மணிப்பூர்-மியான்மர் எல்லையிலுள்ள மோரே கிராமத்திற்கு செல்ல வேண்டுமானால் காலையிலேயே கிளம்ப வேண்டும். இருட்டிய பிறகு, எந்த வண்டிகளையும் இந்திய ஆயுத படைகள் விடுவதில்லை. எனவே, காலையிலேயே கிளம்பினோம். வண்டிக்குள் பழங்குடியினப் பாடல்கள் ஒலித்தன. நவீனமும் தொன்மையும் பிணைந்த இசையிழையானது, வண்டிக்குள் இருந்த இட நெரிசலை மறக்கச் செய்தது.
35 கிலோ மீற்றர்கள் தொலைவு பயணத்திற்கு மூன்றரை மணி நேரம் எடுத்தது. தேனீருக்காக ஓரிடத்தில் வண்டி நின்றது. அந்த சிற்றூரில் கடை வீதி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, சாலையோரத்தில் மும்முரமாக இளைஞர்கள் சூதாடிக் கொண்டிருந்தனர். பகடைக்காய்களும் நார் கூடையுமாய் உருண்டுக் கொண்டிருந்தது அவர்களின் உலகம்.
இம்பால் பள்ளத்தாக்கு மெய்த்தீகளால் நிறைந்தது என்றால், சந்தால் டினோபால் மாவட்டங்கள் தொடங்கி மோரே வரை குக்கீ இனக்குழுக்களின் பிராந்தியமாகும்.
மெய்த்தீகளுக்கு பெங்காலி, பிஹாரி, நாகா, குக்கீகளை ஆகாது. 1990 களில் ஹிந்து & முஸ்லிம் மெய்த்தீகளிடையே மோதல் நடந்துள்ளது. குக்கீ நாகாக்களுக்கு இடையேயும் முரண்கள் நீடிக்கின்றன. நாகாலிம், குக்கீலாந்து கோரிக்கைகளும் அவ்வப்போது ஒலிக்கின்றன.
மணிப்பூரின் பெரும்பான்மையினரான மெய்த்தீகள், இன்னர் லைன் பெர்மிட் எனப்படும் உள்ளக நுழைவு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்கின்றனர். அதோடு தங்களுக்கு அட்டவணை ஆதிவாசி அந்தஸ்தையும் கோருகின்றனர். இதை மற்ற இனக்குழுக்கள் எதிர்க்கின்றன.
மெய்த்தீ, குக்கீ, நாகா இனக்குழுக்களும் ஆயுத படைகளை வைத்துள்ளன. மோதல், உரையாடல் என இரண்டு வழிமுறைகளோடு மூன்றாவது ஒரு வழிமுறையினூடாக இங்குள்ள இன ரீதியான ஆயுத குழுக்களை இந்திய ஆயுத படை கையாள்கின்றது. இன ஆயுதக்குழுக்களிடையே உள்ள முரண்களை தீவிரப்படுத்துவதற்காக, சில இன ஆயுதக் குழுக்களை ராணுவமே செல்லப்பிள்ளையாக ஊட்டி வளர்க்கின்றது.
எங்களுடன் மணிப்பூர் காவல்துறையின் உளவுப்பிரிவின் அலுவலர் ஒருவரும் பயணித்தார். அவர் மணிப்பூரின் சமூக நிலவரங்களை தற்போதைய கனபரிமாணங்களுடன் வரைந்து காட்டினார்.
எல்லா பக்கங்களிலுமிருந்தும் உமிழப்படும் வன்முறையால் மானுடத்திற்கு தேவையான வளர்ச்சி தடைப்படுவதுடன், மணிப்பூரின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படுகின்றது. வன்முறைகளில் மக்கள் சலிப்படைந்துள்ளனர். முன்னர் உள்ள அளவிற்கு இந்திய எதிர்ப்பு மணிப்பூரில் தற்சமயம் இல்லை.
எனினும், அனைத்து இனக்குழுவினரின் மனதிலும் ‘பிறர்’ மீதான ஒவ்வாமை நீடிக்கவே செய்கின்றது. மணிப்பூரானது தற்காலிக அமைதியைக் கொண்டிருக்கும் எரிமலையின் வாயில். ஒன்றை ஒன்று தீய்க்க காத்திருக்கும் நெருப்பு இருள்.
மோரேவின் உள்சந்துகளுக்குள் வண்டி நுழைந்தது. மியான்மரிகள் சட்டைக்கு மேல் லுங்கியை கட்டியிருந்தார்கள். அடர் பச்சை சிவப்பு மஞ்சள் நிறங்களிலான லுங்கிகளுக்கு மேலாக நீள்வட்ட முகங்கள்.
தெருவின் ஒரு முனையில் முழுமையான தமிழ் அழகுடன் அங்காள பரமேஸ்வரி முனீஸ்வரர் கோயில் நின்றிருந்தது. வடபழனியின் தெருக்களுக்குள் நடப்பது போலிருந்தது. தமிழக முஸ்லிம்கள் உள்ளூர் மக்களுடன் இணைந்து நடத்தும் பள்ளிவாசலும் இருக்கின்றது.
பர்மா சிவப்பு எனப்படும் மாணிக்கம் இந்த பகுதி வழியாகத்தான் ஒரு காலத்தில் நாடெங்கும் சென்றிருக்கின்றது. இன்று அது பேங்காக் சென்று அங்கிருந்து உலகம் முழுக்க செல்கின்றது. மற்றெந்த வணிகத்தைப்போலவே மாணிக்கமும் ஆதாயத்தின் ஊடகம்தான். ஆனாலும் மக்களுக்கோ அது நற்பலன், விடுதலை, நிவாரணம் போன்ற நன்னம்பிக்கைகளை சுமக்கும் தீராச்சுரப்பி.
அண்ட வெளிகளுக்குள் சுழன்றாடும் கோளங்களின் கதிர்வீச்சு பார்வையை சமன் செய்யும் வல்லமை அந்த மாணிக்க பரலுக்குள் பொதியப்பட்டிருக்கின்றது என்ற மாறா எண்ணம்தான் அதன் மீதான மௌசை பெருக்கிக் கொண்டே செல்கின்றது.
ஒட்டுப்பலகைகளிலான சதுரப்பேழைகளைப்போல அங்குள்ள கடைகள் இருந்தன. வடகிழக்கின் பொது விதியாக அந்த கடைகள் மரக்கடைக்கால்களில் நின்றிருந்தன. மழைக்காலம் அப்போதுதான் ஓய்ந்திருக்கின்றது. பால் முட்டும் மடி போல தட்டுப்பலகையின் கீழே நிலத்தடி நீர் ததும்பியது. நாங்கள் தங்கியதும் கடையொன்றில்தான். அவர்கள் தமிழகத்திலிருந்து இங்கு லுங்கிகளை தருவித்து விற்கின்றார்கள்.
கடந்த நாற்பது வருடங்களில் உருவானதுதான் மோரேவின் சந்தை. தமிழகத்தின் சேதுபதிச் சீமையை சேர்ந்த செட்டியார்களும் முஸ்லிம்களும்தான் இந்த சந்தையின் அடித்தளக் கற்கள். இன்று மார்வாடி, சீக்கியர், பிஹாரி, நேப்பாளிகளும் வணிகம் புரிகின்றனர். இங்கு தங்கி வணிகம் புரிந்த தமிழர்களுக்கு பிறந்த தலைமுறையினருக்கு தமிழை பேச மட்டுமே தெரிகின்றது. ஹிந்தி பர்மிய மொழிகளின் தாக்கத்தின் விளைவாக அவர்களின் உச்சரிப்பில் ஒரு முடிவற்ற தன்மையும் வளைவும் இருக்கிறது.
இங்குள்ள ஒவ்வொரு வணிகரும் நான்கைந்து செல்பேசி செறிவட்டைகள் வைத்திருக்கின்றனர். எந்த நிறுவனத்து அலைவரிசை எப்போது வேலை செய்யும்? எப்போது முடங்கும்? மின்சாரமும், நீரும் எப்போது வரும்? நிற்கும்? என்பதெல்லாம் விண்ணுலக பொருட்களின் மிதந்தலைதல் போல யாராலும் தீர்மானிக்கவியலாத ஒன்று. இந்த மாதிரியான நெருக்கடியான காலங்களில் மழை நீர் சேகரமும் மியான்மர் எல்லையிலிருந்து கிடைக்கும் உணவுப்பொருட்களும்தான் மோரே மக்களை பட்டினியின்றி பிழைத்திருக்கச் செய்கின்றன.
உள்கட்டமைப்புகள் சீர்குலைந்து கிடக்கின்றன. இன ரீதியான ஆயுதக்குழுக்கள், ராணுவம், ராணுவத்தின் கைக்கூலி ஆயுத குழுக்கள், மாநில அரசு, தேவாலயத்தின் மறையரசு என பல்வேறு முனைகளில் குரங்கு பிய்த்த அப்பம் போல மோரே சிதறுண்டு கிடக்கின்றது. மியான்மர் எல்லைக்குள் மெய்த்தீ ஆயுதக்குழுக்கள் தளம் அமைத்து செயல்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸின் முழு நேர பிரச்சாரக்குகளும் இங்கு தங்கி பணி புரிவதாக சொன்னார்கள். மியான்மரை ஒட்டுப்பசை மூலம் இந்தியாவுடன் தைத்து எளிதாக அகண்ட பாரதத்தை வரைந்து கொள்ளலாம் என்ற நப்பாசைதான் ஆர்.எஸ்.எஸின் பரப்புரையாளர்களை எல்லையில் உட்கார வைத்திருக்கிறது.
இந்த வெறுப்பு பேராளர்கள் இந்தியாவின் எல்லா முட்டு மூலைகளிலும் போய் ஒட்டிக் கொண்டு, காவி இருளை பரப்பி விடுகின்றனர்.
அண்மையில் நடந்து முடிந்த திரிபுரா, மேகாலயா, நாகலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில், இவர்கள் ஆட்சி அமைத்த மாதிரியை பார்க்கும்போது இவர்களின் பணி எவ்வளவு தீவிரமானது என்பதை புரிந்து கொள்ளவியலும்.
எல்லா ஆயுதக் குழுக்களும் வணிகர்களிடமிருந்து கப்பம் பெறுகின்றன. எல்லைச்சாவடியில் உள்ள பாதுகாப்பு படையினர், சுங்கத்துறையினரும் பணம் பெறுகின்றனர். எல்லையை கடக்கும் சரக்குகளை அடையாளங்கண்டு தனியே கமுக்கமாக பட்டியல் போடுகின்றனர். மியான்மர் பகுதியில் பட்டியல் பகிரங்கமாகவே போடப்படுகின்றது. ஒவ்வொறு பொதிக்கும் ஒவ்வொரு வகையான தொகை. போதைப்பொருள் கடத்தலும் எவ்வித தங்கு தடையுமின்றி நடப்பதாக சொன்னார்கள். உரியதைக் கொடுத்தால் நவீன ரக ஆயுதங்களையும் கூட சொந்தமாக்கிக் கொள்ள இயலுமாம்.
கப்பத் தொகை, கையூட்டு பணத்தை இருளுலக கனவான்கள் நேரடியாகவெல்லாம் வந்து பெறுவதில்லை. அதற்கென மறைமுக வினியோக வலையமைப்பு இருக்கின்றது. சறுக்கு தொட்டியில் விழுந்து வழுக்கிச் செல்வது போல உரிய கரங்களுக்கு சிந்தாமல் சிதறாமல் கையூட்டு போய் சேர்ந்து விடும்.
ஒரு வீட்டில் தங்கினோம். இரவில் யார் கதவை தட்டினாலும் என்ன கூப்பாடு போட்டாலும் மறந்தும் கதவை திறந்து விடாதீர்கள் என்று அறிவுறுத்தினார் எங்களின் உபசரிப்பாளர்.
அச்சம், காட்டிக்கொடுத்தல், வதந்தி போன்றவற்றிற்குள் மோரே மூழ்கிக் கிடக்கிறது. கைகள், கழுத்து என கிடைக்குமிடங்களில் போதை ஊசியேற்றும் இளைஞர் கூட்டம், தங்கு தடையற்ற பாலியல் துய்ப்பு, சூதாட்டம் என இவை மூன்றும்தான் மோரேயின் முன்னர் உள்ள கேளிக்கை வாய்ப்பு. பகலிலும் இருளுக்குள் வாழும் ஊர்.
சென்னையில் உள்ள எனது வணிக நண்பர், 1975களில் மோரேவை விட்டு விட்டு தமிழகம் திரும்பியவர். அவர் சொல்வார், ‘அன்றும் இன்றும் மோரே பாதாள உலக ஊர்தான்’.
அதிகாலை தொழுகையை நிறைவேற்றி விட்டு மியான்மர் எல்லை வரை ஒரு நடை போனோம். மியான்மரின் அந்த பக்கம் தமு என்கிற ஊர். இதுவும் சின் பிராந்தியம்தான். காலை ஐந்து மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை எல்லை வாயிலை திறக்கின்றனர். இது போக திறந்து கிடக்கும் எல்லை வழிகள் ஏராளம்.
தேனீர் கடையில் மைதாவில் செய்த பஜ்ஜி போன்ற எண்ணைப் பலகாரம் ஒன்றை தந்தார்கள். மீண்டும் நடையைத் தொடர்ந்தோம். கொஞ்சம் தொலைவில் இரும்பிலான இந்திய மியான்மர் நட்புறவுப்பாலம் நின்றிருந்தது.
இந்த நட்புறவுப்பாலத்தையும் மியான்மரின் கலிமியோ கலேவா வரை நீளும் 160 கிலோ மீற்றர் தொலைவுள்ள சாலையையும் இந்திய ராணுவத்தின் எல்லை சாலை அமைப்பு என்ற நிறுவனம் நமது வரிப்பணத்தில் அமைத்துள்ளது.
தொடர்மழை, நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை இடர்கள், மாயத்தோற்றம் போன்று அவ்வப்போது தோன்றி மறையும் அரசின் நிலையற்ற இருப்பு போன்ற காரணங்களினால், தாய்லாந்து மியான்மர் எல்லையான மேசோத் வரை செல்லக்கூடிய 1,360 கிமீ நீளமுள்ள இந்த சாலையின் பணிகள் சுணங்கிக் கிடக்கின்றன. இந்திய மியான்மர் அரசுகளுக்கிடையே 2002 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட சாலை இது.
இந்த சாலைப் பணிகள் நிறைவடைந்தால் இந்தியாவிலிருந்து தரை வழியாக வியட்நாம் வரை செல்வதற்கான வழிகளும் திறக்கும். அத்துடன் வடகிழக்கு பிராந்தியமும் தனது வேர்களுடன் தங்கு தடையற்ற தொடர்பாடலை நடத்தவும்; கல்வி, வேலை வாய்ப்பு வணிகம் போன்றவற்றுடன் மானுடம் பெருகவும் வழி பிறக்கும்.
இரும்பு பாலத்தின் பாதி வரை மஞ்சள் வண்ணம் பூசியிருந்தனர். அது வரை இந்திய எல்லையாம். பாலத்தின் கீழே சாம்பல் நிறத்தில் நதியின் நீரானது பாறைகளில் முட்டி மோதி மஞ்சள் வண்ணத்தையும் கடந்து கொண்டிருந்தது. மியான்மருக்குள்ளிருந்து வலது பக்கமாக வந்த இரு சக்கர ஊர்தி நமது எல்லைக்குள் நுழைந்தவுடன் இடது பக்கமாக செல்லத் தொடங்கியது.
இந்திய அரசு மனது வைத்தால் மோரேயானது தென் கிழக்காசியாவிற்கான தரைவழி நுழைவாயிலாக பரிணமிக்கும்.
குளித்து விட்டு மியான்மர் உலாவிற்காக ஆயத்தமானோம். மியான்மர் எல்லைச்சாவடியில் முறையாக நமது அடையாள அட்டையை பதிந்த பின்னர் வாங்கி வைத்துக் கொண்டு நுழைவுச்சீட்டு தந்தார்கள்.
காவலர்கள், மரப்பசையை முகத்தில் தீற்றியிருந்த இளம் பெண்கள், யாசிக்கும் சிறு வயது புத்த துறவிகள், சரக்கு மூட்டைகள், காய்கறி பழங்களின் நெடி, சிறிய இரைச்சல், கொஞ்சம் வெயில் என தமுவின் நஃப்லாங் சந்தை உயிர்ப்புடனிருந்தது.
இந்த சந்தையில் குவிக்கப்பட்டிருப்பது அத்தனையும் போலிப்பொருட்கள் அல்லது தரங்குறைந்த சீனப்பொருட்கள். இங்குள்ள ஞெகிழி பொருட்களை அள்ளிக் கட்டிக் கொண்டு இம்பாலுக்கும் மோரேவிற்கும் இடையே வண்டிகள் பறந்த வண்ணமுள்ளன. தமு சந்தையில் கிடைக்கும் தரமான பொருட்கள் என்றால் மீனும் முட்டையும்தான்.
நஃப்லாங் அங்காடியில் உணவகத்திற்கு கூட்டிச் சென்றனர். வெள்ளை நாடா புழுவைப்போல கிண்ணத்திற்குள் வளைய வளையமாக இருந்தது அத்தோ என்கிற பேர் பெற்ற மியான்மரிய உணவு. சென்னை மண்ணடியின் தலைமை அஞ்சலகம் அருகில் அந்த தள்ளு வண்டி நிற்கும். இரவு நேரங்களில் பெற்றோமாக்ஸின் மஞ்சள் பச்சை கலந்த ஆவி வெளிச்சத்தில் விற்கும் அத்தோவை வருடக்கணக்கில் வேடிக்கை பார்த்துள்ளேன். சாப்பிட்ட நினைவில்லை.
காலையில் தேனீருடன் சேர்த்து அருந்திய மைதா பஜ்ஜி செரிமானமாகாமல் வயிறுக்குள்ளேயே கிடக்க, மைதாவிலான அத்தோவை மிகவும் வற்புறுத்தலின் பேரில் சாப்பிட வேண்டி வந்தது. பெரும் உணவு வதை. மியான்மரிகளின் உணவில் பெரும்பாலும் மைதா சேர்மானம்தான். இந்த பசைக்களியை தின்று எப்படி காலந்தள்ளுகின்றார்கள்?
பக்கத்து பலகையில் கறுஞ்சிவப்பாடையில் குட்டி பௌத்த துறவிகள் முக முறுவலுடன் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். தலை முளைத்த ரோஜா மலரைப்போல இருந்தனர். பௌத்த துறவிகள் தங்களின் அன்றாட உணவை யாசித்து பெற வேண்டும் என்ற நடைமுறைக்கேற்ப இவர்களுக்கான உணவை உணவக உரிமையாளர் கொடையாக அளித்தார்.
ஒரு ஆட்டோவில் ஏறி தமு நகரை உலா வந்தோம். சாலையோர மஸ்ஜிதிற்குள் சென்றோம். முற்பகல் நேரமென்பதால் பணியாளரைத்தவிர யாருமில்லை. அமைதி இறுகிக் கிடந்தது. கிறிஸ்தவ தேவாலயங்களின் மீது விதிக்கப்பட்ட அதே தடைகள்தான் பள்ளிவாசலுக்கும். புதுப்பிக்கவோ விரிவாக்கம் செய்யவோ புதிய பள்ளிவாசலைக் கட்டவோ விடுவதில்லை.
தமுவின் வீதிகள் தூய்மையாக இருந்தன.
அகலமும் நீளமும் உள்ள சரக்குந்துகள் ஓடிக் கொண்டிருந்தன. நமது நாட்டு சரக்குந்தை விட வலுவானவை. ஆஃப்ரிக்க யானையை பார்த்தது போலிருந்தது. சீனத்து வண்டிகள்.
தெருக்கள் தூய்மையாக இருந்தன. ஆள் நடமாட்டம் குறைவு. மியான்மரில் தற்சமயம் ஜனநாயக அரசு இருந்தாலும், அரசு அலுவலர்கள் பழைய ராணுவ ஆட்சி மன நிலையிலிருந்து வெளிவரவில்லை. குடிமையுரிமை, மனித உரிமைகளுக்கெல்லாம் பெரியதாக அங்கு இடமில்லை. முறைப்பாடுகளுக்கும் ஜனநாயக வழி போராட்டங்களுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை.
எல்லாப்பக்கமும் பூசி மெழுகி முத்திரையிடப்பட்ட கட்டிடம் போன்றுள்ளது மியான்மர்.
மறுநாள் காலை இம்பால் வழியாக நாகலாந்து தலைநகர் கோஹிமாவிற்கு புறப்பட்டோம். போகிற வழியில் அரச ஆயுத படைகளும், இன ஆயுத குழுக்களும் வண்டிகளை நிறுத்தி சோதித்தும், கப்பம் வாங்கிய பின்னரே பயணத்தை தொடர விட்டனர். கோஹிமா போய் சேரும்போது மாலை ஆறு மணியாகி விட்டிருந்தது. சாலைகளில் மக்கள் நடமாட்டமும் ஊர்திகளின் நடமாட்டமும் வெகுவாக குறைந்து காணப்பட்டன.
நாங்கள் போய் சேர்ந்த இடம் சற்று ஒதுங்கிய பகுதி. எனவே விடுதிகளுக்காக அலைய வேண்டி இருந்தது. நண்பர்கள் விடுதியை தேடிச் செல்ல நான் நடைபாதையோரத்தில் சுமைகளுக்கு காவலிருந்தேன். போதையில் முன்னும் பின்னும் பக்கவாட்டிலுமாக லேசான தள்ளாட்டத்துடன் இரண்டு மூன்று இளைஞர்கள் வந்தார்கள். வெள்ளுடை அணிந்த வெண் முகங்கள். நீங்கள் எங்கிருந்து? என ஆங்கிலத்தில் கேட்டார்கள்.
கொஞ்ச நேரத்தில், ‘மன்னித்துக் கொள்ளுங்கள் நாங்கள் மதுவருந்தியிருக்கின்றோம். தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ எனக் கூறி விட்டு, அருகிலுள்ள வெற்றிலை பாக்கு கடைக்கு சென்று வம்பிழுத்தனர். ஆனால் அதுவும் மென்மையான ஒரு பின்வாங்கலோடு முடிந்தது.
நான் நின்றிருந்த இடத்திற்கு பக்கத்தில் அடுமனை ஒன்றிருந்தது. மரக்கறி உணவு கிடைப்பதற்கான உத்திரவாதமில்லாதபடியால் ரொட்டி, பிஸ்கோத், பழக்கூழ், பழங்களை வாங்கிக் கொண்டேன். கடைக்காரர் கேரளத்து கிறிஸ்தவர். கோஹிமாவில் கேரளீயர் ஒருவரின் விடுதியும் இருப்பதாக சொன்னார்.
அருகிலுள்ள சராசரிக்கும் கீழான ஒரு விடுதியில்தான் இடங்கிடைத்தது. அஸ்ஸாமிய முஸ்லிம் இளைஞரின் உதவியால்தான் அதுவும் கிடைத்தது. அவர் கோஹிமாவில் மின்சாதன கடை வைத்துள்ளார். கடையை சாத்தி விட்டு வீட்டுக்கு செல்வதற்காக காத்திருந்தவர், எங்களுக்காக கிட்டதட்ட ஒரு மணி நேரம் அலைந்தார்.
குளிர் கூடுதலாகவே இருந்தது. விடுதியிலேயே பிரெட், ஆம்லெட், தேநீர் கிடைத்தது. மலை மாநிலமான நாகலாந்தின் தெற்கே மணிப்பூரும் வடக்கே அஸ்ஸாமின் ஒரு பகுதியும் அருணாச்சல் பிரதேஷூம் கிழக்கே மியான்மரும் அமைந்துள்ளன.
முதலில் மியான்மருக்கு கீழிருந்த நாகலாந்து பின்னர் பிரிட்டனின் ஆட்சியின் கீழும் இருந்தது. அஸ்ஸாமின் ஒரு பகுதியாக இருந்த நாகலாந்து பின்னர் நடுவண் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக ஆனது. 1963 ஆம் ஆண்டு இந்தியாவின் பதினாறாவது தனி மாநிலமாக இணைந்தது.
கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாக கொண்ட மாநிலம் நாகலாந்து. வடகிழக்கு மாநிங்லகளில் நாகாக்கள் எங்கெல்லாம் வசிக்கின்றனரோ, அந்த பிராந்தியங்களையெல்லாம் தற்போதைய நாகலாந்துடன் ஒருங்கிணைக்க வேண்டும் என நாகாக்கள் ஆயுத கிளர்ச்சி செய்தனர். 2000ஆம் ஆண்டு இந்திய நடுவணரசுடன் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி, தற்சமயம் அமைதி நிலவுகின்றது.
மறுநாள் காலை ஒரு அஸ்ஸாமிய உணவகத்தில் மஞ்சளின் தாக்கம் தூக்கலாக உள்ள பசியாறை முடித்தோம். சாலைகளில் திறந்த ராணுவ வண்டிகளில் தானியங்கி துப்பாக்கிகளை பொருத்திக் கொண்டு கறுப்பு கண்ணாடியணிந்த இந்திய சிப்பாய்கள் ரோந்து வருகின்றனர்.
துப்பாக்கியை அழுக்கு படிந்த கயிறு கொண்டு வண்டியுடன் வலுவாக பிணைத்திருந்தனர். குடிமக்களின் நடுவே ஆயுத பெருமைக்கூத்து எதற்கென்று தெரியவில்லை. நீங்கள் எங்களுடன் இல்லை என்பதை மக்கள் மறக்காமல் இருப்பதற்கான ஏற்பாடாக இருக்கும்.
நாகாலாந்து அரசு அருங்காட்சியகத்திற்கு சென்றோம். நாகா மக்களின் உடை, இசைக் கருவிகள், மூங்கில், மரம், ரத்தினம் எருமைக் கொம்பினால் செய்த செய்த அணிகலன்கள், நாகா முன்னோடிகளின் நினைவுப்பொருட்கள் என காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பல்வேறு வண்ணக் குஞ்சலங்களைக்கொண்ட வெட்டுக்கத்திகள், அம்புகள், ஈட்டிகள் வழியாக, மூர்க்கமானது தன்னை மிக நேர்த்தியாக அலங்கரித்து நின்றது.
எனினும் நாகா இனத்தின் தோற்றங்குறித்த ஆவணம் எதுவும் தென்படவில்லை. நாகர்கள் திபெத்தோ சீன இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் வேர் நிலம் மங்கோலியா எனவும் சில ஐரோப்பியக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆதியில் நாகர்கள் ஹிந்து, கிறிஸ்தவம் பௌத்தம் உள்ளிட்ட எந்த பெரு மதங்களையும் சேர்ந்தவர்கள் இல்லை. அடிப்படையில் நாகர்கள் ஆவி வழிபாட்டுக்காரர்கள். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கு வந்த கிறிஸ்தவ பரப்புரையாளர்களினால்தான் நாகலாந்தின் 96% கிறிஸ்தவமயமானது.
நாகர்களின் தொல் வழிபாட்டு முறைகளை சுட்டிக் காட்டி அதுவும் ஹிந்து ஞான மரபில் உள்ளதுதான் என்ற கோரிக்கையுடன் அவர்களை ஹிந்துக்களாக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். தனது பணிகளை முடுக்கியுள்ளது.
தற்சமயம் அதன் அரசியலணியான பா.ஜ.க.வானது நாகலாந்தில் முதன்முறையாக கூட்டணியாட்சி அமைத்திருப்பதால், நாகலாந்தின் சமூக பண்பாட்டு இன வாழ்க்கையின் அடுக்குகளுக்குள் ஆழமாக தனது வெறுப்பு நச்சை உமிழ்ந்து செலுத்தும். இனி நாகாக்களின் வாழ்க்கை உருளியானது எதிர் திசையில் சுழற்றப்படும்.
நாங்கள் போன சமயம் கோஹிமாவைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் தங்களது ஆசிரியையுடன் வந்திருந்தனர். ஆசிரியையும் குழந்தைகளும் பனியில் குழைத்த மாவில் செய்தது போலதொரு வெண்மை.
ஒளிப்படத்திற்காக கேட்டபோது தங்கள் முகங்காட்டினார்கள். இப்பொழுது அவர்கள் வெண்மையில் இளஞ்சிவப்பு கலந்த ரோஜாப்பூவைப்போல இருந்தனர். மனிதப்பூக்களும் தாவரப்பூக்களும் கலந்து தோன்றிய அந்த அபூர்வ கணம் எனது கேமிராவிற்குள் சரியாக பதிவாகவில்லை.
மலர்க்கணங்கள் கருவிகளுக்குள் தங்குவதில்லை போலும்.
இன்றைய நாகா இனத்தினர், நவீன சமூகத்திற்குள் அமைதியாக வாழ்ந்த போதிலும், ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வரை மனித வேட்டை சமூகமாகவே இருந்திருக்கின்றனர். அதன் சாட்சியாக வேட்டையாடப்பட்ட மனிதனின் மண்டை ஓடுகள், அருங்காட்சியகத்திற்குள் காட்சிக்கு இருந்தன.
(இறுதிப் பாகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பகுதி வெளியிடப்பட்டுள்ளது... எஞ்சிய பகுதி விரைவில், இன்ஷா அல்லாஹ்….)
முன்னுரை || பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 ||
பாகம் 7 |