மதிய உணைவை முடித்துவிட்டு அங்கிருந்து ஒரு டேக்ஸியில் கடலோரத்தில் உள்ள மஸ்ஜித் ஸலாத்திற்கு சென்றோம். மாலை சூரியனின் தங்க நிற ஔியில் மூழ்கியிருந்த வெண்ணிற பள்ளிவாசலின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மூன்று பக்கம் கடலும், ஒரு பக்கம் நிலமும் சூழ எழில் மயமான தோற்றத்தில் அந்த பள்ளிவாசல் கம்பீரமாக காட்சியளித்தது. அதன் உள் வளாகம் மிக பிரம்மாண்டமாக இருந்தது.
பெண்கள் பகுதிக்கு அஸர் தொழகைக்குச் சென்ற என் மனைவியின் கருப்பு நிற ஃபார்தாவை, வண்ண நிறத்தில் ஃபர்தா அணிந்த மலாய் பெண்கள் வினோதமாக பார்ப்பது புரிந்தது. பள்ளிவாசலின் இடப்புறத்தின் வெளியில் பால்கனியும், கடலும் தெரிந்தது.
இதமான காற்று வீச அலைகளின் இறைச்சலில் அங்கே இளம் வயது பெண்கள் தொழுது கொண்டிருந்தனர். தொழுகையை முடித்து விட்டு அந்த பால்கனிக்கு வரும்படி மனைவியை அழைத்தேன். இயற்கை மூலம் இறைவன் அளித்த மாபெரும் அருட்கொடையை கண்டுகளித்தோம்.
செவ்வானம் கருஞ்சிவப்புடன் சூரியனைக் கவ்விக்கொண்டிருக்க, மெல்ல நட்சத்திர கூட்டமும் தென்பட்டது. பின்னர் சூரியன் முழுமையாக விடைபெறவே, காரிருள் போர்வை போர்த்திக் கொண்டது வானம்.
இப்போது நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரிந்தன. மஃரிப் வேளை நெருங்கியதும் பள்ளி வாசலின் முகப்பு முழுவதும் பச்சை நிற மின்னொளியில் பளபளவென மரகதமணிபோல் ஔிர்ந்தது. கட்டடக்கலையின் உச்சகட்டம் அந்த இறையில்லம். தொழுகைக்கான அழைப்பு முழங்கவே, அங்கு மஃரிப் தொழுகையை ஜமாஅத்தோடு நிறைவேற்றிவிட்டு பிரிய மனமில்லாமல் வெளியேறினோம்.
மஸ்ஜித் சாலாத் ஒரு சுற்றுலாதலம் என்பதால் ஏராளமான வெளிநாட்டினர் வந்திருந்தனர். டேக்ஸிக்காக நாங்கள் காத்திருக்கவே நேரமானதால் பிரதான சாலையை நோக்கி நடந்தோம். அது வெகு தொலைவில் இருந்தது. ஒரு பழக்கடையில் நின்று கொண்டிருந்த தடித்த இளைஞனிடம் இங்கு டேக்ஸி கிடைக்குமா என்று கேட்டோம். அவர் எங்களுக்கு சலாம் சொல்லிவிட்டு இங்கிருந்து சொற்ப டேக்ஸிகள்தான் வரும். சுற்றுலா பயணிகள் போக வர என வாடகைக்கு அமர்த்தி வந்து செல்வதால் டேக்ஸி கிடைப்பது சிரமம் என்றார். நாங்கள் திகைக்கவே, சரி நீ்ங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டார். என்னோடு பணிபுரியும் மலேஷிய பெண் கட்டாயம் மலாக்காில் "ஜங்கர் வாக்" போய் பாருங்கள் என்றதால் அங்கு செல்வதென்று முன்தாகவே முடிவு செய்திருந்தோம். பரவாயில்லை எனது காரில் உங்களை அழைத்துச் செல்கிறேன் என்றார். எவ்வளவு வேண்டும் என்றேன் சற்றும் யோசிக்காமல் பத்து ரிங்கிட் தாருங்கள் என்றார். ஹோட்டலில் இருந்து இங்கு வர இருபது ரிங்கிட் கொடுத்தோம். இனி அதையும் தாண்டி தூரம் போக வேண்டும். இவ்வளவு குறைவாக கேட்கிறாரே என யோசித்தவனாக ஒப்புக்கொண்டேன். அவரது புத்தம் புதிய காரில் ஏறி அமர்ந்து கொண்டோம். காரிலுள்ள ஏஸியை முடுக்கிவிட்டு நகர் நோக்கி விரைந்தார்.
இரவு எட்டு மணி. பத்து நிமிடத்தில் சிட்டிக்குள் வந்தவர் அங்கிருந்து மூலை முடுக்குகளுக்குள் நுழைந்து மீண்டும் மீண்டும் ஒரே இடத்திற்கே சுற்றி வருவதை நாங்கள் உணர்ந்தோம். ஒருவேளை ஜங்கர் வாக்கிற்கு செல்லும் பாதை தெரியாமல் தடுமாறுகின்றாரோ என யோசித்துக் கொண்டிருக்கும் போதே என் மனைவி பின்னால் இருந்து என் தோளை அழுத்தி எச்சரிக்கை செய்தாள். எனக்குள் இலேசாக பயம் கவ்வியது. இருபத்தி ஐந்து நிமிடங்களாகியும் ஏன் இன்னும் இறங்குமிடம் வரவில்லை எனும் சந்தேகத்துடன் கூகுள் மேப்பை ஓப்பன் செய்து இடத்தை தேடினேன். ஐந்து நிமிட நடை தூரம்தான் என அது காட்டியது. எனகுள் இருந்த சந்தேகம் இன்னும் அதிகரித்தது..
ஏன் இப்படி ஊரை சுற்றுகிறார் கேட்டுவிடலாமா என்று நினைத்துக் கொண்டிருந்ததே ஜங்கர் வாக் பிரதான நுழைவு வாசலுக்கு முன்பாக காரை கொண்டு வந்து நிறுத்தினார்.
ஏன் இவ்வளவு தூரம் சுற்றினீர்கள் என தயக்கத்துடன் கேட்டேன். இன்று வார இறுதி நாள் ட்ராஃபிக் அதிகமாக இருக்கும். போலீஸ்காரர்கள் பல பாதைகளை அடைத்துள்ளனர். இதில் ஒருவழிப்பாதை வேறு, வழியில் உங்களை இறக்கிவிட்டால் தடுமாறி விடுவீர்கள். எப்படியாவது உங்களை இந்த நுழைவு வாசலுக்கு முன் கொண்டு வந்து விட வேண்டும் என்பதால்தான் இவ்வளவு நேரம் சுற்றி வந்தேன் என்றார். முகம் மலர்ச்சியுடன் நன்றி கூறி இருபது ரிங்கிட்ஸ்களை கொடுத்தேன். நான் பத்துதானே கேட்டேன் நீங்கள் கூடுதலாக தருகின்றீர்களே என்றார். பாவாயில்லை நீண்ட நேரம் சுற்றி வந்திருக்கிறன்றீர்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று மனமுவந்து கொடுத்துவிட்டு சலாம் சொல்லி விடை பெற்று ஜங்கர் வாக்கிற்குள் நுழைந்தோம்.
ஜங்கர் வாக்என்பது சீனர்களின் நைட் மார்கட். நீளமாள ஒரு தெரு, அதன் நடுவிலும் இரு புறங்களிலும் நூற்றுக்கணக்கான குட்டிக்குட்டி கடைகள் இருந்தன. உள்ளே நுழைந்ததும் நமது குற்றால சீஸன் கடைகள்தான் நினவைுக்கு வந்தது. ஏராளமான பொருட்கள், கூட்ட நெரிசல் வேறு, வித விதமான உணவுகள், வண்ண மயமான ஐஸ்கிரீம்கள், கைவினைப் பொருட்கள், சட்டி பொட்டி என அகல சகல சாமான்களையும் விற்பனைக்கு வைத்திருந்தனர்.
இவ்வளவு இருந்தும் ஹலால் உணவைத் தேடி அலைய வேண்டியதாயிற்று.
தெருவின் ஒரு பகுதியில் போடப்பட்டிருந்த பெரிய மேடையில் இசை கச்சேரி நடந்து கொண்டிருந்து. சீன மொழி என்பதால் புரியவில்லை.
ஒரு வழியாக ஹலால் உணவுக்கடையை தேடிப் பிடித்து அங்கு துரியான் க்ரேப் வாங்கி வாங்கி சாப்பிட்டோம். வேறு எதுவும் வாங்குவதற்கில்லை. மலாய்களின் நைட் மார்கட் போல் இல்லையே எனும் ஏமாற்றம். பின்னர் அங்கிருந்து கிளம்பி எங்கள் ஹோட்டலுக்கு அருகிலிருக்கும் ஸ்ட்ரீட் ஃபுட் கடைக்கு டின்னர் சாப்பிட வந்துவிட்டோம்.
சுற்றுலாவின் முதலாவது நாள் முடிவுற்ற நிலையில். இனிநாளை என்ன செய்யலாம் என யோசித்தோம். பயண அலுப்பு, ஜன்கர் வாக்கில் நீண்ட நேரம் நடந்த கால் உளைச்சல் வேறு, எனவே படுத்ததும் உறங்கிவிட்டோம்.
தொடரும்...
|