உலக புத்தக தினம். புத்தகங்ளுக் கொப்பான சிறந்த நண்பர்கள் இல்லை என்பார்கள். புத்தகங்கள்…… அச்சடிக்கப்பட்ட வெறும் காகிதத்தொகுப்பல்ல. கடந்து போன நேற்றின் வரலாற்றை இன்றின் நிகழ்வுகளை வருங்கால தலைமுறைக்கு கொண்டு செல்ல, எழுத்தின் வழியே செய்யப்பட்ட தொகுப்பாவணமே புத்தகங்கள்.
ஓசையில் மொழி வடிவத்தை உருவாக்கிய மனிதன் அதைப் பதிவு செய்ய எலும்புகளிலும் பிராணிகளின் தோல்களிலும் எழுதி வைத்தான்.
பிறகு அவற்றை அச்சில் பதிய வைக்கும் முறை உருவானது. அன்றிலிருந்து மொழியும் வளர்ந்தது ; நூல்களும் பெறுகின.
அவ்வாறு பெறுகிய நூல்களைப் பாதுகாக்க நூலகங்கள் உருவாகின.
சென்னை ஜாம்பஜார் மீன் மார்கெட்டுக்குப் போயிருந்தேன். ஒரு மீன் வியாபாரியிடம் ஒருவர் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மீன் வாங்கினார். விலையைக் கணக்கு பார்க்க இரண்டு பேருமே அவரவர் செல்பேசியில் உள்ள கால்குலேட்டரில் கணக்கு பார்த்துக் கொண்டனர். இதுபோன்ற கணக்குகளையெல்லாம் மனக் கணக்காக யோசித்துச் சொல்லும் காலமும் கூட மலையேரிவிட்டதை உணர்ந்தேன். சிரியவர் முதல் பெரியவர் வரை வாழ்க்கை ஓட்டத்தில் மூளையைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டே போகிறது.
வலைதளத்தில் தேடும் எந்திரங்கள் உதவி கொண்டே அனைத்துக் காரியத்தையும் இன்றைய தலைமுறையினர் முடித்து விடுகின்றனர். மனதில் பதிய வைத்து தேவைப்படும் போது நினைவு படுத்திப் பார்ப்பதெல்லாம் ஒரு வேளை கிராமங்களில் வேண்டுமானால் மிச்சம் மீதி இருக்கலாம்.
தனது சொந்த வீட்டின் கதவு எண்ணைக் கேட்டாலே பலருக்குச் சொல்லத் தெரியவில்லை. தொலைபேசி எண்கள் பலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளும் பழக்கம் கொஞ்சம் காலத்திற்கு முன்பு வரை இருக்கத்தான் செய்தது. செல்பேசி வந்த பிறகு தனது சொந்த செல்லையே கைத்தவறி எங்காவது வைத்து விட்டால் கூட எண் தெரியாமல் ”உன் போனில் என் நம்பர் இருக்குமே, அதுலேருந்து கொஞ்சம் அடித்துப் பாரேன். போனெ எங்க வச்சேன்னே தெரியவில்லை”னு சொல்கிறார்கள்.
இப்போதெல்லாம் எதைச் செய்தாலும் துணைக்கு அழைக்கப்படுவது செல்பேசியைத்தான். இதற்கும் புத்தகத் தினத்திற்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்பது புரிகின்றது. நல்ல வாசிப்பு மூளையின் நினைவுத்திறனை அதிகரிக்கும்.
சுதந்திர இந்தியாவிற்கான அரசியல் சாசனத்தை எழுதிய சட்ட மேதை அம்பேத்கர் அவர்கள் வீட்டின் நூலகத்தில் 50000 க்கும் மேற்பட்ட நூல்கள் இருந்துள்ளது.
எழுத்தறிவித்தவன் இறைவன் என தமிழ் சான்றோர் கூறுவார்கள்.
"இன்னும் (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்". (குர்ஆன் 2:31)
அல்லாஹ்இம்மண்ணுலகிற்கு தீர்க்க தரிசிகளைப் பல மொழிகளுக்கும் நிறங்களுக்கும் நிலங்களுக்கும் அனுப்பி, வேதங்கள் என்றும் சுஹுஃபுகள் என்றும் எழுத்து வடிவில் தூதுச் செய்தியை அவர்கள் வழி அனுப்பி வைத்துப் பாதுகாத்தான்.
இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முதலில் இறக்கிய வசனம் "இஃக்ரஃ" என்னும் 'படிப்பீராக' என்றே துவங்கியது.
லவ்ஹுல் மஹ் ஃபூள் என்னும் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருந்து அல்லாஹ் அதனை இறக்கியதால் அதனை வாசிக்கும் படியே அல்லாஹ் சொன்னான்.
இதன் மூலம் ஒரு முஸ்லிமுக்கு படித்தல் மற்றும் வாசித்தல் என்பது கடமையாகவும் வணக்கமாகவும் ஆகி விட்டது.
அறியாமைக் காலத்து அரேபியர்களிடம் எழுத்தறிவும் படிப்பறிவும் ஏட்டளவில் கூட இருக்கவில்லை. ஆனால் அதே அரபு மண்ணில் இப்புனித மறைக் குர்ஆன் இறக்கி வைக்கப்பட்ட ஒரு நூற்றாண்டிலேயே மாபெரும் சாம்ராஜ்யங்களையும் வல்லரசுகளையும் கூட முஸ்லிம்களின் காலடியில் கொண்டு வந்தது. அதற்குப்பின் முஆவியா (ரலி) அவர்கள் காலந்தொட்டு உருவான உமய்யாக்கள் ஆட்சியிலும் பின்னர் அப்பாஸ் (ரலி) அவர்கள் காலந்தொட்டு உருவான அப்பாஸிய்யாக்கள் ஆட்சியிலும் இஸ்லாம் பாரெங்கும் அசுர வேகத்தில் கோலோச்சியது.
இஸ்லாத்திற்கு முன் வல்லரசாகத் திகழ்ந்து வந்த கிரேக்கர்கள் ஆட்சி காலத்தில் லத்தீன மொழியில், மருத்துவத்திலும் அறிவியலிலும் தத்துவங்களிலும் நிகழ்ந்த அறிவுப் புறட்சிகளை அப்பாஸிய ஃகலீஃபாக்கள் அழிந்து போகாமல் பாதுகாத்து அவ்வறிவுப் பொக்கிஷங்களை அரபு மொழிக்கு மாற்றம் செய்தனர். இக்காலத்தில் தான் குர்ஆனின் சிந்தனையால் ஈர்க்கப்பட்ட அறிவு ஜீவிகள் இவ்விறை வேதத்தின் தூண்டுதலால் மேலாய்வுகள் பல செய்து புதுப்புது கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கினர்.
கிரேக்கர்களுக்கும் இன்றைய காலத்து ஆங்கிலேயர்களுக்கும் இணைப்புப் பாலமாக அமைந்தவர்கள் அரேபிய முஸ்லிம்கள் என்பதை ஆங்கில எழுத்தாலர்களே ஒப்புக்கொள்கின்றனர். மேலும் அக்காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாத வெறும் கைநாட்டுக்களாகவே இருந்தார்கள் எனவும் கூறுகின்றனர்.
இன்றைய காலத்தின் மருத்துவம், விஞ்ஞானம், அறிவியல், பூகோலம், வானசாஸ்திரம் முதலான வளர்ச்சிகளுக்கு வித்திட்டவர்களும் முஸ்லிம்கள்தான். படிப்பீராக, சிந்திப்பீராக, அவர்கள் படிக்க வேண்டாமா, சிந்திக்க வேண்டாமா, ஆய்வு செய்ய வேண்டாமா என குர்ஆன் அறைகூவல் விடுத்ததைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட அறிவுப் புறட்சி தான் இது.
இவ்வாறு, மனிதன் ஞாபகப்படுத்த முடிந்ததையும் முடியாதவற்றையும் நூல்களில் பாதுகாத்தான். நாகரீகங்கள் வளர்ந்தன. கலாச்சாரங்கள் தழைத்தன. பிறகு கலாச்சாரத்தையும் நாகரீகத்தையும் பாதுகாத்த அதே வேளையில் அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் 'நான்' என்ற ஈகோவிற்கு தலை வணங்கி பிற கலாச்சாரம் பண்பாட்டிற் கெதிரான போர்களைத் துவக்கினார்கள்.
சமீபத்தில் இலங்கையில் நடைப்பெற்ற தமிழர்களுக்கெதிரான போரில் சுமார் 97000 தமிழ் புத்தகங்கள் எரிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
அது போல, 1980 களில் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்கள் இருப்பதாக ஒரு மாபெரும் பொய்யை இட்டுக்கட்டி ஈராக்கைத் தாக்கிய அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் முதலில் செய்த வேலை பாக்தாத்தில் உள்ள நூலகங்களையும் அருங்காட்சியகங்களையும் குண்டுகள் போட்டுத் தாக்கி அங்குள்ள விலை மதிப்பற்ற பொக்கிஷங்களை அழித்தொழித்ததுதான்.
இதே மாதிரிச் செயல் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்பெயினில் உள்ள கார்டோபா நகரிலும் நடந்தேறியது. அறிவுக்குப் பெயர்போன இந்நகரத்தில் ஓங்கி உயர்ந்து நின்ற நூலகங்களையும் அருங்காட்சியகத்தையும் அழித்தொழித்தனர் அப்போது ஆட்சியில் அமர்ந்த கிறித்தவர்கள். அப்பாஸியர்களின் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட காலத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக வரலாறுகள் சான்று பகர்கின்றன. கடலில் கொட்டப்பட்ட புத்தகங்கள் அதில் ஒரு பெறும் பாலத்தையே கட்டிவிடும் அளவிற்கு கடல்போல் இருந்தன என்பதையும் வரலாற்றாசிரியர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
எப்போது வாசிப்பிலும் அறிவைத்தேடுவதிலும் முஸ்லிம்கள் முனைப்புடன் இருந்தார்களோ அப்போது உலகம் அவர்கள் உள்ளங்கைகளில் அமைதியாக அமர்ந்திருந்தது.
அப்பாசிய முஸ்லிம்களிடமிருந்து ஆங்கிலேயர்களிடம் ஆட்சி கைமாறும்போது முஸ்லிம்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். இன்று செய்வதைத்தான் அன்றும் செய்தார்கள்.
வாதத்திலும் தர்க்கத்திலும் ஈடுபட்டனர். உட்பூசல்களில் திளைத்திருந்தனர். யார் பெரியவர் என்பதை நிரூபிப்பதற்காகவே அறிவைத் தேடினர். படிப்பதை விட்டுவிட்டு அறிஞர் பெருமக்கள் சொல்லும் செய்திகள் மட்டுமே போதும் என புலகாங்கிதம் அடைந்தனர்.
அதன் விளைவு ஒரு ஆங்கில வரலாற்றாசிரியர் சொல்வதைப் போல,
THEY READ TO LEARN ; WE LEARN TO READ
அவர்கள் (எதையும்) படித்துக் கற்றுக்கொள்கிறார்கள் ; நாம் படிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம். |