| |
ஆக்கம் எண் (ID #) 28 | | | செவ்வாய், ஏப்ரல் 10, 2012 | | ஒலிபெருக்கியின் - ஒலி மாசு! (பாகம்-2) சமூக பார்வையாளர்
|
| இந்த பக்கம் 2449 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய | |
அன்பான வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
என்னுடைய கட்டுரைகளை கொள்கை ரீதியாக சிந்திக்காமல் , பொதுவான சிந்தனையோடு படித்து, பார்த்து - எந்த கொள்கையையும், பகுதியையும் குறிப்பிடாமல் மேலான தங்களுடைய சொந்தக் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள். - கட்டுரை ஆசிரியர்.
|
ஒலி பெருக்கியின் பெருக்கத்தால் அதன் உச்சநிலை சத்தத்தால் " ஒலி மாசு " அடைந்து இருக்கிறது - அதனால் மக்கள் பெரும்பாலும் துன்புறுகின்றனர். ஒலிபெருக்கியின் அதிகமான சத்தத்தால் வயோதிகர்களும், குழந்தைகளும், நோயாளிகளும் , அவதியுறுகின்றனர். பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களும், பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருப்பவர்களும் இதன் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். பரீட்சைக்காக படிக்கும் மாணவர்களுக்கும் இது இடையூறே.
அதிக சத்தத்தினால் கிட்னி பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது - அதுமட்டுமல்ல தாயின் வயிற்றில் உள்ள கருவையும் அது பாதிக்கிறதாம். அமைதியில்லாமல் அதிக சத்தம் , இரைச்சல் உள்ள பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு மற்றும் குறைப் பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்று ஜப்பானிய மருத்துவ ஆராய்ச்சியில் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
அதிக ஒலிகளை நம் காதுகள் கேட்டு, கேட்டு செவிப்பறை ( EAR DRUM ) கேட்கும் திறனை இழந்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர் இயற்கையான கேட்கும் திறனை இழந்து வருகின்றனர். முன்பெல்லாம் காது சரியாக கேட்காதவர்கள், காதில் ஒலி கேட்கும் ( EAR PHONE ) கருவியை பொருத்தி இருப்பார்கள் - அவர்கள் காதில் பொருத்தி இருக்கும் கருவியிலிருந்து பாக்கெட்டில் வைத்திருக்கும் பேட்டரி பாக்ஸ் வரை ஒரு மெல்லிய வயர் போகும் - காதிலிருந்து போகும் வயரை பார்த்தாலே மக்கள் தெரிந்துக் கொள்வார்கள் இவருக்கு காது கேட்கும் தன்மை குறைவு என்று. அன்று நம்ம ஊரில் இந்த மாதிரி கருவிகள் பொருத்திக் கொண்டவர்கள் மிகச்சிலரே, விரல் விட்டு எண்ணிவிட முடியும்.
ஆனால் இன்று நம் ஊரில் காதில் கருவி பொருத்தி இருப்பவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கிறது - ஆனால் இது யாருக்கும் வெளிப்படையாக தெரிவதில்லை காரணம் காதில் பொருத்தப்பட்டிருக்கும் கருவிக்கு வயர் இல்லை, ஏனென்றால் இன்றைய விஞ்ஞான உலகில் லேட்டஸ்ட் டெக்னாலஜியாக காதின் உட்புறமே மிகச் சிறிய கருவியை பொருத்தி இருப்பதுதான். ஆகையால் இன்று காது கேளாதவர்களை உடனே அடையாளம் காண முடிவதில்லையே தவிர, காது கேளாதவர்களின் எண்ணிக்கை மிகுதமாக கூடி இருக்கிறது என்பது உண்மை.
இதற்கு மிகுதியான காரணம் அதிக ஒலியுடன் கூடிய ஒலிபெருக்கியின் தாக்கமே. புகை வண்டி நிலையத்திலும், அதிகமாக பஸ்கள் வந்து,
செல்லக்கூடிய பெரிய, பெரிய பஸ் ஸ்டாண்டுகளிலும் வேலை செய்பவர்களுக்கு வாகன ஒலிப்பான்களின் மிகுந்த சத்தத்தின் காரணமாகவும் மற்றும் வாகனங்களின் இரைச்சலின் காரணமாகவும் பாதிப்புகள் இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இருந்த போதிலும் அவைகள் விட்டு, விட்டு சில நொடிகளே ஒலிக்கக்கூடியவையாக உள்ளன. மேலும் அந்த பாதிப்பு நம்ம ஊரைச்சார்ந்த மக்களுக்கு அதிகமாக இல்லை எனலாம். எனவே ஒலிபெருக்கியின், அளவுக்கு அதிகமான ஒலி தொடர்ந்து பல மணி நேரங்கள் ஒழிப்பதே இந்த பாதிப்புக்கு காரணமாக அமைகிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
இந்த கட்டுரை ஒலிபெருக்கிகள் வைப்பதற்கு எதிர்ப்பு அல்ல, ஆனால் வரைமுறையுடன் முறையாக வைத்திட வேண்டும். இன்றைய மாசு படிந்த சுற்றுச்சூழலில் ஒலிபெருக்கி இல்லாமல் எந்த பேச்சும் எடுபடாது 15 , 20 நபர்கள் கூடியிருந்து விசாலமான ஓர் அறையில் கலந்துரையாடுவது என்றால் கூட அங்கே ஒரு ஸ்பீக்கரும், மைக்கும் தேவைப்படுகிறது - அந்தளவுக்கு ஒலி ' மாசு ' ஏற்பட்டிருக்கிறது.
ஆகையால் எந்த ஒரு விழாவுக்கும் அதிலும் குறிப்பாக மார்க்க உபநியாசம் நடைபெறுவதற்கு நிச்சயமாக ஒலிபெருக்கி அவசியம் தேவை, அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஊர், உலகத்து மக்கள் மார்க்கத்தை விட்டு தூரமாகி கொண்டிருக்கிற இந்த காலத்தில் மார்க்க உபநியாசங்கள் என்றென்றும் அவசியம் சொல்லப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் அபோதுதான் மக்கள் ஓரளவு மார்க்க தொடர்புடனே இருப்பார்கள் - அதற்கு ஒலிபெருக்கியின் அவசியம் தவிர்க்க முடியாதது.
ஆரம்பத்தில் 4 ஸ்பீக்கரில் தொடங்கியது இன்று 40 ஸ்பீக்கர்களுக்கு குறைவில்லாமல் 4 திசைகளையும் நோக்கி பொருத்தி வைத்து அதிகமான சத்தத்துடன் இயக்குகிறார்கள் அப்படியிருந்தும் பெரும்பாலான இடங்களில் தெளிவாக கேட்பது இல்லை. விழா நடத்துபவர்களும், உபநியாசம் செய்யும் அறிஞர்களும் " மக்கள் நல்ல விசயங்களை கேட்டு தெளிவு பெறவேண்டும் " என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்த ஏற்பாடுகளை செய்கிறார்கள். ஆனால் மக்களுக்கு தெளிவு கிடைப்பதற்கு பதிலாக இடையூறே ஏற்படுகிறது ஒலி " மாசு " அடைவதின் காரணமாக.
எனவே 10 ஒலிபெருக்கிகளை வைக்கும் தூரத்திற்கு 20 , 25 ஒலிபெருக்கிகளை வைத்து சத்தமும் குறைவாக வைத்தால் எல்லோருக்கும் தெளிவாக விளங்கும், யாருக்கும் உடல் ரீதியாகவோ, உள்ளம் ரீதியாகவோ பாதிப்பு ஏற்படாது. இப்படி வைப்பதினால் ஒலிபெருக்கியின் எண்ணிக்கைக் கூடும் ஒலியின் அளவு குறையும். ஒலி மாசு இல்லாமல் மக்கள் மனசு ஆறுதலடையும்.
ஒலிபெருக்கிகளை யாரும் மக்களுக்கு தொல்லைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக வைப்பதில்லை. நம்ம ஊரை பொறுத்தவரை அரசியல் கூட்டங்களில் வேண்டுமானால் மிக அதிக சத்தத்தில் வைப்பார்கள் - இதில் கட்சி வேறுபாடு கிடையாது எல்லோரும் ஒரே ரகம்தான்.
ஆனால் மார்க்க சம்பந்தமான எந்த ஒரு விழாவுக்கும், நிகழ்ச்சிக்கும் யாரும், எவரும் அவர்கள் எந்த கொள்கையை பின்பற்றக்கூடியவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் ஒலியின் அளவை கூட்டிவைக்க விரும்புவதில்லை - அப்படி ஒலியை கூட்டி வைத்தால் நிச்சயமாக அந்த நிகழ்ச்சிகள் யாருக்கும் பிரயோசமாக போய் சேராது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். இருந்த போதிலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையே அறியாமல் சில கவன குறைவுகளால் ஒலிபெருக்கியின் சத்தம் கூடுதலாகி அந்த நிகழ்ச்சியின் மூலம், பயன்பெறுவதற்கு பதிலாக மக்கள் பல தொல்லைகளை அடைகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.
உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால் ஓர் இடத்திலே ஹதீது சொல்லிக்கொண்டிருக்கும்போது அதே நேரத்தில் இன்னோர் இடத்திலும் ஹதீது சொல்கிறார்கள் - இரண்டு இடங்களும் அக்கம்பக்கமாக இருக்கிறது , சில வேளை தூரமாகவும் இருக்கிறது - எப்படி இருந்தாலும் ஒலிபெருக்கிகள் அதிக சத்தத்துடன் அடுத்தடுத்து இருப்பதால் எந்த ஒரு ஹதீதையும் தெளிவாக கேட்க முடிவதில்லை.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் சவுண்ட் சர்வீஸ்காரர்கள் ஒலியின் அளவை சரி செய்துக்கொள்வார்கள் என்று இருந்துவிடுகின்றனர். சவுண்ட் சர்வீஸ் - இரண்டு பக்கமும் ஒரே சவுண்ட் சர்வீஸாக இருந்தால் ஓரளவு சரி செய்வார்கள் - அதே நேரம் வேறு, வேறு சவுண்ட் சர்வீஸ் ஆட்களாக இருந்தால் குழாய்களை திருப்பமாட்டார்கள் அட்ஜஸ்ட் செய்யவும் மாட்டார்கள் அதனால் பொது மக்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த மாதிரி இரண்டு நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் வைப்பதை தவிர்த்து வேறு , வேறு நேரங்களில் வைப்பது சிறந்தது. மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் , நிகழ்ச்சி நடக்கும் இடத்தை விட்டு வெளியே வந்து பார்த்து, உண்மை நிலையை அறிந்து , நிகழ்ச்சியின் நோக்கத்தை உணர்ந்து அந்த ஹதீதுகள் , உபநியாசங்கள் மக்களுக்கு பிரயோசனமான வழியில் போய் சேர ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் ஒலிமாசு ஏற்படாது , மக்களுக்கு எந்த பாதிப்பும் நிகழாமல், நிகழ்ச்சியின் நோக்கம் நிறைவேறும்.
மேலும் நமது பள்ளிவாசல்களில் மார்க்க விழாக்கள் , நிகழ்ச்சிகள் நடத்தும்போது அதிகமான ஒலிபெருக்கிகளை கட்டாமல் பாங்கு சொல்வதற்காக பள்ளிவாசல்களில் உள்ள ஒலிபெருக்கிகளை மட்டுமே உபயோகப்படுத்துகிறார்கள் என்றாலும்கூட சத்தத்தின் அளவு கூடுகிறது. சத்தத்தை அவர்கள் கூட்டவில்லை என்பது உண்மையே - ஆனால் பாங்கின் ஒலியும் நிகழ்ச்சிகளின் ஒலியும் சமமாகாதே. எனவே பாங்கு'க்கு அல்லாமல் வேறு எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பள்ளிவாசல்களில் உள்ள ஒலிபெருக்கியை உபயோகப்படுத்தும்போது சத்தத்தின் அளவை குறைத்து உபயோகித்தால் ஒலிமாசு ஏற்படாது.
அடுத்து பல பள்ளிவாசல்களில் மாலைப் பொழுதில் ஒரே நேரத்தில் விசேஷ நிகழ்ச்சிகள் / விழாக்கள் நடத்தும்போது ஒலிபெருக்கிகளை உபயோகப்படுத்தாமல் இருப்பதே பல வகையிலும் சிறந்தது. உதாரணமாக மஃரிபு தொழுகைக்கு பின் ஆரம்பிக்ககூடிய நிகழ்ச்சிகள் இரவு ஒன்பது மணி வரை நடக்கின்றது - இடையில் இஷா பாங்கு சொல்லும்போது எல்லா பள்ளிவாசல்களிலும் நிகழ்ச்சியை நிறுத்துவார்கள்.
பாங்குக்கு பின் நிகழ்ச்சிகள் தொடருகிறது அப்படி தொடரும்போது விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெறாத அருகில் இருக்கும் சில பள்ளிவாசல்களில் இஷா தொழுகை நடை பெற்றுக்கொண்டிருக்கும் - அந்த தொழுகைக்கு இந்த ஒலிபெருக்கியின் சத்தம் இடையூறை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு வேளை, இஷா பாங்குக்கு பின் ஒலிபெருக்கியை அணைத்துவிட்டுத்தான் நிகழ்ச்சி தொடர்ந்து நடை பெறுகிறது என்று கூறினாலும் கூட சில சமயம் பக்தியின் காரணமாக மறந்துவிட வாய்ப்பு இருக்கிறது - அதன் மூலம் தொழுகைக்கு இடையூறு ஏற்படக்கூடாது அல்லவா.
மேலும் அடுத்தடுத்து உள்ள பள்ளிவாசல்களில் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும்போது அதில் ஒலி மாசு கண்டிப்பாக இருக்கத்தான் செய்கிறது, அதுமட்டுமல்லாமல் மற்றபள்ளிவாசலில் அதே விசேஷ நிகழ்ச்சி ஒரே நேரத்தில் நடந்து கொண்டிருக்கும்போது இந்த சத்தம் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது.
அதனால் பள்ளிவாசல்களில் நடைபெறும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு ஒலிபெருக்கியை உபயோகிக்காமல் இருப்பது நல்லது. இல்லை, இல்லை இன்றைய கால சூழலில் மக்களுக்கு பள்ளிவாசல்களில் நடக்கும் இந்த விசேஷ நிகழ்ச்சியை ஒலிபெருக்கியின் மூலம்தான் எத்தி வைக்க முடியும் என்று எண்ணுவீர்களானால் தயவு செய்து மிக, மிக குறைவான சத்தத்தில் ஒலிபெருக்கிகளை உபயோகபடுத்தவும். அதன் மூலம் ஒலிமாசு ஏற்படாது, தொழுகைக்கும் மற்றப் பள்ளிவாசல்களில் நடக்கும் விஷேச நிகழ்ச்சிக்கும் இடையூறு இல்லை, அதனால் எந்த மக்களும் பாதிக்கப்படமாட்டார்கள்.
மிகவும் முக்கியமாக பேணப்பட வேண்டிய நேரம் இரவு நேரங்கள் , இரவிலிருந்து காலை 7 மணிவரை அமைதி சூழ்ந்திருக்கும். இந்த நேரத்தில் மக்களுக்கு ஒலியின் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. இரவு நேர ஒலிபெருக்கியின் சத்தம் மிக, மிக குறைவாக இருந்தால் அது மக்களுக்கோ அல்லது பறவை இனங்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது , மேலும் ஒலிமாசும் ஒழிந்து போகும்.
இன்ஷா அல்லாஹ்! தொடரும் ................ |
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|