கடந்த சில தினங்களாக எங்கு பார்த்தாலும் ஐ.பி.எல் தொடக்க விழா மற்றும் கிரிக்கெட் போட்டிகளை பற்றிதான். கிரிக்கெட் மற்றும் சினிமா மீதுள்ள நமது அளவு கடந்த மோகத்தை (Craziness) மூலதனமாக்கி… இசை நிகழ்ச்சி, நடிகைகளின் நடனங்கள் என்று சினித் துறைக்கே உரித்தான கவர்ச்சி மசாலாக்காளுடன் ஆபாசத்தின் (?) உச்சக்கட்டத்தை விளையாட்டு போட்டிகளின் வாயிலாக கடை விரித்த பெருமையுடன் சினிமாவும் கிரிக்கெட்டும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதனை சொல்லாமல் சொல்லி... இவைகளனைத்தும் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை இடியாப்ப சிக்கலில் இருக்கும் ஐ.பி.எல் - லை மேலும் கமர்ஷியலாக ஆக்குவதற்கான தில்லாலங்காடி வேலைகள்.
அமெரிக்காவின் National Basketball Association (NBA) க்கு அடுத்து அதிக சம்பளத்தை வாரி வழங்குவது ஐபிஎல் லீக் தான். ‘லலித் மோடி (?)’ யின் வியாபார உத்தியில் புதிய பரிணாமம் பெற்று, ஏற்கனவே குடி கொண்டிருக்கும் தேசிய மற்றும் மத வெறி போதாதென்று இப்பொழுது பிராந்திய வெறியையும் இணைத்து IPL என்ற பெயரில் மே27 ஆம் தேதி வரை கிரிக்கெட் ரசிகர்களை பைத்தியமாக்கி தொழுகை, சோறு தண்ணியில்லாமல் டிவி முன்னே மண்டையை பிய்த்துக் கொள்ள வைக்க போகிறார்கள்.
அணி ஏலங்கள் குறைந்தது 1500 கோடிகள், வீரர்களுக்கான ஒப்பந்தம் பல லட்சங்கள் முதல் சில கோடிகள் வரை. கிங் ஃபிஷர் மல்லையாவிற்கு, தன் விமான கம்பெனி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வழி இருக்கிறதோ இல்லையோ ஆனால் பெங்களுரு அணிக்கு மட்டும் கோடி கோடியா கொட்ட முடிகின்றது. இவைகளனைத்தையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ (விளம்பரங்கள்) அப்பாவி மக்களை உறிஞ்சி அதன் மூலம் ஐபிஎல் நிர்வாகமமும், பணக்கார முதலைகளும், வியாபார சந்தையில் ஏலத்திற்க்கு எடுக்கப்பட்ட நம்முடைய அபிமான வீரர்களும் சம்பாதிக்க நடத்தப்படுவதுதான் இந்த சீசன் கிரிக்கெட். வர்த்தக மதிபில் 25,000 கோடிகளை (?) கொண்ட தனியார் ஐ.பி.எல் - னால் அரசுக்கோ அல்லது சாதாரண மக்களுக்கோ எந்த விதத்திலும் பலன் இல்லை.
ஒட்டுமொத்த தமிழகமே பலமணி நேரங்கள் இருளில் இருந்தாலும் சென்னையில் நடக்கும் பகல்/இரவு போட்டிகளுக்கு மட்டும் மின்சாரம் தட்டுப்பாடில்லாமல் வாரி வழங்கப்படும். இவர்களைப் பகைத்துக் கொண்டால் உடனே வேறு இடத்திற்கு / நாட்டிக்கு (தென் ஆப்ரிகாவிற்க்கு?) போகின்றோம் என்று மிரட்டுவார்கள். பத்தாம் வகுப்பு பரிட்ச்சை தொடங்கிய அன்றுதான் இந்த ஐபிஎல் - லும் தொடங்கியுள்ளது. படிப்பில் பெண்களை விட பின்தங்கியிருக்கும் நம்ம பசங்களின் கவனம் / படிப்பு இதனால் சிதறி விடாமல் மாணவர்களும் பெற்றவர்களும் மிகக் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது.
12 ஆண்டுகள் படித்து ப்ளஸ் 2 தேர்வும் எழுதி முடித்து, இதோ தன் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை (கல்லூரி படிப்பை)ப் பற்றி கவலைப்பட வேண்டிய நம் மாணவ சமுதாயத்தில் பெரும்பாலானவர்களின் இன்றைய மிக முக்கிய கவலையும் ஐபிஎல் பற்றியதுதாகவே உள்ளது. மாடர்ன் காலத்து மகளீர் கூட இன்று கிரிகெட்டில் மூழ்கி கிடக்கிறார்கள்.
மார்க்கப் பிரச்சார அல்லது ஏதாவது பொது நல நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றால் அத்தினத்தன்று ஏதாவது முக்கியமான கிரிக்கெட் மேட்ச் உள்ளதா என்று பார்க்க வேண்டிய அவல நிலை உள்ளது... ஏனென்றால் நமது மகா ஜனம் சும்மாவே இது போன்ற நிகழ்ச்சிக்கு வருகை தர மாட்டார்கள். அதுவும் கிரிக்கெட் நடக்கிறதென்றால் சொல்லவே தேவையில்லை. ஜும்மா பயான் மற்றும் ஊரில் நடக்கும் மார்க்க / பொது நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் நமக்கு நேரம் கிடைக்காது. அப்படியே வந்தாலும் காலில் வெண்ணித் தண்ணியை ஊற்றிக் கொண்டு எப்படா முடியாதென்று அவசரப் படுவோம். ஏனென்றால் நாமெல்லாம் பிஸி... ஆனால் குறைந்தது ஐந்து மணிநேரம் முதல் ஐந்து நாட்கள் வரை நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை கண் கொட்டாமல் கண்டு ரசிக்க சிறியவர் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் நேரம் இருக்கிறது.
16 ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில் தோன்றிய கிரிக்கெட்டால் அங்குள்ளவர்கள் பைத்தியமாக இல்லை ஆனால் ஹாக்கியை தேசிய விளையாட்டாகக் கொண்ட நாமும்/ பாகிஸ்தானும் (அது போல கபடியை வங்கதேசமும் கைப்பந்தை இலங்கையும்) ஏதோ கிரிக்கெட்டில் தான் தமது தேசபக்தி / மதப்பற்று அடங்கியுள்ளது போல எண்ணி, சிறப்புத் தொழுகை / வணக்க வழிபாடுகளை நடத்தி, விடிய விடிய 'டிவி' யில் மேட்ச் பார்த்து, உழைப்பை வீணடித்த படி அலுவலக நேரத்தில் கணினியிலும், வேலைக்கு / பள்ளிக்கூடத்திற்கு மட்டம் போட்டு... மது போதையை விட மோசமான இக்கிரிக்கெட்டுக்கு அடிமை/ வெறியர்களாகி, பொன்னான நேரத்தை /வாழ்க்கையை இழந்தவர்கள், மார்க்க வணக்க வழிபாடுகளை (இறைவணக்கத்தை) தொலைத்தவர்கள் அல்லது தொலைத்துக் கொடிருப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்???
”(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வேடிக்கை / வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச்சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது…” என கூறுவீராக! (அல் குர்ஆன் 62:11)
ஒரு காலத்தில் 'அசார் மாமா’ (மேட்ச் பிக்சிங் வரை) என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடி யாவர்களும் உண்டு . நமதூரை சார்ந்த என்னுடைய நண்பன் இன்று வரை பாகிஸ்தான் அணி மீது அப்படி ஒரு வெறி. காரணம் முஸ்லீம்கள்… முஸ்லிம் நாடு என்பான். இஸ்லாத்திற்க்கும் கிரிக்கெட்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா... அல்லது குறைந்தபட்சம் ஒரு முஸ்லிமுக்கான குணாதிசயங்கள் / ஒழுக்கங்களில் எத்தனை அம்சங்கள் அந்த ‘so called’ முஸ்லிம் வீரர்களிடம் உள்ளது. இது போன்ற பாசத்தை ஒரு கைப்பிடி சோறு கூட கிடைக்காமல் அனுதினமும் செத்து மடிந்து கொண்டிருக்கும் சோமாலிய மக்கள் மீது காண்பியுங்கள். கிரிக்கெட்டை வெறும் விளையாட்டாக மட்டும் பாருங்கள்!!
முந்தைய காலங்களில் விளையாட்டு என்பது சமூகம் வீரம் தழுவியதாக, அனைவரின் வாழ்விலும் இரண்டறக் கலந்து வாழ்க்கைத் தேவைகளுக்கான உழைப்பில்தான் அந்தந்த விளையாட்டுகள் தோன்றி வளர்ந்தன. ஆனால் கிரிக்கெட் இன்று ‘வெறும் வியாபாரப் பொருளாக' மாறி பல வழிகளில் பணம் புகுந்து, அரசியல் வாதிகள், பெரும் பணமுதலைகள், பன்னாட்டு விளம்பர கம்பெனிகளின் கைகளில் சிக்கி… முழுக்க முழுக்க பணத்துக்காகவும், விளம்பரங்களுக்காகவும், இதுவும் மற்ற விளையாட்டுகளைப் போல ஒரு விளையாட்டாக மக்களைக் கருத விடாமல் அவர்களின் விளையாட்டு 'உணர்ச்சியை' மற்றும் வீரர்கள் மேல் உள்ள 'கண்மூடித்தனமான பாசத்தை' காசாக்குவதே இவர்களின் ஒரே குறிக்கோள்!!
தங்களது சுய முன்னேற்றம் மற்றும் வருமானத்திற்காக எந்த விளம்பரமாக (மதுபானம் மற்றும் பன்னாட்டு பெப்சி கோக்) இருந்தாலும் நமது கிரிக்கெட்வீரர்கள் தான். இதன் மூலம் பல கோடிகளில் புரண்டாலும் ஓசியில் பரிசாக பெரும் வெளிநாட்டு கார்க்கு இறக்குமதி வரியைக் கூட அரசுக்கு செலுத்தாமல் அதற்க்கு வரிவிலக்கு கேட்பவர்கள். கிரிக்கெட்டில் மார்கெட் போய்விட்டால் நடுவராக, வர்ணனையாளராக, கோச், போர்டு மெம்பெர் அல்லது அரசியல்வாதியாக பல பரிணாமங்கள் எடுத்து எல்லா வகையிலும் ஆதாயம் தேடும் இவர்களுக்கு... சமூக சேவை செய்தவர்களுக்காக தரப்படும் நாட்டின் மிக உயர்ந்த விருதை வழங்கி கௌரவிப்பதில் நாம் அலாதி இன்பம் அடைகின்றோம்.
தனக்கு மிகப் பெரிய விளம்பரமோ / வருமானமோ இல்லாவிட்டாலும் கூட, ஒலிம்பிக்கில் அல்லது ஏதாவது சர்வதேச போட்டியில் நமது நாட்டிக்கு ஒரு தங்கம் / வெள்ளிப் பதக்கத்தை வென்று வருவதற்க்காக உயிரை கையில் பிடித்து கொண்டு போராடுகின்றானே அவனை விட தன்னுடைய சுய முன்னேற்றம், பெயருக்கும், புகழுக்கும், பணத்திற்குமாக விளையாடும் பெரும்பாலான நமது கிரிக்கட் வீரர்கள் எந்த அளவில் உயர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. கிரிக்கெட்டுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் நாம் கொடுக்கும் ஊக்கம் - உற்சாகத்திலும், அது போல நமது அரசு கொடுக்கும் சலுகைகளிலும், உதவிகளிளும் மிகக் குறைந்தபட்சம் ஒரு பத்து சதவீதமாவது மற்ற விளையாட்டுத் துறைகளுக்கு / வீரர்களுக்கும் கொடுத்திருந்தால்… கிரிக்கெட் மட்டும்தான் விளையாட்டு என்ற மாயை நீங்கி மற்ற விளையாட்டுகளும் நமது நாட்டில் தழைத்து ஓங்கிருக்கும்.
"ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா கூடிவிளையாடு பாப்பா" என்றான் பாரதி. விளையாட்டு என்பது நமது உடல் திறன்களை திடமாக்கிக் கொள்ளவும், வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை அதிகரிக்கவும் ஒவ்வொருவர் வாழ்விலும் எப்பருவத்திலும் இன்றியமையாத ஒன்று என்பதிலோ அல்லது அதை 'அளவாக' பார்த்து மகிழ்வு அடைவதில்லோ எவ்வித மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அது நம்முடைய படிப்பையும், பிழைப்பையும், மார்க்க வழிபாட்டையும், வல்ல இறைவன் நமக்கு வழங்கியிருக்கும் பொன்னான நேரத்தையும் கேள்விக் குறியாக்கி விடாமல்... கிரிக்கெட்டை (மற்ற விளையாட்டுகளைப் போன்று) வெறும் விளையாட்டாக அதை விளையாடுபவர்களை வெறும் விளையாட்டு வீரர்களாக மட்டும் எண்ணுவோமேயானால் இது போன்ற கிரிக்கெட் மாயை ஒழிக்கப்பட்டு அதிகார வர்க்கத்தின் சுரண்டல்கள் ஒரு முடிவுக்கு வரும்!!
மனதை மாற்றிக்கொள்ள வேண்டியது நாம்தானே...??? |