத்திற்குள் நுழையும்போது முற்பகல் நேரம். வழி கேட்க விசாரிக்க என எதற்கும் வீதிகளில் ஒருத்தருமில்லை. தேவாலயம் பல அடுக்கு படிகளுடன் நெற்றிப்பட்டம் போல நின்றது. அங்கும் யாருமில்லை.
ஒரே ஒரு கடை மட்டும் இருந்தது. கடை உரிமையாளரான நடுத்தர வயது பெண்மணியும் நேப்பாள பணிச் சிறுமி மட்டுமே இருந்தனர். தெளிந்த ஆங்கிலத்தில் பேசினார் உரிமையாளர். முட்டை கேக்கையும், கெட்டிப்பாலில் போட்ட தேனீரையும் அருந்திக் கொண்டிருக்கும்போது, பள்ளி மாணவர் இருவர் வந்தனர். பாலில் குங்குமப்பூ இழையோடுவது போல சிவப்பு கலந்த வெண்மை நிறத்தினர். அவர்கள் அணிந்திருந்தது நீல நிறச்சீருடை. உடலின் நிறமும் உடையின் நிறமும் ஆழ்ந்தழுந்தி ஒன்றையொன்று விட்டுக் கொடுக்காமல் நின்றன. மொத்த வ்டகிழக்குமே வண்ணத் தொட்டிதானே.
கிட்டதட்ட மூவாயிரம் பேர்களுக்கு மேல் வாழும் கோனோமா கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவருமே அங்காமி நாகாக்கள். நாகா இனக் குழுக்களில் அங்காமிகள்தான் பெரும்பான்மையினர்.
கோனோமா மலைக் கிராமத்தில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் குடியிருக்கின்றனர். பெரும்பாலும் தட்டடுக்கு விவசாயம்தான். கருங்குவியலாக மலைகள் மேகத்துடன் மூக்கை உரசியபடி நிற்க பள்ளத்தாக்கில் ஒளி மயங்குகிறது.
முதிய மாதொருவர் முறத்தினால் நெல்லிலிருந்து பதர் நீக்கிக் கொண்டிருந்தார். பொன் மணிகளைப்போல, விரிப்புக்களில் நெல் பரத்தப்பட்டிருந்தது. மொத்த கிராமத்திலேயே பத்து பேர்கள் வரைதான் பார்க்க முடிந்தது. இறைச்சிக்காக வளர்க்கப்படும் பன்றிகளின் உறுமலானது பட்டிகளின் தடுக்குகளிலிருந்து பீறிட்டுக் கொண்டிருந்தன.
மன்னர் கால கற்கோட்டைக் குடியிருப்புக்கள் போல பாறை அடுக்குகளிலான பாதைகளும் சுவர்களும் இருக்கின்றன. வளைந்து வளைந்து செல்லும் பாதையில் கோலம்போல இலைச் சறுகுகள் விழுந்து கிடந்தன. எங்கும் குப்பையைக் காண முடியவில்லை. மொத்த கிராமமுமே ஏற்ற இறக்கமாக இருப்பதால் மறுபக்கம் புலப்படுவதில்லை.
கோனோமாவின் இந்த மாயக்கலவைதான் நமக்குள்ளிருக்கும் நிகழ் காலத்தை முற்றிலும் கலைத்து விட்டு தனக்குள் நம்மை அழைக்கின்றது. ஒரு முடிவிலிக்குள் போய் இறங்கப்போகிறோம் என அறியாப்பரவசத்திற்கு நாம் நம்மை ஒப்புக் கொடுக்காத வரை கோனோமா தன் அந்தரங்க திறப்புகளை செய்வதில்லை.
மேகத்திலிருந்து மலையின் பிடரி வழியாக வழிந்திறங்கும் ஒரு மென் சரடு கோனோமாவின் சந்துகளில் பரவி பள்ளத்தாக்கிற்குள் போய் புதைந்து கொள்கின்றது. மென் சரட்டிற்குள் பொதிந்திருக்கும் வலு விசை நீரோட்டம்தான் கோனோமாவின் ஆன்மா.
கோனோமாவை சுற்றியுள்ள மலையிலும் காட்டிலும் எண்ணற்ற பன்மய உயிரிகளும் மூலிகை, உணவு, இதர பயன்பாட்டுத்தாவரங்களும் செறிந்துள்ளன. இந்தக் கிராமமும் இதன் சுற்று வட்டாரமும் அங்காமி நாகாக்களுக்கு புனிதத் தலம் போல. இவர்களின் சமூக கூட்டுப் பொறுப்பினால் மண்ணும் நிலமும் சேதாரமின்றி நிம்மதியாக நிற்கின்றன. தங்களுக்கான உணவை தாங்களே உண்டுபண்ணிக் கொண்டு மலைத் தூளியில் லயித்திருக்கிறது மொத்த கிராமமும்.
தகரத்தினால் வேயப்பட்ட ஒரு வீட்டிற்கு முன்னால் குட்டித் தறி ஒன்றில் இளம்பெண்ணொருத்தி வண்ண துணிப்பட்டையை நெய்து கொண்டிருந்தாள். தலைக்குட்டை அளவிற்குத்தான் இருந்தது. ஆசையாக ஒன்றை வாங்கலாம் என விலையைக் கேட்டால் ஐநூறு ரூபாய்கள் என்றாள். ஹான்பில் விழா எனப்படும் இருவாச்சி விழாவிற்காக நெய்கிறாளாம். வெளி நாட்டவருக்கானது என்பதை புரிந்து கொண்டோம்.
நாகலாந்தின் பல்வேறு இனக்குழுக்கள் தங்களுக்கான வேளாண்மை, பண்பாடு சார்ந்த திருவிழாக்களை வருடத்தின் பல்வேறு மாதங்களில் கொண்டாடுவார்கள். இனக்குழுக்களிடையேயான நல்லுறவிற்கும் மொத்த நாகலாந்திற்குமான ஒரு பண்பாட்டு பொது பண்டிகையையாகவும் என இருவாச்சி விழாவை உருவாக்கியுள்ளது மாநில அரசு. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1 - 10 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவானது வண்ணமயமாக இருக்குமாம்.
நாகலாந்து மக்களின் உணவு, உடை, பண்பாடு, ஆடல், பாடல், கைவினைத்திறன், மருத்துவம் என அனைத்திற்குமான கண்காட்சி போல இருவாச்சி விழாவைக் கொண்டாடுகின்றனர். நாகாக்களின் பண்பாட்டு பழங்குடி தொல்மரபின் கருவூலங்களை வெளியுலகம் எட்டிப்பார்க்க உதவும் ஒரு பலகணி போல விளங்குகிறது இந்த விழா.
கோனோமா கிராமத்திலிருந்து நேராக நாகா மரபு கிராமத்திற்கு சென்றோம். நாகாக்களின் இன உட்குழுக்கள் பதினாறாகும். இந்த பதினாறு பிரிவினரின் வாழ்க்கை சமூக பண்பாட்டுக் கூறுகளை விளக்கும் வெளிதான் நாகா மரபு கிராமம்.
பதினாறு இன உட்குழுக்களின் பதினாறு வகையான மாதிரி குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே அவர்களின் தெய்வப் பதுமைகளும் மரத்திலிருந்து உருக்கொண்டு நின்றன.
இரண்டு கிராமங்களின் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த மரபு கிராமத்தை உருவாக்கி பராமரித்து வருவது நாகாலந்து அரசு. இந்த வளாகத்திற்குள் இரண்டாம் உலகப்போர் அருங்காட்சியகம், மூங்கில் மரபரங்கு, மூங்கில் மாடம், உணவு முற்றம், சிறார் வெளி, நிகழ்த்து கலைகளுக்கான திறந்த வெளியரங்கு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் போன சமயம் போர் அருங்காட்சியகம் மூடப்பட்டிருந்தது. இவையனைத்தும் டிசம்பர் மாத திருவிழாவில்தான் உயிர் பெறும் போல. இருவாச்சி திருவிழாவிற்கென்றே நாகலாந்திற்கு இன்னொரு முறை வரவேண்டும்.
நாகலாந்தில் பெரும் ஆலைகள் எதுவுமில்லை. இருக்கும் ஆலைகளும் மண்ணையும் மக்களையும் பெரியளவில் பாதிக்காதவை எனலாம். நாகர்களின் வாழ்வாதாரத்தின் பெரும்பகுதி வேளாண்மையிலிருந்து பெறப்படுகின்றது. மீதமுள்ள வாழ்வாதாரமானது நெசவு, மர வேலை, மண்பாண்ட உற்பத்தி போன்ற குடிசைத்தொழில்களிலிருந்தும் காடுகளிலிருந்து பெறப்படும் விளைபொருட்கள், சுற்றுலா வழியாகவும் கிடைக்கின்றது.
அவர்களின் வாழ்வாதாரம் மண் சார்ந்து இருப்பதால்தான் அவர்களுக்கு ஓய்வும் நேரமும் கிடைக்கின்றது. பழங்குடி வாழ்வின் தொடர்ச்சியாக, அவர்களுக்கு கிடைத்துள்ள வண்ணங்களையும் கலைகளையும் கைத்திறன்களையும் தங்களின் அன்றாட வாழ்வின் இழைகளுக்குள் கோர்த்துக் கொள்ள முடிகின்றது.
போன நூற்றாண்டு வரை நடைமுறையிலிருந்த நாகாக்களின் தலை வெட்டும் மூர்க்கமும் படைப்பூக்கமும் எப்படி ஒரே மூளைக்குள் அருகருகே வாசம் செய்தன? கொல்லும் வேட்கையும் கலை உணர்வும் கைகோர்க்கும் இந்த முரணியக்கத்தைப் பற்றி மானுடவியலாளர்கள்தான் விளக்கம் தர வேண்டும்.
எங்கள் பயணத்தின் இறுதிச் சுற்று தொடங்கியது. கோஹிமாவிலிருந்து திமாப்பூருக்கு இரவில் சென்றடைந்தோம். இந்திய பெரு நிலச் சாயலும் மங்கோலியச் சாயலும் கலக்கும் இடம் திமாப்பூர். இது ஒரு சமவெளி.
மறுநாள் காலை அஸ்ஸாமின் புகழ்பெற்ற காஜிரங்கா கானுயிர் புகலரணுக்கு கிளம்பினோம். அஸ்ஸாமின் கர்பி அங்லாங் மாவட்ட எல்லையிலிருக்கும் நாகலாந்து காவல்துறை சாவடியில் உள்ள காவலரொருவரின் கையில் கொத்தாக பணத்தாள்கள் இருந்தன. அனைத்தும் சரக்குந்து ஓட்டுனர்களிடம் கறந்தவை.
நாங்கள் ஏறிய பேருந்து நின்று செல்லாத இடமேயில்லை. அவ்வளவு பேர் ஏறி இறங்கினார்கள். அஸ்ஸாமின் மக்கள் தொகை பெருக்கமானது மலைப்பூட்டும் விதத்தில் உள்ளது. வழியெங்கும் பசுமை இருந்தாலும் ஏனோ அவற்றின் உள்ளுறையாக ஒரு வறுமையும் வறட்சியும் தொனிக்கின்றது.
மதியமளவில் காஜிரங்கா போய் சேர்ந்தோம். புகலரணுக்கு எதிரே இருந்த அஸ்ஸாம் சுற்றுலாத்துறையின் விடுதியில் தங்கினோம். நன்கு பராமரிக்கின்றார்கள். நல்ல உணவும் அங்கேயே கிடைக்கிறது.
2200க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் இங்குள்ளது. 430 சதுர கிலோமீற்றரில் நிற்கும் காஜிரங்கா தேசீய பூங்கா எனப்படும் இந்த புகலரண் பிரிட்டானியரால் தொடங்கப்பட்டது. கிழக்கு இமய மலைத்தொடரின் பன்மய உயிரிகளின் செறிவுத் தலம். இதனுள் காப்புக் காடும் உள்ளது.
திறந்த ஜீப்புகளில் ஏறி உலா செல்ல விடுகின்றார்கள். மூன்று அல்லது நான்கு வண்டிகளுக்கு ஒரு ஆயுத காவலர் என சேர்த்து அனுப்புகின்றார்கள். காரணம் காண்டாமிருகங்களுடன் காட்டு யானைகளும் இருப்பதால் இந்த ஏற்பாடு. காண்டாமிருகங்கள் நாற்சக்கர ஊர்திகளை மோதி புரட்டும் வல்லமை பெற்றவை.
நாங்கள் போன சமயம் புகலரணின் மூன்றில் ஒரு பகுதியைத் தான் பார்க்க முடிந்தது. முந்திய மாதம்தான் அஸ்ஸாமில் வெள்ளத்தின் வெறியாட்டு நிகழ்ந்திருந்தது. அதனால் ஏற்பட்ட நீர் தேக்கமானது புகலரணில் பெரும்பாலான இடங்களில் வடியவில்லை. நுழைவாயிலில் வெள்ளம் நின்ற அளவை சிவப்பு மையினால் குறித்திருந்தார்கள். கிட்டதட்ட நம் கழுத்தளவு வெள்ளம்.
ஏமாற்றமாகத்தான் இருந்தது. வால் கதிரின் பொன் பச்சை மினுங்க காட்டுச் சேவலொன்று மெல்ல நடந்து கொண்டிருந்தது. காட்டாற்றின் தீரத்தில் மணலில் முதுகில் கரு வளையங்களுடன் ஒன்றும் அடியில் இள மஞ்சளும் கரு வளையமும் கூடிய நிறத்திலொன்றுமாக கழுத்தை தூக்கிக் கொண்டு நின்றன பெரும்பல்லிகள்.
யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பதைப் போல நின்றிருந்தன. ஒரு வேளை அவை மீனுணவை விரும்பியிருக்கக் கூடும். சாம்பர் இன மான்கள் பச்சிளம் வெருட்சியுடன் திரிந்தன.
சாம்பலையும் இரும்பையும் பாறையையும் சேர்த்து பிசைந்து கலவையின் பளபளப்பில் கற்சிலை போல நின்றிருந்த ஒற்றை மூக்கன் காண்டாமிருகத்தின் ஒற்றை பிரதிநிதியை மட்டுமே காண முடிந்தது. உடல் உறைந்திருந்த அதன் மனதில் காட்டு நதியின் சலனம் இருந்திருக்கும்.
கானுலா பயணிகளை சுமந்து கொண்டும் தன்வயமாக தொலைவில் திரிந்து கொண்டிருந்தன யானைகள்.
நாங்கள் தங்கிய தனியார் விடுதிக்கருகில் உள்ள தனியார் உணவகத்தில் அஸ்ஸாமிய மாநில கலை நிகழ்ச்சிகள் இரவில் நடைபெற இருப்பதாகவும் அவற்றை தவற விடவேண்டாமென்றும் வலியுறுத்தினார் விடுதியின் காப்பாளர்.
நாங்கள் செல்லுபோது ஒன்றிரண்டு வெள்ளைக்காரர்கள் மட்டுமே இருந்தார்கள். நாட்டாரியல், பழங்குடி, தாந்த்ரீக வகை நடனங்கள், நாட்டாரிசை என இரண்டரை மணி நேரம் கரைந்து போனதே தெரியவில்லை.
தொப்பி, வாள் என அந்தக் கலைஞர்கள் தங்கள் கையில் சுழற்றும் அனைத்துப் பொருட்களிலும் அவர்களுடைய விரல்களின் அனைத்து நளினங்களும் நீட்சி பெற்று மாற்றுக் குறையாமல் துடிக்கும் கலைக்கணம்.
வெட்டுக் கத்தியின் கதியில் இரக்கமின்றி அடித்து விலகும் மூங்கில் கழிகளுக்கிடையே கூரிய தன்னுணர்வுடன் அந்த மங்கைகள் ஆடும் நடனம் அபாரமானது. மூங்கில் நடனமானது நெல் குத்துவதின் கலையாக்கம்தான்.
மூங்கில் நடனம் காணொளியை இவ்விணைப்பில் சொடுக்கிக் காண்க!
நிகழ்ச்சி அதன் உச்சகட்டத்தை எட்டும்போது அரங்கம் நிறைந்திருந்தது. ஒரு கட்டத்தில் பார்வையாளர்களை ஆடல் பாடல்களில் இணைய அழைப்பு விடுத்தார்கள். நண்பர் ஷரஃபுத்தீனும் தனது கனத்த உடலை மெல்ல அசைத்தவாறு அவர்களுடன் மேடையில் நின்றிருந்தார். மெய்யும் மனமும் ஒன்ற வேண்டுமானால் மனிதர் வாயைக் கட்ட வேண்டும்.
நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின்னர் அந்த உணவக வளாகத்திலுள்ள கைவினைக் கடைகளுக்கு சென்றோம். நீதமான விலையில் பொருட்கள் கிடைத்தன. கோரைப்புற்களில் செய்த கைப்பை, தோள்பை, தலைகுட்டைகளை வாங்கினேன்.
மறுநாள் அதிகாலையில் புறப்பட்டு குவாஹத்தி சென்றடைந்தோம். ஏற்கனவே அய்ஸோல் நண்பர் சதீஷ் பரிந்துரைத்த தரமான விடுதியில் இடம் கிடைத்தது. ஏராளமான சட்டதிட்டங்கள். வெளியிலிருந்து பெண் வருகையாளர்கள் அறையில் தங்குபவர்களை சந்திக்க வேண்டுமென்றால் வரவேற்பு கூடத்தில் சந்திக்கலாம். அறையில்தான் சந்திக்க வேண்டுமென்றால் அந்த சமயம் அறைக்கதவை அகல திறந்திருக்க வேண்டும் என்பது அந்த விதிகளுள் ஒன்று. யாரால் என்ன பாடுபட்டார்களோ தெரியவில்லை.
எங்களது விடுதிக்கு அருகாமையிலிருந்து நாய்க் கூட்டத்தின் குலைப்பு மணிக்கணக்கில் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தது. தொடர் குரைப்பின் வழியாக நாய்கள் நம்மிடம் என்ன பேச வருகின்றன? ஒரு வேளை இயற்கை சீற்றத்தை பற்றி எதிர்வு கூறுகின்றனவோ என நான் கூற, ஸுலைமான் விடுதி பணியாளரைக் கூப்பிட்டு விசாரித்தார்.
நாய்களின் எதிர்வு கூறல் உண்மைதான். அவைகள் தங்களின் சொந்த அழிவைப்பற்றிய உளைச்சலில் குரைத்திருக்கின்றன. நாய்கள் கிறிஸ்துமஸ் இறைச்சி விற்பனைக்கானவை என அந்தப் பணியாளர் சொன்னார்.
மறுநாள் அதிகாலையில் சென்னைக்கான தொடர்வண்டியில் ஏறினோம். சில்ச்சரிலிருந்து சென்னை சென்றல் வழியாக திருவனந்தபுரம் செல்லக் கூடிய வண்டி. நியூ அலிபுருதார் நிலையம் வந்தவுடன் சிப்பாய்கள் கும்பலாக ஏறினர். இரண்டே இரண்டு தமிழர்கள்தான் இருந்தனர். ஒருவர் உதகமண்டலத்தைசேர்ந்த படுகர், இன்னொருவர் மதுரைக்காரர். மீதமுள்ள அனைவரும் மலையாளிகள். அண்டை நாடான பூட்டானில் நிலை கொண்டுள்ள இந்திய ராணுவத்தின் படைப்பிரிவில் பணியாற்றுபவர்கள். விடுமுறைக்காக ஊர் செல்கின்றனர்.
இந்திய பூட்டான் அரசுகளுக்கிடையே முன்னர் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி பூட்டானின் அயலுறவு, பாதுகாப்பு துறைகளில் இந்தியா வழிகாட்டும் என்றுள்ளது. அதனடிப்படையில் இந்திய ராணுவம் அங்கு நிலை கொண்டுள்ளதோடு பூட்டானிய ராணுவத்திற்கு பயிற்சியும் அளிக்கின்றது. அங்கு பணி புரியும் சிப்பாய்களுக்கு அவர்கள் இந்தியாவில் வாங்கும் ஊதியத்தைப்போல இரு மடங்கு ஊதியம் அளிக்கப்படுகின்றது.
வெளிப்படையாக சொல்வதானால், சீனா பூட்டானை பிடித்து விடாமலிருக்க இந்தியா பிடித்து வைத்திருக்கிறது. இந்தியாவின் அறிவிக்கப்படாத 37வது மாநிலமாக விளங்குகிறது பூட்டான்.
எங்களின் பக்கத்து இருக்கையில் ராஜூ என்கிற ராணுவ ஓட்டுனர். மலையாளி சிரியன் கிறிஸ்தவர். பிள்ளைகளின் திருமணத்திற்காக ஊர் செல்கிறார். பூட்டானிய அரசின் மக்களின் நற்பண்புகளை சிலாகித்து சொன்ன அவர் எங்களுக்கு பூட்டானின் பணத் தாள்களை அன்பளிப்பாக தந்தார். எனது கைப்பைக்குள் இருக்கும் அந்த பணத்தாளை நான் பார்க்கும்போதெல்லாம் அது பூட்டானுக்கு என்னை அழைத்துக் கொண்டே இருக்கின்றது.
தனது வடகிழக்கிந்திய ராணுவ பட்டறிவை எங்களுடன் பகிர்ந்து கொண்டபோது, நாகலாந்தில் நடந்த வேடிக்கை நிகழ்வொன்றை சொன்னார் ராஜூ.
நாகலாந்திற்கான இந்திய படைப்பிரிவில் வட மாநிலத்தின் பண்டித் வகுப்பைச் சார்ந்த சேர்ந்த சிப்பாய் ஒருவரும் இருந்துள்ளார். அவர் முதல்முறையாக தனது ராணுவ பாடிவீட்டை விட்டு வெளியே வரும்போது, நாகர்கள் நாயொன்றினை இறைச்சிக்காக அறுத்துக் கொண்டிருப்பதை பார்த்து கொந்தளித்து கீழான வசை பாடியிருக்கின்றார். ஆத்திரமடைந்த நாகர்கள் நாயின் குருதியை அவரின் முகமெங்கும் பூசி விட்டனராம். அன்றிலிருந்து அவரின் சிப்பாய் தோழமைகள் அவரை ‘குத்தா (நாய்) பண்டித்” என கூப்பிடத் தொடங்கி விட்டார்கள்.
(முற்றும்)
முன்னுரை ||
பாகம் 1 ||
பாகம் 2 ||
பாகம் 3 ||
பாகம் 4 ||
பாகம் 5 ||
பாகம் 6 ||
பாகம் 7 ||
பாகம் 8
|