இறைவனின் திருப்பெயரால் துவங்குகின்றேன். அன்புக்குரிய உலகளாவிய இணையதள அன்பு வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
கவனக் குறைவு எப்போது ஏற்படும்? பெரும்பாலும் நிதானம் இழக்கும்போது என்கிறார்கள் அறிஞர்கள். நமதூரில் ஒரு வித்தியாசமான புதுமொழி சொல்வதைக் கேள்விப்பட்டுள்ளேன். அதாவது, “தானங்களில் சிறந்தது நிதானம்; ஆனங்களில் சிறந்தது புளியானம்”. பொதுவாக திங்கும் சொல் எதில் இருக்கிறதோ அதன் தொடர் ஞாபகம் வரும் என்றும் கூறுவார்கள்.
நிதானம் எப்போது வரும் என்றால், முற்காலத்தில் நாற்பதில் வரும் என்பார்கள். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் அறுபதிலும் நிதானம் வரவில்லையே என்று மனம் நொந்து போகின்றவர்கள் உண்டு. இது காலத்தின் கோலமா அல்லது பரந்த ஞானமில்லாத போக்கா? புரியவில்லை.
கவனக்குறைவு ஏற்படுமானால் யாராக இருந்தாலும், அதில் வரும் கஷ்ட நஷ்டங்களைப் பெருக்கிப் பார்த்து அதை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதற்கு வயதும், அறிவும், நிதானமும் தேவை.
காயல் நகரில் இன்றைய நிலை
ஒவ்வொரு கவனக் குறைவுக்கும் பண நஷ்டம், நேர நஷ்டம் ஏற்படும். தேவையில்லாது எதையும் வீணடித்தால் அல்லாஹ்விடம் நாளைக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற பயம் ஏற்பட வேண்டும். உனது புது சட்டை - அதன் அழகு பிடிக்கவில்லையானால் கடைக்காரரிடம் திரும்பக் கொடுத்துவிடலாம்.
போன மாதம் அவசரத்தில் ஊர் புறப்படும்போது துபாயில் அல்லது அபுதாபியில் வாங்கியது இப்போது ஊர் வந்து பார்க்கும்போது அந்த கலர், கோடு எதுவும் என் மனைவிக்கு பிடிக்கலை என்று வைத்துக்கொள்வோம்... போடாத புது சட்டையை - நீ வசதிக்காரன்! உன் சொந்தத்தில் உள்ள ஏழைக்கு ரகசியமாக கொடுத்து விடலாம்.
அதற்கு மனமில்லை... இந்த சர்ட் 1450 ரூபாய் கொடுத்து வாங்கியது... அதனால் நான் கிழ்ப்பேன் என்றோ, என்னுடைய உழைப்பில் வந்தது... என்னை யார் கேட்பார்? என்றோ நான் நினைத்துவிடக்கூடாது. அங்குதான் அல்லாஹ்வை அஞ்ச வேண்டும். அதை ஒரு ஏழைக்கு - திருமணம் அல்லது ஏதேனும் விழா சமயங்களில் போட கொடுக்கலாம்... (இது ஓர் உதாரணமே! யாரும் இவ்வாறு செய்யவில்லை... செய்ததாக தகவலுமில்லை... நம் இணையதள வாசகர்களும் இதை செய்திட மாட்டார்கள். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வை பயந்தவர்கள்.
புது சட்டை கிழிந்தால் தைத்துப் போடலாம். ஆனால் இன்று யாரும் தைத்துப் போடுகிற மாதிரி நிலையில் இல்லை. எல்லோருக்கும் அல்லாஹ் வசதியைத் தந்துள்ளான். அதற்காக அவனுக்கு நன்றி செலுத்துவோம், அல்ஹம்துலில்லாஹ்!
நமதூரில் பொருட்களை, மின்சாரத்தை விரயப்படுத்தும் முறைகளை எனது பேனா அழுதுகொண்டே எழுதுகிறது. (பேனா அழுதால் - அதன் மை வார்த்தையாக வெளியாகும் என்பது கவிஞரின் கூற்று.) உண்மையாக அழுகிறதை படியுங்கள் புரியும்.
தினமும் நடக்கும் நிகழ்ச்சிதான்! அதிகாலையில் சுபுஹு தொழுதுவிட்டு, பள்ளியில் அமர்ந்து திக்ர் - ஸலவாத் ஓதிவிட்டு வெளியாகும்போது, நாம்மைத் தாண்டிச் செல்லும் வாகனம் வீதியில் ஓடிய நதியா, ஆறா? அது நமது கவனக்குறைவினால் ஆட்டோக்காரன் சட்டைகளை மணலும், சகதியும் கலந்து ஒரு மாடர்ன் ஆர்ட்ஸ்ஸாக ஆக்கிட யார் காரணம் சொல்லவா? எல்லா தெருக்களிலும் அதிகாலை ஆற்றின் நீர் தங்குதடையின்றி முடுக்கு வழியாக வீதியில் ஓடிக்கொண்டிருக்கும். இதனால் வீட்டுக்காரனின் மின் கட்டண பில் உயரும். நிலத்தடி நீா குறையும். வாட்டர் மோட்டார் விரைவில் வயோதிகனாகி தேய்வு ஏற்படும். அதன் காயில் எரிந்து ரிப்பேர் ஆகும். இது கவனக்குறைவால் ஏற்பட்டது இல்லையா? இதனால் வீட்டுக்காரர்களுக்கு பண நஷ்டமும், ரோட்டில் போவோருக்கு மனக்கஷ்டமும் ஏற்படுகிறது. சில நேரம் சண்டையும் வெடிக்கும்.
சுபுஹில் எழுந்து டேங் நிறையட்டும் என்று (மின் துண்டிப்பு திடீர் திடீர் என வருகிறது என்ற பயத்தில் போட்ட) வாட்டர் மோட்டரை, வாட்டர் டேங்க் எவ்வளவு நேரத்தில் நிறையும் என்று கணக்கு வைத்து அணைத்து விட தெரியாதா? அனைத்துத் தெருக்களிலும் குடும்பத் தலைவிகள் இருக்கத்தானே செய்கிறார்கள்?
இதற்குக் காரணம் என்ன? இரவில் பிள்ளைகள் படுத்த பின்பும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன் அமர்ந்து, நள்ளிரவு வரை - தூக்கம் வரலே என்று கூறி எதையாவது பார்ப்பதும் ஒரு காரணம். (எனது வீட்டில் இன்று வரை தொலைக்காட்சிப் பெட்டி இல்லை.) குறை கூறும் நினைப்பில் இதை நான் குறிப்பிடவில்லை. போட்ட மோட்டரை off செய்ய மறந்துவிட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கே.எம்.டி. நகர் முதல் கோமான் தெரு வரை அதிகாலை முதல் சுற்றி வந்து தரும் தகவல் இது. தினமும் எல்லா தெருக்களிலும் வாட்டர் டேங்க் நிறைந்து, தண்ணீர் வீணாக வழிந்தோடுவதை துள்ளியமாக என்னால் தகவல் தர முடியும். இதனால், பல தெருக்களில் போகும்போது - எவ்வளவுதான் கவனமாகப் போனாலும், மூன்று சக்கர வாகனக்காரர்கள் சில நேரங்களில் எனது ஆடையை மாடர்ன் ஆர்ட்ஸ் வரைந்து போயிருக்கிறார்கள். மரியாதைக்கு ஒரு “ஸாரி” கூட சொல்ல மாட்டார்.
அவரது வண்டி நம்பரைக் குறித்து வைத்துக்கொண்டு, வேறு தெரு வழியாக போகும்போது நிதானமாக, “தம்பி, நீ நேற்று காலை 7 மணியில் இந்த தெரு வழியாக ஆள் நடமாட்டமில்லாதபோதும் வேகமாக வண்டியை ஓட்டிச் சென்று, ரோட்டில் ஓடிய தண்ணீரை என் மீது வாரி இறைத்துவிட்டுப் போய்விட்டாயேப்பா....? இதெல்லாம் என்ன நியாயம்? என்று கேட்டபோதுதான், சில ஆட்டோக்காரர்கள், “ஸாரி, நான் கவனிக்கலே...” என்பார்கள்.
இது இப்படி என்றால், சில பொல்லாத ஆட்டோக்காரர்கள் சொல்வதைக் கேளுங்க... “இரண்டு பக்கமும் வீடு கட்ட ஜல்லி - மணல் போட்டுக் கொள்ளுங்க! செங்கல் வேற அடுக்கி இருக்கு!! நான் எப்படித்தான் போறது? இந்த வீட்டுக்காரன் அதிகாலையில் போட்ட மோட்டரை இதுவரை ஆஃப் செய்யவில்லை காக்கா... அந்த முடுக்குல பாருங்க! தண்ணீர் வரும் வீட்டில் கதவைத் தட்டிச் சொல்லுங்களேன்... என்னை ஏன் குற்றம் சொல்றீங்க?” என்று தன்னை நியாயப்படுத்திக் கேட்ட ஆட்டோக்காரர்களும் உண்டு. (அவன் சொல்வதுவும் உண்மைதான் என்பதால் அவன் மீது கோபம் வருவதில்லை. ஊரின் நிலை அப்படித்தானே உள்ளது?)
ஆட்டோ என்பது பொதுமக்கள் சேவைக்கு ஓடுகிறது. அதில் சில ஆட்டோக்காரர்கள் தன்மையானவர்களாக தெரிந்துகொள்கிறேன். பல ஆட்டோக்காரர்கள் நமது மக்களை மதிப்பதாகவே தெரியவில்லை. காரணம் என்ன? (விளக்கம் தர இணையதளம் சரியான இடமில்லை.)
வீதியில் எவ்வளவு ஓரமாகப் போனாலும் மேலே உரசிக்கொண்டு போகிறான்... கேட்டால் முறைக்கிறான்... யார் இவன்? (நமக்குள்ள பொது வேலைப்பளுவால் இவர்கள் செயல் குறித்து ஆய்வு செய்ய நேரமில்லை.) பொதுநல சங்கங்கள், சேவை அமைப்புகள் இதுபோன்றவற்றை மனதில் போட்டு அவர்களுக்கு புத்தி சொல்லலாம். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். நான் பொதுத் தொண்டன்.
இன்ஷாஅல்லாஹ் வளரும்... |